மின் நூல்

Friday, December 29, 2017

இது ஒரு தொடர்கதை..

                                                        அத்தியாயம்--4


பாண்டியன் க்யூவின் பின் பக்கம் திரும்பிப் பார்த்தான்.   அது கோயிலுக்கு வெளியேயும் பாம்பு  படுதிருப்பதைப்  போல நீண்டிருந்தது.  வரிசையை விட்டு விட்டு அர்ச்சனை சீட்டு வாங்கப்  போய் வரிசையைத்  தொலைத்து விட்டால் என்ன செய்வது என்ற குழப்பத்தில்  துவண்டு போனான்.

அவன் ஏதோ தர்மசங்கடத்துடன் வரிசையில் நிற்பதைப் பார்த்து அவனுக்குப் பின்னால் நின்று கொண்டிருந்த பெண், "என்னன்ணே.. சீட்டைத் தொலைச்சிட்டீங்களா?" என்று பாண்டியனிடம் கேட்டாள்.

"இல்லீங்க.. சீட்டே வாங்கலே.." என்றான் பாண்டியன்.

"அர்ச்சனை சீட்டு தானே?.. அதோ-- அந்த தடுப்புக்கு பின்னாடி டிக்கட் கவுண்ட்டர்..  போய் வாங்கிட்டு வந்திடுங்க.."

"வந்திடலாம்.. ஆனா, அதுக்குள்ளாற வரிசை தப்பிப்  போயிடுமோன்னு பாக்கறேன்.."

"எப்படித்  தப்பிப் போகும்?.. அதான் வரிசைலே தானே நீங்களும் வந்திருக்கீங்க.."                                                                   

"நான் திரும்பி வர்றதுக்குள்ளே நீங்க கோயிலுக்குள்ளேயே போயிடுவீங்க போலிருக்கு..  வரிசை நடுவிலே நொழைஞ்சா யாராச்சும் ஏத்துப்பாங்களா?..
நாலு பேரு  சண்டைக்கு வந்தா அவமானமால்லே போயிடும்?" என்றான்.

"அட சரித்தான், தம்பி.." என்றார் நாலு பேர் தள்ளி பின் வரிசையில்  நின்றிருந்த பெரியவர் ஒருவர்.. "அதெல்லாம் ஒண்ணும் ஆகாது.. நீ  போய்         தெகிரியமாய்  சீட்டு வாங்கிட்டு வா..  எவனாவது கேட்டா, சொல்றத்துக்கு  நா இருக்கேன்.. நீ போயிட்டு வா.." என்றார்.

அவர் கொடுத்த தைரியத்தில் பாண்டியன் டிக்கெட் கவுண்டர் பக்கம் போனான்.  அவன் அதிர்ஷ்டம் கவுண்டர் காலியாக இருந்தது.

அர்ச்சனை சீட்டு வாங்கிக் கொண்டு வேகவேகமாக வரிசைக்குத்  திரும்பிய அவனைப் பார்த்து அந்தப் பெரியவர், "நான் சொன்னேன்லே.. ஒரு இன்ச் கூட நகரலே.  அப்படியே நிக்கறோம்.." என்றார்.

"யாரோ வி.ஐ.பி. இன்னொரு கேட் வழியா வர்றாராம்.  அவர் சாமி கும்பிட்டுப் போன பின்னாடி தான் நமக்கெல்லாம் தரிசனமாம்.  அப்படியே க்யூவை நிறுதிட்டாங்க.." என்றாள் வரிசையில் அவனுக்குப் பின்னால் நின்று கொண்டிருந்த பெண்.

"எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது.." என்றார் பெரியவர்.

"நீங்கள் சொல்வது ஏதோ பொன்மொழி மாதிரி இருக்கிறதே?.. எந்த மகான் சொன்னது இது?"  என்றான் பாண்டியன்.

"பகவான் கிருஷ்ணர் சொன்னது இது.." என்று பெரியவரிடமிருந்து பதில் வந்த பொழுது அந்தப் பெண்ணும் ஆச்சரியப்பட்டாள்.   "கிருஷ்ண பகவான் சாமி இல்லையோ?.. அவர் கூட மனுஷங்க மாதிரி இப்படியெல்லாம் பேசி பொன்மொழிகள்லாம் சொல்லியிருக்காரா?"

"மஹாபாரத போர்க்களத்தில் பகவான்  கிருஷ்ணர் அர்ஜூனனுக்கு உபதேசம் செய்கிறார் இல்லையா?..  அந்த கீதா உபதேசத்தில் இந்த உபதேசத்தைச் சொல்கிறார்.  அர்ஜூனனுக்குச் சொல்ற மாதிரி நமக்கெல்லாம் பகவான் சொன்னது இது..  இப்போ நிதர்சனமா க்யூ நகராமப் போனது இவருக்கு சாதகமா போயிருக்கு, இல்லையா?"

"அவருக்கு சாதகமா போயிருக்கலாம்.. நமக்கு பாதகம் தானே?" என்று சட்டென்று கேட்டு விட்ட அந்தப்  பெண் அடுத்த வினாடியே, "சாரி.." என்று பாண்டியனைப் பார்த்துச் சொன்னாள்.

"இவருக்கு மட்டுமில்லை.. இப்படி க்யூ நகராமப் போனதிலே நமக்கும் கூட ஏதாச்சும் நன்மை இருக்கலாம்.  நடக்கறதெல்லாம் எதுக்காக நடக்கறதுன்னு தெரியாத போது எதைப்பற்றியும் எதுவும் சொல்வதற்கில்லை.." என்றார் பெரியவர்.

"அதுவும் சரித்தான்.." என்றாள் அந்தப் பெண்.

பாண்டியனுக்கு அந்தப் பெண்ணை மிகவும் பிடித்துப் போனது.  படித்தவள் போலும்..  தான் நினைப்பதை மற்றவர்களுடன் எவ்வளவு அழகாகப் பகிர்ந்து கொள்கிறாள் என்று அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது   ஏன் இந்த பெண் போல நம்மால் சரளமாகப் பேச முடியவில்லை என்று ஆதங்கமாக இருந்தது.

அவர்கள் கிட்டத்தட்ட சன்னதி பார்வைக்குத் தெரிகிற தூரத்தில் வந்து விட்டார்கள்.   அவர்கள் நின்று கொண்டிருந்த இடத்திற்குக் கொஞ்சம் முன்னால்  வரிசையை இரண்டாகப் பிளவுபடுத்தி  உள்ளே அனுப்பிக் கொண்டிருந்தார்கள்.   அந்த இடத்தில் நின்று கொண்டிருந்த ஒரு
மீசைக்காரன் "இப்படி வாப்பா.." என்று க்யூவில் வந்த ஒருவரின் புஜத்தைப் பற்றி இழுத்தான்.  "நீ அர்ச்சனை ஆள், தானே?  இந்தப்  பக்கம் போ.." என்று கிட்டத்தட்ட அந்த ஆளின் கழுத்தைப்  பிடித்து நெட்டித் தள்ளுகிற மாதிரி வலது பக்க வரிசைக்கு அனுப்பி வைத்தான்.

அர்ச்சனைத்  தட்டு  வைத்திருப்பவரெல்லாம் வலது பக்கம்,  மற்றவர்கள் இடது பக்கம் என்று வரிசைப்படுத்துகிறார்கள் என்று  பாண்டியன் தெரிந்து கொண்டான்.

"அல்லாரும் அர்ச்ச்சனை சீட்டை எடுத்து தெரியற மாதிரி தட்லே வைச்சிக்க.." என்று அடுத்த உத்தரவு மீசைக்காரனிடமிருந்து வந்தது.

பாண்டியன் சீட்டை எடுத்து தட்டில் வைத்து அது ஃபேன் காற்றில்  பறந்து போய் விடாமல் இருக்க வாழைப்பழத்தை எடுத்து வெயிட்  போல வைத்தான்.  க்யூ மெதுவாக நகர்ந்தது.  இரண்டு பக்கமும் வரிசையில் வருவோரைப்  பிரித்து அனுப்புவதால்  நெரிசல் இல்லாமல் இருந்தது.

அந்த மீசைக்காரனுக்கு வெகு அருகில் பாண்டியன் வந்து விட்டான். அவன் கையில் இருக்கும் அர்ச்சனைத் தட்டை மீசைக்காரனும் பார்த்து விட்டான்.

"இப்படி வாப்பா.." என்று பாண்டியனின் தோளில் கை வைக்கிற மாதிரி பின்னுக்கு இழுத்தான்.   அப்படி இழுபட்டதும் பாண்டியனுக்கு 'ஜிவ்' என்று கோபம் தலைக்கேறியது.  இருந்தாலும் கோயிலில் ரசாபாசம் வேண்டாம் என்று சிரமப்பட்டுத் தன்னை அடக்கிக் கொண்டான்.

"அர்ச்சனையெல்லாம் இந்தப்  பக்கம் நிற்கணும்;   தெரிஞ்சதா?" என்று  பாண்டியன்  ஏதோ செய்யாத தவறைச் செய்து விட்டது போல உறுமினான்.  அவன் உறுமல்  இறை சன்னிதானத்து அந்த சூழலுக்கு சம்பந்தபடாதவாறு  இருந்தது.  அவன் அனுமதிக்குப் பிறகு தான் சந்நதிக்கு உள்பக்கமே செல்லலாம் போலிருந்தது.

ஆனால் அதைப்  பற்றி யாரும் அசூயை  கொண்டதாகத் தெரியவில்லை.
கோயில் குருக்கள் பாட்டுக்க ஒரு பக்கம் மந்திர உச்சாடனம் பண்ணிக் கொண்டிருக்க  இன்னொரு பக்கம்  ஜனக்கூட்டம் பக்திப் பரவசத்துடன் இறைவனைத் தொழுது  கொண்டிருக்க பாண்டியன் அந்த மீசைக்காரனைப் பொருட்படுத்தாமல் விலகி  இறைவன் பார்வையில் படும்படி நின்று கொண்டான்.

ஆடலரசனின் ஆனந்த தாண்டவ கோலம் மனசுக்கு ரம்யமாக இருந்தது.   பாண்டியன் கைதொழுது இறைவனை இறைஞ்சித் தொழுதான்.

"அர்ச்சனை தானே?  சங்கல்பம் பண்ணிக்கிறீங்களா?" என்று தனக்கு மிக அருகில் கேட்ட குரலால்  பாண்டியன் சட்டென்று  சிந்தனை கலைந்து திரும்பினான். சட்டென்று தன் கையிலிருந்த அர்ச்சனைத் தட்டை குருக்கள் பக்கம் நீட்டினான்.  குருக்கள் கேட்டு, கோத்திரம், நட்சத்திரம், பெயர் என்று சொல்லி,  மங்கைக்கும் அவற்றைச் சொன்னான்.   அவனிடமிருந்து தட்டை வாங்கிக் கொண்டு அர்ச்சகர் அடுத்த அர்ச்சனைக்காரர் பக்கம் நகர்ந்தார்.

அன்றைக்கு இறைவனுக்குப் பிரமாதமான  அலங்காரம் செய்திருந்தார்கள்.    அர்ச்சகர் தீபாரதனை காட்டும் பொழுது  மனமுருக பிரார்த்தித்துக் கொண்டான்.   அர்ச்சனைத் தட்டு  கைக்கு வந்ததும் ரொம்ப நேரம் சந்நதியில் நிற்க முடியவில்லை.   மீசைக்காரன் வெளிக் கூட்டத்தை உள்ளே பத்து பத்து பேராக அனுப்பிக் கொண்டேயிருந்தான்.

எப்பொழுதுமே நெரிசல் பிடிக்காது பாண்டியனுக்கு.   கூட்டம் நெருக்கஆரம்பிக்கவே நிமிர்ந்து இறைவனின் முக விலாசத்தை நெஞ்சுக்குள் நிரப்பிக் கொள்கிற மாதிரி உள்வாங்கிக் கொண்டு  இரு கரம் கூப்பித் தொழுது  சந்நதியின் பக்க வாசல் வழியாக வெளியே வந்தான் பாண்டியன்.

சந்நதியைச் சுற்றிக் கொண்டு வர எத்தனிக்கையில்,  இந்தக் கோடிக்கு  அந்தக் கோடி நீண்டிருந்த பிராகாரத்தில் வரிசையாக  அறுபத்து மூவர் சிலைகளை பிரதிஷ்டை பண்ணியிருந்தார்கள்.   அறுபத்து மூவர் ஒவ்வொருவருக்கும்  எண்ணை முழுக்காட்டி,  வஸ்திரம் சுற்றி, பூ சாத்தியிருந்தார்கள்.

சற்று தூரத்திலிருந்து வரிசைக் கட்டி நின்றிருந்த சிலைகளைப் பார்க்கும் பொழுது அவனறியாமலேயே  திடுதிப்பென்று ஒரு எண்ணம் மனசில் தோன்றி 'இப்படிச் செய்கிறாயா?' என்று உள்மனம் அவனிடம் கேட்கிற உணர்வில் திகைத்தான் பாண்டியன்.

'நீ என்ன செய்கிறாய் என்றால்,  கண்ணை மூடிக்கொண்டு நேராக அறுபத்து மூவர் சிலைகள் இருக்கும் இடத்திற்குப்  போய்  அந்த சிலைகளில் யார் சிலை முன்னாவது நில்.  யார் சிலை முன் நீ நின்றிருக்கிறாயோ அவராகத் தான் சென்ற பிறப்பில் நீ இருந்தாய்.  சோதித்துப் பார்த்துக் கொள்' என்று உள்மனம் அவனிடம் கிசுகிசுத்தது.  அதைத் தொடர்ந்து பாண்டியனின் தேகம் உச்சி முதல் உள்ளங்கால் வரை ஒரு முறை  சிலிர்த்து அடங்கியது.

அடுத்த வினாடியே பாண்டியன்  தீர்மானித்து விட்டான்.

உத்தேசமாக அந்த பிராகார எதிர் சுவர் நீள பிரதிஷ்டை பண்ணியிருக்கும் சிலைகளைப் பார்த்துக் கொண்டான்.  குத்து மதிப்பாக அவன் நின்றிருக்கும் இடத்திலிருந்து எத்தனை தப்படி வைத்தால்  சிலைகள் இருக்குமிடத்தில் சரியாகப் போய் நிற்கலாம் என்று கணக்குப் போட்டுக் கொண்டான்.

பிராகார வெளியில் யாருமில்லை.  அந்த வெறிச்சோடல் அவனுக்கு செளகரியமாக இருந்தது   விழி இமைகளை இறுக மூடிக் கொண்டான்.

மனசுக்குள் சிலைகள் இருக்குமிடத்தை உத்தேசமாகக் கணக்குப் போட்டு ஒவ்வொரு தப்படியாக எடுத்து வைத்தான்.

பாண்டியன்  அறுபத்து மூவர் சிலைகள் இருக்குமிடத்தை நோக்கி கண்களை மூடிக் கொண்டே முன்னேறி,  காலடி கணக்கு முடிந்ததும் சட்டென்று நின்றான்.

போன ஜென்மத்தில்,   யார் சிலை முன் இப்பொழுது நிற்கிறமோ அவராகத் தான் தான் இருந்திருப்போம் என்ற எண்ணம் அவன் மனசு பூராவும் வியாபித்தது.

அது யார் சிலை என்று அறிந்து கொள்ளும் பதட்டம் இன்றியே பாண்டியன் நிதானமாகக் கண்களைத் திறந்தான்.

5 comments:

ஸ்ரீராம். said...

இந்தப் பதிவின் ஆரம்ப வரி இன்றைய தினத்துக்குப் பொருத்தம்!

நடப்பதெல்லாம் நன்மைக்கே என்கிற சமாதானம் எனக்கும் உண்டு. ஆம், என்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ளும் சமாதானம்தான்!

கண்திறந்து பார்க்கும்போது இரண்டு சிலைகளுக்கு நடுவில் நின்றால் நன்றாய் இருக்கும்!

G.M Balasubramaniam said...

முன்பு நாயன்மாரின் சிலை பற்றிக் கேட்டது நினைவில் அதன் பின் சிலை சிரிப்பது போல் தோன்றும் இல்லையா

Thulasidharan V Thillaiakathu said...

நடப்பதெல்லாம் நன்மைக்கே...நானும் அப்படிச் சொல்லி மனதைத் தேற்றிக் கொள்வதுண்டுதான்..ஆனால் அப்படி நல்லது நடக்க நடப்பதும் கூட மனதை நொறுக்கும் அளவிற்கு நடந்தால்?!!

அட! புதிதாக ஒரு சிந்தனை...//'நீ என்ன செய்கிறாய் என்றால், கண்ணை மூடிக்கொண்டு நேராக அறுபத்து மூவர் சிலைகள் இருக்கும் இடத்திற்குப் போய் அந்த சிலைகளில் யார் சிலை முன்னாவது நில். யார் சிலை முன் நீ நின்றிருக்கிறாயோ அவராகத் தான் சென்ற பிறப்பில் நீ இருந்தாய். சோதித்துப் பார்த்துக் கொள்' என்று உள்மனம் அவனிடம் கிசுகிசுத்தது. அதைத் தொடர்ந்து பாண்டியனின் தேகம் உச்சி முதல் உள்ளங்கால் வரை ஒரு முறை சிலிர்த்து அடங்கியது//

னிறைய எதிர்ப்பார்ப்புகளைக் கூட்டுகிறது கதை..தொடர்கிறோம் அண்ணா..

கீதா

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் எங்கள் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!

வே.நடனசபாபதி said...

பாண்டியன் சிலையின் முன் நிற்கவில்லை என நினைக்கிறேன். உண்மை நிலை அறிய தொடர்கிறேன்.

ஜீவி said...

@ வே. நடன சபாபதி

அடுத்த அத்தியாயத்தை இன்னும் படிக்கலேன்னு நினைக்கிறேன்.

அந்தந்த அத்தியாயத்தைப் படித்ததின் பிரதிபலிப்பா கருத்துச் சொல்றது எனக்கு ரொம்பவும் பிடிச்சிருக்கு, சார். இதான் வாசிப்பதின் உண்மையான வெளிப்பாடாக எனக்குத் தோன்றுகிறது. நன்றி, சார்.

Related Posts with Thumbnails