மின் நூல்

Monday, August 28, 2017

வாழ்க்கை அழைக்கிறது

                                           ஒரு  வாழ்வியல்  தொடர்


முந்தைய பகுதி:    http://jeeveesblog.blogspot.in/2017/08/blog-post_7.html


3.   தன்னம்பிக்கை என்னும் யானை பலம்.


ம்பிக்கை கொள்ளுதல் என்பது வாழ்க்கையின் ஆதாரசுருதி. தன்மீது, தன் செயல்களின் மீது தனக்குத் தானே நம்பிக்கைக்கொள்ளுதல் தன்னம்பிக்கை எனலாம்.       இந்த நம்பிக்கை வாழ்வின் ஒவ்வொரு செயலுக்கும் அடிப்படைத்தேவை.

தன்னம்பிக்கையில்லாதவன் எதையும் சுயமாகச் செய்ய துணிவில்லாது போவான். எதற்கும் இன்னொருவரை எதிர்பார்க்கக்கூடிய நிலைக்குத் தள்ளபடுவான். தன்னால் இதைச் செய்யமுடியும் என்று நம்பிக்கை கொள்ளமுடியாமல், அதைச் செய்து முடிக்கவே இன்னொருவர் தயவை நாடுவது நாளாவட்டத்தில் எதுவென்றாலும் பிறரை எதிர்பார்க்கிற நிலைக்குக் கொண்டு போய்விடும்.

தனக்கு நெருங்கியவர்களிடம் ஏற்படும் பிரமிப்பும் சில நேரக்களில் ஒருவனின் தன்னம்பிக்கையை இழக்கச் செய்யும்.  பிரபல எழுத்தாளர்களின் எழுத்துக்களைப் படிக்கும் பொழுது,  எவ்வளவு அருமையாக அவர்கள் நினைத்ததை எழுத்தில் வடித்து அதை வாசிக்கும் நமக்கும் ஒரு அனுபவத்தைக் கொடுத்திருக்கிறார் என்று வியப்பு ஏற்படும்.

பொதுவாக பத்திரிகைகளில் கதை கட்டுரை என்று வாசிப்போரில் ஒரு 10% பேர்களிடமாவது அவர்கள் அறியாமலேயே ஒரு பழக்கம் படிந்து விடுவது தவிர்க்க முடியாததாகி விடுகிறது.   வாசிப்பில் ஏற்பட்ட மன ஈடுபாடு தாமும் அது போல் எழுதினால் என்ன என்கிற ஆர்வமாய் ஆரம்பத்தில் துளிர்க்கும்.   பொதுவாக ஆரம்ப முயற்சிகள் அவ்வளவு சிறப்பாக அமையாது.   இருப்பினும் தன்னம்பிக்கை இழக்காமல் திருப்பித் திருப்பி முயற்சிக்கும் பொழுது  நாளாவட்டத்தில்  தானே மகிழும் அளவுக்கு எடுத்த முயற்சி அமையும் பொழுது அதுவே அலாதியான சந்தோஷத்தை இயல்பாகவே கொடுக்கிறது.

எனக்கு சாரங்கன் என்றொரு நண்பர் இருந்தார். இராணுவத்தில் 'ஹவில்தாராக' இருந்தவர். ஓய்வு பெற்று வந்துவிட்டார். வாழ்க்கைப் பாட்டிற்கு ராணுவ பென்ஷன் தான். எங்கள் நண்பர்
குழாமில் அவரை 'சவடால் சாரங்கன்' என்றே அழைப்போம். அப்பா....மனுஷன் என்ன பேச்சு பேசுவார், தெரியுமா?..அவர் செய்த ஒவ்வொரு காரியமும், ஷூக்கு பாலீஷ் போட்டார் என்றால் கூட, ஒரு பெரிய ஆர்ப்பாட்டத்தோடு, யாருமே எதிர்கொள்ளாத பிரச்னைகளைத் தான் எதிர்கொண்டமாதிரி, அப்படி ஒரு ஆர்ப்பாட்டம் பேச்சில் பண்ணுவார்.

கொஞ்சம் கொஞ்சமாக நாளாவட்டத்தில் எங்கள் நண்பர்கள் வட்டத்தில் அவர் ஒரு ஹீரோ ஆகிவிட்டார். வீட்டு விசேஷத்திற்கு வாழைமரம் வாங்கிக் கட்டவேண்டுமா, கல்யாணச் சாப்பாட்டிற்கு அருமையான கேட்டரிங் ஏற்பாடு பண்ண வேண்டுமா, தாசில்தார் ஆபிஸில் மனுகொடுக்க வேண்டுமா, அடுத்த நாள் ரயிலுக்கு அவசர ரிசர்வேஷனா, பஸ் பாஸூக்கு ஏற்பாடா, பாஸ்போர்ட்டுக்கு அப்ளிகேஷனா---சாரங்கனிடம் ஒருவார்த்தை சொல்லிவிட்டால் 'ஆச்சு காரியம்' என்பதில் ஆரம்பித்து,கிணற்றில் தோண்டி விழுந்துவிட்டால் எடுக்க சாரங்கன், வீட்டில் கரண்ட் சப்ளை போய்விட்டால் ப்யூஸ் ஒயர் போடக் கூட சாரங்கன் என்பது வரை தெருவே சாரங்கனைத் தேட ஆரம்பித்து விட்டது.


இதில் கோடிவீட்டு கோதண்டம் ரொம்ப மோசம்; பிளாஸ்டிக் மூடிதிறக்க அடம்பிடிக்கும் காஸ் சிலிண்டரை ரெகுலேட்டரில் பொருத்தக்கூட சாரங்கனைத் தேடுவான். சாரங்கனும்,  'நான் ஆஜர்' என்று சொல்கிறமாதிரி காலையில் 'காப்பி' குடித்துவிட்டு வீட்டுத்திண்ணையில் 'ஹாயாக' உட்கார்ந்திருப்பான்.    யார் வீட்டில் எப்பொழுது கூப்பிடுவார்கள் என்று தெரியாது.


சின்னச் சின்ன வேலைகளை வெற்றிகரமாக முடித்துக் கொடுத்த சாரங்கன் இப்பொழுது அயனாவரத்தில், 'A--Z' என்று 'அ'விலிருந்து 'ஒள'வரை எல்லா வேலைகளையும் முடித்துக் கொடுக்கும்  சேவைநிலையம் ஒன்றை ஆரம்பித்து சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கிறான். நகரத்தில் உள்ள அத்தனை பேரும் அவனுக்குப் பழக்கம். அவனால், ஆகமுடியாத வேலை இல்லை. மீச்சுவல் பண்டிலிருந்து மைலாப்பூர் மியூசிக்கல் ஸ்டோர்களில் வயலின் வாங்குவது வரை பிட்டு பிட்டு வைத்து இலவச ஆலோசனை சொல்வான். அவன் சொன்னது எதுவும் சோடை போனதில்லை. எல்லாம் தன்னம்பிக்கை அவனுக்குக் கொடுத்த தைரியம்!

எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் பிறருக்கு அவன் செய்த  உதவிகளின் அனுபவங்களை அஸ்திவாரமாகக் கொண்டது அவனது இன்றைய வளர்ச்சி என்பது அவனை நெருங்கிப் பார்த்தவர்களுக்கு மட்டுமே தெரிந்த உண்மை.

எந்த வேலையிலும் சுயமாகத் தான் ஈடுபடுவதே தன்னம்பிக்கைக்கு அஸ்திவாரம். எந்தப் புதுவேலையும், செயலும் தொடங்குகையில பிரமிப்பாகத்தான் இருக்கும். சிக்கு விழுந்த நூல்கண்டு மாதிரி. நுனி கண்டுபிடித்து பொறுமையாக முயற்சித்தால், எல்லாம் வெற்றியோ வெற்றிதான்! ஆரம்பத்தில் உடனடியான வெற்றி இல்லையென்றாலும், இதற்கு இப்படி என்று ஒரு வழியாவது தெரியுமல்லவா?..

ஏதாவது ஒரு வேலையை முடிக்க வேண்டுமானால், 'இதுக்கெல்லாம் அவன் தான் லாயக்கு' என்று 'ரெடிமேடாக'   ஒரு  சிலர் பதில் வைத்திருப்பார்கள். இவர்கள் எதற்கும் லாயக்கில்லை என்றுதான் அதற்கு அர்த்தம்.

எல்லா விஷயங்களையும் எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு காலகட்டத்தில் வாழ்கிறோம்.  ஆன்லைனில் பண பரிவர்த்தனை,    ஆதார் அட்டை எண்--  பான் அட்டை எண் இணைப்பு,  இவை இரண்டையும் வருமான வரிக் கணக்கோடு இணைப்பது என்று  தொடங்கி எந்த விஷயமும் நம்மிடமிருந்து அந்நியமாகிப் போய் விடாமல் வெகுதிரள் மக்களின் அன்றாட நடவடிக்கையாகிப் போயிருக்கிறது.

வங்கிகளில் பணம் எடுக்க செலுத்த வங்கி ஊழியர்கள் இருந்த காலம் மங்கி வருகிறது.   மனிதர்கள் போய் மிஷின்களோடு  உறவுப் பிணைப்பு ஏற்பட்டிருக்கும் காலம்  இது.   நிறைவேறாத எரிச்சல், கோபம் எல்லாவற்றையும் மிஷினிடம் காட்ட முடியாத யதார்த்த வாழ்க்கைக் கல்வி முந்தைய வாழ்க்கை போல அல்லாமல் ஆத்திரமின்மையையும் அமைதியையும் நமக்கு  பாடமாகப் போதித்திருக்கிறது.

வாழ்க்கையின் இன்றைய அமைப்பும் வாழும் முறையும் விதவிதமான மாற்றங்களைக் கொண்டு நாள்தோறும் வெவ்வேறான பயிற்சிகளைப் பெறுவதற்கு நம்மை உந்தித் தள்ளிக் கொண்டேயிருக்கிறது.   இது தகவல் தொழில் நுட்ப உலகம்.   எந்த விஷயத்தைப் பற்றியும் தெரிந்து கொள்ளாத தகவல் குறைச்சலும் நம்மைப் பாதிக்கிறது. ஏதாவது ஒரு இழப்பை ஏற்படுத்துகிறது.

எதை இழந்தாலும் தன்னம்பிக்கையை இழக்கக் கூடாது என்பது வாழ்க்கையின் வளர்ச்சிக்கான வேத மந்திரம்.   தன்னம்பிக்கை இழப்பு என்பது  ஒரு மனநோயாக உருவாகக் கூடிய சாத்திய கூறுகள் நிறைய உண்டு.  தன்னம்பிக்கை இழப்பு தாழ்வு மனப்பான்மையை நாளாவட்டத்தில் உள்ளத்தில் விதைத்துவிடும்.

எந்த உடல் உபாதையையும் விடக்கொடியது, இந்த உள்ள உபாதை. உடல் உபாதைகளுக்கும், நோய்களுக்கும் மருந்து என்றால், இந்த உள்ள உபாதை ஒழிய மனப்பயிற்சி அவசியம்.  

நீந்த வேண்டுமானால், தண்ணீரில் இறங்குவதுதான் வழி.

வாழ்க்கையில் பெரிய பெரிய வெற்றிகளைக் குவித்தவர்களெல்லாம், வானத்திலிருந்து குதித்தவர்கள் அல்ல. சாதாரண ஏழை, நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் தான்   பெரும்பாலும்.   வாழ நேரிட்ட வாழ்க்கையே அவர்களின்  வாழ்க்கை வெற்றிக்கான பாடத்தை சொல்லிக் கொடுத்து வளர்த்து  வெற்றி வாகை சூட வைத்திருக்கிறது..

தளராத உழைப்பும், தடுமாறாத செயல்களுமே  வெற்றிக்கனி பறிக்க அவர்களை வல்லவர்களாக்கியது என்பதை மறந்து விடக்கூடாது.


(வளரும்)


தன்னம்பிக்கை ஊட்டும் படங்களை அளித்த நண்பர்களுக்கு நன்றி.

27 comments:

நெல்லைத் தமிழன் said...

இடுகை,

"யானையின் பலமெதிலே தும்பிக்கையிலே
மனிதனோட பலம் எதிலே நம்பிக்கையிலே
நம்பிக்கைதான் விளக்கு இரு கண்ணிழந்த நமக்கு"

என்ற பாடலை நினைவுபடுத்திவிட்டது. நம்மால் முடியும் காரியத்துக்கு பிறரை எதிர்பார்ப்பதே (நான் எப்போதும் செய்வது இது. இதைச் செய்ய பக்கத்தில் இவர் இருக்கும்போது, நமக்கு எதுக்கு வேண்டாத வேலை என்ற சோம்பேறித்தனம்), நமது தன்நம்பிக்கையைக் குலைக்கும் செயல்.

"Information is wealth" - இதை நாம புரிந்துகொண்டால், எதையும் நாம் எதிர்பார்த்தபடி செய்ய இயலும், நமக்குப் பண நஷ்டமோ நேர விரையமோ ஏற்படாது.

நல்ல நம்பிக்கை ஏற்படுத்தும் இடுகை. தொடருங்கள்.

Thulasidharan V Thillaiakathu said...

தனக்கு நெருங்கியவர்களிடம் ஏற்படும் பிரமிப்பும் சில நேரக்களில் ஒருவனின் தன்னம்பிக்கையை இழக்கச் செய்யும். பிரபல எழுத்தாளர்களின் எழுத்துக்களைப் படிக்கும் பொழுது, எவ்வளவு அருமையாக அவர்கள் நினைத்ததை எழுத்தில் வடித்து அதை வாசிக்கும் நமக்கும் ஒரு அனுபவத்தைக் கொடுத்திருக்கிறார் என்று வியப்பு ஏற்படும்.// ஆமாம்! ரொம்பச் சரி.
//இதில் கோடிவீட்டு கோதண்டம் ரொம்ப மோசம்; பிளாஸ்டிக் மூடிதிறக்க அடம்பிடிக்கும் காஸ் சிலிண்டரை ரெகுலேட்டரில் பொருத்தக்கூட சாரங்கனைத் தேடுவான். சாரங்கனும், 'நான் ஆஜர்' என்று சொல்கிறமாதிரி காலையில் 'காப்பி' குடித்துவிட்டு வீட்டுத்திண்ணையில் 'ஹாயாக' உட்கார்ந்திருப்பான். யார் வீட்டில் எப்பொழுது கூப்பிடுவார்கள் என்று தெரியாது.// ஹாஹா கொஞ்சம் ஹாஸ்யம் இழையோடினாலும் சாரங்கன் பெரிய ஆள்தான் அது அவரது சாமர்த்தியத்தைப் பறை சாற்றுகிறது அவரதுதன்னம்பிக்கை…

Thulasidharan V Thillaiakathu said...

//நிறைவேறாத எரிச்சல், கோபம் எல்லாவற்றையும் மிஷினிடம் காட்ட முடியாத யதார்த்த வாழ்க்கைக் கல்வி முந்தைய வாழ்க்கை போல அல்லாமல் ஆத்திரமின்மையையும் அமைதியையும் நமக்கு பாடமாகப் போதித்திருக்கிறது. // ஆம் இது ஒருபக்கம் உண்மைதான். ஆனால் மறுபக்கம் மிஷின் வேலை செய்யவில்லை என்றால் எரிச்சல் கோபம் எல்லாமும் ஆட்கொண்டு ஒரு பதற்ற நிலையை எப்போதுமே சிலரிடம் விதைத்தும் விடுகிறதே.
//எதை இழந்தாலும் தன்னம்பிக்கையை இழக்கக் கூடாது என்பது வாழ்க்கையின் வளர்ச்சிக்கான வேத மந்திரம். தன்னம்பிக்கை இழப்பு என்பது ஒரு மனநோயாக உருவாகக் கூடிய சாத்திய கூறுகள் நிறைய உண்டு. தன்னம்பிக்கை இழப்பு தாழ்வு மனப்பான்மையை நாளாவட்டத்தில் உள்ளத்தில் விதைத்துவிடும்.// யெஸ் இப்படியான சிலரைச் சந்தித்த அனுபவம் உண்டு.

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

// இந்த உள்ள உபாதை ஒழிய மனப்பயிற்சி அவசியம். // ஆம் அந்த மனப்பயிற்சி உபாதை உள்ளவர்களால் செய்வது பல சமயங்களில் கடினமாகிவிடுகிறதே! அவர்களுக்கும் அதில் நம்பிக்கை ஈடுபாடு தமக்கு நல்லது, தமது உபாதையிலிருந்து வெளிவர வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் மட்டும்தான் இது வொர்க்கவுட் ஆகும் இல்லையா..

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

மிக மிக அருமையான தொடர். இறுதியில் உள்ள பாரா அருமை!

துளசிதரன், கீதா

வே.நடனசபாபதி said...


//பொதுவாக பத்திரிகைகளில் கதை கட்டுரை என்று வாசிப்போரில் ஒரு 10% பேர்களிடமாவது அவர்கள் அறியாமலேயே ஒரு பழக்கம் படிந்து விடுவது தவிர்க்க முடியாததாகி விடுகிறது. வாசிப்பில் ஏற்பட்ட மன ஈடுபாடு தாமும் அது போல் எழுதினால் என்ன என்கிற ஆர்வமாய் ஆரம்பத்தில் துளிர்க்கும். //

சரியாய் கணித்திருக்கிறீர்கள்!. இன்றைக்கு வலைப்பதிவு எழுதுவோரில் பெரும்பான்மையோர். பிறரது எழுத்தை வாசித்ததில் ஏற்பட்ட தாக்கம்/ வேட்கை காரணமாக எழுதிக்கொண்டு இருக்கிறார்கள் என்பது நிஜம்.

//நிறைவேறாத எரிச்சல், கோபம் எல்லாவற்றையும் மிஷினிடம் காட்ட முடியாத யதார்த்த வாழ்க்கைக் கல்வி முந்தைய வாழ்க்கை போல அல்லாமல் ஆத்திரமின்மையையும் அமைதியையும் நமக்கு பாடமாகப் போதித்திருக்கிறது. //

ஒரு வங்கியாளனாக இதை ஆமோதிக்கிறேன். நம்மிடையே ஒரு பழக்கம் உண்டு. திரைப்படங்கள் பார்க்க செல்லும்போது, பல மணி நேரம் வரிசையில் நின்று அனுமதி சீட்டு பெற்று படம் பார்க்கும் நம்மில் பலர், ஒரு சில மணித்துளிகள் வங்கிகள்/அஞ்சல் நிலையங்கள் போன்ற இடங்களில் சிறிது நேரம் நிற்க கூட பொறுமையில்லாமல் அங்குள்ள ஊழியர்களிடம் கோபத்தைக் காண்பிப்பதுண்டு. ஆனால் இந்த தானியங்கி வங்கி இயந்திரம் வந்தவுடன் நம்முடைய கோபங்கள் எங்கோ ஓடி மறைந்துவிட்டன என்பது நிதர்சனமான உண்மை.

“எதை இழந்தாலும் தன்னம்பிக்கையை இழக்கக் கூடாது என்பது வாழ்க்கையின் வளர்ச்சிக்கான வேத மந்திரம்.” என்ற தாரக மந்திரத்தை சொல்லும் இந்த பதிவு
//பொதுவாக பத்திரிகைகளில் கதை கட்டுரை என்று வாசிப்போரில் ஒரு 10% பேர்களிடமாவது அவர்கள் அறியாமலேயே ஒரு பழக்கம் படிந்து விடுவது தவிர்க்க முடியாததாகி விடுகிறது. வாசிப்பில் ஏற்பட்ட மன ஈடுபாடு தாமும் அது போல் எழுதினால் என்ன என்கிற ஆர்வமாய் ஆரம்பத்தில் துளிர்க்கும். //

சரியாய் கணித்திருக்கிறீர்கள்!. இன்றைக்கு வலைப்பதிவு எழுதுவோரில் பெரும்பான்மையோர். பிறரது எழுத்தை வாசித்ததில் ஏற்பட்ட தாக்கம்/ வேட்கை காரணமாக எழுதிக்கொண்டு இருக்கிறார்கள் என்பது நிஜம்.

//நிறைவேறாத எரிச்சல், கோபம் எல்லாவற்றையும் மிஷினிடம் காட்ட முடியாத யதார்த்த வாழ்க்கைக் கல்வி முந்தைய வாழ்க்கை போல அல்லாமல் ஆத்திரமின்மையையும் அமைதியையும் நமக்கு பாடமாகப் போதித்திருக்கிறது. //

ஒரு வங்கியாளனாக இதை ஆமோதிக்கிறேன். நம்மிடையே ஒரு பழக்கம் உண்டு. திரைப்படங்கள் பார்க்க செல்லும்போது, பல மணி நேரம் வரிசையில் நின்று அனுமதி சீட்டு பெற்று படம் பார்க்கும் நம்மில் பலர், ஒரு சில மணித்துளிகள் வங்கிகள்/அஞ்சல் நிலையங்கள் போன்ற இடங்களில் சிறிது நேரம் நிற்க கூட பொறுமையில்லாமல் அங்குள்ள ஊழியர்களிடம் கோபத்தைக் காண்பிப்பதுண்டு. ஆனால் இந்த தானியங்கி வங்கி இயந்திரம் வந்தவுடன் நம்முடைய கோபங்கள் எங்கோ ஓடி மறைந்துவிட்டன என்பது நிதர்சனமான உண்மை.

“எதை இழந்தாலும் தன்னம்பிக்கையை இழக்கக் கூடாது என்பது வாழ்க்கையின் வளர்ச்சிக்கான வேத மந்திரம்.” என்ற தாரக மந்திரத்தை சொல்லும் இந்த பதிவு நம்பிக்கையூட்டிய பதிவு என்று சொல்வேன் நான்.

அருமையாய் சென்றுகொண்டு இருக்கிறது இந்த தொடர். ஆவலுடன் காத்திருக்கிறேன் அடுத்த தொடரைப் படிக்க.

நெல்லைத் தமிழன் said...

"பொதுவாக பத்திரிகைகளில் கதை கட்டுரை என்று வாசிப்போரில் ஒரு 10% பேர்களிடமாவது அவர்கள் அறியாமலேயே ஒரு பழக்கம் படிந்து விடுவது தவிர்க்க முடியாததாகி விடுகிறது. வாசிப்பில் ஏற்பட்ட மன ஈடுபாடு தாமும் அது போல் எழுதினால் என்ன என்கிற ஆர்வமாய் ஆரம்பத்தில் துளிர்க்கும்"

உண்மைதான் ஜீவிசார். இதைப் படித்த உடனே எனக்கு நான் படித்த ரெண்டு சம்பவங்கள் ஞாபகம் வந்தன.

சாவி அவர்கள், விகடனில்(?) சேர்ந்த உடனேயே கதை எழுத ஆரம்பித்தாராம். அதற்கு கல்கி, 'கதை எழுத ஏகப்பட்ட பெண்மணிகள் இருக்காங்க, ஆனா பத்திரிகை ஆசிரியர் குழுவில் உள்ளவங்களோட வேலையே வேறு' என்று ஆற்றுப்படுத்தினாராம்.

ரவி பிரகாஷ் அவர்கள், பத்திரிகை அச்சாகும் (சாவி) நேரம் நெருங்கும்போது, ஏதேனும் மேட்டர் வரவில்லை என்றாலோ அல்லது இடம் காலியாக இருந்தாலோ, அவசர அவசரமாக ஏதேனும் கதையை எழுதி, யார் பேரிலோ வெளியிடுவாராம். இதைப்போல, மோனா(?) இதழுக்கும், கதை வந்து சேரவில்லை என்றாலோ அல்லது கதை நீளம் அதிகம் என்று நினைத்தாலோ, பொருத்தமாக மாற்றுவாராம் இல்லைனா, அவசர அவசரமாக ஒரு கதையையே எழுதுவாராம்.

இதைப் போன்றே சிலர், 'நாமளும் சமைத்துப் பார்த்தால் என்ன' என்ற ஆர்வத்தில் செய்வதும் உண்டு.

ஸ்ரீராம். said...

தன்னம்பிக்கை எனும் நன்னம்பிக்கை. முனையைப் பிடித்து விட்டால் போதும். முழுவதும் வசப்படுத்தி விடலாம். நெருங்கியவர்கள் என்றில்லை எதிர்ப்படுபவர்களிடம் ஏற்படும் பிரமிப்பு சிலசமயம் 'நம்மால் முடியாதோ, பெரிய விஷயமோ?' என்கிற எண்ணத்தைத் தோற்றுவிக்கும் என்பதும் உண்மைதான்.

ஜீவி said...

@ நெல்லைத் தமிழன்

முதல் வருகைக்கு நன்றி, நெல்லைத் தமிழன்.

ஒரு பதிவைப் படித்தவுடனேயே நாலு பேர் பின்னூட்டம் போட்டவுடன் நாமும் போடலாம் என்று காத்திருக்காமல் படித்ததின் பிரதிபலிப்பாய் நம் மனசில் தோன்றும் எண்ணத்தை உடனடியாக வெளிப்படுத்துவதும் தன்னம்பிக்கையை வளர்க்கும் ஒரு செயல் தான்.

கோமதி அரசு said...

//நம்பிக்கை கொள்ளுதல் என்பது வாழ்க்கையின் ஆதாரசுருதி. தன்மீது, தன் செயல்களின் மீது தனக்குத் தானே நம்பிக்கைக்கொள்ளுதல் தன்னம்பிக்கை எனலாம். இந்த நம்பிக்கை வாழ்வின் ஒவ்வொரு செயலுக்கும் அடிப்படைத்தேவை.//

நன்றாக சொன்னீர்கள் சார். தன்னம்பிக்கை இழந்தால் வாழ்வில் அனைத்தும் போய்விடும்.
வயதானவர்கள் தன்னால் எதுவும் செய்யமுடியவில்லை எல்லாவற்றிற்கும் பிறரை எதிர்ப்பார்க்கிறோம் என்பதேதான் அவர்களை மேலும் பலமிழக்க செய்கிறது.


அமைச்சர் மரகதம் சந்திரசேகர் அவர்கள் தண்ணீர் வேண்டும் என்றாலும் கூட தானே எழுந்து போய் தான் எடுத்து குடிப்பார்களாம். யாரையும் வேலை ஏவ மாட்டார்களாம்.

நம்மால் முடியும் என்றால் முடியும், முடியாது என்று நினைத்தால் முடியாமல் போய்விடுகிறது.

தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள நீங்கள் சொல்வது போல் தாழ்வு மனபான்மை ஒழிய மனப்பயிற்சி அவசியமே!
அருமையான கட்டுரைக்கு நன்றி சார்.

ஜீவி said...

@ TVT

//சாரங்கன் பெரிய ஆள்தான் அது அவரது சாமர்த்தியத்தைப் பறை சாற்றுகிறது//

அவர் பெற்ற இலவச கல்வி தான் எனக்குப் பெரிதாகத் தெரிகிறது.

பிறப்பிலிருந்து இறப்பு வரை எத்தனை விஷயங்கள்?.. எத்தனை சமூக ரீதியான சம்பிரதாயங்கள், சட்டங்கள் அதற்கான விதி முறைகள், யாரை அணுக வேண்டும், எப்படி செயலாற்ற வேண்டும் என்ற பாடங்கள்?..

பிறருக்கு உதவி என்பது நாமாக நினைத்துக் கொள்வது தான். பிறருக்கு உதவுவதின் மூலம் நம்மை நாமே வளர்த்துக் கொள்கிறோம் என்பது பாலில் அடங்கியிருக்கும் பிற விஷயங்கள் போல உள்ளார்ந்த உண்மைகள்.

ஜீவி said...

@ TVT

//ஆனால் மறுபக்கம் மிஷின் வேலை செய்யவில்லை என்றால் எரிச்சல் கோபம்.. //

இதுவும் சரிதான். இயல்பான கோபம் இரண்டு மடங்காகி வங்கி ஊழியர்களிடம் ஆரம்பித்து பிரதமர் மோடி வரை சீறும்.

நம்மைச் சுட்டுப் பொசுக்கும் எல்லா உணர்வுகளுக்கும் ஒரு அவுட் லெட் தேவை தான்.

எதிலும் ஒருவித சாத்வீக பார்வையும் ஒரு பயிற்சியாகப் பெறுவது தான். நுணுகி நுணுகிப் பார்த்தால் மதத் தத்துவங்கள் பல இந்தப் பயிற்சிக்காக தங்கள் பங்களிப்பைத் தந்திருக்கின்றன என்றும் அடிக்கோடிட்டுச் சொல்லலாம். இறை நம்பிக்கையை அலசுபவர்கள் இந்த மாதிரியான விஷயங்களை செளகரியமாக மறந்து விடுவார்கள்.

நல்லவைகளை விட்டு விட்டு அல்லாதவைகளை ஆராய்ச்சி செய்வதில் நமது கவனம் கூடும் பொழுது இதெல்லாம் கண்ணுக்குத் தெரியாது.

ஜீவி said...

@ TVT

//தமது உபாதையிலிருந்து வெளிவர வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் மட்டும்தான் இது வொர்க்கவுட் ஆகும் இல்லையா..//

உபாதையிலிருந்து வெளிவர வேண்டும் என்ற எண்ணத்துடனான மனப் பயிற்சிகள் பரிட்சைக்கு படிக்கிற மாதிரி. மதிப்பெண் பெறுவதற்காக உருப்போடும் வாசிப்பு.

உபாதைகளுக்கு என்றில்லாமல் அதுவே ஒரு வாழ்க்கை முறையாகிப் போய் நம்மில் படிந்தால் ஒரு மெஸ்மரிஸத்திற்கு ஆட்பட்டது போல நம்மில் செயல்பாடுகள் அமையும்.
உபாதை என்பதிலிருந்து நாம் மீண்டது தெரியாமல் நிவாரணம் கிடைக்கும். வேறு வித எந்த உபாதைகளுக்கும் நாம் ஆட்படாமல் வாழ்க்கை பூராவும் கவசமாகக் கூட வரும்.

உபாதைகளை மறந்து செயல்படுவது சிரமமான காரியம் தான். மனப்பக்குவம் அதற்கு நிரம்ப தேவை.

நம் உணர்வுகள் சம்பந்தப்பட்ட எந்த விஷயத்தை எடுத்துக் கொண்டாலும் அது மனதில் போய்த் தான் முடியும். காலை எழுந்ததிலிருந்து இரவு படுக்கைக்குப் போகும் வரை மன உத்திரவுகள் தாம் நம்மை ஆட்டுவிக்கின்றன. அந்த மன உத்திரவுகளை ஒரு ஒழுங்குக்கு கொண்டு வந்தால் நம் மனமே சிறப்பான செயல்பாடுகளுக்கு வழிகாட்டும்.

மனம் என்பதனை இந்திய தத்துவ ஞானிகள் நுணுகி நுணுகி ஆராய்ந்திருக்கிறார்கள்.
அந்த மனதை அஸ்திவாரமாகக் கொண்டது தான் இந்திய தத்துவியல் என்னும் அழகான
பிர்மாண்ட மாளிகை.

சிக்மண்ட் பிராய்டின் பங்களிப்புக்குப் பின் தான் மனம் என்பதன் ரகசிய புதையல்கள் சர்வ தேசப் பார்வைக்கு வெளிச்சத்திற்கு வந்தன.

நம் உடலில் மனம் என்ற வஸ்து எங்கே இருக்கிறது?.. எந்த எம்.ஆர்.ஐ. ஸ்கேனும் அதை நமக்குப் புலப்படுத்தப் போவதில்லை. ஆனால் அப்படி ஒன்று நம்மில் செயல்படுவது மருத்துவ சாத்திரத்திற்கே இன்று புரிபட்டிருக்கிறது.

மனதை மனத்தால் தான் புரிந்து கொள்ளலாம் என்பது தான் இறுதியான விடை.

இது கடவுள் எங்கே என்று கேட்பவருக்கான விடையும் கூட.

கடவுளின் இருப்பை புறக்கணிப்போரை நாத்திகர்கள் என்று அழைப்பது வழக்கமாகிப் போயிருக்கிறது..

கடவுளைப் போலவே தான் மனமும்.

மனம் என்ற ஒரு பொருள் (object) எந்த பரிசோதனைக்கும் கண்ணுக்குப் புலப்படாவிட்டாலும் மனமறுப்பாளர்களை மட்டும் ஏனோ காணோம்.

Mind தான் மனம் என்றும் அரைகுறை மனதோடு சொல்பவர்களும் உண்டு. இன்றைய மருத்துவ சாத்திரம் அதற்கும் மேலும் 'மனதை' தீர்க்கமான ஆய்வுகள் மூலம் ஆய்ந்து வருகிறது.

அந்த ஆய்வுகளில் அடிப்படையில் தான் 'மன இயல்' என்று மருத்துவ சாத்திரத்தில் ஒரு தனி இயலே பிற்காலத்தில் உருவாக நேரிட்டிருக்கிறது.

யோசிப்புகளைக் கிளர்த்தும் தங்கள் தொடர்ந்த பின்னூட்டங்களுக்கு மிக்க நன்றி, சகோதரி.

G.M Balasubramaniam said...

பத்திரிகைகளில் எழுதுவோரின் பாதிப்பு வசிப்பவர்களுக்கும் வருகிறது. இந்தசெய்தி கேள்விக்குரியது எழுதுவோரிடமிருந்து கற்பவை எழுத்தில் வருமா

Bhanumathy Venkateswaran said...

//எதை இழந்தாலும் தன்னம்பிக்கையை இழக்கக் கூடாது என்பது வாழ்க்கையின் வளர்ச்சிக்கான வேத மந்திரம்.//

என் அப்பா அவர் வாழ்க்கையில் ஒரு கடுமையான சோதனையை சந்தித்த பொழுது, தமிழ்வாணன்,'துணிவே துணை' என்ற பெயரில் எழுதிய தொடர் கட்டுரைகளே தனக்கு மிகுந்த தைரியத்தையும்,மனா வலிமையயையும் தந்ததாக கூறுவார்.

ஜீவி said...

@ G.M.B.

//பத்திரிகைகளில் எழுதுவோரின் பாதிப்பு வசிப்பவர்களுக்கும் வருகிறது. இந்தசெய்தி கேள்விக்குரியது //

புரியவில்லை.

//எழுதுவோரிடமிருந்து கற்பவை எழுத்தில் வருமா? //

கற்பவையும் சரி, கற்பனையும் சரி வாசிப்போரின் எழுத்தின் வளர்ச்சிக்கு நிச்சயம் உதவும்.

என்னைப் பொருத்த மட்டில் நான் படித்தவையெல்லாம் எப்படி எழுதலாம், அல்லது எப்படி எழுதக்கூடாது என்பதற்கான பாடப்புத்தகங்கள்.

வாசிக்கும் பொழுதே பிற எழுத்தாளர்களின் 'எழுது முறை'யை ரசிக்க வேண்டும்.
எழுத முயற்சிப்போருக்கு கதை படிப்பதை விட இது சுவாரஸ்யமானது. உபயோகப்படக் கூடியது.

கதை எல்லாம் இரண்டாம் பட்சம் தான். அதை எப்படி எழுத்தில் சொல்வது என்பது தான் முக்கியமாகிறது.

ஜீவி said...

@ வே. நடனசபாபதி

தாங்கள் நிஜம் என்று சொன்னதும் நிஜம் தான். உள்ளார்ந்து பார்த்தால் படித்தவைகள்
நம் சிந்தனையில் கிளர்த்தும் செயல்பாட்டின் வெளிப்பாடே நாமும் எழுதத் துவங்குவது என்று தெரியும். வாசிப்பவை நம்முள் ஒரு disturbance-யை ஏற்படுத்துவதாய் இருக்க வேண்டும்.

கடவுள் சமாச்சாரம் கூட இப்படித்தான். அந்த disturbance ஏற்பதற்கும் மறுப்பதற்கும் காரணமாகிறது.




ஜீவி said...

@ வே. நடன சபாபதி

//ஆனால் இந்த தானியங்கி வங்கி இயந்திரம் வந்தவுடன் நம்முடைய கோபங்கள் எங்கோ ஓடி மறைந்துவிட்டன என்பது நிதர்சனமான உண்மை. //

சிலருக்கு அடக்கப்படுகின்றன. அந்த வங்கியை விட்டு வெளியேறுவதற்குள் வேறு ஏதாவது விஷயத்தில் வெளிப்பட்டாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை.

வீட்டுக்குப் போனவுடன் கூட மனைவியிடம் புலம்பலிலாவது வெளிப்பட்டே தீரும். எப்படியாவது வெளிப்படல் உடல் நலத்திற்கு நல்லது தான். அடக்குவது தான் ஆபத்தாகி விடும்.

எழுத்தாளர்கள் பாக்யம் செய்தவர்கள். சந்தோஷத்தையும், ஆத்திரத்தையும் எழுத்தில் வெளிப்படுத்த அவர்களுக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. எழுதி முடித்தவுடனேயே அவர்களிடமிருந்து அந்த உணர்வுகள் கழண்டு விடுகின்றன.

அவர்களின் உணர்வுகளை வாசிக்கும் வாசகர்களுக்கும் தொற்ற வைத்து தான் கழண்டு கொண்ட விஷயத்தின் தொடர்ச்சியை வாசகர்களிடம் ஏற்படுத்துகிறார்கள்.

வாசகர்கள்?.. அவர்கள் இந்த மாதிரி ஏதாவது எழுதி தங்களிடம் தொற்றிக் கொண்டதிலிருந்து வெளியேற வேண்டியிருக்கிறது.

உன்னிப்பாகப் பார்த்தீர்கள் என்றால் எல்லாமே சயின்ஸ் சமாச்சாரங்கள்.


ஜீவி said...

@ நெல்லைத் தமிழன்

//விகடனில்?..//

ஆமாம். சந்தேகமென்ன".. விகடனில் ஆசிரியராய் இருந்தவர் தானே, கல்கி?..

விகடனிலிருந்து மணியன்--சாவி வெளியேறிய பிற்காலத்து செய்திக்கு முற்காலத்தது கல்கி விகடனிலிருந்து வெளியேறியது. விகடன் வாசன் பகுத்தறிவு போட்டி (கட்டம் கட்டி விடை காணும் ஒரு போட்டி -- ஞாயிறு தினமலரில் வருவது போல) என்று ஒன்று ஆரம்பித்தது வெளியேற சாக்காகி போயிற்று.

கல்கியிலிருந்து வெளியேறிய நா.பா.வின் கதை தனிக் கதை.

// அதற்கு கல்கி, 'கதை எழுத ஏகப்பட்ட பெண்மணிகள் இருக்காங்க, ஆனா பத்திரிகை ஆசிரியர் குழுவில் உள்ளவங்களோட வேலையே வேறு' என்று ஆற்றுப்படுத்தினாராம்.//

'பெண்மணிகள்' என்ற வார்த்தை மட்டும் சேர்க்கையாகப் படுகிறது.

ஆசிரியர் குழுவில் உள்ளவர்களின் ஆக்கிரமிப்பு எழுத்து விஷயத்தில் பத்திரிகையில் இல்லாமல் பார்த்துக் கொண்டார் போலிருக்கு.

ஆனால் கல்கி அச்சகத்தில் அச்சுக் கோப்பவராக இருந்த விந்தனை ரொம்பப் பிடித்து போய் தனக்கு பக்கத்தில் ஆசிரியர் குழுவில் அமர்த்திக் கொண்டு அவர் எழுத்துக்களை கல்கி பத்திரிகையில் பிரசுரம் கண்டு மகிழ்ந்தவரும் அதே கல்கி தான். விந்தனின் பாலும் பாவையும் நாவல் அந்தக் காலத்தில் வாசகர்களின் மனசைக் கவர்ந்த ஒன்று.

ஜெயகாந்தனுக்கு முன்பேயே ஜெயகாந்தன் தொட்ட அடித்தட்டு மக்களின் ஆவலாதிகள், அவலங்களைச் சொன்னவர் விந்தன்.

இந்த விஷயத்தில் மிகச் சரியாகச் சொல்ல வேண்டுமானால், விந்தன்-- ஜெகசிற்பியன்-- ஜெயகாந்தன் என்று வரிசைப் படுத்துவதே சரியாகும்.

'குமுதம்' விஷயமே அலாதியானது. அங்கு சகலமும் ஆசிரியர் குழுவினர் தான். பத்திரிகையின் மொத்த பக்கங்களும் பாரங்களாக பிரிக்கப் பட்டும் அவற்றிற்கான உள்ளீடுகளை ஆசிரியர் மேற்பார்வையில் பார்த்துக் கொள்வது ஆசிரியர் குழாமின் வேலையாயிற்று.

ஆக, ரா.கி.ரா., ஜ.ரா.சு., புனிதன் என்று... இவர்களும் வெவ்வேறு பெயர்களில் என்று...



ஜீவி said...

@ நெல்லைத் தமிழன்

//இதைப்போல, மோனா(?) இதழுக்கும், //

ராணி முத்து போல, மாலைமதி போல, சாவிக்கு மோனா (தனிப்புத்தகம்).

ஜீவி said...

@ ஸ்ரீராம்

'நம்மால் முடியாதோ?' என்ற ஐயப்பாட்டை வென்று விட்டால் 'நம்மால் தான் இது முடியும்' என்ற நம்பிக்கை மனசில் துளிர்த்து விடும்.

ஜீவி said...

@ கோமதி அரசு

//வயதானவர்கள் தன்னால் எதுவும் செய்யமுடியவில்லை எல்லாவற்றிற்கும் பிறரை எதிர்ப்பார்க்கிறோம் என்பதேதான் அவர்களை மேலும் பலமிழக்க செய்கிறது.//

நீங்கள் வேறே. இதில் இன்னொரு பகுதியும் இருக்கிறது.

பலருக்கு அதுவே பலமாகவும் போய் விடுகிறது. மனைவி-- மருமகள் சமையலறைக்கு.

மகன் -- சம்பாதிக்க.

நடுத்தர குடும்பங்களில் எனக்குத் தெரிந்து மற்ற சொந்தங்கள் பார்த்துக் கொள்வார்கள் என்று அக்கடாவென்று பல ஆண்கள் காலங்கழிக்கிறார்கள்.

அதிகாலையில் எழுந்திருந்து தானே திக்காக டிகாஷன் இறக்கி முதல் டிகாஷனில் முதல் காஃப்பி. அப்புறம் அடுப்படி பக்கம் வருவது அடுத்த நாள் அதிகாலையில் தான்.

ஐந்து மணிக்கு குளியல். கொஞ்ச நேரம் இறை நம்பிக்கை என்ற பெயரில் முணுமுணுப்பது.

ஆறு மணிக்கு மனைவி எழுந்து போட்டுத் தரும் இரண்டாவது காஃப்பி. உடனே வாக்கிங் போய் வருகிறேன் என்ற பெயரில் வெளியே வந்து விடுவார்கள்.

இவரை ஒத்த வயதானவர்களுடன் அரசியல், பிற வம்புகள் என்று கிட்ட்த்தட்ட இரண்டு மணி நேரம் பொழுதைப் போக்கி விட்டு மெதுவாக எட்டு எட்டரைக்கு வீட்டில் நுழைவார்கள்.

இந்த 6 to 8 வீட்டு நெருக்கடிகளில் தலை கொடுக்காமல் இருக்கத்தான் அனுதினமும் வாக்கிங் என்ற பெயரில் பொழுது போக்கல்.

வேலைக்குப் போகும் மருமகளின் அவசரம், மகனின் கூப்பாடுகள், காலைச் சமையல், பேரன், பேத்திகளுக்கு டிபன் ரெடி பண்ணுவது என்று பெற்றவர்களின் சுமையைச் சுமப்பது பெரும்பாலும் தாய்மார்கள் தாம்.

கேட்டால், 'எவ்வளவு சாமர்த்தியசாலிங்கறே?.. எல்லாம் அவள் பார்த்துப்பாள்' என்று நழுவி விடுவார்கள்.

ஜீவி said...

@ Bhanumathy Venkateswaran

தமிழ்வாணனைப் பற்றி எழுத வேண்டிய ஆசை மீண்டும் துளிர்த்துக் கொண்டிருக்கிறது.
அவரைப் பற்றி எழுதுவதாக ஏற்கனவே நெல்லைத் தமிழரிடம் சொல்லியிருக்கிறேன்.

வாசிப்பதின் பாதிப்பு வாசிப்பவரிடம் வரும் என்ற விஷயம் கேள்விக்குரியது -- என்பது தான் ஜிஎம்பீ சாரின் ஐயம் என்றால் உங்கள் பின்னூட்டம் அவரின் சந்தேகத்தைப் போக்கியிருக்கும் என்று நினைக்கிறேன்.




கோமதி அரசு said...

நீங்கள் சொல்லுவது போல் உள்ளவர்களையும் பார்த்து வருகிறேன். இப்படியும் சிலர் இருக்கிறார்கள் தான்.

என்னால் எங்கு போனாலும் அவர்களுக்கு உதவி செய்யாமல் இருக்க முடிவது இல்லை.
என் மாமியாருக்கு 93 வயது இன்னும் அந்த காலத்தில் இப்படி வேலை செய்தேன், இவ்வளவு வேலை செய்தேன், இப்போது முடியவில்லையே என்று வருத்த படுகிறார்கள். காய் வெட்டி தருகிறேன். காலை டிபன் சமயம் கூடமாட வேளை செய்வார்கள். என் தாயாரும் அப்படித்தான் இறக்கும் வரை மருமகளுக்கு உதவியாக இருந்தார்கள்.

சில மருமகளுக்கு சமையல் அறை அவர்கள் சாம்ராஜியம் யாரும் புகுந்தால் தனக்கு பிடிக்காது என்றும் இருக்கிறார்கள். அதனால் அந்த வீட்டு பெரியவர்கள் பட்டும் படாமலும் இருக்கிறார்கள்.

//வேலைக்குப் போகும் மருமகளின் அவசரம், மகனின் கூப்பாடுகள், காலைச் சமையல், பேரன், பேத்திகளுக்கு டிபன் ரெடி பண்ணுவது என்று பெற்றவர்களின் சுமையைச் சுமப்பது பெரும்பாலும் தாய்மார்கள் தாம்.//

ஆண்களுக்கு ஓய்வு காலம் உண்டு, பெண்களுக்கு ஓய்வு கிடையாது எப்போதும். முதலில் மாமனார், மாமியார், கண்வர், குழந்தைகள், அப்புறம், மருமகள், பேரன், பேத்திகள், அப்புறம் உயிருடன் திடமாய் இருந்தால் கொள்ளுபேத்தி, பேரன்களுக்கும் சேவை தொடரும். அதுதான் அவர்களை வாழ வைத்துக் கொண்டு இருக்கிறது.








Geetha Sambasivam said...

நல்லதொரு பகிர்வு. வாழ்க்கையில் எதையும் சமாளிக்கக் கூடிய வல்லமையைச் சிறு வயதிலிருந்தே பெற்றோர்கள் குழந்தைகளுக்குப் போதிக்க வேண்டும். இப்போதைய தமிழ்நாட்டுச் சூழ்நிலையில் இந்தத் தன்னம்பிக்கைக் கட்டுரைதான் அனைவருக்கும் தேவையானது! தன்னம்பிக்கை தான் வாழ வைக்கும் என்பதை எடுத்துச் சொல்லும் கட்டுரை!

Geetha Sambasivam said...

//இந்த 6 to 8 வீட்டு நெருக்கடிகளில் தலை கொடுக்காமல் இருக்கத்தான் அனுதினமும் வாக்கிங் என்ற பெயரில் பொழுது போக்கல்//

இது ஆண்கள் மட்டும் செய்வதில்லை. என் அனுபவத்தில் நான் கண்டவரைக்கும் பல மாமியார்கள் மருமகளின் வேலைகளைப் பகிர்ந்து கொள்ளாமல், கோயில், சாமி என்று காலையிலேயே கிளம்பி மெதுவாகப் பத்துமணிக்கு வீடு திரும்புவார்கள். மருமகளிடம் உன் வீடு,உன் கணவன், உன் குழந்தைகள் எனப் பிரித்துப் பேசுவார்கள். எல்லாப் பொறுப்புக்களையும் மருமகளே சுமக்க வேண்டும். உடல்நிலை சரியில்லாமல் இருந்தும் கொஞ்சமும் அதைக்குறித்துச் சிந்திக்காமல் மருமகளையே வேலை வாங்குவார்கள்! குற்றம், குறையும் சொல்வார்கள்! ஆகவே ஆண்கள் மட்டுமே சுயநலவாதிகள் இல்லை! பெண்களிலும் பலர் அப்படி இருக்கிறார்கள். இருந்திருக்கிறார்கள்.

Geetha Sambasivam said...

இப்போதைய மாமியார்களின், மாமனார்களின் நிலை பரிதாபத்துக்குரியது என்பதையும் மறுக்க முடியாது. :)

Related Posts with Thumbnails