Thursday, March 16, 2017

"EVEN IF"--ம் இந்திரர் அமிழ்தமும்

ரு பிரபலத் தொலைக்காட்சியில் பேராசிரியர் ஒருவர் ஆங்கில மொழிக்கான  இலக்கணப்பாட  வகுப்புகளைத்  தொடர்ச்சியாக   எடுத்துக் கொண்டிருந்தார்.   சென்னை  தி.நகரில்,   சுலபமாக ஆங்கிலம் கற்பதற்காக பயிற்சி வகுப்புக்களைக் கொண்ட டூடோரியல் பள்ளி ஒன்றையும்  மிகப் பிரமாதமான முறையில் அந்தப் பேராசிரியர் நடத்தி வருகிறார்.

 அந்தப் பேராசிரியரின் பாடம் நடத்தும் ஆற்றலில் கவரப்பட்டு,  அவரது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தவறாது பார்க்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தேன்.

ஒரு நாள் அவரது  தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ----

If- என்னும் ஆங்கில Conjunction சொல்லின் தொடர்பாகப் பயன்படுத்தும் வார்த்தைகளை விவரமாக விளக்கப்புகுந்தவர்,  "EVEN IF" என்ற வார்த்தையை எந்த நேரத்து எப்படியெல்லாம்  உபயோகப்படுத்தலாம் என்பதைச்  சொல்லிக்  கொண்டிருந்தார்.

Even if it is thunder strom, I will attend the programme.
Even if you provide $1000, I will not do that job.

இடி இடித்துப் புயல் வீசினும், அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வேன்.
ஆயிரம் டாலர் பணம் தந்தாலும், அந்தக் காரியத்தைச் செய்யமாட்டேன்.

'Even if' என்கிற வார்த்தையை  உபயோகப்படுத்துதலில் இன்னும் பல உதாரணங்களைச் சொல்லி   மிக அழகாக   அந்த நிகழ்ச்சியைப்  பார்க்கும் சிறார்களின் மனத்தில் படியும்படி பாடத்தை நடத்திக் கொண்டிருந்தார்.            
தீர்மானமாக, உறுதிபட செயல்பட முடியாது என்று முடிவெடுக்கையில், இந்த 'Even if' வரும்;

அதே மாதிரி எதுவரினும் செயல்படுவேன் என்கிற இடத்தும் இந்த 'Even if' ஒட்டிக்கொண்டு ஓடோடி வரும்.

'EVEN IF'--ன்  மாறுபட்ட எதிர் எதிரான இரண்டு உபயோகிப்புக்கள் இவை.

இந்த 'Even if'-ஐ தொலைக்காட்சியில் அந்தப் பேராசிரியர் விளக்கிக் கொண்டிருக்கையில், கண்கள் தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருக்க, மனமோ தறிகெட்டு சங்க காலத்திற்குப் பறந்தது. கண்கள் கடலுள் மாய்ந்த இளம் பெருவழுதியை நினைத்துப் பனித்தன!

வழுதி என்கிற வழக்கிலேயே அவன் பாண்டிய மன்னனென்று தெரிகிறது. பெருவழுதி எப்படி இறந்திருப்பான்?.. எதிர்பாராத இறப்பு மாதிரி தான் தெரிகிறது, அவன் எந்தப் பெருவழுதி என்று குறிப்பிட்டுச் சொல்வதற்காக சுட்டப்படுவது, 'கடலுள் மாய்ந்த' என்னும் குறிப்புச் சொற்றொடர்!

கடல் கடந்து படையெடுத்துச் சென்று வெற்றிவாகை சூடுவது, அன்றைய தமிழக மன்னர்களுக்கு இயல்பான ஒரு செயலாக இருந்தது. "கடாரம் கொண்டான்" என்று கடல கடந்து சென்று கடார நாட்டை வெற்றி கொண்டதைக் குறித்துச் சொல்லும்படி இராஜராஜ சோழனைக் குறிப்பிடுவதிலிருந்து, இந்த மாதிரி கடல் தாண்டிய போருக்கெல்லாம், தாங்களே தலைமை தாங்கிப் படை நடத்திச் சென்று வென்றிருக்கிறார்கள் தமிழக மாவேந்தர்களென்று தெரிகிறது! அப்படி ஒரு படையெடுப்பின் பொழுதுதான் இந்த பெருவழுதி கடலுள் மரக்கலம் கவிழ்ந்து மாய்ந்து விட்டானோ?...கடலுள் மாய்ந்த இந்த பெருவழுதி, இளம் வயதுடையோன் என்றுக் குறிக்க இளம் பெருவழுதியோ?..

--என் நினைவுகள், பரிதாபச் சூழலில் முக்கித் தவித்தன.

எவ்வளவு புலமை?..எவ்வளவு சிந்தனைச் சிறப்பு?..எவ்வளவு குண மேன்மை?..இவன் யாத்ததாக புறநானூற்றில் ஒரு பாடல்தான் இன்று நமக்குப் படிக்கக் கிடைக்கப்பெறினும், அந்த ஒரு பாடலே ஓராயிரம் அர்த்தங்களை நமக்குச் சொல்லி நானூற்றில் நட்சத்திரமாக ஒளிவிடுகிறது!...பண்டைய தமிழன் தலை நிமிர்ந்து நிற்க முற்றிலும் தகுதியுடையோன் என்று பறைசாற்றும் இப்படிப்பட்ட அட்டகாசமான பாடல்களை வாசிக்கும்
நேரத்து உள்ளம் விம்மி களிப்பெய்துகிறது!..

"உண்டால் அம்ம, இவ்வுலகம் -- இந்திரர்
அமிழ்தம் இயைவது ஆயினும், 'இனிது' எனத்
தமியர் உண்டலும் இலரே; முனிவு இலர்;
துஞ்சலும் இலர்; பிறர் அஞ்சுவது அஞ்சி
புகழ் எனின், உயிரும் கொடுகுவர்; பழியெனின்
உலகுடன் பெறினும், கொள்ளலர்; அயர்விலர்;
அன்ன மாட்சி அனையர் ஆகி
தமக்கு என முயலா நோன் தாள்,
பிறர்க்கு என முயலுநர் உண்மையானே"

(புறநானூறு--182)

திணை--பொதுவியல். துறை--பொருள்மொழிக்காஞ்சி

அமுது கிடைப்பினும் இனிது எனத்
தான் மட்டும் உண்ணார்; பிறரை வெறுத்தலும்
சோம்புதலும், மனச்சோர்வும் அறியார்
புகழ் என்றால் உயிரையே கொடுப்பர்
பழி என்றால் இந்த உலகையே
பரிசாகக் கொடுத்தாலும் பெறார்.
தனக்கென்றால், வலிந்து எந்த முயற்சியிலும் ஈடுபாடாதார்,
பிறர்க்கென்றால், எதையும் முயன்று செய்து கொடுக்கும் தன்மையுடையோர்.....

---'இப்படிப்பட்டவர் இருக்கையினால் தான், ஐயா, 'உண்டால் அம்ம இவ்வுலகம்'---இந்த உலகம் இருக்கிறது'  

---  என்று பிரகடனப்படுத்துகிற வகையில்,பாடலின் முழு அழுத்தத்தையும்
முதல் வரியில் கொண்டு போய்ச்சேர்த்து முடிக்கும் கவி அரசனின்  மாசுமறுவற்ற உள்ளமும்  மொழியை தான் சொல்ல வந்ததற்கேற்ப   வளைத்துக்  கையாண்ட அவனது மொழியாற்றலும்    சிலிர்ப்பேற்படுத்துகிறது!...

"இந்திரர் அமிழ்தம் இயைவது ஆயினும், இனிது எனத் தமியர் உண்டலும் இலரே"-- என்கிற வரிக்கு, "Even if"--என்னும் ஆங்கில Conjunction- வார்த்தையைப் பொருத்திப் பார்த்து உள்ளம் மகிழ்கிறது.

அமிழ்தம் எப்படிப்பட்ட உச்சகட்டச் சிறப்பு உடைத்து என்பது தெரியும்; அந்த அமிழ்தமே கிடைக்கப்பெறினும்,  தான்மட்டும் தனியே உண்ணமாட்டார்களாம்!

"Even If"--என்ன அருமையாக இங்கே பொருந்துகிறது, பாருங்கள்!

Friday, March 10, 2017

எல்லோர்க்கும் கொடுமதி மனைக் கிழவோயே!

ப்பொழுதும் திருநெல்வேலி பக்கம் போனாலோ, அல்லது அந்த ஊரை நினைத்தாலே எனக்கு ராமசாமி நினைவு வந்து விடும்.

அடுத்த வாரம் தென்காசிக்கு ஒருவேலையாகப் போகவேண்டியிருக்கிறது. அப்படியே குற்றாலத்தில் ஒருநாள் தங்கல். ரயில்வே கால அட்டவணைப் புத்தகத்தை முன்பதிவுக்காகப் புரட்டும் பொழுது, ராமசாமி ஞாபகத்திற்கு வந்து விட்டான்.

அவன் தந்தையை நினைக்கையிலேயே எவ்வளவு அற்புதமான மனிதர் என்று மனசு நெகிழ்கிறது. ஆண்டவன் படைப்பில் மானுடராய் இப்படிப்பட்ட ஒரு வாழ்வு வாழ்ந்த நல்ல மனிதர்களை நினைக்கும் பொழுது நாமும் அப்படிப்பட்ட ஒரு வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டுமென்று நெஞ்சில் சூளுரைத்துக் கொள்வதும் இயல்பான ஒரு செய்கையாகப் போய்விட்டது. ரொம்பவும் மோசமாகப் போய்விடாமல், இப்படிப்பட்ட நல்லவர்களின் வாழ்வுதான் நம்மை வழிநடத்தி காப்பாற்றுவதாகவும் நான் நம்புகிறேன்.

ராமசாமி கொழுத்த செல்வந்தவர்களின் குடும்பத்தில் பிறந்தவன். பரம்பரையே மிட்டா மிராசுதாரர்கள். செலவம் ஓரளவுக்கு மேல் சேர்ந்துவிட்டால், அதுவே மேலும் மேலும் தன் வளர்ச்சியைத் தானே பார்த்துக் கொள்ளும் இயல்புடையது போலும்.

திருநெல்வேலி வண்ணாரப்பேட்டையில் மா,பலா,தென்னை மரங்கள் சூழ்ந்த மிகப்பெரிய பங்களா அவர்களது. அவர்களின் வீடு என்று சொல்லப்படும் மாளிகையின் வேலியை ஒட்டிய நீண்ட தெருவில் ஒரு வீட்டில் நாங்கள் குடியிருந்தோம். வரிசையாக பதினைந்துக்கு மேற்பட்ட பக்கத்துப் பக்கமாக ஒட்டிக்கட்டப்பட்ட வீடுகள்..அத்தனையும் ராமசாமி குடும்பத்துக்குச் சொந்தமானது.

ராமசாமி என் பள்ளித்தோழன் கூட. எங்களது பெரிய ஜமா. பத்து பதினைந்து  பேர்கள் கொண்ட எங்கள் குழு, தினமும் மதுரை திரவியம்
தாயுமானவர் இந்துக் கல்லூரி பள்ளிக்கு போவதும், மாலையில் வீட்டுக்குத் திரும்புவதும் ராமசாமி வீட்டு வேனில் தான். அந்தப் பக்க சிறுகுழந்தைகள் ஆரம்ப பள்ளிக்குப் போவதற்காக இன்னும் இரண்டு வேன்களைத் த்னியாக ஏற்பாடு செய்திருந்தனர்.

பங்களாவை ஒட்டியவாறே சத்திரம் போல மிகப்பெரிய ஹாலுடன் ஒரு கட்டிடம் இருக்கும். காலையில் கூட்டமாக துண்டும் சோப்புப்பெட்டியுமாக அரட்டை அடித்தபடி தாமிரபரணியில் குளித்துவிட்டு வந்தோமானால், அவரவர் வீட்டிற்குச் சென்று உடைமாற்றிக் கொண்டு இந்த சத்திரம் போன்ற இடத்தில் குழுமிவிடுவோம்.

எல்லோருக்கும் காலை டிபன் அங்கேதான். எப்படியும் தினம் இருபது பேருக்கு மேல் தேறிவிடும். ராமசாமி, ராமசாமியின் தம்பி, அவன் அப்பா, அம்மா சூழ உட்கார்ந்து சாப்பிடுவோம். சமையல்கார சாம்புமாமா, பளீரென்று வெள்ளை வெளேர் வேஷ்டியும் மேல்துண்டுமாய் நெற்றி நிறைய வீபூதி-சந்தனப்பொட்டுமாய் ஆரோக்கியமாய் இருப்பார். ராஜ உபசாரம் தான். அவர் அவரவரைப் பேர் சொல்லி விளித்து, "தேங்காய்ச்சட்னி போடட்டுமா?..கொத்ஸூ கொஞ்சம் போட்டுக்கோயேன்"..என்று கேட்டுக்கேட்டு விசாரித்து அன்புடன் பரிமாறுவார். குண்டு கத்திரிக்காயைச் சுட்டு, கட்டித் தயிரில் மூழ்க வைத்துத் தாளித்துக் கொட்டி சட்னிமாதிரி பண்ணியிருப்பார் சாம்புமாமா. அந்த வயசில் எனக்கு ரொம்பவும் அது பிடிக்கும். கேட்டுக்கேட்டு வாங்கிப் போட்டுக்கொண்டு சாப்பிடுவேன்.

அந்த சத்திரம் போன்ற ஹாலைச் சுற்றி வந்தால், இடதுப்பக்கக் கோடியில் ஒரு பிள்ளையார் கோயிலை பங்களாக்குள்ளேயே கட்டியிருப்பார்கள்... அந்தப் பிள்ளையாருக்கு தினமும் உச்சிகால பூஜை முடிந்ததும், ஏழைஎளியோருக்கு இலைபோட்டு எளிமையான சாப்பாடு தினமும்
உண்டு..கிட்டத்தட்ட மத்தியானம் இரண்டு மணிவரை நாலைந்து பந்திகள் நடக்கும். சாப்பிட்டு வயிறு நிறைந்தவர்கள் வாயார வாழ்த்தியது தான், அந்த குடும்பத்தையே எந்தக்குறையுமில்லாமல் வாழ வைத்தது போலும்!..ராமசாமியின் அப்பாவுக்கு அப்பா, மற்ற சொந்தக்கார உறவுகள் என்று எண்பதைத் தாண்டியவர்களே ஏகப்பட்ட பேர் அந்த குடும்ப்த்தில் வளைய வந்து கொண்டிருப்பர்...எல்லோரும் ஏதோ வேலையில் ஈடுபட்டு எங்கங்கோ போய்க்கொண்டும் வந்துகொண்டும் இருப்பார்கள்...பங்களா பூராவும் எந்நேரமும் கலகலப்புடன் 'ஜேஜே' என்ற கூட்டம் தான்! எல்லோரும் உரக்கப் பேசி உரக்க சிரித்துக் கொண்டிருப்பார்கள்.. ஏழைக் குழந்தைகளுக்கு இரவுப்பள்ளி உண்டு.. அவர்களுக்கு பாடம் படிக்க வகுப்பு போன்ற தோற்றத்துடன் கரும்பலகையும் மேஜை நாற்கலிகளுமாய் ஒரு பெரிய ஹால் உண்டு.. இரவு பள்ளி நடத்தவென்றே, டவுனிலிருந்து நாலைந்து ஆசிரியர்கள் வந்து போவார்கள்...அவர்கள் வருவது போவது எல்லாம் பங்களா காரில் தான்!..

ஒருநாள், "என்ன இப்படி எல்லோருக்கும் வாரி வழங்குகிறீர்கள்?" என்று யாரோ 'ஒருமாதிரி' கேட்டதற்கு, ராமசாமியின் அப்பா, பரமார்திகமாக மேலே ஆகாயம் நோக்கி கையுயர்த்தி, "எல்லாம் அவன் கொடுத்தது; தீரத்தீர இன்னும் கொடுத்திண்டே இருக்கான்..அவன் என்னிடம் கொடுப்பதைத்தான் நான் நாலுபேருக்குக் கொடுக்கிறேன்" என்று ரொம்ப சுருக்கமாகச் சொன்னார்... இன்னொருநாள் சாயந்திரம் இதே மாதிரி கேட்ட இன்னொருவரிடம், "என்ன புதுசா கேட்கறே?..என் தாத்தா..என் தாத்தாக்கு தாத்தா.. அவர்கள் செஞ்சதைத் தானே நானும் செய்யறேன்.. இந்தக் குடும்பமே, ஜஸ்ட் மிடில் மென்! எல்லாம்  அந்த ஆண்டவனுக்குச் சொந்தம்.    எந்தக் காலத்திலே யார் செஞ்ச பூர்வபுண்ணியமோ, இந்த மேனேஜ்மெண்ட் பாக்கியம் எங்களுக்குக் கிடைச்சிருக்கு.." என்று 'பகபக'வென்று சிரித்துச் சொன்னது இன்னும் என் நினைவில் நிழலாடி சிலிர்ப்பேற்படுத்துகிறது..

பிற்காலத்தில் நான் படித்த இந்தப் புறப்பாடலும் நினைவிற்கு வருகிறது:

"நின் நயந்து உறைநர்க்கும், நீ நயந்து உறைநர்க்கும்,
பல் மாண் கற்பின் நின் கிளை முதலோர்க்கும்,
கடும்பின் கடும் பசி தீர யாழ நின்
நெடுங் குறியெதிர்ப்பை நல்கியோர்க்கும்,
இன்னோர்க்கு என்னாது, என்னோடும் சூழாது,
வல்லாங்கு வாழ்தும் என்னாது நீயும்
எல்லோர்க்கும் கொடுமதி--மனை கிழவோயே!--
பழம் தூங்கு முதிரத்துக் கிழவன்
திருந்து வேல் குமணன் நல்கிய வளனே."

(புறநானூறு--163)

வள்ளல் குமணனைப் பாடி பரிசில் கொணர்ந்த பெருஞ்சித்திரனார் என்னும் புலவர் பெருந்தகை, தன் மனையோட்குச் சொன்னது, இப்பாடல்.

கொடுத்தவன், வள்ளல்; பரிசில் பெற்ற புலவனும் அவனை விஞ்சிய வள்ளலாய் இருப்பான் போலிருக்கு என்று மனசு களியாட்டம் போடுகிறது..எப்படிப் பட்ட இனம், இந்த தமிழினம் என்று நெஞ்சு பூரிப்பால் விம்மித் தணிகிறது.. அடடா! அடடாவோ! என்ன அருமையான, வரிக்கு வரி பெருமிதத்தைப் பூசிக்கொண்ட வார்த்தைகளால், வார்த்தெடுக்கப்பட்ட கவிதை!...

"உன்னை விரும்பி வந்தோருக்கும்,
நீ விரும்பியோருக்கும், உத்தம குணம் கொண்ட
வழிவழிவந்த உற்றோருக்கும்,
பிறர்பசி காணப் பொறாது
குறிப்பாலாயே உணர்ந்து அவர்தம் பசி
போக்கியோர்க்கும்---
இவருக்குத் தான் என்று எண்ணாது
என்னையும் இது குறித்துக் கலக்காது
நீண்ட நாள் கவலையின்றி வாழ இது
நமக்காயிற்று என்றும் எண்ணாது
எல்லோருக்கும் அள்ளி அள்ளிக் கொடு--
என் மனைக்கிழத்தியே---இந்த
செல்வம்?...இது முதிரத்துச் சொந்தக்காரனான
நம் குமணன் நல்கிது, அல்லவா?..


கரன்ஸி நோட்டுகளை அடுப்புப்பற்ற வைத்தாலும் பத்து தலைமுறைக்குக் காணும் சொத்து என்று செட்டிநாட்டுப் பக்கம் பேச்சுக்குச் சொல்வார்கள். அப்படிப்பட்ட செல்வத்தைப் பெற்ற செல்வந்தர்கள் இரக்கத்தின் அடிப்படையிலும், தர்மம் செய்ய வேண்டுமென்கிற இயல்பாக வழிவழிவந்த குடும்ப குணநலனாகவும், வசதிகுறைந்த வறியோருக்குக் கொடுப்பதை தானம் என்பார்கள். வரும் வருமானத்தில் ஒரு சதம் தானத்திற்கு ஒதுக்கி வைப்பதை சில குடும்பங்களில் ஒரு பழக்கமாகவும் கொண்டுள்ளார்கள்.

ஆனால், தானே வறிய நிலையில் இருக்கையில், இன்னொருவரிடம் தன் சொந்த திறமை காட்டிப்பெற்ற பரிசிலை, எல்லோருக்கும் வாரி வழங்குவது என்பது நினைத்துப் பார்க்கவே பெரிய விஷயமாகப் படுகிறது. அதுவும், "வல்லாங்கு வாழ்வோம் என்று எண்ணாது எல்லோருக்கும் கொடுத்துவிடு" என்று சொன்ன பெருஞ்சித்திரனாரின் குணமேன்மை நினைத்து நினைத்து மகிழத்தக்கது. 'இருப்பது தீர்ந்துவிட்டால், இருக்கவே இருக்கிறான், புலவர்களைக் காக்கும் புரவலன் குமணன்! பாடிப் பரிசில் பெறலாம்; பெறுவது என்பது பலருக்குக் கொடுத்து மகிழவே' என்கிற புலவர் பெருமானின் செம்மாந்த பண்புநலனும் ஊடும் பாவுமாய் பாட்டில் பரவியிருப்பதும் உன்னிப்பாய் கவனித்தால் புலப்படும்.

Monday, March 6, 2017

சாபம்

சென்ற  பகுதி வாசிக்க:  http://jeeveesblog.blogspot.in/

பகுதி--3

புவியியல் பேராசிரியர் துரைசாமி மேடையேறியதும் அவரை வரவேற்று தனது அரிய கண்டுபிடிப்பான அந்தக் காலக் கணினி முன் நிறுத்தினான் டேவிட்..  துரைசாமியின்  பிறந்த தேதியும்  அன்றைய தேதியும் நேரமும் காலக்கணினியில் பதியப் பட்டன.

"துரைசாமி சார்!  உங்களது எந்த ஜென்மத்து நிகழ்ச்சியை பார்க்க  ஆவலாக இருக்கிறீர்கள்?" என்று அவரிடம் கேட்டான் டேவிட்..

"போன ஜென்மத்து என் சம்பந்தப்பட்ட நிகழ்வு ஏதாவது பார்த்தால் போதும்.
அதுவே எனக்குப் பேரானந்தமாக இருக்கும்" என்றார் துரைசாமி.

"ஓ.கே.  கொஞ்சம் வலது புறமாக நகர்ந்து கணினிக்கு நெருங்கி வந்து திரையில் உங்கள்  முகம் தெரிகிற மாதிரி  அமர்ந்து கொள்ளுங்கள்.  உங்களது இந்த ஜென்மத்து முக விலாசத்தை அந்தக் கணினி புரிந்து கொள்ளட்டும்" என்றான் டேவிட்.

துரைசாமியும் அப்படியே செய்தார்.   அவர் முகம் கணினித் திரையில் நன்றாகப் பதிந்ததும் விர்..ரென்று  விர்ரிட்டது கணினி.

டேவிட்  காலக்கணினியின் வயிற்றுப் பகுதியில் ஒன்று என்று இலக்கமிட்டிருந்த குமிழைத் திருப்பியதும்,   இரண்டே வினாடிகளில் 'பளிச்'  என்று துரைசாமி சாரின் போன ஜென்மத்து அந்தக் காட்சி திரையில் படர்ந்து விரிந்தது.

சட்டென்று டேவிட் கணினியில் மொழியைப் பதித்து ஸ்பீக் பட்டனை அழுத்தினான்.

இப்பொழுது பேண்ட்டும் ஸ்லாக்குமாக இருக்கும் துரைசாமி, திரையில் வேஷ்டியும் அங்கவஸ்திரமுமாய் இருந்தார். அவர் கையில் ஒரு கவளம் சாத உருண்டை. அதை ஒரு உயர்ந்த மேடையின் மேல் வைத்து விட்டு, "கா..கா..." என்று கத்துகிறார். உடனே காககையொன்று பறந்து வந்து அந்த சாத உருண்டையை கொத்துகிறது. அதே நேரத்தில் பின்புலக்காட்சியாக, ஒரு பசு. அந்தப் பசுவுக்கு எதிரே ஒரு கை நீண்டு வைக்கோல் கட்டு ஒன்றைப் போடுகிறது.

"ஓ..ஓ.." என்ற  ஆரவாரத்திற்கிடையே , டேவிட் விளக்கப் பொத்தானை அழுத்தி, பிளாஸ்டிக் அட்டையைப் பெற்று,  அதில் பொறித்திருந்த விஷயத்தைப்    படித்து விட்டு விளக்கினான்.   மொத்தக் கூட்டமும் டேவிட் சொல்வதைக் கூர்மையாகக் கேட்டுக் கொண்டிருந்தது.


"ஒன்றுமில்லை..இது துரைசாமி சாரின் சென்ற தலைமுறைக் காட்சி.   அதாவது  துரைசாமி சாரின் போன ஜென்மத்தில் இதே மாதம், தேதி, நேரத்தில் நடந்த காட்சி.   அன்றைய தினம், துரைசாமி சார் யாருக்கோ சிரார்தம் செய்திருக்கிறார்.    சிரார்தம்-- --யூ நோ?.. ஒரு குடும்பத்தில்  இறந்தவர்களுக்காக அவர் வழிவந்தவர்கள், சிரத்தையுடன் செய்யும் திதி அது.  அந்த ஜென்மத்து  துரைசாமி சார், பிண்டம் வைத்து காக்கைகளைக் கூப்பிட, அவை வந்து சாப்பிடுகின்றன.   அதெல்லாம் போகட்டும்.  அந்தப்  பின்புலக் காட்சியைப் பார்த்தீர்களா?..  அதுதான் இதில் விசேஷம்!..அதே நேரத்தில் இவன் உருட்டி வைத்த சாதப்பிண்டம், வைக்கோல் கட்டாக மாறி, யார் மூலமாகவோ, அந்த ஜென்மத்தில் பசுவாக உயிர் தரித்திருக்கும்-- துரைசாமி சார்  யாருக்காக சிரார்த்தம் செய்கிறாரோ அவருக்குப்-- போய்ச் சேருகிறது. இது உண்மையிலேயே உடலைச் சிலிர்க்கவைக்கும் ஒரு காட்சி" என்று டேவிட் முடிக்கிறான்.

"உடலையும் எரித்தாயிற்று;  உயிரும்  பிரபஞ்ச வெளியோடு கலந்தாச்சு. அப்படியிருக்க இறந்து போனவர்வர்கள்  எப்படி இவர் அளிக்கும் உணவை ஏற்றுக் கொள்வார்கள்?  என்ற கேள்விக்கு பதிலாக அந்தப் பின்புலக் காட்சி அர்த்தம் நிறைந்ததாகத் தெரிகிறது.." என்றார்  வானவியல் பேராசிரியர் உலகநாதன்.

"இன்னொன்றும் தெரிகிறது.." என்றார் சாமிநாத சர்மா.  "பிறப்புகளில் உயர்ந்த மனிதப்பிறப்பு கிடைத்து விட்டது என்று இறுமாந்து இருக்க வேண்டாம்.  அந்தந்த பிறப்புகளில் செய்யும் நன்மை--தீமைகளுக்கு ஏற்ப அடுத்த பிறவி கிட்டுவதாகவும் கொள்ளலாம்" என்றார் சர்மா.

ஜெகப்பிரியனுக்கு ஏக ஆச்சரியம்.  எழுந்திருந்தவர், "இந்த அதிசய காலக்கணினியின் செயல்பாடுகளைப் பார்த்து விட்டு அது பற்றி ஏதாவது சொல்லாமலிருந்தால் பாவம்.." என்று ஆரம்பித்தார்.  "இறப்பிற்குப் பிறகு ஏதுமில்லை. ஆட்டம் க்ளோஸ் என்று இதுகாறும் நம்பியிருந்தேன்.  அந்த நம்பிக்கை பொடிப்பொடியாக சிதறுண்டதை இப்போது என் கண் முன்னாலேயே கண்டேன்.    இத்தனாவது  ஜென்மம் என்றால் அதற்கேற்ப ஒரு காட்சியை ப்ரோகிராம் பண்ணியிருப்பீர்களோ என்ற சந்தேகமும் ஆரம்பத்தில் இருந்தது.  மாற்றி மாற்றி வரும் காட்சிகளின் நேர்த்தியும் அந்த காட்சிகளுக்கு ஏற்ப விவரக் குறிப்புகள்,  காட்சிகளின் நேரடி ஒலி விளக்கம் எல்லாம் அற்புதம்.  இந்தத் தலைமுறையின் மிகச் சிறந்த கண்டுபிடிப்பு இதுவாகத் தான் இருக்கும்.   இளைஞன் டேவிட்டுக்கு என் அன்பார்ந்த ஆசிகள்.  கண்டுபிடிப்புகளுக்கான உலகின் மிகச் சிறந்த பரிசுகளைப் பெற என் வாழ்த்துக்கள்.." என்று சொல்லி அமர்ந்தார்.

கூட்டத்தின் வலது பக்க ஓரத்தில் லேசான சலசலப்பு.  அநத இடத்தில் அமர்ந்திருந்த  சுரேஷ் எழுந்ததும் அவன் தோற்றமே எல்லோரையும் கவர்வதாக இருந்தது.  .  இவனுக்குக் கூட இந்த தொடர் ஜென்மங்களில் ஈடுபாடு இருக்குமா என்று ஐயம் எற்படுகிற மாதிரியான இளமை ஊஞ்சலாடும் வசீகரிப்பு..

அவனைப் பார்த்து"ஓ..ஓ.." என்று கூட்டமே கரகோஷிக்க, அடுத்ததாக சுரேஷ் மேடையேறினான்.

"எங்கள் பெரும் மதிப்பிற்கும் பேரன்புக்கும் உரிய  இளம் விஞ்ஞானி      டேவிட்  அவர்களே! உங்களது அரிய இந்த கண்டுபிடிப்பைக் கண்டு அடக்கமுடியாத சந்தோஷத்தில் நாங்கள் திளைத்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் எனக்கும்.."என்று மேடைப்பேச்சு பாணியில் ஆரம்பித்தவன், மெல்ல தனக்கு முன்னால் உட்கார்ந்திருக்கும் விஞ்ஞானிகளின் கும்பலில் இரண்டாவது வரிசையை நோட்டமிட்டான். அவன்  விழிகள்  மொய்த்த இடத்தில் உட்கார்ந்திருந்த ரேவதிக்கு முகமெல்லாம் சிவந்தது.

எத்தனை தலைமுறைகள் தாண்டிப் போனால் தானென்ன?.. பெண்கள் நாணப்பட்டால், முகம் தான் சிவக்கும் போலிருக்கிறது.

"ஹியர்..ஹியர்.."என்று கூவினான் டேவிட்."மிஸ்டர், ஷூரேஷ்! ரேவதியின் அனுமதியா?. இஃப் யூ டோண்ட் மைண்ட், கேன் ஐ டேக் தி பிரிவிலேஜஸ்?.. ரேவதி அனுமதிக்க மறுக்கமாட்டார்களென்று நினைக்கிறேன்." என்றவன் அட்டகாசமாக சிரித்தான்.

அந்த  மொத்த  கூட்டமே 'கொல்'லென்று சிரித்தது. இளம் விஞ்ஞானி சுரேஷ் மேடையில் நாணத்துடன் நெளிந்தான்.

"தென் வாட்?.. ரேவதி, உங்கள் காதலர் சுரேஷ் தனது முந்தைய ஜென்மத்தைப் பற்றித் தெரிந்து கொள்வதில் உங்களுக்கு ஆட்சேபணை உண்டா?" என்றான், குறுப்புக்கார டேவிட்.

ரேவதியும் அடக்கமுடியாமல் சிரித்து விட்டாள். "பை ஆல் மீன்ஸ்."

"ஓ.கே. அனுமதி கிடைத்துவிட்டது, சுரேஷ்!" என்று சுரேஷைப் பார்த்து டேவிட் முறுவலித்தான். "எந்தத் தலைமுறை சுரேஷ்?"

ஒரு நிமிடம் தான் சுரேஷின் தயக்கம். டக்கென்று "இருபது ஜென்மங்களுக்கு முன்னால் நான் எப்படி இருந்தேன் என்பதைத் தெரிந்து கொள்ளலாமா, புரொபஸர் சார்?" என்றான்.

"ஓ.." என்று உதடைக் குவித்த டேவிட், அன்றைய தேதி, சுரேஷின் பெயர், பிறந்த தேதி, ஆகியவற்றை கம்ப்யூட்டரில் பதிந்து,  காலக்கணினியின் வயிற்றுப் பகுதியிலிருந்த 20- என்று எண்ணிட்டிருந்த குமிழைத் திருப்பியதும் திரையில்...

அந்த காலத்து இராஜசபை.

புலவர்களும், தளபதியும் வீரர்களும் புடைசூழ மகுடம் தரித்து அரியாசனத்தில் மன்னன். அவன் தலைக்கு நேரே சிவப்பு அம்புக்குறி.

அழகே உருவான அபலைப் பெண் ஒருத்தி கண்களில் நீர் வழிய, மன்னனிடம் எதையோ யாசித்துக் கொண்டிருக்கிறாள். மன்னனின் முகத்தில் அதை மறுக்கும் தீவிரம்.

டேவிட்  காலக்கணினியில்    மொழியைப் பதிந்து, ஸ்பீக் பட்டனை அழுத்தியதும், குரல்! பெண்ணின் குரல்!

ந்தப் பெண்ணின் குரலில் அதிகப்பட்சப் பரிதாபம் கலவையிட்டிருந்தது.

"அன்பரே! எப்படி என்னை உங்களால் மறக்க முடிந்தது?.. இந்த சகுந்தலையை மறப்பது எப்படி உங்களுக்கு சாத்தியமாயிற்று?.. என் கைவிரல் தீண்டி கணையாழி போட்டது உங்களுக்கு நினைவில்லையா? அழகான சோலையில் பர்ணசாலை பக்கத்தில் நாம் கூடிக் களித்திருந்தது நினைவில்லையா, அன்பே?"

"இல்லை..இல்லை.." என்று அவசரமாக மறுத்தான் மன்னன். "நீ யாரோ?.. நீ யாரென்பதே எனக்குத் தெரியாது!உன் தகுதி உணராமல் அரசனுடன் உறவாடி இராஜத்துரோகம் புரியாதே.. போய்விடு, இங்கிருந்து.."

"மன்னா.. நீங்களில்லாமல் இந்த உயிர் உடலில் எப்படித் தங்கும்? நான் சொல்வது சத்தியம், மன்னா.. நான் சொல்வது சத்தி..."

"பசப்பாதே, பெண்ணே!.. போய்விடு, இங்கிருந்து.. துஷ்யந்தன் பெயரைக் களங்கப்படுத்த, மன்னனென்றும் பாராமல் பழிசுமத்த இங்கு வந்திருக்கிறாயா?.. தளபதி.. இவளை இழுத்து.."

தளபதி உக்கிரப்பார்வையுடன் அவளை நெருங்கி, அவள் கைப்பற்றியதும் சடாரென்று தலைதூக்கி ஆவேசமே அவளாகிறாள். "என்னை நெருங்காதே.... மன்னா! நினைவுபடுத்திப் பாருங்கள், என்னை நினைவு இல்லையா?..ஐயோ! நிஜமாக என்னை நினைவில்லையா, மன்னா! அதை எப்படி மறக்கமுடியும், உங்களால்? பொய்யுரைக்காதீர்கள். பொய்யுரைக்கும் உங்களுக்கு இனி எந்தப் பிறவியிலும், ஆமாம், எந்தப் பிறவியிலும்.. ஒரு பெண்ணின் காதல் கைகூடாமலே போகட்டும்.. போகட்டும்.." என்று தலை குனிந்து குலுங்கிக் குலுங்கி அழுகிறாள் சகுந்தலை.

இதைப் பார்த்து ரேவதி பதட்டத்துடன் தன் இருக்கையில் நிலைகொள்ளாமல் நெளிந்தாள்.

சுரேஷ் முகத்தில் விவரிக்க இயலாத குழப்பம். அந்த விஞ்ஞானிகளின் கூட்டமே திக்பிரமை அடைந்த மாதிரி உட்கார்ந்திருந்தது. கொஞ்ச நேரத்திற்கு முன்னாடியிருந்த சிரிப்பும், கும்மாளமும் இருந்த இடம் தெரியமல் ஓடி ஒளிந்திருந்தது.

கணினியை 'ஆஃப்' செய்வதற்கு முன், அவசர அவசரமாக 'விளக்க' பட்டனை தட்டினான் டேவிட்.. விளக்க அட்டை வந்து விழுந்தது. அங்கிருந்த யாருக்கும் பொறுமையில்லாமல், என்னவென்று தெரிந்து கொள்ளும் ஆவலில் எழுந்து விட்டார்கள்.

'விளக்க' அட்டையை ஒரே வினாடியில் மேய்ந்து விட்டு எல்லோருக்கும் கேட்கிற மாதிரி டேவிட் உரத்த குரலில் சொன்னான்: "அவன் பெயர் துஷ்யந்தன். இந்தியாவில் நாடாண்ட மன்னன். காட்டில் வேட்டையாடிக் கொண்டிருந்த பொழுது கன்வ மகரிஷியின் பாதுகாபிலிருந்த சகுந்தலையைச் சந்திக்கிறான்.. அவள் மேல் மோகம் கொண்டு காந்தர்வ மணம். மோகத்திற்கு அத்தாட்சி, அவன் அவளுக்கிட்ட மோதிரம்...

"துஷ்யந்தன் சகுந்தலையைப் பிறகு முறைப்படி அழைத்துக் கொள்வதாகச் சொல்லி நாடு திரும்புகிறான். ஒரு முனிவர் இட்ட சாபத்தால், சகுந்தலையை மறக்கிறான்.  துர்திர்ஷ்டவசமாக குளிக்கும் பொழுது கடலில் சகுந்தலை அவனிட்ட மோதிரத்தைத் தொலைத்து விடுகிறாள்...

"காட்டில் காந்தர்வமணம் புரிந்து கொண்டவனை நாட்டில், அரசவையில் சந்திக்கிறாள். தன் பரிதாப நிலையைச் சொல்லி முறையிடுகிறாள். முனிவர் சாபத்தால் எல்லாவற்றையும் மறந்த துஷ்யந்தன், 'பசப்பாதே..நீ யாரோ, நான் யாரோ' என்கிறான். இதுதான் நாம் பார்த்தது" என்கிறான் டேவிட்.

"ஓ.. வாட் எ பிட்டி!" என்று கூட்டமே புலம்ப, சுரேஷ், டேவிட்டிடம் சென்று, பரிதாபமாக "பிறகு துஷ்யந்தனான நான் என்ன செய்தேன்? அந்த சகுந்தலையை மணந்தேனா?.. அந்த அபலையைக் காப்பாற்றினேனா?.. என்ன செய்தேன்?..சொல்லுங்கள்" என்று துடித்தான்.

"அதற்கு மறுபடியும் கம்ப்யூட்டரை இயக்கினால் தான் தெரியும்" என்ற டேவிட் மறுபடியும் சுரேஷை கம்ப்யூட்டரின் முன்னால் நிறுத்தி, அவன் பெயரைப் பதிவு செய்து, '20' என்று எண்ணிட்ட குமிழைத் திருப்பி.....

அதற்குப் பிறகு நடந்தவற்றைத் தெரிந்து  கொள்ளும் ஆவலில் விஞ்ஞானிகள், பேராசிரியர்கள்     கூட்டம் உட்கார----

ரேவதி மட்டும்.......

ஓ, ரேவதி?....

அவள் அந்த இடத்தை விட்டு எப்பொழுதோ போய்விட்டாள்.

முந்தையப் பிறவியில் கொண்ட காதலை பகிஷ்கரித்த ஒருவனிடம், இந்தப் பிறவியில், இப்பொழுது தன் வாழ்க்கையை ஒப்படைப்பதா என்கிற தயக்கமா?...

அப்படித்தான் இருக்க வேண்டும். இல்லை, சாபமோ?..

ஆமாம், சாபம் தான். அதுவும் ஒரு பெண்ணின் சாபம். சகுந்தலையின் சாபம்!

(நிறைவுற்றது)


படங்கள் உதவிய நண்பர்களுக்கு நன்றி.

Friday, March 3, 2017

சாபம்

சென்ற பகுதி:  http://jeeveesblog.blogspot.in/           

பகுதி--2

ம்ப்யூட்டர் திரையில்---

ஒரு பஸ் எரிந்து கொண்டிருந்தது.  சுற்றிலும்  'காச் மூச்' என்ற ஆக்ரோஷமிக்க ஜனத்திரள்.  மூலையில் ஒருவன் தன் கையை உயர்த்தி உயர்த்திக் காட்டுவது தெரிகிறது..  சட்டென்று திரையில்  அங்கேயும் இங்கேயும் ஓடி பதற்றத்துடன் ஓடும் அவனின் தலைக்கு நேரே ஒரு சிவப்பு அம்புக்குறி பளீரிடுகிறது.

டேவிட் அந்த அதிசயக் கணினியின் வயிற்றுப் பகுதியிலிருந்த ஒரு பட்டனைத் தட்டியவுடன்  ஒரு பிளாஸ்டிக் அட்டை வெளிப்படுகிறது. அதில் பொறித்திருந்த எழுத்துக்களை வேகமாக மேய்ந்து விட்டுச் சொல்கிறான்:  "மிஸ்டர் ஸ்மித்!   திரையில் ஒற்றையாய் கையை உயர்த்தி உயர்த்திக் காட்டிக் கொண்டிருக்கும் ஒரு மனிதனை சிவப்பு அம்புக்குறி சுட்டிக் காட்டுகிறது, பாருங்கள்,  அவன் தான் நீங்கள்!  அதாவது இந்த ஜென்ம ஸ்மித்தின் போன ஜென்மத்திற்கு முந்திய ஜென்ம உருவம்!  பை த பை அவன்-- ஸாரி, இந்த ஜென்ம உங்களின் அந்த ஜென்ம ஆசாமி--  எதற்காக இப்படி கையை உயர்த்தி உயர்த்திக் காட்டுகிறார், என்ன  சொல்கிறார் என்று கேட்கலாமா?" என்று டேவிட் சொல்லி முடிப்பதற்குள் மொத்தக் கூட்டமும் ஆரவாரத்துடன் ஆர்ப்பரித்தது.

அவர்களை அமைதிபடுத்தி விட்டு அந்த அதிசயக் கணினியின்  கீழ்ப்பகுதியிலிருந்த 'ஸ்பீக்' பட்டனை  டேவிட் அழுத்தியதும்  உரத்த ஓசையாய் குரல் வந்தது. "வேண்டாண்டா.. வேண்டாண்டா.
அரசாங்கத்தின் மேல் உங்களுக்கு ஆத்திரம்ன்னா பஸ்ஸை ஏண்டா கொளுத்திறீங்க..  நம்ம சொத்துடா, அது!..  அது தெரியலையா, ஒங்களுக்கு?  இந்த  அக்கிரமத்தைக் கேட்பாரில்லையா?..நிறுத்துங்கடா.. நிறுத்துங்க.."

இப்பொழுது திரையில் பஸ்ஸைக் கொளுத்தும் கூட்டத்திலிருந்து ஒருவன் ஓடிவந்து ஓலமிடும் அந்த ஒற்றை மனிதனை நையப்  புடைத்து ஓரம் தள்ளினான்.  மொத்த பஸ்ஸூம் சொக்கப்பனை.

இந்தக் காட்சியைப் பார்த்துக் கொண்டிருக்கும் ஸ்மித்தின் முஷ்டி இறுகுகிறது.  "நிறுத்துங்கள், நிறுத்துங்கள்..  பஸ்ஸைக் கொளுத்தாதீர்கள்.." என்று ஆவேசத்துடன்  அவர் கத்துவதைப் பார்த்து  திகைத்தபடி 'ஸ்பீக்' பட்டனை 'ஆஃப்' செய்தான்  டேவிட்.

அந்தக் காலக்கணினித் திரையை இத்தனை நேரம் பார்த்துக்  கொண்டிருந்த கூட்டம், "என்ன, என்ன?""  என்று ஆவலுடன் நெரிபட்டது.

டேவிட் உடனே கணினியின்   வயிற்றுப் பகுதி விளக்க பட்டனைத் தட்டி, பிளாஸ்டிக் அட்டையை உருவி அதில் பொறித்திருந்த விளக்கக் குறிப்பை வாசித்து விட்டுச் சொன்னான்: "ஒன்றுமில்லை!./      நம்து சென்ற தலைமுறைக்கு முந்தைய தலைமுறை ஜனங்கள் அவர்கள்.  எதற்காகவோ தங்களை ஆளுகின்ற அரசாங்கத்தின் மீது அவர்களுக்குக் கோபம்.  அந்த அவர்களது ஆத்திரத்தை வெளிக்காட்ட,  தங்களது கோபத்தை அரசாங்கத்திற்குப்  புரிய வைக்க  பொதுச் சொத்தான பஸ்ஸைக் கொளுத்துகிறார்கள்..."                                                  

"பஸ் என்றால்?"  என்று உட்கார்ந்திருந்தவர்களின் மத்தியிலிருந்து ஒரு குரல் விளக்கம்  கேட்டது.

"விளக்கக் குறிப்பிலிருந்து அது பயணம் செய்வதற்கான ஒரு வாகனம் என்று தெரிந்தது.   ரயில், பஸ், விமானம் போன்றவற்றை அந்தக் கால மனிதர்கள் தங்கள் பயணத்திற்காக உபயோகப்படுத்தினார்கள் என்று நானும் அறிந்திருக்கிறேன்.." என்றான் டேவிட்.

"தங்கள் பயண வாகனத்தைக் கொளுத்தினார்களா?..   அட... புத்திசாலிகளே!'  என்று இரண்டாம் வரிசை ஆரம்பத்தில் அமர்ந்திருந்த விஸ்வநாதன் கேலியாக உரக்கச் சொன்னான்.

"ஆமாம், புத்திசாலிகள் தான்.. தங்களது வரிப்பணத்தில் உருவாக்கிய தங்களின் சொத்துக்களையே அழிக்கிற புத்திசாலிகள்!" என்று சொல்லி விட்டு  டேவிட் தொடர்ந்தான்...  "இதைத் தான் அந்த  ஒற்றை ஆசாமி-- ஸ்மித் சாரின் போன ஜென்மத்திற்கு முந்தைய ஜென்ம உயிர்-- தடுக்கிறது.  ஜென்ம ஜென்மங்களாகத் தொடரும் உயிர்களின் தொடர்பும்  எனக்கு ஆச்சரிய மூட்டுகிறது.  கொஞ்ச  நேரத்திற்கு முன்பு  பஸ் எரியும் அந்தக் கணினிக் காட்சியைப் பார்த்து  விட்டு  அந்த ஜென்ம-- இந்த  ஜென்ம   உயிர்கள்  தொடர்பு கொண்டதே போல ஸ்மித் சாரும்  நிறுத்துங்கள்   , நிறுத்துங்கள், பஸ்ஸைக் கொளுத்தாதீர்கள்!..' என்று பதறித்  துடித்ததைப்  பார்த்து நான் அசந்து போய் விட்டேன்..  என்ன அதிசய அனுபவம் அது நமக்கு1'  என்று டேவிட் வியந்து போனான்.

"இதில் இன்னொரு  ஆச்சரியமும்  இருக்கிறது" என்றார் புவியியல்  அறிஞ்ர் சர்மா. "அந்த பஸ் என்ற வார்த்தையையும்   இந்த ஜென்ம மிஸ்டர் ஸ்மித் உபயோகப்படூத்தினார், பாருங்கள்.   நமக்கெல்லாம் -- மிஸ்டர் ஸ்மித் உட்பட- அறிமுகமில்லாத  பஸ் என்ற வார்த்தையையே  பதற்றத்தில் துடிக்கும் பொழுதும் மிஸ்டர் ஸ்மித் உபயோகப்படுத்தியிருப்பது இன்னொரு ஆச்சரியம்.  இதிலிருந்தும் நீங்கள் சொன்ன அந்த ஜென்ம உயிர்களீன் தொடர்பையும் புரிந்து கொள்ள முடிகிறது.   அதாவது இந்த ஜென்ம அவர் உணர்வுகளில் முந்தைய ஜென்ம  உணர்வு  அவர் பதறித் துடித்த அந்த ஷண நேரத்தில் புகுந்து கொண்டு அவரை ஆட்டுவித்ததாக நான் கருதுகிறேன்.." என்று சர்மா அங்கு குழ்மியிருந்த அத்தனை பேரும் திகைத்துப் போயினர்.

"எதற்காக  அப்படி ஒரு நிகழ்வு நடந்ததென்று எனக்குப் புரியவில்லை.  அரசாங்கத்தை எதிர்த்து எதற்கு  ஜனங்கள் இப்படியான செயல்களில் ஈடுபட வேண்டும்?..  அப்போ,  அரசாங்கம் வேறே,  ஜனங்கள் வேறே என்ற நிலையா அந்த ஜென்ம காலகட்டத்தில் இருந்தது?..  இந்த அதிசயக் கணினி குறிப்புகளிலிருந்து அது பற்றி ஏதாவது  தெரிந்து கொள்ள முடியுமா?" என்று ஆவலுடன் கேட்டார்  நாலாவது வரிசை ரங்கசாமி.

"ஓரளவு தெரிந்து கொள்ள முடியும்..." என்று இழுத்த டேவிட்  'சரித்திர நிகழ்வுகள்' என்ற குமிழைத் திருப்பி,  அந்த ஜென்மக் கால பிரதேங்களின் சரித்திர நிகழ்வுகளைத் தேடிப் பார்த்து சொன்னான்.. " இந்த குறிப்புகளீன் படி பார்த்தால்  குறிப்பிட்ட இந்த நென்ம காலத்தில் மக்களால்    தேர்ந்தெடுக்கப் பட்ட  அரசாங்கங்கள் தாம் மக்களை ஆளும் அதிகாரத்தைப் பெற்றன    என்று தெரிகிறது.  மக்களால் தேர்ந்தெடுக்கப்பட அரசாங்கங்கள்,  மக்களின்  நலன் களைப் பேணிக்காக்காத பொழுது,   மக்களுக்கான  அரசாங்கமாக செயல் படாத போது இந்த மாதிரியான நிகழ்வுகள் தவிர்க்க முடியாமல் நிகழ்ந்தன என்ற முடிவுக்கு வரலாம்.. " என்றான்.

"எனக்கு இன்னொரு  சந்தேகம்.." என்றான்  இளங்குமரன்.  "தொடர் ஜென்மங்கள் கொள்ளும் உயிர்த்  தொடர்பு பற்றிச் சொன்னீர்கள்.   அப்படியான உயிர்த் தொடர்புகள் எப்படி சாத்தியமாகும் என்று எனக்கு சந்தேகமாக இருக்கிறது..  உயிர்கள் பிறந்து இறந்ததும்  அவற்றின் உடல்களான சடலங்கள்  எரிக்கப் பட்டோ அல்லது புதைக்கப்பட்டோ அவற்றின் பெளதீகக் கூறுகள்  மக்கி மண்ணோடு மண்ணாகக் கலந்து விடுகின்றன.      அப்படியிருக்க மண்ணோடு மண்ணாக மக்கிக் கலந்து  போன எந்த ஜென்மத்து உயிரோ   இன்னொரு ஜென்மத்து உயிருடன்  ஜென்மாந்திரத் தொடர்பு  கொண்டிருக்கிறது என்றால்...  எனக்கு இதைப் பற்றி விளக்கமாகச் சொல்லத் தெரியவில்லை.. ஆனால் உணர்கிறேன்..  நான் உணர்வதை நீங்களும் உணர முடியும் என்று நம்புகிறேன்.. இல்லையா,  டேவிட்?"  என்றான்.

"எஸ்.. நீங்கள் சொல்ல வருவது எனக்குப் புரிகிறது. அந்த விஷயத்தில்  நாம் எரிப்பதும் புதைப்பதும்  உடல்களாகிய  சடலங்களைத் தானே தவிர உயிரை அல்ல..  அல்லவா?..  அதனால் உடல்கள் தாம் மண்ணோடு மண்ணாக மக்கி கலந்து போகிறன்றனவே தவிர உயிர் அல்ல என்று  தெரிகிறது.." என்றான் டேவிட்.

"அப்போ  உயிர் வேறு.. உடல் வேறா?"  என்று சடக்கென்று கேள்வியைப்  போட்டார்  கருணாகரன்.

"சந்தேகமில்லாமல்...  இந்த அதிசய காலக்கணின்க  ஆராயாச்சிக்கே அந்த  கோட்பாடு தான் அடிப்படை."  என்றான் டேவிட்.

"அப்படிப் பார்த்தால் உடல்கள் தாம் இறக்கின்றன.  உயிர்கள் இல்லை என்று தெரிகிறது..  ஆம் ஐ கரெக்ட்?.."  என்றார்  ஸ்மித்.

"அப்படித் தான் நான் மேற்கொண்ட ஆராய்ச்சிகளின்  அடிப்படையில் தெரிகிறது" என்றான்  டேவிட்.  "உயிர் என்ற ஒன்றை உடலை இயக்கும் சக்தியாக நாம் கொள்ளலாம்.   இயற்கையின் கொடையாகிய வெளிசக்தி     உடலின் உள்ளே போய்  உள்சக்தியாக மாறுவதை உயிராகக் கொள்ளலாம். சுலபமாகச் சொல்ல வேண்டுமானால்,  உடலை இயக்கும் ஆற்றல் கொண்ட உள்சக்தியை உயிர் என்கிறோம்.  அவ்வளவு தான்." என்றான் டேவிட்.

"அப்போ  இந்த புவியில் பிறந்தது எதுவும் இறக்கும் பொழுது அதன் உயிர் என்னவாகிறது?"  என்ற் கேள்வியைப் போட்டார்  ராமசாமி.

"வெளியிலிருந்து  பெறப்பட்டது  உள்சக்தியாய் செயல்படுவதற்குரிய ஆற்றலை இழந்ததும்  எங்கிருந்து அந்த சக்தி பெறப்பட்டதோ அந்த பரந்த வெளி சக்தியுடனேயே கலந்து விடுவதாகக் கொள்ளலாம்.   அப்படிப் பேராற்றலான வெளிச்சக்தியுடன் கலப்பதால் ஆற்றல் மிக்க புத்தம் புது சக்தியாக  உருமாற்றம் கொள்கின்றன.  இருந்தாலும் இந்த நேரத்து நான் கொண்டிருக்கும் இந்த கருத்து அறிவியலின் புது வாசல்களைத் திறக்கும் பொழுது மாற்றம் கொள்ளலாம்.  அதைப் பற்றிய  ஆராய்ச்சிகள் தாம் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன என்று உங்களுக்கே தெரியும்" என்றான் டேவிட்.

"என்னால் என் ஆவலைக் கட்டுப்படுத்த முடியவில்லை.  அடுத்து நான் மேடைக்கு வரலாமா?' என்ற குரல் பரபரப்புடன் ஒரு மூலையிலிருந்து வெளிப்பட்டது.

டேவிட் அந்தப் பக்கம் திரும்பிப் பார்த்த பொழுது  கையை உயர்த்தியபடி புவியியல் பேராசிரியர் துரைசாமி எழுந்து நின்று கொண்டிருப்பது தெரிந்தது.

(வளரும்)

படங்களை உதவிய நண்பர்களுக்கு நன்றி.
Related Posts with Thumbnails