மின் நூல்

Friday, February 24, 2017

சாபம்

                                                                        1
ரம்பத்தில் என்னவோ பத்து மணிக்குத் தான் தில்லி போட்கிளப்பில் அந்த விஞ்ஞானிகளின் கூட்டம் கூடுவதாக இருந்தது.

ஆனால் ஆச்சரியம், ஒன்பதரை மணிக்கே இருக்கைகள் எல்லாம் நிறைந்து அத்தனை பேரும் ஆஜர். எல்லாத்துக்கும் காரணம் டேவிட் தான். அவன் புதிதாகக் கணினியியலில்  மகத்தான ஆராய்ச்சி ஒன்றை வெற்றிகரமாக முடித்து   அந்த ஆராய்சியின் அடிப்படையில்   கம்ப்யூட்டர் ஒன்றை வடிவமைத்திருந்தான்.


அதுவும் அது சாதாரண கம்ப்யூட்டர் இல்லை.  அசாதாரணத் திறமைகள்
கொண்ட  காலக்கணினி  மாதிரி இருந்தது.  .  மனிதர்களை அதன் முன் நிறுத்தி, சம்பந்தப்பட்ட தகவல்களை உட்செலுத்தினால், அவர்களின் பிறவி  நிஜங்களைப் பிட்டு பிட்டு வைக்குமாம்.   முந்தையப் பிறவிகளில்  என்னவாக இருந்தார்கள் என்பதைத் துல்லியமாக எடுத்துச் சொல்லும் கம்ப்யூட்டராம். . கூட்டத்திற்குக் கேட்க வேண்டுமா?..

ஆரமபத்தில் அவர்கள் அந்த இளம் விஞ்ஞானி டேவிட்   சொன்னதை நம்பத்தான் இல்லை.

ஆனால் அவன் தான் சொன்னதை அவர்களுக்குப் பரிசோதித்துக் காட்டியபொழுது அவர்களின் வியப்பு எல்லை மீறியது. நிஜமாகச் சொல்ல வேண்டுமானால், அவர்களுக்கு அவன் மேல் ஒரு பயம் கலந்த மரியாதை ஏற்பட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.

முதலில் டேவிட் அந்த கம்ப்யூட்டரின் தலைப் பாகத்தில் இருந்த நீலநிறப் பிடி ஒன்றைத் திருகியவுடன் அவன் செல்லக் குழந்தைக்கு உயிர்ப்பு வந்தது. தனது வெள்ளைத் திரையில் நீலநிற ஒளிபாய்ச்சித் தயாராகி விட்டது.

முதல் வரிசையில் முதல் நபர் விலங்கியல் பேராசிரியர் ஸ்மித்.

டேவிட்,  பேராசிரியர்  ஸ்மித்தை  மேடைக்கு அழைத்தான்.  தனது வயதுக்குச் சம்பந்தப்படாத நடவடிக்கை மாதிரி ஸ்மித் துள்ளி ஓடி வந்து ஆர்வத்துடன் மேடையேறினார்.  அவரைக் கைகுலுக்கி வரவேற்ற் டேவிட  லேசான புன்முறுவடன்  பேராசிரியரை தனது அதிசய தயாரிப்பின் முன்  நிறுத்தினான்.

 கீழே அமர்ந்திருந்த பேராசிரியர் ஸ்மித்தின்  நண்பர்களிடையே ஒரே ஆரவாரம்.  பேராசிரியரை நோக்கி  கை அசைத்து உற்சாகமூட்டினார்கள்.  மொத்தத்தில்  டேவிட்டின் அடுத்த நடவடிக்கை என்னவாக இருக்கும் என்று தெரிந்து  கொள்ளும் ஆர்வத்தில் மொத்த  கூட்டமும் மேடையையே விழி அசைக்காதுப்  பார்த்துக்  கொண்டிருந்தது.

ஸ்மித் தன் தலையைக் குலுக்கிக் கொண்ட மாதிரி  இருந்தது. ,  இனம் தெரியாத ஒரு விதிர்விதிர்ப்பு அவரை ஆட்கொண்டிருபபது வெளிப்படையாகத்  தெரிந்தது..  "டேவிட்! தங்களுடைய சமீபத்தியக் கண்டுபிடிபான இந்த நவீன கம்ப்யூட்டரைக் கண்டு நாங்கள் பிரமித்துப் போயிருக்கிறோம். .  உங்களுக்கு இந்த விஞ்ஞானப் பேரவையே நன்றி சொல்கிறது.  நம்  காலத்திய ஒரு  புகழ் வாய்ந்த கண்டுபிடிப்பாக  எதிர்காலத்  தலைமுறை  இதைச் சொல்லப்  போகிறது." என்றவர் லேசாக  நாவால் மேலுதடைத் தடவிக் கொண்டுத் தொடர்ந்தார்:

"இந்த அதிசய கம்ப்யூட்டர் பற்றி எங்களுக்கு வழங்கப்பட்ட விவரக் குறிப்புகளை சற்று முன் பிரமிப்புடன் வாசித்தேன்.  அந்தத் தகவல்கள் இப்படியெல்லாம் கூட  முடியுமா என்று எங்களுக்கு ஆச்சரியமூட்டியது. தொடர்ந்து  உங்களது இந்தக் கண்டுபிடிப்பின் மூலம் எங்களை பல வழிகளில் வியக்க வைக்கப் போகிறீர்கள் என்று தெரிகிறது.   உங்களது முதல் நிகழச்சியில்  முதல் ஆளாக பங்கு  கொள்ளும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது குறித்து எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.." என்றவர்
அமைதி காத்த சபையை ஒரு தடவை கூர்ந்து பார்த்து விட்டுச் சொன்னார்:

"பல ஜென்மங்களாகத் தொடர்ந்து  வரும் இந்த பிறவிச் சங்கிலி பற்றி சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஒரு புத்தகத்தைப் படித்தேன். அந்தப் புத்தகத்தில் விவரிக்கப்பட்டிருந்த தகவல்கள் என்னை ஆச்சரியத்தில் அமுங்க வைத்தன.  அந்தப் புத்தகத்தை வாசித்ததிலிருந்து முந்தைய ஜென்மத்தில் நான் என்னவாக இருந்தேன்,  என்ன செய்து கொண்டிருந்தேன் என்பதையெல்லாம் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற விவரிக்கத் தெரியாத ஔவித உந்தல் என்னை உந்தித் தள்ளிக் கொண்டிருக்கிறது.  பொதுவாக இரவு உறங்கப் போகும் முன் இந்த நினைப்பு வந்து விட்டால், முன்னிரவு கழியும் வரை இதே நினைப்பில் மூழ்க்கிப் போகிறேன்.  அசதியில் தூங்கினால் தான் உண்டு.   இந்த நிலையில் உங்கள் ஆராய்ச்சியும் இந்தக் கம்யூட்டரும்  வானிலிருந்து குதித்து வந்த தேவனாக எனக்குத் தோன்றுகிறது. சமீப காலமாக என்னை வாட்டிக் கொண்டிருக்கும் கேள்விக்கு விடை கிடைக்கும் நேரம் வந்து விட்டதை என்னாலேயே நம்ப முடியவில்லை.. எல்லாம்  இறைவனின் அருளாக நினைக்கிறேன்.." என்று  அதற்கு மேல் பேச முடியாத உணர்ச்சி வசப்பட்டவர் போலக் காட்சியளித்தார் பேராசிரிய  ஸ்மித்.                                                                                              
                                                                   
                                                                                                         
"புரொபசர் ஸ்மித் சார்!  என்னால் உங்களுக்கு உதவ முடியும் என்று நினைக்கிறேன்..  உங்கள் மனதில் இருப்பதைச் சொல்லுங்கள்.. முயற்சி செய்கிறேன்.." என்றான்  டேவிட்.  கொஞ்சம் கூட பதற்றமின்றி நிதானமாக இருந்தது அவன் குரல்.   நடுவில் சபையில் அம்ர்ந்திருப்பவர்களை எடை போடுவது போல தீர்க்கமான பார்வை வேறு.

"சொல்கிறேன்.." என்று லேசாகத்  தயங்கிச் சொன்னார் புரொபசர் ஸ்மித். . "    "எங்களுக்கு இப்பொழுது வழங்கப்பட்ட தகவல் குறிப்புகளில் நம் முந்தைய ஜென்ம வாழ்க்கையைப் பற்றியெல்லாம் மிகத் தெளிவாக இந்தக் கம்யூட்டர் சொல்லும் என்று சொல்லப்பட்டிருந்தது.  இப்படி ஒரு அதிசய கம்ப்யூட்டரை கண்டுபிடித்த உங்களுக்கு ஒரு சல்யூட்!   நான் மிகுந்த ஆர்வத்துடன்  உங்களிடமிருந்து தெரிந்து கொள்ள விரும்புவது என்னவென்றால               போன ஜென்மத்திற்கு முந்தைய ஜென்மத்தில் நான் என்ன செய்தேனென்று என் வாழ்க்கையிலிருந்து ஏதாவது நிகழ்ச்சி ஒன்றை இந்த கம்ப்யூட்டரின் துணை கொண்டு காட்டி என்னைப் பரவசத்தில் ஆழ்த்த முடியுமா, நண்பரே?" என்று அவர்  நெகிழ்ந்த குரலில் கேட்டது அந்த அமைதியான சபையில் அத்தனை பேருக்கும்  துல்லியமாகக் கேட்டது..

"ஓ," என்று டேவிட் சொன்ன உடனே அந்த ஹால் முழுக்க நிறைந்திருந்த விஞ்ஞானிகள், "யா,யா!" என்று மகிழ்ச்சியில் திளைத்தனர்.

"போன ஜென்மத்திற்கு முந்தைய ஜென்மம் என்றால் இரண்டு ஜென்மங்கள் முந்தி, இல்லையா" என்றி ஏதோ தனக்குள் பேசிக் கொள்கிற  மாதிரி முணுமுணுத்த  டேவிட,  புரொபசர் ஸ்மித்தை அருகில் அழைத்து தன் அதிசய கம்ப்யூட்டரின் முன் நிற்க வைத்தான்.   இப்பொழுது தனக்கு எதிராக இருந்த அந்த  கம்ப்யூட்டரின் திரையை கனிவுடன் பார்த்த நிலையில் நின்றிருந்தார் ஸ்மித்.  'கம்ப்யூட்டரே!  உனக்கு வணக்கம்.  என் கடந்த ஜென்மம் பற்றிய தகவல்களை நல்லபடியாகக் காட்டு அதிசய  கம்ப்யூட்டரே!' என்று அந்த  கணிப்பொறியை அவர்  பரிதாபத்துடன் வேண்டிக் கொள்வது போல அவர் தோற்றம் இருந்தது.

தனது அதிசயக் கண்டுபிடிப்பான அந்தக் கணினியை உயிர்ப்பித்தான் டேவிட்.  ஸ்மித்திடம்   அவரது   இந்த ஜென்மத்துப் பிறந்த  தேதியைக் கேட்டு திரையின் மார்புப் பகுதியில் பதிந்தான்.  தொலைக்காட்சி பெட்டி போலிருந்த அந்தக் கணினியின்  கீழ்ப்பகுதி வலது பக்கத்தில்    அடைசலாக    நிறைய குமிழ்கள் இருந்தன.   அதில்   ஒரு குமிழைத் தொட்டு டேவிட் திருகியதும்  திரையில் 'தலைமுறை' என்ற எழுத்துக்கள் தோன்றின.  அந்த எழுத்துக்களின் கீழிருந்த பெட்டியில் 2  என்று ஸ்மித் விரும்பிக் கேட்ட ஜென்மத்தின் எண்ணை  பொறித்தான்.  உடனே அந்த அதிசயக் கணினி தன் தேடுதலைத் தொடர்வது திரையில் பளிச்சிட்டுத் தெரிந்தது.  சட்டென்று தேடுதல் வேலை முடிந்த மாதிரி திரையில் பனிப்படலம் போர்த்திய மாதிரி காட்சிகள் தென்படத் தொடங்கின.

ஸ்மித்தின் முகத்தில்    திடீரென்று பற்றிக்கொண்ட   பரவசம்.    அந்த பரவசம் கொஞ்சம் கொஞ்சமாக மங்கி  தன்னுள் புதைந்து குழப்பம் மேலோங்குவது ஸ்மித்திற்கு நன்றாகவே தெரிந்தது..


(வளரும்)

படங்கள் உதவிய நண்பர்களுக்கு  நன்றி.

Saturday, February 18, 2017

இதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?...

பகுதி---5

நம் குணநலன்களை மூன்றாக வகுத்துள்ளார்கள் பெரியோர்கள்.

நிமிஷத்திற்கு நிமிஷம் சலனங்களில் ஆட்பட நேர்கிற நிர்பந்தம் கொண்டிருக்கிற இன்றைய வாழ்க்கை அமைப்பிலும் கூட  இன்றைய பெரியோர்களும் இந்த மூன்றையே இன்றும்  சொல்லிக் கொண்டிருப்பதினால்   இன்றைக்கும் பொருந்தி வருகின்ற மாதிரி அன்றே மூன்றில் அடக்கிய அன்றைய பெரியோர்களின் தீட்சண்யமிக்க செயல்பாடுகள் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகின்றன.

அப்படிப்பட்ட அந்த அதிசய மூன்று தான்  என்ன?..

சத்வ குணம்
ரஜோ குணம்
தமோ குணம்

-- என்ற மூன்றும்  அத்தனை பேரிலும் படிந்திருக்கிற    மூன்று அடிப்படை குணங்கள் என்கிறார்கள்.

மூன்றுமே வடமொழி வழிப்பட்ட விளக்கங்கள் தாம்.  எந்த மொழியாய் இருந்தால் தான் என்ன?  நமக்கு ஏதாவது உபயோகமாகிறதா என்று பார்ப்போம்.                                                      

 யாரையாவது பார்த்து  யாராவது,  'இவர் சாத்வீகமான ஆசாமிய்யா' என்றால் எதற்கும் கோபப்படாத சாந்தமான ஆசாமியைத் தான் சொல்கிறார் என்று       பொதுவாக அர்த்தம் கொள்ளலாம்.     எதற்கும் கோபப்படாத என்பதை வேண்டுமானால் அநாவசியத்திற்கெல்லாம்  கோபப்படாத என்று  இன்றைய காலத்துக்கும் பொருந்தி வருகிற மாதிரி கொஞ்சம் தளர்த்திக் கொள்ளலாம் போலிருக்கு.

ஏனென்றால்  இன்றைய வாழ்க்கை அமைப்பில் கோபப்படாமலேயே இருக்க் முடியாது.  பாரதியார் சொன்ன மாதிரி 'அவர் முகத்தில் உமிழ்ந்து விடு, பாப்பா' என்கிற அளவுக்கு இல்லாவிட்டாலும் குறைந்த பட்சம்  செவ செவ என்று சிவந்து விடுகிற முகத்தைத்  திருப்பிக் கொள்ளவானும் செய்யலாம்.
நியாயமான கோபம் கூட இல்லையென்றால்  நம்மை சொரணை கெட்டவனாகவும் ஆக்கிவிட நமது  சொந்தங்களே காத்திருப்பார்கள்.  உடற்கூறுகளில் உற்பத்தியான  கோபத்தை அடக்கினாலும் உடல் நலத்திற்குக் கேடாம்.  அதனால் உள்டக்கிய கோபத்தை எப்படியானும் வெளித்தள்ளியே ஆக வேண்டும் என்று உடல் சாத்திரம் வேறு  இன்னொரு பக்கம் போதிக்கிறது.

 "மொத்தம் மூணு தான் சார்.  இந்த மூன்றுக்குள் இது வரை  இந்த உலகத்தில் பிறந்த,  இன்னும் பிறக்க இருக்கிற எல்லா ,மனுஷ ஜென்மங்களாயும்  அடக்கி விடலாம் என்று 'கெத்'தாய் சொல்கிறார்கள்.

முக்கோணம் போல  மூன்றே குணங்கள்!  யாருக்கும் தவிர்க்கவே முடியாமல் எல்லோரிலும் இந்த மூன்றும் பதுங்கியிருக்குமாம்.  ஆனால் அப்படிப் பதுங்கியிருந்தாலும் அதில் ஒரு விசேஷமும் இருக்குமாம்.   அதாவது இந்த மூன்றும் யாருக்கும் சம அளவில் இருக்காதாம்.  கூடக் குறைச்சலாய் இருக்குமாம்.    அவரவர் இயல்பில்  மூன்று வகைப்பட்ட குணங்களில் ஏதாவது ஒரு குணத்தின் தன்மை  மட்டும் சற்று   மேம்பட்டு இருக்குமாம்.

அப்படி மேம்பட்டு இருப்பதற்கும் ஒரு விதி வகுத்திருக்கிறார்கள்.  அது என்னவென்றால்  அவரவருக்கு வாய்த்த குணத்தின் அடிப்படைத் தன்மையில் மாற்றமிருக்காதாம்.  அதே சமயத்தில் அவரது அடிப்ப்டை குண இயல்பை ஒட்டி  ஏதாவது நிகழும் பொழுது அப்படி அந்த நிகழ்வு  நிகழ்கின்ற சந்தர்ப சூழ்நிலைகளுக்கு ஏறப இந்த குணங்கள் மாறி மாறி அமையுமாம்.

தமோ, ரஜோ, சத்வ  இந்த மூன்றில்  ஏதாவது ஒன்று ஒருவரின் அடிப்படை குணம் என்றால் அதைச் சார்ந்தே அவரது அடிப்படை  அல்லாத மற்ற இரண்டு குணங்களும் மாறி மாறி அவரை ஆட்கொள்ளும்.

ரொம்ப சரி.  இப்போ  கீர்த்தி வாய்ந்த அந்த   மூன்று குணங்களைப் பற்றிய விவரங்களைத்  தெரிந்து  கொள்ளலாம்.

சத்வ குணம் ரொம்ப பெருமை வாய்ந்தது.  சாத்வீகம் ஞானத்தை வளர்க்குமாம்.   நல்லன அல்லாத  எந்தக் காரியத்தையும் செய்ய இந்த குணக்காரர்களுக்கு விருப்பமே வராதாம்.

ரஜோ குணம் தான்  ஒன்றின்  மீதான ஆசையை அல்லது பற்றுதலை ஏற்படுத்துமாம்.   ஒன்றின் மீது விருப்பம் ஏற்பட்டால் என்னவாகும்?.. அதை அடைந்து விட மனம் ஏங்கும்.  அதை தனக்குச் சொந்தமாக்கிக் கொள்ள முயற்சிகளை மேற்கொள்ளும்.

மூன்றாவது தமோ குணம்.  எதிலும் தாமதப்  போக்கு  உள்ளவர்கள் இந்த குணத்தை மொத்தமாய் குத்தகைக்கு எடுத்தவர்கள்.

சரி, இவ்வளவு தானே பெரிசாய் இதில் என்ன இருக்கிறது என்று விட்டு விட முடியாதபடிக்கு மூன்றும் ஒன்றுக்கு ஒன்று நெருக்கமாய் பின்னப்பட்டிருப்பது தான் படைப்பின் விசித்திரம்.

அது என்ன விசித்திரம் என்று கடைசியிலிருந்து பார்ப்போம்.

தமோ குணம் இயல்பு  அதிகமாய் இருந்தால் ஆள்  டல்லடித்து தூங்கி வழிபவனாய் இருப்பான்.  கோபு சார் பாஷையில்  சொல்வது என்றால் எழுச்சி இல்லாத ஆசாமியாய் சோம்பல் பேர்வழியாய் இருப்பான்.

அந்த சோம்பலைப் போக்க மருந்தாய் வந்த குணம் தான் ரஜோ குணம்.ஒன்றின் மேல் விருப்பம் ஏற்பட்டு  அது ஆசையாய் கொழுந்து விடத் தொடங்கி விட்டதென்றால் கொட்டாவி  விட்ட  சோம்பல் ஓடியேப்  போகும்.   மாமலையும் ஓர் கடுகாய் மாறுவதற்கு பெண்ணின் கடைக்கண் பார்வை ஒன்று போதும் என்பார் பாரதிக்கு தாசனார்.  அவர் சொல்லும்  அழகு மடந்தையின்    அந்தக்  கடைக்கண் பார்வை தான் என்றில்லை. ஒவ்வொருவருக்கும் ஒன்று.   ஒருவருக்கு 'ச்சீ' எனப்படுவது இன்னொருவருக்கு  'ஆஹா'.  வாழ்க்கையின் சகல அம்சங்களிலும் இப்படியான  தேர்வு முறை இருக்கிறது.  சரி, விஷயத்திற்கு வருவோம்..

ஒன்றின் மீதான விருப்பம் தீவிரமாகி  அதாவது ரஜோ குணம் மேலோங்குவது  அதை அடையும் வரை ஓயாது.  விருப்பதற்கு எல்லையே கிடையாது.   ஒன்றின் விருப்பத்தின் பலனான அனுபவிப்பின் முடிவு இன்னொரு விருப்பத்திற்கு  ஆரம்பமாக இருக்கும்.

 இப்படி  முடிவு-- ஆரம்பம்-- அதன் முடிவு இன்னொன்றின் ஆரம்பம்  என்று எவ்வளவு காலத்திற்குப் போய்க் கொண்டிருப்பது?   அப்படிப் போகாமல் இருப்பதற்கு தான் சத்வ குணம்.    சத்வ குணம்.  மேலோங்கும் போது  'உரித்துப் பார்த்தால் வெங்காயத்தில் ஒன்றுமில்லை'  என்று கண்ணதாசனார் சொன்ன மாதிரி எதிலும் எதுவும் இல்லை என்ற ஞானத்திற்கு இட்டுச் செல்லும்.

எதிலும் எதுவும் இல்லை என்பது ஞானம் ஆயினும் அது ஒரு அசட்டு ஞானம்.
அந்த அரைகுறை ஞானம்,  எதிலும் எதுவும் இல்லை என்று தோற்றத்திற்குத் தட்டுப்பட்டாலும்  எல்லாவற்றிலும்  ஏதுவோ இருக்கிறது என்ற  ஞானத்தின் பரமானந்த நிலைக்கு  இட்டுச் செல்லும்.  அந்த எதுவோவும் இல்லை என்றால் -- டெட்  வுட்-- இயக்கமே இல்லை என்ற  தத்துவம் புரிதலாகும்.  எல்லாமே ப்யூர் சயின்ஸ் என்பது தான் இதிலிருக்கிற ஆச்சரியமே.

இந்த இடத்தில் இன்னொரு வேடிக்கை பற்றியும் சொல்ல வேண்டும்.  பரமானந்த நிலை பற்றிச் சொன்னோம், இல்லையா?.. . அந்த பரமானந்த நிலையில்  ஆழ்ந்து கிடப்பதற்கும் வழியில்லாத மாதிரி-- சத்வ குணத்திலேயே மயங்கிக் கிடக்காமல்--   நமக்கு வாய்த்த இந்த நிகழ்   வாழ்க்கை பார்த்துக் கொள்ளும்.  போட்டி,  பொறாமை,  விட்டுக்  கொடுக்காமை,  நெருக்கடிகள் நிறைந்த வாழ்க்கை சதவ குணத்தை செல்லாக் காசாக்கி நிதர்சனத்தைப் புரிய வைக்கும்.

நமக்கென்று தனி வாழ்க்கை எதுவும் இல்லை.  நம்மை சுற்றியிருக்கிற ஜனக் கூட்டத்தை சார்ந்தது தான் நம் வாழ்க்கையும்.  அதைத் தவிர்த்த  தனி வாழ்க்கை என்றால் காட்டுக்குத் தான் போக வேண்டும் என்று அந்தக்கால வழக்கத்திலும் சொல்வதற்கில்லை.   காடெல்லாம் அழிக்கப்பட்டு காங்கிரீட் தளங்களாகி விட்டன.  

ஆக,  சத்வ, ரஜோ, தமோ என்ற மூன்று குணங்களும் ஒருவனின் வாழ்க்கையில்  இது விட்டால் அது, அது விட்டால் இது என்று அந்தந்த நேரத்து சொர்க்கமாய் அமைந்த வட்டப் பாதைகள்.

நிதர்சன வாழ்க்கை  என்பது மாறிக்  கொண்டே இருக்கும்  பெளதீக உண்மை.    அந்த நிதர்சனம் நம்மில் ஒழியும் பொழுது தான் உண்மையான ஞானத்திற்கும் கதவு திறக்கிறது.

அந்த ஞானக் கதவை திறக்க முடியாமலும் நிதர்சனம் பார்த்துக் கொள்கிறது.

அப்படி என்னய்யா  கண்டும் விண்டும் உணர வேண்டிய  ஞானம் அது என்றால் அதைத்  தானே தேடித் திரிந்து தெரிந்து கொள்ளத் துடிக்கிறேன் என்'ற பதிலும் கியைக்கும்.

தட்டினால் தான் கதவும் திறக்கும்.

ஒன்றைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நீங்காத ஆவலும் தொடர்ந்த முயற்சியும் இருந்தால் தான் எது பற்றியும் கிஞ்சித்தானும் தெரிந்து கொள்ள முடியும்.

தெரிந்து கொண்டு என்ன ஆகப் போகிறது என்பவர்கள் சுகவாசிகள்.
சொல்லப் போனால் இப்போதைக்கு சுகவாசிகள்.  தெரிந்து  கொள்ள வேண்டிய அவசியம் வரும் பொழுது  தன்னாலே கை நீண்டு கதவைத் தட்டும்.

தட்டினால் தான் கதவும் திறக்கும்.   தட்டுவதற்கு அவசியம் இன்றி திறந்தே இருக்கிற கதவும் ஏதும் இல்லை.  திறந்தே இருக்கும் என்றால் கதவுக்கும் அவசியமில்லை.


(படங்களை உதவிய நண்பர்களுக்கு நன்றி.)

Saturday, February 4, 2017

அழகிய தமிழ் மொழி இது!..

இதற்கு முன் பகுதி:    
http://jeeveesblog.blogspot.in/2016/10/blog-post_11.html

பகுதி—25

மாமன்னன்  செங்குட்டுவனின் வடபுலப் பயணம் பற்றிப் பறையறிவித்ததும் அந்தச் செய்தி  எங்கணும் பற்றிக் கொண்டது.

ஆசான்,  அரச நிமித்திகன், அமைச்சர், படைத்தலைவர்கள் ஒன்று கூடியிருக்க  மன்னன்,  மன்னன் பரம்பரை பாத்யதையான சிங்க முகம் சுமந்த சிங்காதனத்தில் கம்பீரமாக வீற்றிருந்தான்.   

அவையில் வாழ்த்தொலி முழங்க, சந்னதம் கொண்ட குரலில் மாமன்னன் செங்குட்டுவன்  சொன்னான்:  


இமையமலையிலிருந்து இங்கு வந்திருந்த முனிவர்கள் சொன்னார்கள்.  கங்கை பேராற்றின் கரையைக் கடந்து  இமயமலையில் வில்,புலி, கயல் இலச்சினைகளை யான் பொறித்த பொழுது ‘எம்போலும் ஆற்றல் கொண்ட மன்னர் யாரும் இங்கு இல்லை போலும்’ என்று எக்காளமிட்ட  வடபுலத்து வேந்தர்களின் பழிச்சொல்லை முனிவர்கள் சொல்லக்   கேட்டேன்.  அது  சோழ, பாண்டிய அரசர்களும் எம்மை இகழ்வதற்கு இடம் கொடுத்த்தாகி விடும்.  இப்பொழுதே, இவ்விடத்தே சொல்கிறேன்.   “அவ்வடபுலத்து மன்னர் முடித்தலை மீது பெண்தெய்வத்திற்கு உரு வடித்தற்குரிய கல்லைச் சுமந்து வரச்செய்வேன்.    யான் அவ்வாறு செய்யேன் ஆயின் வீரப்போரில் வீரக்கழல் பூண்டு வாளேந்தி பகைவரை நடுங்கச் செய்யும் மன்னன் அல்லாது  பயன்மிகுந்த நாட்டில் எம் குடிமக்களை அஞ்சச் செய்யும் கொடுங்கோல் மன்ன்ன் என்று ஊர் பழி தூற்றும் இழிநிலையுடையேன் ஆவேன்..”  எனறு ஆவேசதுடன் சூளுரைத்தான்.

உடனே நிமித்திகன் எழுந்து, மன்னனை வாழ்த்தி, “உன் செந்தாமரையன்ன சிவந்தத் திருவடிகளைப் போற்றிப் பணியும் காலம்  இது, மன்னா!  காலம் கனிந்திருக்கிறது;   நேரமும் நல்ல நேரமாய் வாய்த்திருக்கிறது.  குறித்த திசை நோக்கிப் போருக்கு எழலாம்..” என்று ஜோதிட பலன் கூறினான்.
             
அது கேட்ட செங்குட்டுவன் படைத்தலைவனைப் பார்த்து “நம் வாளையும் குடையையும் வட்திசை நோக்கி புறப்படுமாறு செய்வாயாக..” என்று ஆணையிட்டான்..

மன்னனின்  ஆணைக்குத் தான் காத்திருந்த்து போல நிலமதிர போர்வீர்ர்கள் தங்களுக்கே உரித்த ஆரவாரத்துடன் வெற்றி முழக்கமிட்டனர்.  முரசுகள் முழங்க,  கொடிகள் காற்றில் அலைபாய்ந்தன.

அணிஅணியாக ஆரப்பரித்தப்  படைவீரர்களைத் தொடர்ந்து அமைச்சர் பெருமக்களும், கரணத்தியலவர் முதலான் எண்பேராயக்தினரும், காலத்தைக் கணிப்போரும்,  அறம் கூறுவோரும் சென்றனர்.  இடையிடையே,”எம் மன்னர் புகழ் நீடுழி வாழ்க!’  என்ற கோஷங்கள் விண்ணைப் பிளந்தன. பட்டத்து யானை வெற்றி வாளையும்,  வெண்கொற்றக் குடையினையும் சுமந்து  முன்னால் சென்றது.  அரண்மணை  அருமேயிருந்த கொற்றவை கோயில் அருகே அத்தனை பேரும் குழுமினர்.  வஞ்சிப்பூவும் பனம்பூவும் கலந்த  மாலையைச் சூடும் சேர மன்னனின் அரசவை மாந்தரும் அந்தக் கூட்டத்தினருடன் சேர்ந்து கொண்டனர்.

அரும்படைத் தானை வீரர்க்கும்,  பெரும்படைத் தலைவர்க்கும் மன்னன் பெரும் சோறு அளித்தான்.  அவர்களை வைத்துக் கொண்டு பூவா வஞ்சியில்  பூத்த வஞ்சியாய் மன்னன் வஞ்சிப்பூமாலையைத் தன்  முடியில் சூட்டிக்கொண்டான்.  மற்ற நாட்டு மன்னர்கள் தாம் ஏந்தி வந்திருக்கும் திரைப் பொருட்களைச் செலுத்தாலாம் என்பதற்கு அழைப்பு விடுப்பது போல காலை முரசம் கடைவாயிலில் முழங்கியது.  

நிலவுக்கதிர் நீந்தும் நீள்முடியும், உலகெலாம் உணர்ந்து ஓதற்கரியவனுமாகிய சிவபெருமானின் திருவடிகளை வெற்றி பொருந்திய வஞ்சி மாலையுடன் செங்குட்டுவன் தன் தலையிலே அணிந்து  பெருமானின்  கோயிலை வலம் வந்து  வணங்கினான்.   அச்சமயத்தில் அந்தணர் ஏந்தி வந்த ஆகுதியின் நறும்புகை சூழ வஞ்சி மாலை நெஞ்சில் புரள  மன்னன்  பட்டத்து யானையின் பிடர்த்  தலை ஏறினான்.

“சேர மன்னன் செங்குங்குட்டுவன் கொற்றம் சிறக்க!..” என்ற வாழ்த்தொலிக்கிடையே  திருவனந்தபுரத்துக் கோயிலில் பாம்பணையின் மீது பள்ளி கொண்ட பெருமாளின்
சேடத்தைக் கொண்டு வந்து தந்து   சில ஆன்றோர் வாழ்த்தினர்.  ஏற்கனவே பிறாவா யாக்கைப் பெரியோனின் திருவடிகளைத் தன் தலை மீது வைத்திருந்தமையால்,  பெருமாளின் சேடத்தைப் பெற்று  சேரன் தன் திண்ணிய புஜத்தின் மீது தாங்கிக் கொண்டான்.

ஆடல் அரங்குகளில் நர்த்தனமிடும் நாடக மகளிர் கை கூப்பி வழி நெடுக நின்றிருந்தனர். “கொற்ற வேந்தே!  வாகை மாலையின் அழகில் தும்பை சேர அத்துடன் பனம்பூ மாலையும் சேர்ந்து நின் பட்டத்து யானையின் முகத்தே புரள்கின்றன.  வெண்கொற்றக் குடை நிழலில் நீ யானையின் முடித்தலை அமர்ந்து வருகையில் எம் கைவளைகளைக் கவர்வாய்!  எம் கண்கள் களிகொள்ளும் இவ்வழகிய தோற்றத்தை என்றும் நீ பெற்றிருப்பாயாக..” என்று வாழ்த்தினர்.

மாகதப் புலவரும், வைதாளிகரும், சூதரும் மன்னனின் வெற்றிக்காக வாழ்த்தினர்.  யானை வீரரும்,  குதிரை வீரரும்,  வாளேந்திய காலாட்படை மறவரும் வெற்றியைப் போற்றிப புகழதனர்.  அந்த சமயத்தில்  அசுரருடன் போரிட அமராவதியினின்றும் போர்ப்படையை நடத்திச் சென்ற இந்திரனே போன்று செங்குட்டுவன்  செம்மாந்து  தன் தலைநகரை விட்டு நீங்கினான்.  அலைகளின் ஆர்ப்பாட்டம் கொண்ட மேற்குக் கடற்கரையின் விளிம்பில் பிர்மாண்டமாக படைகள்  அணிவகுத்துச் சென்ற  பொழுது பின்புலக்காட்சியாய் மலைகளின் முதுகுகள் தெரிந்தன. கனைக்கும்  குதிரைகள் கொண்ட தேர்ப்படை நிலமதிர நகர  உலகநாயகன் நீலகிரி மலையின் சரிவில் அமைந்திருந்த பாடிவீட்டை நெருங்கினான்.   பாடிவீடு அடைந்ததும் யானை எருத்தத்து அமர்ந்திருந்த மன்னவன் கீழிறங்கி படை மறவர்கள் புடைசூழ பாடி வீட்டில் அமைதிருந்த அமளியில் அமர்ந்தான்.

படைகளின் இயக்கத்தால் எங்கணும் பேரொலி சூழ்ந்திருந்தது.  அந்த ஒலியின் வீச்சு அலைஅலையாய் விரிந்து வானத்திலும் ஒலித்தது.  விண்ணில் உலாவிய முனிவர்கள் அவ்வொலி கேட்டு, ‘இப்பெரிய நிலத்தை ஆளும் இந்திரனைப் போன்ற தீரனை நாமும் காண்போம்’ என்று கருதி மண்ணுலகம் இறங்கினர்.  மின்னலின் ஒளியையும் மயங்கச் செய்யும் பேரொளியொடு தன் முன் வந்திறங்கிய முனிவர் குழாத்தைக் கண்டு மகிழ்ந்தும் நெகிழ்ந்தும் போன மன்னன் அமளியிலிருந்து எழுந்திருந்து பணிவன்புடன் அவர்களை நெருங்கி  வணங்கினான். “செஞ்சடைக் கடவுளின் அருளினால்  விளங்கிய  வஞ்சியில்  தோன்றிய மன்னனே கேட்பாயாக!  நாங்கள் பொதிகை செல்லும் வழியில் நின் பெரும் படையின்  ஒலியால் ஈர்க்கப்பட்டு இங்கு வந்தோம்.  நீ இமயம் செல்லும் கருத்து அறிவோம்.  அருமறை கற்ற அந்தணர் ஆங்கு வாழ்கின்றனர்.  பெருநில மன்னனே! அவர்களைப் பாதுகாத்தல் நின் கடமையாகும்”என்று கூறி செங்குட்டுவனை வாழ்த்திச் சென்றனர்.

முனிபுங்கவர்கள் அவ்விடம் நீங்கியதும், “வீங்கு நீர் ஞாலம் ஆள்வோன் வாழ்க!” என்ற வாழ்த்தொலியோடு  கொங்கணக் கூத்தரும் கர்நாடகக் கூத்தரும் வந்தனர்.  கூத்தர் குலத்திற்கான ஒப்பனை அவர் பூண்டிருந்தது தூக்கலாகத் தெரிந்தது.   தழைத்த மாலையைத் தலையில் சுற்றியவராய்,  மணிவடங்கள்  சுமந்த இளம் நகில்களைக்  கொண்டவராய்,  கயல் நெடுங்கண்ணினராய் திகழ்ந்த ஆடல் மகளிரும் அவருடன் இருந்தனர்.   ‘கருங்குயில்கள் பாடின;  இன வண்டினம் யாழ் இசைத்தன;  அரும்புகள் அலரும் பருவமாய் இளவேனில் காலமும் வந்தது;  ஆனால் எம் காதலரோ  இன்னும் வரவில்லை..” என்னும்  பொருள் பொதிந்த மாதர்ப்பாணி வரிப்பாடலை இசைத்துக்  கொண்டே அவர்கள் வந்தது மயக்கம் தருவதாய் இருந்தது.

‘கலகலக்கும் வளையல் அணிந்த நங்கையே!  எழுவாய்; கோலம்கொள்வாய்! (ஒப்பனை பூணுவாய்!)  கடிதாக இடி இடித்த  உறுமலோடு கார்க்காலம் வந்த்து, காணாய்!   சென்ற காரியம்  முடித்துத் திரும்பும் காதலரைச் சுமந்த தேரும் வந்தது, பாராய்!’   என்று முன் இசைத்த வரிப்பாடலுக்கு வைப்பாடலே பதிலாய்  இசைத்தபடி    பின் வந்த ஆடல் மகளிருடன் குடகர்கள்  மாமன்னன் முன் வரிசையிட்டு நின்றனர்.,

அவர்களுக்குப் பின் ஓவர்கள் வந்தனர்.  அவர்கள் வருகையிலேயே “வாள்வினை முடித்து மறவாள் வேந்தன் ஊழி ஊழி வாழி” என்று வாழ்த்தொலிகளுடன் வந்தனர்.  ஆடலாசிரியன் வழிகாட்ட  அங்கு குழுமியிருந்த அத்தனை இசைக்கலைஞர்களுக்கும்   பொன்னும், முத்தும், பவழமுமாய் மன்னன் அணிகலன்களை வாரி வழங்கினான்.

அந்த  சமயத்தில் தான் வாயிற்காவலர் ஏதோ சேதி சொல்வது போல வந்து பணிந்து நின்றனர்.

(வளரும்)

படங்களை உதவிய நண்பர்களுக்கு நன்றி.




Related Posts with Thumbnails