மின் நூல்

Friday, September 30, 2016

அழகிய தமிழ் மொழி இது!...


                           
                           
      வஞ்சிக் காண்டத்திற்கு  நுழைவாயில்   



கோவலன் இரண்டு பெண்டாட்டிக்காரன்.  கண்ணகியின் கணவன்.  தாலி கட்டி மனைவீயாக உரிமையாக்கிக் கொள்ளாத மாதவியை மனைவி ஸ்தானத்திலேயே வைத்துக் கொண்டு அவளுடன் வாழ்கிறான்.

கோவலனின் மேல்,  அவன் கொண்டிருந்த இசை ஞானத்தின்  மேல்  அவனின் எதிர்கால நலங்களின்
மேல் அக்கறையும் அன்பும் கொண்டவள் மாதவி. இவளோடையே அதிக காலம் கோவலன் வாழ்க்கை நடத்தியதும் அல்லாமல் ஒரு பெண் குழந்தையையும் தந்திருக்கிறான்

சொல்லப்போனால் கோவலனுக்கு ஒன்று என்றால் அதைக் கேள்விப்பட்ட ஷணத்திலேயே தாங்கிக்கொள்ள முடியாமல் பாண்டியன் மனைவி கோப்பெருந்தேவி மாதிரி உடனே உயிர் போகக் கூடிய நிலையில் இருப்பவள் மாதவி தான். அதற்காக மாதவி உயிர் விட வேண்டும் என்று   நான் சொல்லவில்லை. எல்லோரும் இப்படியே உயிர் விட்டால் எப்படி?.. அவர்கள் நெருக்கமாக வாழ்ந்த தீவிரத்தின் அடிப்படையில் சொன்னேன்

கோவலன் தன்னை விட்டுப் பிரிந்து  ண்ணகியுடன் சேர்ந்து விட்டான் என்றவுடனேயே மனத்தளவில் அதை வரவேற்று இவ்வளவு  தான்  தன்  பிராப்தம் என்று ஏற்றுக் கொண்டு விட்டவள்  மாதவி.

அந்த மனநிலை ஏன் ஏற்பட்டது என்றால் என்ன இருந்தாலும் இன்னொருத்தியை திருமணம் செய்து கொண்டவனுடன் வாழ்க்கை நடத்தியவள் அவள். கோவலனிடம் கண்ணகிக்கான உரிமையை மதித்து ஏற்றுக் கொண்டு அவனுக்கு அந்த மடல் அனுப்பியவுடனேயே அவனது எதிர்கால மகிழ்ச்சியான  வாழ்க்கைக்காக தன்னைக் கத்தரித்துக் கொண்டவள்.   அந்தளவுக்கு கோவலனிடம் அவள் நேசிப்பு இருந்திருக்கிறது.  

இப்பொழுது கண்ணகியைப் பார்ப்போம். அழகான கணவனை அக்னி வலம் வந்து கைப்பிடித்த போதும் இன்னொரு பெண்ணிடம் அவனைப் பறிகொடுத்தவள் அவள்

கணவன் தன்னைக் கைவிட்டுப் போனபின்பு கூட  ஒரு நாள் திரும்பி  வருவான் என்னும் நம்பிக்கையில், அவன் நினைவில் மாசு படாமல் காலம் தள்ளியவள் அவள். அவளை மறந்தே போன கணவன் பல காலம் கழித்து சொத்தெல்லாம் மாதவியுடனான் நெருக்கத்தில் இழந்து விட்டு அவளைத் தேடி வந்த பொழுது கொஞ்சமும் முகம் சுளிக்காமல் 'எல்லாத்தையும்' மறக்கடித்துக் கொண்டு அவனது வியாபார விருத்திக்காக, 'சிலம்புள; கொள்க' என்று தந்தவள்

தந்தது மட்டுமல்ல, அவன் அருகாமையையே பெரும் பேறாகக் கொண்டு அவனுடன் காடு, மலை, பருக்கைக் கற்களின் புண் எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டு அவனுடன் மதுரை சென்றவள். பாவி அவளுக்கு மாதவியிடம் கோவலன் போன பிறகு ஒருநாள் கூட சந்தோஷமாக அவனுடன் வாழக் கொடுத்து வைக்க வில்லை.

இன்று நேற்றல்ல, ஆதி காலத்திலிருந்தே இது ஆண் ஆதிக்க சமுதாயம்.


மனம்  நொறுங்கிப் போகும்  சோதனைத் துன்பங்களைத் தூக்கிச் சுமந்தக் காரணத்தை   ஒட்டியே நளாயினியின் கற்பைப்  போற்றிப்  பட்டயம் கொடுத்த நாடு இது.

ஆனால் யாரும் செய்யாத ஒரு அரிய செயலை தாலி கட்டிய கணவனுக்குச்  செய்திருக்கிறாள்  கண்ணகி.   'கள்வன்' என்று ஊருக்குக் காட்டப்பட்டவனின் பக்க நியாயத்தை

உலகோருக்குத் தெரியப்படுத்தி, அவன் கள்வன் இல்லை என்று மன்னன் சபையில் நிரூப்பித்த ஒரு காரியம் இருக்கே, அது கோவலனின் செத்துப் போன ஆத்மா கூட சந்தோஷத்தில் துடிக்கிற காரியம். இதை மட்டும் அவள் செய்யவில்லை என்றால் கள்வனாகவே கருதப்பட்டு கோவலனக்கு அவன் குடும்பத்திற்கு மிகப்பெரிய களங்கம் ஏற்பட்டிருக்கும். மதுரையை எரித்தது, அவள் அல்ல.  அவள் ஆத்திரத்தை உபயோகப்படுத்திக்  கொண்ட  ஊழ்வினையின் ஏற்பாடு அது.



 அவள் துயரை மதுராபதித் தெய்வமே காணச் சகிக்காமல் அவளை வழிநடத்துகிறது. அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று ஆலோசனை சொல்கிறது. எதனால், யாரால் இந்த இழப்புகள் ஏற்பட்டன என்று தெரிந்ததும், கண்ணகி சொன்ன கடைசி வாக்கியம் என்ன தெரியுமா? 'யான் தீவினையுடையேன்!' என்று கணவனுக்கு வந்த தீவினை தன்னைப் படுத்தியப் பாட்டை தனக்காக என்று ஏற்றுக் கொள்கிறாள்.

அதனால் தான் அவள் பெண் தெய்வம்.

கணவனுடன் ஒழுங்காக வாழ கொடுத்து வைக்காமலேயே, கணவனின் ஊழ்வினையை தன் வினையாகச் சுமந்த தெய்வம். கோவலனின் ஊழ்வினையின் தீயபலன் கூடப் பாருங்கள், அவனைப் பெற்றவர்களின் மீதோ, அவனுடன் கொஞ்சிக் குலவி வாழ்ககை நடத்திய மாதவியின் மீதோ சாராமல், இவள் தலையில் வந்து விடிகிறது.

ஏனென்றால் கோவலனால் தாலி கட்டப்பட்ட, அவனுக்கான ஒரே மனைவி கண்ணகி ஒருத்ததியே!   மனைவி துன்பத்தை கணவன் சுமக்கிறானோ இல்லையோ, கணவன் துன்பத்தை மனைவி தான் சுமக்க வேண்டும் என்பது இந்த நாட்டில் வழிவழி வந்த பாடம், பண்பாடு, பகுத்தறிவு, சட்டம் 
 எல்லாம்!

மாதவி மீது லவலேசமும் குற்றம் சொல்லவில்லை. அவரவருக்கு வாய்த்தது என்னவோ அது நடந்திருக்கிறது. கீதோபதேசம் என்னவென்று நமக்குத் தெரியும்


இவருக்குத் தான் இது போய்ச் சேர வேண்டும் என்று நிர்ணயிக்க நாம் யார்?..  புகழாரம் எவர் கழுத்தில் விழுகிறதோ, அவர் கழுத்தில் விழுகிறது. நாம் பார்வையாளர்களாகவே இருந்து  காப்பிய ஆசிரியர் இளங்கோ அடிகளார் சொல்ல வந்ததை உள்வாங்கிக் கொள்வது மேம்பட்ட ரசனைகளை  ஊக்குவிக்கும்.


இனி  வஞ்சிக் காண்டத்திற்குள்  நுழைவோம்.
Related Posts with Thumbnails