மின் நூல்

Sunday, June 26, 2016

அழகிய தமிழ் மொழி இது!...

பகுதி—16

வைகறைப் பொழுது.

சிவன் கோயில் முரசின் அதிர்வொலி தேசலாகக் கேட்டது.  அதைத் தொடர்ந்து பாண்டியனின் கோட்டை முரசு.   இன்னும் நெருங்க நெருங்க வேதியர் முழக்கும் வேத கோஷங்கள்.. தொடர்ந்து வாள் வீரர் எழுப்பிய முரசமும், யானைகளின் பிளிறலும்,  குதிரைக் கூட்டங்களின் கனைத்தல் இரைச்சலும் அந்தப் பிரதேசத்தையே கலவையான ஒலி அலைகளில் மூழ்கச் செய்தன.
மாமதுரையை நெருங்கி விட்டோம் என்ற உணர்வு அந்த மூவரிலும் உற்சாகமாகக் கொப்பளித்தது.  நடையாய் நடந்து வந்த கால்கள் கெஞ்சின. ‘இன்னும் கொஞ்ச தூரம் தான்; வந்து சேர்ந்து விட்டோம்’ என்று அறிவு கால்களுக்கு ஆதுரம் அளித்து ஆயாசத்தைப் போக்கி உற்சாகமூட்டியது.

வைகை ஆற்றின் வடகரையை நெருங்கிய பொழுது மதுரைத் தென்றல் மனசுக்கு கிளுகிளுப்பூட்டியது. மகிழம், சுரபுன்னை, மருதம், செரித்தி ஆகிய மரங்கள் பாதிரி மரத்தோடு சேர்ந்து குலுங்கி வையை நங்கைக்கு பூவாடை போர்த்தியிருந்தன.  அதைப் பார்த்து, “புனல் ஆறு அல்ல இது பூவாறு!” என்றான் கோவலன். அது கேட்டு கண்ணகி பூவாறு நங்கைக்கு தன் புன்னகையால் பதில் சொன்னாள். நேரப்போகும் துன்பம் வைகை நங்கைக்குத் தெரிந்திருந்தது போலும்.  தன் கண்களைத் துடைத்தாற் போல தன்னிடம் நிறைந்திருந்த நீரை சட்டென்று உள்ளடக்கி நெளிந்தாள்.

குதிரை, சிங்க, வேழ முகங்கள் கொண்ட படகுகளில் பலரும் பயணித்து பெரிய துறை பக்கம் செல்வது தெரிந்தது.  அந்தப் பக்கம் செல்லாது தென்கரைப் பக்கம் தெரிந்த ஒரு மலர்ச் சோலையை மூவரும் அடைந்தனர்.

வானவர் தங்கியிருக்கும் மதுரையை வலமாகச் சுற்றி வந்தால் நல்லது என்று அகழிப்பக்கம் சுற்றி வந்தனர்.  அகழியில் மண்டியிருந்த குவளை, அல்லி, தாமரை போன்ற மலர்களைச் சுற்றி வண்டுகள் ரீங்கரித்த ஒலி கோவலனுக்கும் கண்ணகிக்கும் நேரப்போகின்ற துன்பத்தை அறிந்தாற்போன்ற குறிப்பு கொண்டு மலர்களை நெகிழ்த்தின. மதில் மீது கட்டப்பட்ட கொடிகள் காற்றில் அசைந்து படபடத்தது, ‘இந்நகருக்கு வர வேண்டாம்’ என்று அவர்களைத் தம் கைகளால் மறித்துச் சொன்னது போலிருந்தது. அறவொழுக்கம் மிக்க துறவிகள் விரும்பித் தங்கியிருக்கும் புறஞ்சேரியை இப்போதைக்குத் தங்கும் இடமாக அவர்கள் கொண்டனர்.;

றவைகள் துயிலெழுப்பி புலர்ந்த காலைப் பொழுது ரம்யமாக இருந்தது. நெற்றிக்கண் சிவபெருமான், கருடக்கொடி திருமால், கலப்பை ஏந்திய பலராமன், சேவற்கொடியோன் ஆகியோருக்கான சுற்றியிருந்த கோயில்களிலிருந்து புறப்பட்ட தூய வெண்சங்கு ஒலி,. கூடச் சேர்ந்த காலை முரசின் அதிரலோடு ஒன்றரக் கலந்தது.

அந்த நேரத்து கோவலன் கவுந்தி அடிகள் இருக்குமிடம் சென்று அவரைத் தொழுதான்.  “செய்தவத்தீர்!..” என்று அடிகளாரை விளித்தவன் மேற்கொண்டு வார்த்தை வராமல் நெகிழ்ந்தான். “நல்லொழுக்க நெறியிலிருந்து நீங்கியவன் சிறுமையுற்றேன்.  முன்பின் அறிந்திராத இடத்திற்கு துன்பம் தரும் வழியிலே  கண்ணகியை வழிநடத்தி அழைத்து வந்து துன்புறச் செய்து இன்னும் இழிவடைந்தேன்.  அந்தப் பழியெல்லாம் துடைத்து இழந்த வாழ்க்கையைத் திரும்பப்  பெற வேண்டும். அடிகளாரே! இம்மதுரை மாநகரத்து பெருவணிகரை நான் சந்தித்து வரும் வரை இப்பைங்கொடியை தங்கள் பாதுகாப்பில் விட்டுச் செல்கிறேன்” என்று பெரிதும் வருந்திச் சொன்னான்..

“முற்பிறவியில் செய்யத் தவறிய நல்வினைக் குறைவால் இப்பிறவியில் இத்துன்பம் என்று தான் கொள்ள வேண்டியதிருக்கிறது..” என்ற கவுந்தி அடிகளார் அயோத்தி ராமன் கதையையும், நளன் கதையையும் நினைவு கொண்டார்.  சீதாராமனோ, சீதை விளையாட விரும்பிக் கேட்ட மாயமானைத் தொடர்து சென்று சீதையைப் பிரிகிறான்.  நளனோ விதி விரட்டக் கானகத்தே காரிருளில் காதலியைக்  கைவிட்டு கட்டிய துண்டோடு தனி ஆளாகிறான்.

‘தங்கள் பாதுகாப்பில் விட்டுச்  செல்கிறேன்’ என்று கோவலனும் இதோ கண்ணகியைப் பிரிகிறானே!  ராமன்—நளன் போலக் கோவலனுக்கும் நேரப் போகிறதோ என்று நம் பதைபதைப்புக் கூடி,  இந்தக் கவுந்தி அடிகளாரும் நேரம்  காலம் தெரியாமல் ‘அந்த இரு’ கதைகளை நினைவு கொள்கிறாரே என்று வாசிக்கும் பொழுதே நமக்கும் எரிச்சலாக வருகிறது.   

சொல்லி வைத்தாற் போல அடிகளாரும் அதே விஷயத்தைத் தான் தொட்டுப் பேசுகிறார். “எல்லாமே வல்வினையின் துன்பம் தான் எனினும், நீ நளன்  போல் அல்லாமல் நல்ல வேளை, இத்தனை அவஸ்தைகளுக்கு இடையேயும் உன் மனைவி உன்னுடன் இருக்கும் பேறு  பெற்றிருக்கிறாய்!.. அதனால் வருந்தாது மதுரை மாநகர் சென்று தங்குவதற்கு நல்ல இடம் பார்த்து வருவாய்!” என்று ஆசிகூறி கோவலனை வழியனுப்பி வைத்தார். இருந்தாலும் ‘உன்  மனைவி உன்னுடன் இருக்கும் பேறு' என்று அவர் அழுத்திச் சொன்னது, அந்தப் பேற்றிற்கும் ஆபத்து வரப்போகிறதோ என்று உறுத்தலாகத் தான் இருக்கிறது.


பாண்டியனின் கோட்டை காவல் கோட்டையாக இருந்தது. கோட்டையைச் சுற்றி நீர்பரப்பு கொண்ட அகழி. கொலை வாளுடன் கோட்டையைக் காத்து நின்றனர் யவனர். யானைக் கூட்டம் கோட்டைக்குள் சென்று வர அமைந்திருந்த சுருக்கை வழியாக யாருக்கும் ஐயம்  ஏற்படாதவாறு உள் நுழைந்து அகநகரை அடைந்தான் கோவலன்.[.

மேல் காற்று உடலை வருடிச் சென்றது.  கொடிகள் அசைகின்ற தெருவில் கடைகழி மகளிர் கூந்தலில் பூச்சூடி தம் அந்நேரக் காதற் செல்வரோடு கலகலத்துக் கொண்டிருந்தனர்.

அரசுக் கூத்தியர் வாழும் வீதி எடுப்பாக இருந்தது. அந்தப் பகுதி வீடுகள் சுட்ட ஓடுகளால் வேயப்படாது பொன் தகடுகளால் வேயப்பட்டிருந்தது. வேத்தியல், பொதுவியல் ஆகிய இருவகைக் கூத்துகளின் இயல்புகளையும் அறிந்தவர்கள்  அவர்கள்.  தாளங்கள், தாளங்கள் சார்ந்த ஏழுவகை தூக்குகள், அவற்றோடு இயந்து இசைக்கும் தோற்கருவிகள், அவற்றின் கூறுபாடுகள் அனைத்தையும் தெரிந்தவர்களாய் அப்பெண்கள் இருந்தார்கள். தலைக்கோல் அரிவையும், பின்பாட்டுப் பாடும் தோரிய மடந்தையும், தலைப்பாட்டுக் கூத்தியும், இடைப்பாட்டுக் கூத்தியும் ஆகிய நால்வகை மரபினரோடு கலந்து நாள்தோறும் ஆயிரத்தெட்டு பொற்கழஞ்சுக்கு குறையாமல் ஈட்டும் பேரழகு கணிகையர் வாழும் இரு  பெரும் வீதிகளைக்  கோவலன் கண்டான்.

இரு சக்கரங்களால் உருட்டப்படும் மூடுவண்டிகள் நிறைந்த, செல்வர்கள் விரும்பும் அங்காடி வீதிகள், நவரத்தின, பொன் கடைவீதிகள், துணிக்கடை வீதி, மிளகு மூட்டைகளும், கூலங்களும் குவிந்து கிடக்க துலாக்கோல், மரக்கால் சகிதமாக வணிகர் நிறைந்திருந்த கூல வீதிகளையும் கோவலன் கண்டான்.

பால் வேறு தெரிந்த நால் வேறு தெருவும், நாற்சந்திகளும், சதுக்கமும், முடுக்கு வீதிகளும், குறுக்குத் தெருக்களும், செடி கொடிகள் நெடுக்கமாக மண்டியிருந்தமையால் பந்தல் இட்டது போன்ற நிழலோடு நீண்டிருந்த தெருக்களில் அலைந்து திரிந்த  கோவலன் பாண்டியனின் கொடிகள் நிறைந்த மதில் புறத்தே வந்தான்.

கோவலன் அறத்தினைப் பிறருக்கு அருளும் அருளாளர்கள் நிறைந்திருந்த 
புறஞ்சேரிக்குத் திரும்பி  வந்து சேர்ந்த  பொழுது, கவுந்தி அடிகளாரும் அவன் வருகைக்காகக் காத்திருந்த மாதிரித் தெரிந்தது. தான் பார்த்த மதுரை மாநகரின் அழகை ஒவ்வொன்றாக கோவலன் அடிகளாருக்குச்  சொல்லிக் கொண்டிருக்கையில் மாடலன் அந்தக் குடிலின் உள்ளே நுழைந்தார்.

யார் இந்த மாடலன்?...


(தொடரும்)

படங்களை உதவிய நண்பர்களுக்கு நன்றி.


  


Monday, June 20, 2016

அழகிய தமிழ் மொழி இது!...

பகுதி-- 15


கோவலனுக்கு மாதவி எழுதியிருந்த மடல் ரொம்பவும் குடும்பப் பாங்காக இருந்தது. 

“தங்கள் அடிகள் முன்னர் யான் அடி வீழ்ந்தேன். நான் சொல்ல வருவதை தாங்கள் தங்கள் மனத்தில் இருத்திக் கொள்ள வேண்டுகிறேன்.  தங்களின் பெற்றோர்களுக்கு-- அந்த முதுபெரும் குரவர்களுக்கு-- அவர்களின் முதுமைக் காலத்தில் செய்ய வேண்டிய பணிகளை செய்யாது விட்டீர்கள். அன்றியும் உயர்குல மாது கண்ணகியுடன் நள்ளிரவில் புகார் நகரிலிருந்து கிளம்பி விட்டீர்கள். இவற்றிற்கெல்லாம் யான் செய்த குற்றம் என்னவென்று அறியாத மயக்கம் என்னை வருத்துகிறது.  இந்த வருத்தத்தை தாங்கள் ஒருவரால் தான் போக்க முடியும். குற்றம் நீங்கிய மேலான மனத்தை உடையவரே! உம் புகழுக்கு குறையேதும் நேராமல் காப்பீராக!” என்ற வேண்டுகோளோடு மாதவியின் மடல் முடிந்திருந்தது.

மடலை வாசித்து முடித்ததும், கோவலனின் முகம் பளிச்சிட்டது. வானத்தில் மேகமூட்டம் நீங்கியதே போன்ற ஒரு நிலை. நடந்தவற்றை மனசில் அலசிப் பார்த்தத் தீர்மானத்தில், இது வரை நடந்தவற்றில் அவள் குற்றம் ஏதுமில்லை!” என்று  கோவலன் உணர்ந்து சொன்னான். எல்லாம் என் குற்றமே! என் தீவினை குற்றம்..” என்று அவன் உதடுகள் முணுமுணுத்தன.

அடிகள் முன்னர் யான் அடி வீழ்ந்தேன்என்ற முடங்கலின் முதல் வரியைப் மறுபடியும் படித்த கோவலன், மாதவியின் இந்த முடங்கல் என் பெற்றோர்களுக்கு எழுதப்படுவதான மடல் போன்ற தோற்றம் கொண்டிருக்கிறதே என்று எண்ணியவனாய், ‘மாதவியின் நல்ல உள்ளம் பற்றி தன் தாய் தந்தையர்  அறிதல் வேண்டும் என்று தொடர்ச்சியாகத் தோன்றிய நினைப்பில், ஒரு தெளிவடைந்த நிலையில் கோசிகனை நிமிர்ந்து பார்த்தான்கோசிகனே! குற்றமற்ற என் பெற்றோர் மலரடி தொழுதேன்..” என்று சொன்ன பொழுது அவன் குரல்  தழுதழுத்திருந்தது.. “என் பெற்றோரிடம் மாதவியின் இந்த கனிவான மடலைச் சேர்ப்பீராக.. அவர்கள் துயரம் களைவதற்கு இந்த மடல் துணை செய்யும்.. அதனால் விரைவாகச் சென்று அவரிடம் இதைச் சேர்க்க வேண்டுகிறேன்.”” என்று சொல்லி கோசிகனிடம் அந்த மடலைத் தந்தான்.  ஒரு முடிவை எடுத்த மாதிரி அவன் அப்படிச் சொன்னது புகாருக்கு திரும்பும் மனநிலையில் அவன் இல்லை என்பதனைக் கோசிகனுக்குப் புலப்படுத்தியதுமாதவியின் திருப்பப்பட்ட மடலை வாங்கிக் கொண்டு கோவலனின் உத்தரவுப் படியே அதை அவன் பெற்றோரிடம் சேர்ப்பிக்கும் நோக்கத்துடன் கோசிகன் அவ்விடம் அகன்றான்.

கோசிகன் செல்லும் வரைப் பார்த்திருந்து, பின் கண்ணகியை விட்டு விட்டு வந்த இடம் நோக்கி கோவலன் நகர்ந்தான்.  அவன் அங்கு சென்ற நேரத்தில் பாணர்கள் சிலர் கூடி துர்க்கையின் போர்க்கோலத்தை  இசைத்துக் கொண்டிருந்ததைப் பார்த்து கோவலனின் முகம் மலர்ந்தது. கோவலனும்
ஆகச் சிறந்த இசைப் புலமை கொண்டவன் ஆதலால் அவனால் தன் மன உணர்வுகளைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியவிலை. அவனும் இசைக் குழுவினருடன் ஒன்றிக் கலந்தவனாய் செங்கோட்டு யாழை எடுத்தான்தந்திரி கரமும் திலவும் உறுதியாகக் கட்டப்பட்டிருந்த அந்த யாழினைத் தூக்கி நிறுத்தி அதன் உறுப்புகளாகிய  ஒற்றினை எடுத்து பற்றுடன் சேர்த்தான்உழை குரலாகவும், கைக்கிளை தாரமாகவும் யாழின் நரம்புகளை கோவலன் நிறுத்தினான்.கொற்றவையைப் போற்றித் துதிக்கும் பாடலை ஆசான் என்னும் பண் இயலின் நால்வகைப் பிரிவுகளும் ஒன்றரக் கலக்கும் வித்ததில் யாழில் இசை கூட்டி பாணர்களுடன் பாணனாகச் சேர்ந்து கோவலனும் அவர்கள் குழுவில் இவனும் ஒருவனே போலப் பாடினான். கோவலனின் இசைப் புலமை வெளிப்பட்ட நேர்த்தியில் தொழிற் கலைஞர்களாகிய் அந்தப் பாணர்களே வெகுவாக வியந்து போயினர்.

குடிப்பிறப்பால் வணிக குலத்திலே தோன்றிய கோவலன் லலித கலைகளின் ஞானம் பெற்று வித்தியாசமானவனாய்த் திகழ்ந்தான்.  நாட்டியம், இசை என்று பன்முகப்பட்டத் திறமை கொண்டிருந்த மாதவியே தன் மனதைப் பறி கொடுக்கும் அளவுக்கு கோவலனின் அசாத்திய திறமை அமைந்திருந்தது. அவ்விருவரின் கலை ஞானம், ஆண்-பெண்ணுக்கான உடல் கவர்ச்சியைத் தாண்டிய ஒன்று.  வெகு அரிதான இருவருக்கிடையேயான இந்த இணைப்பே அறுக்க முடியாத பிணைப்பாய் கோவலனுக்கும் மாதவிக்கும் ஆயிற்று. அதனால் தான் வாழ்க்கைப் போக்கில் வாராது வந்த மாமணி போலத் தன் கைவசப்பட்ட அந்தக் கலைஞனை இழக்க முடியாமல் தவித்தாள் மாதவி.

காதல் மனைவி இருக்க, தன் செல்வ மிதப்பில் ஆயிரம் பொற் கழஞ்சு கொடுத்து போகம் துய்க்க கணிகை மகள் ஒருத்தியை கடைவீதியில் விலைக்கு வாங்கினான்.— அவளோடு கூடியிருந்த சுகம் திகட்ட, அவளைக் கைவிட்டு தாலிகட்டிய துணையாளுடன் சேர்ந்துக் களிக்க திரும்பி வந்தான் என்று வெகு சாதாரண போக்குள்ள ஆடவனாய் தன் நாவலின் நாயகனைச் சித்தரிக்கவில்லை இளங்கோ அடிகள். 

நாயகன் மட்டுமில்லை, அந்த நாயகனுடன் சேர்ந்த காதல் கிழத்தி மாதவியையும் அசாதாரணமான பெண்ணாய் வார்த்தெடுதிருக்கிறார் நாவலாசிரியர்.  அவன் வணிக குலத்தில் பிறந்த வித்தியாசமானவன் என்றால் இவளோ கணிகையர் குலத்தில் உதித்த வித்தியாசமானவள்.. இந்த இரு வகைத்தான வித்தியாசமானவர்களை ஒன்று சேர்க்க இசையும், யாழும், ஆடலும், பாடலும் துணையாய் இருந்து தூபம் போட்டன... காதல் வயப்பட்ட இந்த இரு இளசுகளுக்கு இடையேயான பெளதீக உறவு அறுந்து பட்ட போதிலும், இவர்கள் உறவின் மேலான நிலைகளுக்குச் சுவை கூட்டிய லலித கலைகள் அவர்களின் உள்ளப் பிணைப்பு அறுந்து படாமல் கட்டிக் காப்பதற்கு காரணமாக அமைந்தன.  நிரந்தர பிரிவுக்கு வழிவகுக்காமல் பார்த்துக் கொண்டன. இவர்கள் இருவருக்கிடையான விலகல் ஊழ்வினை வசத்தால் என்றால் இவர்கள் இருவருக்கிடையே யான கலைஞான ஈடுபாடுகளின் பின்னல்களுக்கும் பிணைதல்களுக்கும் அதே ஊழ்வினை தான் காரணமாகிப் போகிறது.

இந்த சிலப்பதிகார காப்பியத்தில் நாவலாசிரியரின் படைப்புத் திறமை கொடிக்கட்டிப் பறக்கும் இடங்கள் ஏராளம். லெளகீக ஏற்பாடுகளுடன் இருவருக்கிடையேயான ஒரு திருமண பந்தத்தில் ஆரம்பித்த கதையை அவர்கள் வாழ்க்கைப் போக்கில் குறுக்கும் நெடுக்கும் குறுக்கிடும் பல்வேறு பாத்திரப் படைப்புகளோடு, நெருங்கலும் விலகலுமாக அதனால் நெருக்கடிகளுக்கு  உள்ளாகும் பல்வேறு ஆசாபாசங்களுடன் நெருக்கமாக காப்பியத்தை நெய்திருக்கிறார் படைப்பிலக்கியத்தில் கைதேர்ந்தவரான இளங்கோ அடிகள்..  இந்த மாதிரியான ரசவாத வித்தைகளை கதாசிரியர் கைக்கொள்ளவில்லை என்றால் வாசிப்பவருக்கு அந்த மூவரின் மாமதுரை நோக்கிய பயணமே வெறுத்துப் போயிருக்கும். நாவலின் போக்கில் இடையிடும் எல்லா அம்சங்களையும் மிகக் கவனமாகத் தேர்ந்தெடுத்து இந்தக் காப்பியத்தின் மூலமாகத் தான் நிலைநிறுத்த நினைக்கும் குறிக்கோள்களுக்கு எந்த நிலையிலும் விலகல் ஏற்படாமல் பார்த்துக் கொண்டது காப்பிய  ஆசிரியரின் இன்னொரு சாமர்த்தியம்.

எந்தவிதத்தில் திருப்பிப் திருப்பிப் பார்த்தாலும் படித்தாலும் சிலப்பதிகாரம் ஒரு பொழுது போக்குப் படைப்பிலக்கியம் அல்ல என்பது புரியும். வாழ்க்கையில் நடக்கும் நிகழ்வுகளை எதனாலோ நடந்தது என்று பார்க்காமல் அந்த நிகழ்வுகள் நிகழ்வதற்கான காரணங்களை அர்த்தபூர்வமான நோக்குடன் அலசுவது. அத்தனை அலசல்களும் தமிழர்களுக்கான பண்பாட்டுத் தளத்திலேயே எந்தவித விலகலும் இல்லாமல் நடைபெறுவது  தான் இந்தக் காப்பியத்தின் இன்னொரு விசேஷமாக பரவலாகக் காணக்கிடைக்கிறது.
கோயிலின் முன் உற்சாகத்தோடு பாணர்கள் கொற்றவையைப் பாடிப் பரவிக் களிக்கிறார்கள். என்றுமில்லாத திருநாளாய் அவர்களின் இசைத் திறமைகளுக்கு அழகு கூட்டும் அற்புத நாயகனாய் கோவலன் கிடைத்தது அவர்களிடையே விவரிக்க இயலாத மகிழ்ச்சியைக் கூட்டுகிறது. வழிப்பயணத்தில் கிடைத்த இசைப்புலமை மிக்க வாலிபனைப் பிரிய முடியாமல் அந்தப் பாணர் குழுவே அன்புப் பிணைப்பில் தத்தளிக்கிறது. 

காப்பியத்தைத் தொடர்ந்து வாசிக்கும் நமக்குத்  தான் கோவலனும் இந்த பாணர் குழுவுடன் ஒன்றரக் கலந்து  விட்டால் அவனது இசைப்புலமைக்கு ஒரு  வடிகால் கிடைக்குமே என்று தோன்றுகிறது. சிலம்பை விற்று வணிகத்தில் என்ன சாதித்து விடப்போகிறான்,?.. அதற்கு ஆன்ம சுகம் கொடுக்கும் இந்த பாணர்களுடனான தொடர்பும் அதன் தொடர்ச்சியாய் அமைந்தாலும் அமையப்போகும் வாழ்க்கைப்  போக்கும் மேலாயிற்றே என்ற எண்ணம் மேலிடுகிறது.  திசை தெரியாது திகைக்கும் கோவலனுக்கும் திண்ணமாகக் ஒரு முடிவு எடுக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறதோ என்று நாம் காப்பியப் போக்கில் கவனத்தைச் செலுத்தினால் நம் ஆதங்கம் எல்லாம் சுக்கு நூறாய்த் தூளாகின்றன.

நம் எதிர்ப்பார்ப்புகளுக்கு மாறாய் கோவலனும் தன் மதுரை நோக்கிய நெடிய பயணத்திலேயே குறியாய் இருப்பது போல காப்பியத்தை வடித்த இளங்கோ  அடிகளாரும் அல்லது அந்தப் பாழாய்ப்  போன ஊழ்வினையின் ஆட்டபாட்டங்களுமே தொடர் வாசிப்பாய் ஆகிப்போகிறது. என்ன காரணங்களுக்காக கோவலனுக்கும், கோவலைனைத் தொட்டு அவன் அருகாமை கிடைத்த அத்தனை பேருக்கும் இப்படியாக நேருகிறது என்று விண்டு உரைக்கிற காரணங்கள் தெரியாமலேயே மேற்கொண்டு  வாசித்துப் போகிறோம்.
 .
“நண்பர்களே! நாம் விடைபெறும் நேரம் வந்து விட்டது.. மதுரை இன்னும் எத்தனை காதம் தொலைவில் உள்ளது?” என்று பாணர்களைக் கேட்கிறான் கோவலன்.

‘வானம் தொட்டு விடும் தூரம் தான்’  என்று சொல்வது போல அவர்களில் ஒருவன் சொல்கிறான்: “மதுரைத் தென்றல்  இதோ நம்மைத் தாலாட்டத் துவங்கிவிட்டது, பாருங்கள்!! பாண்டியனின் செலவ வளமிக்க மாமதுரை வெகு தொலைவில் உள்ள ஊர் அல்ல;  தனியாக நீங்கள் சென்றாலும் உங்களைத் தடுப்பார் யாருமில்லை..” என்கிறான்.

நமக்கோ ‘பக்’கென்றிருக்கிறது. ‘எங்கே போனாலும் தப்ப முடியாது; நீங்கள் செல்லுமிடமெல்லாம் உங்கள் பாதங்களைப் பற்றி உங்களோடையே நடைபோடும் வல்லமை மிக்கது, ஊழ்வினை’ என்று அடிகளார் அழுத்தம் திருத்தமாகச் சொல்கிறாரே என்று வேறு கவலையாக இருக்கிறது.

இன்னும்  எவ்வலவு காத தூரம் அந்த மெல்லிய பாதம் கொண்ட மேனியாளோடு, வயது மூத்த சமண அடிகளாருடன் கோவலன் நடக்கப்  போகிறானோ என்றிருக்கிறது. 

(தொடரும்)

படங்களை உதவியோருக்கு நன்றி. 

 



  

Monday, June 13, 2016

அழகிய தமிழ் மொழி இது!...

பகுதி--14

டைசியில் அந்த மாமுது மறையோன் சொன்னபடியே தான் நடந்தது.

மதுரையை நோக்கிய நடைபயணத்தின் நடுவே கவுந்தி அடிகளும் கண்ணகியும் வெகுவாகக் களைத்துப் போயினர்.  அவர்கள் நாவறட்சியை போக்க, பக்கத்தில் எங்காவது நீர்நிலை இருக்குமா என்று தேடிப் புறப்பட்டான் கோவலன்.  அவனது எதிர்ப்பார்ப்பின்படியே சற்று தூரத்தில் ஒரு நீர்நிலை தென்பட்டது.  அதன் அருகாமையில் கோவலன் நெருங்கும் பொழுது திடீரென்று ஒரு பெண் அவனை நோக்கி வருவதைப் பார்த்தான்.

அந்தப் பெண் அருகில் வரவரத் தான் கோவலனுக்கும் தெரிந்தது.. மாதவியின் தோழி வசந்தமாலையையே உரித்து வைத்திருந்தாள் அவள். கோவலனுக்கு மிக அருகாமையில் அவள் வந்ததும் தடாலென்று அவன் காலடிகளில் விழுதாள். அவள் கண்கள் கலங்கின. உதடுகள் படபடத்தன. “நீங்கள் திருப்பி அனுப்பிய மடல் கண்டு மாதவி மிகவும் கலக்கமுற்றாள். ‘தாழைமடலில் எழுதி நான் அனுப்பிய அந்த முடங்கலில் தவறேதும் செய்யவில்லையே!!  அந்த மடலை எடுத்துச் சென்ற நீ தான் அவரிடம் தவறாக ஏதும் கூறிவிட்டாய் போலும். அதனால் தான் குற்றமற்ற அவர் என்னிடம் வாராது போனார்!’ என்று மிகவும் வருந்தினாள்” என்று சொல்லும் பொழுதே அவள் கண்களில் நீர் வடிந்தது. 

“எப்படிப்பட்டோராயினும் கணிகையர் வாழ்வு என்றால் மிகவும் இழிந்ததாகத் தான் எண்ணுகின்றனர்’ என்று மாதவி மிகவும் துயருற்றாள். கழுத்து முத்து வடத்தை அறுத்து வீசினாள். எரிந்து விழுந்து என்னையும் துறத்தினாள்.  நீங்களும் மதுரை மூதூர் நோக்கிப் புறப்பட்ட செய்தியை எதிர்ப்பட்டோர் சொல்ல, உங்களைத்  தேடிவந்தேன்.  எனக்கான கட்டளை யாது?” என்று வசந்தமாலையை ஒத்திருந்த அந்தப் பெண் கோவலனிடம் கேட்டாள்.

இந்த சமயத்தில் ‘அறிவை மயக்கும் தெய்வம் ஒன்று இக்காட்டிடை உலாவி வருகிறது’ என்று மறையோன் சொன்னது கோவலனது நினைவில் உறைத்தது.  ‘வசந்தமாலையைப் போலவே இருக்கும் இவள் யார் என்ற சூது அறிய வேண்டும்’ என்ற எண்ணத்தில் கோவலன் மனத்திற்குள் கொற்றவை மந்திரத்தை உபாசித்தான்..  அவன் அந்த மந்திரத்தை உச்சரிக்கத் தொடங்கிய ஷணத்தில், என்ன ஆச்சரியம், அந்தப் பெண்ணிடம் ஏதோ மாற்றம் ஏற்பட்டது போல உண்ர்ந்தான் கோவலன்..

“என்னை மன்னியும்..” என்று அந்தப் பேண் கோவலனிடம் தாழ்ந்து இறைஞ்சினாள். “நான் இவ்வனத்திலே திரியும் இசக்கி. உன்னை மயக்க எண்ணி வசந்தமாலை போன்ற உருக்கொண்டேன்.  அருட்பெருஞ்செல்வி கண்ணகிக்கும், தவநெறி சார்ந்த கவுந்தி அடிகளாருக்கும் எனது இந்த இழிந்த செயல் தெரியாதிருக்க வேண்டும்.”.’ என்று கோவலனிடம் வேண்டி மறைந்தது அந்த கானுரைத் தெய்வம்.  திகைத்த கோவலன் பின் தாமரை இலையிலே நீரேந்தி வந்து கண்ணகிக்கும் அடிகளாருக்கும் அளித்தான்.

காட்டுப்பாதையாயினும்  வெம்மை சற்றும்  குறைந்தபாடில்லை. அதனால் இனியும் இந்த பாலை வழிச் செல்லலாகாது என்ற எண்ணம் கொண்ட நேரத்து அவர்கள் வழிப்பயணத்தில் மரங்களடர்ந்த்  சோலை ஒன்று  குறுக்கிட்டது..  சோலையினுள் கொற்றவையின் கோயில்  ஒன்றும் இருந்தது. கொஞ்ச நேரத்திற்கு முன் தான் கொற்றவையைக் குறித்தான மந்திரத்தைக் கோவலன் உச்சாடனம் செய்தான், அதற்குள் கொற்றவையின் தரிசனமே நிகழப்போகிறதா என்று நமக்கோ ஆச்சரியமாய் இருக்கிறது.

அந்தக் கொற்றவையின் கோயிலை அவர்கள் நெருங்க நெருங்க அந்த அதிசயக் காட்சியைக் கண்டனர்.  அக்கோயில்  முன்னே  சாலினி  (ஷாலினி! இக்காலத்துப்  பெயர் போல் இல்லை?..) என்னும் பெண் தெய்வம் ஏறப்பெற்றாள். தெய்வம் ஏறப்பெற்றதால் அவள் உடல்  சிலிர்த்தது. அவள் கைகளை எடுத்து  உயர்த்தி உயர்த்தி முள்வேலி இடப்பட்ட எயினர் ஒன்றாக கூடிப் பகிர்ந்து உண்ணும் ஊர் மன்றத்தில் காண்போர் வியக்க  கால்பெயர்த்து ஆடினாள். 

கொற்றவைக்கு நீங்கள் உங்கள் செய்கடனைத் தராவிட்டால் அவள் உங்கள் செயல்களுக்கு வெற்றியைத் தரமாட்டாள். ஆதலின் கொற்றவைக்கு சேர வேண்டிய பலிக்கடனை அளிப்பீராக!’ என்று ஆட்டத்தினூடே குரல் எழுப்பி கூத்தாடினாள். தெய்வம் ஏறப்பெற்ற அவளது ஆட்டத்தின் நடுவே சடக்கென்று அவள் பார்வை கோயிலின் ஒரு மூலையில்  அமர்ந்திருந்த கண்ணகியின் மேல் படுகிறது. கண்ணகியைப் பார்த்தவுடனேயே அவளைப் பற்றி நன்கு அறிந்தாற்போல உற்சாகம் சாலினையைத் தொற்றிக்கொள்கிறது. தெய்வாட்டம் ஆடிக்  கொண்டே கண்ணகி பக்கம் கைகாட்டி மற்றவர்களுக்கு அவளைப்  பற்றிச் சொல்வது போல கூவுகிறாள்:

இவளோ கொங்கச் செல்வி குடமலையாட்டி
தென் தமிழ்ப்பாவை செய்தவக் கொழுந்து
ஒருமா மணியாய் உலகிற்கு ஓங்கிய
திருமா மணிஎனத் தெய்வமுற்று உரைப்ப....

“இவள் யார் தெரியுமா?.. இவள் தான் கொங்கு நாட்டின் செல்வி! குடமலை நாட்டை ஆளுபவளும் இவளே!  தென்தமிழ்ப்பாவை!  மேலோர் செய்த தவக்கொழுந்து! ஒப்பாற்ற மாமணியை ஒத்து உலகிற்கெல்லாம் ஒளியைத் தரும் தெய்வ மகள்..” என்று சாலினி ஓங்கிக் குரல் எழுப்புகிறாள்.

அவள் புகழுரை கேட்டு கண்ணகி நாணுகிறாள். அறிவுடைய இப்பெண் ஏதோ மயக்கத்தால் இவ்வாறு கூறினாள் போலும்’ என்று எண்ணியவாறே அரும்பெரும் தன் கணவன் கோவலனின் பக்கத்தில் ஒடுங்கி புன்னகை பூத்து நாணி முறுவலிக்கிறாள். வேட்டுவவரி முழுக்க முழுக்க கொற்றவையின் போற்றல் பாடல்கள்.  அந்த வேட்டுவ மக்கள். திருமகளைத் துதித்துப் பாடுகிற வரிவரியாய் நீளும் வீரத்திருமகளின் விழுமிய திருக்கோலம் போற்றும் பாடல்கள்!  

சாலினி கொற்றவை கோலம் நீங்கப் பெற்ற பிறகு சாதாரண சாலினி ஆகிறாள். தெய்வாட்டம் நிகழ்ந்த அந்த இடமே திடீரென்று அமைதியில் ஆழ்கிறது.  இது தான் சரியான சமயம் என்று தேர்ந்து கோவலன் கவுந்தி அடிகளாரை நோக்கிக் கூறலானான்:  “பெரியீர்! பகல் பொழுது வெம்மையில் கண்ணகி பருக்கைக் க்ற்கள் நிறைந்த இந்தப் பாதையிலே நடக்க மிகவும் சிரம்பபடுகிறாள்.. அதனால் கொடுமையான வெயிலின் துன்பம் நீங்கிய  இரவின் நிலா ஒளியிலேயே மேற்கொண்டான பயணத்தை மேற்கொள்வோம்’ என்கிறான்.

அடிகளாருக்கும் அவன் சொன்னது ஏற்புடையதாக இருந்தது. அன்று மூவரும் விடிய விடிய நடந்தனர். பொலபொலவென்று பொழுது விடியும் நேரத்து வழியில் இடைப்பட்ட ஊர் ஒன்றின் புறத்தே கண்ணகியையும் கவுந்தி அடிகளாரையும் தங்க வைத்து விட்டு, கோவலன் அருகிலிருக்கும் நீர்நிலையைத் தேடிச் சென்றான்.

செல்லும் வழியில் அவனுக்கு ஓர் ஆச்சரியம் காத்திருந்தது. கோவலனை அறிந்த கோசிகன் என்னும் பிரமச்சாரி அங்கு எதிர்ப்படுகிறான். கோசிகனுக்கோ இவன் கோவலன்  தானோ என்று ஐயம் வேறு இருந்தது. அதனால், அருகிலிருந்த குறுகத்திச் செடி சுற்றியிருந்த ஒரு மலர்ப்பந்தலைப் பார்த்து கோவலுக்குக் கேட்கிற மாதிரி அவன் பேசலுற்றான்:: “மாதவியே! கோவலன் பிரிய கொடுந்துயர் எய்திய மாதவி போல நீயும் இந்த முது வேனில் காலத்தில் வெயிலுக்கு ஆற்றாது வாடி துன்புற்றாயோ?” என்கிறான். பந்தலில் படர்ந்திருந்த அந்த மலர்க்கொடிக்கும் பெயர் மாதவி என்பது இங்கு கோசிகனின் கூற்றுக்குப் பொருத்தமாக அமைகிறது.

கோசிகன் சொன்னதைக் கேட்டு கோவலன் திகைக்கிறான். தன்னைத் தெரிந்திருந்த இவன் யார் என்று ஆச்சரியம் மேலிட, “ஐயனே! யாது நீ கூறினாய்?. விளக்கமாகச் சொல்வாயாக..” என்று அவனைப் பார்த்துக் கேட்டான்.  கோவலன் கேட்ட கேள்வியால் இவன் கோவலன் தான் என்று கோசிகனுக்கும் நிச்சயமாயிற்று. அதனால் நேரடியாகவே பேசும் தைரியம் கொண்டு,”கோவலனே! நீ புகார் விட்டு நீங்கினதும் என்னவெல்லாம் நடந்து விட்டன என்று உனக்குத் தெரியுமா?.. தன்னிடம் இருந்த மாணிக்கத்தை இழந்த நாகம் போல உன் பெற்றோர் ஒடுங்கிப் போயினர்.. உன் உறவினரும் மிகுந்த துன்பம் உற்றனர். உன் தந்தை மாசாத்துவான் உன்னைத் தேடி அழைத்து வர ஏவலர்களை எல்லா திசைகளுக்கும் அனுப்பினார். இராமபிரான்  கானகம் சென்ற பொழுது அயோத்தி அடைந்த துன்பம் போல இங்கும் நிகழ்ந்தது. அதுமட்டுமில்லை..” என்று பெருமூச்செறிந்து தொடர்ந்தான்:

“கோவலனே! இன்னொரு செய்தியும் உனக்குத் தெரியத்தான் வேண்டும்.. நீ திருப்பி அனுப்பிய ஓலையை வசந்தமாலை மாதவியிடம் தந்ததும் அவள் ஆறாத துயருற்றாள். நெடுநிலை மாடத்து நடுநிலையில் அமைந்த கட்டிலில் விழுந்து தன்னைத் தனக்கேத் தெரியாது உருக்குலைந்து போனாள். அவளுக்கு ஆறுதல் கூறுவதற்காக மாதவியின் மாளிகைக்குச் சென்றிருந்தேன். ‘உன்னுடைய இணை அடி தொழுகின்றேன்.. எனக்குற்ற துன்பத்தைப் போக்குவாயாக..” என்று மாதவி என் தாள் பணிந்து தன் மென்மையான கரத்தால் உனக்கு ஒரு முடங்கலை எழுதி ‘என் கண்மணி போன்றவருக்கு இதைக் காட்டுவாயாக’ என்று என்னிடம் தந்தாள். பல இடங்களிலும் அலைந்து இன்று உன்னை இங்கு கண்டேன். இந்தா..” என்று மாதவியின் தாழம்பூ மடல் முடங்கலை கோவலனிடம் தந்தான்..

கோசிகனிடமிருந்த முடங்கல் கோவலனின் கை சேர்ந்ததும் மாதவியின் கரம் பற்றிய உணர்வே அவன் அடைந்தான். அவன் அவளுடன் கூடி இருந்த காலத்தில் அவளில் உறைந்திருந்த நெய் வாசம் அவனில் பற்றிக் கொண்டது. அந்த உணர்வை அனுபவித்த நிலையில் சிறிது  பொழுது அந்த முடங்கலைக் கையில் வைத்திருந்தவனாய் தடுமாறினான் கோவலன். பின் தன் நிலை உணர்ந்தவனாய் மடலைப் பிரித்ததும் அவன் மனதோடு பேசும் மொழியில் மாதவி எழுதியிருந்ததில் அவன் விழிகள் மேய்ந்து பரபரத்தன. டிகள் முன்னர் யான் அடி வீழ்ந்தேன்..’ .என்று ஆரம்பித்திருந்தது அந்த முடங்கல்.  

ஊழ்வினை என்றால் அதில் நல்லதும் தீயனவும் கலந்து தான் இருக்கும். தீவினைக்கானப் பலனை அனுவிக்க விதி உந்திச் செலுத்தும் பொழுது செய்த நல்ல காரியங்களுக்கான நல்வினையும் அந்த தீவினை வேகத்தை மட்டுப்படுத்த எதிர்த்துப் போராடும்.  இந்தப் போராட்டத்தில் எந்த வினைக்கான தாக்கம் அதிகம் இருக்கிறதோ அதுவே வெற்றி பெறும்.

கோவலன் மதுரை நோக்கிச் செல்வதைத் தடுக்க இதற்கு முன்னரே நடந்த முயற்சிகள் நமக்குத் தெரியும். முதலில் வசந்தமாலை கொண்டு வந்த மாதவியின் முடங்கல், அடுத்து பவகாரணிப் பொய்கையில் நீராட மாமுது மறையோனின் அறிவுறுத்தல், அதற்கடுத்து வசந்தமாலையின் உருக்கொண்ட இசக்கியின் முயற்சி, இப்பொழுதோ கோசிகன் மூலமாக மாதவியின் முடங்கல். எல்லாமே மதுரை நோக்கிய கோவலனின் நீண்ட பயணத்தைத் தடுப்பதற்கான முயற்சிகளே.கோவலன் செய்திருந்த நல்வினைகளின் தாக்கச் செயல்பாடுகள் அவைஇருந்தும் தீவினைகளின் அழுத்தம் அதனினும் விஞ்சி இருந்தமையால் கோவலன் மாமதுரை செல்லும் முயற்சிகளை எந்த நல்வினையாலும் தடுக்க முடியாது  
போயிற்று

இந்தக் காப்பியத்தை வாசித்துக் கொண்டே வரும் பொழுது இன்னொரு விஷயமும் நமக்குத் தெளிவாகத் தெரிகிறது.  இந்த மாதிரி ஏதாவது நல்வினை குறிக்கிட்டு கோவலனை புகார் நகருக்குத்  திரும்பத் தூண்டும் பொழுதெல்லாம் கோவலன் தனி ஆளாகத் தான் முடிவெடுக்கும்படியாக நேரிடுகிறது.  அந்த சமயங்களிலெல்லாம் கண்ணகியோ அன்றி கவுந்தி அடிகளோ அவனுடன் இல்லாதது மாதிரியான சூழ்நிலைகளே அமைக்கின்றன. . தண்ணீர் கொண்டு வர நீர்நிலை நோக்கி செல்வது மாதிரியான ஏதாவது காரணம் வைத்து மற்ற இருவர்களிடமிருந்து கோவலன் தனியே பிரிந்து விடுகிறான்.. இதனால் புகார் நகருக்குத் திரும்புதல் சம்பந்தமாக மற்றவர்களுடன் அவன் கலந்து முடிவெடுக்க முடியாத சூழ்நிலைகளே தொடர்ந்து ஏற்படுகினறன..  இதற்குக் காரணம் கோவலனின் நல்வினையும், தீவினையும் அவனுக்குள்ளேயே போராடும் பொழுது மற்றவர்களின் நல்வினையோ அல்லது தீவினையோ கோவலனின் வினைகளுடன் கலக்காமல் இருக்கத்தான். ஊழ்வினை தொடர்ந்து வந்து தன் தீவிரத்தை அதிகப்படுத்துகையில் பல சமயங்களில் இந்த மாதிரி தனிமனிதப்  போராட்டமாகவும் மற்றவர்களின் வினைகள் இதனுடன் கலந்து விடாமல் மிகக் கவனமாக தடுக்கப்பட்டு விடுகிற மாதிரியே சூழ்நிலைகள் அமைக்கப்படுகின்றன என்று தான்  எடுத்துக் கொள்ள வேண்டும்..

இப்பொழுதும் அவனை புகார் நகர் திருப்ப முயற்சிக்கும் நல்வினைகளின் 
செயல்பாடாக மாதவியின் இந்த முடங்கல் செயல்படுகிறது. கோவலன், அவனுக்கான நல்வினையின் இந்தத் தூண்டுதலை எப்படி எதிர்கொள்கிறான் என்று பார்ப்போம்.

(தொடரும்)



படங்களை உதவிய நண்பர்களுக்கு நன்றி.
Related Posts with Thumbnails