மின் நூல்

Friday, February 19, 2016

அழகிய தமிழ் மொழி இது!...



லகில் மொத்தம்  2796 மொழிகள் உள்ளனவாம்   இதில் பல மொழிகள் பேச்சு மொழிகளாகவே உள்ளன.  அதாவது அவற்றிற்கு எழுத்து வடிவம் இல்லை.

பாரதத்திலோ,  499-க்கும் மேற்பட்ட மொழிகள் புழக்கத்தில் உள்ளன.

இந்த நானூற்றுக்கும் மேற்பட்ட மொழிகளில் ஆறு மொழிகள் செம்மொழி தகுதி பெற்றிருக்கின்றன.  அவை:  தமிழ், சமஸ்கிருதம், தெலுங்கு, கன்னடம், மலையாளம், மற்றும் ஒடியா மொழி.  பொதுவாக தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகியவை தமிழிலிருந்து  கிளைத்த தமிழ்க் குடும்ப மொழிகளாதலால் மனத்தளவில் அவற்றைத் தனியாகப் பிரித்தும் பார்க்க முடியவில்லை.   இருப்பினும் கணக்குக்காக  ஆறில் நான்கு திராவிட மொழிகள் செம்மொழி தகுதி பெற்றிருக்கின்றன என்பது நமக்குப்  பெருமை.

உலக அளவில்  கிரேக்க மொழி, இலத்தீன், பாரசீக மொழி, அரபு மொழி, எபிரேயம் மற்றும் சீன மொழி ஆகியவை செம்மொழிகள் என்று ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கின்றன.

எதையும் ஆங்கிலத்தில் சொன்னால் இளைஞர்களுக்கு சுலபமாகப் புரியும் காலம் இது.

செம்மொழி என்றால் classical language. என்று ஓரளவு பொருந்தக் கூடிய அர்த்தத்தில் சொல்லலாம்.

அது சரி,  classical language  என்றால்---

"To qualify as a classical tradition, a language must fit several criteria:  it should be ancient, it should be an independent tradition that arose mostly on its own not as an offshoot of another tradition, and it must have a large and extremely rich body of ancient literature "

---  என்று மொழியியல் அறிஞர் ஜார்ஜ் எல் ஹார்ட் கூறுகிறார்.

செம்மொழி என்பது ஒரு மொழியில் அமைந்திருக்கும் இலக்கிய மற்றும் கலைப்படைப்புகளைக் கொண்டே தீர்மானிக்கப் படுகிறது.  என்றோ இருந்த பழங்கதையாக இல்லாமல் அப்படியான இலக்கிய கலைப்படைப்புகள், வருங்காலத்திலும் மென்மேலும் உருவானால் தான் இந்த மொழி செம்மொழி என்பதற்கான வரலாற்று பெருமைகளையும் தக்க வைத்துக் கொண்டவர்களாவோம்.

தற்கால தமிழின் கலை இலக்கிய  கலைப்படைப்புகள்  பற்றிய பார்வை நமக்கு அவசியம்.  பண்டைய தமிழ்ப் புலவர்களின் தொடர்ச்சியாய் தொடர்ந்து வரும் இன்றைய இலக்கிய சாம்ராட்களின்  படைப்புகளைப் பற்றிய பார்வையும் நமக்கு அவசியம்.

மன்னர்களின் ஆட்சி காலங்களின் பொழுது இயல்பாகவே  கலை இலக்கியங்கள் ஆட்சி அதிகாரத்தில் வலிமை பெற்றிருந்த மன்னர்களைச் சார்ந்திருந்தன.   தமிழில் கூட மன்னரைத் தவிர்த்து  ஒரு வணிகனை பாட்டுடைத் தளைவனாக வரித்துப் பாடப்பாட்ட முதல் காப்பியம் சிலப்பதிக்காரமே. அந்த வகையில் அதுவே தமிழில் முதன் முதல் தோன்றிய குடிமக்கள் காப்பியமாகும்.

சங்க காலத்தில் தமிழின் தமிழகத்தின் தமிழ்ப்புலவர்களின் நிலையை இன்றைக்கும் தாம் தெரிந்து கொள்வதற்கு தோன்றாத் துணையாய் இருப்பது சங்க இலக்கியங்களே. அந்த வகையில் இலக்கியங்கள் காலத்தின்  கண்ணாடி என்பது எல்லா நாட்டு அறிஞ்ர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மை.

அதே போல தற்காலத்தைப் பற்றி எதிர்காலத்துக்கு எடுத்துச் சொல்லப் போவது இன்றைய இலக்கியங்களே.  அதனால் தமிழின் இன்றைய இலக்கியங்களை இன்றைய காலகட்டத்தை பிரதிபலிக்கக் கூடியதாய் படைக்க வேண்டியது அவசியமாகிறது.  அதே நேரத்தில் செம்மொழித் தமிழின் நீட்சியாய் இன்றைய தமிழ் இலக்கியங்களும் தமிழ் மொழியின் பெருமைகளை இழக்காமல் அதே நேரத்தில் காலத்தின் அலையோட்டத்தில் அமிழ்ந்து போய் விடாமல் காலத்தைத் தாண்டி வாழும் படைப்புகளாய் ஜீவிதம் கொண்டிருக்க வேண்டிய அவசியமும் ஆகிறது...

இந்தக் கோணத்தில் தற்கால தமிழ் இலக்கியம் பற்றிய  புரிதல் நமக்கு அவசியம்.

வரலாற்றைப் படம் பிடித்துக் காட்டுகிற சிறப்பில் தமிழின் சங்க இலக்கியத்திற்கு ஈடு இணை இல்லை.  இதே ஈடு இணை எதிர்காலத்திற்கான தற்கால படப்பிடிப்புக்கும் தேவை என்றே சங்க இலக்கியங்கள் நமக்கு பாடம் சொல்கின்றன.

இலக்கியத்தை பாட்டில் வடித்தது பண்டைய காலம்;  உரைநடையில் சொல்வது தற்காலம்.   இதை ஒழுங்கில் சொல்ல வேண்டுமானால், பண்டைய கால கதைப்பாடல்கள்,  காப்பியங்கள்  என்று நம்மால் அடையாளப் படுத்தப்பட்டன.  அன்றைய காப்பியங்கள் தாம் இன்று நாவல் என்று பெயர் கொண்டு வலம் வருகின்றன.

சிலப்பதிகாரமும், மணிமேகலையும் அன்றைய காப்பியங்கள் என்றால் கல்கியின் அலைஓசையும், ஜெயகாந்தனின்  'ஒரு மனிதன், ஒரு வீடு, ஒரு உலகமும் .சமகால நாவல்கள்.

நம் தேசத்தில் நூற்றைம்பது  கால அன்னிய ஆங்கிலேயர் ஆட்சி எல்லாவற்றிலும் தன் தடத்தைப் பதித்திருப்பது போல இலக்கியங்களிலும் தன் தடத்தைப் பதித்திருக்கிறது.

நாம் காப்பியங்கள் என்று பெயர் சூட்டியவை போன்று அமைந்திருப்பதை அவர்கள் நாவல் என்று அழைப்பார்கள் என்று புரிந்து கொண்டோம். அவர்கள் நாவல் என்று அழைத்ததினால் அத்தகையவற்றை நாமும் நாவல் என்று அழைக்கத் தலைப்பட்டோம்.

நாவல் என்பதனை புதினம் என்று அழைப்பதினால் அது ஒன்றும் தமிழ் வடிவமாகி விடாது.    ஆங்கில நாவல்கள் போன்று உரைநடையில் நாமும் நாவல்கள் படைக்கத்  தொடங்கினோம் என்பதே உண்மை.


(தொடரும்)

5 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

இந்தத்தங்களின் தொடரின் மூலம் பல்வேறு புதிய தகவல்களை அறிந்துகொள்ள முடிகிறது. படிக்கவும் சுவாரஸ்யமாக உள்ளது. தொடர்ந்து படிக்க வேண்டும் என்ற ஆவலுடன் ...

சிவகுமாரன் said...

பயனுள்ள பதிவு ஜீவீ சார். நானும் பலமுறை ஸ ஹ போன்ற எழுத்துக்களின் முக்கியத்துவம் பற்றி எண்ணியதுண்டு.இட்டம் என்ற சொல்லை நானும் பலமுறை பயன்படுத்தியிருக்கிறேன்.
அருட்கவிக்கு தங்களை அன்புடன் அழைக்கிறேன்.

ஜீவி said...

2 வை.கோ.

நன்றி, கோபு சார்!

மேம்போக்காக இல்லாமலிருக்கும் ஆழமான பதிவுகளையும் சுவாரஸ்ய ரசனையுடன் படித்து கருத்துச் சொல்வதற்க்கு நன்றி, சார்

ஜீவி said...

@ சிவகுமாரன்

ஆகச் சிறந்த இணையக் கவிஞர் பயனுள்ள பதிவு என்று முத்திரை குத்தியதும் இன்னும் இது பற்றி எழுத வேண்டுமென்ற ஆவல் ஏற்படுகிறது..

தமிழின் 'ள', 'ல' ஆகவும், 'ல' 'ள' ஆகவும் மாற்றி மாற்றி சிதைக்கப்படுகிறது. 'ழ' பற்றி கேட்கவே வேண்டாம். நம் மொழியை சிதைப்பது மட்டுமல்லாமல், இன்னொரு மொழியையும் சிதைக்க வேண்டுமா என்கிற ஆதங்கமும் ஏற்பட்டதில் இதெல்லாம் எழுதத் தோன்றியது. நன்றி சிவகுமாரன்.

ஆஹா.. அருட்கவிக்கு வருகிறேன், நண்பரே!.

வே.நடனசபாபதி said...

அறியாதன அறிந்தேன். நாவல் பற்றிய தகவல் எனக்கு புதியது. தொடர்கிறேன்.

Related Posts with Thumbnails