மின் நூல்

Friday, December 30, 2016

நாளை சேலை இன்று செருப்பு

இந்த மாதிரியான இணைய செளகரியங்கள் கொண்டிருக்கும் இன்றைய காலகட்டத்திற்கு முன்னால்  கதைகள் எழுதுவோருக்கு பத்திரிகைகளில் தங்கள் எழுத்து பிரசுரமானால் தான் ஒரு அங்கீகாரம் கிடைத்த மாதிரியான எண்ணம் இருந்தது.  எழுத்தாசை கொண்டோருக்கு தாங்கள் என்ன எழுதினாலும் பிறருடன் பகிர்ந்து கொள்வதற்கு பத்திரிகை தவிர வேறு சாதனம் இல்லாத காலகட்டத்து நிர்பந்தம் அது.  

நல்ல சிறுகதைகளையும் தொடர்களையும் பத்திரிகைகள் பிரசுரித்த அந்த பொற்காலத்திலும்  இந்த பத்திரிகைக்கு இந்த மாதிரியான கதைகள் தான் பொருந்தும்  என்று சொல்கிற அளவில்  பத்திரிகைகள் தங்கள் பிரசுர உள்ளடக்கங்களில் வித்தியாசம் கொண்டிருந்தன.,   எழுதுவோரும் அந்த வித்தியாசத்தை நன்கு புரிந்து கொண்டு  அந்தந்த பத்திரிகைக்கு ஏற்றவாறு எழுதத் தலைப்பட்டனர்.

அப்படியான காலகட்டத்தின் நினைவுகளை மீட்டெடுக்கும் ஒரு பகுதி இது.

இங்கு நீங்கள் படிக்கவிருப்பது எனது சிறுகதை தான்.

பின்னூட்டங்களைப்  பார்த்து விட்டுப் போட்ட முன்னோட்டம் இது.   தாமதமான   இந்தக்    குறிப்பிற்கு  மன்னிக்கவும்.

.
ஒரு  குமுதக்  கதை





பார்க் அவென்யூ செண்ட்டை சட்டையில் ஸ்பிரே பண்ணிக் கொண்டு இன்னொரு தடவை தலையை அழுந்த வாரிக்கொண்ட பொழுது, பீரோ கண்ணடியில், ஹாலில் கிழிந்த சேலையைத் தைத்துக் கொண்டிருந்த மனைவியின் உருவம் தெரிந்தது. உடனே ரெளத்திரமானான் தங்கப்பன்.

"ஏய்! உனக்கு சேலையத் தைக்க நேரம் காலம் தெரியாது?" என்று எரிந்து விழுந்தான்.

"ஸாரிங்க.." என்று கெளசல்யா துணுக்குற்று சேலையோடு எழுந்து கொண்டாள்.

"ஆமாம். ஸாரியைத்தான் சொல்றேன். புருஷன்காரன் ஆபீஸூக்குப் போகும் போது பழசை தைச்சு புதுசு வேணும்னு சிக்னல் கொடுக்கறையா?" என்று அவன் உறுமினான்.

"ஸாரிங்க.. நான் புடவையைச் சொல்லலே.. மன்னிச்சிக்குங்க.. " என்று சமையலறைப் பக்கம் பம்மிப் பதுங்கினாள் கெளசல்யா.

"ஏய்! எல்லாம் எனக்குத் தெரியும்டி. உன்னை மாதிரி எத்தனை பேரை நா பாத்திருப்பேன்?" எகத்தாளத்த்கோடு காலரைத் தூக்கி விட்டுக் கொண்டு வாசல் பக்கம் வந்து செருப்பை மாட்டிக் கொண்டான் தங்கப்பன்.

வாஸ்தவம் தான். எத்தனையோ இல்லாவிட்டாலும் நாலைந்தை நைச்சியம் பண்ணி ஆசைகாட்டி படுக்கையில் தள்ளியவன் தான் தங்கப்பன். அந்த செயலாற்றல், பொம்பிளை என்றால் தூக்கி எறிந்து பேசச் சொல்லியது.

அதுவும் கெளசல்யா என்றால் அவனுக்குத் தொக்கு. வீட்டுக்குள் நுழைந்தாலே 'தாம் தூம்' தான். அவள் முகத்தை பார்த்தாலே இவனுக்குப் பற்றி எரியும்.

கெளசல்யா பாவம்!                                                                 

வெளியில் போய்விட்டு வீடு திரும்பும் புருஷனை வளைத்துப் போட்டுக் கொண்டு "என்னங்க.. என்னங்க' என்று கொஞ்சத் தெரியாது. உங்கள் வருகைக்காகத்தான் வழிமேல் விழிவைத்துக் காத்கிருக்கிறேன் என்று புளுகத் தெரியாது. பீச்சுக்குப் போவோமா, பிக்சருக்குப் போவோமா என்று கேட்கத் தெரியாது. குறைந்த பட்சம் முகம் அலம்பி, தலைவாரிப் பூச்சூடி பளபளக்க கூடத் தெரியாது.

புத்தம் புதுசாக மனைவிக்கு மாற்றுப்புடவை வாங்கித் தர வக்கில்லாதவன், மனமில்லாதவன் மாசத்தில் நூற்றுக்கணக்கில் செண்ட்டுக்காகவும், லேகியங்களுக்காகவும் செலவழிப்பான்.

இன்றைய செண்ட் ஸ்பிரே சமாச்சாரத்திற்கும் அதான் காரணம். சுகன்யா என்றொரு சுந்தரி. சொந்த ஊர் திருவனந்தபுரத்திலிருந்து இவனது சென்னை தலைமை அலுவலகத்திற்கு மாற்றலாகி வந்திருக்கிறாள். மாலை ஐந்து மணிக்கு முடியும் ஆபீஸ் நேரம், காலை ஐந்து மணிக்குத் துவங்கினாலும் அவனுக்கு சம்மதமே. அந்த அளவுக்கு சுகன்யா தரிசனத்தில் தேன்மாந்திய குரங்காகிப் போனான் தங்கப்பன்.

இந்த லட்சணத்தில் சுகன்யாவின் கழுத்தில் தடித்த தாலிச்சரடு ஸ்பஷ்டமாகவே வெளியே தெரியும். தங்கப்பனைப் பொருத்த மட்டில் தாலியெல்லாம் வேலியல்ல.

சுகன்யா இந்த ஆபீஸில் சேர்ந்த மறுநாளே யாருக்கும் இல்லாத துணிச்சலாய் 'டைனிங் ரூம்' அருகே வழிமறித்து தங்கப்பன் கேட்டான்: "ஹலோ! ஒண்டர்புல்! பிரமாதமாயிருகே! என்ன ஸாரி இது, எங்கே வாங்கினீங்க?" முகபாவம் பூராவும் கண் வழியே புடவையின் நேர்த்தியை ரசிக்கிற மாதிரி காட்டிக் கொண்டு, அவன் உள் மனசு அவள் என்ன சொல்லப் போகிறாள் என்பதற்கு ஏங்கியது.

"தேங்க் யூ.. சாதாரண ஆர்கண்டிதான். இது எங்க ஊர்லே எடுத்தது."

"அப்படியா? வெரிகுட்! நீங்க ஆயிரம் சொல்லுங்க.. அழகாயிருக்கறவங்க, சாதாரணப் புடவையைக் கூட கட்றபடி நேர்த்தியா கட்டினா, 'டாப்'பாத்தான் இருக்கு!" என்று வார்த்தைகளைத் தேனில் தோய்த்தெடுத்து மனசாரப் பாராட்டினான். வெகு இயல்பாகப் புடவை முந்தானை பாகத்தைக் கையிலெடுத்து நூல் நைஸ் பார்க்கிற மாதிரி விரல்களுக்கிடையே புரட்டினான். 'இதுவே அதிகம், ஜாக்கிரதை!' என்று உள்மனசு எச்சரித்தது. உடனே சடக்கென்று புடவைத் தலைப்பை விட்டு விட்டான்.

"தேங்க்யூ..தேங்க்யூ.." என்று சிரித்துக் கொண்டே சுகன்யா போய்விட்டாள்.

இந்த மாதிரியான நாலைந்து சம்பவங்கள்.. அத்தனையிலும் தனக்குத்தான் வெற்றியாக தங்கப்பன் நினைத்துக் கொண்டான். பல நேரங்களில் நினைப்பு தான் மனிதனைக் குடைசாய்த்து விடுகிறது. அதுவும், தன் செயல்களுக்கு சாதகமாக நினைக்கும் நினைப்புகளைப் பற்றிச் சொல்லவே வேண்டாம்.

ச்சு; இன்னும் சில நிமிடங்களில் சுகன்யா வந்து விடுவாள். இன்று சற்று முன்னாடியே ஆபீசுக்கு வந்து விட்டான் தங்கப்பன்.

'டப்டப்'பென்று அடித்துக் கொண்டு வந்த ஆட்டோ அலுவலக வாசலில் நின்றது. ஆட்டோவிலிருந்து சுகன்யா வெளிப்பட்டது ரதத்திலிருந்து இறங்கிய தேவதையாய்த் தோன்றியது அவனுக்கு.

சுகன்யாவின் தோற்றம் தான் அன்று வெள்ளிக்கிழமை என்பதையே அவனுக்கு நினைவுபடுத்தியது. (தேங்காய்) எண்ணெய் தேய்த்துக் குளித்ததினால் புஸூபுஸூத்தக் கூந்தலைக் கோடலி முடிச்சிட்டு ரிப்பன் போட்டுக் கட்டியிருந்தது அவனைக் கட்டிப்போட்டது. சிகப்பு நிற மேனிக்கு ஏற்ற கத்தரிப்பூக் கலர் புடவை; வாடாமல்லி நிற ஜாக்கெட். தழதழத்த சேலைக்குக் கீழே செருப்பணியாத ரோஸ் பாதங்கள்... அவள் ஹாலுக்குள் நுழையும் பொழுதே சரியான ஐடியா தங்கப்பன் மனசில் கிளிக் ஆகிவிட்டது.

சடாரென்று தன் சீட்டிலிருந்து எழுந்து தனியே அவளை எதிர் கொண்டு 'குட்மார்னிங்' என்றான்.

"மார்னிங்.." என்று அவள் ஒரு நிமிடம் தயங்கிய பொழுது ஒரு வினாடி கூட விரயம் பண்ணாமல், "உங்கள் வீடு ஆழ்வார்பேட்டை ஸ்ரீமான் ஸ்ரீநிவாசன் தெருவில் தானே இருக்கிறது?" என்று கேட்டான்.

"அதே!" என்று அவள் ஆச்சரியப்பட்டு திகைக்கும் பொழுது, "இன்னிக்கு ஈவினிங் உங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ்.. ஐ'ம் கம்மிங்.." என்றான்.

"வித் பிளஷர்.. ஆழ்வார்ப்பேட்டைலே வேறு ஏதானும் ஜோலியோ?.."

"எஸ்.. வீனஸ் காலனிலே  ஒரு கதாகாலேட்சேபம்...   மிஸ் பண்ணக்கூடாது.. அதான்.. அப்படியே.." ஆஸ்திக சமாச்சாரங்களை குழைத்துப் பேசுவது அயோக்கியத்தனத்தைப் பாதியாகக் குறைத்துவிடும் என்பது அவன் அகராதியின் பாலபாடம்.

""ஓ... பக்தர்களை வரவேற்பது கடவுளையே வரவேற்கிற மாதிரி.." என்று அழகாகச் சிரித்தாள் சுகன்யா. "யூ ஆர் கார்டியலி வெல்கம்" என்று அவள் சொன்னது ஐஸ்கிரீமை சுவைப்பது போலிருந்தது தங்கப்பனுக்கு.

அவள் அவனைத் தாண்டிச் செல்கையில் மீண்டும் அந்தச் செருப்பணியாத ரோஸ் நிறப் பாதங்களைப் பார்த்தான். இவ்வளவு நேர்த்தியாக டிரஸ் பண்ணிக் கொள்ளும் இவள் ஏன் காலுக்கு எப்பொழுதும் செருப்பணிவதில்லை?.. நன்றாக இப்பொழுது நினைவூட்டிப் பார்த்தான். ஊஹூம்.. ஒரு நாள் கூட சுகன்யாவை அவன் செருப்போடு பார்த்ததில்லை என்பது நிச்சயமாயிற்று.

தீர்மானம் உருப்பெற்று மாலை ஆறுக்கு ஆழ்வார்ப்பேட்டை பேட்டா ஷூ மார்ட்டில் இருந்தான் தங்கப்பன். சுகன்யாவின் மலர்ப்பாதங்களை முத்தமிட காஸ்ட்லியாகவே செருப்பு வாங்கி அட்டைப் பெட்டியில் 'பாக்' செய்வித்து கைப் பையிலிட்டுச் சுமந்தான்.

"வாங்க, ஸாரே... வாங்க..." என்று வாய் நிறையப் புன்னகையுடன் சுகன்யா வரவேற்றது முக்கால் வாசி காரியம் முடிந்த மாதிரி இருந்தது தங்கப்பனுக்கு. உள்ளே நுழைந்தான்.

லேசாகப் பேச்சுக் கொடுத்து பையிலிருந்து செருப்பு அட்டைப் பெட்டியை எடுக்கலாமென்று தங்கப்பன் எண்ணியிருந்தான். அந்தத் தாமரைப்பூ பாதம் பிடித்து செருப்பை மாட்டி விடுவது அவன் உத்தேசம். அதுவே ஆரம்பம்.

"எத்தனை மணிக்கு காலட்சேபம், ஸாரே?" என்றாள்.

"ஏழு, ஏழைரைக்கு ஆரம்பம்," என்றவன், "உங்க ஹஸ்பெண்ட் வீட்டில் இல்லையா?" என்று கேட்டான்.

"ஓ" என்று அழகாக உதடுகளைக் குவித்தவள், "இருக்காரே! மாடியில்..." என்று மாடிப்பக்கம் கை காட்டினாள். "வாங்க, மேலே போய்ப் பார்க்கலாம்" என்று உள் பக்கமிருந்த மாடிப்படியில் அவன் பின்னால் வருவதற்கு வழிகாட்டுகிற மாதிரி ஏறினாள். தங்கப்பன் கைப்பையை ஊஞ்சலிலேயே வைத்து விட்டு அவளைத் தொடர்ந்தான்.

மாடி ஹால் நீண்டு காற்றோட்டமாக இருந்தது. ஹால் கோடியில் ஜன்னல் பக்கமிருந்த, ஸ்டாண்ட் பூட்டிய கேன்வாஸ் துணியில் யாரோ ஓவியம் வரைந்து கொண்டிருந்தார்கள். பக்கத்தில் நெருங்க, நெருங்க அவருக்கு ஒற்றைக் கால் இல்லை, கட்டை ஊன்றி நின்று ஓவியம் வரைந்து கொண்டிருக்கிறார் என்று தங்கப்பனுக்குத் தெரிந்தது.

மனித அரவம் கேட்டு, சிந்தனை கலைந்து திரும்பியவன் போல அந்த மனிதன் இவர்கள் பக்கம் திரும்பினான்.

"மீட் மை ஹஸ்பெண்ட் மோகன்!" என்று தன் கணவனை தங்கப்பனுக்கு அறிமுகப்படுத்தியவள், "இவர் தங்கப்பன்! புதுசாக இந்தக் கிளைக்கு மாற்றலாகி வந்தவளுக்கு கண்ணைக் கட்டிக் காட்டில் விட்ட மாதிரி இருந்தது. இவர் தான் மிகவும் உதவிகரமாக இருந்தார். சகோதரர் போல உரிமையுடன் பழகுவார்," என்று சுகன்யா கணவனிடம் சொன்ன போது, கூனிக் குறுகிப் போனான் தங்கப்பன்.

"ஹலோ.. உட்காருங்க..." என்று அங்கு கிடந்த சோபா பக்கம் கை நீட்டி விட்டு, ஊன்று கோல் சப்திக்க தாண்டி வந்த மோகன், உயரமான ஒரு சேரில் கட்டைகளை அருகில் பற்றியபடி சாய்ந்து உட்கார்ந்தான். இப்பொழுது தான் தங்கப்பனால் அவனது ஒரு பக்கக் காலை நன்கு பார்க்க முடிந்தது. அது தொடைக்குக் கீழே நறுக்கப்பட்டு ஒன்றுமில்லாமல் சூம்பிக் கிடந்தது. ஆனால் மோகன் அதைப் பற்றிக் கவலைப்பட்டதாகவோ, அசெளகரியப்பட்டதாகவோ தெரியவில்லை. பேச்சில் உற்சாகம் கொப்பளித்தது.                                                                            

ஓவியம் பற்றித் தனக்கு ஒன்றும் தெரியாது என்றாலும், கேன்வாஸில் வரையப்பட்டிருந்த அவனது ஓவியத்தைப் பார்த்து மிகவும் சந்தோஷப்படுவதாகச் சொன்ன தங்கப்பனுக்கு, இவன் வரையும் ஓவியப் பாணிகளைப் பற்றி 'டீடெய்ல்லா'கச் சொன்னான் மோகன். உலக ஓவிய பாணிகளும், அவை பற்றிய சித்தாந்தங்களும் அவன் பேச்சில் ஆற்றோட்டமாக பொங்கி வந்தது. பூபன் கக்கர்,  ரமேஷ்வர் ப்ரூடா, ஸதீஷ் குஜரால், ஓரொஸ்கோ என்று நிறைய பேர்கள் அவன் பேசும்போது குறுக்கே குறுக்கே வந்தார்கள். அத்தனையும் ஓவியர்களின் பெயர்கள் என்று ஒருவாறு யூகித்தான் தங்கப்பன். மோகன் சொன்னதில் தங்கப்பனுக்கு ஆதிமூலம் என்கிற பெயரை மட்டும் எங்கோ கேட்ட மாதிரி இருந்தது. நீலம், கருஞ்சிவப்பு, கரும் பழுப்பு என்பவை சாதாரணமாக நாம் வழக்கில் எண்ணிக் கொண்டிருக்கும் வெறும் நிறங்கள் மட்டுமல்ல; கான்வாஸ் ஓவியங்களில் அவை கொள்ளும் தீட்டல்களின் பங்கு பற்றி மோகன் சொல்லிக் கொண்டு வரும் பொழுது 'அம்மாடி, எம்மாம் பெரிய சப்ஜெக்ட் இது' என்கிற திகைப்பு தான் தங்கப்பனுக்கு ஏற்பட்டது. கட்டக் கடைசியாக அவனுக்கு இருக்கும் வித்வத்துவத்தில் தான் தம்மாத்துண்டு தூசி என்று தங்கப்பன் கூனிக் குறுகிப் போனாள்.

நேரம் ஓடிப்போனதே தெரியவில்லை. மணி ஏழரை. "சாரே, காலட்சேபத்திற்குப் போக வேண்டாம்?" என்று சுகன்யா ஞாபகப்படுத்தவே எழுந்து கொண்டான் தங்கப்பன். "அடிக்கடி வந்து போங்கள்.. உண்மையிலேயே நீங்கள் ஒரு சுவாரஸ்யமான நபர்.." என்று விடை கொடுத்தான் மோகன்.

"போன வருஷம், பத்மனாப சுவாமி கோயிலுக்குப் பக்கத்தில் ஸ்கூட்டர் ஆக்ஸிடெண்ட்... காலைத் துண்டிக்காவிட்டால், பிழைப்பது கஷ்டம் என்றதும் ஒற்றைக் காலை எடுத்து விட்டோம். அவர் அப்படி இருக்கையில் எனக்கெப்படி சாரே, செருப்பு அணிய மனசு வரும்? அன்னிக்கு விட்டது" என்று மாடி ஹாலைக் கடக்கையில் சுகன்யா சொன்னது பளாரென்று யாரோ கன்னத்தில் அறைந்த மாதிரி தங்கப்பனுக்கு இருந்தது. 'புருஷன் செருப்பு போட முடியாது போய்விட்டபடியால் தானும் செருப்பு போடாமலிருப்பது...' அவளைக் கையெடுத்துக் குப்பிட்டுத் தொழ வேண்டும் போலிருந்தது அவனுக்கு. 'பெண்டாட்டி கிழிசல் புடவையைத் தைத்து அணியும் போது, செண்ட் போட்டு கோயில் காளை போல் ஊர் மேயறயாடா, பாவி!' என்று உள் நெஞ்சு ஓலமிட்டது.

மாடிப்படியிறங்கும் போது தங்கப்பன் புது மனிதன்.  துணி துவைக்கிற கல்லில் நாலு அடி போட்டு கசக்கி அலசிய துணி போல அழுக்குகள் நீங்கி  மனம் வெளுத்திருந்தது.   இந்த ஆதர்ச தம்பதிகளின் நட்பு கிடைக்கத் தான் புண்ணியம் பண்ணியிருக்க வேண்டுமென தங்கப்பன் நினைத்துக் கொண்டான்.

வீட்டுக்கு வந்து கதவைத் தட்டிய பொழுது கெளசல்யா ஓடி வந்து கதவு திறந்தாள். உள்ளே நுழைந்து, வலது கை திருப்பி கதவு சாத்தியவன் இடைக்கழியிலேயே கெளசல்யாவை இறுக அணைத்துக் கொண்டான்.

"என்னங்க.." என்று மூச்சு திணறியவளை குண்டு கட்டாகத் தூக்கி வந்து, சோபாவில் கிடத்தி, அட்டைப் பெட்டி திறந்து, பரபரவென்று காகிதப் பார்ஸலைப் பிரித்து, புத்தம் புது வண்ணச் செருப்புகளை அவள் கால்களில் ஆசையோடு அணிவித்தான்.                                             

"நா என்ன வேலைக்கா போறேன்? எனக்கு எதுக்குங்க புது செருப்பு?.. இதுக்குப் பதில் சேலை வாங்கியாந்து இருக்கலாமில்லே?" என்றவளுக்கு
"நாளை சேலை...  இன்று செருப்பு." என்று ஆசையோடு அவளை அணைத்துக் கொண்டான் தங்கப்பன்.


படங்கள் உதவிய நண்பர்களுக்கு நன்றி.


நண்பர்கள் அனைவருக்கும் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!...


Monday, November 21, 2016

விகடனில் புதிய வரலாற்றுத் தொடர்


 காவல்கோட்டம்’ நாவலுக்காக சாகித்ய அகாதமி பரிசு  பெற்ற எழுத்தாளர்  சு. வெங்கடேசனின் புதிய வரலாற்றுத் தொடர்கதை  சமீபத்தில்  ஆனந்த விகடன்  இதழில் துவங்கியுள்ளது.  

‘வீரயுக நாயகன் வேள் பாரி’ என்றுத் தலைப்பிட்டிருப்பதால்  பரம்பு மலையை ஆண்ட  கடையெழு வள்ளல்களில் புகழ்பெற்றவரான பாரி வள்ளலை  நாயகனாகக் கொண்ட நாவல் என்று தெரிகிறது.


‘பாணர்களின் நாயகன்’ என்றுத் தலைப்பிட்ட  அத்தியாயத்தின் தொடக்க வரியே இப்படி ஆரம்பிக்கிறது


இது சுமார் முன்னூறு ஆண்டுக்காலக் கதை.  

அப்போது வடவேங்கடம், தென் குமரி என்று தமிழ் நிலத்திற்கு எல்லையோ, பெயரோ கூட உருவாகிவிடவில்லை.  


அடர்ந்த வனத்தில், ஆற்றுப்படுகையில், வண்டல் பூமியில், வற்றிய பாலையில், கடலோரத்தில், மலைமுகட்டில் என வெவ்வேறு வகையான நிலங்கள் தோறும் இனக்குழுக்காளாக சேர்ந்து வாழ்ந்த மக்கள் தங்கள் குல முறைப்படியான வாழ்வை நடத்திக் கொண்டிருந்தனர்.  அரசோ, அரசனோ உருவாகிவிடவில்லை.  குலத்தலைவன் மட்டுமே இருந்தான்.  அவனே குலங்களை வழி நடத்திக் கொண்டிருந்தான்.


குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐவகை நிலங்களிலும் நூற்றுக்கு மேற்பட்ட மனிதக் கூட்டங்கள் தங்களின் தனித்த அடையாளங்களோடு செழித்திருந்தன.   இயற்கையோடு இயந்த வாழ்வு. தேவை மட்டுமே ஆசையாகவும் கனவாகவும் இருந்தது...  வேட்டையாடிய உணவை நெருப்பில் சுட்டு  தின்று கொண்டிருந்த போது, குகையில் இருந்த பெண்கள் ஓய்வு நேரத்தில் நீரைக் கொதிக்க வைத்து இறைச்சியை அதில் வேக வைத்தனர்...


----என்று ஆதிமனித குகை வாழ்க்கை  பழைய கற்காலத்திலிருந்து ஆரம்பித்து,


குலத்தலைவர்களும் சிற்றரசர்களும் பாணர் சமூகத்தை அரவணைத்து அள்ளித் தந்தனர். அவர்களின் ஆற்றலையும் வள்ளல் தன்மையையும் பாணர்கள் விடாமல் பாடினர்.


இப்போது வள்ளல்களில் தலைநாயகனாக பறம்பு நாட்டை ஆளும் வேள்பாரி இருந்தான்.


---- என்று பாரிவள்ளல் 
 காலத்திற்கு  ஆசிரியர் வருகிறார்.

பல  தடவைகள்  திருப்பித் திருப்பி வாசித்தும் ஆசிரியர் குறிப்பிடும் அந்த முன்னூறு ஆண்டுக் கதைக் காலம்  எதுவென்று புரிந்து கொள்ள முடியவில்லை.

நம் பதிவர் குடும்பத்தில் வரலாற்று நூல்களை வாசிப்போர் எக்கச்சக்கம்.


தெரிந்தவர்கள்,  புரிந்தவர்கள் பின்னூட்டமிட்டு என் வாசிப்பு ரசனைக்கு உதவலாம்.



து  லா.ச.ராவின்  நூற்றாண்டு.

லா.ச.ரா.  அம்பாள் உபாசகர்.   அம்பாளில் தாயார் தரிசனம்.   அவரைப் பொறுத்தமட்டில் அத்தனையுமே சிலிர்ப்பூட்டும் அனுபவங்கள்.  சகுந்தலை,  அபிதா, தரிசினி,  ஜனனி, தயா, அஞ்சலி,  கங்கா என்று வித்விதமான நாமங்களில் வர்ணக் கோலங்கள்.   

அடிப்படையில் நான் செளந்தரிய உபாசகன் என்று லா.ச.ரா.வே சொல்லியிருக்கிறார்.  அவர் எழுத்தின் ஆழ்ந்த வாசிப்பும் ஏதோ சக்தி பூஜையை ஆரம்பித்து முடித்தது போல இருக்கும்.  அவர் கதைகளின் வாசிப்பின் ஊடே உள்முக தரிசனமாய்  மீண்டும் மீண்டும் ஒருவித லய சுத்தத்துடன் புரண்டு வரும் வார்த்தைகளுக்கும்  மந்திர உச்சாடங்களுக்கும் வேறுபாடு காண முடியாத நெருக்கத்தில் இருக்கும்.  

ல.ச.ரா.விற்கு  சடங்களிலோ, சம்பிரதாயங்களிலோ துளியும் 
 நம்பிக்கை இருந்ததில்லை என்று அவர் துணைவியாரே சொன்னதாக சமீபத்தில் ஒரு பத்திரிகைப் பேட்டியில்  படித்தது ரொம்ப நாட்களாக உறுத்தலாக இருந்தது.  ஏனென்றால்  சடங்குகளையும் சம்பிரதாயங்களையும்  சுற்றிச் சுற்றி நெய்யப்பட்டதாகவே லா.ச.ரா.வின் எழுத்து இருந்தது..  குடும்ப வட்டத்தை விட்டு வெளிவராத எழுத்தில் பூஜைகள்,  குத்து விளக்கு, தீபச்சுடர், அதன் குதியாட்டம்,  மந்திர உச்சாடனங்கள் போன்ற வார்த்தைத் தெரிப்புகள் என்று பக்கத்திற்குப் பக்கம் பின்னலிடப்பட்டிருந்தன.   சடங்குகளில் அவருக்குத் துளியும்  நம்பிக்கை இல்லை என்பது நினைத்தே பார்க்க முடியாத ஒன்று.   அப்படி இருக்குமேயானால் தனக்கு கொஞ்சமும் நம்பிக்கையில்லாத ஒன்றை வாழ்நாள் முழுதும் கதைக்காக கதை பண்ணினவராய் ஆகிப்போவார். .   லா.ச.ராவின் எழுத்துக்கள் அவாது உணர்வில் புடம்போடப்பட்டு விதிர்விதிர்த்து வார்த்தைகளானவை.   அதனால் அப்படி இருப்பதற்கு வாய்ப்பே இல்லை.

ஒரு பேட்டி என்பதினால்  பேட்டி எடுத்தவரின் புரிதலுக்கேற்ப வார்த்தைகள் மாறுபடுவதற்கு

வழியிருக்கிறது.  நான் அப்படிச் சொல்லவே இல்லை என்று பேட்டி வெளிவந்த  பிறகு  பேட்டி கொடுத்தவர் சொன்ன உதாரணங்களையும் நாம் நிரம்பவே பார்த்து விட்டோம்.  

'கல்கி'  நவம்பர் 6  இதழில்  லா.ச.ரா.வின்  புதல்வர் சப்தரிஷி  தன் தந்தையைப் பற்றி எழுதியிருக்கிறார்.  

வாலி  தலைமையில் ல.ச.ரா.வுக்கு ஒரு பாராட்டுக்கூட்டம்  நடந்ததாம்.   அப்போ ஒருத்தர் லா.ச.ரா.வைப் பார்த்து கேட்டாராம்.

"நீங்கள் ஏன் எழுதுகிறீர்கள்?'

"என்னால் எழுதாம இருக்க முடியலே.   அதனாலே எழுதறேன்.  நான்  மெதுவாக எழுதுபவன் தான்.  ஆனால் எழுதிக் கொண்டேயிருப்பவன்.  தெனம் சாதகம் பண்ணிண்டே இருக்கணும்.."

ஆமாம்.  லா.ச.ரா.  மிகவும் மென்மையானவர் தான்.  இப்படியெல்லாம் அச்சுப்பிச்சென்று கேள்வி கேட்பவர்கள் நாணும்படி  பதில் சொல்ல லாயக்கானவர் ஜெயகாந்தன் தான்.  

 'நீங்கள் ஏன் எழுதுகிறீர்கள்?' என்று ஜெயகாந்தனிடம் யாராவது கேட்டிருந்தால் சுரீரென்று  பதில்   வந்திருக்கும் என்று அந்த சந்தர்ப்பத்திற்கேற்ப  நினைத்துக் கொண்டே மேலே படித்தபோது எழுதுவது பற்றி லா.ச.ராவே ஜேகேயிடம் கேட்ட ஒரு சம்பவம் பற்றி சப்தரிஷி சொல்கிறார்.

கலைஞன் பதிப்பகம்  லா.ச.ரா., ஜெயகாந்தன், அசோகமித்திரன், சுந்தர ராமசாமி, கி.ரா.வுக்கு ரீடர் வெளியிட்ட விழாவில்  ஜெயகாந்தனிடம்  ல..ச.ரா.  கேட்டாராம். "என்னப்பா, இப்பல்லாம் உன் எழுத்தைக்  காண முடியறதில்லே?"

"எல்லாம் எழுதி முடிச்சாச்சு  லா.ச.ரா." என்றாராம் ஜே.கே.                

"என்ன நீ இப்படிச் சொல்றே? சரஸ்வதியே இன்னும் புஸ்தகத்தைக் கீழே போடாமே வெச்சிருக்காளேப்பா.." 

ஜெயகாந்தன் வாஞ்சையுடன் லா.ச.ரா.வின் கைகள் மேல் கைவைத்து, "வாஸ்தவம் தான்" என்றாராம்.

எழுத்தாளர்கள், கவிஞர்கள்  என்ற படைப்பிலக்கிய பிர்மாக்களிடம்  ப்ரேமை கொண்டவர்கள் யார் என்று கேட்டால்,  சட்டென்று அவர்களுக்கென்று அமைந்து போகும் வாசகர்கள் தான் என்று பதில் சொல்லி விடலாம்.

பத்திரிகைகளுக்கு  அந்தப் படைப்பிலக்கிய   ஆளூமைகளுடன்  அவர்கள் எழுத்து அந்தந்த பத்திரிகைகளில்  வெளிவரும்  காலத்தில் ஏற்படும் வியாபாரத்  தொடர்பாக இருக்கலாம். அதைத் தாண்டி தம் எழுத்தால் பத்திரிகையின்  சர்க்குலேஷனை உயர்த்திய,  அந்தந்த பத்திரிகைகளுக்கென்று அமைந்து  போன எழுத்தாளர்களை பத்திரிகைகளும் அவ்வளவாக நினைவில் வைத்துக்  கொண்டிருப்பதில்லை.   தம் பத்திரிகையோடு நெருக்கமாக  சம்பந்தப்பட்ட அமரான எழுத்தாளர்களின் நினைவு தினங்களில் அவர் புகைப்படம் போட்டு அவர் எழுத்தாற்றல் பற்றிக் குறிப்பிட்டு நினைவு கொள்ளலாம்.   இப்படிச் செய்வது எழுத்துத் தொடர்புள்ள  இந்தத் தலைமுறைக்கு அந்தத் தலைமுறையுடான ஒரு உறவுத் தொடர்பாகவும் அமையும்.   ஆனந்தவிகடன் என்றால் தேவனும்,  குமுதம் என்றால் ரா.கி.ரங்கராஜனும் நினைவுக்கு வருவது வாசகர்களுக்குத் தான் போலும்.  

பெரும்பாலான படைப்பாளிகளின் குடும்பத்தினருக்கு  அப்பா, தாத்தா, கணவன் என்று அந்தப் படைப்பாளியிடம் கொண்ட குடும்ப  உறவைத் தான் முக்கியமாக உணர்கிறார்கள். சில எழுத்தாள குடும்பங்களில் அலுவலகத்திற்குப் போய் சம்பாதிப்பது போல  எழுதுவதை ஒரு உத்தியோகமாக எண்ணுகிறார்கள்.  சம்பாதிப்பதற்கான ஒரு வழி இது என்று சில எழுத்தாளர்களே தங்கள் எழுத்தைப் பற்றி  நினைக்கும் பொழுது இதைப் பற்றிச் சொல்வதற்கு ஒன்றுமில்லை.     பிரபல சில எழுத்தாளர்களின் குடும்பத்தினர் அவர் எழுதிய எதையையும் படித்ததில்லை என்பது ஒன்றும் பிரம்ம ரகசியமில்லை.  சிலர் இதை வெளிப்படையாகவே சொல்கிறார்கள்.   

இதையெல்லாம் பார்க்கும்  அவர்களின் அத்யந்த  வாசகர்களுக்கு மனம்  வெறுத்துப் போகலாம்.  புத்தகம்,  வாசிப்பு,  அவை பற்றிய விமர்கசனங்கள்,  எண்ணங்கள் என்று தாம் தான்  புத்தி பேதலித்துத் திரிகிறோமொ என்ற எண்ணம் கூட வரலாம்.

ஆனால் அவையெல்லாம் ஷணநேர மயக்கங்கள்.  வாசிப்பை நேசிக்கும் எவர்க்கும் அந்த வாசிப்புப் பழக்கத்திலிருந்து விலகுவது அவ்வலவு லேசான காரியமில்லை.

போதைப் பழக்கங்களிலிருந்து   விடுபடுதல் அவ்வளவு சுலபமான காரியமில்லை என்று சொல்வார்கள்.   வாசிப்பை நேசிப்பதும் அது போல ஒன்று தான்.   வாசிப்பு ஆரோக்கியமான ஒரு போதைப் பழக்கம் என்று கூட செல்லமாக அதன் மேல் மேலான காதல் கொள்ளலாம்.



விகடனுக்கும்  கல்கிக்கும்  நன்றி. 
புகைப்படங்கள் நல்கிய நண்பர்களுக்கும் நன்றி.


Sunday, November 13, 2016

இளைய ராஜாவும் அசோகமித்திரனும்......


களிர் இதழ்களில்  'அவள் விகடனு'க்கு என்று எப்பொழுதுமே ஒரு தனி இடம் உண்டு.  அவள் விகடன் 15-11-16  இதழ்   அந்த தனித்துவத்தை தெளிவாகவே சொன்னது.

பெண்கள் பொதுவாக மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் பெயர் பதிவு செய்யும் பொழுது கணவர் பெயர் சேர்த்தோ,  அல்லது அவரது  பெயரின் முதல் எழுத்தை இன்ஷியலாகக் கொடுக்கப் பழகியிருக்கிறார்கள்.ஆனால் அவர்கள்   கல்வி மற்றும்  பிறப்புச் சான்றிதழ்களிலோ  தந்தையின் பெயரே இன்ஷியலாக இருக்கும் பொழுது அலுவல்  ரீதியான  குழப்பங்கள் ஏற்படுகின்றன' ஆரம்பித்து உருப்படியான ஒரு விவாதத்தை கட்டுரை முன் வைக்கிறது.                                                                                                                

வழக்கறிஞர் அருண்மொழி அவர்களும்  பெண்ணியச் செயற்பாட்டாளர் ஓவியா அவர்களும்  தங்கள் கருத்துக்களைச் சொல்லி  இந்த விவாதத்தைச் செழுமைபடுத்தியிருக்கிறார்கள்.   வாசிக்க வேண்டிய  கட்டுரை.

சில ஆண்களும் சரி, பெண்களும் சரி தங்களின்  பிறந்த ஊரையும் (பெரும்பாலும் சொந்த ஊர்)   இன்ஷியலின் முதல் எழுத்தாகச் சேர்த்துக் கொள்ளும் வழக்கமும் நெடுங்காலமாக  உண்டு.  இது ஊர்ப்பாச விஷயம்.  பெற்றெடுத்தத் தந்தை தாய்க்கு இணையாக  பிறந்த ஊரையும் மறக்காமல் தங்கள் பெயருடன் சேர்த்துக்  கொண்டிருக்கிறார்கள்.  அதைப் பற்றி இந்த விவாதத்தில் கலந்து கொண்ட இருவருமே குறிப்பாகக் கூட எதுவும் சொல்லவில்லை என்பது ஒரு உபரித் தகவல்.

தே   'அவள் விக்டன்'  இதழில் 'மை டியர் சேமிப்புப்  புலிகளே'  என்று பா.விஜயலெஷ்மி  எழுதும்  தொடர்.   பெண்கள் மத்தியில் சேமிப்புப் பழகத்தை ஊக்குவிக்கும் அற்புதமான தொடர்.

'முதலில் வீட்டுக்கான மாத பட்ஜெட் போடுவதை பெண்கள் கற்றுக் கொள்ள வேண்டியது அவசியம்.  மளிகை சாமான் தொடங்கி,   மருந்துப் பொருட்கள் வரை விலை எக்கச்சக்கமாம உயர்ந்திருக்கும் பொருளாதாரச் சிக்கல்கள் நிறைந்த காலகட்டம் இது'  என்று ஆரம்பித்து  'எதிர்காலத்தில் வாங்கும் சம்பளத்தை விட செலவுகள் அதிகரிக்கப்போகும் அபாயகரமான வாழ்க்கை முறையில் நாம் வாழ்ந்து  கொண்டிருக்கிறோம்' என்று எச்சரிக்கிறார்.  இனி அன்றாட நிதி நிர்வாகம் பெண்களுக்குத் தெரிந்திருக்க வேண்டிய அவசியத்தையும் அத்தியாவசியத்தையும் கட்டுரையில் வலியுறுத்துகிறார்.

'ஜன்னல்'  பத்திரிகையின் தீபாவளி இதழ் பிரமாதம்.

பத்தோடு பதினொன்றாக 'ஜன்னல்' பத்திரிகையையும் ஒரு சினிமாப் பத்திரிகையாக ஆக்கிவிடாமல் தடுத்தாண்டாண்டு கொண்டிருக்கும் சில சங்கதிகளைச் சொல்கிறேன்.  வரிசையாக 'ஜன்னல்' புராணம் தான்.

ராஜ்சிவா எழுதும்  'அவர்கள்' என்னும் அறிவியல் தொடர் பற்றி இதற்கு முன்னால் இதே பகுதியில் குறிப்பிட்ட  ஞாபகம்.   அந்தத் தொடர் 21-வது அத்தியாயமாக இந்த இதழிலும் தொடர்கிறது.

ராஜ்சிவா வித்தியாசமாக எழுதுகிறார்.  அறிவியல் பாணி சமாச்சாரங்களை கடந்த அரை  நூற்றாண்டுக்கும் மேலாக சுஜாதா  சொல்லேர் உழவனாய் உழுது தள்ளியிருக்கிறார்.   இந்த விஷயத்தில் அவர் பாணியை தவிர்த்து எழுதுவது என்பதே பெரிய விஷயம்.   ராஜ்சிவா அந்தக் காரியத்தை திறம்பட செய்கிறார்  என்பதற்காக சொல்ல வந்தேன்.

இதுவரை அறிவியல் கண்டுபிடித்தகற்றில் அதி வேகமாகச் செல்வது ஒளி தானாம்.  ஒரு செக்கனுக்கு மூன்று லட்சம் கிமீ .  கற்பனைக்கே கட்டுப்படாத வேகம்.   வேகம் சரி,  இந்த ஒளி நகர்தலும் காலத்தின் கட்டுப்பாட்டுக்குள் தானே?..  ஒரு  மீட்டர் கடக்க மூன்று நானோ செக்கன் நேரமாம்.

தூரத்தில்  ஒரு  மீட்டர் தூரத்தில் ஒரு பொருள் இருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள்.  அந்தப்  பொருளிலிருந்து ஒளி உங்களை வந்து அடையும் ஆகும் நேரம்  இந்த மூன்று நானோ செக்கனாம்.  ஒரு நானோ செக்கன் என்பது ஒரு செக்கனின் பில்லியன் மடங்கில் ஒரு பகுதியாம்.

ஏற்கனவே  நான் இந்த கணக்கு சமாச்சாரத்தில்  கொஞ்சம்  வீக். இருந்தாலும்
என்ன சொல்கிறார் என்பது தெளிவாகப் புரிய நானும் சில கணக்குக்களைப் போட்டுப் பார்த்தேன்.  இந்த மாதிரியான பயிற்சிகள் தான்  ராஜ்சிவாவின் இந்தத் தொடரை ஆர்வத்துடன்  படிக்கத் தூண்டுகோலாக இருக்கிறது என்று அடித்துச் சொல்வேன்.
.
ழுத்தாளர் சாரு நிவேதிதா என்னைக்குமே  எதைச்சொன்னாலும்     வெட்டு ஒன்று துண்டு இரண்டு தான்.   வழவழவுக்கு இடமே இல்லை;  தெளிவா இருக்கும்.

பாப் டிலனுக்கு இலக்கிய நோபல் பரிசு கொடுத்திருக்கக் கூடாது, உவர் ஆனர் என்று  தன் தரப்பு  நியாயத்தைச் சொல்லியிருக்கிறார்.

பாப் டிலர் நோபல் பரிசுக்கு உரியார் தான்.  அமெருக்க கலாச்சார உருவாக்கத்தில் அவர் பணி மகத்தானது.   அவர் ஒரு நல்ல பாடகர்; பாடலாசிரியர் மட்டுமே. அதனால்  இலக்கியத்திற்கும்  அவருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை'  என்பது சாருவின் வாதம்.  பாடல் இலகியமாகாதா என்றால் ஆகாது என்று ஆணித்தரமாக மறுக்கிறார்.

ஒரு காலத்தில்'வைரமுத்து பாடல்களுக்கு நோபல் பரிசு கிடைக்கலாம்' என்று பகடியாக எழுதியிருந்தேன்.  இப்போது பார்த்தால் அது நடந்து விடும் போலிருக்கிறது' என்று நம்மை முறுவலிக்க வைக்கிறார்.

"ஒரு உதாரணம் சொல்கிறேன்.." என்கிறார் சாரு. "அசோகமித்திரனும் இளையராஜாவும் எதிர் எதிர் வீடு.  இளையராஜா தமிழரின் இசைக் கடவுள்; அசோகமித்திரனை  எத்தனை பேருக்குத்  தெரியும்?  சொல்லுங்கள்.  இந்த நிலையில்,  இலக்கியத்திற்காக வழங்கப்படும் சாகித்ய அகாதமி விருதை, இளையராஜா எழுதிய சினிமா பாடல்களுக்காகத் தருகிறோம் என்று சொன்னால் நாம் என்ன செய்ய முடியும்?"  என்கிறார்.

"பாடல் இலக்கியமாகாதா?.,. பாரதியின் பாடல்கள் இலக்கியமில்லையா?-- என்ற கேள்வி வரும் பொழுது, "தர்க்க ரீதியாக இந்தக் கேள்வி சரிதான்.." என்று ஒப்புக்கொள்கிறார் சாரு.  "ஆனால் நான் சொல்வது அறம் சம்பந்தப்பட்டது.  சினிமா பாடல்,  மேடைப் பாடல், சினிமா வசனம் என்று எல்லாவற்றையும் இலக்கியத்தில் அடக்கினால், அதற்குப் பிறகு இலக்கியத்தை சீந்த யாருமே இருக்க மாட்டார்கள்.." என்று  அவர் சொல்லும் பொழுது அவர் பக்க நியாயம் புரிகிற மாதிரியும் இருக்கிறது.

டுத்து ஜெமோ.  (இப்போவெல்லாம்  ஜெமோவை பற்றி நீங்கள் ஏதாவது எழுதாமல் இருப்பதில்லை என்ற முணுமுணுப்பைத் தாண்டி....)

ஜன்னல் இதழில் 'தெய்வங்கள்.. தேவர்கள்.. பேய்கள்..' என்ற வினோத தலைப்பில் ஜெயமோகன்  ஒரு தொடர் எழுதுகிறார்.

பெரும்பாலும் நாட்டார் கதைகள்.  இந்த இதழில் குலசேகரப் பெருமாள் பற்றியது.  குலசேகரப் பெருமாள் யார் என்றால்   சுருக்கமாகவே சொல்லி விடுகிறேனே!  சேரன் செங்குட்டுவன் வழித்தோன்றல்களாக வந்தவர்கள் சேரமான் பெருமாள் அரசர்கள்.  இவர்களில் கடைசிப் பெருமாள், குலசேகரப் பெருமாள்.  வடக்கே கொடுங்கல்லூரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தவராம் இவர்.  கொடுங்கல்லூரை போர்ச்சுக்கீசியர் தாக்கிய பொழுது, அப்படியே மொத்த தன் கருவூலச் செல்வங்களையும் காப்பாற்றிக் கொண்டு தென் சேர நாட்டிற்கு வந்து விட்டாரம்.   இதான் தொடரும் கதையின் அல்லது வரலாற்று நிகழ்வின் ஆதாரப் புள்ளி.

அப்புறம்  திருவனந்தபுரம் கோயிலின் ரகசிய அறை,  இரணியல் அரண்மனையின்  இடிபாடுகள்,  பள்ளியறை யக் ஷி,  மீனாட்சி பிள்ளை அவள் மகள் காமாட்சி பிள்ளை,  கல்குளம் உடையார்,  அச்சிக்குறும்பு, தினம் தினம் பள்ளியறையில் காணப்படும் பொன் நாணயம் என்று நிறைய சுவாரஸ்ய விஷயங்கள் உண்டு.

ண்ணதாசன் சிறுகதை ஒன்று இந்த ஜன்னல் இதழில்.   'ஒரு கனவு,
சொப்பனம்..'  என்பது கதையின் பெயர்.  வழக்கமான வண்ணதாசன் சிறுக்தைகள் எப்படி இருக்குமோ அதற்கு பங்கம் ஏற்பட்டு விடாமல் இந்தச் சிறுகதையும் இருப்பதே பங்கமாக் தெரிகிறது.   மனசில் பூக்கும் எண்ணங்களை  வெளிப்படுத்தலில் கூட   அப்பப்போ மாற்றம் வேண்டாமா,  கல்யாண்ஜி, சார்?..   வண்ணதாசன் என்றால் இப்படித் தான் எழுதுவார் என்று பழகிப்போன வாசிப்பாக ஆகிவிடக் கூடாதல்லவா?..    இதெல்லாம் நம் ஆதங்கம் தானே தவிர,  கதை நிகழ்வுகளை நம் கண் முன்னால் காட்சிப்படுத்தும் அவர் திறமை என்றைக்குமே 'ஓகோ' ரகம் தான்.    இந்தக் கதை ருக்கு அக்கா மனசில்  நிற்கிறார்.

ருத்துவர் கண்ணன் அவர்களின்  'சுரக்கும் சூட்சுமங்கள்'  பற்றிச் சொல்லாவிட்டால் பாவம்.    தமிழில் இதுவரை இந்த  தலைப்பில் எந்த மருத்துவக்கட்டுரையும் எந்தப் பத்திரிகையிலும் வெளிவந்ததாக நினைவில்லை.   இந்தத் தொடரைப் பிரசுரிப்பதின் மூலம் 'ஜன்னல்'  பெரும் பெருமையைத் தேடிக் கொண்டிருக்கிறது.

அட்ரீனல் சுரப்பியில் ஏற்படும் பாதிப்புகள் பற்றி  சென்ற இதழில் மருத்துவர் ஐயா எழுதியிருந்தார்.  இந்த  இதழில்  அட்ரீனலின் ஆதாரமான அக அட்ரீனல் பற்றி விவரமாக எழுதியிருக்கிறார்.


ட்டக் கடைசியாக ஒரு  குட்டிக் கவிதை:    நானிலம் போற்றும்  நீதி பற்றி.

காடு இருந்த இடத்தில் 
அமைந்திருக்கும் முல்லை நகரில்
கழனி இருந்த இடத்தில்
வீடு கட்டிக் கொண்டவர்கள்
கால்வாய் இருந்த இடத்தில்
சாலை அமைப்பதை எதிர்த்து
வழக்குத் தொடுத்திருக்கிறார்கள்
குளம் இருந்த இடத்தில்
அமைந்திருக்கும்  உயர் மன்றத்தில்
நீதி இன்னும் நிலுவையில் இருக்கிறது!

---   சேயோன்  யாழ்வேந்தன்                           நன்றி: ஆனந்த விகடன்
                                                                                                   (இதழ்:  2-11-16)



படங்கள் உதவிய நண்பர்களுக்கு  நன்றி.






Saturday, October 29, 2016

சில எழுத்தாளர்களும் சில பத்திரிகைகளும்

 எழுத்துலம்  சார்ந்த ஒரு சுவாரஸ்யமானத்  தொடர்:

பகுதி: 2

ந்தப் பகுதியை எழுத எடுத்துக் கொண்ட பொழுதே எனக்கு அந்த சந்தேகம் இருந்தது.   வழக்கம் போல பதிவைப் படிப்பவர்கள் (அல்லது பார்ப்பவர்கள்)  நிறையப் பேர் இருந்தாலும்  பின்னூட்டம் போட்டுத் தங்கள் கருத்தைச் சொல்லப் போகிறவர்கள்  குறைவாகவே இருக்கும் என்று எதிர்பார்த்தேன்.


இந்தத் தலைப்பிலான சென்ற பதிவைப் படித்தவர்கள் கிட்டத்தட்ட  500 பேர்கள்.  பின்னூட்டங்கள் எட்டே வந்திருக்கின்றன.  ஐநூறில் எட்டு நட்சத்திரங்கள்.  1.6%.   இந்த எட்டில்  ‘அருமை’ போன்ற மொக்கைப் பின்னூட்டத்தை யாரும் போடவில்லை என்பது ஓர் ஆறுதல்.

பின்னூட்டங்கள் வாசிப்பவர்களுடான உரையாடலைத் துவக்கி வைக்கின்றன என்பது உண்மை.  அத்தகைய உரையாடல்களின் மூலம் தான் ஒன்றை  வாசித்ததின் சகல பரிமாணங்களையும் அடைய முடியும் என்பது இணைய வாசிப்புகளில் நமக்குக் கிடைக்கும் செளகரியம்.  இருந்தாலும் 
பின்னூட்டங்களின் எண்ணிக்கை வைத்து பதிவை மதிப்பிட முடியாது  அல்லது பின்னூட்டங்களை எதிர்பார்த்து  விஷயச் செறிவுள்ள பதிவுகளை எழுதாமலும் இருக்க முடியாது..   பத்திரிகை படிக்கும் வாசகர்களிடையே  அந்தப் பத்திரிகைகளில்  படைப்பிலக்கியம் படைப்போரைப் பற்றிய மதிப்பீடுகள், படைப்போருக்கும் அவர்கள் எழுத்துக்களைப் பிரசுரிக்கும் அந்தப் பத்திரிகைகளுக்கும்  இருக்கும் ஏதோ புரிபடாத சம்பந்தத்தையும் வாசகர் உணர்வில் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத் தான் இந்தப் பதிவுத் தொடரையே எழுதத் துணிந்தேன்.

பத்திரிகைகளுக்கும் படைப்புலகுக்கும்  உண்டான சம்பந்தம் ஒன்றில் ஒன்று கலந்தது.  படைப்பாளர்களின்  படைப்புகளை  வாசிப்போரிடம் கொண்டு போய்ச் சேர்க்கும்  மகத்தான பணியைச் செய்பவை பத்திரிகைகள்.   எழுத்து என்பது வாசிப்பவனின்  உணர்வுகளில் செயல்பட்டு அவனிடம் மாற்றங்களை விளைவிக்கும்  சக்தி மிக்க ஆயுதம் என்பதினால்  நல்ல சிந்தனைகளை வாசிப்போர் மனசில்  பதியமிடவும்  அதன் விளைச்சலை மனித மனசுகளின்  பண்பட்ட  முன்னேற்றதுடன் இணைப்பதற்காகவும் படைப்பாளர்களின் ஆக்கபூர்வமான பணிகள் பெரிதும்  எல்லா தேசங்களிலும் உவந்தோதப்படுகின்றன.  பிரஞ்சுப் புரட்சியில் கூட எழுதுகோலின் பணி தான் புரட்சியின் எல்லாச் சிறப்புகளுக்கும் தலைமை வகித்தது. 

எல்லாக் கலைகளும் உணர்வு சம்பந்தப்பட்டவை.   அவைகளின் மதிப்பு என்பது அவற்றின் வினையாற்றலைப் பொருத்தது.   காசு, பணம் தொடர்பில் எடை போட முடியாதது.   அதனால்  படைப்புகளுக்கு  பொருளாதார ரீதியான மதிபீடுகள் நிர்ணயிக்க முடியாதாகையால்  பத்திரிகைகள் எழுதுவோருக்கு ஏதோ ஒரு தொகையை தங்கள் போக்கில் நிர்ணயித்து அவர்களின் படைப்புகளுக்கு சன்மானமாகக்  கொடுக்கின்றன.   தமிழ் பத்திரிகைகளில் ஆனந்தவிகடன்  ஆதிகாலத்திலிருந்தே  இந்த சன்மானம் வழங்குவதை ரொம்பவும் அடக்கத்துடன் தெரியப்படுத்தும் என்பதனையும் இங்கு  குறிப்பிட வேண்டும்.   படைப்புகளைப் பிரசுரிக்க இயலாத நேரத்தும்,
'தாங்கள் அன்புடன் அனுப்பி வைத்திருந்த கதையைப் பிரசுரிக்க இ;யலாமைக்கு வருந்துகிறோம்;  தங்கள் படைப்பின் தரத்தைப் பற்றிய தீர்ப்பாக இதை  எடுத்துக் கொள்ள வேண்டாம்.  தங்கள் படைப்புகளைத்  தொடர்ந்து விகடனுக்கு அனுப்பி வைக்கும் படி கேட்டுக் கொள்கிறோம்'  என்று எழுதுவோருடனான உறவை நெருக்கத்துடன் பகிர்ந்து  கொள்வார்கள்.  சில பிரபல பத்திரிகைகள் கூட  படைப்பாளியின் படைப்புக்கு ஏதோ ஒரு தொகை கொடுத்து விட்டு அந்தப் படைப்புகளுக்கு உரிமை கோரும் அவலங்களும் தமிழகப் பத்திரிகைகளில் உண்டு.  இத்தனைக்கும் இடையே  வளர்ந்து விட்ட  நிறைய பத்திரிகைகள் படைப்புகளை விஷய தானமாகவே பெறும்  அநியாயங்களும் நடக்கின்றன.  

சிறு பத்திரிகைகளைப் பொறுத்த மட்டில்  பெரும்பாலும் படைப்பாளிகளே ஒரு  இலட்சிய நோக்கில்  ‘தமது’ பத்திரிகையாக  தாம் வெளியிடும் பத்திரிகையை சுவீகரித்து அப்பத்திரிகைகளை  பெரும் பொருளாதார இடிபாடுகளை சமாளித்து   நடத்துகின்றனர்.   அவர்களைப் பொறுத்தமட்டில் ஒரு  உன்னத நோக்கத்திற்காக வெளியிடுவதால்  அடுத்த இதழ் வெளிவந்தால் போதும் என்று  நித்ய கண்ட  பூர்ணாயுசில் தடுமாறிக் கொண்டிருப்பார்களே ஆதலால் அவர்கள் யாரிடத்திருந்தும் பொருளாதார சம்பந்த எதிர்பார்ப்புகள்  இருக்க  வழியே இல்லாது போகும்.   தங்கள்  பொருளாதார இழப்பைத் தங்களுக்குள்ளேயே பகிர்ந்து கொள்ளும் இலட்சியவாதிகள் அவர்கள்.

இப்படி பத்திரிகை உலகம்  என்பது  நிறைய வகைப்பாடுகளைக் கொண்டது.  பத்திரிகை வெளியிடுதல் என்ற வியாபாரத்திற்காக  ஒரு முதலீடை மூலதனமாகக் கொண்டு  அதனை பன்மடங்காக பெருக்குவதற்கான  வியாபாரம் இது.   ஒரு விலைக்காக விற்பனை செய்யப்படும் சரக்கு.  என்னதான் வியாபாரம் என்று வந்து விட்டாலும்,  மனித மேன்மைக்கும் அவனது மேலான உணர்வுகளுக்கும் தீனி போட வேண்டிய  வியாபாரம்  என்று வந்து விட்டதினால்   சில தார்மீக நெறிகளுக்கு உட்பட்டதாக இந்த வியாபாரம் இருக்க வேண்டுமென்ற எதிர்பார்ப்பு  விற்பனை செய்வோர், விலை கொடுத்து வாங்குவோர் என்று எல்லா மட்டங்களிலும்   உண்டு.

விற்பனை என்று வந்து விட்டாலே  அதனை வாங்குவோர் எதிர்ப்பார்ப்புகளுக்கு ஏற்ப  இருக்க வேண்டும் என்பதனை நிச்சயப்படுத்த வேண்டியதாகி விடுகிறது.   இல்லையென்றால்  இழப்பைச் சந்திக்க வேண்டும்.   கற்பனை சம்பந்தப்பட்ட உலகம் இதுவென்றாலும்  எல்லா மட்டங்களிலும் கற்பனையாகவே இருந்து விட முடியாது.  சரியாகச் சொல்லப் போனால், கதைப்  பத்திரிகை உலகம் என்பது  நிஜ உலக நிதர்சனத்தில் கற்பனை உலக நடவடிக்கைகளில் ஈடுபடுவது.

கதாசிரியர்களின் படைப்புகள் கற்பனையாக இருக்கலாம்.  அனால் அந்தக் கற்பனைகளை விலை வைத்து விற்கும் விஷயங்களில் கற்பனையாக இருக்க முடியாது.   தயாரிப்பு,  விளம்பரம், மக்கள் கையில் கொண்டு போய்ச் சேர்த்தல்,  அப்படிக் கொண்டு போய்ச் சேர்ப்பதில்  இருக்கும் இடை  நிலை சமாச்சாரங்கள் என்ற ஏகப்பட்ட  நிஜங்களின் மத்தியில் தான் இந்தக் கற்பனை வியாபாரமாகிக் கொண்டிருக்கிறது. 

வெத்துக் கற்பனை என்று  இல்லாமல்  மனித குல மேன்மைக்கான நல்ல விஷயங்களை  நோக்கியப் பயணமாக அந்த கற்பனை செயல்படும் பொழுது   அதுவே  இலட்சியமாகிறது.   அந்த  மாதிரியான  இலட்சியங்களுக்குத் தாலி கட்டிக் கொண்டவர்கள் தங்களுக்கான  இலட்சியங்களில்  தங்கள் எழுத்தைப் பதிக்கின்றனர்.  அதனால் தான் நல்ல இலக்கியங்களைப் படைப்போருக்கும்,  அவற்றை வாசிப்போருக்கும் இடையே  நேரிடையான அறிமுகம், பார்த்துப் பேசுதல் போன்ற நடைமுறை சடங்குகளுக்கு அவசியமில்லாமலேயே ஒரு பந்தம் ஏற்பட்டுப் போகிறது.

பத்திரிகைகள்-- எழுத்தாளர்கள்-- வாசகர்கள் என்ற முக்கூட்டில், தொடர்ந்து தமிழின் சில பிரபல எழுத்தாளர்களையும் அவர்களுக்கென்று அமைந்து போன பத்திரிகைகளையும் தொடர்ந்து பார்ப்போம்.


(தொடரும்)


நண்பர்கள் அனைவுருக்கும்  தீபாவளி  வாழ்த்துக்கள்..


Monday, October 24, 2016

சில எழுத்தாளர்களும், சில பத்திரிகைகளும்

எழுத்துலகம்  சார்ந்த ஒரு சுவாரஸ்யமான தொடர்:

மிழின் வார, மாத இதழ்களைப் பற்றி  நன்றாகவே நமக்குத்  தெரியும்.

சில பத்திரிகைகள் சில எழுத்தாளர்களுக்கென்றே அமைந்து விட்ட மாதிரி தோற்றம் கொடுக்கும்.   அவரவருக்கென்று அமைந்து போன பத்திரிகைகளில் அவர்கள் எழுதும் பொழுது அவை தனிக் கவனம் பெற்றவை போலவும்,  பாந்தமாகப் பிரசுரமாகி இருப்பது போலவும் நமக்குத் தோன்றும்.  அதே எழுத்தாளர்கள்  வேறு பத்திரிகைகளில் எழுதும் பொழுது அந்தப் பத்திரிகைக்காரர்கள் என்னதான் கவனம் கொண்டு அழகுபடுத்தி இருந்தாலும் சரி, வாசிக்கும் நமக்கு  அந்த எழுத்தாளருக்கென்று அமைந்த பத்திரிகை  என்று நாம் நினைக்கும் பத்திரிகை அளவுக்கு  சோபிக்காது.   

ஒரு எழுத்தாளர் எந்தப் பத்திரிகையில் எழுதினாலும் சரி,  வாசகர்களுக்கு  அவர் எழுதியதின் சிறப்பு ஒரே மாதிரி இருக்க வேண்டியது, தானே?..  அது தான் இல்லை.  சில எழுத்தாளர்களுக்கும் சில பத்திரிகைகளுக்கும்  அப்படி என்னதான் ராசிப்பொருத்தமோ தெரியவில்லை,  அவர்களுக்கு அமைந்து போன பத்திரிகைகளில் அவர்கள் எழுதும் பொழுது மட்டும் அந்தப் பத்திரிகைக்கு எழுதுவதற்கு அவர் தான் பொருத்தமானவர் மாதிரி ஒரு தோற்றம் கொள்வார்.   எழுத்தாளரின் கதைகளுக்கு அல்லது தொடருக்குப் போடும் சித்திரங்களினாலோ அல்லது முக்கியத்துவம் கொடுத்து பிரசுரிக்கும் முறைகளினாலோ   என்னவோ,  ஒரே எழுத்தாளரின் எழுத்தை  வெவ்வேறு பத்திரிகைகளில் வாசகர் ரசிக்கும் ரசனைகளிலும் மாற்றம் தெரியும்.   எல்லா வாசகர் உணர்வுகளும் ஒரே மாதிரி இருக்காது ஆதலால்  எந்த எந்த எழுத்தாளருக்கு எந்தந்த பத்திரிகை அவருக்காக அமைந்து போன பத்திரிகை என்று நாம் தீர்மானிக்கும்  பட்டியலிலும்  வித்தியாசங்கள் இருக்கலாம்.

கறாராகச் சொல்ல வேண்டுமானால்,  இது சம்பந்தப்பட்ட எழுத்தாளர்களாலேயே  உணர  முடியாத ஒரு வாசக உணர்வு.  
வார, மாத பருவ இதழ்கள் வாசிக்கும் தேர்ந்த வாசகர்களாலேயே உணர முடிந்த ஒரு உணர்வு.

பத்திரிகை எழுத்து என்று வந்து விட்டால்,  பத்திரிகை--எழுத்தாளர் என்று இந்த இரண்டு நிலைகளையும் தவிர்த்து ஓவியர் எனறு ஓர் ஆசாமியும் இருக்கிறார்.   'பொன்னியின் செல்வனி'ல் கல்கி தம் எழுத்தால் கதை மாந்தர்களை வாசிப்பவர் உணர்வில் பதித்து வைத்ததற்கு  உருவம் கொடுத்த மாதிரி  ஓவியர் மணியம்  சித்திரங்கள் இருந்தன.   ஆழ்வார்க்கடியான்,  வந்தியத்தேவன், நந்தினி, பூங்குழலி, வானதி,  குந்தவை,  ஏன் அந்த ரவிதாசன் கூட இப்படித்தான்  இருந்திருப்பார்கள் என்று நாம் நம்பத் துவங்கினோம். அதனால் தான்  கல்கி  இதழிலேயே  பொன்னியின் செல்வன் பிற்காலத்து  மீள் பிரசுரங்களாக பல தடவைகள் பிரசுரமான போது, 
கதை மாந்தர் ஓவியங்களைப் பொறுத்தமட்டில்  ஆரம்பத்து நமது நம்பிக்கையை மாற்றிக் கொள்ள மிகவும் சிரமப்பட்டோம்.   அந்தளவுக்கு 'பொன்னியின் செல்வனைப் பொறுத்த மட்டில் ஓவியரின் பங்களிபபு கல்கியின் எழுத்துக்கு போட்டி போட்டுக் கொண்டு வாசகர்களின் உணர்வுகளுக்கு மிக நெருக்கமான இருந்தது.   

 இந்த ஓவியர் ஆளுகை மீறி  (எந்த ஓவியர் சித்திரம் போட்டாலும் சரி, போடாவிட்டாலும் சரி என்று)  தம் எழுத்தால் மட்டும் வாசிப்பவர் மனசை கவரந்த எழுத்தாளர்கள் இருக்கிறார்கள்.  இந்த லிஸ்டில் குமுதம்  எஸ்.ஏ. பி., லா.ச.ரா., ஜெயகாந்தன், ரா.கி. ரங்கராஜன் போன்றவர்கள் வருவார்கள்.


தமிழின் சில பிரபல எழுத்தாளர்களுக்கென்றே  அமைந்து போன அவர்களுக்கான பத்திரிகைகளைச் சொல்கிறேன்.   இப்பொழுது நான் சொல்ல வரும் விஷயம் உங்களுக்கும் சுலபமாகப் புரியும்.
.
எழுத்தாளர் சாண்டில்யனின் இயற்பெயர்  பாஷ்யம் அய்யங்கார்.
சென்னை தி.நகரில்  சிவா விஷ்ணு கோயிலுக்கு எதிரில் இருக்கும் மஹாலெஷ்மி  தெருவில் இவர் வசித்த பொழுது  நாலைந்து தடவைகள் நேரில் சென்று பேசிப் பழகியிருக்கிறேன்.   

அப்படி ஒரு தடவை அவரைச் சந்தித்த பொழுது இதே விஷயத்தை-- எழுத்தாளருக்கு அமைந்து போகிற பத்திரிகை 
விஷயத்தை-- அவரிடம் பகிர்ந்து கொண்ட பொழுது
“அப்படியா?..” என்று ஆச்சரியத்துடன் கேட்டுக்  கொண்டார்.  வாசகர்களிடம் பந்தா காட்டாமல்  இனிமையாக  பழகுவதில் சாண்டில்யனுக்கு இணை சாண்டில்யன்  தான்.  

இப்படிப்பட்ட சாண்டில்யனுக்கு  அமைந்து போன  பத்திரிகை  ‘குமுதம்’ தான்.  அந்தப் பத்திரிகையில் அவர் சரித்திரத் தொடர் பிரசுரமாகும் பொழுது  அந்தத் தொடரே தனிக் களை கொண்டு பிரமாதமாக இருக்கும்.   சொல்லப் போனால்  குமுத்த்திற்கு எழுதுவதற்கு முன்னால்  அவர் ‘அமுதசுரபி’ பத்திரிகையில்  ஜீவபூமி, 
மலைவாசல்  போன்ற தொடர்களை எழுதியிருக்கிறார்.  இருந்தாலும்  குமுத்த்தில் அவர் கடல்புறா,  யவனராணி போன்ற தொடர்களை எழுதிய  காலம்   மறக்கமுடியாதது.    குமுத்த்தில் அவர் எழுதிய  முதல் சரித்திரத் தொடர்  கன்னிமாடம்.  இந்தக் கதைக்கு ஓவியர் ஸாகர் படம் வரைந்திருந்தார் என்று நினைவு.   இதைத் தவிர மற்ற தொடருக்கெல்லாம்  லதா தான் சாண்டில்யன் கதைகளுக்கு  ஓவியம் வரைந்தார்.   சாண்டியல்யன்  கதா பாத்திரங்களுக்கு உருவம் கொடுத்து நடமாட விட்டவர் லதா.   குமுதம், சாண்டில்யன், ஓவியர்  லதா  இதுவும் அமைந்து போய்விட்ட ஒரு வெற்றிகரமான  கூட்டணி.  ஆனாலும் நான் அழுத்திச் சொல்ல விழைவது என்னவென்றால் வேறொரு பத்திரிகையில் இதே சாண்டியல்யன் சரித்திரக் கதை எழுதி  லதா ஓவியம் வரைந்திருந்தாலும் குமுதத்தில் சாண்டில்யனைப் படித்த மாதிரி இருக்காது என்பது தான்!..  இதற்குக் காரணம் என்னவென்பதை  சாண்டியல்யனின் எழுத்துக்களில் தோய்ந்த  வாசகர்கள் தாம் சொல்ல வேண்டும்.

ஆக,  சாண்டில்யன்  ஒரு குமுத எழுத்தாளர் என்று அழுத்தமாகச் சொல்ல்லாம்.

ஜெயகாந்தனுக்கு  அமைந்து போன பத்திரிகை 'ஆனந்த விகடன்' தான்.
அவ்வளவு கச்சிதமாக அந்தப் பத்திரிகை அவருக்கு  இருந்தது.  ஆனந்த விகடனில் அவர் கதைகளுக்கான சித்திரங்களை வெவ்வேறு சித்திரக்காரரகள்
வரைந்திருந்தாலும்,  அவர் எழுத்து,  சித்திரங்களை வைத்துத் தீர்மானிக்கப்படாமல் அவரை வைத்தே தீர்க்கமாகத் தீர்மானிக்கப்பட்டதால்,  அவருக்கான எழுத்தின் வீச்சு அவர் ஒருவரையே சார்ந்திருந்தது.

எழுத்தாளர் சாவி ஆசிரியாக இருந்த காலத்து ‘தினமணிகதிரில்’  எழுதிய ஜெயகாந்தனின் கதைகளைப்  பற்றியும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.   தினமணிகதிரில்  எழுதிய பொழுது  ஆனந்த விகடன் ஜெயகாந்தன் இல்லை. வாழ்க்கை அவருக்கு  சமூகம் சார்ந்த பிரச்னைகளில் மாற்றுக்  கருத்துக்களைக் கொடுத்திருந்தது.    அந்தக் கருத்துக்கள்  அவர் கதைகளில் பிரதிபலித்தமையால் தினமணிகதிரில்  எழுதும் பொழுது வேறொரு  ஜெயகாந்தனாவே  அவர் உருக்கொண்டார்.

ஜெயகாந்தனின் அந்தந்த காலத்து சிந்தனைககளுக்கு ஏற்ப அவர் எழுத்தும் மாற்றம்  கொண்டிருக்கிறது.   அவர் கொண்ட மாற்றங்களுக்கு  ஏற்ப அந்தந்த காலத்தில்  ஒரு பத்திரிகையும் அவருக்கு அமைந்தது தான் ஆச்சரியம்.  சரஸ்வதியில் எழுதிய  'போர்வை', 'சாளரம்' போன்ற கதைகளைப் பிற்காலத்து அவராலேயே எழுத முடியாது போனதும் இன்னொரு ஆச்சரியம். 

ஜெயகாந்தனின்  எழுத்து வாழ்க்கையை  சரஸ்வதி காலம்,  தாமரைக் காலம், ஆனந்த விகடன் காலம்,  தினமணிக்கதிர் காலம் என்று   நான்காகப் பிரிக்கலாம்.   இந்த நான்கிலும் திருப்தியுறாமல்  சமூகத்தின் சகலமட்ட பிரச்னைகள் மீதான தன் கருத்துக்களைப் பதிவதற்காகவே  ‘கல்பனா ‘  இதழுக்கும் ‘ஞானரதம்’ இதழுக்கும் அவர்  ஆசிரியராக இருந்த பொழுது அந்தப் பத்திரிகைகளை உபயோகப்படுத்திக் கொண்டிருக்கிறார்.

எழுத்தாளர் சாவி பத்திரிகைத் துறையில் பழுத்த அனுபவம் பெற்றவர்.  தினமணிக்கதிருக்கு ஆசிரியர் பொறுப்பு ஏற்ற பொழுது,   கதிரின் விற்பனையை 7 லட்சமாக உயர்த்துவேன் என்று சபதம் போட்டு செயலாற்றியவர்.    அந்தக் காலத்தில் 7 லட்சம் என்பது குமுதம் விற்பனையைத் தாண்டிய ஒன்று.   அந்த இலக்கை அடைவதற்காக  எல்லாவித எழுத்துக்களும் கலந்த கதம்பமாக தினமணிக்கதிர்  தமிழ் பத்திரிகை உலகம் இதுவரைப் பார்த்திராத புத்தம் புது உருக்கொண்டது.  பத்திரிகையின் பெரிய சைஸ் ஒரு பக்கம் அழகான லேஅவுட்டுகளுக்கு வழிகொடுக்க,  இன்னொரு  பக்கம் ஜெயகாந்தனின்  ‘சமூகம் என்பது நான்கு பேர்',  ஸ்ரீ வேணுகோபாலனின்  'திருவரங்கன் உலா',  ஸ்ரீ வேணுகோபாலனே  புஷ்பா தங்கத்துரை என்ற பெயரில்  'சிவப்பு விளக்கு/ ஏரியா கதைகள்,  தியாகராஜ பாகவதரின் வாழ்க்கை அனுபவம்,  கோபலுவின் சித்திரங்களுடன் விந்தனின்  'பாட்டில் பாரதம்' என்று  வினோதமான கலவையுடன் அவரவருக்கு வேண்டியதைப் படித்துக் கொள்ளுங்கள் என்று பந்தி விரித்தது போல தூள் கிளப்பியது.

ஒரே தொடருக்கான கருவை மூன்று பத்திரிகைகளில் எழுதிய ஒரே தமிழ் 
எழுத்தாளர் ஜெயகாந்தனாகத் தான் இருக்க முடியும்.   அவர்  ஆனந்தவிக்டனில் எழுதிய ‘அக்னி பிரவேசம்’ சிறுகதையை,  தினமணிக்கதிரில் ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ என்று தொடர்ந்து குமுதத்தில்  ‘கங்கை எங்கே போகிறாள்?’  என்று முடித்தார்.   ஒரே கதையை அந்தந்த நேரத்து தனது சமூகப் பார்வையோடு விரித்து மூன்று தொடர்களாக எழுதியிருக்கிறார்.  ஆனால்  குமுதத்தில் எழுதும் பொழுது, விகடன், தி.கதிர் அளவுக்கு  சோபிக்கவில்லை.   இதற்குக் காரணம் அந்தப் பத்திரிகைக்கென்று  அமைந்து போன வாசகர்கள் தாம்.   இதனால் ஜெயகாந்தன் ஜெயகாந்தனாகவே  எழுதினாலும், அவர் குமுதம் எழுத்தாளர் இல்லை என்று தெரிந்து போயிற்று.

இப்படி ஒவ்வொரு எழுத்தாலருக்கும்  ஒரு பத்திரிகை அமைகிறது என்று நீங்களும் உணர்ந்ததுண்டா ?..  சொல்லுங்கள்.

பெரும் பத்திரிகைகளுக்கு  எல்லாக் கோணங்களிலும் அதன் விற்பனை ஒன்று தான் குறிக்கோள்.  அந்த விற்பனைக்காக எந்த ஜகஜ்ஜால உத்திகளையும் மேற்கொள்ள அவை தயார்.   பெயர், புகழ் கிடைத்திட்ட எழுத்தாளர்களைத் தங்கள் இதழில் எழுத  வைத்து  அந்த எழுத்தாளர்களுக்கான வாசக அபிமானத்தை உபயோகப்படுத்திக் கொண்டு பத்திரிகை  விற்பனையைக் கூட்ட முயற்சிக்கும்.   ஆனால் அப்படி என்ன தான் முயற்சித்தாலும்  பத்திரிகைகளின் அந்த முயற்சிகளைத் தாண்டிக் கொண்டு எல்லா பத்திரிகைகளுக்கும்  எல்லா எழுத்தாளர்களும் பொருந்துவார்கள் என்று எதிர்பார்க்க முடியாமல் போய்விடுகிறது.

இப்போதைக்கு இந்த இரண்டு தமிழ் எழுத்தாளர்கள்.  மற்ற  பிரபல எழுத்தாளர்கள்  தொடரும் கட்டுரையில் வரப்போகிறார்கள்.

'இந்த எழுத்தாளருக்கு இந்தப் பத்திரிகை தான்'  என்று இப்பொழுதே எழுதி வைத்துக் கொண்டு வரும் பகுதிகளில் சரிபார்த்துக் கொள்ளவும் செய்யலாம்.   அந்தந்த பகுதி வரும் பொழுது பகிர்ந்து கொள்ளலாம்.  உங்களது மாறுபட்டத் தேர்வு என்றாலும்  அதைப் பகிர்ந்து கொண்டு உங்கள் தேர்வை நியாயப்படுத்தலாம்.

 ஆனால் உங்கள்  எல்லாத் தேர்வுகளையும் பின்னூட்டங்களில் இப்பொழுதே பதிய வேண்டாம்.  நீங்கள் தேர்ந்தெடுத்து வைத்திருக்கும் எழுத்தாளர் பகுதி வரும் பொழுது  உங்கள் தேர்வு பொருந்தி வந்திருந்தாலும் வந்திருக்காவிட்டாலும்  அதைப் பகிர்ந்து கொள்ளலாம்.
நம் தேர்வுப்படியே இங்கு வெளியாகும் குறிப்புகளும் அமைந்தாலும் அமையாவிட்டாலும்  முறச்சி செய்த நமக்கு  சந்தோஷம் தானே!...   

தனக்கென்று எந்தக் குறிக்கோளோ, சொந்தக் கருத்தோ இல்லாமல் பத்திரிகைகள் வெள்ளைக் காகிதங்களை கருப்பு மசியிட்டு போணி ஆக்குவதற்காக  அவற்றின் அபிலாஷைகளுக்கேற்ப எழுதிக் கொடுக்கிற எழுத்தாளர்களைப் பற்றி  இந்தத் தொடரில் கண்டுகொள்ளவேயில்லை என்பதையும் இங்கு குறிப்பிட வேண்டும்.

(தொடரும்)

படங்கள்  உதவிய  நண்பர்களுக்கு நன்றி.
  


Tuesday, October 11, 2016

அழகிய தமிழ் மொழி இது!....

பகுதி—24

மயத்தில் வில் கொடி பொறித்த குடி சேரர் குடி.  அந்தக்குடிப் பெருமகன் சேர அரசன் செங்குட்டுவன்.  அத்தகைய சிறப்பு கொண்ட மாமன்னன் செங்குட்டுவன் தன் நாட்டு மலைவளம் காண விரும்பி பேரியாற்றங்கரையில் தன் படைவீரர்கள், அரசு அதிகாரிகள், ஆயமகளிர் புடைசூழ தண்டு அமைத்து தங்கியிருக்கிறான்.   செங்குட்டுவனின்  இளவல் இளங்கோவும்,  அரசியார் வேண்மாளும் உடனருந்தனர். அப்பொழுது மன்னனைப் பார்ந்து தங்கள் நலன் தெரிவிக்க பெருங்கூட்டமாக  குறவக்குடி பெருமக்கள் பெர்ளுமளவு பரிசல்களைத் தங்கள் தலையில் சுமந்து வந்தனர்.

மன்னனை வாழ்த்தி அவன் ஆட்சியில் தாங்கள் எந்தக் குறையும் இன்றி வளமொடு வாழும் பாங்கினைச் சொல்லும் பொழுது தாங்கள் கண்ட அந்த அதிசய நிகழ்வை மன்னனுக்கு வியப்புடன் விவரித்தனர்.  “வாழ்க நின் கொற்றம், மன்னா!  அன்று நாங்கள் கண்ட அந்தக் காட்சியை எம் முன்னோர் கூட தம் வாழ்நாளில் கண்டதில்லை!  காட்டு வேங்கை மர நிழலில் துயரமே வடிவாய்க் கொண்ட பெண் ஒருத்தியைக் கண்டோம்.  வானிலிருந்து அந்த தேவதை மீது மலர் மாரிப் பொழிந்தது.  சற்று நேரத்தில் வானோர் புடைசூழ்ந்து போற்றி வாழ்த்த  அவள் வானகம் சென்றதை எம் கண்களால் பார்த்தோம்..  அந்தப் பெண் எந்நாட்டைச் சேர்ந்தவளோ?..  யார் பெற்ற மகளோ?..  நின் நாட்டில் நிகழ்ந்த இந்த நிகழ்வை  நாங்கள் இதற்கு முன் எம் நினைப்பிலும் அறியோம்!” என்று செங்குட்டுவனுக்கு தாம் கண்ட காட்சியை வியப்போடு விவரித்தனர்.

அப்பொழுது அரசனோடு இருந்த தண் தமிழ் ஆசான் சீத்தலை சாத்தனார்,”அரசே!  கண்ணகிக்கு நேர்ந்ததெல்லாம் யான் அறிவேன்.. அதுப் பற்றிச் சொல்வேன்.” என்று சொல்ல ஆரம்பித்தார்.  “முற்பிறப்பில் செய்த தீவினை,  கண்ணகியின் காற்  சிலம்பைக் கருவியாக்கிக் கொண்டு  அவள் கணவன் கோவலனின் உயிரைப் பறிப்பதற்குக் காரணமாயிற்று.  கண்ணகி தன்  எஞ்சிய காற்சிலம்பை பாண்டியன் நெடுஞ்செழியனின் அவையில் மன்னன் முன் வழக்காடி உடைத்து உண்மையை நிலைநாட்டினாள்.  கோவலன் கள்ளவனல்ல என்றும் தன் பிழையே அவன் உயிர் பறிக்கக் காரணமாயிற்று என்றும் உணர்ந்தக் கணமே  பாண்டியன்  அரசுக் கட்டிலிலிருந்து  நிலைகுலைந்து விழுந்து தன் வளைந்த செங்கோலை நிமிர்த்தினான்.  அரசன் இறந்தக் கணமே  தன் உயிர் கொண்டு மன்னன் உயிரைத் தேடித் தொடர்ந்தாற் போல அரசர் தேவி கோப்பெருந்தேவி மன்னன் மார் மீது விழுந்து உயிர் துறந்தாள். ஊழ்வினையின் 
கோரத்தாண்டவமாய்  மதுரை மூதுர்  தீ வசப்பட்ட்தும்,  தனித்தவளாய் கண்ணகி தன் நாடு செல்லாமல் நின் நாட்டிற்கு வந்தனள்..” என்றார்.

“ஆராயாது செயல்பட்டதால் பாண்டியர்க்கு பழி வந்து சேர்ந்த்து. ஆனால் அப்பழிச்சொல் எம்மை போன்ற வேந்தர்க்குத் தெரியும் முன்னே, தான் உயிர் நீத்த செய்தி எல்லோரையும் வந்தடையுமாறு வல்வினை வளைத்த கோலை பாண்டியனின் செல் உயிர் நிமிர்ந்திச் செங்கோலாக்கியது..” என்ற செங்குட்டுவன் மிகுந்த யோசனை வயப்பட்டான். ”மழை பெய்யாது பொய்க்குமாயின்  அரசர்க்கு அதுவே மிகப்பெரிய அச்சமாகிப் போகிறது.. யாதொரு காரணத்தினாலும் பிறவியெடுத்த உயிர்கள் வருந்துமாயின் அதுவே அரசர்க்கும் பேரச்சம்..  குடிமக்கள்  அறம் சார்ந்து வாழுதலுக்கும், கொடுங்கோன்மை அறவே இல்லாது ஆட்சி நடத்துவதற்கும் பொறுப்பேற்கும் மன்னர் குடியில் பிறத்தல் துன்பமே அல்லாது  தொழுதற்கு ஏதுமில்லை..” என்று உணர்ந்து சொன்னான் சேர மன்னன்.  

தான் சொல்வதையெல்லாம் ஆழ்ந்து கேட்டுக் கொண்டிருக்கும் தன் தேவியை நோக்கி,   “கணவன் உயிர் செல்வழி தன் உயிரையும் செலுத்திய மாண்பு பொருந்திய கோப்பெருந்தேவி -யும்  சினத்துடன் நம் நாடடைந்த சேயிழை கண்ணகியும் நம் போற்றுதலுக்குரியவர் ஆயினும் இவ்விருவருள் நீ வியக்கத்தக்கவர் யாரெனச் சொல்வாயாக..” என்றான்.

ஒரு கணமே யோசித்த சேரமாதேவி, “பாண்டிமாதேவி கோப்பெருந்தேவி தன் கணவனுடன் உடன்  உயிர் துறந்து வானுலகம் ஏகினாள் ஆதலின் அங்கு அவள் பெரும் சிறப்பை நிச்சயம் பெறுவாள்.  நாம் நம் நாட்டை அடைந்த பத்தினிக் கடவளை பரசல் வேண்டும்..(போற்றித் துதிக்க வேண்டும்)” என்று சொல்ல செங்குட்டுவன் முகம் மலர்ந்தான்.  ‘இது குறித்துச் செய்ய வேண்டுவன யாது?’  என்று குறிப்பால் உணர்த்துவது போன்று  நூலறி புலவரை மன்னன் நோக்கினான்.    

அவரோ, “ஒல்கா முறைமை பொருந்திய பொதிய மலையிலாயினும், வில் தலை கொண்ட வியன்  பேர் இமயத்தாயினும் கல்லினை எடுத்து வந்தால் அது கடவுள் வழிபாட்டிற்கு சிறப்பானதாகும்.  பொதிய மலையிலிருந்து எடுத்து வருவோம் ஆயின் காவிரிப் புனலினும்,  இமயத்திலிருந்து எனில் கங்கைபேர் ஆற்றிலும்  எடுத்து வரும் கல்லை நீராட்டி தூய்மை செய்வித்தல் நலமுடையதாகும்..” என்றனர்.

அது கேட்ட செங்குட்டுவனின் முகத்தில் பெருமிதம் பொங்கியது. “பக்கத்திலிருக்கும்  பொதியக் குன்றத்து   கல்லெடுத்து வந்து முதுநீர் காவிரியில் நீராட்டுதல்,  வீரமும் வாளும் வேலும் கொண்ட சேரர் குடியோருக்கு சிறப்பாக அமையாது.  ஆதலின் இமையத்துக் கல் எடுத்து வருதலே சாலச்சிறக்கும்.  பெருமலையரசன், மாட்சிமை கொண்ட பத்தினிக் கடவுளுக்கு கல தாரான் எனில்  குடைநாள் கொள்ளும் வஞ்சியையும், அரசர்க்கு வெற்றிமாலையாகிப் போகும் கொற்ற வஞ்சியையும், வீரச்சிறப்பை அடையும் நெடுமாராய வஞ்சியையும், பகைவர் நாட்டை தீயிட்டுக்
கொளுத்தும் வியன்பெரு வஞ்சியையும்,  சிறப்புமிக்க பெருஞ்சோற்று வஞ்சியையும்,  குன்றாச் சிறப்பின் கொற்ற வள்ளையும், பகைவர் அஞ்ச பணதோட்டுடன் படைகளை அணியச் செய்து  பூவா வஞ்சியாம் நம் வஞ்சி நகரின்  புறத்தே பகைவருடன் பொருந்தக் காத்திருக்கும் எம் வாளுக்கு வஞ்சி மாலை சூடுவோம்..” என்றான்.

“பல்லாண்டு வாழ்க நின் கொற்றம்..” என்று வாழ்த்தி அமைச்சன் வில்லவன் கோதை சொல்லலூற்றான்.  “கொங்கர்தம் செங்களத்தில் சோழ—பாண்டியர் தோற்று  புலிக்கொடியையும் கயற்கொடியையும் இழந்து ஓடியமை எல்லாத் திக்கிலும் பரவிற்று.  கொங்கரும், கலிங்கரும், கருநாடகரும், வங்காளரும், கங்கரும்  வடவாரியருடன் சேர்ந்து உன்னை எதிர்கொண்ட பொழுது அவர்களின் யானைப்படையை தனி ஒருவனாக நீ துவம்சம் செய்த காட்சி  இன்னும் என் மனக்கண்ணில் பதிந்துள்ளது. கங்கை பேரியாற்று நீர் நிலையில் உனது தாயாரை நீராடச் செய்த அந்த நாள் மறக்கமுடியாத ஒன்று.   ஆரிய மன்னர் ஆயிரிருவரை நீ ஒருவனே எதிர்கொண்டு புறமுதுகிட்டு ஓடச்செய்த வெற்றியை யாராலும் மறக்கவே முடியாது.  இமிழ் கடல் சூழ் நிலப்பரப்பு பூராவையும் நீ தமிழ்நாடாக்க விரும்பினாலும் உன்னை எதிர்ப்போர் இந்தாளில் யாருமே இல்லை.  கடவுள் சிலையமைக்க ஒரு கல்லுக்காக இமையம் நீ செல்வாயாயின்,  வடதிசை வேந்தர்க்கெல்லாம்  தண்டமிழ் நாட்டின் இலச்சினைகளாகிய  வில்,கயல், புலி பொறித்த முடங்கல்களை வரைந்து அனுப்புவாயாக..” என்றான்.

அடுத்து அழும்பில் வேள் என்னும் அமைச்சன் எழுந்து தன் கருத்தைக் கூறலானான்:  “அரசர்க்கரசே!  நான் சுருக்கமாகவே சொல்கிறேன். இந் நாவலந் தீவில் பகைநாட்டு ஒன்றர் படை காவல் மிக்க நம் வஞ்சிக்கோட்டைப் புறத்தே அல்லும் பகலும் காத்து கிடப்பர்.  ஆதலான் உன் வடநாட்டு வழிப்பயணத்தைப் பற்றி பறையறிவித்து நம் நாட்டில் தெரிவித்தால் போதும்,  காத்துக் கிடக்கும் ஒற்றர் இதையே பெரும் சேதியாக தம் நாட்டில் கொண்டு சேர்ப்பர்.  ஆக  நம் பங்கில் அந்தக் காரியம் ஒன்றே போதும்!”  என்றான்.

அழும்பில் வேள் சொன்னதை அக்கணமே ஏற்றான் சேரன் செங்குட்டுவன்.  தன் வடநாட்டுப் பயணத்தை பறையறிவித்து மக்களிடம் கொண்டு போய்ச் சேர்க்க அறிவித்து தானும் வஞ்சி நகர் மீண்டான்.

“வாழ்க எம் மன்னவர் பெருந்தகை!.  ஊழிதோறும் ஊழி நம் மன்னனனே இவ்வுலகைக் காப்பானாக!  வில் தலை கொண்ட பேரிமையத்திலிருந்து பத்தினித் தெய்வத்திற்கு பெரும்சிலை அமைக்க கல் கொண்டு மீள்வான் நம் பேரரசன்!  ஆதலின் வடதிசை மன்னரெல்லாம் இடுதிறைச் செல்வத்தோடு வந்து எம்மன்னரை எதிர்நோக்கி அளிப்பீராக!..  அவ்வாறு செய்யாது போவீராயின்  கடல் நடுவே கடம்பினை வீழ்த்திய போரில் பெற்ற பெருமையையும், இமையத்தில் விற்கொடி பொறித்த வீரம் விளைந்த செயலையும் செவிமடுத்தாவது பணிந்து போவீராக!..  எம் மன்னரின் நாடு போற்றும் வீர பராக்கிரமங்களை கேட்டுப் பணிந்து போக விருப்பம் இல்லையாயின்,  நும் மனைவியரின் நெருக்கத்தைத் துறந்து மீதி வாழ்க்கைக்குத் துணையாகப் போகும் தவத்தினை மேற்கொண்டு பிழைத்துப்  போவீராக!   வீரக்கழல் தரித்த மாமன்னனின் திருமேனி வாழ்கவே!” 

--- பட்டத்து யானை பிடர்த்தலை முரசம் ஏற்றி இவ்வாறு அறையும் பறைஒலி வஞ்சி மாநகர் வீதியெங்கும் முழங்கி  மக்களை வெற்றிக் களிப்பில் எக்காளமிட வைத்தது...


(வளரும்..)
   
படங்கள் உதவிய நண்பர்களுக்கு நன்றி. 



Related Posts with Thumbnails