Friday, February 13, 2015

இனி (பகுதி-10)

காளியண்ணன் கடையைக் கடக்கும் பொழுது பாண்டியன்  திரும்பிப் பார்த்தான்.  கடையிலிருந்த காளியண்ணன் இவனைப் பார்த்ததற்கு அடையாளமாக கையசைத்தான்.  மங்கை பக்கத்தில் இல்லாமலிருந்தால் பெயர் சொல்லி அழைத்திருப்பான் போலிருந்தது.

பாண்டியன் ஒரு வினாடி தயங்கி, "கடையில் ஏதாவது வாங்க வேண்டுமா?" என்று மங்கையிடம் கேட்டான். ஏதுமில்லை என்பதாக மங்கை தலையசைத்தாள்.

இருவரும் தங்கள் செருப்புகளை கடையின் பக்கத்திலிருந்த தடுப்பில் கழட்டி விட்டு விட்டு வந்த பொழுது "டூரிஸ்ட் வண்டி வந்திருக்கு.. அதான் கோயில்லே ரஷ்.." என்று கோயிலின் அப்பொழுதிய நிலவரத்தைச் சொல்கிற மாதிரி சொன்னான் காளியண்ணன்.

"அப்படியா?.." என்று அவன் சொன்னதை கேட்டுக் கொண்டதற்கு அடையாளமாக லேசாகச் சிரித்து நகர்ந்தான் பாண்டியன்.

கோயிலை நெருங்கிய பொழுது தாழ்தள டூரிஸ்ட் பஸ்கள் இரண்டு அருகருகே நின்று கொண்டிருப்பது தெரிந்தது.  இளநீர் வண்டிக்காரருக்கு  நல்ல  போணி. சீவிச் சீவி தலைப்பகுதியை துளையிட்டு ஸ்ட்ரா போட்டுத் தந்து  கொண்டேயிருந்தார். அந்த நேரத்திலும் ஒரு கும்பலே இளநீர் குடித்துக் கொண்டிருந்தது.

இந்தக் கோயில் பாடல் பெற்ற ஸ்தலம்.  சுற்று வட்டார பதினைந்து கோயில் செயினில் இதுவும் ஒரு கண்ணி..  அதனால் டூரிஸ்ட் பஸ்கள் வந்து போவது வெகு சகஜம்.  இப்படியான பஸ்களில் வந்து போவோர்கள் எதை வாங்குவார்கள் எதை வாங்க மாட்டார்கள் என்று தெரியாது.  அதனால் சன்னதித் தெரு நெடுக எக்ஸிபிஷன் மாதிரி நிறைய விதவிதமான கடைகள்.

துவஜஸ்தம்பத்தைக் கடந்த பொழுது இடது பக்க பிராகார முனையில் ஒரு பெருங்கூட்டம் நின்றிருந்தது இங்கிருந்தே தெரிந்தது.  "இந்த மாதிரி டூரிஸ்டுங்க வந்தாத்தான் நம்ம ஊர் கோயிலும் களைகட்டுது.." என்று போகிற போக்கில் பக்கத்தில் வந்தவர் சொல்லிக்  கொண்டே சென்றதைக் கேட்டு பாண்டியன் மங்கை பக்கம் திரும்பிச் சிரித்தான்.

"அவர் சொன்னத்துக்காச் சிரிக்கிறீங்க?" என்றாள் மங்கை.

"பொதுவா பிரதோஷம், பின்மாலைப் பொழுது இந்த நேரங்கள்லே தான் கோயில்லே உள்ளூர் ஜனங்களைப்  பாக்க முடியுது. மத்தபடி அவர் சொன்னது சரிதான். டூரிஸ்டுங்க வந்தாத் தான் இந்த மாதிரி கலகலப்பு" என்றான் பாண்டியன்.

அவன் சொன்னது  போலவே உள்ளே சன்னதிக்கு இருவரும் சென்றதும் நெரிசல் கொஞ்சம் அதிகமாகத் தான் இருந்தது.  வெளியூர்க்காரர்களுக்கு வழிவிட்டு ஒதுங்கி நின்றான் பாண்டியன். கூட்டம் கொஞ்ச நேரத்திலேயே மட்டுப்பட்டதும் இருவருக்கும் ஆடலரசனின் அற்புதமான தரிசனம் கிடைத்தது.

வலப்புற மேற்கரத்தில் டமாருகம் பற்றியும், கீழ்க்கரம் அபயஹஸ்தமாகவும், இடப்புற மேற்கரம் அக்னியைத் தாங்கியும், கீழ்க்கரம் குஞ்சிதபாதம் காட்டியும், வலது திருவடியை முயலகன் மீதும், இடதை தூக்கிய திருவடியாகவும் கொண்ட இறைவனின் அழகை தரிசித்த களிப்பில் மங்கை
மெய்மறந்திருந்திருந்தாள்.  பாண்டியனோ 'தோள் கண்டார் தோளே கண்டார்' நிலையில் பெருமானின் திருமுகத்தில் பதித்த விழிகளை பெயர்த்தெடுக்க சக்தியில்லாதிருந்தான்.  அந்த லயிப்பினூடையான நினைவு சொக்கலில் பெருமானின் முக அழகில் இன்று குறும்புக் கீற்றொன்று ஒளிந்திருக்கிற மாதிரி பாண்டியனின் மனசுக்குப் பட்டது.


ஏற்கெனவே அழகு கொஞ்சும் ஈஸ்வரன் முகத்தில் இந்த குறும்பு பாவனை இன்னும் அலாதி அழகைச் சேர்த்திருந்தது.  அதை உணர்ந்த மாத்திரத்தில் சந்தோஷத்தில் பாண்டியனின்  மனம் குதிபோட்டது.  இந்த விளையாடல் உணர என்ன பாக்கியம் செய்தோம் என்று நினைத்துக் கொண்டான். அந்தக் கோலத்தை இன்னும் உள்வாங்கிக் கொள்கிற ஆவலில் தீட்சண்யத்தைப் பார்வையில் தேக்கி பாண்டியன் பார்த்த பொழுது குறும்பு போன இடம் தெரியாது இயல்பாய்த் தெரிந்தது. . உடனே அவன் மனம் சுணங்கிப் போனது. குறும்பு கொப்பளிக்கும் அந்த திருமுகத்தை மறுபடியும் பார்க்க வேண்டுமென் று மனசு தவியாய் தவித்தது.  என்ன செய்யலாம் என்று ஒருவினாடி யோசித்தான்.  பார்வை தன்னை வஞ்சிக்கிறதோ என்று பதட்டப்பட்டான். தொடர்ச்சியாய் கூர்ந்து பார்ப்பதினால் இப்படி சலனம் ஏற்பட்டு இருக்கலாம் என்று நினைத்தவன், இமைகளை மூடி ஒருநொடி பார்வையைத் துண்டித்து புதுசாகப் பார்க்கிற மாதிரி இமை திறந்து பார்த்தால் ஒரு கால் அந்த குறும்பு முக தரிசனம் மறுபடியும் கிடைக்குமோ என்கிற நப்பாசையில் இரு கைகளையும் குவித்து கண்மூடி இறைவன் நாமம் துதித்தான். சடக்கென்று கண் திறந்து பார்த்தான்.  ஊஹூம்.. இவன் ஜாலக்குகளுக்கெல்லாம் இறைவன் மசிந்ததாகத் தெரியவில்லை.  பாண்டியன் என்ன பாடுபட்டும், நேராக-பக்கவாட்டில்- என்று எப்படிப் பார்த்தும் பெருமானின் முகத்தில் விளைந்த குறும்பின் விளைவான அந்த குறுஞ்சிரிப்பு அவன் உணர்வில் பதிய மாட்டாமல் அடம் பிடித்தது.  சும்மா இருந்தவனுக்கு சொர்க்கலோகத்தைக் காட்டி பறித்துக் கொண்ட மாதிரி இருந்தது.  அந்த ஏமாற்றத்தை ஏற்றுக் கொள்ள முடியாமல் பாண்டியனின் மனசு பரபரத்தது.

அதற்குள் தீபாராதனைத் தட்டு கற்பூர ஜ்வலிப்புடன் நெருங்கி விட்டது.  மங்கை தான் பர்ஸ் திறந்து சில்லரை எடுத்துத் தட்டில் இட்டாள்.  அவள் தட்டில் இட்ட பளபள நாணயத்தில் கற்பூர ஆரத்தியின் ஜ்வலிப்புப்பட்டுத் தெறித்தத் தருணத்தில் இறைவனின்  அந்த குறும்பு முகக் கோலம் அட்டகாசமாக நாணயத்தில் பட்டுத் தெறித்த ஒளியில் காட்சியளித்து
மறைந்ததை பாண்டியன் பார்த்தான்.  அவன் மனசு நெக்குறுகிக் கரைந்தது.   சந்தோஷத்தில் பூரித்து சிலிர்த்தது.  தலையிலிருந்து உள்ளங்கால் வரை ஜில்லிட்ட மாதிரி இருந்தது. அர்ச்சகர் தந்த வீபூதியை அனிச்சையாய் கைக்குழிவில் வாங்கி நெற்றியில் இட்டுக் கொண்டது அவனே இல்லை போல் அவனுக்குத் தோன்றியது.

"போலாமா?.." என்ற மங்கையின் குரல் எங்கோ வெகு தூரத்திலிருந்து கேட்பது போலக் கேட்டாலும் தெளிவாக இருந்தது.  நிகழ்வுலகிற்கு இழுத்துக் கொண்டு வரப்பட்ட சுவாரஸ்யத்தில்"போலாமே?" என்றவன் தலை நிமிர்த்தி மீண்டும் இறைவனைப் பார்த்தான்.  'போய்விட்டு வா!' என்று மலர்ச்சியுடன் அனுமதி கிடைத்த மாதிரி இருந்தது.  சின்னக் குழந்தை மாதிரி மலங்க மலங்கப் பார்த்தபடி மங்கையைத் தொடர்ந்தான் பாண்டியன்.

வலதுபக்க அம்மன் சன்னதியிலும் கூட்டம் தான்.  இறைவன் சன்னதியில் தரிசனம் முடித்து அம்மன் சன்னதிக்கு வந்தவர்கள் தான் இங்கும் சூழ்ந்து நின்றிருந்தார்கள்.  அவர்கள் திருப்தியாக அர்ச்சனை, தரிசனம் எல்லாம் முடித்து செல்லும் வரை பாண்டியன் விலகியிருந்து காத்திருந்தான்.  மங்கை மட்டும் சென்று சன்னதி பக்கம் எட்டி எட்டி பார்த்து விட்டு வந்தாள்.  வந்தவள், "ஒண்ணும் தெரிலீங்க.." என்றாள்.

"நாம் தான் அடிக்கடி வர்றோமே?.. அவங்க இருந்து நிதானமாக தரிசனம் செய்து போகட்டும்.  அதற்கு பின்னால் நாம் போகலாம்.." என்றான் பாண்டியன்.

அம்மன் கர்ப்பகிரகத்திற்கு நேர் எதிரே மேல் பக்கத்தில் பெரிய நிலைக் கண்ணாடி ஒன்றை பதித்திருந்தார்கள்.  அதில் அம்மன் உருவம் தெரிகிறதா என்று பார்த்து விட்டு வந்தவள், வரும் பொழுதே உதடைப் பிதுக்கிக் கொண்டு வந்தாள்.

ஐந்தே நிமிடங்களில் கூட்டம் கலைந்து விட்டது.  பாண்டியனும் மங்கையும் நிதானமாக நின்று கைகுவித்தார்கள்.  மடிசார் புடவை கட்டி அம்மனுக்கு அலங்காரம் செய்திருந்தனர்.  திவ்யமான தரிசனம். அர்ச்சகர் கொடுத்த குங்குமம் வாங்கி இருவரும் இட்டுக் கொண்டனர்.

பிராகாரச் சுற்றுக்காக இடப்பக்கம் வந்த பொழுது அறுபத்து மூவர் வரிசை ட்யூப்  லைட் போட்டு வெளிச்சமாக இருந்தது.  அந்தப்பக்கம் விறுவிறுவென்று போய் அறுபத்து மூவர்களில் யாரையோ தேடிக்கொண்டிருப்பவளைப் போல் மங்கை ஒவ்வொரு சிலையாகப் பார்த்துக் கொண்டே வந்தாள். இங்கிருந்து பார்க்கும் பொழுதே பாண்டியனுக்கு நின்ற சீர் நெடுமாற நாயனாரின்  சிலைஎந்த இடத்தில் இருக்கும் என்று தெரிந்த து.  அவரைத் தான் தேடிக்கொண்டு மங்கை போகிறாள் என்று நினைத்தான்.  அவன்  அப்படி நினைக்கும் பொழுதே, மங்கை சடக்கென்று நின்று விட்டாள்.   நின்றவள் இவன் நிற்கும் பக்கம் பார்த்து கையசைத்தாள்.  பாண்டியன் அவளை நெருங்கிய போது மங்கை, மங்கையர்கரசியாரின் சிலையின்  முன்  நின்று கொண்டிருந்தாள். .

பாண்டியன்  தன்  அருகாமையில் வந்ததை உணர்ந்ததும், "ராணி இங்கே, ராஜா எங்கேயோ?" என்றாள்.

"வா, காட்டுகிறேன்.." என்று அவளை அழைத்துப் போனான் பாண்டியன். கிட்டத்தட்ட பத்து பன்னிரண்டு சிலைகளைத் தாண்டி, "இதோ.." என்று நெடுமாற நாயனாரைக் காட்டினான் பாண்டியன்.

கொஞ்ச நேரம் அரசியார் இருந்த பக்கமும், இந்தப் பக்கமும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தாள் மங்கை.  "நம் கணக்குக்கு இன்னும் ஒருத்தர் குறையறார், இல்லியா?.. அந்த மந்திரியார் பேரு என்னங்க?.."

"யாரு, குலச்சிறையாரைச் சொல்லிறியா?"

"ஆமாங்க.. அவரும் அறுபத்து மூவரில் ஒருவர் தானே?.. அவரு எங்கேங்க?"

"நானும் பார்த்ததில்லே.. தேடிக் கண்டுபிடிச்சிடலாம்.." என்ற பாண்டியன் "நான் முன்பக்கம் பார்த்துகிட்டு வர்றேன்.. நீ இதுக்கு மேலே பார்த்துகிட்டுப் போ.." என்று வரிசையாக சிலைகளுக்கு உச்சியில் எழுதியிருந்த பெயர்களைப் பார்த்துக் கொண்டே போனான்.

குலச்சிறையார் மங்கையின் கண்களுக்குத் தான் தட்டுப்பட்டார். "அவரு இங்கே இருக்காருங்க.." என்று மங்கையின் குரல் கேட்டுத் திரும்பி, வேகமாக அவள் நின்றிருந்த இடம் நோக்கி வந்தான் பாண்டியன்.  இவனும் மங்கையும் சேர்ந்து ஏட்டில் படித்திருந்த இந்த மூன்று நாயன்மார்கள் சம்பந்தப்பட்ட நிகழ்வுகள் அவன் நினைவுத் திரையில் ஓடின.  மங்கையுடன் சேர்ந்து கோயிலுக்கு வந்திருக்கையில் ஒருசேர இந்த நாயன்மார்களைப் பார்த்ததில்  ஒரு நிறைவு அவன் மனசில் குடிகொண்டிருந்தது.  அது அவன் அடைந்த உற்சாகத்தில் தெரிந்தது.  மங்கையை அழைத்து பக்கத்தில் நிறுத்திக் கொண்டான். இருவரும் சேர்ந்து நின்று அறுபத்து மூன்று நாயன்மார்களையும் வணங்கினர்..

பிராகாரமெங்கணும் ட்யூப் லைட் போட்டு வெளிச்சத்திற்கு பஞ்சமில்லாமல் இருந்தது.  அதனால் இலேசாக இருட்டு கவிந்தாலும் கோயில் சுற்றுப்பாதையைச் சுற்றி வருவது சுலபமாக இருந்தது.  ஸ்தல விருட்சம் இருந்த பகுதிக்கு பக்கத்தில் இருந்த அகலமான மண்டபத்தை அலங்காரமான தூண்கள் தாங்கி நின்றன. தூண்களில் தாமரை மலர்கள் இதழ் விரித்து சிரித்துக் கொண்டிருந்தன.  பீடங்களிலோ படமெடுத்த நாக உருவங்கள். உபானம் முதல் ஸ்தூபி வரை கல்லினாலேயே கட்டப்பட்ட  கற்றளி சோழர்கள் கட்டிய கோயில் என்பதைத் தெரிவித்தது.

சிலுசிலுத்த காற்றில் கருங்கல் மேவிய சுற்றுப்பாதையில் நடப்பது மங்கையின் மனதுக்கு இதமாக இருந்தது. அதுவும் காதல் கணவன் அருகில் பாதுகாப்பாக நடந்து வருவது அந்த இதத்தை மேலும் இதமாக்கியது. பிராகார பாதை முடியும்  இடத்தில் சற்று மேல் தூக்கிக் கட்டப்பட்ட படிக்கட்டுகளைக் காட்டி, "ஏங்க, இங்கே கொஞ்ச் நேரம் உட்கார்ந்து விட்டுப் போகலாமா?" என்றாள் மங்கை.

"செய்யலாமே?" என்றபடி அந்த படிக்கட்டுகளை நெருங்கி வந்த பாண்டியன் சுற்றுப்பாதையில் சுற்றி வரும் யாருக்கும் இடைஞ்சலாக இருக்கக்கூடாதெ ன்று  ஒரு மூலைப் பகுதி பார்த்து அமர்ந்தான். மங்கையும் அவன் பக்கத்தில் அமர்ந்து கொண்ட போது, இறைவன் சன்னதியில் இன்று தனக்கேற்பட்ட அனுபவத்தை அவளுக்குச் சொல்லலாமா என்று பாண்டியன் நினைத்தான். அப்படி நினைத்தானே தவிர தான் அடைந்த அந்த அற்புத உணர்வை அப்படியே அவளும் உணருகிற மாதிரி சொல்ல முடியுமா என்பது அவனுக்கு சந்தேகமாகவே இருந்தது.

அவனின் அமைதியைக் கலைக்கிற மாதிரி, "என்னங்க?.." என்று அவன் சட்டையைத் தொட்டுக் கேட்டாள் மங்கை."நானும் பாத்திட்டுத்தான் வர்றேன்.. என்னவோ அப்போலேந்து ஏதோ யோசனைலேயே இருக்கறப்பல  இருக்கே?  என்ன விஷயம்? எங்கிட்டே சொல்லக் கூடாதா?" என்றாள்.

மங்கையிடம் சொல்லலாமா வேண்டாமா என்று அவனே இரட்டை மனமாய் இருக்கையில், மங்கையே அது பற்றிக் கேட்கும் பொழுது சொல்லாமல் இருக்கக் கூடாது என்று பாண்டியன் நினைத்தான்.

அவளுக்கு புரியும் படியாகச் சொல்ல வேண்டும் என்பதே அவன் கவலையாய் இருந்தது.  முடியும் வரை அப்படிச் சொல்வதற்கு முயற்சிப்போம் என்கிற முடிவான எண்ணத்தில் ஆரம்பத்திலிருந்து அத்தனையையும் விவரித்தான்.  தான் சொல்வதை சரியானபடிக்கு மங்கை உள்வாங்கிக் கொள்கிறாளா என்பதை நிச்சயப்படுத்திக் கொள்ளும் விதத்தில் அவள் முக மாற்றங்களை உன்னிப்பாக கவனத்தில் கொண்டவாறே பாண்டியன் சொல்லிக் கொண்டு வந்தான்.  தீபாராதனைத் தட்டு கற்பூர வெளிச்சம் நாணயத்தில் பட்டுத் தெறித்த ஒளியில் பெருமானின் குறும்புத் தோற்றத்தைப் பார்க்கும் பாக்கியம் கிடைத்தது என்று பாண்டியன் சொன்ன போது அவள் முகம் அடக்க முடியாத வியப்பில் மிளிர்ந்தது. லேசாக அவன் விரல் பற்றிக் கேட்டுக் கொண்டே வந்தவளின் பிடி இறுகியது போலத் தோன்றியது பாண்டியனுக்கு.

எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டவள், "ரொம்ப அதிசயமான்னா இருக்கு?.." என்று தலைசாய்த்து அவனை புதுசாக ஆராய்கிறவள் மாதிரிப் பார்த்தாள்.  "ஒருகால் நடந்தது அத்தனையும் உங்கள் பிரமையாய் இருக்குமோ?" என்று அவள் கேட்ட போது, "இல்லை, பெண்ணே!" என்று அவள் கேட்டதற்கு பதில் சொல்கிற மாதிரி பக்கத்து தூண் இருட்டுப் பகுதியிலிருந்து ஒரு குரல் வந்தது.

சடக்கென்று பாண்டியனும், மங்கையும் அந்த இருட்டுப் பகுதி பக்கம் திரும்பிப் பார்த்தனர்.


(இனி...  இன்னும் வரும்)குறிப்பு: படங்கள் உதவிய  நண்பர்களுக்கு நன்றி
   
Related Posts with Thumbnails