Tuesday, December 22, 2015

விவசாயி வியாபாரி விலைவாசி

'குங்குமம்' வார இதழில் நாஞ்சில் நாடன் எழுதும் 'கைம்மண் அளவு' என்னும் கட்டுரைத் தொடரை வாராவாரம் வாசிக்க நான் தவறியதே இல்லை.   சொல்லப்போனால், அந்தப் பத்திரிகையை வாங்கியதும் பிரித்துப் புரட்டிப் பார்த்து முதலில் வாசிப்பது 'கைம்மண் அளவு' கட்டுரையைத்தான்.

படித்து முடித்ததும், அந்த வாரம் அவர்  கையாண்ட பொருளைக் குறித்து தொடர்ந்த யோசனையில் ஆழாமல் இருந்ததில்லை.  நாஞ்சில் நாடனுக்கே உரித்த எள்ளல் கலந்த தமிழ் சொல்லாட்சியும், மனசில் விளையும் எண்ணங்களுக்கு விரோதமில்லாமல் வரிகளாய்,  வார்த்தைகளாய் வடிவம் பெறும் எழுத்து நேர்மையும்  நம்மையும் பற்றிக்கொள்ளும்.  அன்றைய பொழுது  பயனுள்ள வாசிப்பின் பலனைப் பெற்ற அனுபவமாய்  அது நம்மில் விளையும்..

'குங்குமம்'  14-12-15 இதழில் இந்தத் திருநாட்டின் விவசாய 'மாட்சி'யைப்  பற்றி நாஞ்சில் நாடன் எழுதியிருந்தார்.

இந்தியா ஒரு விவசாய நாடு என்று பள்ளிப் பருவத்திலிருந்து பாடம் பயின்றவர்கள் நாம்.  படித்த கல்விக்கும் வாழ்க்கை அவலங்களுக்குமான சம்பந்தத்தை பல நேரங்களில் ஆரஅமர சிந்திக்கும் வாய்ப்பு கிடைக்கப் பெறாமலேயே நம்மில் பலரின் வாழ்க்கைப் போக்கும் அதற்கென்றே வாய்த்த நெருக்கடிகளும் நம்மை பல செய்திகளிலிருந்து தூர விலக்கி வைத்திருக்கின்றன. நாஞ்சிலாரின் கட்டுரையை படித்த பொழுது அந்த விலகல் வெளிச்சம் போட்டு மனத்தை வாட்டி எடுத்தது.

நாஞ்சில் நாடன் விவரங்களை விரல் நுனியில் வைத்திருப்பவர்.  இந்தக் கட்டுரையில் சொல்கிறார்:

"இந்தியத் திருநாட்டில் 85 விவசாய பல்கலைக் கழகங்கள் உள்ளன.   எத்தனையோ விவசாய ஆய்வு மையங்கள் உண்டு.  எத்தனை  ஆயிரம் விவசாய விஞ்ஞானிகள், அறிஞர்கள், பேராசிரியர்கள், இயக்குனர்கள், முது முனைவர்கள், இளங்கலை,\ முதுகலைப் பட்டதாரிகள்? மற்றும் இந்திய விவ்சாயத்தை முன்னேற்றி எடுக்க என்றே கடவுளால் அனுப்பப்பட்டிருக்கும் பன்னாட்டு  உற்பத்தி, விற்பனை, வணிக நிறுவனங்கள்?...

"மத்திய, மாநில் அரசுகளால் ஆண்டுதோறும் விவசாய அபிவிருத்திக்கென்று வழங்கப்பெறும் மானியங்கள் எத்தனை ஆயிரம்  கோடிகள்?  சுதந்திரம் பெற்ற நாளிலிருந்து  இன்று வரை தள்ளுபடி செய்யப்பட்டிருக்கும் விவசாயக் கடன்கள் எத்தனை ஆயிரம் கோடிகள்?  செயற்கை உரத்திற்கும், பூச்சிக்கொல்லி மருந்துக்கும் விதைகளுக்கும், விவசாய உபகரணங்களுக்கும், விவசாயப்போருட்களின்  கொள்முதலுக்கும் மத்திய  மாநில அரசுகள் வழங்கியிருக்கும் மானியங்கள் இதுவரை எத்தனை கோடிகள்?

இத்தனைக்கும் பிறகும் ஏன் இந்திய விவசாயி எழுந்து நடமாட முடியாமல் தரையோடு தரையாக கிடக்கிறான்?  ஏன்  இத்தனை அதிக அளவிலான தற்கொலைகள்?  ஏன் குடும்பம் குடும்பமாக கூலி வேலைக்கு நகரம் நோக்கி இடம் பெயர்கிறான்?"

---- என்று அவரின் கேள்விகணைகள் வேதனையின் வீச்சாய் நம்மை வாட்டுகின்றன.

"ஒரு இல்லத்தரசிக்கு காலை ஆறு மணிக்குப்  பால் வாங்குவது தொடங்கி இரவு பத்தரை மணிக்கு கேட் பூட்டுவது வரைக்கும் எத்தனை வேலைகளோ அத்தனை வேலைகள் விவசாயிக்கும் தினமும்.  அவனுக்கு இரண்டாம் சனிக்கிழமை, ஞாயிறு, தேசிய விடுமுறைகள் கிடையாது.  CL,SL. PL இல்லை.  மெகா சீரியல் அவனுக்கு  என்னவென்றே தெரியாது.." என்று தொடரும் நாஞ்சில் நாடன் ஒரு விவசாயின் பண்பை, அவன் குணத்தை படம் பிடித்துக் காட்டும் பொழுது நாம் நெகிழ்ந்தே  போகிறோம்.

"வயலுக்குப் போகும் போது சாலையில் கிடக்கும் ஒரு  குப்பம் மாட்டுச்சாணியைப்  பிசைந்த சப்பாத்தி மாவு போல் உருட்டி எடுத்துச் செல்பவன் உழவன்.  வயலில் கிடக்கும் சிறு வெட்டாங்கல்லைத் தூக்கித் தூர விசுபவன்  உழவன். பயிரின் ஊஈடே வளர்ந்து நிற்கும் கோரையைப் பிடுங்கித் தூர எறிபவன் உழவன்.  நமக்குப் பொருட்டின்றி தோன்றுகின்ற சின்னஞ்சிறு வேலைகளையும் பொறுப்பாகச் செய்கிறவன் உழவன்.  சமூகத் தீமைகளையும், அறமற்ற செயல்பாடுகளையும் களை என்று பார்ப்பது விவசாய மனோபாவம். களையப்பட வேண்டியவை களைகள் தாமே அவை?" என்று அவர் கேட்கும் பொழுது நீண்ட பெருமூச்சு தான் வெளிப்படுகிறது.

"இந்த மனோபாவம்' தான் அவனை ஈடேற முடியாமல் செய்கிறது" என்று. கைத்துப்  போன விரக்தியில் நாஞ்சிலார் சொல்கிறார்: "அம்மணங்குண்டி ராஜ்ஜியத்தில் கோமணம் உடுத்துபவன் பைத்தியக்காரன்' என்பார்கள். எல்லோரும் எவ்வழியிலேனும் பொருள் ஈட்ட ராப்பகலாய் முனையும் காலகட்டத்தில் வஞ்சனையும் சூதும், அடுத்தவன் வயிற்றில் அடிக்கும் அநியாயமும் அறியாத உழவன் உய்வது எங்ஙனம்?'  என்று மாய்ந்து போகிறார்.

விவசாயியையும் வியாபாரியையும் வேறுபடுத்திக் காட்டும் நாஞ்சிலாரின் அனுபவப்  படப்பிடிப்பு நம் அனுபவங்களின் பாடங்களையும் நினைவுபடுத்தி எவ்வளவு நியாயமாய்ச் சொல்லியிருக்கிறார் என்று மனசாரப் பாராட்டத் தோன்றுகிறது.  இதோ நாஞ்சில் நாடனின் வார்த்தை வர்ணஜாலம்:

"உழவர் சந்தையில் உட்கார்ந்திருக்கும் விவசாயியையும் வியாபாரியையும் பிரிதறிய  இயலும்.  மொழி, முகபாவம், தராசுத்தட்டு பிடிக்கும் விதம் விவசாயி  எனில் சொத்தைக் கத்தரிக்காய் கண்பட்டால் எடுத்துக் களைவான். சொத்தை, அழுகல், நசுங்கல் என அறிந்தும் வியாபாரி கண்டும் காணாமல் எடை போடுவான்.  விவசாயிடம் வாங்கினால் ஒரு கிலோவில் நூறு கிராம் அதிகமாக இருக்கும்.  வியாபாரியிடம் நூறு கிராம் குறைவாக இருக்கும். விவசாயி வாழ்வானா, வியாபாரி வாழ்வானா?" என்று அவர் கேட்கும் கேள்வியில் நியாயத்  தராசின்  தட்டு வெகுவாகக் கீழிறங்கித்  தாழ்கிறது...

"இத்தனை பேர் இந்த நாட்டில் அமோகமாய் பிழைத்துத்  தழைக்கும் பொழுது விவசாய இனம் மட்டும் ஏன் வஞ்சனைப்பால்  சோறு உண்டு பாழாய்ப்  போகிறது?  அவனுக்குத் தெரியும், தனது பயிர் பச்சைகள் பூக்க, காய்க்க,  வீசும் காற்றுக்கு விலையில்லை..  மானாவாரியாகப் பெய்யும் மழைக்கு விலையில்லை... காயும் பகலவன் கதிர்களுக்கு விலையில்லை.. இயற்கை தனக்கு வழங்கும் நியாயத்தைச் சமூகத்துக்கு திருப்பிச் செய்ய  நினைப்பது அவன் மரபு; பண்பு..." என்று விவசாயினது மன நிலையைப்  படம் பிடித்துக் காட்டுகிறார்..

"ஒரு தரமான தேங்காய்க்கு விவசாயி ஐந்து ரூபாய் விலை பெறும் போது, கடையில் ஏன் அதை இருபத்தைந்து ரூபாய்க்கு வாங்க வேண்டும் என்ற கேள்வியும் நமக்குக் கிடையாது.  நகர்ப்புறங்களில் கூலி வேலைக்குச் செல்வோருக்கு  குறைந்தது தினத்திற்கு நானூறு ரூபாய் சம்பளம்.  கட்டிடத் தொழிலாளியின் கூலி தினமும் நானூறு எனில், விவசாயக் கூலிக்கும் அந்த ஊதியம் வேண்டும் என்பதில் நியாயமுண்டு.  அந்தக் கூலி தருவதற்கு விவசாயியின்  விளைபொருட்கள் அதற்கான விலையில் விற்கப்பட வேண்டும்  தானே?  நியாயமான விலை தேங்காய்க்கு இருபது ரூபாய் விவசாயிக்கு எனில் சந்தையில் அதையே நூறு ரூபாய்க்கு  விற்பார்கள். அதில் நமக்கு  சம்மதம் இருக்காது.  உடனே நாம் விலைவாசி உயர்வுப் போராட்டம் நடத்துவோம்.  ஆனால் இடைத்தரகர்களை, வணிகர்களைக் கேள்வி  கேட்க  மாட்டோம்.  அல்லது  கொய்ப்பரை, எண்ணெய் என இறக்குமதி செய்வோம்" என்று விவசாயப் புறக்கணிப்பைத்  தோலுரித்துக் காட்டுகிறார்.

"இன்றைய இந்திய வணிகச் சூழலில் விவசாயி வாழ வேண்டுமானால், வணிக உலகம் புரியும் அத்தனை மாய்மாலங்களையும் அவனும் செய்ய வேண்டும்.  சொத்தையையும், நசுங்கலையும், அழுகலையும் விற்க வேண்டும்.  முதல் தரம் என்று கூவி மூன்றாம் தரம் தள்ளி விட வேண்டும்.  'எவன் எக்கேடு கெட்டுப்  போனால் என்ன, கை கால் மூளை செயலற்றுப் போனால் என்ன, தன்  பை நிறைந்தால் போதும்' என்று எண்ண வேண்டும்" என்று சாடுபவர் தொடர்கிறார்:

"தீப்பேறு என்னவெனில், அது விவசாயினால் இயலாது என்பதே!  அதற்கான தொழில்நுட்பம் தெரியாது.  வஞ்சனை தெரியாது.  தரகருக்கும் வணிகருக்கும் வழங்கப்பட்டிருக்கும் அரசியல் ஆதரவும் இல்லை.  வேறு என்ன தான் செய்யலாம்?. என்ற அவரின் விடை தெரியாக் கேள்வி  நம்மையும் அசத்துகிறது.

"பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகத் துறைகள், பட்டி மண்டபப் மேடைகள், கருத்தரங்குகள் யாவும் உழவன் பெருமையைப் பேசும். அவனுக்காக கண்ணீர் சிந்தும்.  அனைத்து மத்திய  மாநில நிதிநிலை அறிக்கையிலும் விவசாய மேம்பாடு பற்றி ஒரு பத்தி வாசிக்கப்படும். 'சுழன்றும் ஏரப்பின்னது உலகம்' என்றும், 'உழுவார் உலகத்தார்க்கு அச்சாணி' என்றும், 'உழுதுண்டு வாழ்வாரோ வாழ்வார்' என்றும் திருக்குறள் மேற்கோள் காட்டப்படும்.

"வெட்டுப்படப்போகும் ஆட்டுக் கடாவைக் குளிப்பாட்டி, சந்தனம், குங்குமம், திருநீறு அப்பி சாமி சந்திதானத்தில் நிப்பாட்டித்  தழையைக் கடிக்க நீட்டுவது போல, கொலைக்களத்தில் நிறுத்தப்பட்டிருக்கும் இந்திய  விவசாயம், 'விவசாயம் இல்லாவிட்டால் என்ன, இறக்குமதி செய்து கொள்ளலாம்' என்று நினைக்கிறது அறிவுலகம். அல்லது உணவுப் பொருட்களை இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று  நினைப்பார்கள் போலும்!..

"எதற்கு விவசாய  நிலம், எதற்கு விவசாய நீர் ஆதாரங்கள், எதற்கு விவசாயி? அவன் செங்கல் சுமக்கவும், பெயிண்ட் அடிக்கவும், சாலைப்பணிகளுக்கு போவான்.  அவன் பெண்டிர் உணவு விடுதிகளில் தட்டு கழுவலாம்.  நமது அரசியல்காரர்களுக்கும் 'கர்நாடகமே தண்ணீர் தா' 'ஆந்திரமே தண்ணீர் தா, கேரளமே தண்ணீர் தா' என்று இரந்து கூவித் தொண்டைப்புண் ஏற்படாது.

"நமக்குத்  தாராளமாய் செல்போன், வாட்ஸ் அப், ட்விட்டர், ஃபேஸ்புக், வெப்சைட் சேவைகள் உண்டு.  மெயிலில் ஆர்டர் செய்தால் பிளாட் கதவைத் தட்டுவார்கள்,  பீட்சா, பர்கர், புரோட்டா, சப்பாத்தி, பிரியாணி, குளிர்பானங்கள் கொண்டு வந்து!..  நமது சந்ததியினர் அரிசி காய்க்கும் மரம், வாழைப்பழம் காய்க்கும் கொடி, ஆப்பிள் ஆரஞ்சுக் கிழங்குகள் காய்க்கும் புதர் எனத் தேடித் திரிவார்கள்.

"அருங்காட்சிக் கூடங்களில், கண்ணாடிக் கூண்டுக்குள் கறுப்பாகக் குள்ளமாக இரு  ஆண்  பெண் உருவங்களை, இலை தழை ஆடகளுடன் பழங்குடிகள் என்று நிறுத்தி வைத்திருப்பார்கள்.  எதிர்காலத்தில் வேட்டி உடுத்து, தலையில் துண்டு கட்டிய ஆணையும், பிரா, பிளவுஸ் போடாத  கண்டாங்கி உடுத்த பெண்ணையும் கையில் மண்வெட்டி, பன்னருவாள், கூடை எனக் கொடுத்து கண்ணாடி கூண்டுக்குள் நிறுத்தி, 'விவசாயி' என எழுதி வைப்பார்கள்.  நமது சந்ததியினர் பார்த்து  நிற்பார்கள், பிழைக்கத்  தெரியாமல் அழிந்து போன இனம் என்று வியந்து!

                                                                                 நன்றி: குங்குமம்

-- என்று நாஞ்சில் நாடன்  கட்டுரையை  முடிக்கும் பொழுது அவர் பட்ட வேதனையின் வீச்சு நம்மையும் ஆட்கொள்கிறது.  தேசநலனின் நாம் கொண்டிருக்கும் தீராத காதல், எங்கு நேர்ந்திருக்கிறது  தவறு என்று தெளிவாய்த் தெரிவித்து அந்தத் தவறைக்  களைய  வேண்டிய  தாபமாய் நம்மில் விளைகிறது.

சீரிய சமூக நோக்கங்கள் கொண்ட எழுத்துக்கள் சாகாவரம் பெற்றவை. நியாயங்களுக்குப்  போராடுபவை.  நாஞ்சில் நாடனின் எழுத்துக்களின் வீச்சு நம்மையும் ஆட்கொள்வதில் வியப்பில்லை.

                                                                                       
திரு.எம்.எஸ். சுவாமிநாதன் அவர்களை எல்லோருக்கும் தெரியும்.  சுதந்திர இந்தியாவில் பசுமைப் புரட்சியை ஏற்படுத்திய விவசாய வித்தகர்.  சென்னையில் தன்  பெயரில் ஓர் ஆராய்ச்சி நிறுவனத்தை நிறுவி, 90 வயதிலும் தொய்வில்லாமல் தன் பணியைத் தொடர்ந்து  கொண்டிருக்கிறார். இந்திய விவசாயம் இன்றைய நிலைமை  குறித்து அவருடனான பேட்டி ஒன்றை 'கல்கி'  பத்திரிகை தனது 15-11-15 இதழில் வெளியிட்டிருக்கிறது. அந்தப்  பேட்டியிலிருந்து சில குறிப்பிட்ட பதிவுகள்:

கேள்வி: கடந்த 60 ஆண்டுகளில் இந்திய விவசாயம் எப்படிப்பட்ட முன்னேற்றத்தைக் கண்டுள்ளது?

பதில்:  சுதந்திரம் பெற்ற் காலகட்டத்தில் இந்தியாவில் கடுமையான உணவுப்  பஞ்சம் நிலவியது.  பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி, ஒரு குடும்பத்தில் ஒரு நபர் ஒரு நாள் உணவைத் தியாகம் செய்யுங்கள்' என்று வேண்டுகோள் விடுத்தார். அந்த காலகட்டத்தையெல்லாம் தாண்டி உணவு  உற்பத்தியை அத்கப்படுத்தி,  இன்று  தன்னிறைவு காணும் அளவுக்கு இந்திய அரசாங்கம், இந்தியக் குடிமகன் ஒவ்வொருவருக்கும்  உணவுப் பாதுகாப்பை உறுதிப்ப்டுத்தும் வகையில் நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றியுள்ளது.  இது ஒரு மகத்தான சாதனை.  ஆங்கிலத்தில் இதனை 'From begging bowl to bread basket' என்பார்கள்.   என் வாழ்நாளிலேயே இந்த அபார சாதனையைக் காணும் பேறு பெற்றது என்  பாக்கியம்  என்று  கருதுகிறேன்.

கேள்வி: உணவு உற்பத்தியில் தன்னிறைவு கணட போதிலும் நாட்டில் ஏழ்மை நிலவுகிறதே?

பதில்:  இங்கே உணவுப் பொருளுக்குப் பஞ்சமில்லை.  தாராளமாகக்  கிடைக்கிறது.  ஆனால் அதை வாங்கும் சக்தி எல்லா மக்களுக்கும் இல்லை எனபது தான் இதற்குக் காரணம்.


                                                                             -- நன்றி:  கல்கி

போதும் பேட்டி.  இந்தப் பேட்டியில்  நமக்கு வேண்டிய செய்தியை எடுத்துக்  கொண்டாகி விட்டது.

இந்தியாவில் தன்னிறைவு காணும்  அளவுக்கு விவசாயம்.  உணவுப் பொருளுக்குப் பஞ்சமில்லை.  ஆனால் வாங்கும் சக்தி எல்லா மக்களுக்கும் இல்லை---  என்பது அடிக்கோடிட்டு சொல்ல வேண்டிய விஷயம்.

உணவு உற்பத்திக்குப்  பஞ்சமில்லை.  ஆனால் அதை வாங்கும் சக்தி எல்லா மக்களுக்கும் இல்லை என்றால் என்ன அர்த்தம்?..


தெரிந்தவர்கள் சொல்லலாம்..
படங்களைப் பதிவிட்டோருக்கு நன்றி.


Friday, February 13, 2015

இனி (பகுதி-10)

காளியண்ணன் கடையைக் கடக்கும் பொழுது பாண்டியன்  திரும்பிப் பார்த்தான்.  கடையிலிருந்த காளியண்ணன் இவனைப் பார்த்ததற்கு அடையாளமாக கையசைத்தான்.  மங்கை பக்கத்தில் இல்லாமலிருந்தால் பெயர் சொல்லி அழைத்திருப்பான் போலிருந்தது.

பாண்டியன் ஒரு வினாடி தயங்கி, "கடையில் ஏதாவது வாங்க வேண்டுமா?" என்று மங்கையிடம் கேட்டான். ஏதுமில்லை என்பதாக மங்கை தலையசைத்தாள்.

இருவரும் தங்கள் செருப்புகளை கடையின் பக்கத்திலிருந்த தடுப்பில் கழட்டி விட்டு விட்டு வந்த பொழுது "டூரிஸ்ட் வண்டி வந்திருக்கு.. அதான் கோயில்லே ரஷ்.." என்று கோயிலின் அப்பொழுதிய நிலவரத்தைச் சொல்கிற மாதிரி சொன்னான் காளியண்ணன்.

"அப்படியா?.." என்று அவன் சொன்னதை கேட்டுக் கொண்டதற்கு அடையாளமாக லேசாகச் சிரித்து நகர்ந்தான் பாண்டியன்.

கோயிலை நெருங்கிய பொழுது தாழ்தள டூரிஸ்ட் பஸ்கள் இரண்டு அருகருகே நின்று கொண்டிருப்பது தெரிந்தது.  இளநீர் வண்டிக்காரருக்கு  நல்ல  போணி. சீவிச் சீவி தலைப்பகுதியை துளையிட்டு ஸ்ட்ரா போட்டுத் தந்து  கொண்டேயிருந்தார். அந்த நேரத்திலும் ஒரு கும்பலே இளநீர் குடித்துக் கொண்டிருந்தது.

இந்தக் கோயில் பாடல் பெற்ற ஸ்தலம்.  சுற்று வட்டார பதினைந்து கோயில் செயினில் இதுவும் ஒரு கண்ணி..  அதனால் டூரிஸ்ட் பஸ்கள் வந்து போவது வெகு சகஜம்.  இப்படியான பஸ்களில் வந்து போவோர்கள் எதை வாங்குவார்கள் எதை வாங்க மாட்டார்கள் என்று தெரியாது.  அதனால் சன்னதித் தெரு நெடுக எக்ஸிபிஷன் மாதிரி நிறைய விதவிதமான கடைகள்.

துவஜஸ்தம்பத்தைக் கடந்த பொழுது இடது பக்க பிராகார முனையில் ஒரு பெருங்கூட்டம் நின்றிருந்தது இங்கிருந்தே தெரிந்தது.  "இந்த மாதிரி டூரிஸ்டுங்க வந்தாத்தான் நம்ம ஊர் கோயிலும் களைகட்டுது.." என்று போகிற போக்கில் பக்கத்தில் வந்தவர் சொல்லிக்  கொண்டே சென்றதைக் கேட்டு பாண்டியன் மங்கை பக்கம் திரும்பிச் சிரித்தான்.

"அவர் சொன்னத்துக்காச் சிரிக்கிறீங்க?" என்றாள் மங்கை.

"பொதுவா பிரதோஷம், பின்மாலைப் பொழுது இந்த நேரங்கள்லே தான் கோயில்லே உள்ளூர் ஜனங்களைப்  பாக்க முடியுது. மத்தபடி அவர் சொன்னது சரிதான். டூரிஸ்டுங்க வந்தாத் தான் இந்த மாதிரி கலகலப்பு" என்றான் பாண்டியன்.

அவன் சொன்னது  போலவே உள்ளே சன்னதிக்கு இருவரும் சென்றதும் நெரிசல் கொஞ்சம் அதிகமாகத் தான் இருந்தது.  வெளியூர்க்காரர்களுக்கு வழிவிட்டு ஒதுங்கி நின்றான் பாண்டியன். கூட்டம் கொஞ்ச நேரத்திலேயே மட்டுப்பட்டதும் இருவருக்கும் ஆடலரசனின் அற்புதமான தரிசனம் கிடைத்தது.

வலப்புற மேற்கரத்தில் டமாருகம் பற்றியும், கீழ்க்கரம் அபயஹஸ்தமாகவும், இடப்புற மேற்கரம் அக்னியைத் தாங்கியும், கீழ்க்கரம் குஞ்சிதபாதம் காட்டியும், வலது திருவடியை முயலகன் மீதும், இடதை தூக்கிய திருவடியாகவும் கொண்ட இறைவனின் அழகை தரிசித்த களிப்பில் மங்கை
மெய்மறந்திருந்திருந்தாள்.  பாண்டியனோ 'தோள் கண்டார் தோளே கண்டார்' நிலையில் பெருமானின் திருமுகத்தில் பதித்த விழிகளை பெயர்த்தெடுக்க சக்தியில்லாதிருந்தான்.  அந்த லயிப்பினூடையான நினைவு சொக்கலில் பெருமானின் முக அழகில் இன்று குறும்புக் கீற்றொன்று ஒளிந்திருக்கிற மாதிரி பாண்டியனின் மனசுக்குப் பட்டது.


ஏற்கெனவே அழகு கொஞ்சும் ஈஸ்வரன் முகத்தில் இந்த குறும்பு பாவனை இன்னும் அலாதி அழகைச் சேர்த்திருந்தது.  அதை உணர்ந்த மாத்திரத்தில் சந்தோஷத்தில் பாண்டியனின்  மனம் குதிபோட்டது.  இந்த விளையாடல் உணர என்ன பாக்கியம் செய்தோம் என்று நினைத்துக் கொண்டான். அந்தக் கோலத்தை இன்னும் உள்வாங்கிக் கொள்கிற ஆவலில் தீட்சண்யத்தைப் பார்வையில் தேக்கி பாண்டியன் பார்த்த பொழுது குறும்பு போன இடம் தெரியாது இயல்பாய்த் தெரிந்தது. . உடனே அவன் மனம் சுணங்கிப் போனது. குறும்பு கொப்பளிக்கும் அந்த திருமுகத்தை மறுபடியும் பார்க்க வேண்டுமென் று மனசு தவியாய் தவித்தது.  என்ன செய்யலாம் என்று ஒருவினாடி யோசித்தான்.  பார்வை தன்னை வஞ்சிக்கிறதோ என்று பதட்டப்பட்டான். தொடர்ச்சியாய் கூர்ந்து பார்ப்பதினால் இப்படி சலனம் ஏற்பட்டு இருக்கலாம் என்று நினைத்தவன், இமைகளை மூடி ஒருநொடி பார்வையைத் துண்டித்து புதுசாகப் பார்க்கிற மாதிரி இமை திறந்து பார்த்தால் ஒரு கால் அந்த குறும்பு முக தரிசனம் மறுபடியும் கிடைக்குமோ என்கிற நப்பாசையில் இரு கைகளையும் குவித்து கண்மூடி இறைவன் நாமம் துதித்தான். சடக்கென்று கண் திறந்து பார்த்தான்.  ஊஹூம்.. இவன் ஜாலக்குகளுக்கெல்லாம் இறைவன் மசிந்ததாகத் தெரியவில்லை.  பாண்டியன் என்ன பாடுபட்டும், நேராக-பக்கவாட்டில்- என்று எப்படிப் பார்த்தும் பெருமானின் முகத்தில் விளைந்த குறும்பின் விளைவான அந்த குறுஞ்சிரிப்பு அவன் உணர்வில் பதிய மாட்டாமல் அடம் பிடித்தது.  சும்மா இருந்தவனுக்கு சொர்க்கலோகத்தைக் காட்டி பறித்துக் கொண்ட மாதிரி இருந்தது.  அந்த ஏமாற்றத்தை ஏற்றுக் கொள்ள முடியாமல் பாண்டியனின் மனசு பரபரத்தது.

அதற்குள் தீபாராதனைத் தட்டு கற்பூர ஜ்வலிப்புடன் நெருங்கி விட்டது.  மங்கை தான் பர்ஸ் திறந்து சில்லரை எடுத்துத் தட்டில் இட்டாள்.  அவள் தட்டில் இட்ட பளபள நாணயத்தில் கற்பூர ஆரத்தியின் ஜ்வலிப்புப்பட்டுத் தெறித்தத் தருணத்தில் இறைவனின்  அந்த குறும்பு முகக் கோலம் அட்டகாசமாக நாணயத்தில் பட்டுத் தெறித்த ஒளியில் காட்சியளித்து
மறைந்ததை பாண்டியன் பார்த்தான்.  அவன் மனசு நெக்குறுகிக் கரைந்தது.   சந்தோஷத்தில் பூரித்து சிலிர்த்தது.  தலையிலிருந்து உள்ளங்கால் வரை ஜில்லிட்ட மாதிரி இருந்தது. அர்ச்சகர் தந்த வீபூதியை அனிச்சையாய் கைக்குழிவில் வாங்கி நெற்றியில் இட்டுக் கொண்டது அவனே இல்லை போல் அவனுக்குத் தோன்றியது.

"போலாமா?.." என்ற மங்கையின் குரல் எங்கோ வெகு தூரத்திலிருந்து கேட்பது போலக் கேட்டாலும் தெளிவாக இருந்தது.  நிகழ்வுலகிற்கு இழுத்துக் கொண்டு வரப்பட்ட சுவாரஸ்யத்தில்"போலாமே?" என்றவன் தலை நிமிர்த்தி மீண்டும் இறைவனைப் பார்த்தான்.  'போய்விட்டு வா!' என்று மலர்ச்சியுடன் அனுமதி கிடைத்த மாதிரி இருந்தது.  சின்னக் குழந்தை மாதிரி மலங்க மலங்கப் பார்த்தபடி மங்கையைத் தொடர்ந்தான் பாண்டியன்.

வலதுபக்க அம்மன் சன்னதியிலும் கூட்டம் தான்.  இறைவன் சன்னதியில் தரிசனம் முடித்து அம்மன் சன்னதிக்கு வந்தவர்கள் தான் இங்கும் சூழ்ந்து நின்றிருந்தார்கள்.  அவர்கள் திருப்தியாக அர்ச்சனை, தரிசனம் எல்லாம் முடித்து செல்லும் வரை பாண்டியன் விலகியிருந்து காத்திருந்தான்.  மங்கை மட்டும் சென்று சன்னதி பக்கம் எட்டி எட்டி பார்த்து விட்டு வந்தாள்.  வந்தவள், "ஒண்ணும் தெரிலீங்க.." என்றாள்.

"நாம் தான் அடிக்கடி வர்றோமே?.. அவங்க இருந்து நிதானமாக தரிசனம் செய்து போகட்டும்.  அதற்கு பின்னால் நாம் போகலாம்.." என்றான் பாண்டியன்.

அம்மன் கர்ப்பகிரகத்திற்கு நேர் எதிரே மேல் பக்கத்தில் பெரிய நிலைக் கண்ணாடி ஒன்றை பதித்திருந்தார்கள்.  அதில் அம்மன் உருவம் தெரிகிறதா என்று பார்த்து விட்டு வந்தவள், வரும் பொழுதே உதடைப் பிதுக்கிக் கொண்டு வந்தாள்.

ஐந்தே நிமிடங்களில் கூட்டம் கலைந்து விட்டது.  பாண்டியனும் மங்கையும் நிதானமாக நின்று கைகுவித்தார்கள்.  மடிசார் புடவை கட்டி அம்மனுக்கு அலங்காரம் செய்திருந்தனர்.  திவ்யமான தரிசனம். அர்ச்சகர் கொடுத்த குங்குமம் வாங்கி இருவரும் இட்டுக் கொண்டனர்.

பிராகாரச் சுற்றுக்காக இடப்பக்கம் வந்த பொழுது அறுபத்து மூவர் வரிசை ட்யூப்  லைட் போட்டு வெளிச்சமாக இருந்தது.  அந்தப்பக்கம் விறுவிறுவென்று போய் அறுபத்து மூவர்களில் யாரையோ தேடிக்கொண்டிருப்பவளைப் போல் மங்கை ஒவ்வொரு சிலையாகப் பார்த்துக் கொண்டே வந்தாள். இங்கிருந்து பார்க்கும் பொழுதே பாண்டியனுக்கு நின்ற சீர் நெடுமாற நாயனாரின்  சிலைஎந்த இடத்தில் இருக்கும் என்று தெரிந்த து.  அவரைத் தான் தேடிக்கொண்டு மங்கை போகிறாள் என்று நினைத்தான்.  அவன்  அப்படி நினைக்கும் பொழுதே, மங்கை சடக்கென்று நின்று விட்டாள்.   நின்றவள் இவன் நிற்கும் பக்கம் பார்த்து கையசைத்தாள்.  பாண்டியன் அவளை நெருங்கிய போது மங்கை, மங்கையர்கரசியாரின் சிலையின்  முன்  நின்று கொண்டிருந்தாள். .

பாண்டியன்  தன்  அருகாமையில் வந்ததை உணர்ந்ததும், "ராணி இங்கே, ராஜா எங்கேயோ?" என்றாள்.

"வா, காட்டுகிறேன்.." என்று அவளை அழைத்துப் போனான் பாண்டியன். கிட்டத்தட்ட பத்து பன்னிரண்டு சிலைகளைத் தாண்டி, "இதோ.." என்று நெடுமாற நாயனாரைக் காட்டினான் பாண்டியன்.

கொஞ்ச நேரம் அரசியார் இருந்த பக்கமும், இந்தப் பக்கமும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தாள் மங்கை.  "நம் கணக்குக்கு இன்னும் ஒருத்தர் குறையறார், இல்லியா?.. அந்த மந்திரியார் பேரு என்னங்க?.."

"யாரு, குலச்சிறையாரைச் சொல்லிறியா?"

"ஆமாங்க.. அவரும் அறுபத்து மூவரில் ஒருவர் தானே?.. அவரு எங்கேங்க?"

"நானும் பார்த்ததில்லே.. தேடிக் கண்டுபிடிச்சிடலாம்.." என்ற பாண்டியன் "நான் முன்பக்கம் பார்த்துகிட்டு வர்றேன்.. நீ இதுக்கு மேலே பார்த்துகிட்டுப் போ.." என்று வரிசையாக சிலைகளுக்கு உச்சியில் எழுதியிருந்த பெயர்களைப் பார்த்துக் கொண்டே போனான்.

குலச்சிறையார் மங்கையின் கண்களுக்குத் தான் தட்டுப்பட்டார். "அவரு இங்கே இருக்காருங்க.." என்று மங்கையின் குரல் கேட்டுத் திரும்பி, வேகமாக அவள் நின்றிருந்த இடம் நோக்கி வந்தான் பாண்டியன்.  இவனும் மங்கையும் சேர்ந்து ஏட்டில் படித்திருந்த இந்த மூன்று நாயன்மார்கள் சம்பந்தப்பட்ட நிகழ்வுகள் அவன் நினைவுத் திரையில் ஓடின.  மங்கையுடன் சேர்ந்து கோயிலுக்கு வந்திருக்கையில் ஒருசேர இந்த நாயன்மார்களைப் பார்த்ததில்  ஒரு நிறைவு அவன் மனசில் குடிகொண்டிருந்தது.  அது அவன் அடைந்த உற்சாகத்தில் தெரிந்தது.  மங்கையை அழைத்து பக்கத்தில் நிறுத்திக் கொண்டான். இருவரும் சேர்ந்து நின்று அறுபத்து மூன்று நாயன்மார்களையும் வணங்கினர்..

பிராகாரமெங்கணும் ட்யூப் லைட் போட்டு வெளிச்சத்திற்கு பஞ்சமில்லாமல் இருந்தது.  அதனால் இலேசாக இருட்டு கவிந்தாலும் கோயில் சுற்றுப்பாதையைச் சுற்றி வருவது சுலபமாக இருந்தது.  ஸ்தல விருட்சம் இருந்த பகுதிக்கு பக்கத்தில் இருந்த அகலமான மண்டபத்தை அலங்காரமான தூண்கள் தாங்கி நின்றன. தூண்களில் தாமரை மலர்கள் இதழ் விரித்து சிரித்துக் கொண்டிருந்தன.  பீடங்களிலோ படமெடுத்த நாக உருவங்கள். உபானம் முதல் ஸ்தூபி வரை கல்லினாலேயே கட்டப்பட்ட  கற்றளி சோழர்கள் கட்டிய கோயில் என்பதைத் தெரிவித்தது.

சிலுசிலுத்த காற்றில் கருங்கல் மேவிய சுற்றுப்பாதையில் நடப்பது மங்கையின் மனதுக்கு இதமாக இருந்தது. அதுவும் காதல் கணவன் அருகில் பாதுகாப்பாக நடந்து வருவது அந்த இதத்தை மேலும் இதமாக்கியது. பிராகார பாதை முடியும்  இடத்தில் சற்று மேல் தூக்கிக் கட்டப்பட்ட படிக்கட்டுகளைக் காட்டி, "ஏங்க, இங்கே கொஞ்ச் நேரம் உட்கார்ந்து விட்டுப் போகலாமா?" என்றாள் மங்கை.

"செய்யலாமே?" என்றபடி அந்த படிக்கட்டுகளை நெருங்கி வந்த பாண்டியன் சுற்றுப்பாதையில் சுற்றி வரும் யாருக்கும் இடைஞ்சலாக இருக்கக்கூடாதெ ன்று  ஒரு மூலைப் பகுதி பார்த்து அமர்ந்தான். மங்கையும் அவன் பக்கத்தில் அமர்ந்து கொண்ட போது, இறைவன் சன்னதியில் இன்று தனக்கேற்பட்ட அனுபவத்தை அவளுக்குச் சொல்லலாமா என்று பாண்டியன் நினைத்தான். அப்படி நினைத்தானே தவிர தான் அடைந்த அந்த அற்புத உணர்வை அப்படியே அவளும் உணருகிற மாதிரி சொல்ல முடியுமா என்பது அவனுக்கு சந்தேகமாகவே இருந்தது.

அவனின் அமைதியைக் கலைக்கிற மாதிரி, "என்னங்க?.." என்று அவன் சட்டையைத் தொட்டுக் கேட்டாள் மங்கை."நானும் பாத்திட்டுத்தான் வர்றேன்.. என்னவோ அப்போலேந்து ஏதோ யோசனைலேயே இருக்கறப்பல  இருக்கே?  என்ன விஷயம்? எங்கிட்டே சொல்லக் கூடாதா?" என்றாள்.

மங்கையிடம் சொல்லலாமா வேண்டாமா என்று அவனே இரட்டை மனமாய் இருக்கையில், மங்கையே அது பற்றிக் கேட்கும் பொழுது சொல்லாமல் இருக்கக் கூடாது என்று பாண்டியன் நினைத்தான்.

அவளுக்கு புரியும் படியாகச் சொல்ல வேண்டும் என்பதே அவன் கவலையாய் இருந்தது.  முடியும் வரை அப்படிச் சொல்வதற்கு முயற்சிப்போம் என்கிற முடிவான எண்ணத்தில் ஆரம்பத்திலிருந்து அத்தனையையும் விவரித்தான்.  தான் சொல்வதை சரியானபடிக்கு மங்கை உள்வாங்கிக் கொள்கிறாளா என்பதை நிச்சயப்படுத்திக் கொள்ளும் விதத்தில் அவள் முக மாற்றங்களை உன்னிப்பாக கவனத்தில் கொண்டவாறே பாண்டியன் சொல்லிக் கொண்டு வந்தான்.  தீபாராதனைத் தட்டு கற்பூர வெளிச்சம் நாணயத்தில் பட்டுத் தெறித்த ஒளியில் பெருமானின் குறும்புத் தோற்றத்தைப் பார்க்கும் பாக்கியம் கிடைத்தது என்று பாண்டியன் சொன்ன போது அவள் முகம் அடக்க முடியாத வியப்பில் மிளிர்ந்தது. லேசாக அவன் விரல் பற்றிக் கேட்டுக் கொண்டே வந்தவளின் பிடி இறுகியது போலத் தோன்றியது பாண்டியனுக்கு.

எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டவள், "ரொம்ப அதிசயமான்னா இருக்கு?.." என்று தலைசாய்த்து அவனை புதுசாக ஆராய்கிறவள் மாதிரிப் பார்த்தாள்.  "ஒருகால் நடந்தது அத்தனையும் உங்கள் பிரமையாய் இருக்குமோ?" என்று அவள் கேட்ட போது, "இல்லை, பெண்ணே!" என்று அவள் கேட்டதற்கு பதில் சொல்கிற மாதிரி பக்கத்து தூண் இருட்டுப் பகுதியிலிருந்து ஒரு குரல் வந்தது.

சடக்கென்று பாண்டியனும், மங்கையும் அந்த இருட்டுப் பகுதி பக்கம் திரும்பிப் பார்த்தனர்.


(இனி...  இன்னும் வரும்)குறிப்பு: படங்கள் உதவிய  நண்பர்களுக்கு நன்றி
   

Wednesday, January 28, 2015

இனி (பகுதி-9)

'மனவாசம்' பத்திரிகையில் 'ஹலோ, தோழீ...' என்று ஒரு பகுதி உண்டு.  வாழ்க்கையில் தங்களுக்கு ஏற்பட்ட வித்தியாச அனுபவங்களை நெருங்கிய தோழியிடம் பகிர்ந்து கொள்வதைப் போல பத்திரிகைத் தோழியிடம் பகிர்ந்து கொண்டு பதில் பெறுகிற மாதிரியான ஒரு பகுதி அது.  இந்தப் பகுதியில் பகிரப்படுகிற அனுபவங்கள் பெரும்பாலும் படிக்கிற வாசகர்களை ஏதாவது ஒருவிதத்தில் கவருகிற மாதிரி அமைந்திருக்கும்.

எழுபத்தைந்து வயசு அனந்தசயனம் தான் அந்தப் பகுதியைக் கவனித்துக் கொள்பவர். அதாவது அவர் தான் தோழி.  மாதத்திற்கு ஒருமுறை அலுவலகத்திற்கு வந்து நான்கு வாரங்களுக்கான 'ஹலோ, தோழீ'க்கான மேட்டரை ஒரு சேர கொடுத்து விட்டுப் போவார். அப்படி வருகையில் இந்தப்  பகுதிக்காக வாசகர்களிடமிருந்து வரும் கடிதங்களையும் பெற்றுச் செல்வார். 'ஹலோ, தோழீ'யின் தொடர்ச்சிப் பகுதிகளுக்கு அந்தக் கடிதங்கள் தாம் அடித்தளம்.

இப்பொழுது புதிதாக உதவி ஆசிரியர்களுக்கு 'பாரம்' பிரித்த சூழ்நிலையில் 'ஹலோ, தோழீ' பகுதி மோகனுக்காக ஒதுக்கப்பட்ட பாரத்தில் ஒரு பகுதியாக சேர்ந்து கொண்டிருந்தது.  அதனால் இந்தத் தடவை அவர் வந்திருந்த பொழுது மோகனை நேரிடையாகப் பார்த்து அவனிடம் தான் கொண்டு வந்திருந்த அச்சுக்கான மேட்டரைக் கொடுத்தார்.  அவரது வயதிற்கும் அனுபவத்திற்கும் மரியாதை தரும் நோக்கில் மோகன் எழுந்திருந்து அவர் தந்த காகிதங்களை வாங்கிக் கொண்டான்..

"தோழி, சார்! உங்கள் பகுதிக்கு நானும் ஒரு வாசகன், தெரியுமோ உங்களுக்கு?" என்று அவன் சொன்னதும் கலகலவென்று சிரித்து விட்டார் அனந்தசயனம். "தோழி,சார்'ன்னு நீங்க என்னை அழைச்சதாலே சிரிச்சிட்டேன். தப்பா நெனைக்காதீங்க.." என்று அவர் சொன்னதும் மோகனின் இதழ்க் கடையில்  புன்முறுவல் தவழ்ந்தது.

"ஆசிரியர் தான், இந்த 'ஹலோ, தோழீ' பகுதிக்கு அந்தத் தலைப்பைக் கொடுத்தது. சில விஷயங்களை ஒரு பெண் சொல்ற மாதிரி இருந்தா ஈடுபாட்டோட ஆண்களும் கேப்பாங்கன்னு அவர் சொன்னார்" என்றார் அ.சயனம். "இந்தப் பகுதியை எழுதறது ஆணா இருந்தாலும், பெண் எழுதற மாதிரி ஒரு தோற்றம் கிடைச்சாப் போதும்ன்னார் அப்போ.  அவர் சொன்னது கிட்டத்தட்ட சரியாத் தான் போய்க்கிட்டு இருக்கு. கம்பாரிங் வித் பெண் வாசகர்கள், எனக்கு ஆண் வாசகர்கள் தான் அதிகம்." என்றார். அப்படிச் சொன்னதில் ஒரு சுதந்திரத் தன்மையை அவர் உணர்ந்த மாதிரி இருந்தது.

"அப்படீன்னா, வாட் எபெளட் பெண்கள்?.. பெண் சொல்றதை பெண்கள் எப்படிக் கேட்டுப்பாங்க?.. எனி ஐடியா?" என்று அவர் பக்கம் தலையைச் சாய்த்துக் கேட்டான் மோகன்.

"இது கொஞ்சம் கஷ்டமான கேள்வி..." என்று மோவாயைத் தடவி விட்டுக் கொண்டார் அனந்தசயனம். "இருந்தாலும் எனக்குத் தெரிஞ்சதைச் சொல்ல முயற்சிக்கறேன்." என்று தொலைபேசி இணைப்புக்கு அருகில் நாற்காலி போட்டு உட்கார்ந்து லெட்ஜர் என்ட்ரி போட்டுக் கொண்டிருந்த சாந்தா பக்கம் பார்த்தார்.  அவளுக்குக் கேட்டு விடக்கூடாது என்பதை நிச்சயப்படுத்திக் கொண்ட மாதிரி தாழ்ந்த குரலில்,"பொதுவாச் சொல்றேன்.."என்று தான் நினைப்பதை சொல்ல ஆரம்பித்தார்.. " இந்த யோசிக்கறதுங்கறதை எடுத்திண்டாலே அதுவே பெண்கள் குணம்  தான். அவங்க நடவடிக்கைலாம் பாத்தாலே தெரியும். தடாலடியா இல்லாம  எதுவும் யோசிப்பின் அடிப்படைலே இருக்கும். பெண்கள்னாலே  அவங்க நினைப்புலே ஒரு விசேஷம் உண்டு. எல்லாத்திலேயும் இவங்களுக்குன்னு ஒரு தீர்மானமான கருத்து இருக்கும். தே ஆர் வெரிமச் ஸின்ஸியர் டு தெர் தாட்ஸ். அப்படி அவங்க வைச்சிருக்கிற கருத்துக்கு ஒத்து வந்தா, இந்த  வாரம் தோழி நல்லாச் சொல்லியிருக்காளேன்னு நெனைச்சிப்பாங்க.  ஒத்து வரலைனா, பெரிசா சொல்ல வந்துட்டா, பாரு'ன்னு தூக்கி எறிஞ்சிடுவாங்க.. தட்ஸ் ஆல்.." என்று கையை வீசிக் காட்டியவர் தொடர்ந்தார். "இதுலே விஷயம் என்னன்னா, மோகன்.. வீ ஆல் ஆர் ஹூயூமன் பீயிங்ஸ்.. இருந்தாலும் ஒரு அட்ராக்ஷன். அவ்வளவுதான். இதிலே ஆணுக்கு இருக்கற தீவிரம் பெண்ணுக்கு இல்லேன்னு  நெனைக்கறேன்.  பெண்ணுக்கு ஆணைப்பத்தித் தெரிஞ்சிக்கறதை விட தன்னைப் பத்தியும், தன்னைப் பத்தி இன்னொருத்தர் நல்லபடியா தெரிஞ்சிக்கணும்ங்கறதிலேயும் அக்கறை அதிகம் உண்டு.  நாலு பேருக்கு நடுவே லட்சணமா தன்னைக் காட்டிக்கணும்ங்கற ஆர்வம் அவங்க பிறக்கும் பொழுதே கூடவே பிறந்திடும்ன்னு நெனைக்கிறேன். கொஞ்சமே யோசிச்சாலும் பெண்கள் வாழ்க்கை பெண்கள் உலகத்துக்குள்ளேயே புதையுண்டு போயிருப்பது தெரியும்" என்றார்.

"ஐ ஸீ.." என்றான் மோகன். "இதுக்கு என்ன சொல்றீங்க?.. ஆண் நினைக்க மாட்டானா? வீட்லே கிடைக்கற அட்வைஸ்லாம் கேட்டுக்கறது போதாதுன்னு, பத்திரிகையைப் பிரிச்சா இதிலுமான்னு ஆண் நெனைக்க மாட்டானா?"

"அப்படி நெனைக்காதவாறு எழுதற மேட்டரை கையாளறோம்லே?.. அதான் அதிலே இருக்கற சூட்சுமம்.." என்று கண்ணைச் சிமிட்டினார் தோழி சார்.

"சார்! எழுத வந்தா எத்தனை விஷயம் தெரிஞ்சிக்க வேண்டியிருக்கு? இதெல்லாம் இங்கே வேலைலே சேந்த பின்னாடி தான் ஒவ்வொண்ணா தெரிஞ்சிக்கறேன்" என்றான் மோகன்.

"இப்போ உன் விஷயத்துக்கு வருவோம்.." என்றார் அனந்தசயனம். "உன்னோட 'இனி' கதையை கதையா நினைக்க முடிலே, என்னாலே.  அதான் என்ன சமாச்சாரம்ன்னு கேட்டுடலாம்னுட்டு.." என்று அவர் சொல்லி நிறுத்தியது தொடர்ந்து சொல்லத் தயங்குவது போலிருந்தது.

"சொல்லுங்க, சார்.. என்ன விமரிசனம்னாலும்  சொல்லுங்க, சார்! கேட்டுக்கறேன்.." என்று ஆர்வத்துடன் கேட்டான் மோகன்.

"அதான் சொல்றேனே.. ஒரு கதைன்னு நினைக்க முடியாதபடிக்கு நிஜமா நடந்த மாதிரி எழுதறே.. நெஜமாலுமே நடந்த நிகழ்ச்சிகளை வைச்சு கதை மாதிரி சம்பாஷணைக் கோத்து எழுதறயா?..  இல்லே, இது முழுசும் உன் கற்பனைலே தோணின கதையா?.. அதான் தெரிஞ்சிக்கணும்னுட்டு.. பொதுவா கதைங்களுக்கு  ரிஷிமூலம், நதி மூலம் கேக்கக்கூடாதும்பா.. ஏதோ, தோணித்து.. கேட்டுட்டேன்.  கட்டாயமில்லே. சொல்ல முடிஞ்சா, சொல்லு.." என்றார்.

"உங்களுக்குச் சொல்றதுக்கு என்ன சார்?.. கற்பனை தான். நிஜம்ன்னு ஒண்ணு இல்லாம இல்லே; இருந்தாலும் கற்பனைப் பூச்சு தான் அதிகம். உங்களுக்குத் தெரியாததா, சார்?.. நடக்கற நிகழ்வுகளைப் பாத்து இப்படி இருந்தா எப்படி இருக்கும்ன்னு எழுத்தாளன் யோசிக்கறது கற்பனையா வடிவம் பூண்டு கதையாறது தானே சார், கதைங்கள்லாம்..  எந்த விகிதாச்சாரத்தில் நிஜத்தையும் கற்பனையையும் கலக்கணுமோ அந்த படிக்குக் கலந்த கலவை சார் இந்தக் கதை.." என்றான் மோகன்.

"உன் பதில் கூட அபாரம்ப்பா. மனசிலே இருக்கறதே அப்படியே சொல்றே.. இந்த மாதிரி கல்மிஷம் இல்லாம பேசறவாளுக்கு லைப்லே எல்லாம் நல்லபடியே நடக்கும். இன்னிக்கு இந்தக் கிழவன் சொல்றேன், பார்.. நீ நன்னா வருவே!" என்று ஆசிர்வதிக்கிற மாதிரி கைதூக்கி அவன் தோள் தொட்டார். "நீ எழுதின அந்தக் காட்சியை--  கோவில்லே அம்பலவாணனின் கன்னக் குமிழ்ச்சிரிப்பை அனுபவிச்சு தரிசனம் பண்ணின காட்சியை-- என்னால் மறக்க்வே முடியாது. அது நிச்சயம் கற்பனை இல்லே; உண்மையா நீயே அனுபவிச்சதாத் தான் இருக்கணும், இல்லியா?" என்றார்.

"உண்மைதான் சார்.." என்று ஒப்புக்கொள்கிற மாதிரி சொன்னான்  மோகன். "எப்பவுமே கோயிலுக்குப் போனா, இறைவன் சன்னதியில் இறைவனோடு ஐக்கியம் ஆற மாதிரி மனசை மலர்த்தி வைச்சிக்கறது என்னோட பழக்கம். முகதரிசனம் கிடைக்கறப்போ மனசோ அவர் கிட்டே பேசிக் கலக்க தவியா தவிக்கும். இந்த உடம்பு சட்டை கைகுவிச்சு தேமேன்னு கண்டதே காட்சியா நிக்க வேண்டியது, தான்! இந்த மனசுக்கு இருக்கற தைரியத்தைப் பாருங்க, துணிச்சலா அவரோட பேசக்கூட செய்யும்! நான் ஒதுங்கி நிக்க வேண்டியது தான்! அவங்க ரெண்டு பேரும் ஒண்ணாயிடுவாங்க! எப்படி  இருக்கு, பாருங்க நியாயம்!" என்று கலகலப்பாகச் சிரித்துக் கேட்டான் மோகன்.

"கொடுத்து வைச்ச ஆத்மா, ஐயா!" என்றார் அனந்தசயனம். "நீயே ஒரு நல்ல கவிதை மாதிரி இருக்கே! ஒண்ணு தெரியுமோ, உனக்கு?.. நல்ல கவிதைக்கு இலக்கணம் எதுக்கும்பாங்க.. இலக்கணம் வேணாம்ன்னு இல்லே. இலக்கணம்ன்னு ஒண்ணு தனியா இருக்கற மாதிரித் தெரியாம அந்தக் கவிதையோட கவிதையா அதுவும் கலந்து இருக்குமாம்.  அந்த மாதிரி தனியா பக்தின்னு ஒண்ணு தேவையில்லாமலேயே இறையனுபவம் உன்னோடையே கலந்த ஒண்ணா இருக்கு.." என்று சொன்ன போது அவர் குரல் தழுதழுத்தது.

ஒரு நிமிடம் யோசனையில் ஆழ்ந்தவர் போல இருந்தார் அனந்தசயனம்.  "உடம்பு-மனசுன்னு ஒவ்வொண்ணையும் தனித்தனியா கழட்டிப் பார்க்கத் தெரிஞ்சிருக்கு, உனக்கு!" என்றவர், அடுத்த வினாடி தலையைக் குலுக்கிக் கொண்டார்.. திடுதிப்பென்று, "நீ ஒண்ணு செஞ்சா என்ன?" என்றார்.

"என்ன சார் செய்யணும்?" என்றான் மோகன்.


(இனி..  இன்னும் வரும்)

Wednesday, January 14, 2015

வாசிப்பு என்னும் தனி உலகம்

வெகுஜன ஊடகங்களின் மூலம் சில  படைப்புக்கள்  தெரிய வந்தன.
இந்தப் புத்தகச் சந்தையில் அவற்றைத் தேடித் திரிந்து சுய வாசிப்புக்காகச் சொந்தமாக்கிக்  கொள்ள வேண்டும்.

மிளிர் கல்  ---  நாவல் -  இரா. முருகவேள் -  பொன்னுலகம் பதிப்பகம்

பைத்திய ருசி -  சிறுகதைத் தொகுப்பு  -  கணேசகுமாரன்  -  தக்கை பதிப்பகம்

டார்வின் ஸ்கூல் -  சிறுவர் இலக்கியம் -  ஆயிஷா இரா. நடராசன் -                   புக்ஸ் ஃபார் சில்ரன்

அரேபிய இரவுகளும், பகல்களும் - மொழிபெயர்ப்பு நாவல் - சா. தேவதாஸ் - எதிர் வெளியீடு

நீல நாயின் கண்கள் -  மொழிபெயர்ப்பு உலகச் சிறுகதைகள் + இரண்டு நாவல்கள் -  அசதா -  நாதன் பதிப்பகம்

உறங்காத உறவுகள்  -  சமூக நாவல் -  எஸ்,வி, ரமணி -  சாரதாம்பாள் பதிப்பகம்

அஞ்ஞாடி  -  நாவல்  -  பூமணி -  (சாகித்ய அகாதமி விருது பெற்றது)

 7 கதாசிரியர்கள், 96 சிறுகதைகள் -  கதாசிரியர்கள்:  புதுமைப்பித்தன், கு.அழகிரிசாமி, லா.ச.  ராமாமிர்தம்,  சூடாமணி,  அசோகமித்திரன், வண்ணதாசன், பிரபஞ்சன்-  ஒவ்வொரு கதாசிரியருக்கும் தனித்தனி புத்தகம்  -  ஆனந்த விகடன் வெளியீடு

சிவானந்தலஹரீ பாஷ்யம் -  ஸ்ரீ ராமகிருஷ்ண  மடம்

Self - knowledge  -  (An English Translation of Sankaracharya's  Atmabodha with Notes, Comments, and Introduction  -  ஸ்ரீ ராமகிருஷ்ண மடம்

உபநிஷதங்கள் -- தனித்தனி புத்தகங்கள் - ஸ்ரீ ராமகிருஷ்ண மடம்

பாரதியார் கவிதைகள், கதைகள், கட்டுரைகள், வாழ்க்கை வரலாறு  -- தனித்தனி  புத்தகங்கள் -  வர்த்தமானன்  பதிப்பகம்

மனவளக்கலை -  (இரண்டு பாகங்கள்)  -   தத்துவ ஞானி வேதாத்திரி மகரிஷி -
உலக சமுதாய சேவா சங்கம்,  வேதாத்திரி பதிப்பகம்

சங்க இலக்கியங்கள் ( மர்ரே எஸ்.ராஜம் அவர்களால் வெளியிடப் பெற்ற
தொல்காப்பியம், பத்துப்பாட்டு, எட்டுத்தொகை நூல்கள், பதினெண் கீழ்க்கணக்கு, பாட்டும் தொகையும் ஆகிய நூல்களை 'சங்க இலக்கியங்கள்' என்னும் தலைப்பில் 12 பாகங்கள் கொண்ட தொகுதி --  நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

My Apprenticeship  and My Universities -  Maxim  Gorky  -  (Collected works of Maxim Gorky) -நியூ செஞ்சுரி  புக்  ஹவுஸ்

An Autobiography  -  Mahathma Gandhi -  Navajivan Publishing House

ஜீவா என்றொரு  மானுடன் -  பொன்னீலன் -  நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

சங்க சித்திரங்கள் -  ஜெயமோகன் -(ஆனந்த விகடன் ஸ்டாலில் கிடைக்கலாம்)

அவன் -  ரா.கி.ரங்கராஜன்   -- வானதி பதிப்பகம்


இப்போதைக்கு  இது!


Tuesday, January 6, 2015

இனி (பகுதி-8)

புரண்டு படுத்த பொழுது விழிப்பு வந்து விட்டது.

இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை ஆனதால் மதிய சாப்பாட்டிற்குப் பிறகு ஒரு குட்டித் தூக்கம் போட்டு விட்டு எழுந்திருக்க செளகரியமாக  இருந்தது.  தூக்கம் கலைந்தவுடன் படுத்த வாக்கிலேயே தலை நிமிர்த்தி வால்கிளாக்கில்  மணி பார்த்தான் பாண்டியன்.  மணி ஐந்தாகியிருப்பது உணர்வில்  படிந்த அடுத்த வினாடி வாரிச்சுருட்டிக் கொண்டு எழுந்திருந்தான்.

சமையலறையிலிருந்து மிக்ஸி சப்தம் கேட்டு அடங்கியது.  இவன் அந்தப் பக்கம் போய்ப் பார்த்த பொழுது மங்கை மிக்ஸியின் மேல் ஜாரை நீக்கி உள்ளே அரைபட்டிருப்பதை  கரண்டியில் எடுத்து வேறு பாத்திரத்திற்கு மாற்றிக் கொண்டிருந்தாள்.

இவன் எழுந்து வந்ததைப்  பார்த்தவள், "என்ன காப்பி கலக்கட்டுமா?" என்றாள்.

"மணி  அஞ்சாச்சு பார்.. எவ்வளவு நேரம்  தூங்கிட்டேன்? எழுப்பக்கூடாது?" என்று   குறைப்பட்டுக் கொண்டான் பாண்டியன்.

"எவ்வளவு நேரம்?.. மூணறைக்குத் தானே படுத்தீங்க.. அசந்து தூங்கறச்சே எழுப்ப மனசு  வருமா?.. லீவு நாள் தானே?.. இருக்கவே இருக்கு,  விடிஞ்சா ஆபீசுக்கு கிளம்பற ரொட்டீன் வேலை  ஆரம்பிச்சிடும்.. என்ன, கேட்டேனே, காப்பி கலக்கட்டுமா?"

"உம்.." என்றவன், "நீ மட்டும் என்ன?.. எனக்கு முன்னாடியே கிளம்ப வேண்டியிருக்கும்.  எனக்கானும் சனிக்கிழமை லீவு.   உனக்குன்னா சனிக்கிழமையிலும் ஸ்பெஷல் கிளாஸ்ன்னு அரை நாள்  அதிலே போய்டுது.. ம்.. என்ன  செய்துகிட்டு  இருக்கே?" என்று உள்பக்கம் வந்தான்.  பொட்டு  பொட்டாக அவள் முகத்தில் வியர்த்திருந்தது, அவள் மீதான பரிதாபத்தைக் கூட்டியது.

கணவனின் கரிசனம் இன்னும் இவனுக்கு நிறைய வகைவகையாய் செய்து போட வேண்டும் என்கிற ஆசையைக் கூட்டியது. "வாழைக்காய் இருந்தது.. பொடிமாஸுக்கு பொடி செய்து வைச்சிருக்கேன்." என்றவாறே பிரிட்ஜிலிருந்து எடுத்த பாலை அடுப்பில் ஏற்றி காய்ச்சத்  தொடங்கினாள் மங்கை.

"எனி ஹெல்ப்?.. ஸிங்க்லேயே அதெல்லாம்  போட்டுடு.  நான் வந்து  தேய்ச்சு  வைக்கிறேன்.." என்று முகம் கழுவி வரத் திரும்பினான்.

"சரியாப் போச்சு.. இப்படி ஆம்பிளை  இருந்தா, பொண்ணுங்க சதை போட்டு பெருத்துடுவாங்க.. தஸ்ஸு  புஸ்ஸூன்னு  அப்புறம் அவங்களுக்குத் தான் சிரமம்.."

"என்ன நீ கூட இப்படி பேசறே..  நம்ம வீட்டு வேலையைச் செய்யறதுலே  கூட  ஆம்பளை-பொம்பளை பாகுபாடா?.. பகிர்ந்திண்டாத்தான்  ரெண்டு பேருக்குமே சந்தோஷமா இருக்கும். மனசிலே ஆயி?.." என்று பாண்டியன் புன்னகைத்தான்.

அவள் மிதமாக கொதித்திருந்த பாலில் பெரும்பகுதியை வேறொரு பாத்திரத்திற்கு  மாற்றி ஒதுக்குப்புறமாக வைத்து விட்டு, மீதியிருந்த பாலில் டிகாஷனைக் கலந்து அடுப்பில்  வைத்தாள். "என்ன பெரிய தொலையாத வேலை?..நாம ரெண்டு பேர் தானே?" என்று ஷெல்பிலிருந்து சர்க்கரை  டப்பாவை எடுத்தாள்.  'நாம ரெண்டு பேர் தானே' என்று சொன்னதில் அவளை அறியாமலேயே வார்த்தைகளில் விழுந்த அழுத்தத்தின் அர்த்தம் இரண்டு பேருக்குமே புரிந்தது.

"ரெண்டு பேர் தான்.  இருந்தாலும் நச்சு நச்சுனு ஒண்ணு  மாத்தி  ஒண்ணுன்னு  இருக்கில்லியா?.. அதுக்காகச் சொன்னேன்.." என்றான்  பாண்டியன்.

"முதல்லே போய் முகமெல்லாம் கழுவிகிட்டு ப்ரஷ்ஷா வாங்க.." என்று அவன் முதுகுப்  பக்கம் கைவைத்து லேசாகத் தள்ளி  விட்டாள். "இப்போலாம் என்ன தனியாகவே கோயிலுக்கு கிளம்ப  ஆரம்பிச்சாச்சா?" என்று கேள்வி பின்னாடி கேட்டது..

"வந்து  சொல்றேன்.." என்று வாஷ்பேசினுக்குப்  போனான்  பாண்டியன். முகம் துடைத்து, காப்பி குடித்து எல்லாம் ஆகியும் அவனே சொல்லாததினால், மங்கையே முன்னால் கேட்ட கேள்வியை மறுபடியும் கேட்டாள். "விபூதி- குங்குமப் பொட்டலம் கொண்டு வந்து கொடுத்ததினால் தெரிந்தது. சாயந்தரம்ன்னா நானும் கூட வந்திருப்பேன்லே?"

"திடீர்ன்னு நின்ற சீர் நெடுமாற நாயனாரைப் பாக்கணும் போல இருந்தது. அதனாலே கிளம்பிட்டேன்.  வேணும்னா ரெண்டு  பேரும் சேர்ந்து சாயந்தரம் போனால் போச்சு.." என்றான் பாண்டியன்.

அவள் பதில் ஒன்றும் சொல்லாததினால், "அந்த ராஜா விஷயம், நீ சொன்னது சரிதான்.." என்றான்.

மங்கைக்கு கணவன் என்ன சொல்கிறான் என்று  புரியவில்லை. அதனால், "எந்த ராஜா விஷயம்?" என்றாள்.

"ஐயே! மனசிலே ராஜாங்கற நெனைப்பு தான்னு அன்னிக்கு நீ சொன்னது என்னைத் துறத்திண்டே வர்றது, மங்கை!"

"ராஜான்னு பெயர் வைக்கலையே தவிர, யார் சொன்னாலும் சொல்லாட்டா லும் நீங்க ராஜாதான்!" என்று மங்கை புன்னகைத்தாள்.

"நான் சொல்ல வந்தது என்னன்னா, நீ அப்படிச் சொல்லிச் சொல்லி இன்னிக்கு  அந்த பாண்டிய ராஜா சிலை முன்னாடி நிக்கறச்சே, ராஜா மிடுக்குன்னு  சொல்லுவாங்களே, அந்த மிடுக்கு உணர்வு எனக்கும் தொத்திண்ட மாதிரி இருந்திச்சு.."

"எந்த ராஜா?  மாறவர்மன் அரிகேசரியையாச் சொல்றீங்க?" என்று குறும்பாய் மங்கை பாண்டியனைப் பார்த்தாள்.

"சரியாப்  போச்சு.. ஏதோ அடுத்த தெரு அம்மணியைப் பத்திக் கேக்கற மாதிரி ரொம்ப சகஜமாக் கேக்கறே?.. அரிகேசரி இல்லே; நின்ற சீர் நெடுமாற நாயனார்! போச்சுடா.. எல்லாத்தையும் மறந்தாச்சா?"

"மறக்கலே.  அவர் தான் இவர். இவர் தான் அவர்" என்று  மங்கை சொன்ன போது பாண்டியனுக்கு ஆச்சரியமாக இருந்தது..  "நீங்களும்  வெளியே போயிருந்தீங்களா?.. அடுப்படி வேலையெல்லாம் முடிச்சிட்டு, சும்மா இருக்க பிடிக்கலே. பழைய  புஸ்தகங்களையெல்லாம் எடுத்து வைச்சிகிட்டு இந்த பாண்டிய ராஜாவைப் பத்தி என்னலாம் தகவல் கிடைக்கும்ன்னு தேடிகிட்டு இருந்தேன்.  அப்போத் தெரிஞ்சது தான்  இது.  இது மட்டுமில்லே. இன்னும் சிலதும் தெரிஞ்சது.. அறுபத்து மூணு பேர்  இருக்க, இந்த நாயனார் விசேஷமா உங்க கண்ணுக்குத் தட்டுப்பட்டதே எனக்கு ஆச்சரியமா இருக்கு.." என்று மங்கை சொன்ன போது, பாண்டியன்  நிமிர்ந்து உட்கார்ந்தான். அது என்ன விசேஷம் என்று தெரிந்து கொள்ளும் ஆவல், அவன் முகத்தில் பட்டவர்த்தனமாகத் தெரிந்தது.  ஒரு கதை கேட்கும் ஆவலில், "ஏன் நிறுத்திட்டே?.. சொல்லு, மங்கை.." என்று  அவள் முகத்தையே பார்த்தான்.

"அந்த ராஜாக்கு  அமைஞ்ச ராணி பேரு இன்னும் விசேஷம்.  மங்கையர்க்கரசிங்கறது அவங்க பேரு. மங்கையர்க்கரசிங்கறதை கூப்பிடற வசதிக்காக மங்கைன்னு கூப்பிடலாமில்லியா?"

'குபுக்'ன்னு பிரவாஹமெடுத்த சந்தோஷத்திற்கு பாண்டியனால் அணை போடமுடியவில்லை. "ஓஹோஹோ.." என்று கைதட்டிக் கொண்டாடினான் .. "உன்னோட விவர சேகரிப்பு அற்புதம், மங்கை!" என்று மகிழ்ச்சியில் ஆரவாரித்தான்.. "ராஜாங்கறச்சே, எனக்கு அவ்வளவா சுவாரஸ்யப்படலே.  ஆனா இப்போ ராணி பேரைத் தெரிஞ்சிக்கிட்டதும்,  இந்த ஒற்றுமையை நெனைச்சுப் பாத்தா என்ன சொல்றதுன்னு தெரிலே.." என்று பரபரத்தவன் திடீரென்று ஏதோ நினைவுக்கு வந்த நிலையில், "மங்கை.. நீ மட்டும் இல்லே. என்னோட பாட்டி பேரு கூட மங்கை தான்.. அந்த பாட்டி பத்தி என்னிக்கானும் அத்தை சொல்லியிருக்காங்களா?" என்று திகைத்துக் கேட்டான்.

"சொல்லியிருக்காங்க.. உங்க தாத்தா பேரு தெரியுமோ?" என்று அவளுக்கு அது தெரியும்ங்கற தோரணையில் கேட்டாள்.

"தெரியுமே! அவரு பேரு பராங்குசம், இல்லை?"

"கரெக்ட்! இந்தப்  பேருலே இன்னொரு ஆச்சரியம் என்னன்னா, நம்ம  நாயனார் ராஜோவோட பட்டப்பேரும் பராங்குசன்ங்கறது  தான்.  கொஞ்சம் டீப்பா பாத்தீங்கன்னா, நம்ம ரெண்டு பேர் குடும்பத்து பெரியவங்க பேரெல்லாம் இப்படி மாத்தி மாத்தியே வர்றது... எங்க அப்பாவோட அம்மா பேரு நங்கை. அவங்க நினைவாத் தான்  எனக்குக் கூட நங்கைன்னு பேரு வைச்சாங்க.. என்னை ஸ்கூல் சேக்கறச்சேத் தான் அந்த நங்கை, மங்கையா மாறிப் போயிடுச்சி.. " என்று சிரித்தபடி மங்கை நினைவுகளில் தோய்ந்தாள்.

"அத்தையும் மாமன் பையனைத் தானே கல்யாணம்  செய்துகிட்டாங்க?.. அதனாலே அந்த ஒட்டும் உறவுக்கும் கூடவே சேர்ந்து இந்த பெயர் தொடர்ச்சியும் வந்திருக்கு.." என்ற பாண்டியன், "நம்ம குடும்ப மரம் -- பேமலி ட்ரீ--  படம் போட்டுப் பாத்தா மங்கையும் நங்கையும் பாண்டிய ராஜா பேர்களும் கிளை கிளையாய்  இருக்கும்.." என்று சொல்லிச் சிரித்தான்.

"தாத்தாலாம் திருநெல்வேலி தானே?.. அப்பாரு காலத்லே தான் உத்தியோகம்,  டிரான்ஸ்வர்ன்னு மழபாடி போனோம்.  மழபாடி-பட்டீஸ்வரம் தானே சோழர் காலத்து பழையாறை?.. பழையாறை தான் மங்கையர்க்கரசி அம்மா அவதரிச்ச ஊர்.  சுத்தி சுத்தி உங்க நாயனார் ராஜா கதைக்கே வந்திட்டம் பாருங்க.."

பாண்டியன் ஆச்சரியத்தில் பதில் சொல்ல முடியாமலிருந்தான்.

"அம்மா ஒரு  பழைய குடும்ப போட்டோ ஆல்பம் கொடுத்து இருக்காங்க, இல்லே?.. அதுலே பாருங்க. முப்பது, நாப்பது பேர் தேறும்.. ஒண்ணா உக்காந்திருக்கற ஒரு படம் இருக்கு, பாருங்க.. எத்தனை ராஜா, ராணிங்க?.. இப்போ பாத்தாலும் சிரிப்பா வரும்.. டிரங்க் பெட்டிலே தான் வைச்சிருக்கேன்.. எடுத்தாறவா?" என்ற மங்கை "அட, ஆறரை ஆச்சே?.." என்று எழுந்து வாசல் பக்கம் போய் விளக்கைப்  போட்டாள்.  வழிப்பாதை, முன்னறை, பக்க அறை, கூடம் என்று எல்லாப் பக்கமும் குழல் விளக்குகள் ஒளி உமிழ்ந்தன.

பூஜை அறை விளக்கைப் போட்டு, குத்து விளக்கேற்றினாள். சிமிழிலிருந்து எடுத்து குங்குமம் இட்டுக் கொண்டாள். சாமி  கும்பிட்டு விட்டு ஒரு ஸ்தோத்திர புத்தகம் எடுத்துக் கொண்டு வெளியே வந்தாள்.

"நீங்களும் ரெடியாகுங்க.. இதோ, ஒரு அரை அவர்லே கிளம்பிடலாம். கோயிலுக்கு போய்ட்டு வந்து ராத்திரி டிபனுக்கு  ரெடி பண்ணலாம்" என்ற மங்கைக்கு ஏதோ பதில் சொல்ல வேண்டும் போலிருந்தது பாண்டியனுக்கு.  கோயிலுக்குப் போகும் வழியில் சொல்லிக்  கொள்ளலாம் என்று பேசாமல் இருந்து விட்டான்.


(இனி... இன்னும் வரும்)

Related Posts with Thumbnails