Saturday, December 27, 2014

இனி (பகுதி-7)

'மனவாசம்' வார இதழ் வெள்ளிக்கிழமை கடைகளுக்கு வந்து விடும். வியாழக்கிழமை மதியமே வெள்ளிக்கிழமைக்கான டெலிவரிக்கு ஐம்பது இதழ்கள் கொண்ட பண்டல்களாக  பத்திரிகைக் கட்டுகள் தயாராகிவிடும்.   டெஸ்பாட்ச் இலாகா தனியாக இருந்தது.  ரங்கராஜன் தலைமையில் ஆறு பேர்கள்.  ஆறும் ஆறு  சுறுசுறு எறும்புகள்.  விவரங்கள் விரல் நுனியில்  இருக்கும். கணினி என்ட்ரி பார்த்து செக் பண்ணுவதெல்லாம் உபசாந்திக்கு. இந்த வேகம் இல்லையென்றால் பத்திரிகை தமிழகத்தில் வெள்ளிக்கிழமை எந்த நேரத்திற்குக் கடைகளில் கிடைக்கிறதோ, அதே மணிக்கு தில்லியிலும் திருவனந்தபுரத்திலும் கிடைக்கும்.  அந்த அளவுக்கு நெட் ஒர்க் திறமை.

டெஸ்பாட்ச் ரங்கராஜனுக்கு இணையாக விளம்பர இலாகா அய்யாசாமி.  பத்திரிகையின் இந்த ஜீவநாடிப் பிரதேசம் எந்நேரமும் இயங்கிக்கொண்டே இருக்கும். 'மனவாசம்' இதழ் முன்பக்க பின்பக்க அட்டை விளம்பரங்களுக்கு ஆறேழு மாசங்களுக்கு முன்னாலேயே பதிவு என்று திமிலோகப்படும். ஒரு துண்டு புகையிலையை வாயில் அதக்கிக் கொண்டு எல்லாவற்றிற்கும் ஈடு கொடுப்பதில் அய்யாசாமி கில்லாடி.  எந்த நெருக்கடியிலும் அசால்ட்டாக தீர்க்கமான முடிவெடுக்கும் இவர் சாமர்த்தியம் ஆசிரியருக்கு மிகவும் பிடிக்கும். அந்த அவரது சாமர்த்தியத்தை பத்திரிகைக்குக் கிடைத்த அஸெட் என்பார் ஆசிரியர்.

"நீங்கள் எடுத்த முடிவுகளில் மிகவும் சாமர்த்தியமானது  என்று எதை நீங்கள்  நினைக்கிறீர்கள்?" என்று ஆபீஸ் கேண்டினில் அய்யாசாமி குஷாலாகப் பேசிச் சிரித்துக்  கொண்டிருக்கையில் மோகன் ஒரு நாள் அவரிடம் கேட்டான்.

"என் இருபத்தாறாவது வயசில் நான் எடுத்த முடிவு.." என்று அவனைப் பார்த்து கண் சிமிட்டினார் அய்யாசாமி. "ரொம்ப நெருக்கடியான நேரத்தில் எடுத்த முடிவு அது.  அதற்கு மேல் தாக்குப் பிடிக்க முடியாது என்று தத்தளித்த நேரத்தில் எடுத்த முடிவு. கல்யாணம் செய்துக் கொள்ளப் போவதில்லை என்று அப்போ நான் எடுத்த முடிவு இப்பவும் நினைத்துப் பார்க்க முடியாத சுதந்தரத்தையும் சந்தோஷத்தையும் எனக்குக் கொடுத்திருக்கிறது.  என் வாழ்க்கையின் வெற்றிக்கு முக்கியக்காரணம் நான் திருமணம் செய்து கொள்ளாதது தான்.." என்று சிரித்துக் கொண்டே சொன்னார்.

மோகன் அவரை விநோதமாகப் பார்த்தான். இதுவரை இப்படி யார் சொல்லியும் அவன் கேட்டதில்லை என்பது அது பற்றி இன்னும் அவரிடம் கேட்க வேண்டும் போலிருந்தது அவனுக்கு..

கேட்டான்: "சார். நான் கல்யாணம் ஆகாதவன். அட்வைஸ் மாதிரி கேக்கறேன். நானும் உங்களை மாதிரி இருந்திடலாம்ன்னு பாக்கறேன்."

"நோ.. நோ.." என்று அவசரமாக இடைமறித்தார் அய்யாசாமி. "வாழ்க்கையின் ஒவ்வொன்றும் ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு மாதிரி.  எனக்கு சரிப்பட்டது உங்களுக்கும் சரிப்படும்ன்னு சொல்ல முடியாது. எந்த முடிவும் உங்கள் அனுபவத்திற்கு ஏற்ப நீங்களா எடுக்கற முடிவா இருக்கணும்." என்று சொன்னவர் ஒரு வினாடி கழித்து, "எதுக்காக நீங்கள் அப்படி ஒரு முடிவை எடுக்கணும்?" என்றார்.

"நீங்க சொன்ன காரணம் தான் சார்.  அந்த சுதந்திரமும் சந்தோஷமும்.  கல்யாணம் ஆனா அதெல்லாம் பறிபோய்டும் போல இருக்கு.."

"மோகன், நான் சொன்ன காரணம் எனக்கு சரிப்பட்டு வரலாம். உங்களுக்கும் அப்படின்னு இருக்காமலும் இருக்கலாம் இல்லியா?  திருமணத்திற்கு பிறகும் உங்கள் சுதந்தரமும், சந்தோஷமும் நிச்சயப்படுத்தப்படலாம், இல்லியா?"

".............................."

"உங்கள் கதைகள் சிலதைப் படிச்சிருக்கேன்.  படிச்சு உங்க பேரையும் ஞாபகத்திலே வைச்சிண்டிருக்கேன்.  உங்கள் எழுத்துக்களைப் பார்த்தால்  அப்படித் தெரியலேயே! உங்க எழுத்துக்கள்லே சிருங்கார ரசம் கொப்பளிச்சு வருமே! அட,ராமா! அத்தனையும் கற்பனையா?.. அப்கோர்ஸ், நீங்க சொல்லித் தான் தெரியும்.. நான் என்னடான்னா, நீங்கள் கல்யாணம் ஆகி எல்லாத்தையும் ரசிச்சுச் சுவைத்தவர்ன்னு நெனைச்சேன்.." என்று ஏதோ ஜோக்கை ரசித்துச் சிரிக்கறவர் மாதிரி அய்யாசாமி குலுங்கிக் குலுங்கிச் சிரித்தார்.

மோகனும் சிரித்தான். "தப்பா நினைக்கக் கூடாது, சார்!  நீங்க இந்த பத்திரிகைகளுக்கு எழுதறவங்க சமாச்சாரத்தில் ரொம்ப அனுபவப்பட்டவர். அந்த அடிப்படைலே  கேக்கறேன்.  எழுத்தாளர்கள் மனசை அவங்க எழுத்தைக் கொண்டு கண்டு பிடிச்சிடலாம்ங்கறீங்க?.."

பகபகவென்று சிரித்தார் அய்யாசாமி. "என் அனுபவத்லே பார்த்திட்டேன். கிட்டத்தட்ட கண்டுபிடிச்சிடலாம்ன்னே சொல்லலாம். ஆனா அப்படிக் கண்டுபிடிக்கறதுக்கு வாசிக்கறவனுக்கு கூர்மையான ரசனை வேணும். என்ன ரசனை இருந்தாலும், இதிலே பொழுது போக்குக்காக எழுதறவங்களைப்  பத்தி ஒண்ணும் சொல்ல முடியாது.  தன்னையே அவங்களுக்குத் தெரியாது. தனக்காக அவங்க எழுதறதில்லை; மத்தவங்களுக்காக ஆனதாலே அவங்க எழுத்தைப் போலவே பாம்புக்கும் பழுதுக்கும் வித்தியாசம்  தெரியாத மாதிரியே அவங்களும் இருப்பாங்க.  ஆனா, தீவிரமா எழுதவறங்க, கொள்கைப்  பிடிப்போட எழுதறவங்க, இவங்கள்லாம் தாங்க நினைக்கறதை தாங்க எழுதறதிலே சொல்லணும்ங்கறத்துக்காக எழுதறதாலே, அவங்க எழுத்திலே அவங்க இருக்கறதை பாக்கலாம்.  இந்தக் கணக்கு, அநேகமா தப்பினதில்லே."

மோகன் அவரை ஆச்சரியத்தோடு  பார்த்தான்.  எவ்வளவு ஆழமாக எல்லாவற்றையும்  கவனித்திருக்கிறார் என்று அவனுக்குத் தோன்றியது. தும்பைப்பூ கதர் வேட்டியும், அரைக்கை  கதர்சட்டையுமாய் வெளிப்பார்வை க்கு வெகு சாதாரணம் தான் அய்யாசாமி. தனக்கு நேரடியா சம்பந்தப்படாத விஷயங்களையும் எவ்வளவு ஆர்வத்துடன் கவனித்திருக்கிறார் என்று  தோன்றியது.  அதற்குக்  காரணம் கூட, அவருக்குத் திருமணம் ஆகவில்லை என்பதாகத்தான் இருக்குமோ என்று நினைத்துக் கொண்டான்.

'இந்த எழுத்துத் துறையில் பெரிய ஆளாக வர வேண்டும்;  இலட்சிய எழுத்தாளர்களைப் போல தன் ஆசைகள், அபிலாஷைகள், ஆர்வங்கள், எண்ணங்கள் எல்லாமும் தன் எழுத்தில் பிரதிபலிக்க வேண்டும்' என்று மோகன் எண்ணிக் கொண்டான்.  தானே தன் எழுத்தாக மாற வேண்டும் என்கிற அதீத ஆசை அவன் மனசுக்குள் முளைவிடுவதை அந்த ஷணம் அவனே உணருகிற மாதிரி இருந்தது.

ஆசிரியர் இலாகாவில் அவன் நுழைந்த பொழுது, "உன்னை எங்கேலாம் தேடிண்டிருந்தேன், தெரியுமா?" என்றார் ஜீ.

"கேண்டினுக்குப் போயிருந்தேன், சார்.. விளம்பர இலாகா அய்யாசாமி சாரோட பேசிண்டிருந்தேன்.  நேரம் போனது தெரிலே. என்ன சார் விஷயம்?" என்றான்  மோகன்.

"யார், அந்த பீஷ்மர் கிட்டேயா பேசிண்டிருந்தே?" என்றார் ஜீ.  ஜீயின் குரலில்
அய்யாசாமி அறிந்திராத ரகசியங்களெல்லாம் தான் அறிந்திருந்து விதவிதமாக அவற்றை ரசித்துப் பார்த்து கரைகண்டு விட்ட மாதிரியான சந்தோஷம் தெரிந்தது.

அதைப் பொருட்படுத்தாதவனாய், "என்னமானும் அவசர விஷயமா?என்னைத் தேடினேன் என்றீர்களே?" என்றான் மோகன்.

"130 பக்க பத்திரிகைலே ஆசிரியர் உனக்கும் ஒரு பாரம் ஒதுக்கச் சொல்லிட்டார்.  இது அடுத்த இதழுக்கு அடுத்த இதழ்லேந்து அமுலுக்கு வர்றது. வழக்கமான உன் தொடர்கதை சித்திரத்தையும் சேர்த்து எட்டுப் பக்கம் வந்ததுன்னா, மீதிப்  பக்கங்களையும் நிரப்புவதற்கு நீ தான் பொறுப்பு.   பல சமயங்களில் நீயே உன் பக்கங்கள்லே சிறுகதை ஏதாவது எழுதும் படியாவும் இருக்கும்ங்கறதாலே, தொடர்கதைக்குப்  போட்ற உன் பேரையே, சிறுகதைக்கும் போட்டா நன்னா இருக்காதுங்கறதுனாலே முன்னாடி நான் சஜஸ்ட் பண்ணின மாதிரி ஒரு புனைப்பெயர் வைச்சிண்டாக வேண்டிய தேவை உனக்கு இப்போ வர்றது..என்ன புனைப்பெயர் வைச்சிக்கறேங்கறதை  தீர்மானம் பண்ணிடு.  அடுத்தாப்லே வர்ற இதழ்கள்லே அதை உபயோகிச்சிக்கலாம்.  அதுக்காகத்தான் தேடினேன்.  இப்போவே உங்கிட்டே சொல்லிட்டா நீயும்  ஒரு புனைப்பெயரை தேர்ந்தெடுத்து வைச்சிருப்பே, இல்லியா?"

இந்த புனைப்பெயர் விஷயம் தன்னை விடாது போலிருக்கே என்று நினைத்துக் கொண்டான் மோகன்.  'என்ன புனைப்பெயர் வைச்சிக்கலாம் என்று யோசித்த பொழுது, சற்று முன்  ஜீ உச்சரிச்ச 'பீஷ்மர்'ங்கற பெயரையே புனைப்பெயராய் வைச்சிக்கலாமா'ன்னு தோன்றியது.. அந்தப்  பெயர் வெறும் பெயர் என்பதைத் தாண்டி என்னத்தையோ சொல்ற மாதிரி தோன்றியதால், அந்தப்  பெயரைத் தவிர்த்தான்..  'வேறே பெயர் என்னவானும்' என்று சிந்தனை ஓடிய போது...

'ஐயே! ராஜான்னு நெனைப்போ?'ன்னு தன் கதையில் பாண்டியனைப்  பார்த்து மங்கை சொல்லும் வார்த்தைகள் நினைவுக்கு வந்து, இந்த 'ராஜா' பெயரே நன்றாக இருப்பதாக அவனுக்குத் தோன்றியது.. அப்படித் தோன்றியதும் 'மங்கை! தேங்க்ஸ் மங்கை!' என்று அவனறியாமல்  முணுமுணுத்துக்  கொண்ட பொழுது, தன் கதாபாத்திரம் பாண்டியனாகவே ஆகிவிட்ட மாதிரி அவனுக்குத் தோன்றி, 'குபுக்'கென்று சிரிப்பு பீறிட்டுக் கொண்டு வந்தது.

"என்னப்பா, மோகன்! உனக்கு நீயே சிரிச்சிக்கறே?.. சொல்லிட்டுச் சிரிப்பா..  நானும் உன்னோட சேர்ந்திப்பேன்லே?" என்றார் ஜீ, அவன்  முகப்போக்கை ரசித்தபடி.

"ஒண்ணுமில்லே, சார்! எனக்குள்ளே ஏதோ நினைப்பு.." என்று இழுத்தான்.

"தனக்குத் தானே சிரிச்சிக்கணும்ன்னா, அது பெர்ஸனலாய்த் தான் இருக்கும்ன்னு எனக்குத் தெரியும்!" என்றார் ஜீ, பொடிடப்பாவில் இரு விரல்களால் தாளம் போட்டபடி. "உன் யோசனைக்கு நடுநடுவே உன் புனைப்பெயரையும் யோசிச்சு வைப்பா.. திடுதிப்புனு ஆசிரியர் கேட்டா சொல்லணும்.." என்றார்.

மோகன் ஜீயைப்  பார்த்து  மலர்ச்சியுடன் புன்னகைத்தான். "புனைப்பெயர் தானே?..  தீர்மானம்  பண்ணியாச்சு, சார்.."

"என்ன அதுக்குள்ளையா?.. அவசரமில்லைப்பா.. மெதுவா.."

"அப்புறம் மாறிப்போகலாம்.  அதனாலே இப்பவே சொல்லிடறேன், சார்!"

"சரி. சொல்லு.." என்று ஆவலுடன் அவன் பக்கம் திரும்பிப் பார்த்தார் ஜீ.

"ராஜா.." என்றான் மோகன்.  "நல்லாயிருக்கா, சார்?"

"ஃபைன். ஜம்முனு இருக்கு.. " என்றார் ஜீ. "முதன் முதலா இந்தப் பெயர்லே  எழுதற சிறுகதையும் ஜம்முனு  இருக்கட்டும்.. யார் இந்த ராஜான்னு நம்ம வாசகர்கள் கேக்கற மாதிரி 'ராஜா' பேர்லே எழுதற எல்லாத்திலேயும் தனி கவனம் செலுத்து. மோகன்ங்கற பேர் தொடர்கதைக்கு மட்டும் தான். ராஜாங்கற பேர் சிறுகதைகளுக்கு.  ராஜாக்கும் மோகனுக்கும் எழுத்து நடைலே வித்தியாசம் இருக்கற மாதிரி இருக்கணும். ரெட்டை குதிரை சவாரி மாதிரி ஆரம்பத்லே கொஞ்சம் தடுமாற்றமாத்தான் இருக்கும்.  அதுவே ஒரு த்ரில் தான்; போகப்போக எந்தக் குதிரையை அழுத்தி உசுப்பேத்தணும், எந்தக் குதிரையை தடவிக் கொடுக்கணும்ன்னு தெரிஞ்சிடும்.. ஜமாய்!" என்றார்.

"அனுபவிச்சு சொல்றீங்களே, சார்?.. இந்த மாதிரி நீங்க நிறைய ஜமாய்ச்சிருக்கீங்களோ?.."

"அதையேன் கேக்கறே..  ஒரு காலத்லே ஆறு பேர்லே வாசகர் மத்திலே உலாவியிருக்கேன். போதாக்குறைக்கு அதுலே ரெண்டு பெண்கள் பேர். அந்த ரெண்டும் ஆசிரியர் வைச்சது தான்.  ஆன்மீகம், அமானுஷ்யம், த்ரில், காதல், காதல்+ஒரு மாதிரி, நகைச்சுவைன்னு என்னத்தைச் சொல்றது, போ! என்னன்ன பேர்லே எழுதினேன்னு இப்போ நான் சொன்னாலும், 'அட நீங்களா, அது'ன்னு ஆச்சரியப்படுவே! இன்னிக்குத் தேதி வரை அந்த ஆறு பேர் ரகசியத்தைக் கட்டிக் காப்பாத்திண்டு வர்றேனாக்கும்.." என்றார் ஜீ.

மோகன் அவரை பிரமிப்புடன்  பார்த்தான்.  அந்த பிரமிப்பில் மரியாதையும் கலந்து கொண்டது.


(இனி.. வரும்)
Monday, December 22, 2014

இனி (பகுதி-6)

ன்று கோயில் ஜனசந்தடியே அற்று 'ஹோ'வென்றிருந்தது.  காலை தாண்டிய முன் பகல் நேரம் என்பதினால் கூட்டமில்லையோ என்று நினைத்துக் கொண்டான் பாண்டியன்.

சுவாமி  சன்னதிக்குள் நுழைந்தவனைப் பார்த்து சன்னதி கீழ்ப்படியில் ஒருக்களித்தவாறு அமர்ந்திருந்த குருக்கள் எழுந்து வந்தார்.  அவன் கையில் ஒன்றும் இல்லை என்பதினால், அர்ச்சனைக்காரர் இல்லை என்று  நிச்சயித்துக் கொண்டவர் போலத் திரும்பினார்.  குறுகலான படிகள் ஏறி சுவாமி
கருவறைக்குள் சென்றவர் தட்டெடுத்து கற்பூரம் ஏற்றி சுவாமிக்குக் காட்டினார். இங்கிருந்தே கன்னத்தில் லேசாகத் தட்டிக்கொண்டு கைகுவித்து சுவாமி தரிசனம் செய்த பொழுது பாண்டியனுக்கு உடல் சிலிர்த்தது.

தீபாராதனையில் தெரிந்த உப்பிய  கன்னத்தில் குமிழாய் விளைந்த இறைவனின் குறுஞ்சிரிப்பு தனக்கு மட்டுமே அருள் பாலிப்பதான குறு நகைப்போல அவன் நினைப்பில் பதிந்தது. தன்னைத் தவிர வேறு யாரும் சன்னதியில் இல்லை என்கிற உணர்வு, தனக்காக மட்டுமேயான இறைவனின்  தரிசனம் இது என்கிற எண்ணமாய் அவனுள் உருக்கொண்டது.  அந்த எண்ணம் பாண்டியனின் மனசில் உருக்க்கொண்ட ஷணத்திலேயே குருக்கள் அங்கு இருப்பதையும் வலிய மறக்கடித்துக் கொண்டு இந்த இடத்தில் தானும் இறைவனும் தான் என்கிற நிலையாய் ஒரு நினைப்பு மனசில் வியாபித்தது. அந்த நினைப்பு அந்த நிலையே நெடுநேரம் நீடிக்கக் கூடாதா என்கிற ஆசையாய் தவித்து அலைபாய்கையில் குருக்களின் குரல் பாண்டியனின் எண்ண  அலையை அறுத்தது.  அவர் என்ன சொன்னார் என்று உணர்வில் படியவில்லை. தீபாராதனைத் தட்டுடன் நின்று கொண்டிருந்த அவர் உருவம் மட்டும் மங்கலாய் அவன் தோற்ற உணர்வில் படிந்தது.

கற்பூர ஜ்வாலை பக்கம்  கைவிரல் மடக்கி அந்த இளஞ்சூட்டை கண்களில் ஒற்றிக்கொண்டு,  அவர் தந்த வீபூதியை பாண்டியன் நெற்றியில் இட்டுக் கொண்டான்.  பாண்ட் பாக்கெட்டில் கைவிட்டு கிடைத்த சில்லரையை எடுத்து தட்டில் இட்டான்.  'இருங்கோ..' என்று சொல்லி விட்டு குருக்கள் படியேறி கருவறைக்குள் சென்றார்.  திரும்பியவர்  கையில் சின்ன பூச்சரமும் ஒரு வீபூதிப் பொட்டலமும் இருந்தது. அதை அவரிடம் பெற்றுக்கொண்டு கண்களில் ஒற்றி சட்டை பாக்கெட்டில் போட்டுக் கொண்டு அவரைப் பார்த்து முறுவலித்தான்.

"ஈஸ்வரன் சக்தி வாய்ந்தவர்.  நன்னா வேண்டிக்கோங்கோ.." என்றவராய் குருக்கள் திரும்பினார்.

சட்டென்று என்ன வேண்டிக்கொள்வது என்று தெரியவில்லை.  வேண்டிக்கொள்வதற்கு மட்டுமே தான் இறைவனா என்றும் தெரியவில்லை.  இப்பொழுது பாண்டியன் அடைந்த அனுபவம் அதையெல்லாம் தாண்டிய ஒன்றாக அவனுக்கு இருந்தது.   இன்னொரு முறை இறைவனைப் பார்க்க வேண்டுமென்ற குறுகுறுப்பில் அவன் மனசு  அலைபாய்ந்தது.  அந்த குறுகுறுப்பை அடக்க  முடியாமல் தலை நிமிர்த்தி இறைஞ்சும்  பார்வையில்  விழிவிரித்து அவன் பார்த்த பொழுது கர்ப்பகிரக தீபஒளியின் பொட்டு  போன்ற வெளிச்சத்திலேயே இறையனாரின் கன்னக் குமிழ்ச்சிரிப்பு இங்கிருந்தே பளிச்சென்று அவனுக்குத் தெரிந்தது. இதே மாதிரி இதற்கு முன் இப்படிப் பார்த்த தருணத்தில் சிறைபிடித்து அவன் நினைவில் தேக்கிக்கொண்ட இறைவனின்  குறுஞ்சிரிப்புக் கீற்று பளீரிட்டு இப்போது அதோடு சேர்ந்து கொண்ட மாதிரி இருந்தது.  அப்படிச் சேர்ந்தது, இரண்டாய் சேர்வது  தெரியாமல்,  ஒன்றில் ஒன்றாய் ஒன்றி ஒன்றாகிப் போன மாதிரி அவன்  பார்வைக்குப் பட்டது...

பட்ட தருணத்தில் நினைவின் அடி ஆழத்திலிருந்து, ஒரு குரல் கேட்டது.  மங்கை தான் சொல்கிறாள்: 'இங்கே-அங்கே'ன்னு ரெண்டு  இல்லே; ரெண்டாத் தெரிஞ்சாலும் ரெண்டும் ஒண்ணுதான். தெரிஞ்சிக்கங்க..'

 'கொஞ்ச நேரம் முன்னாடி இறைவன்-நீ இருவர் மட்டுமே இங்கிருப்பதாக நினைச்சியே?  இப்போ சொல்லு. பரமனும் ஜீவனும் வெவ்வேறான இரண்டா?.. இல்லை, ரெண்டா உணர்ந்தாலும் ரெண்டும் ஒண்ணு தானா?' என்ற கேள்வி பாண்டியன் மனசில் அந்த ஷணமே புரண்டது.

ரொம்ப சிரமப்பட்டு எண்ணம் குவித்து "இதையெல்லாம் கேட்க மூணாவதாக நீ யார்?" என்று பாண்டியன் தனக்குள்ளேயே கேட்டுக்  கொண்டான். 'மூணாவதும் ரெண்டு ஒண்ணான அந்த ஒண்ணில் அடக்கம்" என்று அவனுக்குள்ளே கேட்ட கேள்வியே பதிலாய் கிளர்ந்த பொழுது அதை ஆமோதிப்பது போல   கோயில் மணி கணகணத்தது. உபதேசத்தை உள்வாங்கிய விதிர்விதிர்ப்பில் தானாகவே பாண்டியனின் கைகள் கூப்பிக் கொண்டன.

கால் துவளுகிற மாதிரி இருந்தது.  அப்படியே உட்கார்ந்து கொள்ளலாம்
போலிருந்தது. சன்னதியின் ஒரு மூலையில் யாருக்கும் இடைஞ்சலில்லாமல் உட்கார்ந்தான் பாண்டியன்.  உட்கார்ந்ததும் அலைஓசையாய்  மனசில்  ஆர்ப்பரித்த இரைச்சல் எங்கே போனது என்று தெரியவில்லை.

மங்கையுடன்  கோயில்களுக்கு செல்லும் பொழுதெல்லாம் ஏற்படாத உணர்வுகள், தனியாக வரும் பொழுது மட்டும் ஏற்படுகிறதே என்று திடுதிப்பென்று தோன்றியது.  கவனக்குறைவுகளும், கவன ஈர்ப்புகளும் அதற்குக் காரணமாக இருக்கலாமோ என்று நினைத்துக் கொண்டான்.  தனித்திருப்பதில் அவையெல்லாம் களையப்படுகிறதோ இல்லை காணப்படுகிறதோ என்று எண்ணிக் கொண்டான். தனித்திருப்பதில் எண்ணம் குவிந்து தீட்சண்யப்படுவதை மட்டும் அவனால் புரிந்து கொள்ள முடிந்தது.

அப்படி கூர்மையடைந்தது தான் காரணமாக இருக்கலாம். இப்படித் தனியாக கோயிலுக்கு வந்திருக்கும் தருணத்திலேயே, நின்று நிதானித்து வெளிச்சத்தில் அத்தனை நாயன்மார்களையும்  தரிசித்து விடவேண்டுமென்று பாண்டியனுக்குத் தோன்றியது. எழுந்திருந்தான்.  ஈஸ்வரனின் சன்னதிக்கு இடப்பக்கம் திரும்பிய பிராகாரத்தில் வரிசையாக பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த அறுபத்து மூவர் சிலைகளுக்கருகில் வந்தான்.

எல்லா சிலைகளும் வரட்சியின்றி எண்ணெய் முழுக்கில் பளபளத்தன. இடுப்பில் பூண்டிருந்த வஸ்திரங்கள் புதுசாக இருந்தன.  மூன்று பெண் நாயன்மார்களுக்கும் புடவை கட்டிய தோரணையில் அலங்காரம் செய்திருந்திருந்தனர். எல்லா நாயன்மார் பாதக்கமலங்களிலும் ஒற்றைப் புஷ்பம் வைக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு  பெயராகப் படித்துக்  கொண்டு அந்தந்த நாயன்மார்களின் தோற்றம் இப்படித்தான் இருந்திருக்கும் போலும் என்று எண்ணிப் பார்த்துக் கொண்டே வந்த பாண்டியன், நின்ற சீர் நெடுமாற நாயனாருக்கு அருகில் வந்ததும் சட்டென்று நின்றான்.

களையான முகம்.  கம்பீரமான தோற்றம்.  விசாலமான நெற்றி. நாயனார்க்குள்ளும் ஒளிந்திருந்த ராஜ  மிடுக்கு உணர்வாய் அவனுள் படிந்து அவனுக்கும் தொற்றிக் கொண்ட மாதிரி இருந்தது..

'ஐயே! மனசிலே ராஜாங்கற நெனைப்பு தான்'-- என்று மங்கையின் குரல் பாண்டியனின் மனசின் அடி ஆழத்தில் கேட்டது.


(இனி... வரும்)குறிப்பு:  படங்கள் உதவியோருக்கு நன்றி.Friday, December 19, 2014

ஜெயமோகனின் 'வெண்முரசு'

ருப்பத்தாறு அத்தியாயங்கள் கொண்ட ஒரு  பத்திரிகை தொடர்கதையை 'ஒரு வரி' கதையா நினைத்து ஆரம்பிக்கிறது ரொம்ப சுலபம்.  நாலாவது அத்தியாயம் வரும் பொழுதே நாலு வேறு வேறு கதையா உருமாற அது முயற்சிக்கும்.  அந்த முயற்சியை புறந்தள்ளி கற்பனையின் பல நோக்குப் பார்வையைக் கட்டு ஆண்டு ஒரே பாதையில் மொத்த தொடர்கதையையும் ஒரே நேர்கோட்டில் இழுத்துச் சென்று நிறைவு செய்வது என்பது ஆரம்ப சுலபத்தை விட கஷ்டமான காரியம்.

இந்த இலட்சணத்தில் ஆயிரக்கணக்கான கிளைக் கதைகள் நெரிசலான நெய்வாகக் கொண்ட முழு மகாபாரதத்தை சுவை குன்றாமல் சொந்த எழுது முறை சாகசத்தில் முக்கி எடுத்து உதறி உலர்த்துவது என்பது எமகாதக வேலை.  துணிச்சலாக அந்த வேலையை கையிலெடுத்திருக்கிறார் ஜெயமோகன்.

இன்றைய தலைமுறையின் ஆகச்சிறந்த எழுத்தாளர் ஜெயமோகனுக்கு அறிமுகம் தேவை இல்லை.   என்ன தான் சிறப்பாக எழுதினாலும் அவர் சினிமா மூலமாக பிரபலமானால் தான் வெகுஜன பார்வையில் பதிவார் எங்கிற தமிழகத்தின் தலைவிதிக்கு ஜெயமோகனும் தப்பவில்லை. இது வரை வெளிவந்த 'நான் கடவுள்' 'அங்காடித்தெரு', 'நீர்ப்பறவை', 'கடல்' தாண்டி வசந்தபாலனின் 'காவியத்தலைவன்', கமலின் 'பாபநாசம்' படங்களிலும் இவரின் பங்களிப்பு இருப்பதாகச் சொல்கிறார்கள்.

இந்திய பண்பாட்டுத் தளத்தில் ஊறித் திளைத்த மகாபாரதம் 'வெண்முரசு' என் கிற பதாகையின் கீழ் ஜெயமோகனின் இணைய தள பதிவுகளில் மிடுக்காக உலா வந்து கொண்டிருக்கிறது.  சந்தேகமில்லாமல் இது ஒரு அசுர முயற்சி.   ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். எடுத்துக் கொண்ட இந்த மகா முயற்சி ஒரு பத்து வருடப் பிரொஜக்ட் என்கிறார் ஜெயமோகன்.

வருடத்திற்கு குறைந்தது ஐந்து பாகங்கள்.  ஆக பத்து வருடத்திற்கு ஐம்பது பாகங்கள்.  ஒவ்வொரு பாகமும் ஆயிரம் ப க்கங்களுக்கு குறையாது என்கிற பொழுது ஐம்பது  பாகங்களும் ஐம்பதாயிரம் பக்கங்கள்.  ஐம்பதாயிரம் பக்கங்களா என்று மலைக்க வேண்டாம்.  ஜெயமோகனின் எழுதும் வேகம்
அறிந்தவர்களுக்கு இதெல்லாம் ஜெயமோகனுக்கு ஜூஜூபி என்று தெரியும். ஆனால் அந்த ஐம்பதாயிரம் பக்கங்களையும் மூலத்திலிருந்து வழுவாமல் பாரதம் முழுதும் அதன் பரந்து பட்ட குக்கிராமபகுதிகளிலெலாம் செல்வாக்கு பெற்றிருக்கிற எளிய மக்கள் நேசிக்கிற அந்த மகாபாரதத்தின் செறிவை குலைத்து விடாமல் ஜெயமோகன் எப்படித் தரப்போகிறார் என்பது தான் மிலியன்  டாலர் கேள்வி.

பி.கே. பாலகிருஷ்ணனோட 'இனி நான் உறங்கட்டும்' (இனி ஞான் உறங்ஙட்டே?')  மகாபாரதத்து கர்ணனை முக்கிய பாத்திரமாகக் கொண்ட நாவல்.  எம்.டி.வாசுதேவன் நாயரோட 'இரண்டாம் இடம்', ('இரண்டாமூழம்') மகாபாரதத்து பீமனை மையமாகக்  கொண்டது.   எம்.வி.வெங்கட்ராமின் 'நித்ய கன்னி'யோ மகாபாரத்தின் துணைப்பாத்திரமான மாதவியின் அவலத்தை மனம் இரங்கச் சொல்லி பதைபதைக்க வைப்பது. பிரபல கன்னட நாவலாசிரியர் எஸ்.எல். பைரப்பாவின் 'பருவம்', மனம் கவர்ந்த மராட்டிய எழுத்து மேதை காண்டேகரின் 'யயாதி'  என்று மகாபாரத கதை மாந்தர்களை நடமாட விட்ட கதைக்களன்களை நாம் அறிவோம்.  மகாபாரத்தை நிலைக் களனாகக்  கொண்டு கிட்டத்தட்ட முன்னூறு நாவல்களுக்கு  மேல் எழுதப் பட்டிருப்பதாக விஷயம் தெரிந்தவர்கள் கணக்கு சொல்கிறார்கள்.

ஆனால் இப்பொழுது ஜெயமோகன் மொத்த மகாபாரத்தையும் தன் எழுத்தில் எழுதப்  புகுந்திருக்கும் முயற்சி இதற்கு முந்தைய முயற்சிகளிலிருந்து வேறுபட்டது.  தனது 'வெண்முரசு' புதினத் தொடரில், மாகாபாரத்தின் ஒவ்வொரு பிரதான பாத்திரத்தையும் ஒவ்வொரு பாகத்திலும் அந்தப் பாத்திரத்தின் தனித்தன்மையை தூக்கி நிறுத்திக் காட்டி ஒட்டு மொத்த மகாபாரதத்தை நிறைவு செய்யப் போகிறார் என்பது அசகாய முயற்சி தான். மகாபாரத வரலாற்று நாயகர்களின் வரிசை அவரவர் சிறப்பியல்புகளால் எழுதுபவனின் எண்ணத்தில் ஓங்கி நிற்க எழுதுபவன் எழுதும் கதைக்கான பிரிவுகளின் எண்ணிக்கையைக்  கூட்டவும் செய்யலாம்..  'இருபத்து நான்கு மணி  நேரமும் இவர் எழுதிக்கொண்டே தான்  இருப்பாரா' என்று நாம் நினைத்து அதிசயிக்கத் தக்க அளவில் எழுதி சாதித்திருக்கும் ஜெயமோகனுக்கு எல்லாமே சாத்தியம் தான்.  இதுவே இவரின்  பலமும் கூட.

தனது www.jeyamohan.in தளத்தில் நாள் தோறும் ஒரு அத்தியாயம் என்று ஜெயமோகன் மகாபாரதத்தை எழுதிக் கொண்டிருக்கிறார்.  இப்பொழுது வெளிவந்து கொண்டிருப்பது ஐந்தாம் பாகம்.  'பிரயாகை'  என்னும் தலைப்பு  கொண்டது.  'முதற்கனல்', 'மழைப்பாடல்', 'வண்ணக்கடல்' 'நீலம்' என்று நான்கு பாகங்கள் எழுதப்பெற்று தனித்தனியாக புத்தகங்களாகவும் வெளிவந்து விட்டன.  அவற்றை செம்பதிப்புகளாக  நற்றிணை பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. (முகவரி: 6/84, மல்லன் பொன்னப்பன் தெரு, திருவல்லிக்கேணி, சென்னை-5.  www.natrinaibooks.com -லில் ஆன்லைனிலும் வாங்கிக் கொள்ளலாமாம்.)

ஜெயமோகன் தளத்திற்குப் போனால் ஏக  பிரமிப்பு தான். மகாபாரத வாசிப்பின் தொடர்புகளாக 'வெண்முரசு விவாதங்கள்' 'வெண்முரசு வாசகர் விவாத குழுமம்', 'மகாபாரத அரசியல் பின்னணி'  என்று தனித்தனிப்  பகுதிகளாக மகாபாரத கொண்டாட்டம் களை கட்டியிருக்கிறது.

"மகாபாரத்துல இடம் பெற்ற எல்லோருக்குமே ஒரு கதை  இருக்கு.. அவங்களோட செயல்களுக்கு  ஒரு நீதி, நியாயம் இருக்கு.  இதை எல்லாம் விரிச்சு எழுத நினைச்சேன்" என்கிறார் ஜெயமோகன். "அப்ப நடந்தது தானேன்னு எதையும்  ஒதுக்க முடியாது.  இன்றைய வாழ்க்கைக்கான தரிசனங்கள் அதுலே அடங்கியிருக்கு...  பெரிய  கேரக்டரோ, சின்ன கதாபாத்திரமோ, மகாபாரதத்துலே இடம் பெற்ற எல்லோருக்குமே ஒரு  கதை இருக்கு.." என்று ஜெமோ சொல்லிக்கொண்டே வருகையில் கதையைத் தாண்டிய அந்த இதிகாச வரலாற்று நிகழ்வின் ஜீவன் நமக்குப்  புலப்படுகிறது.
அந்த வெளிச்சக் கீற்றின் ஒளிச்சுடரில் அஸ்தினாபுரமும், யுத்தபூமியான குருஷேத்திரமும் நிழலாடுகின்றன.  வாழ்க்கைக்கான உபதேசமான கிருஷ்ண பரமாத்மாவின் பகவத் கீதையின் நிலைக்களனான இதிகாசம். இது வெறும் கதையன்று,  இந்த புண்ணிய  பூமியில் நிகழ்வுற்ற வரலாற்று நிகழ்வன்றோ?' என்று புரண்டு புரண்டு நம்மில் யோசனையாகிறது.   வரலாறு என்றவுடனே என்னதான் ஒரு வரலாற்று நிகழ்வை கதைங்கற பாண்டத்தில் அடைத்து  தந்தாலும் நிகழ்வுற்ற நிகழ்வுகளான அந்த வரலாற்று நிகழ்வுகளுக்குக் குந்தகம் விளையாமல் கதையின் போக்கும் அந்தக் கதைக்கான சொல்லாடல்களும் அமைய வேண்டுமே என்கிற பொறுப்பும் கூடுகிறது,.


ஐம்பது அறுபது ஆண்டுகளுக்கு முற்பட்ட வரலாற்று உண்மைகள் கூட எப்படியெல்லாம் மாற்றியும் திருத்தியும் புதினங்களாகியிருக்கின்றன என்கிற நிதர்சனங்கள் நம்மை அயர்வுக்குள்ளாக்குகின்றன.  தமிழிலோ கேட்கவே வேண்டாம்.   எதற்காக இப்படித் திரித்து எழுத வேண்டிய அவசியம் நேரிட்டது என்று அந்த வரலாற்று உண்மைகளை அறிந்திருக்கும் வாசகன் எரிச்சலோ அயர்ச்சியோ கொள்ளும் அளவுக்கு திரிபுகளின் அரங்கேற்றம் தமிழில் நிகழ்ந்திருக்கின்றன.  எந்த எழுத்தும் வெகுதிரள்  பார்வையில் பட வேண்டும் என்றாலே அவை பத்திரிகைகளின் மூலமாகத் தான் நடக்க வேண்டும் என்கிற சாபத்தீடு வேறே.  பத்திரிகை விற்பனைக்கான போட்டுக்  கொள்ளும் வேஷங்களுக்கு ஏற்ப பத்திரிகைகளின் உள்ளடக்கமும் இருந்தாக வேண்டிய கட்டாயங்களுக்கு எழுதுபவனும் தன் எழுத்தை அந்த சட்டத்திற்குள் உள்ளடக்க வேண்டிய நிர்பந்தமும் இயல்பாகவே ஏற்பட்டு விடுகிறது.  இந்த நிர்பந்த வேலிகளுக்குள் தன்னை உட்படுத்திக் கொள்ளாமல் ஜெயமோகன் இந்த மகாபாரத வெளியீடுகளுக்கு களனான தனது வலைத்தளத்தைத் தேர்ந்தெடுத்திருப்பதை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.  தமிழின் எதிர்கால எழுத்தின் போக்குகளை அறுதியிட்டு நிச்சயிக்கப்  போகிற வலைத்தள எழுத்துக்களின் செம்மாந்த வளர்ச்சிக்கும் அதன் சிறப்பிற்கும் தகுதி சேர்க்கக்கூடிய ஜெயமோகனின் அயராத சாதனைகளை இருகரம் நீட்டி ஆரத்தழுவி வரவேற்க கடமைப்பட்டுள்ளோம்.   ஜெயமோகனின் வெற்றி தமிழ் வலையுகத்தின் வெற்றியாகப்  பரிமளித்திருக்கிறது என்கிற உண்மை எல்லாவற்றிற்கும் ஊடேயே பதிந்து போயிருக்கிற நிகழ்வுலக சரிதமாகும்.

'வெண்முரசு' உலாவை மிகச் சிறபாக உலவ விட வேண்டுமென்ற அக்கறையில் தனது அன்றாட  வெண்முரசுக்கான பதிவுகளை வெகு நேர்த்தியாக ஜெயமோகன் அமைத்திருக்கும் பாங்கு வியக்க வைக்கிறது.மிகச் சிறந்த  ஓவியரான திரு.ஷண்முகவேல்  ஒவ்வொரு அத்தியாயத்திற்கும் சித்திரம் வரைந்து வருவது கதைக்கான வெளியீட்டு அழகைக் கூட்டுகிறது.


"இப்படி சித்திரம் வரைந்து தருவதற்காக ஷண்முகவேல் ஒரு பைசா கூட வாங்குவதில்லை.  அதனால புத்தக விற்பனையில் வரும் ராயல்டி தொகையை அப்படியே அவருக்கு வழங்க இருக்கிறோம்.  எனக்கு மகாபாரதத்தை எழுதற திருப்தி போதும்" என்று வெளிப்படையாய் ஜெயமோகன் சொல்லியிருப்பது  ஒரு சத்திய எழுத்தாளனின் தார்மீக வெளிப்பாடாய் மனசைப் புளகிக்கச் செய்கிறது.

வில்லிப்புத்தூராரின் 'வில்லிபாரதம்' பக்தியை மையமாகக்  கொண்ட கவிதை ஊற்று.  ராஜாஜியின் 'வியாசர் விருந்தோ' குழந்தைகளையும் கவரும் விதத்தில்  மிக  எளிமையாக எழுதப்பட்ட ஒன்று. இந்த மாதிரி தமிழில்  மகாபாரதம் அறிமுகமான களத்தைத் தாண்டி ஜெயமோகனின் வெண்முரசு வேறு வேறு எல்லைகளைப் பற்ற வேண்டும்  என்று எதிர்பார்ப்பு கூடுகிறது. இந்திய தத்துவ  ஞான  மரபில் மிகுந்த  பரிச்சயம் கொண்டவர் ஜெமோ.  இதுவே தனிச் சிறப்பாக ஜெயமோகனை  மற்றவர்களிடமிருந்து பிரித்த தனி அடையாளமாகத் திகழ்கிறது.  இந்த 'வெண்முரசிலும் தனது தனித்த முத்திரையை ஜெயமோகன் பதித்து மற்ற பகுதி மகாபாரதங்களிலிருந்து விலகிய ஓர் அடையாளத்தை தமிழுக்கான பதிப்பில் பதிப்பார் என்கிற எதிர்பார்ப்பு உற்சாகம் ஊட்டுகிறது.

ஜெயமோகன் என்கிற ஒரு தமிழ் எழுத்தாளரின் தனிப்பட்ட உன்னத சிறப்புகள் மேலோங்கி, அவர் தன் எழுத்துக்களில் வடித்துத் தருகின்ற ஒரு மாபெரும் நூலுக்கான சிறப்பாகவும் 'வெண்முரசு' மிளிரப் போகிறது.   நாம் வாழும் காலத்தின்  ஆகச் சிறந்த ஒரு எழுத்தாளரின் பெருமையெல்லாம் நம் மொழிக்கான பெருமையாய் மலரப் போவதின் சாத்தியங்கள் நம்  சந்தோஷத்தைக்  கூட்டுகிறது.

உலகின் இயற்கை சக்திகள் அத்தனையும் உங்களுக்குத் துணையாக இருக்கட்டும்!..  உங்கள் அரிய பணி சீரும் சிறப்பும் கொண்டு மிளிரட்டும்.

இது தமிழின் பெருமை;  தமிழனின் பெருமை.  வாழ்த்துக்கள், ஜெயமோகன்!குறிப்பு:  படம் உதவிய நண்பருக்கு நன்றி.

Friday, December 12, 2014

இனி (பகுதி-5)

பெண்டுலம் இணைத்த சுவர்க் கடியாரம் நான்கு  முறை  ஒலித்தது.

மரபீரோவைக் குடைந்ததில் நின்ற சீர் நெடுமாறனார் பற்றி உருப்படியான செய்திகள் எதுவும் தேறவில்லை.  பி.லிட்., பாடப்புத்தக பாடத்திட்டத்தில் நாயன்மார்களின் ஆக்கிரமிப்பு மேலோட்டமாகவே இருந்தது, இரண்டு மணி நேரத் தேடலுக்குப்  பிறகு தான் தெரிந்தது.  பொதுவாக  63 நாயன்மார்கள் பெயர்களை மட்டும் குறிப்பிட்டிருந்தார்கள்.  அவர்களில் 50-ம் எண்ணிட்டு நின்றசீர் நெடுமாற நாயனார் குறிப்பிடப்பட்டிருந்தார். மற்றபடி அப்பர், சுந்தரர், சம்பந்தர் பற்றி மட்டும் விவரமான கட்டுரைகள் இருந்தன.

நீண்ட கொட்டாவி விட்டபடியே, "அவ்வளவு தானா?" என்றான் பாண்டியன்.  சித்திரங்கள் கூட இந்த மூன்று பேருக்கு மட்டுமே என்று வஞ்சித்திருந்தது அவனுக்கு எரிச்சலூட்டியது.  அந்த எரிச்சலுக்கு ஒரு வடிகால் வேண்டி, "நாயன்மார்கள்  சரி. ஆழ்வார்கள் விஷயம் எப்படி?" என்று தலைசாய்த்து மங்கையைக் கேட்டான்.

அவள் பக்கங்களைப் புரட்டிப் பார்த்து, "அங்கே மூணுன்னா இங்கே கொஞ்சம் கூட.  அஞ்சு தேறும்.  எதுக்காகக் கேக்கறீங்க?.."

மையமாகப் புன்னகைத்தான் பாண்டியன். "அங்கே அப்படின்னா, இங்கே எப்படின்னு தெரிஞ்சிக்கறத்துக்காகத் தான்."

"தெரிஞ்சிக்கிட்டு என்ன ஆகப்போகுது?"

"ஒண்ணுமில்லே. ஒரு க்யூரியாசிடி. ரெண்டுக்கும் ஒரு கம்பாரிஸன் ஸ்டடின்னு வைச்சிக் கோயேன்."

"நல்ல கம்பாரிஸன்!  'இங்கே-அங்கே'ன்னு ரெண்டு  இல்லே.  ரெண்டாத் தெரிஞ்சாலும் ரெண்டும் ஒண்ணு  தான். தெரிஞ்சிக்கங்க..."

"ஒண்ணுதான்ங்கறது ஒருத்தர் கட்சி;  இல்லே, ரெண்டுங்கறது இன்னொருத்தர் கட்சி.."

"ஒண்ணு தான்னா அத்வைதம்;  ரெண்டுன்னா துவைதம்  இல்லியா?"
என்று ஆசைஆசையாகத் தமிழில் தத்துவம் படித்தது நினைவில் நின்று கேட்டாள் மங்கை.

"ஓ.. நீ அங்கே போறியா?.." என்று மலர்ந்து சிரித்தான் பாண்டியன்.  "அப்படித் தான் வைச்சிக்கோயேன்/.."

"அப்படிப் பாத்தா ரெண்டையும் இதில் கொஞ்சம் அதில் கொஞ்சம்ன்னு சேர்த்திகிட்ட மூணாவதும் ஒண்ணு இருக்கில்லியா?.."

"கரெக்ட்! அதனால் தான் எல்லாத்தையும் ஒண்ணாச் சேர்த்தா அந்தக் கலவைக் கல்வி அற்புதமா இருக்கும்ன்னு தோண்றது.. வெத்தலை, பாக்கு, சுண்ணாம்பு சேர்ந்தா மாதிரி."

"அதுசரி.. ஆனா அப்படிச் செஞ்சா இந்த மூணும் அது அதோட ஐடண்ட்டிடியை இழந்திடுமில்லியா?"

"ஐடண்ட்டியா முக்கியம்?.."

"ஆமாம்.." என்று தீர்மானமாகச் சொன்னாள் மங்கை.

ந்தப் பத்திரிகையில் கேள்வி-பதில் பகுதியை மூன்று உதவி  ஆசிரியர்கள் கவனித்துக் கொண்டார்கள்.  வைத்தீஸ்வரன், தேவதாஸ், கிருஷ்ணமூர்த்தி. கேள்வி-பதில் பகுதிக்கு அவர்கள்  பெயர்களின்  முதல் எழுத்தை மட்டும் எடுத்து ஒன்று சேர்த்து வைதேகி என்பவர் பதில் சொல்பவராகக்  குறிப்பிட்டிருந் தார்கள்.  வைதேகி என்கிற பெண் தான் இந்தப்  பகுதியில் வாசகர்களின் கேள்விகளுக்குப் பதில் சொல்கிறாராக்கும் என்று  மோகன் கூட எண்ணியிருந் தான்.  இந்தப் பத்திரிகையில் வேலைக்குச் சேர்ந்த பிறகு  தான் 'வைதேகி' பெயரின் கூட்டுச் சேர்க்கை ரகசியம் இவனுக்கும் தெரிய வந்தது.

பொதுவாக பத்திரிகைகளில் கேள்வி-பதில் பகுதியைக் கவனித்துக் கொள்பவர்கள் சகல மட்டத்திலும் விஷய ஞானம் கொண்டவர்களாய் இருப்பார்கள்.  இல்லை, அவசியத்தின்  அடிப்படையில் எல்லாத்தையும் பற்றித் தெரிந்து கொண்டிருக்க வேண்டிய தேவை அவர்களுக்கு இருந்து கொண்டே இருக்கும்.  அதுவும் இந்தப் பத்திரிகையில் அந்த 'எல்லாத்தை'யையும் ஆன்மிகம், அரசியல், சினிமா, இலக்கியம் என்று நான்காக  வகைப்படுத்தியிரு ந்தார்கள். இந்த நான்கு தலைப்புகளில் 'எல்லாத்தை'யும் அடக்கிவிடலாமென்ற கணிப்பு ஆசிரியருக்கு இருந்தது.

ஆன்மிகத்தை வைத்தீஸ்வரனும், இலக்கியத்தை கிருஷ்ணமூர்த்தியும் கவனித்துக் கொண்டார்கள்.  அரசியலும் சினிமாவும் ஒன்றுக்குள்  ஒன்று புதைந்ததாக ஆகிப்போனதினால் தனி ஒருவராக தேவதாஸே இரண்டையும் கவனித்துக் கொண்டார்.  சினிமா ஸ்டூடியோவிற்கெல்லாம் போய் செய்தி திரட்டி வருவதற்காக தீபக் என்ற சுறுசுறுப்பான இளைஞன் தேவதாஸுக்கு வலது கையாக இருந்தான்.

நின்ற சீர் நெடுமாறனைப் பற்றி ஒரு நெடும்பார்வையில் மேலதிகத் தகவல்கள் திரட்டாவிட்டால் கதை மேற்கொண்டு நகராது போலிருந்தது மோகனுக்கு.

ஆசிரியர், பத்திரிகையின் நூலகப்  பிரிவு பற்றி சொல்லியிருந்தது  நினைவுக்கு வந்தது.  அங்கும் அரைமணி நேரத்திற்கு மேலாக மேலோட்டமாக மேய்ந்ததில் சலிப்பே மிஞ்சியது.  ஆனால் சேக்கிழாரின்  பெரிய புராணம் கிடைத்தது, இதை விட்டால் வேறு வழியில்லை என்பது போலத் தோன்றியது.  செய்யுள் வடிவில் இருந்ததினால், குறிப்புகள் எடுத்து வைத்துக் கொள்ளலாம் என்று மோகன் நினைத்தான்..  அங்கிருந்த ஒரு ரிஜிஸ்தரில் நூல் பற்றிய விவரங்களைக்  குறிப்பிட்டு கையெழுத்திட்டு வீட்டுக்கு எடுத்துச் செல்வதற்காக பத்திரப்படுத்திக் கொண்டான்.

மோகன் தன் இருக்கைக்கு வந்த பொழுது பொறுப்பாசிரியர் ஜி ஏதோ சிந்தனையில் இருந்தார்.  இவனைப்  பார்த்ததும் நிகழ் உலகத்திற்கு வந்தவர் போல தலையசைத்து, "மோகன், உன்னோட 'இனி..' ரொம்ப நன்னாப் போறதுப்பா... ஆசிரியர் கூட போன அத்தியாயத்தின் சில இடங்களை எடுத்துச் சொல்லி பாராட்டினார்.." என்றார்.

'ஆசிரியர் தன்னை கூப்பிட்டு அருகில் அமர்த்திக் கொண்டு பாராட்டக்கூடாதா' என்று மோகனுக்குத் தோன்றியது.  'வேலைக்குச் சேர்ந்து இவ்வளவு சீக்கிரத்தில் இதையெல்லாம் எதிர்பார்க்கக் கூடாது' என்று அடுத்த நொடியே மனசில் நினைப்பு படர்ந்தது.  இருந்தாலும் சென்ற அத்தியாயத்தின் எந்த பகுதியை அவர் பாராட்டினார் என்று தெரிந்து  கொள்ளும் ஆவலில், "எந்த இடங்களைக் குறிப்பிட்டுப் பாராட்டினார், சார்?" என்று கேட்டு அவர் முகத்தை உன்னிப்பாகப் பார்த்தான்.

"ரெண்டு மூணு எடத்லே சப்-டெக்ஸ்ட்டா எழுதியிருப்பியே.. அதெல்லாம் எடுத்துச் சொல்லி பாராட்டினார்" என்றார்.

"குறிப்பா ஒரு இடத்தைச் சொல்லுங்களேன், சார்.." என்றான்.

"அதான்.. அந்த பிறவிப் பெருங்கடல் நீந்தல் சமாச்சாரம்.  ஒரு வரிதான். அந்த ஒருவரிக்குள்ளேயே இன்னொரு வரி ஓடுது பார்.  மங்கை சொன்னது--பாண்டியன் சொன்னது ரெண்டும் வேறு வேறு அர்த்தம் கொடுக்கற மாதிரி நன்னா சொல்லிருக்கேன்னு சொன்னார்" என்றார்.

இவன் மெளனமாக அவர் சொல்வதையே உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருப்பதைப் பார்த்து, "ஆசிரியர் இன்னொன்றும் சொன்னார்" என்றார் ஜி.

"என்ன சார்?" என்று ஆவலோடு கேட்டான் இவன்.

"ஆரம்பத்திலே நாலஞ்சு அத்தியாயம் வந்தால் போதும்ன்னு நெனைச்சேன்.  கதை நன்னாப் போறதினாலே, வாசகர்களோட ரெஸ்பான்சும் இருக்கறதாலே இன்னும் கொஞ்சம் நீட்டலாமோன்னு தோண்றது.. இதை மோகன் கிட்டே சொல்லி முடியுமான்னு ஆசிரியர் கேக்கச் சொன்னார்" என்றார் ஜி.

மோகன் முகம் பிரகாசமடைந்தது. "இப்பத்தான் கதைக்கு பேஸ் போட்டிருக்கேன்.  அதுக்குள்ளே எப்படி முடிக்கறதுன்னு எனக்கும் யோசனையாய் தான் இருந்தது.. ஆசிரியரும் தொடர்ந்து எழுத அபிப்ராயப் படறதாலே, தொடர்ந்து எழுதலாம் சார்..  இன்னும் கொஞ்சம் ஆழமா ஒரு சோதனை முயற்சி மாதிரி இந்தக் கதையை எழுதலாம்ன்னு  தோண்றது. கதையைத் தொடர்ந்து எழுதறதுக்கு சில இடங்களுக்குப் பயணபட்டு சில சரித்திர குறிப்புகளைச் சேகரிக்கணும்.  பொதுவா சில செய்திகள் பற்றிய விவரங்கள் எனக்குத் தேவையா  இருக்கு.  அதையெல்லாம் திரட்டணும்.."

"அப்படியா, மோகன்?.. ஆசிரியர் இதைக் கேட்டா ரொம்ப சந்தோஷப்படுவார்.  அதுக்கான எல்லா வசதிகளையும் செஞ்சு தருவார்.  என்னன்ன வேணும்ன்னு சொன்னேன்னா, அதுக்கான எல்லா ஏற்பாடையும்  செஞ்சுடலாம்" என்றார்.

"சொல்றேன், சார்.. இப்போதைக்கு நின்ற சீர் நெடுமாறனைப் பத்தி டீடெயில்டா சில தகவல்கள் வேணும்."

"நம்ம பத்திரிகை ஆபீஸ்லேயே பெரிய லைப்ரரி இருக்கே.. அங்கே பாத்தியா?.."

"ஓ.எஸ். பாத்திட்டேன். போதாது.  இன்னும் கொஞ்சம் விவரமா கிடைச்சா தேவலை." என்று சொன்னவன் லேசா சிரித்தான். "எனக்கு இது விஷயமா ஒண்ணு  தோணித்து, சார்...  சொன்னா சிரிக்க மாட்டீங்களே?"

"என்னப்பா இப்படி கண்டிஷன்  போட்டா எப்படி?.. வாழ்க்கைலே சிரிக்கறத்துக்கே இப்பலாம் சந்தர்ப்பம் கிடைக்க மாட்டேங்குது.  கிடைக்கற சந்தர்ப்பத்தையும் பயன்படுத்திக் கூடாதுன்னா எப்படிப்பா?" என்று அப்பாவி போல் முகத்தை வைத்துக் கொண்டு ஜி கேட்டார்.

"சரி.. கண்டிஷனைத் தளர்த்திட்டேன்.. ஆனா, ஒண்ணு.  சிரிப்பு வந்தாத்தான்  சிரிக்கணும்.  நான் சொன்னேங்கறத்துக்காக சும்மாவானும் சிரிக்கக்கூடாது."

"சரி.. சொல்லு.."

"நான் என்ன நெனைச்சேன்னா, நம்ம பத்திரிகை கேள்வி-பதில் பகுதிக்கே நின்ற சீர்  நெடுமாறனைப் பத்தி கேட்டு எழுதிடலாம்ன்னு நெனைச்சேன், சார்.."

"ஹஹ்ஹஹ்ஹா.." என்று இயல்பாய் சிரித்தார் ஜி.  "குட் ஐடியா.. எழுதிக் கேப்பானேன்?.. நேர்லேயே கேட்டுட்டாப் போச்சு..  வைதேகிலே   நிச்சயம் 'தே' இல்லே. 'கி' கூட இப்போதைக்கு வேணாம். 'வை' கிட்டே கேட்டாப் போச்சு. வைத்தீஸ்வரன் விஷயகனம் உள்ள பெர்ஸன்.  எனக்கும் நி.சீ.நெ. பத்தி தெரிஞ்சிக்கணும்ன்னு  ஆசையா இருக்கு.  வர்றையா, கேட்டுடலாம்" என்று ஜி தன் இருக்கையை விட்டு எழுந்திருந்தார்.

வைத்தீஸ்வரனிடம் மோகன் தான் கேட்டான். ஜி வெறும் பார்வையாளராக இருந்தார்.

தனது பட்டை கண்ணாடியை ஒரு தடவை வேஷ்டி நுனியில் துடைத்து போட்டுக் கொண்டு வைத்தீஸ்வரன் மோகனைப் பார்த்த பொழுது விஷய ஞானம் உள்ளவர் என்று அவர் கண்களே பளபளத்ததுச் சொன்னது..

"உங்களுக்கு ஒண்ணு ரெண்டு விவரம் சொன்னா பத்தாதில்லையா?..." என்று அவரே யோசனையுடன் இழுத்தார்.

"ஆமாம், வைத்தி சார்.."

"எது பத்தியும் முழுத் தகவல் வேணும்னா, நான் இங்கே தான் கேக்கறது.." என்று எழுந்திருந்தார். "சித்தே என்னோட வர்றேளா?" என்று லைப்ரரி இருக்குமிடம் திரும்பினார்.

"லைப்ரரிலே தானே?.. முழுசா அலசலே.  இருந்தாலும் ஓரளவு தேடிப் பாத்துட்டேன்.." என்று அவருடன் நகர்ந்தான் மோகன்.  லேசான புன்முறுவலுடன் அவர்களைத் தொடர்ந்தார் ஜி.

"நம்ம லைப்ரரிலே தான்.  ஆனா அதிலேயே ஒரு மகா லைப்ரரி இருக்கு பாருங்கோ.." என்று நூலகத்தின் பிரதான வாசல் தாண்டி வலதுப்பக்கம் இருந்த அறைக்குள் கூட்டிச் சென்றார்.  அங்கிருந்த மெஹா சைஸ் கணினி முன் அமர்ந்து ஸ்விட்சை அழுத்தி உயிர்ப்பித்தார்.

"ஏன் நிக்கறேள்? உக்காருங்கோ.." என்று கம்ப்யூட்டர் திரையைப் பார்ப்பதற்கு வாகாக தனக்கு இரண்டு பக்கமும் இருவரையும் அமரச் செய்தார்.

"இங்கே கூகுளாண்டவரிடம் கேட்டால், தகவலா கொட்டிடுவார்.." என்று தமிழ் உரு எழுத்துக்கு மாறி நின்ற சீர் நெடுமாறன் பற்றி கேட்டார்.

தேடிக் கண்டுபிடித்து குறித்துக் கொண்ட தகவல்கள் இன்னும் தேடச் சொன்னது.  ஒரே தகவலை பலபேர்  பங்கு போட்டுக்  கொண்ட ப்ளாட்டிங் பேப்பர் வேலையும் சலிப்பூட்டியது. "இது போதாதுன்னா 'அறுபத்து மூவர்'ன்னு தேடிப்பாக்கலாமா?" என்று தனக்குத் தானே முணுமுணுப்பாய்ச் சொல்லிக் கொண்ட வைத்தீஸ்வரன்,  'அறுபத்து மூவர்' என்று தட்டச்சி அந்த வரிசையில் தேடிய பொழுது தான் புதையல் போல வேறு சில விவரங்கள் கிடைத்தன.

யதேச்சையாய் மழலைகள்.காம் என்கிற வலைத்தளத்தில் அவர் கிடைத்தார்.  புகைப்படம் போட்டு கீதா சாம்பசிவம் என்று பெயர் போட்டிருந்தது.  அறுபத்து மூவர் என்னும் தலைப்பில் நாயன்மார்களைப் பற்றி குழந்தைகளுக்கு  கதை சொல்கிற மாதிரி அழகாக கோர்வையாக எழுதியிருந்தார்.  அங்கங்கே படங்கள் வேறே. ஆனால் அவர் எழுதியிருந்த கட்டுரைகளில் நின்ற சீர் நெடுமாறனைக் கண்டு பிடிப்பதற்குள் தான் உன்பாடு என்பாடு என்றாகிவிட்டது.

தேடிக் கண்டுபிடித்து படித்துப் பார்த்த பொழுது மோகனுக்கு நிறைவாக இருந்தாலும் "எல்லாரும் திருப்பி திருப்பி   நாலைஞ்சு பாயிண்டுகளையே சொல்றாங்க, இல்லை?" என்று பொதுவில் கேட்டான்.

"அந்த நாயனாரைப் பத்தி லோகத்திற்கு தெரிஞ்சிருக்கற தகவல்கள் அவ்வளவு தான் போலிருக்கு.." என்றார் ஜி.

"அப்படித்தான் இருக்கணும்... இருந்தாலும் வேறே எங்கையானும் இன்னும் இவர் பற்றித் தெரிஞ்சிக்க முடியுமான்னு பாக்கணும்.." என்றான் மோகன்.

"எங்கிட்டே சொல்லிட்டீங்கல்லே.. கொண்டு வந்து சேக்கறேன், பாருங்க.." என்று புது உற்சாகத்துடன் கணினியை கைவிட்டு எழுந்திருந்தார் வைத்தி.

அவர் சொன்ன தோரணை, நிச்சயம் செய்வார் போலிருந்தது மோகனுக்கு.(இனி...  வரும்)Monday, December 8, 2014

இனி (பகுதி-4)

"ஐயே!.. " என்றாள் மங்கை.

"மனசிலே ராஜாங்கற நெனைப்புத் தான்!" என்று முகம் தொட்டு கன்னம்  கிள்ளினாள்.  கிள்ளிய இடத்தில் வலித்தாலும் இன்னொரு  தடவை கிள்ள மாட்டாளா என்று பாண்டியனுக்கு இருந்தது. "நெஜமாலும் அப்படி இல்லை, மங்கை.." என்றான்.

"எப்படி  இல்லை?"

"ராஜாங்கற நெனைப்பு என்னிக்கும் இருந்ததில்லே..  அதுவும் அந்த ராஜா சிலைக்கு முன்னாடி நின்னப்போ,  நாம்பலாம் ராஜாங்கற நெனைப்பு எங்கேயாச்சும் வருமா?"

"வேறே என்ன நெனைப்பு வந்திச்சி?.."

"எந்த நெனைப்பும் இல்லே.  ஆனா மனசு மட்டும் என்னை விட்டுப் பிரிஞ்சி அவரோட ஒட்டிக்கிட்ட மாதிரி இருந்தது.  சிற்பி வடித்திருந்த சிலையை கண்ணைத் திறந்து   பார்த்ததுமே ஆச்சரியத்தோட இந்த நாயன்மார் யாருன்னு தெரிஞ்சிக்க மேலே எழுதியிருந்த பேரைப்  பார்த்தேன்."

'உம்' என்று  சுவாரஸ்யமாகக் கேட்கிற உணர்வில் 'உம்'கொட்டினாள் மங்கை.

"அங்கேயும் நெடுக்க தீபம் ஏத்தி வைச்சிருந்தாங்கன்னாலும், அரைகுறை இருட்லே சரியா தெரிலே..  உச்சிலே வேறே எழுதியிருந்தாங்களா, கழுத்தைச் சாய்ச்சு அண்ணாந்து பாக்க வேண்டிருந்தது..  லேசா அழிஞ்சிருந்தாலும் நின்ற சீர் நெடுமாற நாயனார்ன்னு எழுத்தைக் கூட்டி படிக்க முடிஞ்சது..  அவர்
நாயனார் ஆனாலும் மன்னராய் தான் இருப்பார்ன்னு பேரைக்  கொண்டு யூகிச்சேன்."

"நெடுமாறன்னதும் பாண்டிய ராஜான்னு தெரியறது..  ஐயே! பாண்டிய ராஜான்னா எவ்வளவு சந்தோஷம் பாரேன்!"

"மதுரைதான் நம்ப ஊரு.  அதனாலே பாண்டிய ராஜான்னா ஒரு இது! அதான்!" என்றான் பாண்டியன்.

"ஒங்க பேரும் பாண்டியங்கறதாலே தான் மனசிலே ராஜாங்கற நெனைப்பான்னு  கேட்டேன்.  இப்போ சொல்லுங்க.   கேட்டது நியாயம் தானே!"

"அரை நியாயம்.  அரை அநியாயம்."

"என்ன கணக்கிலே சொல்றீங்க?"

"பாண்டியன்ங்கறதாலே ராஜாவா நினைச்சது நியாயம்;  எல்லாரும்  இந்நாட்டு மன்னர்ன்னு நான்  நினைக்கறதாலே நான்  ஒருத்தன்  தான் ராஜாங்கறது அநியாயம்.."

"ஊருக்கு ராஜா இல்லேனாலும் என் ராஜ்யத்திற்கு நீங்க தானே ராஜா!"

"அப்ப நீ தான் என் ராஜ்ய ராணி.  சோழ ராணி.."

"சோழ ராணியா?" என்று கேட்டு விழி விரித்தாள் மங்கை.

"பின்னே, இல்லியா?  சோழ நாட்டுப் பெண் தானே நீ? அதனாலே சோழ ராணி."

"அத்தை மகளானாலும் பாண்டிய ராஜாவை திருமணம் முடித்த சோழ ராணிங்கறீங்க.. அப்படித் தானே?"

"சரிதான்.." என்று அவள் அருகே கொஞ்சம் நகர்ந்து உட்கார்ந்தான் பாண்டியன்.
"சிவராத்ரிக்கு முழிக்கணும்னா சும்மா  இல்லே..  தெரிஞ்சிக்க.  பாதி ராத்திரி போக இதோ, இது!" என்று பக்கத்தில் மடக்கி வைத்திருந்த பரமபத
விளையாட்டு அட்டையை  எடுத்தான். பிரித்து வைத்து பிளாஸ்டிக் கவரில் இருந்த எண்கள் போட்ட  சதுர பகடையையும்,  இரண்டு பேருக்குமான  இரண்டு நிறங்களில் இருந்த அடையாள வில்லைகளையும் எடுத்து  வைத்துக் கொண்டான்.


"பரமபத விளையாட்டு விளையாட ஆரம்பிச்சா பாதிலே எழுந்திருக்கக் கூடாதுன்னு சொல்லுவாங்கள்லே?" என்று நிமிர்ந்து பார்த்த மங்கையின் முகம் குழல் சுருட்டலுக்குப்  பின்னால் பளபளத்தது.

"அப்படியா?.. நான் கேள்விப்பட்டது இல்லே.  விளையாட ஆரம்பிச்சா எழுந்திருக்க  மனசும் வராது, இல்லியா?.. ஒரு ஆட்டமாவது போட்டுடலாம்.       ஓக்கேவா?"                                                                                                

"ஓ.." என்று உதடைக் குவித்தாள்  மங்கை.   கண்மூடி கைகுவித்து உதடசைத்து வேண்டிக்கொண்டாள்.  அடுத்த  வினாடி விழித்து,  "தாயம் போட்டுத் தானே விளையாட்டை ஆரம்பிக்கணும்?" என்று அவனிடம் கேட்டாள்.

"என்ன தெரியாத மாதிரி கேக்கறே?.. தாயம் போட்டாத்தான்.."என்று அவன் சொல்லிக் கொண்டிருக்கையிலேயே தாயத்தைப் போட்டு விட்டு, "ஹையா.." என்று  ஒரு எம்பு  எம்பிக் குதித்தாள் மங்கை.

பாண்டியன் இதை எதிர்பார்க்கவில்லை."என்ன இவ்வளவு ஈஸியா தாயம்  போட்டுட்டே?" என்று முனகியவாறே அவளிடமிருந்த பிளாஸ்ட்டிக் சதுரப் பகடையை வாங்கி உருட்டினான்.  அட! அவனுக்கும் தாயம்!

"அப்பாடி.." என்று அவன்  சிரிக்க, அமர்த்தலாக "தாயம் போட்றதிலே என்ன  இருக்கு? அந்த அருகாஷன் பாம்பு கைலே மாட்டாம இருக்கணுமில்லே.. அதுக்குத் தான் ஆட்டத்தை ஆரம்பிக்கும் போதே வேண்டிக்கிட்டேன்." என்றாள் மங்கை.

"அப்படியா சமாச்சாரம்?.. மங்கை! பாம்பின்  கை  பாம்பறியும்ன்னு ஒரு  வழக்கு மொழி இருக்கு. தெரியுமிலே?"

"என்ன  கிண்டல் அடிக்கிறீங்களா-- எனக்கும் தெரியும், பாம்பின கால் பாம்பறியும்னுட்டு.."

"ஓ.. நீ தமிழ் பி.லிட்.லே?.. தெரியாம கேட்டுட்டேன்" என்றபடி 9 போட்டு 'கொக்கு'க்கு வந்திருந்தவன், ஒரு 7 போட்டு 16 எண் 'சகுனக் கட்ட'த்திற்கு வந்து அங்கிருந்த ஏணியில் ஏறி 28ம் எண் 'கடவுள் உடனுறை' கட்டத்திற்கு வந்து விட்டான்.  கடவுள் உடனுறை!  பெயரே தெய்வீகமாக இருந்தது;  அதனால் அந்த கட்டம் வந்ததில் அவனுக்கு ரொம்ப சந்தோஷம்.

மங்கையோ எட்டும் ஆறும்  போட்டு 14-வது கட்டத்திற்கு வந்திருந்தவள் இப்பொழுது ஒரு 5 போட்டு 'ஸ்தோத்திர கட்ட'த்திற்கு வந்து ஏணி ஏறும் அதிர்ஷ்டம் கிடைத்து 39 எண்ணிட்ட 'கோலோகம்'  கட்டத்திற்கு வந்து சேர்ந்தாள்.  பசுக்கூட்ட லோகம் கிடைத்ததில் அவளுக்கு  ஏகப்பட்ட மகிழ்ச்சி.

அந்த சந்தோஷத்தில், "அப்புறம் என்ன ஆச்சு?.. நாயன்மார்  பேரைப் படிச்சீங்க.  அதற்கப்புறம்?"

"அப்புறம் என்ன?.. உன்னை  மாதிரி பி.லிட்.டா இருந்திருந்தாலும் பேரைப் பாத்ததும் அவரு யாரு என்னன்னு தெரிஞ்சிருக்கும்.  சரித்திரத்திலும் அவ்வளவு பத்தாதில்லையா எனக்கு?.." என்று ஒரு 2 போட்டு 'தியானம்' வந்ததினால் அங்கிருந்த ஏணி ஏறி  50 எண்ணிட்ட 'தவக்கோலம்' அடைந்தான்.

"என்ன யார் முகத்லே முழிச்சீங்களோ, ஒரே  ஏணி ஏத்தமானா இருக்கு!" என்று கேட்டு மங்கை பகடையை உருட்ட அது 2 காட்டி 'யாகம்' கட்டம் அடைந்து அங்கிருந்த ஏணி ஏறி 61 'சுவர்லோகம்' அடைந்தாள்.

"உனக்கு மட்டும் என்னவாம்?.. ஏணி சவாரி இல்லியோ?"

"ரெண்டு பேருக்கும் தான் சொன்னேன்.  நீங்க என் முகத்லேயும் நான் உங்க முகத்லேயும் முழிச்சிருப்பேன்.  ரெண்டு பேரா இருந்தாலே இப்படித்தான். அதுக்குத் தான் மூணாவது ஒருத்தர் வேணுங்கறது.."

"சிவ சிவா.." என்று பாண்டியன் பகடையை உருட்டிப் போட்டான்.  ஒரு 2 விழ 52 அடைந்து அங்கிருந்த ஏணி ஏற்றிவிட 72 'கடவுளை நெருங்குதல்' கட்டம் வந்ததில் சந்தோஷமான சந்தோஷம் அவனுக்கு.

"அட, இதைப் பாரேன்.." என்று மங்கை பகடையை உருட்டினாள். என்ன ஆச்சரியம்! அவளூக்கும் அதே 2 தான்.  அது அவளை 63 'பக்தி'க்கு கூட்டிப்போக அங்கு தயாராயிருந்த ஏணி அவளை  83 'பிரம்ம லோக'த்தில் கொண்டு வந்து விட்டது.

"மறந்திட்டேன்.  நாயனார் பேரு என்ன சொன்னீங்க?.. நின்ற சீர் நெடுமாறன் இல்லியா?.. உம்?..  அவரு யாரு, என்னன்னு சட்டுனு ஞாபகத்துக்கு வரலே.  நாயன்மார்கள் பத்திலாம் படிச்சிருக்கேன்.  பரீட்சைலே அவங்களைப் பத்தி கேள்வி கூட வந்தது.. அதெல்லாம் கூட ஞாபகம் இருக்கு..  63 பேர் இல்லியா?அதான் யார் யார் என்ன என்னன்னு சட்டுனு  நெனைவுக்கு வரலே.. படிப்பு  முடிச்சும் மூணு வருஷம் ஆயிடிச்சில்லா?.. அதான்.  சுவத்து மர பீரோலே கவர் போட்டு பழசெல்லாம் கட்டி வைச்சிருக்கேன்.  எடுத்து பாத்துத் தான் சொல்லணும்" என்று சொல்லிக் கொண்டே பகடையை  உருட்டியவள், 4 போட்டு 87 'வைராக்கியம்' வந்து ஏணி ஏறி 115வது கட்ட 'வைகுண்டம்' வந்து சேர்ந்தாள். சேர்ந்த மகிழ்ச்சியில் பூரித்தாள்.  அந்த பூரிப்பை அவளது கன்னக் கதுப்புக்கள் பளபளத்து புஷ்டியுடன்  வெளிப்படுத்தின..

"என்ன சரசரன்னு ஏறிட்டியே?" என்ற பாண்டியன்  அவளைப் பிடிக்கும் அவசரம் கலந்த ஆவலில் கை பகடையை உருட்ட 7 விழுந்து 79 'ஞானம்' வந்து ஏணி ஏற்றிக் கொண்டது;  117 'கைலாய'த்தில் கொண்டு வந்து விட்டது.

79 எங்கே 117 எங்கே?..  ஏணியே! ஆயிரம் நூற்றாண்டிரும்.  உமக்கு நன்றி.." என்று பாண்டியன் வெற்றிக் களிப்பில் அந்த சமயத்தில் மனசுக்குத் தோன்றிய வசனம் பேசினான்.  "மங்கை!  வைகுண்டத்துக்கும் கைலாயத்திற்கும் ஒரு கட்டம் தான் இடையே. ஒரு 2 போடு.  நீயும் கைலாயம் வந்து சேர்ந்திக்கலாம்.." என்று கும்மாளம் போட்டான்.

"வரேன்.." என்றாள் மங்கை.  வாயால் 'வரேன்..' என்று  உறுதி போலச் சொல்வதால் எங்கே அதற்கு நேர்மாறாக நடந்து விடுமோ என்கிற  பயமும் அவளுக்கு இருந்தது. அந்த பயம் தன்னைப் பாதிக்காமல் இருக்க வேறே ஒரு சந்தோஷத்தால் அதை மூடி மறைக்க வேண்டும் என்கிற உணர்வில்,  "ஒண்ணு தெரியுமா, உங்களுக்கு?.. ரெண்டு  பேருமே அருகாஷனை கடந்து வந்திட்டோம்.  பாத்தீங்களா?  நா வேண்டிக்கிட்டது வீண் போகலை." என்று பகடையை கையில் எடுத்தாள்.

"எதுக்கு வேண்டிகிட்டேன்னு  தெரியாது.  ஆனா, நீ வேண்டிக்கும் போதே உன்  கோரிக்கை நிறைவேறிடும்ன்னு நான் நெனைச்சேன்.."என்றவனை எட்டி குஷியில் புஜம் பற்றி இறுக்கினாள்.

"பாத்து.. பாத்து, மங்கை.. நாலோ ஆறோ போட்டுடாதே..  கர்வமும், அகங்காரமும் ரெண்டு பாம்பாக் காத்திருக்கு.  மாட்டினா அதுங்க நம்பளை கீழே இறக்கிவிட்டிட்டுத் தான் மறுவேலை பாக்கும்..  இவ்வளவு ஏணி ஏணியா ஏறினதெல்லாம் அம்போ ஆயிடும்..  பாத்து.. பாத்து.. ஜாக்கிரதையா உருட்டு" என்று எச்சரித்தான் பாண்டியன்.

"நம்ம கையிலே என்னங்க, இருக்கு.. எல்லாம், அந்த.." பயத்தை வெளிக்குக் காட்டாமல் ஆனால் பயப்பீதியோடையே மங்கை பகடையை உருட்டி விட, 3 விழுந்து "அம்மாடி--" என்று தன் மார் தொட்டாள் மங்கை.  மூன்று கட்டம் தாண்டி பத்திரமாக 120 எண்ணிட்ட 'கோயில்' அடந்தாள்.  பாண்டியனோ தன் பங்குக்கு பயந்தபடியே உருட்ட தாயம் விழுந்து அவன் 118 எண்ணிட்ட இன்னொரு  கோயில் அடைந்தான்.

தாயம் விழுந்தால் போச்சு.  மங்கை இருந்த இடத்திற்கு அடுத்த கட்டம் அகங்காரம் பாம்பு.  அதனிடம் மாட்டினால் ஒரே இழுப்பாக இழுத்து 99-க்கு இறக்கி விட்டு விடும்.   சாமியே, தாயம் விழக்கூடாது என்று பிரார்த்தித்தபடி வேக வேகமாக அவனிடம் பகடையை வாங்கி மங்கை உருட்ட 2 விழுந்து 122 'மறுபிறவி இல்லை' கட்டம் அடைந்து பிரமிப்பில் தத்தளித்தாள். பாண்டியனுக் கும்  நடுக்கம் தான். தாயமும் விழக்கூடாது; மூன்றும் விழக்கூடாது. தாயம்ன்னா 'கர்வ'ப் பாம்பு.  மூணுன்னா 'அகங்காரம்' பாம்பு.  இந்த இரண்டைத் தவிர எதுவானும் விழட்டும் என்று உருட்ட நினைக்கையிலேயே வியர்வையில் வழுக்கி தாயக்கட்டை அவன் கைவிட்டு நழுவியது.  நழுவியது நிமிர்ந்து 4 காட்டியது.  இவர்களின் இரண்டு அடையாள வில்லைகளும் 'மறுபிறவி இல்லை' கட்டத்தில் ஒன்றை ஒன்று தழுவிக்கொண்டு இழைந்தன. அதைப் பார்த்து மங்கை கலகலவென்று சிரித்தாள்.

"அப்பாடி!  இனி பிறவிப் பெருங்கடல் நீந்த வேண்டிய அவசியம்  இல்லை" என்று நிம்மதி பெருமூச்சு விட்டாள்.

"ஏன் அப்படி சொல்லிட்டே?.. ஜோடி கிடைச்சிடுச்சி.  வேண்டியமட்டும் நீந்தலாம்ன்னு நான் நெனைச்சிக்கிட்டிருந்தா?.."

"க்குங்.. ஆளைப் பாரு!"

"ஓக்கே.  ஓக்கே.. விளையாட்டு மத்திலே விளையாட்டுக்காகச் சொல்றதெல்லாம் கணக்கிலே எடுத்துக்கக் கூடாது, இல்லியா?"

"ஆட்டத்தைப் பாத்து விளையாடுங்க..  கும்மாளம் போட்டீங்கன்னா சமயம் பாத்துக் காலை வாரி விட்டுடும்.. ஜாக்கிரதை!" என்று அவனை எச்சரித்தாள்.

122-லிருந்து 132 வரை உல்லாசம் தான்.  தீண்ட பாம்பும் கிடையாது; ஏற்றி விட ஏணியும் கிடையாது.  அந்த சுதந்திரத்தில் எப்படி வந்தோம் என்று  தெரியாத சுகத்தில்  இரண்டு பேருமே 132 'பராசக்தி' கட்டம் அடைந்தனர்.

"பரமபதம் அடையற வரை இனிமே தாயம் போட்டுத் தானே, ஒவ்வொரு கட்டமாக் கடக்கணும்?" என்று பாண்டியன்  கேட்டான்.

"என்ன தெரியாத மாதிரி கேக்குறீங்க.. தாயம் போட்டால் தான்.." என்று அவள் சொல்லிக் கொண்டிருக்கையிலேயே தாயம் போட்டு பாண்டியன் கெக்கலிக்க மங்கை தனக்கு  என்னவாகப் போகிறோ என்ற ஐயப்பாடில் பகடையை உருட்டினாள்.  அதிர்ஷ்ட்டம் அவள் பக்கத்தில் இருந்தது..  அவளுக்கும் தாயம் தான்!

"இப்போ  சொல்லுங்க.. அதுக்கப்புறம் கோயில்லே என்ன நடந்ததுன்னு.." பகடையை அவனிடம் தந்து விட்டுக் கேட்டாள் மங்கை.

"நீ என்னவோ விளையாட்டு நடுவே டைம்பாஸ் மாதிரி அந்த கோயில் சமாச்சாரத்தைக் கேட்டினா, நான் நெனைச்சிப் பாத்து நெனைச்சிப்  பாத்து சொல்லணும்ங்கறியா?" என்று பொய்க்கோபம் கொண்டான்.

"ஐயோ, அப்படில்லீங்க...  மனசு அதிலே தான் இருக்கு.  விளையாட்டுனாலும் இதுவும் முக்கியம் இல்லியா?.. சிவராத்திரியும் அதுவுமா பரமபதம் அடைஞ்சா எவ்வளவு புண்ணியம்!  அதுக்குத் தான்.  இதோ கிட்டக்  கிட்ட வந்தாச்சு.. இன்னும் நாலு தாயம் தான்.  தாயம் தாயமா போட்டு பரமபதம் அடைஞ்சு ஆட்டம் முடிஞ்சதும், மரபீரோவைத் திறந்து புஸ்தகமெல்லாம் எடுத்து அலசிப் பார்த்திட வேண்டியது தான்." என்று நிமிர்ந்தவள் கடியாரத்தைப் பார்த்தாள்.
"அட! மணி ரெண்டுங்க..."

இரண்டரை மணியளவில் ஆட்டம் முடிந்தது.  இரண்டு பேரும் சிவராத்திரி திருநாளில் பரமபதம் அடைந்த பெருமையில் எழுந்திருந்தார்கள்.

"ஒரு சின்ன டீ..  குடித்த பின்னாடி மர பீரோவைத் திறக்கலாமா?" என்றான் பாண்டியன்.

"டீ தானே?.. நீங்க கேப்பீங்கன்னு  தெரியும்.. ரெடியா பிளாஸ்க்கிலே போட்டு வைச்சிருக்கேன்  பாருங்க.."

டேபிளின் மேலிருந்த பிளாஸ்க்கை நாடிப் போனான் பாண்டியன்.  அப்படிப் போனவன் என்ன நினைத்துக் கொண்டானோ, சடாரென்று திரும்பி,  "ஏன், மங்கை!  நாயன்மார்களைப் பத்தி புஸ்தகம் பார்த்து விவரம் தெரிஞ்சிக்கலாம். சரி.  அதோட அவங்க படங்கள்லாம் போட்டிருப்பாங்களா?" என்று ஆவலோடு கேட்டான்.

"எதுக்குக் கேக்குறீங்க?" என்றாள் மங்கை, அவளுக்கும் தொற்றிக் கொண்ட  உற்சாகத்தில்.


(இனி...  வரும்)குறிப்பு:  படங்கள் உதவிய நண்பர்களுக்கு நன்றி.


Friday, December 5, 2014

இனி (பகுதி-3)

                                 அத்தியாயம்--  3

காளியண்ணன் கடையில் இல்லை.

"காளியண்ணன் இல்லை?.." என்று கடையில் வியாபாரம் செய்து கொண்டிருந்தவரை வினவினான் பாண்டியன்.

அவர் பதிலே சொல்லவில்லை.   கேட்டவர்க்கு கேட்டதை உடனே கொடுக்கும் கிருஷ்ணனாக இருந்தார்.  கேட்கும் பொருளைக் கொடுத்து அதற்கான காசை வாங்கிக் கல்லாப் பெட்டியில் போடுவதும், 'அப்புறம்?' என்று புருவ உயர்த்தலுமாய் இருந்தார்.  இந்த சமயத்தில் காசு வாங்கிப் போடும் ஒரு இயந்திரத்தைக் கற்பனை செய்து அவரது தலையை மட்டும் அதற்குப் பொருத்திப்  பார்த்ததில் பாண்டியனுக்கு சிரிப்பு உதடுகள் வரை வந்து விட்டது. கஷ்டப்பட்டு ஓசையின்றி உள்ளுக்குள்ளேயே அடக்கிக் கொண்டான்.

கடைக்கு வந்தவர்கள் போனதும் தான் இன்னும் ஒரு ஆள் நிற்கிறானே என்பது அவர் உணர்வில் தைத்திருக்க வேண்டும்.  அவன் பக்கம் திரும்பி, "என்ன வேணும்?" என்றார்.

"காளியண்ணன் இல்லை?"

"தம்பியைக்  கேக்குறீங்களா?" என்று அவர் கேட்ட தருணத்தில் இவர் காளியண்ணனின்  அண்ணனாக இருக்கலாம் என்று  நினைத்துக் கொ ண்டான் பாண்டியன்.  இல்லாமலும் இருக்கலாம் என்று நினைப்பு  ஓடிய போது, "தம்பிக்கென்ன?.. அவுரு ராசா வீட்டுக் கன்னுக்குட்டி.  கடைக்கு எப்ப வேணா வருவாரு எப்ப வேணாப் போவாரு.  இப்போ ஜாமான் வாங்க மார்க்கெட்டுக்குப் போயிருக்கான்.   உங்களுக்கு என்ன வேணும்?"

"அர்ச்சனைத் தட்டு ஒண்ணு கொடுங்க.."

"தட்டு கொடுத்தா திரும்பி வர்றதில்லே.  அதனாலே இப்போலாம் பைதான். இந்தாங்க--" என்று பிளாஸ்டிக் பையில் ரெடியாகப் போட்டு வைத்திருந்ததை பாண்டியனிடம் நீட்டியபடியே, "இதை அப்பவே கேட்டிருக்கலாமிலே;  கேட்டிருந்தா இந்நேரம் வேலை முடிஞ்சி சன்னதி வரைக்கும் போயிருக்கலா மிலே?.. செவ ராத்ரிலே?.. ஜனம் சாய ஆரம்பிச்சாச்சு.. சரி, சரி, அம்பது ரூபா கொடுங்க.."

காசைக் கொடுத்து விட்டு, "இல்லே.  காளியண்ணனைத் தெரியும்.  எங்கூட ஒண்ணாப் படிச்சவன்.  அதான்." என்றான்.

 "அதுசரி. அவரு கடைலே இல்லேன்னு தெரியுதிலே?  பின்னே இல்லியான்னு கேட்டீங்கனா, நா என்ன சொல்றது?..  வியாபார ஜரூர் இல்லியா?.. பேசிக்கிட்டு இருக்க முடியுங்களா?.. சொல்லுங்க.."

இதுக்கு என்ன சொல்றதுன்னு தெரியாம "இந்தப்பக்கம் செருப்பை விட்டுட்டு போகலாமுங்களா?" என்று கடையைச் சுற்றி மணல் பரப்பி அடைத்திருந்த தட்டிப் பக்கம் கைகாட்டிக் கேட்டான் பாண்டியன்.

"அல்லாரும் அதைத் தான் செய்யிறாங்க.. அதுங்களும் ஏதோ அத்துக்குக் கட்டுப்பட்டுக் கெடக்குதுங்க.. பொருந்தற எவனாவது போட்டுக்கிட்டுப் போனா அப்படிப் போறவன் காலைக் கடிச்சு உனக்கு சேரமாட்டேனா சொல்லப் போகுது.. இந்த வியாபார மும்முரத்லே இதையெல்லாம் கவனிச்சிகிட்டு தான் இருக்க முடியுமா?.. சொல்லுங்க.." என்று சொல்லிக் கொண்டிருக்கையிலேயே கடைக்கு வந்த இரண்டு பெண்கள் பக்கம் அவர் கவனம் பாய்ந்து. "என்ன வேணும்மா.."

இவ்வளவு விட்டேர்த்தியாகச் சொல்கிறாரே, செருப்பை விட்டு விட்டுப் போகலாமா, வேண்டாமா?' என்று பாண்டியனுக்குத் தோன்றியது.

அந்தக் கோயிலில் செருப்புகளைப் பாதுகாத்து வைத்து திருப்பித் தர தனி வசதியில்லை.  இங்கே விடவில்லை என்றால் வானம் பார்த்தபடி பாதரட்சைகளை கோயில் கோபுர பக்க சுவர் பக்கம் விட வேண்டும்.  போன வாரம் வாங்கின புதுசு;  399.90.  இது பளபளத்து போற வர்றவன் கண்ணை எடுத்துக்கோ, போட்டுக்கோன்னு உறுத்தறதை விட இங்கே விடுவது எவ்வளவோ மேல் என்று பனைஓலை தட்டிக்குப்  பக்கத்தில் சட்டுனு யார் கண்ணுக்கும் படாத மாதிரி மறைத்துப் போட்டு விட்டுத் திரும்பினான்.

வெளியே வந்து நிமிர்ந்த பொழுது தான் தெரிந்தது.

கோயில் கோபுரத்தின் உச்சி விளக்கும்  போட்டு விட்டார்கள்.

சாரிசாரியாக கோயிலை நோக்கிப் போகும் கூட்டத்தோடு பாண்டியனும்
கலந்தான். கோபுரம் தாண்டி போன போது தான் தெரிந்தது.  காளியண்ணனின்  அண்ணன்  சொன்னது சரிதான். செவராத்ரிலே? ஜனம் சாய ஆரம்பிச்சாச்சு..

அர்ச்சனை சீட்டு வாங்க வேண்டுமென நினைப்பு வந்தது. சீட்டு கொடுக்கும் கவுன்ட்டர் முன்னாடி க்யூ.  அதில் தன்னையும்  ஒருவனாக இணைத்துக் கொண்டான் பாண்டியன்.  தட்டுக்கு பதில் ப்ளாஸ்டிக் பை என்பது லகுவாகத் தான் இருந்தது.  இதுன்னா கைவிரல்கள்லேயே கோர்த்துக்கலாம்.  நசுங்கி விடாதபடிக்கு மாரோடு அணைத்துச் செல்ல வேண்டும் என்கிற அவசியமில்லை.

இவன் முறை வந்ததும் பத்து ரூபா நோட்டை நீட்டினான்.

பிறைச் சந்திர மர வளைவுக்குப் பின்னாலிருந்து குரல் வந்தது. "சில்லறையா கொடுப்பா.."

"சில்லறை?" என்று அவன் தடுமாறிய பொழுது அடுத்து நின்றிருந்தவர் உதவிக்கு வந்தார்.  "அதை இங்கேக் கொடுங்க.." என்று ரூபாய் நோட்டை வாங்கி சில்லறை கொடுத்தார்.

வளைவுக்குள் பார்த்து "சீட்டு எவ்வளவுங்க?.." என்றான் பாண்டியன்.

"வெளிலே போர்டுலே போட்டிருக்கிலே?  பாக்கலையா?.. படிச்சவன் படிக்காதவன் அல்லாம் ஒண்ணாத் தான் இருக்கு..  சட்டுபுட்டுனு கொடுப்பா.."

பின்னால் நின்றிருந்தவர் இப்பொழுதும் உதவிக்கு வந்து "மூணு ரூபா.." என்றதும் மூன்று ரூபா காசை வளைவுக்குள் வைத்து விட்டு அவரை நன்றியுடன் பார்த்தான்.

"இந்தாப்பா.." கவுன்ட்டர் பலகையின் மீது வீசப்பட்ட சீட்டை எடுத்துக் கொண்டு வெளியே வந்த பொழுது 'அப்பாடா' என்றிருந்தது.

இந்த மாதிரி கோயில் விசேஷ நாட்களில் மங்கையுடன் எத்தனையோ தடவை எத்தனையோ கோயில்களுக்குப் போயிருக்கிறான்.  அதனால் கூட்டம் புதுசில்லை.  ஆனால் இப்போ தனியாக வந்திருப்பதில் ஒரு வித்தியாசம் அவனுக்கே தெரிந்தது..

மங்கையுடன் வரும் பொழுதெல்லாம், அவளுக்கு ஒரு ஆண்துணையாக வருகிற மாதிரியான உணர்வு மட்டுமே அவனுக்கு இருக்கும்.  அர்ச்சனை பொருட்கள் வாங்குவதில் ஆரம்பித்து, தரிசனம் முடிந்து வெளியே வருகிற வரை எல்லா பொறுப்பும் அவளுடையதாக இருக்கும்.  அதனால் தான் தனியாக வருகையில் சில தடுமாற்றங்கள் என்று நினைத்துக் கொண்டான்.

அடுத்து அர்ச்சனை தான்.  திடீரென்று ஒரு சந்தேகம்.  யார் பெயருக்கு அர்ச்சனை என்று மங்கையிடம் கேட்டுக் கொள்ளாமல் வந்து விட்டோமே என்று தோன்றியது.  "சிவராத்ரி அன்னிக்குத் தான்  நீ  பொறந்தே, தெரிஞ்சிக்கோ.." என்று ஒரு சிவராத்திரி அன்று அம்மா அவனிடம் சொன்னதும் சமயத்தில் நினைவுக்கு வந்து... 'ஓ.. மங்கை சரியான ஆள் தான்! அவளுக்குத் தான் எவ்வளவு ஞாபகசக்தி?' என்று நினைத்துக் கொண்டான்.

'இருந்தாலும் மங்கையிடம்  கேட்டு விட வேண்டும்.  அவள் சொல்லி எதையும் செய்தால் தான் சரியாக இருக்கும்' என்கிற தீர்மானத்தில் மொபைலை எடுத்தான்.   இந்த இரைச்சலில் ஒன்றும் கேட்காது என்கிற ஞானோதயத்தில் பிராகாரத்தின் உள்பக்கம் சென்று மங்கையை அழைத்தான்.

"என்னங்க.. எவ்வளவு நேரம்? ரொம்ப  கூட்டமா?.. அர்ச்சனைலாம் முடிஞ்சாச்சா?"

"அதுக்குத் தான்  கூப்பிட்டேன், மங்கை.. அர்ச்சனை யார் பேருக்கு?"

"சுவாமி பேருக்கே பண்ணிடுங்க.. அத்தை சொல்லியிருக்காங்க, நீங்க சிவராத்திரிலே தான்  பிறந்தீங்கனுட்டு.  இருந்தாலும் சுவாமி பேருக்கே பண்ணிடுங்க.. உங்க பொறந்த நாளில் அவரைக் கும்பிட்டுப்போம். சரியா?"

"சரி. மங்கை. இனிமே தான் கோயிலுக்கு உள்ளாறையே போகணும்.."

"கூட்டங்களா..?"

"ஆமா.. எல்லாம் முடிச்சிட்டு வந்திடறேன்.  சரியா?"

"சரிங்க.. சாமி  கிட்டே ஆரோக்கியமா இருக்கணும்ன்னு வேண்டிகிட்டு வாங்க...  ஏதோ ஒண்ணு மாத்தி ஒண்ணு படுத்திகிட்டே இருக்கு.."

"சரி,. மங்கை.."

சுவாமி சன்னதிக்கு முன்னால் கயிறு  கட்டி ஆண்--பெண் வரிசைகளாய்ப் பிரித்திருந்தார்கள்.  இவன் வரிசையில் சேர்ந்து  கொண்ட பொழுதே உத்தேசமாக இவனுக்கு முன்னால் நாற்பது  பேர்கள் இருப்பார்கள் என்று தெரிந்தது.  ஆனால் திருப்பதி மாதிரி ஜரூராக கூட்டம் வணங்கி சேவித்து வெளியேறிக் கொண்டிருந்தது.  கிட்டத்தட்ட சந்நிதிக்கு பக்கத்தில் பாண்டியன் நெருங்கியதும், "அர்ச்சனையா?.. இங்கிட்டு வாங்க.." என்று அங்கு  கூட்டத்தை ஒழுங்குபடுத்துவதற்காக நின்றிருந்த ஒருவர் இவனைச் சட்டென்று வலது  பக்கம் இழுத்தார். "அர்ச்சனைக்காரங்க அல்லாரும் சீட்டை மேலே எடுத்து வைச்சிக்கங்க.. அப்புறம் அதை வேறு தேட முடியாது..? என்று நடைமுறை உத்திரவை உரத்த குரலில் அவரே பிறப்பித்தார்.

ஐந்து அல்லது ஆறு அர்ச்சனைகள் இருக்கும்.  வலது பக்கம் அர்ச்சனைக்காரர் கள் மட்டும் தனியே ஒதுக்கப் பட்டிருந்தனர். குருக்கள் வந்து ஒவ்வொருவரி டமும் அர்ச்சனை தட்டையோ பையையோ வாங்கிக்  கொண்டு வரிசையாக சங்கல்பம் செய்வித்தார். இவன் முறை வந்த பொழுது, 'சுவாமி பெயருக்கு அர்ச்சனை' என்றான்.  அவனை ஆழ்ந்து  பார்த்து விட்டு அவனிடமிருந்த அர்ச்சனைப் பையை வாங்கி தனியாக விரலில் கோர்த்துக் கொண்டார்.  "அர்ச்சனை அவ்வளவு தானே?".. என்று நிச்சயப்படுத்திக் கொண்டு படியேறி கர்ப்பகிரஹம் பக்கம் நகர்ந்தார் அவர்.

முதலில் இவன் பச்சை பிளாஸ்டிக் பை இறைவன் சந்நிதியில் வைக்கப் பட்டது.  பின்னால் வரிசையாக மற்றவர்கள் தந்தது.  கைகூப்பி நின்றான். மங்கை சொன்னதை அவளுக்கும் சேர்த்து வேண்டிக்  கொண்டான்.

அர்ச்சனை முடிந்து வெளியே வந்த பொழுது மனம் நிம்மதியாக இருந்தது.  சுவாமி தரிசனம் முடிந்து அம்பாள் சந்நிதிக்கு வந்த பொழுது திவ்யமான தரிசனம் கிடைத்தது.  பிராகாரத்தைச் சுற்றி வரலாமென்று பாண்டியன் மறுபடியும் சுவாமி சந்நிதி பக்கம் வந்து இடப்பக்கம் திரும்பிய பொழுது திகைத்து  நின்று விட்டான்! அம்மாடி! கண்கொள்ளாக் காட்சி.   எத்தனை அகல்கள்!  காற்றில் அலைக்கழிக்கப்பட்டு அசங்கி அசங்கி தீபச்சுடரின் நர்த்தனம்!  சாரிசாரியாக பெண்கள் அகல் ஏற்றி மேடையில் வைத்துக் கொண்டிருந்தனர்.  ஒரு இண்டு இடுக்கு பாக்கியில்லை..  அகல் ஏற்றுவதற்காகவே அமைக்கப்பட்ட தகர பெரிய பெரிய மேசைகள் நிரம்பி பிராகார சுற்றுப்பாதையில் தீப  அலங்காரம்  தொடங்கி  விட்டது.

இங்கிருந்து பாண்டியன்  பார்க்கையில் அந்த லாவண்ய அழகில் ஒரு கணம் பிரமித்து  நின்றான்.  அகல் மேடைக்கு எதிர்ப்புறம் வரிசையாக நின்ற கோலத்தில் சிலைகள்.  அகல் ஒளிபட்டு அவைகள் மினுமினுத்தன. அறுபத்து மூவர்களின் வரிசை தீப ஒளிபட்டு ஜொலித்தது. நிஜ மனிதர்கள் வரிசையாக  நின்று கொண்டிருப்பதை போன்ற தோற்ற மயக்கத்தில் பாண்டியன் மயங்கினான்.  எவ்வளவு அழகான  காட்சி!
.
பாண்டியனின்  கண்கள் நிழலும் வெளிச்சமும் மாறி மாறிப் படியும் அந்த சிலைகளைப் பார்த்துக் கொண்டே இருக்கையில் பிந்தைய மாலையில் கிளிஜோசியன் படித்த தெய்வாம்சமும் ஜோதிடபலனும் கலந்த சீட்டு பாடல்களின் சில வரிகள் நினைவுக்கு வந்தன.  கிளிஜோசியன்  கையில் வைத்திருந்த சீட்டில் பார்த்த தெய்வ ஓவியங்கள் நினைவில் மயங்கி   சிலைகளாய் நீண்டது.  நிழல்-ஒளி காட்சி போலவான சூழலும், தெய்வ சந்நிதானமும்,  குறுக்கும் நெடுக்கும், நெடுக்கும் குறுக்குமாக மடங்கி நீண்டிருந்த நேர்த்தியான அகல் விளக்கு தீபஒளி வசீகரமும் அவன் சிந்தையில்  படிந்து விவரிக்க இயலாத  புல்லரிப்பை மனசில் தோற்றுவித்தது.

இந்த சமயத்தில்  பாண்டியனின் நினைப்பில்  திடீரென்று ஒரு எண்ணம்  வெட்டி விட்டுப்  போனது.  அறுபத்து  மூவரில் யாராவது ஒருவர் சிலையின் முன் கண்மூடிப் போய் நின்று அவர் பற்றிய செய்திகளைத் தெரிந்து கொள்ள வேண்டுமென்று.

அந்த எண்ணம் தோன்றியதும் செயல்படுத்திப் பார்க்க வேண்டுமென்று ஆவல் பற்றிக் கொண்டது.

பாண்டியன் அறுபத்து மூவர்  வரிசை நோக்கி நகர்ந்தான்.


(இனி..  வரும்)குறிப்பு:  படம் உதவிய நண்பருக்கு நன்றி.Wednesday, November 26, 2014

இனி (பகுதி-2)

                                                                                                                                                                                                                                                                           
                           அத்தியாயம்-- இரண்டு


சிரியர் அறையிலிருந்து புன்முறுவலுடன் வந்த ஜீ அன்போடு மோகனின் தோளைத் தொட்டார்.  "கதையின் ஆரம்பம் ஆசிரியருக்கு ரொம்பவும் பிடித்துப் போய்விட்டது.  தொடரச் சொன்னார்.  சில குறிப்புகளும் கொடுத்திருக்கிறார்" என்று அலுவலக குறிப்பு  நோட்டுப் புத்தகத்தைப்  பிரித்து வைத்துக் கொண்டார்.

அவர் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் மோகனுக்குத் தித்தித்தது. "ரொம்ப நன்றி, சார்.." என்று தழுதழுத்தான்.

"இதானே நீங்க மொதமொதலா எழுதற தொடர்?.. அதனாலே ஒரு நாலு இல்லேனா ஆறு வாரத்துக்கு வர்றதா எழுதிடுங்க.  அடுத்த அத்தியாயமும் பிரசுரத்திற்கு முன்னாலேயே ஆசிரியர் பாக்கணும்ன்னார்.  பாத்திட்டு டிஸ்கஸ் பண்ணனும்னார்.  உங்களுக்கு ஒரு புனைப்பெயர் தேவைப்படுமோன்னு நான் தான் அபிப்ராயப்பட்டேன்.  ஆசிரியர் அதெல்லாம் வேணான்னார்.. மோகன்ங்கற பேர்லேயே பிரசுரிப்போம்ன்னுட்டார்" என்று ஜீ சொன்னார்.

நாலரை லட்சம் விற்கும் அந்தப் பத்திரிகையின் பொறுப்பாசிரியர் ஜீயை நிமிர்ந்து பார்த்தான் மோகன்.  அவரின் பெயர் என்ன என்று கூட அவனுக்குத் தெரியாது.  இவர் தான் இவன்  வீட்டிற்கு வந்து ஆசிரியர் உங்களைப் பார்க்கணும்ன்னார் என்று  அழைத்து வந்தார்.  இங்கு வந்து வேலையில்  சேர்ந்த ஒரு வார அனுபவத்தில் எல்லோருமே மரியாதைக்காகவோ என்னவோ பொறுப்பாசிரியரை ஜீ என்று கூப்பிடுவதால், மோகனுக்கும் அவர் ஜீ ஆனார்.

"புனைப்பெயர் வைச்சிக்கறது ஒரு காலத்லே மவுஸா இருந்தது.  அதனாலே வைச்சிண்டாங்க.  பெண்டாட்டி பேரைப் போட்டு இன்னாரோட மணாளன்னு தன்னை அடையாளப்படுத்திண்டாங்க.  அப்புறம் மனைவி பேர்லே ஒளிஞ்சிண்டு எழுதினாங்க.  பெண் எழுதற மாதிரி இருந்தா சில செளகரியங்கள் இருந்தது...  அதுக்காக அது.  ஆனா, உங்களுக்குப் புனைப்பெயர் வேண்டாம்ன்னு ஆசிரியர் சொன்னதற்கு காரணமே வேறே.." என்ற ஜீ பொடி டப்பாவை எடுத்துத்தட்டி சிமிட்டா எடுத்து உபயோகித்து நாற்காலியில் சாய்ந்து உட்கார்ந்தார். கர்சீப் எடுத்து கண்களையும் சேர்த்துத் துடைத்துக்  கொண்டார்.

உற்சாகமாய் இருந்தாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் மோகன் பவ்யமாக ஜீயைப் பார்த்தான்.

"ஆசிரியர் என்னவோ இந்தப் பெயர் சமாச்சாரமெல்லாம் விஷயமே இல்லேங்கறார்.   மோகனுக்கு ஒரு புனைப்பெயர் முக்கியம்ங்கறதை விட அவர் எழுதறது எந்தவிதத்திலேயாவது வாசகர்கள் மனசிலே படியற மாதிரி இருக்கறது அதைவிட முக்கியம்ன்னார்.  கதையோ கட்டுரையோ தலைப்பைப் பாத்து மேட்டரை படிக்கறவங்களை, படிச்சு முடிச்சதும் யார் எழுதியிருக்காங்கன்னு எழுதினவங்க பேரைப் பாக்க வைக்கணும்.  அதான் முக்கியம்ங்கறார். ஏன் மோகன்ங்கறதே புனைப்பெயரா இருக்கக் கூடாதான்னு அவர் கேட்டப்போ எனக்கு எங்கே மூஞ்சியை வைச்சிக்கறது ன்னு தெரிலே." என்று ஜீ நாணமுற்றார்.  சிவந்த முகத்தில் பெண்பிள்ளை ஒருத்தி நிழலாக மோகனுக்குத் தெரிந்தாள்..

"நம்ம ஆசிரியர் இந்தத் துறைலே ரொம்பவும் அனுபவஸ்தர் மோகன்.. ஒண்ணு செஞ்சு முடிக்கணும்ன்னு நெனைச்சிட்டார்னா, பின்வாங்கவே மாட்டார். இப்ப அவர் செஞ்சு முடிக்கணும்ன்னு நெனைச்சிருக்கறது என்ன தெரியுமா?"

"சொல்லுங்க, சார்.."

"எழுத்துன்னா உணர்வுக்கு முக்கியத்துவம் கொடுக்கணுங்கறது அவரோட கட்சி.  எதையும் செயல்படுத்தறதுக்கு அப்படி செயல்படுத்தறத்துக்கான உணர்வு வேணும்ன்னு அடிக்கடி சொல்வார்.  எழுதணும்ன்னு உணர்வு வந்தாத்தான்-- அதை தினவெடுத்தாத்தான்ம்பார் அவர்--  எழுதவே வரும்பார்.  படிக்கறவனையும் எழுதறவனையும் ஆட்டிப்படைச்ச அந்த  எழுத்தை இப்போ பாக்கவே முடியலேங்கறது அவரோட வருத்தம்.  எல்லாத்திலேயும்  ஒரு  செயற்கைதன்மை வந்திடுச்சுன்னு நினைக்கிறார்.  அதை நம்ம 'மனவாசம்' பத்திரிகையிலாவது மாத்திக் காட்டணும்ன்னு வீம்பா இருக்கார்" என்றவர் திடீரென்று நினைத்துக் கொண்டவர் போல, " அது என்ன பத்திரிகை?.. 'அஆஉஊஎஏ' தானே?.. ஒரு சிறுபத்திரிகையையும் ஆசிரியர் படிக்காம விடறதில்லே.  அந்த பத்திரிகைலே உன் கதை ஒண்ணைப் படிச்சிட்டு, 'அருமைப்பா'ன்னு நாள் பூரா சொல்லிண்டு இருந்தார்.  'கதைன்னா இது கதை!படிச்சுப்பாருங்க'ன்னு ஒரு சர்க்குலர் இணைச்சு இந்த பத்திரிகை ஆபீஸ் சம்பந்தப்பட்ட அத்தனை பேரும் படிச்சுப்பாக்க உன் கதையை ஒரு அஸ்வமேதக் குதிரை மாதிரி இந்த ஆபீஸ் பூரா அனுப்பிச்சு வைச்சார். என்ன நெனைச்சிண்டிருந்தாரோ, சாயந்தரம், என்னைக்கூப்பிட்டார்.  'அந்த மோகன் அட்ரஸ் தெரிஞ்சி வைச்சிங்கங்க.. நம்ம பத்திரிகைலே அவர் எழுதினா தேவலை'ன்னார்.  அதுக்கப்புறம் தான் நா உங்க வீட்டுக்கு வந்தது, நீங்க இங்க உதவி ஆசிரியராய் இருக்க ஒப்புத்துண்டது, எல்லாம்" என்று ஜீ விவரித்தை மந்தஹாச உணர்வுடன் மோகன்  கவனித்துக் கொண்டான்.  அந்த ஷணமே, எழுதக்கூடிய எதுவும் உணர்வுபூர்வமாக இருக்க வேண்டும் என்கிற எழுத்துக்கலையின் பாலபாடத்தை மனசில் குறித்துக் கொண்டான்.

இரண்டு ரூம்களை இணைத்த மாதிரி இருபதுக்கு இருபது தேறுகிறமாதிரி அந்த அறை விசாலமாக இருந்தது.  நடுமத்தியில் பொறுப்பாசிரியர் ஜீயின் டேபிள். இந்த பக்கம் மூன்று பேர், அந்தப் பக்கம் மூன்று பேர் என்று துணை ஆசிரியர் உதவி ஆசிரியர்களுக்கு இடம் ஒதுக்கப்பட்டிருந்தது.  வலப்பக்க மூலையில் சின்ன டேபிளும் அமர்ந்து பேசுவதற்கு செளகரியமாக் நாற்காலியும்  போடப்பட்டு தொலைபேசி இணைப்பு.   அதைத் தவிர பொறுப்பாசிரியர் டேபிள் மீது  செக்க செவேலென்று ஒரு தொலைபேசி. நிருபர்களுக்கும் ஆர்ட்டிஸ்டுகளுக்கும் அறைகள் தனித்தனியாக இன்னொரு பக்கம் தடுப்புச்சுவர் தாண்டி இருந்தது.

இந்த அறைக்கு எதிர் அறை ஆசிரியரின் அறை.  கதவுக்கு  சல்லாத்துணி போடப்பட்டிருந்தாலும் ஆசிரியர் உள்ளே இருந்தாலும் சரி, இல்லேனாலும் சரி அவர் அறைக்கதவுகள் அலுவலக நேரத்தில் எந்நேரமும் திறந்தே இருக்கும். அறை மேல் ஜன்னல் வழியாக ஸீலிங் ஃபேன் சுற்றிக்கொண்டிருப்பது தெரிந்தால் ஆசிரியர் உள்ளே தான் இருக்கிறார் என்று அர்த்தம் என்று தெரிந்து கொண்டிருந்தான் மோகன்.  பொறுப்பாசிரியர் ஜீ  மட்டும் அழைப்பு வந்தால் ஆசிரியர் அறையின் உள்ளே சென்று வருவதைப் பார்த்தான்.  மற்றபடி அவரவர் வேலைகளை பொறுப்பு கலந்த அமைதியுடன் அவரவர் பார்த்து வருவது தெரிந்தது.

இந்த பத்திரிகை ஆபீஸில் வேலைக்குச் சேர்ந்த இரண்டே நாட்களில் மோகன் எல்லா பகுதிகளுக்கும் சென்று எல்லோரிடமும் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான்.  இதுவே அந்த பத்திரிகை அலுவலகத்தை பொறுத்த மட்டில் புதுமையாக இருந்தது.  புதுசாக பத்திரிகையில்  சேர்ந்திருக்கிற உதவி ஆசிரியர் என்கிற அளவில் எல்லோருக்கும் அவனை தெரிந்திருந்தது.

எதையோ சரி பார்த்துக் கொண்டிருந்த ஜீ சடக்கென்று அவன் பக்கம் திரும்பி, "அது சரி, மோகன்.. ஏன் அந்த பாண்டியனை கோயிலுக்கு அனுப்பிச்சே?  பீச்சு, மால்ன்னு எத்தனை இல்லை?.. அதுக்காகக் கேட்டேன்.." என்று கேட்ட பொழுது தன் புதுத்தொடரின் முதல் அத்தியாயத்தைப் பற்றியே அவர் நினைத்துக் கொண்டிருப்பது தெரிந்து பெருமையாக இருந்தது.

"கதையோட அடுத்த மூவ் கோயில் தானே சார்?.. அங்கே நடக்கறது தானே அடுத்தாப்லே சொல்ல  வேண்டிய விஷயம்?   அதுக்காக அவன் அங்கே போயாகணுமில்லியா? அதுக்காகத் தான் கோயில்" என்றான்.

"என்னவோப்பா.  இந்தக் காலத்லே இளவயசு அதுவும் கல்யாணமான ஆம்பளைகள்லாம் சாமிக்கு அர்ச்சனை செய்யணும்ன்னு மனைவியை விட்டுட்டு தனியா கோயிலுக்குப் போய் பாத்ததில்லைப்பா. அதான்..."

"ஏன் பாண்டியன் தனியாப் போனான்ங்கறதுக்குக்  காரணம் சொல்லியிருக்கேனே,  சார்."

"யாரு இல்லேனா?.. சொல்லியிருக்கே, சரி.  என்னவோ எனக்கு சமாதானம் ஆகலே.  என்னையே எடுத்துக்கோ.. என் வீட்லேலாம் இந்த பூஜை, புனஸ்காரம் எல்லாம் அவ தான்.  பூஜை அறைலேந்து மணி சப்தம் கேக்கறச்சேயே முடிஞ்சிருச்சுன்னு சிக்னல் கிடைச்சு வேகமாப் போய் ஒரு கும்பிடு போட்டுட்டு தீபாராதனை அணையறத்துக்குள்ளே கண்லே ஒத்திக்கறதோட சரி.  அப்புறம் எப்போடா தட்டை அலம்பிப் போடப்போறான்னு இருக்கும்.   அதான் எனக்குப் புதுசா இருக்கு போல இருக்கு.."

அவர் சொன்னதைக் கேட்டு சிரித்தே விட்டான் மோகன். "சார் ஒண்ணு தெரியுமா?  பாண்டியன் அதிர்ஷ்டக்கட்டை சார்.  மங்கை தான், பாண்டியன். பாண்டியன்  தான்  மங்கைன்ன்னு அம்சமா அமைஞ்ச ஜோடி சார்..  வெளிக்குத் தான் மங்கை பாண்டியனைக்  கோயிலுக்குத் தனியா அனுப்பிச்சாளே தவிர அவ மனசும் அவனோடு நிச்சயமா கைகோர்த்துப் போயிருக்கும். இவனுக்கும் மங்கை இல்லேனா அத்தனையும் அப்படியே ஸ்டாண்ட் ஸ்டிலாயிடும்.  தெரிஞ்சிக்கங்க.. வர்ற அத்தியாயங்கள்லே ரெண்டு பேரையும் படிக்கறவங்க மனசிலே படிய மாதிரி படம் பிடிச்சுக் காட்டிடலாம், சார்.." என்று சட்டைக் காலரைத் தூக்கி விட்டுக் கொண்டான்.

"குட்.  அதான் வேணும்.  நீ சொல்றத்தையே செஞ்சிட்ட மாதிரி இருக்கு.  அப்புறம் இன்னொண்ணு.  சொந்த அனுபத்தையெல்லாம் தூர எடுத்து  ஒதுக்கி வைச்சிடாதே.  அதெல்லாத்தையும் தூசி தட்டி எடுத்து உன் கதைங்கள்லே கரைச்சிடு.  எதுக்குச் சொல்ல வர்றேன்னா, இந்த எழுதற பொழைப்பு தான் நமக்கு எல்லாத்துக்கும்  கிடைச்ச வடிகால்.  மனசிலே தேக்கி வைச்சிண்டிருக் கற அணை ஒடைஞ்சா  ஆபத்தாயிடும். தெரிஞ்சிக்கோ.." என்றார் ஜீ. அவர் சொன்ன தோரணையும் வார்த்தைகளில் கொடுத்த அழுத்தமும் உணர்ந்து  சொல்கிற மாதிரி இருந்தது.

'கோயிலுக்கு போற வழிலே கிளி ஜோசியனைப் பார்த்தது,  கூண்டுக்கிளியைப் பாத்து பரிதவித்தது, கதையில் நிகழ்ச்சியாக்குவதற்காகவே அவ்வளவு நேரம் உட்கார்ந்து உள் வாங்கிண்டது.. எல்லாம் நான் தான் சார்!' என்கிற நினைப்பு மோகன் மனசுக்குள்ளேயே புதைந்தது.

திடீரென்று ஒரு  உந்துதல்.   இந்த வேகத்திலேயே அடுத்த அத்தியாயம் எழுத வேண்டுமென்ற---- ஆசிரியர் சொல்வாராமே, அந்த தினவு----  மனசைப் பற்றியதும்,  மோகன் ரைட்டிங் பேடை எடுத்தான். அதில் பேப்பரைக் கோர்த்து,  'காளியண்ணன் கடையில் இல்லை..'  என்று அடுத்த அத்தியாயத்தின் முதல் வரியை எழுதும் போது,  "சாரி டு டிஸ்டர்ப் சார்.." என்ற குரல் அருகில் கேட்டது..

"காலம்பறயே ஜீ சொல்லிட்டார்... மத்த வேலையெல்லாம் முடிச்சிட்டு வர நாழி ஆயிடுத்து..." என்றவாறே அந்த பத்திரிகையின் ஆஸ்தான சித்திரக்காரர் ஹரி மோகன் எதிரில் நாற்காலியை இழுத்துப் போட்டு அமர்ந்தார்.

"அடடா!.. சொல்லி அனுப்பியிருந்தா நானே வந்திருப்பேனே.." என்ற மோகன் அத்தனை புகழ்பெற்ற ஓவியர் தன் இருக்கை தேடி வந்திருக்காரே என்று துணுக்குற்று சொன்னான்.

"அதான் வந்திட்டேனே.." என்றார் ஹரி. "ஐ நோ.. எழுத்துங்கறது தவம்.  நிஷ்டைலே இருந்து கற்பனையை கொழுந்து விட்டு எரியச் செய்யற யாகம்ன்னு நம்ம ஆசிரியர் சொல்வார்.." என்று அவர் சொல்கையிலேயே 'என்ன, இது? சொல்லிக் கொடுத்தாற் போல அத்தனை பேரும் ஆசிரியர் புகழ் பாடுறாங்களே, இனிமே நாமும் இப்படித் தான் இங்கே பேசக் கற்றுக் கொள்ள வேண்டும் போலிருக்கு.." என்று நினைத்துக் கொண்டான் மோகன்.

"நான் வந்த வேலை என்னன்னா, சார்.." என்று ஆரம்பித்தார் ஹரி.  அவ்வளவு பெயரும் புகழும் பெற்ற அந்தப் பெரியவர் தன்னை சார் போட்டு அழைப்பது அநியாயமாக இருந்தது மோகனுக்கு.  "சார், நான் ரொம்ப சின்னவன். என்னை என்  பெயர் சொல்லிக் கூப்பிட்டால் தான் எனக்கு சங்கடமில்லாமல் இருக்கும்" என்றான்.

"அதெல்லாம் போகப்போக வந்திடும், மோகன்.  இப்போ எதுக்கு வந்தேன்னா.. உங்க 'இனி..' தொடர் முதல் அத்தியாயம் ஃபுரூப் படிச்சிட்டேன்.  நன்னா வந்திருக்கு.  இந்த அத்தியாயத்திற்கு எந்தக் காட்சியை ஓவியமா வரைஞ்சா சிறப்பா இருக்கும்ங்கறதை  உங்க கிட்டே கேட்டுட்டுப் போகலாம்ங்கறத்து க்காக வந்தேன்.." என்று அவர் சொன்னதும் திகைப்பாய் இருந்தது மோகனுக்கு.

அவன் முக ஆச்சரியத்தைப் பார்த்து விட்டு ஹரி சொன்னார். "மோகன்! ஆசிரியர் இந்த விஷயத்திலே கண்டிப்பா சொல்லியிருக்கார்.  எழுதறவங்களு க்குத் தான் அவங்களோட கேரக்டர் அருமை தெரியும்.  அதனாலே அவங்க சாய்ஸ் என்னவோ அதை அவங்க விரும்பற மாதிரி போட்டுக் குடுங்கோ'ன்னு.  ரொம்ப காலமா இந்த பத்திரிகைலே அதான் வழக்கமா நடந்திண்டு வந்திருக்கு.  சில பிரபல எழுத்தாளர்கள் அவங்க அனுப்பற மேட்டரோடையே சித்திரத்திற்கான காட்சியையும் சொல்லிடுவாங்க.  சில பேர் கிட்டே கேட்டுப் போடறதும் உண்டு. இதான் விஷயம்.  நீங்க நம்ம பத்திரிகையோட உதவி ஆசிரியர்.  உங்ககிட்டே கேக்காம நானே என் இஷ்டத்துக்கு ஒரு படத்தைப் போடக் கூடாது. கேட்டுத்தான் செய்யணும்.  அப்படி செய்யலேன்னு தெரிஞ்சா ஆசிரியர் வருத்தப்படுவார்.  அதுக்காகத் தான் வந்தேன்.." என்றார்.

இந்த பத்திரிகை ஆசிரியர் எப்படியெல்லாம் யோசித்து செயல்படுகிறார் என்பதை நினைத்துப் பார்க்க மோகனுக்கு ஆச்சரியமாக இருந்தது.  இங்கு வேலை செய்வோர் அத்தனை பேரும் அவர் புகழ்பாடுவதின் அர்த்தமும் விளங்கியது.

"நீங்க பத்திரிகை அனுபவம் வாய்ந்தவங்க.. இந்தப் பத்திரிகையோட வாசகர்கள் எதை விரும்புவாங்கங்கறது உங்களுக்கு நன்றாகத் தெரியும்.  அதனாலே இனி.. தொடரோட முதல் அத்தியாய எந்த காட்சிக்கு ஓவியம் வரைந்தால் நன்றாகவும் இருக்கும், வாசகர்களுக்கும் பிடிக்கும்ன்னு நீங்க நினைக்கிறீங்க?" என்று அவரிடமே புன்முறுவலுடன் கேட்டான் மோகன்.

"அப்படி நான் நினைக்கிற காட்சி எது தெரியுமா, மோகன்?" என்று லேசாக சிரித்தபடி அவனைப் பார்த்தார் ஹரி.  "அந்தப் பாண்டியன் குனிஞ்சு கூண்டுக் கிளிக்கு 'பை..' சொல்றானே, அந்தக் காட்சி தான்.. அந்தக் காட்சியை குளோசப்பில் காட்டி பின்புலமாய் கோயில் கோபுரத்தையும் அந்த இடத்து ஜனநெரிசலையும் வரைஞ்சா அற்புதமாக இருக்கும்.." என்றார்.

"ஓ.." என்று குஷியில் திளைத்தான் மோகன்."நான் என்ன நெனைச்சேனோ அதை அப்படியே நீங்க சொல்லியிருக்கீங்க, ஹரி சார்... நம்ம ரசனை எவ்வளவு ஒற்றுமையாக இருக்கு!"

"அதான் வாசக ரசனை.. அந்த ரசனை நம்ம ரசனையோட ஒத்துப்போறது. இல்லை, அந்த ரசனைக்கேத்தவாறு நம் ரசனை மாறிப்போயிருக்கு.  இந்த ரெண்டுக்குள்ளே ஒண்ணு.   ஓ.கே. அந்தக் காட்சியையே ஃபைனலைஸ் பண்ணிடலாம். நான் வரைஞ்ச பிறகு உங்களுக்குக் காட்டறேன்.." என்றார் ஹரி.

"உங்களுக்கு இல்லை.. உனக்கு.." என்று திருத்தினான் மோகன்.

"ஓ.. சட்டுனு வரலே.. இன்னும் ரெண்டு மூணு நாள் ஆனா பழகத்துக்கு வந்திடும்.." என்று புன்முறுவலுடன்  எழுந்தார் ஹரி.

மோகன்  மனசிற்கு நடப்பவை எல்லாம் இதமாக இருந்தது. பொதுவாக மனிதர்கள் எல்லோரும் எவ்வளவு நல்லவர்களாக இருக்கிறார்கள் என்று நினைத்துக் கொண்டான்.  இந்த பத்திரிகை சூழ்நிலை அவனது அவல வாழ்க்கைக்கு ரொம்பவே பிடித்துப் போயிற்று.

இந்த மனநிலையிலேயே அடுத்த அத்தியாயத்தை எழுதி விடலாமே என்கிற உத்வேகத்தில் ரைட்டிங் பேடை எடுத்தான் மோகன்.

எழுதி வைத்திருந்த முதல் வரிக்கு அடுத்து "காளியண்ணன், இல்லியா?" என்று எழுத ஆரம்பித்து நிஷ்டையில் ஆழ்ந்தான்.(இனி..  வரும்)Monday, November 3, 2014

இனி (பகுதி-1)

ழமழவென்று மரத்தினால் இழைத்து சின்ன பெட்டி ஸைஸில் இருந்தது கூடு.  எல்லாப் பக்கமும் சுற்றி வெள்ளை வெளேர் தகடு அடிக்கப்பட்டு தூக்கிக் கொண்டு  செல்வதற்கு வாகாக மேல்பக்கம் வளையம் மாட்டி சின்ன சங்கிலி  கோக்கப்பட்டிருந்தது.  சிறைக் கம்பிகள் மாதிரி தகடில் சின்ன தடுப்புக் கம்பிகள்.  கம்பிக் கதவு திறக்க அது வழியாகத்  தான் அந்த பச்சைக் கிளி வெளிவந்து ஜோசியக்காரனிடம் சீட்டு எடுத்துக் கொடுத்து அந்த காரியத்திற்குக் கூலியாக அவன் தந்த நெல்மணியை சீட்டு கொடுத்த மூக்காலேயே வாங்கிச் சென்றது.

அது சீட்டு எடுத்துக் கொடுக்க வேண்டும், இவன் அந்த நொடியே நெல்மணி கொடுக்க வேண்டும் என்பது எழுதப்படாத ஒப்பந்தம்  போல நடந்து கொண்டிருந்தது.  வாலாயமாய்  நடைமுறையில் இருக்கும் இந்த ஒப்பந்தத்தை இருபக்கமும் இது வரை மீறினதாகத் தெரியவில்லை.  அதனால் வெளிக்குத் தெரியாத ஒரு அன்யோன்யம் இரு பகுதியிலும் இருப்பது தெரிந்தது.  உன்னை நம்பி நானும், என்னை நம்பி நீயும் என்பது மாதிரியான  ஒரு யதார்த்த பிடிப்பு.

ஈஸ்வரன் கோயில் தெருவில் கீழிறங்கி மேலேறிய மேம்பாலம் தாண்டித் திரும்பிய திருப்பத்தில் அந்த ஜோசியக்காரன் ஒரு ஒதுக்குப் புறமாக உட்கார்ந்திருந்தான். செம பிஸியான  ரோடு.  இருந்தும் இவனையும் இவன் கிளிக்கூண்டையும்  பார்த்த சிலர் இவனைத் தாண்டிப் போக மனமில்லாமல் விரித்திருந்த கோணியின் உட்கார்ந்து ஜோசிய தாகம் தீர்த்துக் கொண்டவர்களாகவே இருந்தனர்.

சற்றுத் தள்ளி சாத்தியிருந்த ஒரு கடையின் படிக்கட்டுகளில் உட்கார்ந்தபடி மூன்றாம் மனிதனாக இங்கு நடப்பனவற்றை நோட்டமிடுவது பாண்டியனுக்கு சுவாரஸ்யமாக இருந்தது..  அந்தக் கிளியும் இவன்  பார்வையிலிருந்து தப்பவில்லை.  எவ்வளவு கார்யார்த்தமாக அது செயல்படுகிறது என்பதைப்  பார்க்க பாண்டியனுக்கு வியப்பாக இருந்தது.  ஜோசியம் பார்க்க ஆள் வந்து இவன் கூண்டுக் கதவு திறந்ததும் ஒயிலாக அந்தக் கிளி நடந்து  வந்து அடுக்கியிருக்கும் சீட்டுக்கற்றையிலிருந்து  ஒரு கவரை மட்டும் பாங்காக இவனிடம் எடுத்துத் தந்து விட்டு மெஜஸ்டிக்காக நெல்மணி வாங்கி என் அடுத்த வேலை கூண்டுக்குள் நுழைந்து சிறைபடுத்திக் கொள்வது தான்  என்கிற மாதிரி இந்தப் பக்கம்  அந்தப் பக்கம் பார்க்காமல் தன் வேலை முடிந்த ஜோரில் கூடு நோக்கி விரைவதும், இனி மேல் என் வேலை ஆரம்பிச்சாச்சு என்கிற மாதிரி கிளி எடுத்துக் கொடுத்த சீட்டு உறையை உதடால் ஊதிப் பிரித்து உள்ளிருக்கும் ஜோசியப்பலன் கவிதையை பாட்டாக ராகம் போட்டுப் படித்து இவன் நடக்கப் போவதை விவரிப்பதும்...

பாண்டியன் சுற்றுப்புற சூழ்நிலையே மறந்து  போனவனாய் கிளி ஜோசியக் காரனைச் சுற்றி நடப்பதில் மனம் மயங்கிப் பார்த்துக் கொண்டிருந்தான்.  ஒரு ஆள் வந்து பலன் பார்த்துப் போனதும், அடுத்தாற் போல் வரப்போகிற ஆளை எதிர்பார்த்து சுற்றி நடந்து போகும் ஜனங்களை ஜோசியக்காரன் ஏக்கத்துடன் பார்க்கும் பொழுது பாண்டியன் கிளியைப்  பார்த்தான்.  அதுவும் வெளியே வந்து அடுத்த சீட்டை எடுத்துக் கொடுக்க படபடப்புடன் காத்துக் கிடக்கிற மாதிரியான பாவனையில் அடுத்த ஆளுக்காக எதிர்பார்த்திருப்பது போல...

இதுவரை ஆறு பேர் வந்து  பலன் பார்த்துக் கொண்டு போய்விட்டனர். கிட்டத் தட்ட எல்லாருக்கும் நல்ல பலன்களாகவே அமைந்திருந்தலில் வந்தவர் களின் சந்தோஷம் அவர்கள் முகச்சிரிப்பில் தெரிந்தது. விநாயகர், சுப்ரமணியர், திருப்பதி பெருமாள், அம்மையப்பனின்  கைலாச காட்சி, கஜலஷ்மி, ஐயப்பன் என்று ஜோசிய சீட்டில் இது வரை வந்த தெய்வ வரிசையை வரிசை தப்பாமல் பாண்டியன் நினைவு கூர்ந்தான்.  ஒருதடவை எடுத்த சீட்டை மறுமுறை எடுக்காத கிளியின் கவனத்தையும் நினைத்துக் கொண்டான்.

படத்துக்குக் கீழே அந்தந்த தெய்வங்களை போற்றி பாடுகிற வாழ்த்துப்பா மாதிரி இருக்கும் போலிருக்கு.  அதை ராகம் போட்டு வாசித்து வணங்கிய பின்னே கி.ஜோ. லேசாக மாற்றிய வேறுபட்ட குரலில் வந்தவர்களுக்கு குறிபலன் சொல்வது போல அச்சடித்திருந்த விவரங்களை அனுபவித்துச் சொன்னான்.  சொன்னது அத்தனையுமே அந்தந்த தெய்வங்களின் குணாம்சங்களைக் குறிக்கிற மாதிரியும் ஜோசிய பலன் போலவும் இருந்தது தான் விசேஷம்.

லேசாக வெளிச்சம் கவிந்ததும் இது போதும்ங்கற மாதிரி கிளிஜோசியன் எழுந்திருந்தான். எழுந்திருந்த வாகிலேயே அப்பொழுது தான்  பாண்டியனைப் பார்த்தது போல முகம் மலர்ந்து, சிகரெட்டை வாயில் நுழைத்தபடி, தீப்பெட்டி இருக்கிறதா என்று கேட்கிற பாவனையில் கைமுட்டி மேல் விரல் உரசிக் காண்பித்தான்.

பாண்டியனும் எழுந்திருந்து அவன் அருகாமையில் நகர்ந்து "வத்திப் பெட்டி வைச்சிக்கற பழக்கம் இல்லீங்க.." என்று சொன்னதைக் கேட்டு ஜோசியக் காரன் அவனை விநோதமாகப் பார்த்தான்.  'இல்லேனா, இல்லைன்னு சொல்லிட்டுப் போறது தானே, தான் கேட்டதுக்கு பதில் சொல்ற மாதிரி அவனைப் பத்தியும் சொல்வானேன்' என்று ஜோசியக் காரனுக்கு தோன்றியிருக்க வேண்டும். ஏதோ காட்டமாகச் சொல்ல வந்தவன் சமாளித்த தோரணையில், "கோயிலுக்கு வந்தீகளாக்கும்?" என்று பக்க வாட்டில் சற்றுத் தள்ளி பிர்மாண்டமாக நிமிர்ந்திருந்த கோயில் கோபுத்தை காட்டிக் கேட்டான்.

"ஆமா.  கோயிலுக்குத் தான்.   கொஞ்சம் பொழுது சாயட்டுமேன்னு பாத்திருந்தேன்.  இன்னிக்கு தீப  அலங்காரமில்லியா?.. இருட்டினாத்தானே அழகாயிருக்கும்..?"

"ம்..ம்.." என்று அவனுக்குப் பதில் சொல்லாமல் நகர்ந்தான் கிளி ஜோசியன்.
சொல்லப்போனால் பாண்டியனுக்கு ஜோசியனை விட அந்தக் கிளியை ரொம்பப் பிடித்திருந்தது.  அதைப் பார்த்தபடி, அதற்கு ஒரு 'பை..' சொல்கிற தோரணையில் குனிந்து கையசைத்தான்.

அந்த பொல்லாத கிளியும் அந்த நேரத்தில் "கீக்கீ.." என்று ஓசை கிளப்ப, அதுவும்  அதன் பாஷையில் தனக்கு 'பை' சொல்கிறதாக்கும் என்று நினைத்துக் கொண்டான் பாண்டியன்.  அந்த மகிழ்வில் லேசாக நடையை எட்டிப் போட்டான்.

மங்கை சொல்லியிருப்பது நினைவில் நின்றது.  கோவில் வாசல் பக்கம் காளியண்ணன் கடை இருக்குலே?  அங்கணே அர்ச்சனை தட்டு வாங்கிக் கங்க.. சிவன் கோவில் இல்லியா?.. அப்படியே வில்வ இலை கொஞ்சம் கேட்டு வாங்கி தட்டோட வைச்சிக்கங்க.. ஜோட்டை அண்ணன் கடைலேயே சொல்லிட்டு ஒதுக்குப்புறமா விட்டிடுங்க.  உள்ளாற போனதும் அர்ச்சனைக்கு சீட்டு வாங்கிக்கங்க.. மறந்திடாதீங்க.. சீட்டு இல்லாம அர்ச்சனை கிடையாது.  தெரியுமிலே?"

அவனுக்கு அது தெரியும் என்று மங்கைக்கும் தெரியும்.  இருந்தாலும் அப்படி கேள்வி கேட்டு உரையாடுவது அவள் பாணி..

அவனுக்கும் அது தெரியும்.  இருந்தாலும்  முறைப்பான்.  "இது என்ன ஒவ்வொண்ணும் குழந்தைக்குச் சொல்ற மாதிரி?.. இப்பத்தான் புதுசா முதல் தடவையா நான் கோவிலுக்குப் போற மாதிரி.."

"எப்பவும் நாம ரெண்டு பேரும் சேந்து தானே போற பழக்கம்?.. இன்னிக்குத் தான் குளிச்சேங்கறதாலே நீங்க மட்டும் போறதா ஆயிடுச்சி.. சிவராத்ரி அர்ச்சனை புண்ணியமுங்க.. கிளம்புங்க.."

"அதில்லே.  இவ்வளவு டீடெயில்டா.. குழந்தைக்குச் சொல்ற மாதிரி.."

"யார் கேட்டா?.. குழந்தை தான்.. குழந்தை இல்லாம பெறவு என்ன?.. எப்பவும் எதுனாச்சும் நெனைப்பு.. சொல்றதை காதுலேயே ஏத்திக்காத போக்கு.. நமக்கு சம்பந்தம்  இருக்கோ, இல்லியோ எதையும் பராக்கு  பாக்கற புத்தி.. குழந்தைன்னா குழந்தையாய்த் தான் இருக்கணும்ன்னு இல்லே.  குழந்தைத் தனம் இருந்தாலே போதும். தெரியுமிலே?"

"தெரியும்.. தெரியும்.." என்று சிரித்து வெளிக்கதவு தாண்டி படியிறங்கிய அந்தக் குழந்தை, மங்கை சொன்ன காளியண்ணன் கடையைக் கடந்த நொடியில் அர்ச்சனைத் தட்டு  நினைப்பு வந்து திரும்பியது.


(இனி வரும்)

Saturday, November 1, 2014

கோபம்

A. எப்பொழுதெல்லாம் உங்களுக்குக்  கோபம் வருகிறது?

1. பிறர் உங்களை குற்றம் சொல்லும் பொழுது.

2. உங்கள் விருப்பத்திற்கு மாறாக எதுவும் நடக்கும் பொழுது.

3. நீங்கள் பிறரால் அலட்சியப் படுத்தப்படும்  பொழுது


B. கோபப்படுதல் உடல் நலத்திற்கு  தீங்கு என்று தெரியுமா?

1.  தெரியும்

2. தெரியாது

3. அப்படீன்னா சொல்றீங்க?

C.  கோபத்தை தவிர்க்க  முயன்றிருக்கிறீர்களா?

1.  இல்லை

2.  முயன்றதுண்டு

3. அதெல்லாம் வேலைக்கு ஆகாது.


D.  கோபப்பட்டு ஜெயித்ததுண்டா?

1.  இல்லை

2.  சிலசமயம் உண்டு

3.  ஹிஹி.. அதுக்காகத்தாங்க கோபமே


E,  கோபம் வந்தால் என்ன நிகழும்?

1.  பிபி எகிறும்.

2. படபடப்பா இருக்கும்.  கைகால் உதறும்.

3.  கண்ணைக் கட்டிவிட்ட மாதிரி.  என்ன நடக்குதுனே தெரியாது


F. வீட்லே, வெளிலிலே எங்கே அதிகமா கோபப்படுவீங்க?

1.  எல்லா இடத்திலேயும்

2.  வீட்லே நிறைய;  வெளிலே கொஞ்சம்

3.  வீட்லே தாங்க.  வெளிலே பெட்டிப்பாம்பு

G.  கோபத்திற்கும்  சொரணைக்கும் சம்பந்தம்  உண்டா?

1.  சொரணான்னா என்னங்க?

2.  உண்டு.  அதுனாலே தாங்க  கோபமே

3.  நீங்க கேக்கறதே சரியில்லை.  கோபமூட்டாதீங்க


H.  கோபம்  எப்படி வரும்?

1.  டக்குனா?

2.  நிதானிச்சு ஆற அமரவா?

3. முதல்லேயே தீர்மானம்  பண்ணியா?

I.  கோபத்தை தவிர்ப்பதற்கு  ஏதாவது  யோசனை  உண்டா?

1.  தெரியாதுங்க.

2.  உண்டு.   கோபம் வந்தா  1,2, 3,4,-ன்னு எண்ணிக்கிட்டே சமாளிச்சுப்  பாப்பேன்.

3.  பின்னாடி வருந்தியிருக்கேன். அதுனாலே இப்போ  எவ்வளவோ  பரவாயில்லை.


J. மோதி மிதித்து விடு பாப்பா, அவர் முகத்தில் உமிழ்ந்து விடு பாப்பான்னு  பாரதி சொல்லியிருக்கறதைப்  பத்தி  என்ன நினைக்கிறீங்க?

1.  நீங்க சொல்லித் தான் பாரதி அப்படி சொல்லியிருக்கார்ன்னு தெரியும்.

2.  பாப்பாக்கு தானே சொல்லியிருக்கார்.  நமக்கில்லை தானுங்களே?..

3.  அவரே சொல்லியிருக்கார்.  அப்ப என்னங்க கோபப்படாம இருக்க முடியுங்களா?


H.  கோபம்ன்னாலே எந்த முனிவர் நினைவு உங்களுக்கு வருகிறது?

1.  வசிஷ்டர்

2.  துர்வாசர்

3. ஜமதக்னி


-- எப்பவோ அசாத்திய கோபத்தில் இருந்த பொழுது  ஒரு காகிதமெடுத்து கிறுக்கின questionnaire  மேலே காண்பது.  பழைய காகிதங்களையெல்லாம்  குடைந்து கொண்டிருந்த போது கிடைத்தது.

சரியான  விடையோ, இந்த விஷயத்தில் நீங்கள் எப்படி என்று பார்த்துக் கொள்வதோ உங்கள் விருப்பம்.

கோபத்தை அடக்கக் கூடாது.  கக்கிவிடவேண்டும் என்பது சிலரது கணிப்பு.  கோபமாவது வந்த சுவடு தெரியாமல் போய் விடுமாம்;  அடக்கினால் அதுவே இரண்டு மடங்கு தீமை தரும் என்பது அவர்கள் கட்சி.

கோபப்படற மாதிரி நடிக்கறது, கோபப்படறது மாதிரி சம்பந்தப்பட்டவருக்கு அவ்வளவு  கெடுதல் விளைவிக்காதாம்.  பெரும்பாலும் குழந்தைகள் இடத்தில் இது செல்லுபடியாகுமாம். இப்படி நடிக்கறதிலே நாம விரும்பற பலனும் கிடைக்கும்;  உடல் நிலை பாதிப்பும் இந்த விஷயத்தில் இல்லைங்கறது அனுபவப்பட்டவர் ஒருவரது அபிப்ராயம்.  இதிலே இன்னொரு எதிர்மறை விஷயம் என்னன்னா,  குழந்தைகளும் இந்த மாதிரி கோபப்படறதுக்கு சின்ன வயசிலேந்தே பழகிக்குமாம்.  இதுனாலே இந்த விஷப்பரிட்சை வேண்டாம் என்கிறார் ஒரு மனநல  ஆலோசகர்.

கோபத்திற்கு எதிர்நிலை சாந்தமாம்.  எப்பவும் சாந்தமா இருக்கறது எப்பவும் ஸ்வீட் சாப்பிடற மாதிரியாம்.  அளவோட ஸ்வீட்டும்  காரமும் இருந்தால் மந்தத்தன்மை இல்லையாம்.  அதனாலே கோபத்தையும் சாந்தத்தையும் மிக்ஸ் பண்ணி சமநிலையில் அவ்வப்போது அனுசரித்துப் பாக்கலாமாம். அறவே கோபம் இல்லாமலும் அறவே சாந்தம் இல்லாமலும் இருப்பது ஒரு வாழ்க்கை அனுபவம் என்கிறார் அனுபவப்பட்ட ஒரு ஆசாமி.

ஆயிரம் சொல்லுங்கள், ஒவ்வொருத்தர் குணமும் அவர்களின் ஏற்றுக்கொள்ளலும் ஒரு மாதிரி என்பதால் அவரவருக்கு ஒத்து வர்றதை  கைக்கொள்ளலாமாம். இதுவே இக்கால வேத நெறியாம்.

ஒருத்தர் கோபம் ஒருத்தரோட போகாதாம்.  நாம யாரிடம் கோபப்படுகிறோமோ அவருக்கும் பத்திக்குமாம்.  கோபத்திற்கு எந்தக் காலத்திலேயோ யாரோ கொடுத்த சாபம் இது என்கிறார்கள் புராண ஞானம் கொண்டவர்கள்.

அந்த சாபத்தைச் செயலிழக்கச் செய்ய சில உபாயங்கள் உண்டு. கோபப் படுகிறவர் கோபத்தில் இரைச்சலிட்டுக் கொண்டிருக்கும் பொழுது எதிராளி எதுவும் பேசாமல் மெளனத்தைக் காப்பது கோபப்படுகிறவரை நிலைகுலையச் செய்ய பெரிதளவு துணை நிற்குமாம்.  ஒரு கை ஓசையில்  கொஞ்ச நேரத்தில் அவர் கோபமும் தணிந்து விடுமாம்.

எப்பப்பார்த்தாலும் கோபப்பட்டுக் கொண்டிருந்தால் அது செல்லாக்காசாகி விடுமாம்.  அதனாலே அளவு தெரிஞ்சு  அப்பப்போ இல்லை எப்பவோன்னு கைக்கொள்றது புத்திசாலித்தனம் என்கிறார் ஒரு விவேகி.

கோபிப்பது வேறே கோபத்திற்கு ஆளாவது வேறே என்று லெக்சர் எடுத்தார் ஒருவர்.  அதைக் கேட்கிற பாக்கியம் கிடைத்தது எனக்கு.  ஆரம்பத்தில் சுவாரஸ்யமாகத் தான் இருந்தது;  போகப்போக கோபிப்பவரின்  மனநிலை, கோபத்திற்கு ஆளாகுபவரின்  மனநிலைன்னு  அதை ரெண்டாப்  பிரிச்சார் அவர்.  கடைசியில்  கோபிப்பவர் நிலை, கோபத்திற்கு ஆளானவர் நிலை, இதைப் பார்ப்பவரின்  நிலை என்று மூன்றாக ஒவ்வொருவர் நிலையையும் பிரிச்சப்போ அவர் மேல் கோபம்  கோபமாக வந்தது.  இந்த மூணு நிலைலே எந்த நிலை என் நிலைன்னு நினைச்சதாலே வந்த   கோபம் அது.


கோபம் ஒரு தீ
தீக்கும் கோபம் பற்றும்
பற்றினால் பரவும்
பரவினால் சாம்பல்
சாம்பல் அழிதல்
அழிதலால் அறிதல்
அறிதலால் புரிதல்
புரிதலின் வினை தெரிதல்
தெரிதலின்மை கோபம்


-- வண்ணம் பூசி வெளிவந்த  ஒரு பத்திரிகைக் கவிதை.

(ஒரு வரியின் கடைசி வார்த்தையும், அடுத்த வரியின் ஆரம்ப வார்த்தையும்
ஒன்றாக இருக்குமாறு புனையப் பட்ட கவிதை என்று  ஒரு குறிப்பு வேறே!)


Tuesday, October 21, 2014

மறக்க முடியாத சில குறுங்கவிதைகள்


ரபுக் கவிதைகள் வலம் வந்த காலத்தில் தான் புத்தம் புது முயற்சிகளாய் ஏழெட்டு வரிகளில் அடங்கியதாய் உத்தியை முதன்மையாக் கொண்டு எழுதப்பட்ட கவிதை சாயலுள்ள வார்த்தைக் கோர்வைகள் கவிதைளாய் தோற்றம்  கொண்டன.

அமெரிக்கக் கவிஞர் வால்ட் விட்மனின் 'புல்லின் இலைகள்' என்னும் கவிதைத் தொகுப்பின் பாதிப்பில் பல மொழிகளில் இம்மாதிரியான வசனக் கவிதைகளின் தாக்கம் துளிர் விட்டன.  மஹாகவி பாரதியாரும் வால்ட் விட்மனின் இந்த வசனக் கவிதைகளைப் (free verse poems)  பற்றி  தமது கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டிருக்கிறார்.  தமிழ்க் கவிதை உலகிற்கு இவ்வகையான வசனக் கவிதை புதுவரவாகையால் அந்த நேரத்து அவை புதுக்கவிதைகள் என்று அழைக்கப்பட்டன.    கவிதைகள் யாப்பது என்பது பண்டிதர்களின் வசமாய் இருந்த காலத்தில் அவர்களிடமிருந்து பறிக்கப் பட்ட ஒரு செயலே போன்று தமிழில் ஓரளவு தேர்ச்சி பெற்றோர் எல்லாம் கவிதை எழுதலாம் என்கிற ஒரு அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்தமையால் வெகு எளிதில் தன் வளர்ச்சியைத் தானே நிர்ணயித்து கொண்ட மாதிரி  இப் புதுகவிதைகள் இயல்பாகவே வெகுஜன பிரபலம்  கொண்டன.  தமிழ் படித்த எல்லோருமே இப்படியான கவிதைகள் எழுத ஆசைப்பட்ட காலம் அது.

சி.சு. செல்லப்பா தனது 'எழுத்து' பத்திரிகையில் புதுக்கவிதைகளுக்கு ஆக்கமும் ஊக்கமும் தந்ததோடு மட்டுமல்லாது, 'புதுக்குரல்கள்' என்று ஒரு தொகுப்பை வெளியிட்டு புத்தக மூட்டைகளை சொந்தத் தோளில் சுமந்து பள்ளிகள், கல்லூரிகள் என்று அலைந்து அவற்றைக் கல்விச்சாலைகளில் அறிமுகப்படுத்தியவர்.  புதுக்கவிதைகளுக்கென்று  முதன் முதல் வெளிவந்த தொகுப்பு நூல் செல்லப்பாவின் 'புதுக்குரல்கள்' தொகுப்பு தான். தமிழில் புதுக்கவிதைக்கு மணிக்கொடிக் காலம், எழுத்துக் காலம், வானம்பாடிக் காலம் என்று அந்தந்த காலத்தை ஒட்டிய வளர்ச்சிப் போக்கு உண்டு.   'கசடதபற',  'தீபம்', 'சரஸ்வதி'. 'ழ', 'கலாமோகினி', 'கணையாழி', 'ஞானரதம்', 'நடை', 'தாமரை','கிராம ஊழியன்',
'ஐ',  'சூறாவளி' போன்ற இதழ்கள் புதுகவிதைகளின் வளர்ச்சிக்கு சிறப்பான பங்களித்திருக்கின்றன.


கலை சம்பந்தப்பட்ட ஒவ்வொரு காலகட்ட இயக்கமும் தனக்கு முற்பட்ட காலத்தின் இயக்க ரீதியான வழக்கு முறைக்கு எதிர் வினையாகத் தோற்றம் கொடுப்பதை மாற்றத்தின் செயலாக அந்தந்த இயக்கத் தொடர்ச்சியின் ஊடாக வழிநெடுக நாம் பார்க்கலாம்.  இந்த மாற்றத்தை  ஒரு காலத்து செயல்பாட்டிலிருந்து இன்னொரு காலக்கட்ட வளர்ச்சிக்கு முன்னெடுத்துச் செல்வதாகக் கொள்ளலாம்.  இதையே 'கடந்து  செல்வதாக' சிலர் சொல்லவும் கேட்டிருக்கிறேன்.  ஒரு காலத்தின்   வழக்கு முறைகளைக் கடக்கும் இந்தக்கடத்தல் தவிர்க்கமுடியாத ஒன்றாக ஒவ்வொரு இயக்கப் போக்கிலும் தன்னாலே நிகழ்கிறது.

இதற்கு தனிநபர்கள்  காரணமல்ல.  காலத்தின் மாற்றங்களில் அதற்கேற்பவான வழிமுறைகளும் மாற்றம் கொண்டு அந்தகைய மாற்றங்ளுக்கு உபயோகப்படுவர்களை உபயோகப்படுத்திக் கொள்கிறது என்றே நாம் கொள்ளுதல் தகும்.


தமிழில் புதுக்கவிதைக்கு பாரதி தான்  முன்னோடியாக அமைந்தார் என்றாலும் அவருக்குப் பிறகு புதுக்கவிதையுலகை வார்த்தெடுத்த பெருமை

பிச்சமூர்த்தி  அவர்களுக்குப் போய்ச் சேர்ந்தது.  சி.சு. செல்லப்பாவின் 'எழுத்து' பத்திரிகை, பிற்காலத்தில் கோவையில் நிலைகொண்ட  'வானம்பாடி' இயக்கம் என்று ஒவ்வொரு காலகட்டத்திலும் அதன் வளர்ச்சிக்கேற்ப சீராட்டல்கள் நடந்திருக்கின்றன. இன்றைய காலகட்டத்திலும் கவிதை எனப்படுவதும் இதுவே என்கிற செல்வாக்கும் கிடைத்திருப்பதைக் குறிப்பிட்டே ஆக வேண்டும்.

இந்த சூழ்நிலையில் என் நினைவுகளில் மறக்கவே முடியாமல் பதிந்து போய் விட்ட சில கவிதைகளை பகிர்ந்து கொள்ள ஆசைப்பட்டதின் விளைவு இப்படி ஒரு பதிவாக மலர்ந்திருக்கிறது.ஆனை வந்தது முதலில்
அப்புறம் கலைந்து போனது
குதிரை மீதில் ஒருவன்
கொஞ்ச நேரம் போனான்                                  
பாட்டன்  புரண்டு மல்லாந்தான்
பாளை வெடிச்சு மரமாச்சு
அலையாய் சுருண்டது கொஞ்சம்
மணலாய் இறைந்தது கொஞ்சம்
கணத்தில் மாறிடும் மேகம்
உண்மையில் எது உன் ரூபம்?

                                                                -- மாலன்
                                                                                              


ராமச்சந்திரனா என்று கேட்டேன்
ராமச்சந்திரன் தான் என்றார்
எந்த ராமச்சந்திரன் என்று
நானும் கேட்கவில்லை
அவரும் சொல்லவில்லை.

                                                          -- நகுலன்
திண்ணை இருட்டில் எவரோ கேட்டார்
தலையை எங்கே வைப்பதாம் என்று
எவனோ சொன்னான்
களவு போகாமல் கையருகே வை

                                                           --  ஞானக்கூத்தன்எங்கிருந்து வருகிறது
இந்த நதி?
    மலைகளின்
   மெளனம் உடைந்தா?
முகில்களின்
ஆடை கிழிந்தா?
வ்னங்கள் பேசிய
இரகசியங்கள் கசிந்தா?

என்னிலிருந்து

என் அந்தரங்களின்
ஊற்றுக் கண் திறந்து
என் மார்புகள்
புல்லரித்து
என் இரத்த குழாய்களில்
புல்லும் பூவும் மணந்து
என்னை முழுக்காட்டி
என்னையே கரைத்துக் கொண்டு
அங்கிருந்து வருகிறது
இந்த நதி

                                                                         -  சிற்பிஇலக்கண செங்கோல்
யாப்பு சிம்மாசனம்
எதுகைப் பல்லக்கு
மோனைத் தேர்கள்
தனிமொழிச் சேனை
பண்டித பவனி
இவையெதுவும் இல்லாத
கருத்துக்கள் தம்மைத் தாமே
ஆளக் கற்றுக்கொண்ட
புதிய மக்களாட்சி முறையே
புதுக்கவிதை

                                              -- மு. மேத்தா
முட்டி முட்டி பால்குடிக்கின்றன
நீளக் குழல் விளக்கில்
விட்டில் பூச்சிகள்

                                                         -- பாலா

மழைக்குப் பயந்து
அறைக்குள் ஆட்டம் போட்டன
துவைத்த துணிகள்

                                        -- பாலகுமாரன்

பின்னாலும் போகவில்லை
முன்னாலும் போகவில்லை
நடுக்கிணற்றில் நிகழ்காலம்

                                                          
                                                                                                                              
யாப்புடைத்த கவிதை
அணையுடைத்த காவிரி

                                                              --  சி. மணி
(பிறிதொரு போழ்து இன்னும் நிறைய பகிர்ந்து  கொள்ளலாம்..)அன்பர்கள் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்!
Related Posts with Thumbnails