மின் நூல்

Saturday, February 25, 2012

பார்வை (பகுதி-29)


                              அத்தியாயம்--29

ர்ய கெளடர் ரோடில் ஏகப்பட்ட நெரிசல்.  விஜியுடன் சேர்ந்து வெளியே எங்கானும் போகவேண்டியிருந்தாலும் இருக்கலாம் என்று முன்னேற்பாடாக தன் காரை எடுத்து வந்திருந்தான் லஷ்மணன்.  நெரிசலில் நீந்திக் கடக்க அது கொஞ்சம் அசெளகரியமாக தான் இருந்தது.

லேண்ட் மார்க்காக அயோத்தியா மண்டபம் என்று விஜி சொன்னதும் நினைவிருந்தது.   மாம்பலம் அயோத்தியா மண்டபம் லஷ்மணனுக்கு பழக்கப்பட்ட இடம் தான்.  ஸ்ரீராம நவமி பொழுது இந்த மண்டபத்தில் தினமும் நடக்கும் சங்கீதக் கச்சேரிகளுக்கு வரவில்லையென்றால் அவன் மண்டை வெடித்து விடும்.  மண்டபம் நெருங்க நெருங்க, அதன் பக்கத்துத் தெருவாகவே விஜி சொன்ன தெரு இருந்தது ரொம்பவும் செளகரியமாகப் போய்விட்டது.  அந்த இடத்தில் திடீரென்று ஏற்பட்ட டிராஃபிக் ஜாமை ஒருவாறு சமாளித்து தெருவிற்குள் நுழைந்த பொழுது அஸ்வமேத யாக குதிரையின் மீது ஏறி சவாரி செய்ததே போன்ற வெற்றிக் களிப்பு தான் அவனுக்கு ஏற்பட்டது. 

தெருவில் நுழைந்தவுடன் ஊர்மிளாவிடம் கையில் கொண்டு வந்திருந்த சீட்டில் குறித்திருந்த வீட்டு இலக்கத்தைப் பார்க்கச் சொன்னான் லஷ்மணன்.  அவள் தன் ஹேண்ட் பாக்கில் குடைந்து பார்த்து 89Z என்றாள்.  தாண்டிச் சென்ற ஒரு வீட்டின் காம்பவுண்ட் ஹாலில் பதித்திருந்த எண்ணைப் பார்த்த பொழுது ஒரு புதுப் பிரச்சனை ஏற்பட்டது.  ஒவ்வொரு வீட்டு காம்பெளண்ட் சுவரிலும் பழைய எண் என்று ஒன்றைப் போட்டு அதற்குக் கீழே புதிய எண்ணையும் எழுதியிருந்தார்கள்.  விஜி கொடுத்திருந்தது, பழைய எண்ணா இல்லை புது எண்ணா என்று தெரியவில்லை. 

"புது எண்ணாத் தான் இருக்கும்.  இப்போத்தான் 69 வருகிறது.  இன்னும் இருபது எண்கள் தாண்டிப் போகவேண்டும்" என்றாள் ஊர்மிளா.

"போனாப் போச்சு.."என்று சொல்லிக்கொண்டே குறுக்கே திடீரென்று பந்துடன் பாய்ந்த சிறுவனைத் தவிர்த்து வண்டியை செலுத்தினான் லஷ்மணன்.  எண்கள் ஏறுவரிசையில் தான் செல்கிறதா என்பதை உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டு வந்த ஊர்மிளாவுக்கு ஒன்று புரிந்தது.  

திடீர் என்று கிளம்பிய ஞானோதயத்தில் "ஏங்க.. எண்கள் இரண்டிரண்டாகக் கூடி வருதுங்க.." என்றாள்.

"ஒன்றுமில்லை.. இந்த வீட்டுக்கு அடுத்த எண் எதிர் வீட்டுக்கு.  அதற்கடுத்த எண் இந்த வீட்டின் அடுத்த வீட்டிற்கு.  அப்படிப் பார்த்துக் கொண்டே வா.  பாண்டிச்சேரியில் இந்த மாதிரி கதவிலக்கம் கொடுக்கிற பழக்கமுண்டு" என்றான் லஷ்மணன்.

அவன் சொல்லி வாய் மூடுவதற்குள் 88-ம் எண் வந்து விட்டது.  அதோடு அந்த தெரு முடிந்து விட்டது.   ஊர்மிளா எதிர்வீட்டு இலக்கத்தைப் பார்த்து, "அதோ, அந்த வீட்டில் 87 போட்டிருக்கு" என்றாள்.

"அது 87.  இது 88.  சரிதான்.  அப்போ இதற்கு அடுத்தது தான் 89 வரவேண்டும்.  ஆக இந்த தெரு இடைவெளி தாண்டி எதிர்த்த வீடு.." என்று சொல்லி லஷ்மணன் காரை நகர்த்தினான்.

ஊர்மிளா கையிலிருந்த அந்தத் துண்டுக் காகிதத்தைப் பார்த்து விட்டு"89-க்கு பக்கத்தில் ஒரு Z வேறே இருக்கிறதே! அது என்னன்னு தெரியலேயே?"என்று ஒரு புது சந்தேகத்தைக் கிளப்பினாள்.

"முதல்லே எண்பத்தொம்பதைக் கண்டுபிடிக்கலாம்.  அதுக்கப்புறம் அந்த Z- பத்திப் பாத்துக்கலாம்."

தெருவின் நடுவாந்திரத்தில் இடைவெளி விட்டு குறுக்குத் தெருவாக இன்னொரு தெரு போயிற்றே தவிர, இடைவெளியைத் தாண்டி தொடர்ந்த தெருவில் 88-த் தாண்டி கதவிலக்கம் தொடர்ந்தது நம்பிக்கையைக் கொடுத்தது.   ஆனால், அவர்கள் துரதிர்ஷ்டம் எதிர்த்தாற்பலே இருந்த வீட்டுக்கு 89-A என்று இலக்கமிட்டிருந்தது.

அதைப் பார்த்த முகச்சுளிப்பில், "போச்சுடா.."என்று தொய்ந்து போன லஷ்மணன் ஓரு ஓரத்தில் காரை நிறுத்திவிட்டு இறங்கினான்.

"இனிமேலே A -யிலேந்து Z வரைப் போய் அதைத்தாண்டித் தான் 90 ஆரம்பிச்சிலாலும் ஆரம்பிக்கும்.  யாரையாவது கேக்கலாமா?" என்று ஊர்மிளா சுற்றும் முற்றும் பார்த்தாள்.

பத்து தப்படி தாண்டி நான்கு சக்கர சைக்கிள் வண்டியில் தென்பட்ட இஸ்திரிகாரர் தான் இந்த மாதிரியான டவுட்டுகளின் தீர்வுக்கு சரியான நபராக லஷ்மணனின் கண்களுக்குத் தென்பட்டார்.   அவரிடம் போனான். லஷ்மணன் கேட்டதைக் காதில் வாங்கிக் கொள்ளவே இல்லை அவர்.  ஊர்மிளாவும் என்ன நடக்கிறது என்று பார்க்க அருகில் வந்த பொழுது ஏற்பட்ட சலனத்தில் அவர் கவனம் அவர்கள் பக்கம் திரும்பியது.

'என்ன வேணும்' என்று இப்பொழுது தான் பார்த்துக் கேட்கிற மாதிரி நிமிர்ந்தவரிடம் விஷயத்தைச் சொன்னான்.

"அதோ.." என்று 89-A வீட்டையே இஸ்திரிகாரரும் காட்ட,

"அது 89-A-ன்னா.." என்றான் லஷ்மணன்.

"அதான்.  அங்கணயே சந்து மாதிரி தெரியும்.  உள்ளாற போங்க..  கட்ஸி வீடு" என்றார்.

நம்பியும் நம்பாமலும் இருவரும் மறுபடியும் 89-A-க்குப் போனார்கள். சாத்தியிருந்த ஒற்றை கிரில் கதவைத் திறந்ததும் தான் இஸ்திரிகாரர் சொன்ன சந்து தென்பட்டது.   உள்ளே பார்த்தால் நீண்ட சந்தின் பக்கவாட்டில் ஒரு ஸ்டோர் போல வரிசையாக வீடுகள் நீண்டு கிடந்தன...  இங்கு தான் 'A' யிலிருந்து 'Z' வரை அத்தனை வீடுகளும் இறைந்து கிடக்கின்றனவா! வெளியிலிருந்து பார்க்கையில் தெரிந்ததற்கு நம்ப முடியாமல் தான் இருந்தது.  முதல் வீட்டுக்காரரின் வீட்டு இலக்கமான 89A மட்டும் ரோடிலிருந்து பார்க்கையில் பளிச்சென்று தெரிந்து எல்லாவற்றையும் மறைத்திருக்கிறது!

வெளியே வந்த லஷ்மணன் காரை ஓரமாகப் பார்க் பண்ணி பூட்டி விட்டு வந்தான்.  'A'--யிலிருந்து வரிசையாகப் பார்த்துக் கொண்டு வருகையில் ஓரிரண்டு ஆங்கில எழுத்துக்கள் தவிர்க்கப் பட்டிருந்தது தெரிந்தது. ஏதாவது வாஸ்து மாதிரி சமாச்சாரங்கள் காரணமாக இருக்கலாம்.

முன்னால் சென்று கொண்டிருந்த ஊர்மிளா, 'Z' வந்ததும் பிரேக் போட்ட மாதிரி நின்றாள்.  திரும்பிப் பார்த்தால் பின்னால் யாருடனோ லஷ்மணன் பேசிக் கொண்டு தேங்கி விட்டது தெரிந்தது.  கணவனும் வரட்டும் என்கிற நினைப்பில் ஊர்மிளா தயங்கி நிற்கையில் அந்த வீட்டுக் கதவு திறக்கப் பட்டது.

வெளியே வந்த பெண் லட்சணமாக இருந்தாள்.  ஊர்மிளாவை அவள் பார்த்ததும், "யாரைப் பாக்கணும்?" என்று கேட்டாள்.  கேட்ட குரல் ரொம்பவும் மிருதுவாகப் பட்டது ஊர்மிளாவுக்கு.

"இங்கே விஜின்னு.." என்று அவள் இழுக்கையிலேயே, "வெளியேயே ஏன் நிற்கிறீர்கள்? உள்ளே வாருங்கள்.." என்று புன்முறுவலுடன் அவள் அழைத்த பொழுது தயங்கியபடியே லஷ்மணன் வருகிறானா என்று பின்னால் திரும்பிப் பார்த்தாள்.

லஷ்மணன் அந்த இன்னொருவருடன் பேசியபடியே 89-Z நோக்கி வந்து கொண்டிருப்பது தெரிந்தது.


(இன்னும் வரும்)




27 comments:

Geetha Sambasivam said...

.. இந்த வீட்டுக்கு அடுத்த எண் எதிர் வீட்டுக்கு. அதற்கடுத்த எண் இந்த வீட்டின் அடுத்த வீட்டிற்கு. அப்படிப் பார்த்துக் கொண்டே வா. பாண்டிச்சேரியில் இந்த மாதிரி கதவிலக்கம் கொடுக்கிற பழக்கமுண்டு//

சென்னைக்கும் வந்து சில ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது.

விஜி யாருனு இப்போ சந்தேகம் வந்திருக்கு! அந்தப் பெண்ணா?லக்ஷ்மணனோடு வருபவரா?

என் வோட்டு அந்தப் பெண்ணுக்கு! :))))

Shakthiprabha (Prabha Sridhar) said...

பெங்களூர் ஹனுமந்த நகரில் வீட்டு எண்ணை வைத்து நாங்கள் சுற்றோ சுற்று என்று சுற்றிய பசுமை நினைவுகளை நினைவுபடுத்திவிட்டீர்கள் :))))))))))

ஹ்ம்ம்...விஜி யார்... ...........
அடுத்த அத்தியாத்தில் தான் தெரியுமா :(

ஜீவி said...

@ கீதா சாம்பசிவம்

உங்க உடனடிப் பின்னூட்டங்கள் எப்பொழுதுமே சுவாரஸ்யமானவை; அதே சமயத்தில் திசை தெரியாது தத்தளிக்கும் நேரங்களில் ஒளிகாட்டி வழிகாட்டும் கடற்கரை லைட்ஹவுஸ் போன்றவையும் கூட.

மிக்க நன்றி, கீதாம்மா.

ஜீவி said...

@ Rathnavel Natarajan

தொடர்ந்து படித்து வருவதற்கும், படித்தது பற்றிக் கருத்துச் சொல்வதற்கும் மிக்க நன்றி, ஐயா!

ஜீவி said...

@ Shakthiprabha

அப்படியா, ஷக்தி! ஒரு காலத்தில் சென்னை அண்ணா நகர் சுற்றல்கள் பற்றி பத்திரிகைகளில் நிறைய ஜோக்குகள் வரும்!

ஆம்! போகிற போக்கைப் பார்த்தால் அடுத்த அத்தியாயத்திலாவது அது பற்றி, ஸாரி அவர் பற்றி, சொல்லி விட வேண்டியது தான் போலிருக்கு!

ஸ்ரீராம். said...

அட்ரஸ் கண்டு பிடிப்பதில் உள்ள சிரமம் அதுதான்! சரியாக நாம் தேடும் நம்பருக்கு முதல் நம்பர் வரைதான் அங்கு இருக்கும்! 'விஜி' எப்போது அசோக் நகரிலிருந்து அயோத்யா மண்டபம் மாறினார்?! லக்ஷ்மனனுடன் பேசிக் கொண்டு வருவதுதான் ஜீவி மன்னிக்கவும், எழுத்து முன்பின் மாறிவிட்டது, விஜி என்பது என் யூகம்! :))

பாச மலர் / Paasa Malar said...

வீடு இப்படித் தேடிய அனுபவங்கள் எனக்கும் உண்டு.....

இந்த வீடு தேடலில் உள்ள சுவாரசியங்களையும் அனுபவித்ததுண்டு..அவசரமாய் ஆர்வமாய்த் தேடும் போதும் கண்ணில் படும் சுவாரசியங்களை ரசிக்கத் தவறுவதில்லை....

கதையின் ஓட்டத்துக்கு இடையில் இந்தப் பகுதி முழுவதுமாய் வீடு தேடலுக்காய் ஒதுக்கப்பட்டிருப்பது...
சுவாரசியம்...

இந்த மாதிரி ரசித்த சின்னச் சின்ன விஷயங்களை விவரிப்பதற்காகவே ஒரு தொடர் எழுதலாமா என்று தோன்றுகிறது...

அடடா சுயபுராணம் போதும் போதும்....விஜி அந்தப் பெண்ணா என்ன கீதா? அப்படி இருக்குமா இருக்காதா? பார்ப்போம்..

ஜீவி வேறு கடைசி வரியில் அது என்று கூறுகிறார்....

Geetha Sambasivam said...

விஜி' எப்போது அசோக் நகரிலிருந்து அயோத்யா மண்டபம் மாறினார்?! //

அதே, அதே, கேட்க நினைச்சு மறந்துட்டேன். ஶ்ரீராம் நல்லவேளையாக் கேட்டுட்டார் நினைவாக! :))))))

ஜீவி said...

@ ஸ்ரீராம்

//அட்ரஸ் கண்டு பிடிப்பதில் உள்ள சிரமம் அதுதான்! சரியாக நாம் தேடும் நம்பருக்கு முதல் நம்பர் வரைதான் அங்கு இருக்கும்! //

ஹஹ்ஹஹ்ஹா..

//'விஜி' எப்போது அசோக் நகரிலிருந்து அயோத்யா மண்டபம் மாறினார்?! //

:)))

//லக்ஷ்மனனுடன் பேசிக் கொண்டு வருவதுதான் .... விஜி என்பது என் யூகம்! :))//

கீதாம்மா சொன்னாங்கன்னு அப்படி யோசிச்சா, நீங்க இப்படி வர்றீங்களே, ஸ்ரீராம்!

பின்னாடி பாசமலர் வேறு கீதாம்மாவிடம் அப்படியான்னு ஏதோ கேக்கறாங்க..

ரிஷி-வித்யா(!) இந்த ரெண்டு பேரில் யார் விட்டுக்கொடுக்கறாங்கன்னு பாக்கலாம்! அதுக்கேத்த மாதிரி அடுத்த அத்தியாயத்திற்குள்..

Geetha Sambasivam said...

கீதாம்மா சொன்னாங்கன்னு அப்படி யோசிச்சா, நீங்க இப்படி வர்றீங்களே, ஸ்ரீராம்!

பின்னாடி பாசமலர் வேறு கீதாம்மாவிடம் அப்படியான்னு ஏதோ கேக்கறாங்க..//

:))))))))

ஜீவி said...

@ பாசமலர்

அடையும் அனுபவங்களை சுவாரஸ்யமாக ரசிக்கத் தெரிந்தவர்கள் பாக்யவான்கள்!

//கதையின் ஓட்டத்துக்கு இடையில் இந்தப் பகுதி முழுவதுமாய் வீடு தேடலுக்காய் ஒதுக்கப்பட்டிருப்பது...
சுவாரசியம்...//

விஜி யார்ன்னு தீர்மானிக்க முடியாம யோசிக்க வீடு தேடும் படலமாய் கொஞ்சம் டைம் எடுத்துக் கிட்டா...

//இந்த மாதிரி ரசித்த சின்னச் சின்ன விஷயங்களை விவரிப்பதற்காகவே ஒரு தொடர் எழுதலாமா என்று தோன்றுகிறது...//

நிச்சயம் எழுதுங்க.. 'சிலம்பு', 'குறள்'னு பெரிய பெரிய ஈடுபாடுகளுக்கு இடையே சின்னச் சின்ன விஷயங்கள் வந்து போவது
ஒரு மாறுதலாகத் தான் இருக்கும்.
எனக்குக் கூட இந்த 'பார்வை'லேந்து எப்போ விடுபடப்போறோம்னு தெரிலே! நம்ம ஸ்ரீராம் ஆரம்பிச்சு வைச்சது.. ஒரேடியா நீ..ண்..ட..
பார்வையா போய்கிட்டே இருக்கு!
ஆனால் ஒரு பெரிய உயிரோட்டமான பிரச்னையைக் கையாளப்போவதற்குத் தான் இத்தனையும்னு நைனைச்சா, மனசுக்கு சந்தோஷமா இருக்கு!

ஜீவி said...

@ கீதா சாம்பசிவம்

//அதே, அதே, கேட்க நினைச்சு மறந்துட்டேன். ஶ்ரீராம் நல்லவேளையாக் கேட்டுட்டார் நினைவாக! :))))))//

நம்ம ஸ்ரீராம் 'விருபா'வை (!) பார்த்துட்டார் போல இருக்கு..
அசோக் நகர்-- அயோத்தியா மண்டபம் (ஸ்ரீராமர் இருக்கும் இடமே அயோத்தின்னு நமக்கெல்லாம் பாடம் வேறே) எல்லாம் 'அ'- 'அ'ல்லே வேறே ஆரம்பிக்குதா, A+A=?

ஜீவி said...

@ கீதா சாம்பசிவம்

கீதாம்மா.. அந்த ரிஷியையும் வித்யாவையும் பாத்தீங்களா..

G.M Balasubramaniam said...

நகரத்தில் வீடு தேடி அலைவது சுவாரசியமாக இருக்கிறது. தொடர்கிறேன்.

இராஜராஜேஸ்வரி said...

ஒருவழியாக வீட்டைக் கண்டுபிடித்தார்களே....

Uthamaputhra Purushotham said...

அன்பு நண்பரே,

எமக்குக் கிடைத்த லீப்ஸ்டர் அங்கீகார விருதினை (Liebster Award) தங்கள் பதிவுக்குப் பகிர்ந்து அளிப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகின்றேன். தங்கள் பதிவுலகப் பணி மேலும் சிறக்க எமது வாழ்த்துக்கள்.....

http://thamilkavithaikal.blogspot.in/2012/02/liebster-blog-award.html

அப்பாதுரை said...

வீட்டு நெம்பரை வச்சு ஒரு பின்னு பின்னியிருக்கீங்க.. எத்தனை கதைகள் இதுல ஒளிஞ்சிருக்குனு இப்ப நினைச்சுப் பாக்கறேன்!

Geetha Sambasivam said...

அதானே, அப்பாதுரை, நம்பரை வைச்சே கணக்குப் போட்டாச்சா? எத்தனை கதைகள்?? :)))))

கோமதி அரசு said...

"இங்கே விஜின்னு.." என்று அவள் இழுக்கையிலேயே, "வெளியேயே ஏன் நிற்கிறீர்கள்? உள்ளே வாருங்கள்.." என்று புன்முறுவலுடன்//

இந்த புன்முறுவலுக்கு என்ன அர்த்தம் நான் தான் விஜி என்று சொல்ல வில்லையே!

லக்ஷ்மணன் யாரோடு பேசிக் கொண்டு வருகிறார்?
விஜி யார்?

அடுத்த பார்வைகள் எப்போ வரும் என்று ஆவலை தூண்டுகிறது.

வீட்டு முகவரியில் புது நம்பர், பழைய நம்பர் எனக்கு குழப்பம் ஏற்படுத்திய அனுபவம் உண்டு.

அனுபவங்களை கதையில் அழகாய் கொண்டு வந்து விட்டீர்கள்.

ஜீவி said...

@ G.M.B.

தொடர்ந்து வாசித்து வருவதற்கு நன்றி, சார்!

ஜீவி said...

@ இராஜராஜேஸ்வரி

ஆமாம். ஒரு வழியாகத்தான்.

அப்புறம், உங்களை ஒன்று கேட்க வேண்டும். செய்யாறு ஸ்ரீ வேதபுரீஸ்வரர் கோயில் பற்றி நீங்கள் எழுதி விட்டீர்களோ?..

ஜீவி said...

@ UthamaPuthra

தங்கள் விருதுக்கு மிக்க நன்றி, Uthama Puthra! நம் இருவரின் ரசனையைப் போற்றுவதற்காகத் தான் இந்த விருது என்று நினைக்கிறேன்.

ஏற்கனவே கோமதி அரசு அவர்களும்
இந்த விருதை வழங்கியிருப்பதை இந்த சமயத்தில் நினைவு கூர்கிறேன்.

தங்கள் அன்புக்கு மிக்க நன்றி.

ஜீவி said...

@ அப்பாத்துரை

அத்தனை கதைகளுமே கற்பனையில் முகிழ்க்கும் மனப்பின்னல்கள் என்று நினைக்கும் பொழுது, இல்லை, மனப் பின்னல்களை கட்டும் ரிப்பன் தான் கதைகளோ?..

பின்னலான தங்கள் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி, அப்பாஜி.

ஜீவி said...

@ கீதா சாம்பசிவம்

ஒளிவதற்கு இடமில்லை. இந்த வார்த்தை கூட ஸ்ரீராமிற்கு ஒரு நாவலை நினைவு படுத்தும். அதை எழுதியவரை எனக்குக் கூட ரொம்ப ரொம்பப் பிடிக்கும். அடுத்த எனது'எழுத்தாளர் பதிவு' அவரைப் பற்றி தான்.

அவர் இன்ஷியலில் ஒரு பிரபல ஓவியர் மறைந்திருக்கிறார். ஒரு பிரபல எழுத்தாளரின் சுருக்கப் பெயரும் அது தான்.

இந்த மாதிரி கண்டுபிடிப்புகளெல்லாம் தான் உங்களுக்கு ஜூஜூபி ஆச்சே!

ஜீவி said...

@ கோமதி அரசு

வாங்க, கோமதிம்மா.

நீங்க நினைச்சது சரிதான். அடுத்த அத்தியாயம் வந்தாச்சு!

Geetha Sambasivam said...

ரா.கி.ரங்கராஜன் கதை தானே அது?? விழுந்து விழுந்து படிச்சது நினைப்பில் இருக்கு

ஜீவி said...

@ கீதா சாம்பசிவம்

கேள்வி பிறந்த ஐந்தே வினாடிகளில் சரியான பதில் பிறந்து விட்டது!
அதான் சொல்லி விட்டேனே, இதெல்லாம் உங்களுக்கு ஜூஜூபி என்று!

ஓவியர்: ராகி

எழுத்தாளர்: ரா. கிருஷ்ணமூர்த்தி (கல்கி)

Related Posts with Thumbnails