மின் நூல்

Tuesday, February 21, 2012

பார்வை (பகுதி-28)

                      அத்தியாயம்--28

ராத்திரி ரொம்ப நேரம் கழித்துத் தான் லஷ்மணன் வீட்டிற்கு வந்திருந்தான். வழக்கமாக இப்படி நேரம் கழித்து வந்தால் வெளியிலேயே சாப்பிட்டிருப்பான் என்று ஊர்மிளாவுக்குத் தெரியும்.  அவளுக்கும் அசதி மிகுந்திருந்ததால், கதவைத் திறந்து விட்டுத் தூங்கி விட்டாள்.

காலையில் அவள் எழுந்த பொழுது அவன் அலுவலக அறையில் விளக்கு எரிந்து கொண்டிருப்பது தெரிந்தது.  எழுந்து பார்த்தால் லேப் டாப்பில் எழுதிக் கொண்டிருந்தவனுக்கு எதிரே தேனீர் கோப்பையிலிருந்து, தேய்த்த அலாவுதீன் விளக்கு மாதிரி ஆவி புகைந்துகொண்டிருந்தது.

போய் பல் விளக்கி தலை கோதி அவளுக்கும் தேநீர் கலந்து ஓவனில் சூடேறிக் கொண்டு அவன் எதிரே வந்து அமர்ந்தாள்.

தலை நிமிர்ந்து ஊர்மிளாவைப் பார்த்தவன் புன்முறுவல் பூத்தான். அவளும் லேசாகச் சிரித்தாள். "என்ன செஞ்சிருக்கீங்கன்னு தெரியும்.." என்றாள்.

"அப்படியா? சொல்லு பாக்கலாம்.." என்று சொன்ன பொழுது லஷ்மணனின் புன்னகை இன்னும் விரிந்தது.

"சொன்னா என்ன தருவீங்க?.."

"முதல்லே சொல்லு. தர்றதுதான் என்னிக்கும் இருக்கே.."

"அதானே கூடாதுங்கறதுங்கறது.." என்றவள் அவனுக்கு இன்னும் கொஞ்சம் நெருங்கி அமர்ந்து கொண்டாள். லேப் டாப்பில் பார்த்தும் பார்க்காதது மாதிரி விழி சுழற்றியவளுக்குத் தெரிந்து விட்டது.. "அதானே சமாச்சாரம்?.." என்று சிரித்தாள்.

"எதானே சமாச்சாரம்?.. "

"உங்களால் சும்மா இருக்க முடியாதே! அந்த காந்தளூர் சாலை பெருநிலச்செல்வியை மயக்கத்லேந்து எழுப்பிட்டீங்க, அதானே?"

ஒரு நிமிஷம் அவன் ஆச்சரியப்பட்டுப் போனாலும் படாதது மாதிரி காட்டிக் கொண்டு, "நீ நெருக்கமா உக்காந்தப்போ கொஞ்சம் அசந்திட்டேன்ங்கறது வாஸ்தவம் தான்.  அதுக்குள்ளாற லேப் டாப்லே பாத்திட்டே.. இல்லையா?"

"ப்ராமிஸா இல்லீங்க.." என்று ஊர்மிளா சிரிக்காமல் சொன்னாள்.

"சரி. நம்பறேன்.  எப்படிக் கண்டுபிடிச்சே?"

"தினம் விடியற்காலை அந்த பெருநிலச்செல்வியோட நீங்கக் கொஞ்சிக் கூத்தடிக்கறதுதெல்லாம் தெரிஞ்ச விஷயம் தானே?..  அதுக்குத்தான் மயங்கிப் போனவளை எழுப்பிட்டீங்க.."

"ஒதை விழும்.." என்று பொய்க்கோபத்துடன் முறைத்தான்."உன்னை எழுப்பலாம்ன்னு தான் நெனைச்சேன். அசந்து தூங்கிண்டிருந்தையா.."

"என் ஞாபகம் வேறே உங்களுக்கு இருக்காக்கும்?  உங்களுக்குத் தான் அந்த பெருநிலச்செல்வி, நிரஞ்சனா, நித்ய கன்னி, மோஹனா, சொப்பன சுந்தரி, செளந்தர வல்லின்னு கூட்டங்கூட்டமா இருக்காங்களே?"

"ஸீ.." என்று அவள் மோவாயை விரல் தொட்டுத் தூக்கினான் லஷ்மணன்.  "ஒரு விஷயம் தெரியுமா?' என்று அவளை அவன் உற்றுப் பார்த்த பொழுது விலக வேண்டும் என்று எச்சரிக்கை அவள் உள்ளுக்கு உள்ளே ஒளிர்ந்தாலும் ஏனோ விலகத் தோன்றவில்லை..

"என் கதைக் கதாநாயகிகள் எத்தனையோ பேர் இருக்கலாம்.  உங்கிட்டே இருந்து தான் அத்தனை பேரும் புறப்பட்டிருக்காங்கங்கறதைத் தெரிஞ்சிக்கோ. அவங்கள்லாம் நிழல்ன்னா, நீ நிஜம்.  அவங்கள்லாம் சந்திரன்னா, நீ தான் சூரியன்."

"அவங்கள்லாம் குளுகுளுன்னு இருக்காங்க.  நான் சுட்டெரிக்கிறேன். அப்படித்தானே?"

"இந்த பொண்ணுங்களே இப்படித்தான்.  எப்படிச் சொன்னாலும் அதை மாத்திச் சொல்றதுக்கு அவங்களுக்குன்னு ஏதாவது இண்டு இடுக்கு கிடைச்சிடும்."

"ஒரேடியா வெறுத்துப் போயிடாதீங்க; சும்மாக்காச்சும் சொன்னேன்.  போகட்டும்.  விஜியோட அட்ரஸ் கிடைச்சிருச்சின்னு மெஸேஜ் அனுப்பிச்சிருந்தீங்களே!  டெல்லிலேயா இருக்கார் அவர்?" என்று பூத்துவாலையால் துடைத்த அந்த அதிகாலை பளிச் முகத்தில் ஆர்வம் கொப்பளிக்கக் கேட்டாள்.

"அப்படித்தான் யாரோ சொல்லி நெனைச்சிண்டிருந்தேன்.  டெல்லி இல்லேன்னு இன்னிக்குத் தான் தெரிஞ்சது."

"எப்படி?"

"சாயந்திரம் பூரா அவரோடத் தான் கழிஞ்சது."

"அட!" என்று ஆச்சரியப்பட்டாள் ஊர்மிளா. "அப்போ நேரேயே பாத்து அறிமுகம் ஆச்சுன்னு சொல்லுங்க.."

"எஸ்.  அவருக்கும் சென்னை தான்.  எல்.எல்.ஏ. பில்டிங் போகணும்னு நேத்தே சொல்லியிருந்தேன், இல்லையா?   அங்கே தான் பாத்தேன்."

"ஏதோ 'கவிதை' நூல் வெளியீட்டு விழானுன்னா சொல்லியிருந்தீங்க..அவரும் வந்திருந்தார்னா,  அவருக்கும் கவிதைலேலாம் இண்ட்ரஸ்ட்டுன்னு சொல்லுங்க.."

"அவரோட பேசிண்டிருந்ததை வைச்சுப் பார்த்தா அப்படித்தான் தெரியறது."

"அதானே பார்த்தேன்.  மென்மையா எழுத்து இருக்கறவங்கள்லாம் கவிதைகள் ஆகர்ஷிப்பிலே மாட்டிக்காம இருக்க முடியாது."

"மாட்டிக்கறதா?.. வாட் யூ மீன்?.."

"சீரியஸா எடுத்திக்காதீங்க.. மாட்டிக்கறது மீன்ஸ் சிக்கிக்கறது.. சிக்கிக்கறதுன்னா.." ன்னு ஒரு வினாடி கீழுதட்டில் ஆள்சுட்டி விரல் பொருத்தி யோசித்தாள். "ஐ மீன்.. நான் உணர்றதை எப்படிச் சொல்றதுன்னு தெரிலே.   'சிக்கிக்கறது'ங்கற இந்த வார்த்தை தான் உங்களை உபத்திரவப்படுத்தறதா? அப்ப வேறே மாதிரி சொல்றேன்.  ஒரு விஷயத்தோட இன்ஃப்ளூயனஸ் கொஞ்சம் கொஞ்சமா நம்மை ஆக்கிரமிக்கறதைச் சொல்றேன்."

"புரியறது."

"இன்னும் புரியற மாதிரி சொல்ல முயற்சிக்கிறேன். கேளுங்க. ஒரு தடவை எங்க ஆபீஸ் ஸ்டாஃப் போனாங்கன்னு உபந்நியாசம் ஒண்ணுக்குப் போயிட்டேன்.  அந்த அட்மாஸ்ப்பியரே எனக்கு ஒரு மாதிரி இருந்தது.  அந்த ஹால் பூரா பவானி ஜமக்காளம் விரிச்சிருந்தது.  அத்தனை பேரும் காலை மடிச்சிண்டு அதிலே தான் உக்காந்திருந்தாங்க.  நாற்காலிலேயே உக்காந்து பழக்கப்பட்ட நான் எப்படி இப்படி உக்காந்திருக்க முடியும்னு யோசனையா போயிடுத்து.  சரிடா, வகையா மாட்டிகிட்டோம்னு நெனைச்சேன்.

"மாட்டிகிட்டோம்னு?"

"எஸ். அதான் சரியான உணர்வு.  பின்னே என்ன? க்ளோஸ்டு ஹால். வெளிக்கதைவை அடைச்சாச்சு. முன்பக்கம் வேறே போயிட்டோமா? பாதிலே எழுந்திருந்தோம்னா அசிங்கமா எல்லாருக்கும் தெரியும்.  அதுக்குக் கூச்சப்பட்டுண்டு தேமேன்னு காலை மடக்கிண்டு உக்காந்திட்டேன். இராமயண உபந்யாசம்.  வாலி வதை படலம். உபந்நியாசம் செய்யறவர்... யாரோ தீஷிதர்ன்னு பேரைப் போட்டிருந்தது.  ஆற்றோட்டமா அற்புதமா சொல்றார்.  சே! சான்ஸே இல்லை.  தமிழ் எவ்வளவு அற்புதமான மொழின்னு அன்னிக்கும் உணர்ந்தேன்.  நேரம் போனதே தெரிலே.  எல்லாம் முடிஞ்சி தீபாராதனைக்கு எழுந்திறக்கறச்சே தான் கால் மரத்துப் போனது கூடத் தெரிஞ்சது.  அப்படி ஒரு சுவாரஸ்யம்.  கம்பன்லே ஒரு வரி.."என்று மீண்டும் ஒருதடவை அதே மாதிரி கீழுதட்டில் ஆள்சுட்டி விரல் வைத்தாள்.. "ஆவியை ஜனகன் பெற்ற அன்னத்தை அமிழ்தின் வந்த தேவியைப் பிரிந்த பின்னை திகைத்தனை போலும் செய்கை..'ங்கற வரி இன்னும் ஞாபகச்சரட்டிலே கோத்து இருக்கு..."

"முன்னாடி மாட்டிண்டோம்னு நெனைச்சது தப்புன்னு தெரிஞ்சது. இல்லையா?"

"தப்புன்னு சொல்ல முடியாது.  அந்த 'மாண்டிண்ட உணர்வு' இல்லேனா, இந்தண்டை அந்தண்டை கவனம் சிதறாம அதே குறியா அவர் சொன்னதை அந்தளவுக்கு மனசிலே வாங்கிண்டிருக்க முடியாதுன்னும் தோண்றது. ஆம் ஐ கரெக்ட்?"

"கரெக்ட்டுன்னு தான் சொல்லணும்..."

"அதென்ன சொல்லணும்?.. தொங்கலா..."

"கேட்ட விஷயத்தை, அப்படி ஆழ்ந்து கேக்கற மாதிரி ஒருத்தர் சொன்ன விஷயத்துக்கு முக்கியத்துவம் கொடுக்காம, ஒரு மாத்து குறைச்சுச் சொல்ற மாதிரி இருக்கு. அப்படிக் கதவை அடைக்கலேனா, கம்பனை அந்தளவுக்கு ரசிச்சிருக்க முடியாதுன்னு சொல்ற மாதிரி..."

"அப்படீங்கறீங்க.. ஓக்கே.. மாத்திக்கறேன்.  ஆனா ஒண்ணு.  இந்த மாதிரி மாட்டல்லாம், இன்னொரு தடவை அப்படி மாட்டிக்க மாட்டோமான்னு உணர்வை ஏற்படுத்தறதே?.. அதுக்கு என்ன சொல்றீங்க..?"

"இப்ப சொன்னேயே இது சரி.  இப்படி சிக்கிக்கற சில சிக்கல்லே சிலது சுகமாவும் இருக்கு... மனசுக்கு சந்தோஷத்தையும் கொடுக்கறது. பொதுவா 'சிக்கல்'ன்னு நாம நினைக்கற அர்த்தத்தைக் இதுகளுக்குக் கொள்ளக் கூடாது.. அவ்வளவு தான்."

"ஆயுசிலே இப்பத் தாங்க நான் சொன்ன ஒண்ணை அங்கீகரிச்சு மனசார ஏத்திண்டிருக்கீங்க.."

"மனசார?.."

"போதும். மறுபடியும் ஆரம்பிக்காதீங்க.. நிறைய உங்ககிட்டே சொல்லணும்னு நெனைச்சிண்டிருக்கேன்.  மறந்திடப்போறேன்.." என்று சொன்னவள் எழுந்திருந்து 'ஓட்ஸ்' டின்னை எடுத்து வைத்துக் கொண்டு காலைக் கஞ்சி கரைக்கத் தயாரானாள்.

லேப் டாப்பை மூடிவிட்டு லஷ்மணனும் அவள் பின்னாடியே போனான்.  "எட்டாச்சு பார்.  இப்ப ஆரம்பிச்சாத்தான் சரியா இருக்கும்.  பிரிட்ஜ்லே என்ன இருக்கு பாரு.  ரசம் வேண்டாம்.  குழம்பும் கறியும் போதும்.  காரெட் நிறைய இருக்குன்னு நெனைக்கிறேன்.  எலும்பிச்சையும் இருந்தா வேணும்னா கோசுமல்லியும் பண்ணிடலாம்."

"மெதுவா செஞ்சிண்டாப் போச்சு.  இன்னிக்கு சனிக்கிழமை தான்.  மறந்திட்டீங்களா?.."

"மறக்கலே.  உனக்கும் ஹாலிடேங்கறதாலே தான், நாளைக்கு வீட்டிற்கு வர்றீங்களான்னு விஜி கேட்டப்போ சரின்னுட்டேன்.  உன்னையும் கூட்டிண்டு வர்றதா சொல்லியிருக்கேன்.  உனக்கு செளகரியப்படும் தானே?"

"என்னங்க இப்படி மெதுவா சொல்றீங்க?.. அப்பவே சொல்லியிருந்தா குக்கரையாவது அடுப்பிலே ஏத்திருப்பேன்லே?"

"மத்தியானத்துக்கு மேலே தான், ஒரு நாலரை வாக்கில் கிளம்பினா போதும். அஞ்சு அஞ்சரைக்கெல்லாம் போய்ட்லாம்.  சாப்பிட்டு ஒரு குட்டி தூக்கம் போட்டுட்டு.."

"அந்த 'பார்வை' கதையை மேலோட்டமானும் ஒரு தடவை பாக்கணும்ங்க..
நிறைய அவர் கிட்டே கேக்க வேண்டியிருக்கு. அப்புறம் இன்னொண்ணு ஒங்க கிட்டே சொல்லணும்.."

"விஜியை பத்தியா?" என்று கேட்ட லஷ்மணன் பிரிட்ஜிலிருந்து அவள் எடுத்த வைத்த கோஸை நறுக்குவதற்கு முன் அதை இதழ் இதழாகப் பிரித்துக் கொண்டான்.  அப்படிப் பிரித்துப் பொடிப்பொடியாக நறுக்கினால் தான் அவனுக்குப் பிடிக்கும்.

"ஆமாம்.  என்னிக்கு விஜியோட அந்தக் கதையைப் படிச்சோமோ, அன்னைலேந்தே நடக்கறதெல்லாம் அவரைச் சுத்தியே சுத்திண்டிருக்கு.  நேத்து என்ன நடந்தது தெரியுமா?..  நீங்க ஃபோன் செஞ்சப்போ அப்பத்தான் அவசரமா டிஸ்கஷனுக்குப் பெரியவர் கூப்பிட்டிருந்தாரா... அதான் அப்பவே பேசமுடிலே"

லஷ்மணன் நிமிர்ந்து உட்கார்ந்தான்."பெரியவரா?.. சுவாரஸ்யமான மனுஷர், அவர்! ரொம்ப அனுபவம்.  அறுபது வருஷ கால பத்திரிகை உலகை கரைச்சுக் குடிச்சவர் இல்லையா? உன்பாடு பரவாயில்லை.  நான் தான் எந்தத் தகவல் வேணுண்ணாலும் அதுக்காகத் தேடித் திரிய வேண்டியிருக்கு. உனக்கு அப்படியில்லை பாரு.  பெரியவரே ஒரு தகவல் சுரங்கம்.."

"ஆரம்ப காலங்கள்லே பத்திரிகைலே ஒரு கதை பிரசுரமாகறத்துக்கு அவர் பட்ட ஏக்கத்தைப் பத்தி நேத்திக்குச் சொன்னார். அந்த ஏக்கமே ஒரு கதையா உருவெடுத்ததா சொன்னார். உருக்கமா இருந்தது."

"ஐ ஸீ..  கடைசிலே அந்தக் கதை பிரசுரமாயிடுத்து, இல்லையா?"

"ஆமாம். 'கங்கை'ங்கற பத்திரிகைலே பிரசுரமானதாம்."

"கங்கைலேயா?.. பகீரதன்னு பேரு.  'கல்கி'க்கு பிடிச்சமானவர். 'கல்கி'லேயும் துணையாசிரியரா இருந்திருக்கார்.  அவர் நடத்தின பத்திரிகை 'கங்கை'.  சரியான ஆசாமிங்க.  தன் புனைப்பெயருக்கு ஏத்த மாதிரி பத்திரிகை பேரையும் இந்த பகீரதன் எப்படி செலக்ட் செஞ்சிருக்கார், பாரு!"-- கோஸ், கத்தி பட்டு தேங்காய்த் துருவல் போல அழகாக பேஸினின் பாதி அளவுக்கு வந்திருந்தது.

"விஷயத்துக்கு வர்றேன்.  தன்னோட சிறு வயசு பத்திரிகை அல்லாடல்கள் அடிப்படைலே, இதுவரை எந்தப் பத்திரிகையாலேயும் பிரபலமாகாத ஒருத்தர் நாவலைப் போடணும்னு பெரியவர் அபிப்ராயப்படறார்.  நான் விஜி பேரைச் சொல்லலாம்னு நெனைச்சேன். எதுக்கும் உங்க கிட்டே கேட்டுகிட்டு.."

லேசான பதட்டத்துடன், "சொல்லிட்டியா?" என்றான் லஷ்மணன்.

"சொல்லலே.  அதான் சொன்னேனே, உங்க கிட்டே கேட்டுகிட்டு.."

"நல்ல வேளை சொல்லாமப் போனே.." என்று லஷ்மணன் சொன்னது புதிராக இருந்தது ஊர்மிளாவுக்கு.


(இன்னும் வரும்)

















17 comments:

ஸ்ரீராம். said...

நல்லதொரு பகுதி...இயல்பாகக் கடந்து போகும் அத்தியாயம். விஜி குறித்த லக்ஷ்மணனின் பதற்றம் ஏன் என்று அறிய ஆவல். வேறொரு பதிப்பகத்திற்கு விஜி 'பார்வைகளை'க் கொடுத்திருக்கலாம்!...
எழுந்து வரமுடியாது 'மாட்டிக்கொண்டதாக' உணரும் இடங்களில் வேறு வழி இல்லை என்றாலும் எந்த அளவு மனம் ஒன்றி கதாகாலட்சேபத்தைக் கேட்டிருக்க முடியும் என்றும் கேள்வி வந்தது தமிழும் காலட்சேபம் செய்பவரின் திறமையும் ஈர்த்திருக்க வேண்டும் என்று சமாதானம் செய்து கொண்டேன்!

Geetha Sambasivam said...

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்......... என்ன இது? என்ன இது? கதை எப்போது புதிரானது?

கணவன், மனைவிக்குள்ளான அந்நியோன்னியமான சகஜமான உரையாடல் அருமை.

Shakthiprabha (Prabha Sridhar) said...

சுவையான பகுதி. நவரசத்தில் நிறைய ரசங்கள் தெளிக்கப் பட்டுருக்கு. இதழ் இதழாய் கோஸ் நறுக்குவது, அல்லாவுதீன் டீ புகை என உவமைகளும் , விவரிப்பும் ரொம்ப பிடித்தது.

G.M Balasubramaniam said...

சரிடா, வகையா மாட்டிகிட்டோம்னு நெனைச்சேன்.

"மாட்டிகிட்டோம்னு?"

எஸ். அதான் சரியான உணர்வு எனக்கும் சில நேரங்களில் அப்படித் தோன்றுவதுண்டு.தொடர்கிறேன்

கோமதி அரசு said...

"நல்ல வேளை சொல்லாமப் போனே.." என்று லஷ்மணன் சொன்னது புதிராக இருந்தது ஊர்மிளாவுக்கு. //

லஷ்மணன் பதட்டம் என்னையும் தொற்றிக் கொண்டது, ஏன் விஜி பெயரை சொல்ல வேண்டாம் என்று சொன்னார் லஷ்மணன் என்று.

ஊர்மிளா, லஷ்மணன் உரையாடல் இயல்பாய், அழகாய் இருக்கிறது.
கீதா மேடமும் இதை ரசித்து இருப்பது
எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது.

ஜீவி said...

@ ஸ்ரீராம்

//தமிழும் காலட்சேபம் செய்பவரின் திறமையும் ஈர்த்திருக்க வேண்டும் என்று சமாதானம் செய்து கொண்டேன்!//

கட்டிப் போட்ட கம்பனின் காவிய வரிகள், அதைத் திறம்பட எடுத்துச் சொன்ன தீஷிதரின் திறமை இரண்டும் சேர்ந்து கால்கள் மரத்துப்போனதைக் கூட மறக்கடித்து ஊர்மிளையைக் கட்டிப் போட்டு விட்டது. எந்த அளவுக்கு?.. இன்னொரு கதாகாலட்சேபம் என்றால் தவற விட்டு விடாமல் போய்க் கேட்க வேண்டும் என்று மனத்தில் குறித்துக் கொள்ளும் அளவுக்கு.

//வேறொரு பதிப்பகத்திற்கு விஜி 'பார்வைகளை'க் கொடுத்திருக் கலாம்!... //

இல்லை! லஷ்மணனின் இந்த ஏற்பாடு தான் மேற்கொண்டான கதையை நகர்த்திக் கொண்டு போகிறது.

ஜீவி said...

@ கீதா சாம்பசிவம்

// என்ன இது? என்ன இது? கதை எப்போது புதிரானது?//

புதிர் மாதிரியான ஒரு தோற்றம் தான்! விசேஷ அர்த்தங்கள் கொண்ட நடப்பாக விரியப்போகிறது!

//கணவன், மனைவிக்குள்ளான அந்நியோன்னியமான சகஜமான உரையாடல் அருமை.//

பயந்து கொண்டே தான் எழுதினேன்.. மனசுக்கு இப்போது திருப்தி.

ஜீவி said...

@ Sakthiprabha

தங்கள் ரசனைக்கும், எடுத்துச் சொல்லி ரசித்தமைக்கும் மிக்க நன்றி, ஷக்தி.

ஜீவி said...

@ GMB

1. மாட்டிக்கொள்வதிலிருந்து மீண்டு வரத் தெரிந்திருத்தல்.

2. மாட்டிக் கொண்ட மாதிரி நினைக்காமல் இருத்தல்.

3. மாட்டிக் கொள்ளும் நிர்பந்தங்களைத் தவிர்த்து விடுதல்

4. மனம் விரும்பாவிட்டாலும், இப்படி மாட்டிக் கொள்வதையே பெருமையாக நினைத்து அடிக்கடி மாட்டிக் கொள்ளாமலிருத்தல்.

-- போன்ற உபாயங்களைக் கடை பிடித்தால் ஓரளவு இப்படி மாட்டிக் கொள்வதிலிருந்து தப்பித்து விடலாம்!

//தொடர்கிறேன்//

தொடர்ந்து படித்துவருவதற்கு நன்றி, ஜிஎம்பீ சார்!

ஜீவி said...

@ கோமதி அரசு

பெரியவரிடம் விஜியின் பெயரை ஊர்மிளா சொல்லிவிடக்கூடாது என்று நானும் நினைத்தேன். அதில் எனக்கும் விருப்பம் இல்லாமலிருந் தது.

அதற்காகத் தான் 'கணவனைக் கேட்டுக் கொண்டு சொல்லலாம்' என்று ஊர்மிளா நினைப்பதாக ஒத்திப் போட்டுக் கொண்டு வந்தேன்.

இனிமேலும் எப்படி ஒத்திப் போடுவது என்று நினைத்துக் கொண்டிருக்கை- யில் லஷ்மணனே குறுக்கிட்டு விட்டது இது விஷயத்தில் லஷ்மணனின் பார்வையைச் சொல்ல வசதியாகப் போய்விட்டது!

மேற்கொண்டு என்ன நடக்கிறது என்று பார்க்கலாம்.

//ஊர்மிளா, லஷ்மணன் உரையாடல் இயல்பாய், அழகாய் இருக்கிறது.
கீதா மேடமும் இதை ரசித்து இருப்பது எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது.//

நன்றி, கோமதிம்மா. தங்களிடம் கிடைத்திருக்கும் இந்த பாராட்டு எனக்கும் மகிழ்ச்சியைக் கொடுத்திருக்கிறது.

அப்பாதுரை said...

'மாட்டிக்கொள்வது' இவ்வளவு சுவாரசியமானதென்று தெரியாமல் போனதே? கீழுதட்டில் விரல் சுட்டி, பிரிட்ஜில என்ன இருக்கு பார் - இது மாதிரி பல இடங்களில் homely visuals.
பவானி ஜமக்காளம் என்றால் என்ன? பவானி இடத்தோட பெயரா?

Geetha Sambasivam said...

பவானி ஜமக்காளம் என்றால் என்ன? பவானி இடத்தோட பெயரா?//

Yessssssssssssss

ஜீவி said...

@ அப்பாத்துரை

கீதாம்மா சொல்லிட்டாங்க, அவங்க பாணியில். இருந்தாலும் இன்னும் சில தகவல்கள்.

ஜமக்காள நெசவுக்கு பெயர் பெற்ற ஊர் பவானி. வெளி நாடுகளுக்குக் கூட ஏற்றுமதி செய்யும் அளவுக்கு.

தென்னகத்தின் திரிவேணி சங்கமம் பவானி. மூன்று நதிகள் காவேரி, பவானி, அமுத நதி (மூன்றாவது மட்டும் புலப்படாதது) கலக்கும்
கூடுதுறை பிரச்சித்திப் பெற்றது.
பக்கத்தில் வேதநாயகி உடனுறை சங்கமேஸ்வரர் ஆலயம் பழம் பெருமை வாய்ந்தது. (இராஜ ராஜேஸ்வரி மேடம் இந்த ஆலயம் பற்றி எழுதிவிட்டார்களா தெரியவில்லை)

பவானியைப் பற்றிச் சொல்லும் பொழுது பக்கத்தில் உள்ள குமார பாளையத்தைப் பற்றியும் சொல்ல வேண்டும். குமாரபாளையம் சேலம் மாவட்டம் என்றால் பவானி கோவை மாவட்டம். இரண்டு ஊர்களையும் பிரிப்பது காவிரி. குமாரபாளையம் ரிப்பன் (அந்தக் காலத்தில் குழந்தைகளுக்கு தலைமுடியைப் பிரித்துக் கட்டுவார்களே அது) நெசவுக்குப் பிரசித்தி பெற்ற ஊர்.
இப்பொழுது ரிப்பன் உபயோகம் அருகிப் போய் விட்டதால் என்னவாயிற்று தெரியவில்லை.
இந்த ஊர் அஞ்சலகத்தில் 1962- வாக்கில் பணியாற்றிய பசுமையான நினைவுகள் இன்னும் நெஞ்சில் நிறைய தேங்கிக் கிடக்கின்றன.

ஜீவி said...

@ அப்பாத்துரை

கீதாம்மா சொல்லிட்டாங்க, அவங்க பாணியில். இருந்தாலும் இன்னும் சில தகவல்கள்.

ஜமக்காள நெசவுக்கு பெயர் பெற்ற ஊர் பவானி. வெளி நாடுகளுக்குக் கூட ஏற்றுமதி செய்யும் அளவுக்கு.

தென்னகத்தின் திரிவேணி சங்கமம் பவானி. மூன்று நதிகள் காவேரி, பவானி, அமுத நதி (மூன்றாவது மட்டும் புலப்படாதது) கலக்கும்
கூடுதுறை பிரச்சித்திப் பெற்றது.
பக்கத்தில் வேதநாயகி உடனுறை சங்கமேஸ்வரர் ஆலயம் பழம் பெருமை வாய்ந்தது. (இராஜ ராஜேஸ்வரி மேடம் இந்த ஆலயம் பற்றி எழுதிவிட்டார்களா தெரியவில்லை)

பவானியைப் பற்றிச் சொல்லும் பொழுது பக்கத்தில் உள்ள குமார பாளையத்தைப் பற்றியும் சொல்ல வேண்டும். குமாரபாளையம் சேலம் மாவட்டம் என்றால் பவானி கோவை மாவட்டம். இரண்டு ஊர்களையும் பிரிப்பது காவிரி. குமாரபாளையம் ரிப்பன் (அந்தக் காலத்தில் குழந்தைகளுக்கு தலைமுடியைப் பிரித்துக் கட்டுவார்களே அது) நெசவுக்குப் பிரசித்தி பெற்ற ஊர்.
இப்பொழுது ரிப்பன் உபயோகம் அருகிப் போய் விட்டதால் என்னவாயிற்று தெரியவில்லை.
இந்த ஊர் அஞ்சலகத்தில் 1962- வாக்கில் பணியாற்றிய பசுமையான நினைவுகள் இன்னும் நெஞ்சில் நிறைய தேங்கிக் கிடக்கின்றன.

பாச மலர் / Paasa Malar said...

முதல் பகுதி பார்வை படிக்கும்போது பிரமிப்பாய் உணர்வுமயமான சூழல்...
இந்தப் பகுதி அதையும் தாண்டிய கலவை உணர்வுகளில் மிகவும் ரம்மியமாய்....

தம்பதிகள் நெருக்கம் இயல்பாய் வந்துள்ளது..நீங்கள் குறிப்பிட்டது போல் பயத்தில் கொஞ்சம் அடக்கி வாசித்திருந்தாலும்...

ஆகா..அடுத்த பகுதியும் வந்தாச்சு...இதோ வருகிறேன்...

dondu(#11168674346665545885) said...

//கங்கைலேயா?.. பகீரதன்னு பேரு. 'கல்கி'க்கு பிடிச்சமானவர். 'கல்கி'லேயும் துணையாசிரியரா இருந்திருக்கார். அவர் நடத்தின பத்திரிகை 'கங்கை'. சரியான ஆசாமிங்க. தன் புனைப்பெயருக்கு ஏத்த மாதிரி பத்திரிகை பேரையும் இந்த பகீரதன் எப்படி செலக்ட் செஞ்சிருக்கார், பாரு!"//
அடேடே ஆமாம், எனக்கும் அது அப்போது தோன்றவில்லையே. பகீரதனின் வட இந்திய யாத்திரை தொடராக கல்கி அவர்கள் இறந்தபிறகு சமீபத்தில் 1955-ல் வந்தது. அக்காலகட்டத்தில் வாராவாரம் படித்திருக்கிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

ஜீவி said...

@ Dondu

பகீரதன் மறக்க முடியாதவர். சுதந்திர போராட்ட வீரர். சன்மார்க்கத் தொண்டர். முதலில், 'கங்கை' என்று பெயர் கொண்ட அவர் பத்திரிகை பின்னர் 'சத்ய கங்கை' ஆயிற்று.

பொள்ளாச்சி மஹாலிங்கம் அவர்கள் ஆதரவில் வெளிவந்த "ஓம் சக்தி" மாத இதழுக்கு ஆசிரியராகவும் பல ஆண்டுகள் இருந்திருக்கிறார்.

உங்களுக்காகவே ஒரு முக்கியமான விஷயம். பகீரதனின் நாவல் 'தேன் மொழியாள்' நாடகமாயிற்று. அதில் நகைச்சுவையை வாரி வழங்கிய நாடக பாத்திரத்திற்குப் பெயர், "சோ"!
அந்த பாத்திரத்தை ஏற்று நடித்தவரின் நடிப்புச் சிறப்பினால், நாளாவட்டத்தில் அந்தப் பெயராலேயே அந்த நடிகரும் அழைக்கப்படலானார்.. பிற்காலத்தில் தமிழகத்தின் அற்புத பத்திரிகையின் ஆசிரியராகவும் அவர் ஆனார்!

Related Posts with Thumbnails