மின் நூல்

Tuesday, November 15, 2011

பார்வை (பகுதி-11)

                        அத்தியாயம்--11
ங்கு-- தம்பி வீட்டிற்கு-- வந்து நாலு நாளுக்கு மேலாகி விட்டது. கடந்து சென்ற இந்த நாலு நாளில், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மாதிரி. எனக்குத் தான் கொட்டு கொட்டென்று உட்கார்ந்திருக்க மிகவும் சிரமமாக இருந்தது. போதாக்குறைக்கு என்னை மாதிரி வெறுமனே உட்கார்ந்திருக்கிற இன்னொரு ஜீவன் வேறே. தம்பி சம்சாரத்தின் அம்மாவைத் தான் சொல்கிறேன்.

'என்ன, ஏது'ன்னு எங்கிட்டே யாராவது கேட்டால் தான் என் மனசிலிருப்பதைப் பதிலாகச் சொல்வது என் வழக்கம். ஆனால் விஸ்வநாதனின் மாமியார் அப்படி இல்லை என்று தெரிந்தது. தனக்குச் சம்பந்தம் இருக்கிறதோ இல்லையோ வீட்டில் நடக்கிற அத்தனை விஷயங்களும் அவங்களுக்குத் தெரிஞ்சாகணும். 'என்னடி அம்மா, ஏது'ன்னு எல்லாத்தையும் கேட்டுத் தெரிஞ்ச்சிக்கலைன்னா அவங்க மண்டை வெடிச்சிடும். நேற்று பூரா சுசீலாவைப் பற்றி, எனக்குப் பார்வை போனது பற்றி என்று எல்லாவற்றையும் சுசீலாவிடம் கேட்டுத் தொணதொண த்துக் கொண்டே இருந்தார்கள். சிலருக்கு சில விஷயங்களை அனுதாபத்தோடு சொல்லவும் தெரியவில்லை, கேட்கவும் தெரியவில்லை என்று அவர்கள் பேசியதிலிருந்து புரிந்தது. எந்நேரமும் 'லொட்டு, லொட்டு'ன்னு சின்ன உரலில் பாக்கு இடிக்கற சப்தம் தான் அவங்க எங்கே இருக்காங்கன்னு காட்டிக் கொடுக்கும்.

வந்தவர்கள் விருந்தாளி மாதிரி உட்கார்ந்து கொண்டு, எல்லாருக்கும் பொங்கிப் போடும் வேலையை தேவியிடம் மட்டும் சுமத்த சுசீலாவால் முடியவில்லை. சுசீலா என்று மட்டும் இல்லை, எல்லாப் பெண்களின் இயல்பும் அது தான். சமையல் அறைங்கறது அவங்க இடம் மாதிரி; ஒண்டியாக ஒருத்தர் மட்டும் மல்லாடுவதற்கு விட்டு விடமாட்டார்கள். இது தெரிந்து சுசீலா கூட மாட தேவிக்கு ஒத்தாசை செய்வதை அங்கீகரிக்கற எண்ணமே என்னில் படிந்திருந்தது. அதனால் சுசீலாவை எதிர்ப்பார்ப்பதான எனது தேவைகள் பலவற்றைக் குறைத்துக் கொண்டேன். இதனால் தட்டுத்தடுமாறி எனக்கு நானே என்று ஆனதில் இன்னும் கொஞ்சம் தன்னம்பிக்கைக் கூடியது என்பதையும் சொல்லத்தான் வேண்டும்.

மாடியில் தான் விஸ்வநாதனின் தனி அறை இருந்தது. முந்தாநாள் கைபிடித்து மாடிக்கு அழைத்துப் போனான். நாலாபக்கமும் ஜன்னல்கள் போலிருக்கு. காத்து பிச்சிண்டு போனது. என்னை ஈஸிச்சேரில் அமர வைத்து தானும் என் காலடியில் அமர்ந்து கொண்டான். "முன்பெல்லாம் அடிக்கடி கால் வலிக்கிறது என்பீர்களே, அண்ணா? இப்போ எப்படியிருக்கு?" என்று கேட்டபடியே லேசாக அமுக்கிற மாதிரி என் காலைப் பிடித்து விட்டான். 'இப்போ அந்த வலி மார்புக்கு வந்து விட்டது' என்று சொல்லவில்லை; அதற்கு பதில், "இப்போ அதெல்லாம் போயே போச்சு. ஏன் கீழே உக்காந்துட்டே?.. ஒரு சேர் போட்டு பக்கத்தலே உக்காந்துக்கறது தானே?" என்றேன். "பரவாயில்லேண்ணா! இதான் வசதியாயிருக்கு.." என்று சொல்லிச் சிரித்தான். அவனை விட அஞ்சே வயசுப் பெரியவன் நான். எந்த நேரத்திலும் சரிசமமாக எனக்கு எதிர்த்தாற் போல் அவன் அமர்ந்து நான் பார்த்ததில்லை. நின்னுண்டே பேசுவான்; இல்லைனா 'படக்'னு தரைலே உக்காந்திடுவான்.

"அண்ணா.. திருவையாறிலே நாமல்லாம் ஒண்ணா இருக்கும் போது திடீர்ன்னு ஒரு நாள் ஊரை விட்டேப் போயிட்டேனே, எங்கே போனேன்னு நீங்க கேக்கவே இல்லையே?" என்றான்.

"நீயே சொல்லுவேன்னு இருந்தேன்" என்றேன்.

"ஆமாண்ணா.. நானேத் தான் சொல்லணும். ஆனா என்னாலே உங்களுக்கு இப்படி ஆன குற்ற உணர்ச்சியை என்னாலே தாங்கிக்கவே முடிலே, அண்ணா.. இப்படிலாம் நடக்கறத்துக்கு நான் என்ன பாவம் செஞ்சேன்னு தெரிலே அண்ணா.." என்றவன் குரல் தழுதழுத்தது.

அவன் கலங்குவதை உணர்ந்ததும் துடித்துப் போய்விட்டேன்.. "விஸ்வநாதா..
இதோ கொஞ்சம் என் பக்கத்தில் வா.." என்று அழைத்து கைநீட்டித் துளாவி அவன் தோள் பாகம் கைக்குப் பட்டதும் லேசாகத் தட்டி ஆறுதல் அளித்தேன். "இப்போ நான் ஒண்ணு சொல்லுவேன். அதை நன்னா மனசிலே வாங்கிக்கணும், என்ன?" என்றேன்.

"சரிண்ணா..."

"யாருக்கு எது நடக்கறத்தும் யாரும் காரணமில்லை. அதை முதல்லே நீ தெரிஞ்சிக்கணும். இப்படி நடக்கணும், கொஞ்ச காலத்தை இப்படிக் கழிக்கணும்னு எனக்கு இருந்திருக்கு. அதனால் அது நடந்திருக்கே தவிர, அதுக்கு நீ காரணமில்லை. நீ காரணம்னு நெனைச்சையானா, வாழ்நாள் பூரா அந்த குற்ற உணர்வு உன்னை உறுத்திண்ட்டே இருக்கும். அப்படியான ஒரு அவஸ்தை விலங்கை உனக்கு நீயே பூட்டிக்கக் கூடாது. அதுக்காகச் சொல்றேன்."

"அதுக்காகத் தானே சொல்றீங்க, அண்ணா.. ஆனா, நான் ஓடிப்போனதாலே தானே, என்னைத் தேடித் திரிய வேண்டியதாயிற்று உங்களுக்கு. என் மேலே அத்தனை பாசம் வைச்சிருந்ததாலே தானே, வேறே யாரோ விஸ்வநாதனை யாரோ கூப்பிடப் போக... ம்.. எல்லாத்தையும் அண்ணி சொல்லிக் கேட்க, எனக்குத் தாங்கலை."

கை நீட்டி அவன் வாயைப் பொத்தினேன். "திருப்பித் திருப்பி அதையே சொல்லாதே. இதெல்லாம் நடக்கணும்னுட்டு... நேத்திக்கு மத்தியானம் இதைப் பத்தித்தான் யோசிச்சிண்டிருந்தேன். எனக்குத் தோணினதைச் சொல்றேன், கேளு. கேட்டால் எதுக்கும் யாரும் காரணமில்லேன்னு நான் சொல்றது உனக்குப் புரியும்.."ன்னு சொல்லிட்டுக் கொஞ்சம் நிதானிச்சு நேற்று யோசித்துத் தெளிந்ததை ஞாபகப்படுத்திக் கொண்டேன்.

"எதை நினைக்கறச்சே எது ஞாபகத்துக்கு வந்திருக்கு, பாரு! இது இராமயணத்திலே வர்ற ஒரு கிளைக் கதை தான். உனக்குக்கூடத் தெரிஞ்சிருக்கலாம்"ன்னு சொன்னவன் கொஞ்சம் நிதானிச்சுதுத் தொடர்ந்தேன். "எனக்கு இப்போலாம் காதுங்கற சமாச்சாரம் ரொம்ப தீட்சண்யமாயிடுத்து.. கண்ணுங்கறது நன்னா இருக்கறச்சே, ஒருத்தர் சொல்றதை இன்னொருத்தர் கேக்கறத்துக்கு மட்டும் தான் இறைவன் இந்தக் காதுகளை நமக்கு வழங்கியிருக்கிறான்ன்னு நெனைச்சிப்பேன். இப்போ என்னடான்னா, கண் பார்வை போன பிறகு அதன் வேலையையும் சேர்த்துக் காது செய்யறது புரிஞ்சது. எஸ். ஓரளவு பாத்துத் தெரிஞ்சிக்கற மாதிரி, இந்தக் காதால் கேட்டுத் தெரிஞ்சிக்கவும் முடியறது.." என்றவன் மூச்சை இழுத்து உள்வாங்கிக் கொண்டு சொல்ல ஆரம்பித்தேன். "விஸ்வநாதா.. இந்தக் காதுகளின் மகாத்மியத்தை நினைக்கறச்சே தான் அந்தக் கதையும் கூடவே ஞாபகத்துக்கு வந்தது. சிரவண குமாரன்னு ஒரு சின்னப் பையன். அவன் மூப்படைஞ்ச கண் போன தன் தாய்-தந்தையை காவடி மாதிரியான ஒரு ஏணையில் தூக்கிக்கிண்டுப் போறான். ஒரு ஆற்றங்கரை பக்கம் போகைலே குடிக்க தண்ணி கேட்ட பெத்தவங்களோட தாக சாந்திக்காக அவங்களைக் கீழே இறக்கிட்டு ஆத்திலே தண்ணீர் மொண்டு வர குவளை மாதிரி ஒரு பாத்திரத்தை எடுத்திண்டு நீர் இருக்கற இடத்துக்குப் போறான்.."ன்னு சொல்லிண்டு வந்தவன், "உனக்குக் கூட அந்தக் கதை தெரிஞ்சிருக்கலாம்" என்று சொல்லி நிறுத்தினேன்.

"தெரியும் அண்ணா. இருந்தாலும் நீங்க சொல்லி அதைக் கேக்கறது ஒரு அனுபவம். அதுவும் தவிர, இந்தக் கதையை எப்படி நீங்கள் காதைப் பத்திச் சொல்ல வந்த விஷயத்தோடு இணைக்கிறீர்கள்ன்னு தெரிஞ்சிக்க ஆசை"ன்னான் விஸ்வநாதன்.

தம்பி சொன்னதைக் கேட்டு குலுங்கிக் குலுங்கிச் சிரிச்சேன். "எது ஒண்ணையும் இன்னொருத்தர் சொல்லிக் கேக்கறதிலே சின்ன வயசிலேந்தே உனக்கு ரொம்ப இஷ்டம். விஸ்வநாதா! நீ கொஞ்சம் கூட மாறவே இல்லைடா.. அப்படியே இருக்கே.." என்று அவன் தோள் தொட்டுத் தட்டிப் பாராட்டி விட்டு,"இப்படி கதை சொல்லிக் கேட்க தயாரா இருக்கறவங்களைப் பாத்து யாருக்குத் தான் கதை சொல்லத் தோணாது?"ன்னு கேட்டுட்டுத் தொடர்ந்தேன்."சிரவண குமாரன் ஆற்றிலே நீர் மொள்ற சப்தத்தை அந்தப்பக்கம் வேட்டையாட வந்த தசரதன் கேட்டு, மான் தான் நீர் அருந்துகிறது போலும்ன்னு தவறா நினைச்சு அந்த மானை வீழ்த்த சப்தம் வந்த திசையை நோக்கி அம்பை எய்ய... விஸ்வநாதா! ஒண்ணு மட்டும் நிச்சயம்ப்பா.. தசரதன் கண்ணால்அந்தச் சிறுவனைப் பார்த்திருந்தா, நிச்சயம் அந்தச் சிறுவனுக்கு நீர் மொள்ள உதவி செஞ்சு, அவனோட பெற்றோரைத் தான் தூக்கிண்டு அவங்க சேருமிடம் கொண்டு போய் சேர்ப்பித்திருப்பான். ஆனா, அந்தக் கொடுப்பினை அவனுக்கு இல்லை. ஒண்ணு தெரியறது பாரு.. இந்தக் கதைலே தசரதனோட காதுங்க தான் அவனோட கண்களா செயல்பட்டிருக்கு.. சாதாரணமா கண்ணால பாத்துத்தானே குறி வைச்சு அம்பை எய்வாங்க? ஆனா தசரதனோ, அந்த ஒலியைக் கேட்ட வாக்கில் அம்பை எய்ய, சிரவண குமாரனின் மேல் அது பாய்ஞ்சு அவன் 'ஐயோ'ன்னு அலறப் பதறி அந்த இடத்துக்கு பாய்ஞ்சு போறான் தசரதன். எதுக்குச் சொல்ல வந்தேன்னா, தசரதன் மாதிரி, காதுங்க தான் எனக்குக் கண்ணாயிடுச்சோன்னு நினைச்சிண்டேன். அது போகட்டும். விஷயத்திற்கு வருவோம்.. தசரதன் தெரிஞ்சு எந்தப் பாவமும் செய்யலே; ஆனா மான்னு நெனைச்சு அவன் எஞ்ச அம்பு சிரவணக் குமரனின் உயிரை மாய்ச்சுடுத்து. அதே நேரத்திலே, அன்னிக்கு அந்தப் பெரியவங்க இட்ட சாபத்தினால, பின்னாடி மகனைப் பிரிஞ்சு காட்டுக்கு அனுப்ப வேண்டியதாச்சு.. அதனால எதனால எந்த காரியம் எதுக்காக நடக்கிறதுங்கறது தெரியலே.. நம்மளை அறியாம நடந்த எதுக்கும் இதனால தான் இது நடந்ததுன்னு நம்ம போக்கில் எதுவும் சொல்றத்துக்குமில்லே"ன்னு சொன்னேன்.

"நல்லக்கதை, நல்ல நீதி!" என்று பெருமூச்செறிந்தான் விஸ்வநாதன். கொஞ்ச நேரம் அவன் எதுவும் பேசவே இல்லை. எதையோ சொல்றத்துக்காகத் தான் தயங்கறான்னு எனக்குப் பட்டது.

பாவம், படார்னு எதையும் சொல்லித் தெரியாத பக்குவம். அதான் அவனை அவஸ்தைப்படுத்தறதுன்னு தெரிஞ்சிண்டேன். அவன் தயக்கத்தைப் போக்கறத்துக்காக "அப்புறம், நீ எங்கேலாம் போனே? என்னலாம் நடந்தது?"ன்னு நானே ஆரம்பிச்சு வைச்சேன்.

வாய்க்கால் வெட்டி வழிபண்ணினதும் தேங்கியிருக்கற தண்ணீர் குபுக்னு பாயற மாதிரி, விஸ்வநாதன் சொல்ல ஆரம்பித்தான்.


(இன்னும் வரும்)








12 comments:

ஸ்ரீராம். said...

இரண்டாவது பாரா விவரணைகள் - அனுபவித்து ரசித்தேன். ஏன் மூன்றாவதும் கூட. புராணங்களில் வலியுறுத்தப் படும் 'எல்லாச் செயலுக்கும் ஏதோ ஒரு முன் வினை அல்லது முன்னர் செய்த செயல் காரணமாய் இருக்கிறது' என்பதைப் பற்றி சமீபத்தில் நானும் வீட்டில் பேசிக் கொண்டிருந்தது நினைவுக்கு வருகிறது. இப்போது செய்யும், நினைக்கும் செயல்களுக்கும் பின்னர் விளைவு வரும் என்பதைப் பேசிக் கொண்டிருந்தோம்! ஒரு வழியாய் விசுவைத் தூண்டி பேச வைத்தாயிற்று.

Geetha Sambasivam said...

ராமாயணம் முழுதுமே முன்வினை அல்லது முன் செய்த செயலின் காரணங்களே. இது குறித்து என்னுடைய ராமாயணப் பதிவுகளில் நிறைய நிகழ்வுகளைக்காணலாம். நம் வாழ்க்கையின் நிகழ்வுகளும் அப்படித்தான். காரணமில்லாமல் எந்தக் காரியமும் இல்லை;

இனிமேல் தான் முக்கிய விஷயமே வரப் போறதோ?

கோமதி அரசு said...

வாய்க்கால் வெட்டி வழிபண்ணினதும் தேங்கியிருக்கற தண்ணீர் குபுக்னு பாயற மாதிரி, விஸ்வநாதன் சொல்ல ஆரம்பித்தான்.//

மடை திறந்த வெள்ளம் போல் விசு பேச ஆரம்பித்து விட்டார்.

நாங்களும் ஆர்வமாய் இருக்கிறோம் கேட்க காதுகளை தீட்டிக்கொண்டு.

கோமதி அரசு said...

"யாருக்கு எது நடக்கறத்தும் யாரும் காரணமில்லை. அதை முதல்லே நீ தெரிஞ்சிக்கணும். இப்படி நடக்கணும், கொஞ்ச காலத்தை இப்படிக் கழிக்கணும்னு எனக்கு இருந்திருக்கு. அதனால் அது நடந்திருக்கே தவிர, அதுக்கு நீ காரணமில்லை. நீ காரணம்னு நெனைச்சையானா, வாழ்நாள் பூரா அந்த குற்ற உணர்வு உன்னை உறுத்திண்ட்டே இருக்கும். அப்படியான ஒரு அவஸ்தை விலங்கை உனக்கு நீயே பூட்டிக்கக் கூடாது. அதுக்காகச் சொல்றேன்."//

இப்படித்தான் நடக்க வேண்டும் என்று மேலே உள்ளவன் நினைத்து விட்டால் அப்படித்தானே நடக்கும் அதற்கு யாரும் யாரும் காரணம் ஆக முடியாது என்பது உண்மை. சரியாக சொன்னீர்கள்.

G.M Balasubramaniam said...

அண்ணன் தம்பி குடும்பத்துடன் சேர்ந்தாகி விட்டது. பிரிந்து போன தம்பி பெரிய வயலின் வித்வான், ஏதோ காரணத்துக்காகவோ , காரணமில்லாமலோ காணாமல் போய்விட்டார். அவர் அண்ணனைத் தேடி ஏன் வரவில்லை என்று கருத்திட்டிருந்தேன். அவன் வந்ததை நான் கவனிக்கவில்லை போலும் என்று எழுதியிருந்தீர்கள். அவர் வந்தது இவர் நினைவில் என்றால் சரி.என்னுள்ளே எங்கோ நெருடுகிறதே. தொடர்ந்து படிக்கிறேன் ( is there any catch anywhere.?)

Shakthiprabha (Prabha Sridhar) said...

ஒரு புலன் எப்படி இன்னொன்றின் இல்லாமையை நிரப்புகிறது என்ற விவரிப்பு ரொம்ப அருமை.

ஜீவி said...

@ ஸ்ரீராம்

இந்திய தத்துவச் சிந்தனைகள் என்பது எல்லா எண்ணப் போக்குக்களுக்கும் வழிவிட்டு வழி காண்பது. அதனால் அது ஒப்பில்லாத உயர்விலிருக்கிறது.

விஸ்வநாதனை விசுவாகச் சுருக்கியதும் அவர் வேறொருவர் மாதிரி எனக்குத் தோன்றியது. நீங்களே அந்த இரண்டு பெயர்களை யும் உள்வாங்கி உங்களுக்குள் சொல்லிப் பாருங்கள். நீங்களே அந்த வேறுபாட்டை உணரலாம்.

விஸ்வநாதனின் அனுபவங்கள் எக்கச்சக்கம். அந்த அனுபவங்களை அடைவதற்குத் தான் அவர் ஊர் விட்டு போக நேர்ந்ததோ என்னவோ! எந்த அனுபவமும் வேஸ்ட் அல்ல; அவை தான் உள்ளத்தின் வளர்ச்சிக்கு உரமே. அடையும் அனுபவங்களை விட அவற்றை எப்படி எடுத்துக் கொள்கிறோம் என்பதே முக்கியமாகப் படுகிறது. பார்க்கலாம்.

பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி, ஸ்ரீராம்!

.

ஜீவி said...

@ கீதா சாம்பசிவம்

எனக்கென்னடாவென்றால், தற்சமயம் அமெரிக்காவில் இவ்வளவு எளிமையாக அதே நேரத்தில் விஷயச் செரிவோடு எப்படி அந்த 'ஸ்ரீசக்ரராஜ சிம்மாசனே ஸ்வரி' பற்றி எழுதுகிறீர்கள் என்று ஆச்சரியம். வீரை ராஜகவிராயர் உங்கள் மூலம் தான் அறிமுகம். அதற்கு நன்றி. அவரைப் பற்றித் தகவல்களைத் திரட்டிக் கொண்டிருக்கிறேன்.

இனிமேல் விஸ்வநாதனின், திருவையாறு விட்டு அவர் போன பின்னான அவரது வாழ்க்கை அமைந்த விதம் பற்றி வரப்போகின்றன. அதெல்லாம் அவரைப் பொருத்த மட்டில் மிகவும் முக்கியமானவையே.

தொடர் வருகைக்கு நன்றி,கீதாம்மா.

ஜீவி said...

@ கோமதி அரசு

தங்கள் ஆர்வத்திற்கு நன்றி, கோமதிம்மா.

நம் பார்வைக்குத் தெரியும் நிகழ்ச்சிகள் அல்லாது தெரியாததும் இருக்கின்றன அல்லவா?.. அவரவருக்கும் தெரியாததும் நிறைய உண்டு. எந்த நிகழ்வுக்கும் விளைவுகள் உண்டு. அதனால் தான் பல 'இது எதனால் என்று தெரியாமலிருக்கிறது.

நல்ல கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளும் தங்களுக்கு நன்றி.

ஜீவி said...

@ G.M.B.

"ஆமாம். ஹி இஸ் ஜெம்! எல்லாக் கதையும் கேட்டு விக்கித்துப் போயிட்டார். ரிகர்சல் ஹாலில் இருக்கவே இருப்புக் கொள்ளவில்லை அவருக்கு. உடனே உங்களைப் பார்க்க வேண்டுமென்று துடியாச் துடிச்சார். எங்களுடன் வந்து இதே இடத்தில் உங்களைப் பார்த்ததும் தான் ஒரு நிலைக்கு வந்தார். உடனே உங்களையும் சுசீலாவையும் தன்னுடன் அழைத்துப் போக விரும்பினார். ஆனால், நான் தான் இப்போ வேண்டாம். நானே பக்குவமாக எல்லாவற்றையும் சொல்லி அவரைக் கூட்டி வருகிறேன், என்றேன்.

-- இது 'பார்வை' 9-ம் பக்தியில் டாக்டர் சாந்தி சொல்வதாக வரும் இடம். அப்பொழுது தான் விஸ்வநாதன் மருத்துமனையில் தன் அண்ணனைப் பார்த்தது. அதனால், அந்தக் குறிப்பிட்ட இடத்தைத் தாங்கள் படிக்கவில்லையோ என்று கருதிச் சொல்லியிருந்தேன்.

இப்போ, சரியா?..

தங்கள் தொடர் வருகைக்கு நன்றி, ஜிஎம்பி சார்!

ஜீவி said...

@ G.M.B.

'பார்வை' 9-ம் பகுதியில் என்று திருத்தி வாசித்துக் கொள்ள வேண்டுகிறேன்.

dondu(#11168674346665545885) said...

சிரவணகுமாரன் கதையில் இன்னொரு விஷயமும் கேள்விப்பட்டிருக்கிறேன். தசரதருக்கு புத்திர சோகத்தை சாபமாகத் தந்த ரிஷி அதற்காக வருந்த, தசரதரோ, தனக்கு குழந்தையே பிறக்காது என சஞ்சலப்பட்ட தனக்கு புத்திரன் பிறப்பான் என்பதே சந்தோஷம்தான் எனக்கூறி அவரை சமாதானப்படுத்தினாராம்.

அதானே புத்திர சோகம் பெற முதலி புத்திரனை பெற வேண்டும் அல்லவா?

அன்புடன்,
டோண்டு ராகவன்

Related Posts with Thumbnails