மின் நூல்

Friday, November 11, 2011

பார்வை (பகுதி-10)

                       அத்தியாயம்--10
'சடக்'கென்று கார் நின்று விட்டது. தம்பியின் வீடு வந்து விட்டதாக்கும் என்று நினைத்துக் கொண்டேன்.

"போச்சுடா.. கூட்ஸ் ட்ரையின் போலிருக்கு.. எப்போ வந்து, எப்போ கேட்டைத் திறக்கப் போறானோ?" என்று டாக்டர் சாந்தி லேசான சலிப்பில் சொன்னதும், ரெயில்வே கேட் அடைத்திருப்பதால் கார் நின்றிருக்கிறது என்று தெரிந்து கொண்டேன்.

"அங்கிள்! இன்னும் அஞ்சே நிமிஷம் தான். இந்த ரயில்வே கேட்டைத் தாண்டி வரும் மெயின் ரோடில் வலது பக்கம் திரும்பினால் நாலாவது வீடு என்று விஸ்வநாதன் சொல்லியிருக்கிறார்" என்றார் டாக்டர் சாந்தி.

"சரி. டாக்டர்.."

"இன்னொரு தடவை சொல்றத்துக்கு மன்னிக்கணும். அவரைப் பார்த்தவுடனே-- சாரி, உங்களை உங்க தம்பி பார்த்தவுடனே கொஞ்சம் நெர்வஸ் ஆகலாம். முன்னாடியே ஒரு தடவை உங்களை இப்படிப் பார்த்திட்டார் இல்லையா, இது இரண்டாவது தடவை.. இருந்தாலும் கொஞ்சம் அதிகமாகவே அவர் சஞ்சலப் படலாம். பட், நீங்க தம்பியின் நெருக்கத்தில் நெகிழ்ந்திடக் கூடாது. பல வருஷம் கழிச்சு தம்பியோட அருகாமை கிடைக்கப் போறது.. கட்டுப்படுத்த முடியாது; வாஸ்தவம் தான். இருந்தாலும் நீங்க எதுவும் உங்களைப் பாதிக்காத மாதிரி நடந்திக்கணும். என்ன, சரியா?"

எந்த சலனமும் இல்லாமல், "சரி, டாக்டர்.." என்றேன்.

'குட்.." என்று டாக்டர் சொல்லவும், 'கூ..' என்று கூவிக்கொண்டே கூட்ஸ் ட்ரையின் 'தடக், தடக்' என்று தடதடத்து கடக்கும் ஓசை கேட்கவும் சரியாக இருந்தது.

நிறைய போகிகள் போலிருக்கு... மனசுக்குள் ஒவ்வொரு 'தடக்'குக்கும் ஒன்றாக உத்தேசமாக எண்ணி கொண்டு வந்தேன். நாற்பதைத் தாண்டியது.

'கேட்' திறந்தாச்சு போலிருக்கு. இத்தனை நேரம் காத்துக் கிடந்த வண்டிகளுக்குக் கிளம்பும் அவசரம். ஹார்ன் ஒலிகள் கர்ண கடூரமாக இருந்தன.

டாக்டரும் வண்டியை எடுத்து விட்டார். லைன் தாண்டினதும் 'சில்'லென்ற காற்று மனசை லேசாக வருடியது. அந்த திருப்பம் வந்ததும், சுசீலா என் இடது கை மணிக் கட்டை இறுகப் பற்றினாள். "உங்களை நீங்க தான் பாத்துக்கணும்"ன்னு கிசுகிசுப்பாக அவள் சொன்னதும், "என்னைப் பாத்துக்க நீ தான் இருக்கையே!" என்று சொல்லிச் சிரித்தேன். தம்பியைப் பார்க்கப் போகிறோம் என்கிற குஷி மூட் கிளம்பும் போதே வந்து விட்டது என்று சுசீலாக்கும் தெரியும்.

அதற்குள் ஒரு திரும்பு திரும்பி லேசாகக் குலுங்கி வண்டி நின்று விட்டது. வீடு வந்தாச்சு போலிருக்கு.

கதவு திறந்து சுசீலா இறங்கி விட்டாள் என்று உணர்ந்தேன். தம்பி வீட்டில் டாக்டரை மரியாதையுடன் உபசரிக்க வேண்டுமே என்று திடீரென்று மனசில் ஒரு எதிர்பார்ப்பு!

அதற்குள்,"தேவி! தேவி! எங்கே போயிட்டே?.. அண்ணன்லாம் வந்தாச்சு, பாரு!" என்று தம்பியின் குரலும், தடதடத்து வாசல் கதவு திறக்கும் ஓசையும் இங்கு எனக்குக் கேட்டது. என் காதுகள் எப்படி இப்படி ஷார்ப் ஆனது என்று எனக்கே ஆச்சரியமாய் இருந்தது.

"வாங்க.. மெதுவா பாத்து இறங்குங்க.." என்று சுசீலா என் கைபற்றி வண்டியிலிருந்து இறங்குவதற்கு உதவி செய்தாள். "சுசீலா.. டாக்டர்.."

"அவங்க இறங்கி முன்னாடி போய்க்கிட்டு இருக்காங்க.."

அதற்குள், "வாங்க, டாக்டர்.. வரணும்.. வரணும்.."ன்னு தம்பியின் குரல் கேட்டது. அடுத்த வினாடியே, "அண்ணா.." என்று என்னை அணைத்துக் கொண்ட அவன் புஜத்தை இறுகப் பற்றிக் கொண்டேன். அஜானுபாகுவாக அவன் இருப்பதாக மனதுக்குப் பட்டது. "நல்லாயிருக்கையா, தம்பீ?" என்று கம்மிப் போன என் குரல், எனக்கே வேறே யாரோ அப்படிக் கேட்பது போல இருந்தது.

"நல்லாயிருக்கேன், அண்ணா.. வாங்க, வாங்க, வீட்டுக்குள்ளாறப் போகலாம்.. அண்ணி வாங்க, வாங்க..."

"வாங்க.. வாங்க.." என்று கீச்சுக் குரலாய் ஒரு பெண்ணின் குரல் கேட்டது. குரலில் மரியாதை தெரிந்தாலும் பேசியது வேற்று மொழிக்காரர்கள் உச்சரிப்பில் இருந்தது வெளிப்படையாகத் தெரிந்தது. தம்பி சம்சாரம் போலும்.

"படிங்க.. பாத்து.." என்று சுசீலா என் கை பற்றி வெகு ஜாக்கிரதையாக வீட்டினுள் அழைத்துப் போனாள்.

விஸ்வநாதன் பரபரப்பில் இருப்பதாகப் பட்டது. 'டாக்டர்! அவனைக் கொஞ்சம் அமைதியாக இருக்கச் சொல்லுங்கள்' என்று சொல்லலாம் போலிருந்தது.

"யாருங்க! மாப்பிளையோட அண்ணனுங்களா?" என்று இன்னொரு பெண் குரல். "ஆமாம்மா.. அவரோட அண்ணன் வந்திருக்காரு.." என்று முதலில் பேசிய கீச்சுக் குரல். ஆக, விஸ்வநாதனின் மாமியாரும் அவன் வீட்டிலேயே இருப்பதாகப் புரிந்து கொண்டேன்.

விஸ்வநாதன் உள்ளே நுழைந்த பொழுது பற்றிய என் கையை விடவே இல்லை. எனக்கும் அவன் கையை விட மனமில்லை. இரு நதியாய்ப் பிரிந்த ஒரு தாய் இரத்தத்திற்கு கனக்ட்டிவிட்டி கிடைத்த உணர்வு. என்னை அப்படியே தாங்கலாகக் கூட்டி வந்து ஒரு மர நாற்காலியில் விஸ்வநாதன் அமர வைத்தான். "டாக்டர், நின்று கொண்டே இருக்கிறீர்களே, நீங்களும் இப்படி உட்காருங்கள்!" என்று அவன் சொன்னது கேட்டது.

"தேவி, வா.. சங்கரி எங்கே?.. பக்கத்து வீட்டுக்கு விளையாடப் போயிருக்காளா? அவளைக் கூட்டிவா.. எல்லாரும் அண்ணனுக்கு நமஸ்காரம் செய்யணும்.." என்று விஸ்வநாதன் உத்திரவிட்டான்.

"இதோ.." என்று தேவியின் கீச்சுக்குரல் கேட்டது. பெண்ணைக் கூட்டி வரப் போகிறாள் போலும்.

"அண்ணி! இப்படிப் பாய்லே உட்காருங்க, அண்ணி.. ஒரு நிமிஷம்.. இதோ அவங்களும் வந்தாச்சு.. நீங்களும் இப்படி வந்து அண்ணன் பக்கத்லே நில்லுங்க, அண்ணி" என்று விஸ்வநாதன் ஏக குஷியில் இருந்தான். "இப்படி அண்ணி, இதான் கிழக்கு.. அண்ணா! தேவி, சங்கரி, நான் எல்லாம் நமஸ்காரம் செய்யறோம்.. ஆசிர்வதிங்க, அண்ணா!" என்று கேட்டுக் கொண்ட அடுத்த வினாடி, என் கால் விரல் பகுதியில் விஸ்வநாதன் கைவிரல்கள் பட்ட உணர்வில் உடல் சிலிர்த்தது.

"தீர்க்காயுசா, நோய் நொடியில்லாம எல்லாரும் ஆரோக்கியத்தோட இருங்க!" என்று ஆசிர்வதித்த பொழுது, " நம்ப அப்பாவும் இப்படித்தானே அண்ணாஆசிர்வதிப்பார்?" என்று விஸ்வநாதன் கேட்ட போது, அப்படியே கை நீட்டி அவனைத் தழுவத் துடித்தேன். டாக்டர் சாந்தியின் கட்டளை நினைவுக்கு வந்து உணர்வுகளை அடக்கிக் கொள்வதற்கு ரொம்ப சிரமப்பட்டுப் போனேன். விஸ்வநாதன் அவன் பெண் சங்கரியின் கையை என் கைக்குள் வைத்து, "என் பொண் சங்கரிண்ணா.." என்றான். "அப்படியா! ரொம்ப சந்தோஷம்.." என்று அவளை அணைத்துக் கொண்டேன். குழந்தையே இல்லாத எனக்கும் ஆண்டவன் இப்போ ஒரு குழந்தையைக் கொடுத்திருக்கிறானே என்று மனசு மலர்ந்தது.

ஒருவாறு என்னை சமனப்படுத்திக் கொண்டு, "விஸ்வநாதா! டாக்டர் அம்மா இல்லைன்னா நான் இல்லேப்பா.." என்று சுருக்கமாகச் சொன்னேன்.

"அவர் அப்படித்தான் சொல்வார்.. அதையெல்லாம் அப்படியே எடுத்துக்காதிங்க.." என்று சொன்ன டாக்டர் சாந்தி, "உங்க ரெண்டு பேர் பாசத்தைப் பார்த்தும் எனக்கு என் அண்ணன் ஞாபகம் வந்திட்டது.. சொல்லப்போனா, என் அண்ணனும் உங்க அண்ணன் ஜாடைலேயே இருப்பார்.." என்று டாக்டர் சாந்தி சொன்ன போது, "இத்தனை நாள் உங்க அண்ணன் பத்தி எனக்குச் சொல்லவே இல்லையே, டாக்டர்!" என்றேன்.

"டாக்டர் அம்மா எங்கிட்டே சொல்லியிருக்காங்க.." என்று சொன்னாள் சுசீலா.

(இன்னும் வரும்)








14 comments:

சிவகுமாரன் said...

இந்த அத்தியாயம் உணர்ச்சிப் பிரவாகம் . அண்ணன் தம்பி பாசம் கட்டிப் போட்டது. பார்வையற்றவரின் மனப் போக்கிலேயே கதை போகும் விதம் அருமை. அப்படியே அவரின் உணர்வை படிப்பவருக்கு கொண்டு வருகிறீர்கள்.
8ஆம் அத்தியாயத்தில்
"வாழ்க்கையில் தான் எத்தனை விஷயங்கள் நமக்குத் தெரியாமல் இருக்கின்றன? ஒவ்வொரு விஷயமும் அதுவே ஒரு புது அனுபவமாய் தெரியவரும் பொழுது ஆச்சரியமாய் இருக்கிறது. ..........தெரியவர்ற போது வெக்கமாக் கூட இருக்கு. ................. எத்தனை இருக்கோன்னு மலைப்பும் ஏற்படறது. எல்லாத்தையும் தெரிஞ்சிக்க முடியாதுங்கறது உண்மைதான். அதுக்கேத்த சந்தர்ப்பம் வரும் போது தான் எதுபத்தியும் தெரிஞ்சிக்க முடியதுங்கறதும் தெரியறது..////
நிதர்சனமான தத்துவார்த்த வரிகள்.

அருமை ஜீவி சார்

G.M Balasubramaniam said...

பார்வையற்றவரின் எண்ணப் போக்கில் நகர்ந்து செல்லும் கதை,மற்றகதாமாந்தரின் உணர்வுகளையும் இவர் எண்ணப் போக்கிலேயே சொல்ல முயல்வது எல்லாம் கொஞ்சம் சிரமமான விஷயம்தான். மிகவும் கூர்ந்து படிக்க வேண்டும். தொடருகிறேன்.

Shakthiprabha (Prabha Sridhar) said...

கதை வெகு நன்றாக போய்க்கொண்டிருக்கிறது. தொடர்கிறேன்....

Geetha Sambasivam said...

திடீர்த்திருப்பங்களோடு செல்கிறது கதை. ஆனால் இன்னும் ஒரு விஷயம் சொல்லப்படவில்லையோ? அல்லது என் கணிப்பு தவறோ? ஏதோ இருக்கு இன்னமும்னு மனதில் படுகிறது.

கோமதி அரசு said...

அன்பு,பாசம் என்று கதை மனதை நெகிழ செய்கிறது.

ஜீவி said...

@ சிவகுமாரன்

மிகுந்த உணர்வோடு வாசித்துப் பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி, சிவகுமாரன்.

ஜீவி said...

@ G.M.B.

கதாசிரியரின் வேலையே அது தானே?.. தன் இஷ்டப்படி படைத்த ராஜ்யத்தில்,தானே ராஜாவாகவும், மந்திரியாகவும்,படைத்தளபதியாகவும் மாண்புமிகு மக்களாகவும் அவரவர் வெளிப்படுவதாக காட்டிக்கொண்டு தன்னை வெளிப்படுத்தி கொள்கிறான். 'தான் வெளிப்படுவதே'தாரகமந்திரம், அல்டிமேட் எயிம் எல்லாம்!

அதில் கிடைக்கும் ஆனந்தம், பரமானாந்தம்! அந்தப் பேற்றைப் பெற்றிடவே எல்லாமும்!

தொடர்வருகைக்கு மிக்க நன்றி.

ஜீவி said...

@ Sakthiprabha

தொடர்ந்து வருவதற்கு நன்றி, ஷக்தி பிரபா!

ஜீவி said...

@ கீதா சாம்பசிவம்

இதுவரை வந்தவற்றில் சொல்லப்படாத விஷயம் என்னன்னு தெரியலை. ஆனா, சொல்ல வேண்டியது இன்னும் இருக்கு என்பதும் உண்மைதான்.

தொடர் வருகை மட்டுமில்லாமல் படித்தவுடனே கருத்தையும் பதிந்து விடுவதற்கு மிக்க நன்றி, கீதாம்மா.

ஜீவி said...

@ கோமதி அரசு

பகிர்தலுக்கு மிக்க நன்றி,கோமதிம்மா.
கதை உங்களுக்குப் பிடித்திருப்பது குறித்து மகிழ்ச்சி.

அப்பாதுரை said...

இன்று தான் முதன் முறையாகப் படித்தேன். இறுக்கமான நடை. விட்டதையும் படிக்க வருகிறேன்.

ஸ்ரீராம். said...

விஸ்வநாதன் ஏன் தானாக அண்ணனைச் சந்திக்கும்வரை அவரைத் தேடும்/இணையும் முயற்சியில் இறங்கவில்லை? பிரிந்தவர்கள் சேரும்போது எழும் உணர்ச்சிக் கொந்தளிப்புகள் அடங்கும்போது விஸ்வநாதைட இந்தக் கேள்வி கேட்கப் படலாம். பழைய ஊரில் தேடிய கதை சொல்லப் படலாம். டாக்டருக்கும் ஒரு கதை இருக்கிறதா...படிப்போம்.

ஜீவி said...

@ அப்பாத்துரை

வாருங்கள், அப்பாத்துரை சார்! இந்தத் தளத்திற்கு தங்கள் முதல் வருகைக்கு மிக்க நன்றி. விட்டதைப் படித்து விட்டு வருகிறேன் என்று சொல்லியிருப்பதற்கும் நன்றி.

ஜீவி said...

@ ஸ்ரீராம்

ஏனென்றால் அதற்கும் விஸ்வநாதனைப் பொறுத்த மட்டில் ஒரு காரணம் இருக்கிறது. அதையும் லேசாக இந்த அத்தியாயத்திலேயே கோடி காட்டியிருக்கிறேன். விஸ்வநாதன் வாய்மொழியாகவே அந்தக் காரணம் வெளிவரும். விஸ்வநாதனின் கதையே பெரிய கதை. ரொம்ப சுறுக்கமாகச் சொல்ல வேண்டும் என்றிருக்கிறேன்.

டாக்டர் ஒரு உன்னதமான பாத்திரம்.
சிநேகிதியின் கணவரை அங்கிள் என்று அழைப்பதா என்றோருக்காக இது. அவ்வளவே.

Related Posts with Thumbnails