மின் நூல்

Wednesday, April 7, 2010

ஆத்மாவைத் தேடி …. 40 இரண்டாம் பாகம்

ஆன்மிகத்தின் அடுத்த கட்டத்தை நோக்கி....


40. மனத்தின் உணர்தல்.


தாவரவியல் அறிஞர் முத்துக்குமாரின் குரல் கரகரப்புக் கொண்டிருந்தாலும் உரக்க இல்லாது அதில் ஒரு மென்மைத்தன்மை இருந்தது. அவர் கேட்டார். "தேவதேவன் ஐயா! உங்கள் உரையில் பொதிந்துள்ள உள்ளார்ந்த செய்திகள் உண்மைதான். அறிவும், மனமும் புறவுலக நடவடிக்களுக்கேற்ப, வாழ நேரிட்ட வாழ்க்கையை வாழ்வதற்காக தங்களை வார்த்தெடுத்துக் கொண்டுள்ளன. 'இப்படி வாழ்ந்தால் தான் காலம் தள்ளமுடியும்' என்பதான ஒரு நிலை இது. இப்பொழுது இதைப் புரட்டிப் போட்ட மாதிரியான ஒரு மாறுதலுக்கு உட்படுத்தினால், புறவுலக வாழ்க்கை நிலைகுலைந்து போய்விடாதா--என்பதே என் கேள்வி.." என்று அவர் கேட்டு முடித்ததும், "நல்ல கேள்வி இது!" என்று தேவதேவன், முத்துக்குமார் சொன்னதை மனதில் வாங்கிக் கொண்டார்.


"நல்ல கேள்வி மட்டுமல்ல.. யதார்த்தமானது கூட.." என்று அவர் யோசனையுடன் இழுத்தபோது, முத்துக்குமாரின் கேள்வியை உள்வாங்கிக் கொண்டு அதற்கான பதிலளிப்பதற்காக தன்னுள் சொற்களை உருவாக்கிக் கொள்வது போலிருந்தது.. "நீங்கள் சொல்வது சரியே. வாழ்க்கையை வாழ்வதற்காக அப்படிப்பட்ட ஒரு செயலுக்காக தங்களை தயார்நிலையில் வைத்துக் கொள்வதற் கேற்ப அறிவும், மனமும் தங்களைச் சரிப்படுத்திக் கொண்டிருக்கின்றன என்று இதைச் சொன்னால் கூடத தவறாகாது. முன்யோசனைகளுடன் கூடிய அறிவின் ஆளுகைக்கு ஆட்பட்ட மனத்திற்கு என்றைக்குமே இந்த தற்காப்பு உணர்வு உண்டு" என்று சொல்லிவிட்டு அவை முழுக்க ஒரு சுற்று சுற்றிப் பார்த்துவிட்டுத் தொடர்ந்தார் தேவதேவன்.


"இப்பொழுது நாம் முன் சொன்னபடி, புறவுலக நடவடிக்களுக்கேற்ப சமனப்பட்டிருக்கும் அறிவை சீர்படுத்திக் கொண்டு, மனத்தைத் துலக்குவதற்கான வழிவகைகளைப் பார்ப்போம். அதற்காக அறிவை அக்கு அக்காக ஆராய வேண்டும் என்று சொன்னேன் அல்லவா?.. இந்த திசையில் தொடர்ந்து உரையாற்று கையில் நண்பர் முத்துக்குமாரின் மனத்தை வதைத்த கேள்விக்கும் நான் உணரும் பதிலை அளிக்கிற வகையில் இந்த உரையின் தொடர்ச்சியை வைத்துக் கொள்கிறேன். சரி தானே?" என்று தேவதேவன் கேட்டதும், முத்துக்குமார் எழுதிருந்து, "அப்படியே ஆகட்டும், ஐயா! தாங்கள் தொடர்ந்து உரையாற்றுங்கள்" என்று சொன்னார்.


தேவதேவன் தொடர்ந்தார். "ஒரு செய்தியைப் படிக்கும் பொழுதோ, அல்லது ஒரு காட்சியைப் பார்க்கும் பொழுதோ, அந்த செய்தியைப் பற்றி அல்லது அந்தக் காட்சியைப் பற்றி, நாம் அறிந்துள்ள தகவல்களின் அடிப்படையிலேயே அந்தச் செய்தியையும், காட்சியினையும் பற்றி அபிப்ராயம் கொள்கிறோம், அல்லவா?.. ரொம்ப சரி. இப்படி அந்தச் செய்தியை, காட்சியைப் பற்றி ஒரு அபிப்ராயம் நமக்கு ஏற்பட்டதற்கு அல்லது அதை நாம் நமக்கு விளக்கிக் கொண்டதற்கு அடிப்படை யாக இருந்தது நாம் ஏற்கனவே பெற்றிருந்த அது பற்றிய தகவல்கள். அதாவது நாம் பெற்றிருக்கும் தகவல்களின் அடிப்படையில், பார்த்த காட்சியையோ அல்லது படித்த செய்தியையோ சரிபார்த்து அதன் அடிப்படையில் அபிப்ராயம் கொள்கிறோம்."


அவையின் உன்னிப்பான கவனிப்பின் ஊடே தேவதேவனின் பேச்சு தொடர்ந்தது.
"இதில் இரண்டு விஷயங்கள் இருக்கின்றன. ஒன்று, தகவல் பெட்டகமாக இருப்பது அறிவு. இரண்டு, அறிவு அறியப்படுத்தும் அபிப்ராயத்தை அனுபவித்து உணர்வது மனம். அதாவது, அறிவு தான் சேமித்து வைத்துள்ள தகவல்களை அளித்து, மனத்தை ஒரு அபிப்ராயத்தை மேற்கொள்ள வைக்கிறது. அந்த அபிப்ராயத்தின் அடிப்படையான உணர்வை மனம் உணர்கிறது. மனத்தின் அந்த உணர்விற்கேற்பவான, செயல்பாட்டினை நரம்பு மண்டலம் மேற்கொள்கிறது. இந்த இடத்தில் தான், நியாயமான ஒரு கேள்வி எழுகிறது" என்று தனது பேச்சைக் கொஞ்சம் நிறுத்தித் தொடர்ந்தார் தேவதேவன்." இயல்பாக நம்முள் தோன்றும் கேள்வி இது தான். ஏன் அறிவே தான் சேமித்து வைத்திருக்கும் தகவல்களின் அடிப்படையில் பார்க்கும் காட்சியைப் பற்றி அபிப்ராயம் மேற்கொண்டதோடு அல்லாமல் அதை ரசிக்க, அதற்கேற்பவான உணர்வைக் கொள்ளக் கூடாதா என்று தோன்றுகிறது. இல்லையா?..

"இங்குதான் மனம் கொண்டிருக்கும் ஒரு தனித்துவமான சிறப்பு, மிளிர்கிறது. ஒவ்வொன்றுக்கும் ஒரு சிறப்பு. சிறப்பில்லாத, தேவையில்லாத, வேலையில்லாத ஒரு அணுத்துணுக்குக் கூட உடலில் கிடையாது. ஒவ்வொன்றும் பார்த்துப் பார்த்து இதைவிட சிறப்பானது இன்னொன்று இல்லை என்று தேர்ந்து தெளிந்து படைக்கப்பட்ட உயிரியலின் உன்னதம். அந்த உன்னத சாத்திரப்படி, அறிவு என்பது வெறும் சேகரித்துள்ள தகவல்களைக் கொண்டுள்ள, சேகரிப்புகளைச் சரிபார்க்கிற பெட்டகம் மட்டுமே. அறிவு சரிபார்த்துத் தருகிற அந்தத் தகவல்களை, அதுபற்றிய அபிப்ராயங்களுக்கு ஏற்ப அனுபவித்து உணரும் சக்தி மனத்திற்கே உண்டு. அதனால் தான் அறிவு மனத்திடம் தகவல்களைச் சேர்ப்பிக்கின்றது. 'சரிபார்த்துத் தகவல்களைத் தந்திருக்கிறேன். அனுபவி; உணர்ந்து சொல்'. மனத்தின் அனுபவிப்பிற்கேற்ப, அதன் உணர்தலுக்கு ஏற்ப நரம்பு மண்டலம் செயல்படும்.


"இதில் ஒவ்வொரு நடவடிக்கையும் முக்கியம். மனம் உணரவில்லையெனில், நரம்பு மண்டலத்தின் செயல்பாடு இல்லை; உள்ளே போவதிலிருந்து வெளியே வரும வரை, 'A' to 'Z' நரம்பு மண்டலத்தின் இயக்கத்தையே எதிர்பார்த்திருக்கிறது.
அடுத்து அறிவின் தனித்தனி செயல்பாடுகளைப் பார்த்து விட்டு, அறிவிற்கும் மனத்திற்கும் உள்ள உறவைப் பார்ப்போம். பார்த்துவிட்டால், மனத்தைத் துலக்குவதின் முதல் படியை தொட்டவர்கள் நாமாவோம். இந்த அளவில் இன்றைய உரையை நிறைவுபடுத்திக் கொள்ளலாம். நமது எல்லாப் பணிகளுக்கும் இறைவன் துணையிருந்து காக்க வேண்டுகிறேன்.." என்று சொல்லிவிட்டு கைகுவித்து நிற்க, எல்லோரும் எழுந்து நின்று தேவதேவனுடன் சேர்ந்து இசையுடன் தாயுமான சுவாமிகளின் பாடலைப் பாடலாயினர்:

அங்கிங் கெனாதபடி எங்கும் பிரகாசமாய்
ஆனந்த பூர்த்தியாகி
அருளொடு நிறைந்ததெது தன்னருள் வெளிக்குளே
அகிலாண்ட கோடியெல்லாந்
தங்கும் படிக்கிச்சை வைத்துயிர்க் குயிராய்த்
தழைத்ததெது மனவாக்கினில்
தட்டாமல் நின்றதெது சமயகோ டிகளெலாந்
தந்தெய்வம் எந்தெய்வமென்
றெங்குந் தொடர்ந்தெதிர் வழக்கிடவும் நின்றதெது
எங்கணும் பெருவழக்காய்
யாதினும் வல்லவொரு சித்தாகி இன்பமாய்
என்றைக்கு முள்ள தெதுஅது
கங்குல்பக லறநின்ற எல்லையுள தெதுஅது
கருத்திற் கிசைந்ததுவே
கண்டன் வெலாமோன வுருவெளிய தாகவுங்
கருதி அஞ் சலி செய்குவாம்.

(தேடல் தொடரும்)

                            இரண்டாம் பாகம் நிறைவு

               






Friday, March 26, 2010

ஆத்மாவைத் தேடி…. 39 இரண்டாம் பாகம்

ஆன்மிகத்தின் அடுத்த கட்டத்தை நோக்கி....


39. மனத்துக்கண் மாசிலன் ஆதல்....


மதிய உணவிற்குப் பிறகு தொடங்கவிருந்த தேவதேவனின் உரையைக் கேட்கும் ஆவலில் கூட்டம் தொடங்குவதற்கு குறைந்த அவகாசம் இருக்கையிலேயே அவை நிறைந்து விட்டது. குறித்த நேரத்தில் உள்ளே நுழைந்த தேவதேவன், கைகூப்பி நமஸ்கரித்தவாறே மேடையேறினார். ஆர்வத்துடன் அமர்ந்திருந்த அத்தனை பேரையும் கண்டு அலாதி உற்சாகத்துடன், " விட்ட இடத்திலிருந்து தொடரலாமா?--" என்று கேட்டபடி தேவதேவன் பேச ஆரம்பிதார்..


"இப்பொழுது ஒவ்வொன்றாகப் பார்ப்போம்" என்று மேல்துண்டை சரிசெய்தவாறே, குறிப்புப் புத்தகத்தைப் புரட்டினார் அவர். "தூய்மையான புத்தியால் துலக்கப்பட்ட மனம் என்னும் தீபம், ஆத்மாவின் மூலை முடுக்கெல்லாம் தெளிவாகக் காட்டக்கூடிய வல்லமை படைத்தது என்று சுவாமி விவேகானந்தர் சொன்னதை நினைவு கொண்டோம், அல்லவா?.. இப்பொழுது ஆத்மா பற்றி தெரிந்து கொள்ள முற்படும் முன் அது பற்றிய சில அனுமானங்களை அறிந்து கொள்ளலாம்" என்று தொடர்ந்தார் அவர். கட்டவிழ்வதற்கு முன்பான, இதழ்களால் மூடப்பட்டிருக்கும் ஒரு தாமரைமொட்டு போல ஆத்மாவை இப்போதைக்கு ஒரு உத்தேசமாக அனுமானித்துக் கொள்வோம். இது வெறும் அனுமானிப்பு மட்டுமே தான். ஆத்மாவை மூடியிருக்கும் அல்லது அதனைப் போர்த்தியிருக்கும் ஐந்து உறைகளும் ஆத்மாவை நோக்கி உள்ளடங்கிச் செல்லச் செல்ல ஒன்றிற்கு ஒன்று நுண்மையானவை என்று தெரிந்திருக்கிறது; அடுத்து அந்த உறைகளை ஒவ்வொன்றாகத் தூய்மைபடுத்திக் கொண்டு சென்றால் ஆத்ம தரிசனம் கிடைக்கும் என்று சொல்லியிருக்கிறார்கள். இப்போதைக்கு இந்த இரண்டு குறிப்புகள் தான்--" என்றவர், விஞ்ஞானப் பரிசோதனைக் கூடத்தில் பரிசோதிப்பவர் தான் செய்து காட்டிய ஒரு சோதனையை விவரிப்பது போல, இரு கைகளையும் முன்னால் நீட்டி விரல்களை மேலும் கீழும் தாழ்த்தியும், உள்ளங்கையில் கோடியிழுத்தும் அபிநயித்து சொல்லலானார்.


"முன்னாலேயே நாம் பார்த்த இன்னொரு தகவல், மனம் கொண்டு தான் ஆத்மாவை அறியமுடியும் என்று முண்டக உபநிஷதம் மூலம் தெரிந்தது. இப்பொழுது மனம் பற்றிப் பார்ப்போம். அதாவது மனம் என்பது மனிதனில் எப்படி வளர்ச்சியடைகிறது என்று பார்ப்போம். பிறக்கையில் பரிசுத்தமாக, பளிங்கு போலத்தான் இருக்கிறது மனம். அது குழந்தை மனம். சூது வாது அறியாதது. பின் மனிதன் வளர வளர புலனுறுப்புகளால், அது அறியப்படுத்தும் புறவயக்காட்சிகளால் பெறும் கல்வியால் மனமும் தன்னை வார்த்தெடுத்துக் கொள்கிறது. சுருங்கச்சொல்லவேண்டுமானால், பெறும் அனுபவங்களே மனத்தைப் படைப்பதில் பெரும் பங்கு பெறுகிறது. இந்த மனம் உருவாவது புறவுலக நிகழ்வுகளைப் பார்த்து, கேட்டு, உணர்ந்து உள்வாங்கிக் கொள்ளும் அனுபவத்தின் அடிப்படையில். அதனால் தான் ஒரே விஷயத்தைக் கூட பார்க்கும் பார்வையில், உணரும் தன்மையில் மன உணர்வுகள் மனிதர்க்கு மனிதர் வித்தியாசப்படுகிறது. அடுத்து அறிவைப் பார்ப்போம். அதுவும் ஒருவன் தன் வாழ்க்கை நெடுகவும் அவ்வப்போது பெறும் அனுபவத்தின் அடிப்படையிலும் உலக அறிவை உள்வாங்கிக் கொள்ளும் பாங்கிலும் அமையும். ஒரு தேசத்தின் சீதோஷ்ண நிலை, வாழ்க்கை அமைப்பு, பழக்க வழக்கங்கள், அந்த தேசத்தின் பொருளாதார வளப்பம், அந்த வளப்பத்தை மக்களுக்கு பங்கிடும் முறைகள் இன்னபிற விஷயங்களும் வெகுஜன மக்களின் மனநிலையை, அறிவின் உச்சத்தைத் தீர்மானிக்கும் காரணிகளாக இருக்கின்றன. அதனால் தான் பொதுவான அறிவின் தீட்சண்யமும், மனப்பாங்குகளும் தேசத்திற்கு தேசம் கூட வித்தியாசப்படுகின்றன. ஆக, ஒரு காலகட்டத்தின் மனமும், அறிவும் பெரும்பாலும் புறவுலகின் வளர்ச்சியின் வீச்சில், அதன் பாதிப்பில் இருப்பதுமட்டுமல்ல, புறவுலகின் ஆக்கிரமிப்பின் பிடியிலும் அமைந்து போகின்றன. பெறுகின்ற அனுபவமும், கல்வியும் பெரும்பாலும் புறஉலக விஷயங்களையேச் சார்ந்திருப்பதால், படிப்படியாக ஒருவன் பெறும் கல்வியும் புறவுலகையேச் சார்ந்திருக்கும்.


உன்னிப்பாக அவையில் அமர்திருப்போரைப் பார்த்தபடி தேவதேவன் தொடர்ந்து பேசலானார்: "ஆக, மனம் மட்டுமில்லை; அறிவும் புறவுலகச் செயல்பாடுகள் எவ்வாறு உள்ளனவோ அவற்றின் அடிப்படையிலேயே அவ்வகையிலேயே வார்த்தெடுக்கப்படுகிறது. அறிவும், அது பற்றிய கல்வியும் பெரும்பாலும் புற உலகின் தகவல்களால் ஆக்கிரமிக்கப்பட்டவை. இருப்பினும் இப்பொழுது நமது வேலை, அகத்தைத் துலக்குதல்; அதைத் தூய்மையான புத்தி கொண்டு செய்தல். ஆத்ம தரிசனம் பெற இதை சாத்தியப்படுத்த வேண்டும்."


அவையில் அமர்ந்திருந்தோர் தேவதேவன் சொல்லும் விஷயங்களின் விவரணையில் கட்டுண்டு கிடந்தனர். அந்த அமைதியில் தேவதேவனின் குரல், அவரது தனித்துவமான உச்சரிப்பில் ஏற்ற தாழ்வோடு ஒரு நல்ல இசையைக் கேட்கிற அனுப்வத்தை அந்த நேரத்தில் அளித்தது. "எப்படி சாத்தியப்படும் என்னும் கேள்விக்கு விடைகாண இரண்டுக்கும் பொதுவான ஒரு அம்சத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். மேலோட்டமாகப் பார்க்கையிலேயே மனம், அறிவு ஆகிய இந்த இரண்டும் இன்று இருக்கிற நிலையில் புறவுலகு பற்றியே அறிவு கொண்டிருக்கின்றன.. இந்த இரண்டின் இத்தகைய போக்குக்குக் காரணம், புறவுலகச் செயல்களைப் பார்த்துப் பார்த்து பழகிய அனுபவத்தின் அடிப்படையில். கண்கள் காட்சியைப் பார்க்கின்றன. பார்க்கும் காட்சியின் பிம்பம், அல்லது அந்தக் காட்சியின் தாத்பரியமான உணர்வுகள் பார்வை நரம்புகள் மூலம் மூளையில் பதிந்ததும் அது பற்றிப் புரிந்து கொள்ளும் அறிவு, தான் புரிந்து கொண்ட விதத்தில் மனத்திற்கு அதைத் தெரியப்படுத்துகிற விதத்தில் மனம் அதை அனுபவிக்கிறது. இது தான் விஷயம்.


"எப்பொழுதுமே மனம் என்பது அறிவின் ஆட்டுவிப்புக்கு ஆட்படுகிற சமாச்சாரம். ஆட்டுவிக்கும் சூத்திரதாரி அறிவு தான். முதலில் அந்த சூத்திரதாரியின் தன்மையை அலசி அராய வேண்டும். அதற்கு அக்கு அக்காக அதனைப் பிரித்துப் பார்க்க வேண்டும்" என்று சொல்லியபடியே அவையைச் சுற்றிலும் தன் பார்வையைச் சுழல விட்ட தேவதேவன், அப்பொழுது தாவரவியல் அறிஞர் முத்துக்குமார் ஏதோ விளக்கம் கேட்க எழுந்து நிற்பதைக் கண்டு, தன் தொடரும் உரையை நிறுத்திக் கொண்டு அவரைப் பார்த்தார்.


(தேடல் தொடரும்}

Friday, February 19, 2010

ஆத்மாவைத் தேடி…. 38 இரண்டாம் பாகம்

ஆன்மிகத்தின் அடுத்த கட்டத்தை நோக்கி....


38. தூய மனம் என்னும் தீபம்


"சொல்கிறேன்---" என்று மீண்டும் ஒருமுறை கூறிவிட்டுத் தொடர்ந்தார் தேவதேவன்.

"தைத்திரீய உபநிஷதம் சொல்லும், ஆன்மாவைப் போர்த்தியிருக்கும் ஐந்து உடம்புகளான உடல், பிராணன், மனம், புத்தி, ஆனந்தம் என்றிவற்றை மேலிருந்து உள்ளுக்கு உள்ளாகப் பார்க்குமிடத்து அவை ஆன்மாவை நெருங்க நெருங்க ஒன்றை விட ஒன்று நுண்ணியதாகத் தெரிகிறது.


"உடல், பிராணன் தாண்டி இப்பொழுது மனப்பகுதிக்கு வந்திருக்கிறோம். புறப் பார்வைக்குத் தெரிகிற புறவுலகக் காட்சிகளைத் தாராளமாக புலனுருப்புகளால் காணலாம். அதற்கு மாறான அகவுலக தரிசனம் பெற அற்புதமான ஆடியாகச் செயல்படுகிறது மனம். இதை விட்டால் வேறு வழியில்லை.


"ந சக்ஷூஷா க்ருஹ்யதே நாபி வாசா
நான்யைர்தேவைஸ் தபஸா கர்மணா வா
ஜ்ஞானப்ரஸாதேன விசுத்தஸத்வஸ்-
ததஸ்து தம் பச்யதே நிஷ்கலம் த்யாயமான: "

"-- என்பது முண்டக உபநிஷத்து மந்திரம்.


"ஆத்ம தரிசனம் என்பது கண்களால் கிரகிக்கப்படுவதில்லை; வாக்கினாலும் மற்ற புலன்களாலும் தெரியப்படுத்தப்படுவதில்லை; தவத்தாலும், மற்ற கர்மங்களாலும் அறியப்படுவதில்லை. புத்தியின் தெளிவால், தூய்மையும் நுண்மையும் பெற்ற மனத்தால் தியானித்து முழுமையாக அதைக் காணலாம்.


"என்ன இவ்வளவு சுலபமாகச் சொல்லிவிட்டார், முனிவர் என்று
தோன்றும். 'புத்தியின் தெளிவால், தூய்மையும் நுண்மையும் பெற்ற மனத்தால்' என்கிற சொற்றொடரில் நிறைய அர்த்தம் பொதிந்துள்ளது. இப்போதைக்குப் படித்தும், சொல்லியும், பிறர் சொல்லிக் கேட்டும் சாத்தியப்படாத காரியம் இது என்று மட்டும் தெரிந்து கொள்வோம். குறைந்தபட்சம் எப்படி சாத்தியப்படுத்துவது அதற்கான முயற்சிகள் என்னன்ன என்றாவது தெரிந்து கொள்ளலாம் இல்லையா? அப்படி தெரிந்து கொள்ளுதலுக்கான ஒரு வழிகாட்டல் தான் நடக்கப்போகும் இந்த சதஸ். மற்றபடி அவரவர்களின் சுய ஈடுபாட்டின் அடிப்படையில் அமையக் கூடியதே மற்றதெல்லாம்...


"இன்றைய அனுதின அனுபவங்களினால் உருவாக்கப்பட்டிருக்கும் சாதாரண மனம் என்பது இந்த காலகட்ட வளர்ச்சியாகக் கொள்ளப்படுபவனவற்றையே தன் வளர்ச்சியாகக் கொண்டது. 'உனக்குப் பிழைக்கத் தெரியலையே' என்கிற ஒரு சாதாரண வார்த்தையையே எடுத்துக் கொள்ளுங்கள். இந்த சாதாரண வார்த்தை, இன்றைய வாழ்க்கை அமைப்பில், பல அசாதரண அர்த்தங்களைக் கொண்டது. பிழைப்பதற்கு அது பிரதிநிதித்துவப் படுத்தும் காரியங்கள், எதெல்லாம் தர்மங்கள் அல்ல என்று ஒரு காலத்தில் கருதப்பட்டனவோ, அதெல்லாம். வெளிப்புலன் களால், அன்றாடம் வாழ்க்கையை நடத்த நியாயங்களாகிப் போன நமது செய்கைகளினால் பாதிக்கப்பட்ட அறிவின் ஆளுகையில் உள்ளது இந்த மனம். இப்படிப்பட்ட சாதாரண கவைக்குதவாத மனதைப் பற்றி இங்குக் குறிப்பிடப்பட வில்லை.


ஒருவினாடி பேசுவதை நிறுத்தித் தொடர்ந்தார் தேவதேவன். "'அதெற்கென்ன செய்வது?.. நான் பெற்றிருப்பது இந்த மனம் தானே?.. சரி. அந்த விசேஷ மனம் எங்கு கிடைக்கும்?' என்பதே நம் கேள்வியாக இருக்குமானால், அதற்கும் பதில் கிடைக்கிறது. கிடைத்த மனதை எப்படிப் பக்குவப்படுத்த வேண்டும் என்பதற்கு வழி தெரிகிறது. இந்த மனமும் இறைவன் கொடுத்த சரக்கு. அதனால் தான், இதுவும் அவனின் கூறு--அவன் சம்பந்தப்பட்டது என்பதினால் தான், அவனை அறியும் முயற்சிக்கு இதுவும் சாதனமாகப் பயன்படுகிறது என்கிற பணிவு வேண்டும். இந்தப் பணிவு தான் அவன் அருளால் அவன் தாள் வணங்கி என்பது.


"அவன் நமக்கு இதை அளித்தபொழுது மாசுமருவற்றிருந்ததை அசிங்கப்படுத்தியது நாம் தான் என்கிற உணர்வு வந்தால், அதை சுத்தம் செய்கிற பொறுப்பும் தன்னால் வரும். அந்த சுத்தமும் நம் நன்மைக்காகத்தானே தவிர இன்னொருவருக்காக அல்ல. உலகுக்கே சொந்தமான தெய்வப்புலவர் திருவள்ளுவப் பெருமான், 'மனத்துக்கண் மாசிலன் ஆதல், அனைத்து அறன், ஆகுல நீர பிற' என்று சொன்னது இதைத்தான். 'மனம் வெளுக்க மார்க்கம் காணீர்' என்றான் எங்கள் ஊர் பாட்டுக்கொரு புலவன். 'காதறுந்த ஊசியும் வாராதுகாண் கடைவழிக்கே' என்றிருக்க, போகும் ஊருக்குக் கொண்டு போக பெரிய பொக்கிஷமே கூட வருகிறது என்னும் பொழுது யாருக்குத் தான் இதன் மேல் ஆசை வராது?.. இந்த பொக்கிஷத்தில் ஒரு விசேஷமும் உண்டு. இப்பூவுலகில் சேர்த்து வைத்திருக்கும் வீடு,நகை,காசு இன்னபிற ஆஸ்திகளெல்லாம் கூடவராத செல்லாக் காசாகிப்போகும் போது, போகும் ஊரில் செல்லும் காசு இது மட்டுமே. அங்கு நல்ல மரியாதையை அளிக்ககூடிய நல்லாத்மா என்கிற சுமக்கக் சுமக்க சுகமளிக்கிற பொக்கிஷ மூட்டை இது" தொடர்ந்து உரையாற்றிக் கொண்டிருந்த தேவதேவன் லேசாக உணர்ச்சி வயப்பட்டாரோ என்று கூடத் தோன்றியது. அந்த அளவுக்கு தான் உரையாற்றும் செய்தியில் ஒன்றிப் போயிருந்தார் அவர்.


"நான் தென்னகத்து கோயில் நகரத்தில் பிறந்து வளர்ந்தவன். 'நகரேஷூ காஞ்சி' என்று பெருமைக்குரிய காஞ்சிபுரத்தில் சின்ன வயது பூராவும் சுற்றித்தெரிந்தவன். பெரிய காஞ்சிபுரத்தில் உலகளந்த பெருமாளுக்கு ஒப்பற்ற கோயில் ஒன்று உண்டு. கோயில் சந்நிதியில் திருவிக்ரம அவதாரக் காட்சியாய், வலது கால் ஊன்றி, இடது கால் தூக்கிய நிலையில் பிர்மாண்டமாய் பெருமாள் எழுந்தருளியிருப்பார்.. திருவடியைக் காண்பவர், அண்ணாந்து நம் பார்வை எட்டும் தூரம் தாண்டி தலைநிமிர்த்தி 'யாம் பெற்ற பேறு என்னவோ, பெருமானே' என்று அன்று உலகை ஓரடியாய் அளந்தவனின் திருமுடியைத் தரிசித்து உள்வாங்கிக் கொள்ள வேண்டும். அதுவும் எப்படி?.. மூலசந்நிதியில் கும்மிருட்டாய் இருக்கும். பட்டாச்சாரியார் பெருமாளுக்குத் தீபாராதனைக் காட்டிய பின், அப்படியே அந்த குடவிளக்கைத் தூக்கி பெருமாளை கீழிருந்து மேலாகக் காட்டி, 'உலகளந்த பெருமாளைச் சேவிச்சுக்கோங்கோ.." என்று காட்டுவார். அவர் கையுயர்ந்து தீபவிளக்குச் சுடர் மேலே போகையில், பெருமாளின் முகதரிசனம் கிடைத்து அவன் அழகு நம்மை ஆட்கொண்டு 'அம்மாடி' என்றிருக்கும்...


"அப்பொழுது தரிசித்த அந்த தரிசனம் தான் இப்பொழுது இந்த வார்த்தைகளைச் சொல்கையில் என் நினைவில் நிழலாடுகிறது. 'தூய்மையான புத்தியால் துலக்கப்பட்ட மனம் பளிச்சென்று தீபமாய்த் திகழும்; இந்த தீபம் ஆன்மாவின் மூலை முடுக்கெல்லாம் தெற்றெனக் காட்டக்கூடிய வல்லமை மிக்கது' என்பார் பாரதத்தின் தவச்செல்வர் சுவாமி விவேகானந்தர்.


"அந்த ஞானச்சுடரை, தவயோகியை நெஞ்சில் நிறுத்தி மேலும் தொடருவோம்" என்றார் தேவதேவன்.


(தேடல் தொடரும்)












Thursday, February 18, 2010

ஆத்மாவைத் தேடி….37 இரண்டாம் பாகம்

ஆன்மிகத்தின் அடுத்த கட்டத்தை நோக்கி....


37. தன்னை அறிதல்

"மனதைப் பற்றி மேலும் தகவல்கள் அளிக்க இருக்கின்ற இந்த உரையை ஒரு புதுக்கோணத்தில் அமைத்திருக்கிறோம்" என்று தொடர்ந்து உரையைத் தொடர்ந்தார் தேவதேவன். "இதுவரை இந்த அவையில் உரையாற்றியவர்கள் மனம் பற்றிக் குறிப்பிட நேரிட்ட பொழுதெல்லாம் மனம் பற்றியதான பல தகவல்களை அந்தந்த சமயத்தில் உரையாற்றுவதற்கு எடுத்துக்கொண்ட பொருள் சார்ந்ததாக நிறையச் சொல்லி இருக்கிறார்கள். பூங்குழலி அவர்கள் உரையாற்றும் பொழுது கூட தைத்திரீய உபநிஷத்து சொல்லும் உடம்புகளைப் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார்கள். இது வரை இந்த அவையில் சொல்லியவற்றைத் தவிர்த்து, மற்றைய தகவல்களை ஒன்று திரட்டி 'ஆத்மாவைத் தேடுத'லில் மனம், புத்தியின் பங்களிப்பைப் பார்க்கிற மாதிரி உரையை அமைத்துக் கொள்ளலாம் என்று முடிவெடுத்தோம். இந்த விதத்தில், மனம்,புத்தி பற்றி இதுவரை குறிப் பிடாதவற்றை தொகுத்துச் சொல்லி விடலாமென்றும் தீர்மானித்தோம்.

"ஆக, ஏற்கனவே குறிப்பிட்டு விட்ட மனம் என்றால் என்ன என்பன போன்ற ஆரம்பக்கல்வியை விடுத்து, மனதைப் பற்றிய வேறுபட்ட தகவல்களைப் பார்க்கலாம்" என்று கூறி விட்டு அவையினரின் எதிர்ப்பார்ப்பை புரிந்து கொள்ள விரும்புகிறவர் போல் ஒருமுறை அவையைச் சுற்றிக் கூர்ந்து பார்த்தார். "இந்த உரையாற்றலுக்கு இடையே அவ்வப்போது உங்களுக்கு ஏதாவது ஐயம் ஏற்படுமாயின் அவற்றையும் அவ்வப்போது விவாதித்து நாம் தெளிவடையலாம் என்று நினைக்கிறேன்" என்று தேவதேவன் சொன்ன பொழுது, அவர் சொன்னதை தங்கள் கரவொலி மூலம் அவையினர் ஆமோதிக்க, மலர்ந்த முகத்துடன் உரையாடலைத் தொடர்ந்தார் தேவதேவன்.

"வரலாறு மிகவும் முக்கியமானது. நீண்ட நெடிய மனித வரலாற்றை தேசங்களின் வரலாற்றினூடே உற்று நோக்கினால், பாரத தேசத்தின் வரலாற்றில் ஒரு தனித்தன்மை பொதிந்திருப்பதைக் காணலாம். பண்டைய இந்திய மனத்தின் அத்தனை தேடல்களும் அகத்தைச் சார்ந்திருப்பதைப் பார்க்கலாம். தன்னில் தன்னை, அந்தத் தன்னில் உயர்ந்த அறிவை, உயர்ந்த அறிவின் உச்சவெளியாக இறைவனை என்று எல்லாத் தேடல்களிலும் தன்னையே நிலைக்களனாக்கிக் கொண்டது பண்டைய இந்திய மனம் என்பது புரியும்.

"சரி. இது என்ன அகத்தைச் சார்ந்திருத்தல்?.. அப்படிச் சார்வதால் என்ன பெற்றோம்? -- என்பவை போன்ற முக்கியமான கேள்விகள் இந்த நேரத்தில் நம்முள் எழலாம். இப்படியாக இந்தக் கேள்வி கேட்பதை நானே ஆரம்பித்து வைக்கிறேன்" என்று சொல்லி இயல்பாக லேசாகச் சிரித்தார் தேவதேவன்.

அவை அவர் மேலும் கூறப்போவதின் எதிர்பார்ப்பில் ஆர்வம் கூடி உன்னிப்பாய் கவனிக்கலாயிற்று.

"வெளியுலகில் புறப்பார்வைக்குத் தெரியும் செயல்களை, நடப்புகளைப் பார்த்து கண்டதே காட்சியாய் ஒரு கருத்தை உருவாக்கிக் கொள்ளல் புறவயப் பார்வை. தன்னையே ஆஹூதி ஆக்கிக்கொண்டு தன்னுள் தீவிரமாய் சாதனைகள் செய்து அதை அனுபூதியாய் புலங்களின் உணர்வுகளைக் கடந்த உண்மை நிலையில் உணருதல் அகப்பார்வை. தன்னை அறியப்படுத்தும் தன்னை அறிதல் என்பதும் அகப்பார்வை ஒன்றினாலேயே சாத்தியப்படும் இல்லையா?.."என்று கேட்டு விட்டு ஒரு நிமிடம் நிறுத்தித் தொடர்ந்தார் தேவதேவன்.


"தன்னை அறிதலும், ஆத்மாவை அறிதலும் ஒன்றுதான். தன்னை அறிதல் என்பது தன்னில் இருக்கும் அழியாத ஒன்றை அறிவது. அந்த அழியாத அது, அழியக் கூடிய உடல் மற்றும் மாற்றங்களுக்கு உட்பட்ட மனம்,பிராணன் இவற்றின் ஊடே, இவற்றிற் கெல்லாம் சம்பந்தப்படாது இருப்பது தான் இதன் சிறப்பு. இப்பிரபஞ்ச இயக்க சக்திகளிடையே அழியாத ஒன்று, அழியக்கூடியவற்றுடன் புலப்பார்வை க்குத் தட்டுப்படாமல் புதைந்திருப்பது தான் விந்தை. எல்லாம் அழிந்தும் மாற்றமும் கொண்ட பின் நடந்தவைகளுக்குச் சாட்சியாய் ஒன்று வேண்டுமல்லவா? அந்த சாட்சியே ஆத்மா என்றும் கொள்ளலாம்" என்று தேவதேவன் சொன்ன போது, கேட்டுக் கொண்டிருந்த அவையினர் தங்களை மறந்து தேவதேவனின் உரையில் தோய்ந்தனர்.

இந்த சமயத்தில் சித்ரசேனன் எழுந்திருந்தார். "மாற்றம் அடையக்கூடிய மனதைக் கொண்டு அழிதலற்ற ஆத்மாவை அறிவதா?..இதை விளக்கிச் சொல்லவேண்டும்" என்று கேட்டுக் கொண்டார்.

"சொல்கிறேன்.." என்று தொடர்ந்தார், தேவதேவன்.


(தேடல் தொடரும்)

Friday, February 12, 2010

ஆத்மாவைத் தேடி....36 இரண்டாம் பாகம்

ஆன்மிகத்தின் அடுத்த கட்டத்தை நோக்கி....


36. பிரபஞ்சக் கூறுகள்


"மனிதப் படைப்பில் அவன் வாழ்க்கை நெடுகப் பார்ப்போமானால், ஒரு விஷயம் தெளிவாகத் தெரியும்" என்று தொடர்ந்தார் தேவதேவன். "மனிதன் தன் மனத்தின் குரலுக்கு செவிசாய்க்காமல் அதை ஓரங்கட்டிவிட்டு,உடலால் மட்டும் வாழ்கிறான் என்று வைத்துக் கொள்ளுங்கள். அவனது அப்படிப்பட்ட வாழ்க்கை என்பது மனிதப் படைப்பிற்கே அர்த்தமில்லாத அன்னியமான ஒன்றாய்ப் போய் முடியும். உடலால் வாழ்வது என்பது உடலின் தேவைகளை மட்டுமே கவனித்துக் கொண்டு வாழ்வது. உடலின் தேவை என்பது முற்றிலும் உயிர் வாழ்வதற்கான தேவை தான். வெறும் உயிர் வாழ்வதற்கான வாழ்க்கை மட்டுமே வாழ்வது என்பது மிகவும் வரட்டுத் தனமானது; மிருகத்தனமானது. அப்படிப்பட்ட ஒரு வாழ்க்கையைத் தவிர்த்து ஆறறிவு படைத்த மனித வாழ்க்கைக்கு அர்த்தம் கொடுப்பது, உடலோடு மனம் ஒன்றிய ஒரு வாழ்க்கைமுறைதான்.


" மனத்தின் குறுக்கீடு இல்லாத உடலின் தேவை என்பதைக் கறாராகக் கணிப்பது ரொம்பவும் கடினமான வேலை. அந்த அளவுக்கு உடலும் மனமும்ஒன்றிய ஒன்று. இன்னும் சொல்லப் போனால், உடல் இயங்குவதே மனத்தின் தேவைகளை, அதன் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்வதற்காகத்தான். மனத்தின் நியாயமான குரலைப் புறக்கணித்த உடல் என்பது வாசமில்லாத காகிதப் பூவைப் போல. சரியா?.." என்று தான் சொல்வது கேட்போருக்கு சரியான புரிதலை ஏற்படுத்துகிறதா என்பதைப் புரிந்து கொள்ளும் விதத்தில், அவையை ஒரு சுற்று பார்த்து நிச்சயப்படுத்திக் கொண்டு மேலும் தொடர்ந்தார் தேவதேவன்.


"அதனால் தான் சொல்கிறேன். மனம் என்பது பற்றி அறிதல் இல்லாத ஒற்றையாக நிற்கும் உடல் உறுப்புகள் சம்பந்தப்பட்ட இன்றைய உடற்கூறு விஞ்ஞானம் என்பது முழுமையான ஒன்றல்ல. முழுமையான ஒன்றல்ல என்பது தானே தவிர இதுவரை அறியப்பட்ட அளவில் ஒப்பற்ற ஒன்று என்பதில் சந்தேகமில்லை. ஏனெனில், உடல் என்பதுதான் அத்தனைக்கும் ஆடுகளம். அப்படி ஒரு நிலைக்களன் இல்லை என்றால் ஒன்றுமே இல்லை; மனம், புத்தி என்று எல்லாமே தாங்கள் இயங்குவதற்கு உபயோகப்படுத்திக் கொள்வது இந்த உடலைத்தான். அப்படிப்பட்ட கியாதி பெற்ற உடலைப் பற்றி, அதன் நலனைக் காப்பது பற்றி, செப்பனிடுவது பற்றி சிந்திக்கிற உடற்கூறு விஞ்ஞானத்தின் பெருமை பெருமைபடத்தக்கது. இன்றைய அதன் வளர்ச்சிக்கு அயராத தமது உழைப்பை காணிக்கையாக்கிய அத்தனை விஞ்ஞானிகளுக்கும் என்றென்றும் நாம் நன்றி செலுத்தக் கடமைப்பட்டுள்ளோம். உடற்கூறு சாத்திரத்தின் முழுமைக்கு இன்னொரு பகுதியான மனவியல் பற்றிய விவர சேகரிப்புகள் தேவையென்கிற எண்ணம் இப்பொழுது வலுப்பெற்றிருக்கிறது. அப்படிப்பட்ட தேவை வெறும் விவர சேகரிப்புகளோடு நின்றுவிடாமல், தற்காலத்திய உடற்கூறு விஞ்ஞானம் மனம் பற்றிய ஆராய்ச்சிகளை மேற்கொண்டு உடற்கூறு சாத்திரத்தை செழுமைபடுத்தி முழுமையாக்க வேண்டுமென்கிற ஆவல் நமக்கிருக்கிறது. உடற்கூறு சாத்திரத்தில் துறைபோகிய ஞானம் கொண்டோர் இது விஷயத்தில் கவனம் செலுத்த இப்பொழுது தலைப்பட்டுள்ளனர்.

"இன்னொன்றையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். உடலின் செயல்பாடு என்பது மனம், புத்தி இவற்றைப் பிரநிதித்துவப் படுத்துகிற வேலை தான். உடம்பை வளர்த்து உயிர் வளர்ப்பதும் இதற்காகத்தான். மனத்தை நிறைக்கிற எண்ணங்களும், புத்தி விளைவிக்கின்ற விஷய ஞானமும் பிரபஞ்ச மன, புத்தி வளர்ச்சிகளோடு சம்பந்தப்பட்டவை. மனிதனும் பிரபஞ்சத்தின் ஒரு துணுக்கு ஆதலால்,எல்லாவற்றிலும் பிரபஞ்சவளர்ச்சியையே அவனும் பிரதிபலிக்கிறான். அதனால் பிரபஞ்ச வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்வதும், சூட்சுமங்களைப் புரிந்து கொள்கின்ற ஞானத்தை வளர்ப்பதும் அவனது எதிர்கால வளர்ச்சிக்கும், புதிய தலைமுறைக்கு சேர்த்துக் கொடுக்கும் செல்வங்களாவும் ஆகிறது.

"இந்த அடிப்படையில், மேற்கொண்டு பார்ப்போம். தைத்திரீய உபநிஷதம் சொல்லும் மனிதனின் ஐந்து உடம்புகளில், புற உடம்பைப் பற்றியும், பிராண உடம்பைப் பற்றியும் பார்த்தோம். அடுத்தது மனமாகிய உடம்பு. இந்த மனம் புற உடம்புக்கு உள்ளேயே உள்ளது. அதே நேரத்தில், பிராண உடம்புக்கு ஆதாரமாக இருப்பதும் இந்த மன உடம்பு தான் என்று தைத்திரீய உபநிஷதத்தில் குறிப்பு கொடுக்கப் படுகிறது" என்று முன்னோட்டமாகச் சொல்லி விட்டு கொஞ்சம் நிறுத்தி மேலும் தொடர்ந்து உரையாற்றத் தொடங்கினார் தேவதேவன்.


(தேடல் தொடரும்)

Saturday, February 6, 2010

ஆத்மாவைத் தேடி …. 35 இரண்டாம் பாகம்

ஆன்மிகத்தின் அடுத்த கட்டத்தை நோக்கி....


35. ஆன்மிகத்தின் அடித்தளம்


டுத்த கேள்வியாக யார் எதைக் கேட்கப் போகிறார்கள் என்று தேவதேவன் எதிர்ப்பார்திருந்த பொழுது, அசோகன் எழுந்திருந்தார். இவர் தொல்லியல் மேம்பாடுகள் குறித்து நிறைய ஆராய்ச்சிகள் செய்தவர். ஆந்திரத்தில் இதற்காக இப்பொழுது ஒரு அறக் கட்டளையை சொந்த முயற்சியில் நிறுவி ஆராய்ச்சிகளை மேற்கொண்டிருப்பவர். அவர் எழுந்திருந்ததும் எல்லோருடைய கவனமும் அவர் பக்கம் திரும்பியது.

அசோகன் சொன்னார். "தேவதேவன், ஐயா! உடல் பற்றி உபநிஷத்துக்களின் பார்வையாக முழுமையாக எல்லாவற்றையும் பார்த்து விட்டு அடுத்து மனம் பற்றி இதே மாதிரியான ஒரு பார்வையை வைத்துக் கொள்ளலாம் என்று தாங்கள் நினைப்பது புரிகிறது. இன்றைய உடற்கூறு சாத்திரத்தில் இதுவரை நாம் கண்டறிந்துள்ள உண்மைகளை ஒருபக்கம் வைத்துக்கொண்டு உபநிஷத்துக்கால கருத்துக்களை இன்னொருபக்கம் வைத்துக் கொண்டு இரண்டையும் ஒப்புமை படுத்திப் பார்க்க வேண்டும் என்கிற அவா சதஸ் நடந்து முடிந்த பின்னால் பலருக்கு ஏற்படுவது சகஜமே" என்று அவர் சொல்லிக் கொண்டு வரும் பொழுது
மேலும் தொடர்வதற்கு அவர் தயக்கப்படுவது மாதிரி உணர்ந்ததினால் தேவதேவன், "சொல்லுங்கள், அசோகன்! எந்த தயக்கமும் வேண்டாம். நீங்கள் நினைப்பது எதுவும் சொல்லலாம்" என்று அவரை ஊக்கினார்.

அசோகன் தொடர்ந்தார்:"பொதுவாக உபநிஷத்துக்கள் சொல்லுபவை கற்கால அறிவுபூர்வமற்ற செய்திகள் மாதிரி இன்றைய காலகட்டத்தில் ஒரு பிரமை ஏற்பட்டிருப்பது தெரிகிறது. அதனால் அன்றே உபநிஷத்துக்கள் சொன்ன உண்மைகளை இன்றைய புதிய விஞ்ஞான கண்டுபிடிப்புளோடு ஒப்புமை படுத்துகிற மாதிரி சதஸ்ஸில் சமர்ப்பிக்கப்படும் கருத்துக்களுக்கான வரைவுகளை வைத்துக் கொண்டால் அது எடுப்பாகத் தெரியும் இல்லையா?உபநிஷத்துக்களின் பெருமையை சாதாரணமாக எல்லோரும் அறிந்து கொள்வதற்கும் அது வழிவகுக்கும் இல்லையா?" என்று கேட்டார்.

"ரொம்ப சரி. உங்கள் ஆதங்கம் புரிகிறது." என்று புன்முறுவலுடன் ஆரம்பித்தார் தேவதேவன். "ஒன்று சொல்ல ஆசைப்படுகிறேன்.." என்று அவர் மேலும் தொடர்ந்த பொழுது அவை உறுப்பினர் அவர் சொல்வதை வெகு உன்னிப்பாகக் கவனித்தனர். "சாதாரணமாக நோக்கும் பொழுதே விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள் என்றால் அது உண்மையான உண்மை என்று கேள்வி கேட்காத ஒரு உணர்வு நம்மிடம் படிந்திருப்பது தெரியும். இந்த உணர்வு பிரமையல்ல; பிரதட்சய உண்மை. ஏனென்றால் விஞ்ஞான சோதனைகளின் வெளிப்பாடாய் வரும் முழுமையான தெளிவு அது. இதில் இருக்கிற இன்னொரு உண்மை என்ன வென்றால், எந்த கண்டுபிடிப்பின் இறுதி வெற்றியும் தடாலென்று வானிலிருந்து குதித்ததில்லை. முன்னால் பெற்ற ஒரு வெற்றியின் தொடர்ச்சிதான் இது என்று ஒவ்வொரு புதிய கண்டுபிடிப்பின் வெற்றியும் அதற்கு முன்னாலான ஒரு வெளிப்பாட்டைச் சார்ந்து இருக்கும். உதாரணமாக ஸ்டீவன்ஸன் தொடர் புகைவண்டி இயக்கத்திற்கு காரணமாக இருந்தார் என்றால், அதற்கு முன்னால் நீராவி இஞ்சினைக் கண்டறிந்து தொழிற் புரட்சியைத் தொடங்கி வைத்த ஜேம்ஸ்வாட்டின் கண்டுபிடிப்பின் தொடர்ச்சி இது, இல்லையா?.. இந்த மாதிரி ஒவ்வொன்றைப் பற்றியும் நாம் அறியும் எந்த புது அறிவும், முன்னால் நமக்குத் தெரிந்த ஒன்றின் தொடர்ச்சியாக, அதை செழுமைப்படுத்திய ஒன்றாக இருப்பது தவிர்க்க முடியாத ஒன்று.


பக்கத்தில் குவளையில் வைத்திருந்த நீரை ஒரு மிடறு விழுங்கி விட்டுத் தொடர்ந்தார் தேவதேவன். "பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் இந்த பாரத தேசத்தில் உணவைப் பற்றி, உடலைப்பற்றி, அந்த உடல் செயல்படும் செயலாற்றல் பற்றி, இயற்கையோடு இயைந்த வாழ்வாங்கு வாழும் வாழ்க்கையைப் பற்றி சிந்தித்திருக்கிறார் கள், கருத்து சொல்லியிருக்கிறார்கள் என்பதே ஒரு தொடக்கமாகத் தெரிகிறது. தைத்திரீய உபநிஷத்தில், 'சீஷா வல்லி' என்று வாழ்க்கைக் கல்வியே போதிக்கப் படுகிறது. சீரிய ஒழுக்கத்தின் அடிப்படையிலான ஒரு வாழ்க்கை முறை என்பது இறைத்தன்மையை அளிக்கும். உயிர் என்னும் ஒப்பற்ற சக்தி கிடைக்கப்பெற்ற சிந்திக்கும் வரம் கிடைத்த உயிர்களுக்கு அப்படித்தான ஒரு இறைத்தன்மை கைவரப்பெறுவதற்குக் கைப்பிடித்து அழைத்துச் செல்வதே ஆன்மிகம். இயற்கையில் பொதிந்திருக்கும் புதிர்களுக்கு யோகத்தால் விடை கண்டவர்களே யோகிகள். யோகமே ஒரு விஞ்ஞானமுறை தான். தன்னையே பரிசோதனைக் களமாக்கிக் கொண்டு செய்யும் தவம். அந்தந்த காலகட்டத்திற்கு ஏற்றவாறு இயற்கையை தரிசிக்க முயல்வதும், அதில் தங்களைப் பறிகொடுப்பதுமாக இந்த தவச்சீலர்களின் செயல்பாடு இருந்திருக்கிறது. அன்றைய வராகமிகிரர், ஆரியபட்டரிலிருந்து பல்வேறு துறைகளில் அத்தனைபேருடைய பங்களிப்பும் மறக்கக் கூடியதல்ல; மறைக்கக் கூடியதுமல்ல. ஆக, இன்றைய விஞ்ஞான வளர்ச்சியை பண்டைய ஆன்மிக எண்ணங்களுக்கு எதிராக வைக்காமல், அவற்றின் தொடர்ச்சியாகக் கொள்வதே சரியென்று நினைக்கிறேன். அந்த அடிப்படையில் நாள்தோறும் சிறக்கும் எந்த மேம்பட்ட சிந்தனையையும் வளர்ச்சியையும் நாம் உள்வாங்கிக் கொண்டு அவற்றை மென்மேலும் செழுமைபடுத்துவதே மனிதகுலத்தின் கடனாகிப் போகிறது" என்று சொல்லிவிட்டு "இது தொடர்பாக மேலும் சில தகவல்களைச் சொல்லவேண்டும்" என்று தொடர்ந்தார் தேவதேவன்.


"ஸ்தூலமாக கண்ணுக்குத் தெரிகிற மாதிரி மனம் என்கிற ஒரு உறுப்பு உடற்கூறு சாத்திரத்தில் இல்லையென்றாலும், உலக அரங்கில் மனம் பற்றியதான உண்மைகள் அறியப்பட வேண்டும் என்கிற தேவை ஏற்பட்டிருக்கிறது. மேல்நாட்டு ஜர்னல்களில் மனம் பற்றிய ஆராய்ச்சிக் கட்டுரைகள் பெரிய அளவில் தற்காலத்திய அறிதலாக வெளியிடப்படுகின்றன. 'மனவளக்கலை'யும் 'யோகக்கலை'யும் இன்று உலக அரங்கில் பாடத்திட்டங்களாக ஏற்றுக் கொள்ளப் பட்டிருக்கின்றன. அவை பற்றித் தெரிந்து கொள்ள வேண்டுமென்கிற ஆர்வம் ஏற்பட்டிருக்கிறது. மனிதகுல மேன்மைக்கும், ஓருலகச் சிந்தனைக்கும் பாரதம் பெற்ற கல்வியை கொண்டுபோய்ச் சேர்க்க வேண்டுமென்பதே நம் பணியாகிப் போகையில், வேறுபட்ட சிந்தனைகளுக்கு வழியில்லாமல் போகும் என்பது என் எண்ணம்" என்று தேவதேவன் சொன்ன போது, அவர் சொன்னவற்றின் குறிப்புகளை உற்சாகத்தோடு குறித்துக் கொண்டனர்.

"நீங்கள் சொல்வது சரிதான்.."என்று உணர்வுபூர்வமாக உணர்ந்த உணர்வில் சொன்னார் அசோகன். "

"வேறு கேள்விகள் இல்லையென்றால், இந்த அளவில் உடல் பற்றி இப்போதைக்கு முடித்துக் கொண்டு மனம் பற்றி தொடர்ந்து பார்க்கலாம்" என்று சொன்னார் தேவதேவன்.

அவையின் ஒட்டுமொத்த ஒப்புதலுக்குப் பிறகு அடுத்து மனம் பற்றி தொடர்ந்து உரையாற்ற யத்தனித்தார் தேவதேவன்.




(தேடல் தொடரும்)



Wednesday, February 3, 2010

ஆத்மாவைத் தேடி....34 இரண்டாம் பாகம்

ஆன்மிகத்தின் அடுத்த கட்டத்தை நோக்கி....


34. மேலும் ஐந்து வாயுக்கள்


ன்றைய அவைகூட்டத்திற்கும் கூட்டம் கூடுவதற்கான குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னாலேயே வழக்கம்போல் அவையில் அத்தனைபேரும் கூடிவிட்டனர். தேவதேவனும் சரியான நேரத்திற்கு மெல்லிய புன்முறுவலுடன் மைக் பிடித்தார்.

"இன்றைக்கு காலை அமர்வை கலந்துரையாடலாக வைத்துக் கொள்ளலாம் என்று ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் நேரம் ஒதுக்கி இருக்கிறார்கள். அவரே இன்னொன்றையும் சொல்லியிருக்கிறார். ஒருகால், நமது இந்தக் கலந்துரையாடலைக் காலை அமர்வுக்குள் முடித்துக் கொள்ள முடியவில்லை என்றால், உணவுக்குப் பின் நாம் கூடும் மாலை அமர்விலும் அதை நீட்டித்துக் கொள்ளலாம் என்று அனுமதி வழங்கியிருக்கிறார்கள். அதனால், நமக்கு நிறைய நேரம் கிடைத்திருக்கிறது. விவரமாக எல்லாவற்றை யும் அலசலாம். பிராணன் பற்றிய இந்த அடிப்படை நன்கு புரிந்த பின், அடுத்த பகுதியாக மனத்திற்குப் போகலாம்" என்று தேவதேவன் சொல்லிய பொழுது, எழுந்திருந்த தொல்பொருள் துறையைச் சார்ந்த சுகவனேசன்,"ரொம்ப நன்றி.." என்று சொல்லி விட்டுத் தொடர்ந்தார்.

"இந்த அவையில் இதற்கு முன் நிகழ்த்திய உரைகளிலும் உள்ளில் பிராணனாக செயல்படுவது இது தானோ என்று இந்த காற்று பற்றி நிறையச் சொன்ன நிவேதிதா அவர்கள்,இதற்கு பிராணவாயு என்று பெயர் வைத்ததே மிகவும் பொருள் பொதிந்த ஒன்றே என்றும் சொன்னார்கள். வெளியில் இருக்கும் காற்றைத் தானே இழுத்து சுவாசிக்கிறோம்? உள்ளே செல்வது வெளிக் காற்று என்றாலும் அவை செயல்படுவதற்கேற்ப தனித்தனிப் பெயர்களைப் பெறுவதாகச் சொன்னீர்கள்.. இது தவிர இந்த வாயுக்களின் பிரிவுகள் பற்றி வேறு தகவல்கள் இருந்தால் அவற்றைத் தெரியப்படுத்துமாறு வேண்டுகிறேன்" என்று கேட்டுக்கொண்டு அமர்ந்தார்.

தேவதேவன் தோளில் தொங்கிய துண்டைச் சரிபடுத்திக் கொண்டு, சொல்ல ஆரம்பித்தார்."நல்லது நண்பரே!" என்று முகம் மலர்ந்து தொடர்ந்தார். "முதலில் வெளிக்காற்றைப் பற்றிப் பார்ப்போம். வெளிக்காற்றில் பெரும்பகுதி நைட்ரஜன் தான். அது 78% அளவில் என்றால், ஆக்ஸிஜன் 21%, மற்றும் மிகக் குறைந்த அளவில் ஆர்கன், கார்பன்-டை-ஆக்ஸடு, நியான், ஹைட்ரஜன் போன்றவை பாக்கியுள்ள 1%. இதெல்லாம் பிற்காலத்திய வேதியியல் பகுப்புகளும், அவற்றிற்கான பெயர்களும். ரொம்ப சரி. வெளிக்காற்று காற்றாக உள்ளே நுழைந்தாலும் அது உள்ளே பிராணனாக செயல்படுகையில் அங்கங்கே செயல்படும் விதங்களுக்கு ஏற்றவாறு பிராணன், அபானன், வியானன், சமானன், உதானன் என்று பெயர் கொள்கின்றன என்று பார்த்தோம். இது உபநிஷத்துக்களில் நாம் கண்ட உண்மை" என்று சொல்லிவிட்டு கொஞ்சம் நிறுத்தினார்.

பின் தொடர்ந்தார். "அதைத்தவிர, பிராணன் தொடர்ச்சியான மற்ற நான்கு வாயுக்களும் எங்கெங்கு நிலைபெறுகின்றன அவற்றின் செயல்பாடுகள் என்ன என்றும் பார்த்தோம். நமது பாரத பண்டைய வைத்திய முறையான ஆயுர்வேத வைத்தியம் மேலும் ஐந்து வாயுக்களைப் பற்றி கூறுகிறது. பிராண வாயு, அபான வாயு, வியான வாயு, உதான வாயு, சமான வாயு இவற்றைத் தவிர நாக, கூர்ம, துரகர, தேவதத்த, தனஞ்செய என்று இன்னும் ஐந்து வாயுக்களையும் அவற்றின் செயல்பாடுகளையும் சொல்கிறது. புதுசாகச் சொன்ன ஐந்து வாயுக்களில், நாக வாயு நாம் உண்ணும் உணவு எதிரெடுக்கையிலும், கண்களை இமைக்கையில் கூர்ம வாயுவும், தும்மல் ஏற்படுகையில் துரகர வாயுவும், கொட்டாவி விடுகையில் தேவதத்த வாயுவும் செயலாற்றுவதாகச் சொல்கிறார்கள்.

"கடைசியில் சொன்ன தனஞ்செய வாயு மட்டும் ஒரு தனிப்பட்டப் பணிக்காகக் காத்திருக்கிறது. மரணம் சம்பவித்ததும் இறந்துபட்ட உடலிலிருந்து எல்லா வாயுக்களும் வெளியேறிக் காணாமல் போக, தனஞ்செய வாயு மட்டும் உடலில் தங்கி தனது பணிக்காகக் காத்திருக்கும். இறந்த உடலை வீங்கச் செய்வதே அதன் வேலை. அந்தப்பணி முடிந்ததும், அதுவும் வெளியேறி விடும்"என்று தேவதேவன் சொல்லி அடுத்த கேள்வியை எதிர்பார்த்து நின்றார்.


(தேடல் தொடரும்)

Sunday, January 17, 2010

ஆத்மாவைத் தேடி…. 33 இரண்டாம் பாகம்

ஆன்மிகத்தின் அடுத்த கட்டத்தை நோக்கி....


33. கண்ட கனவு


"அப்பா! கிரிஜா பேசறேன்.. எப்படிப்பா இருக்கே?" என்று ஆதுரத்துடன் கிரிஜா தந்தையைக் கேட்டாள்.


"நன்னா இருக்கேம்மா.. நாட்டின் பல மூலைலேந்து வந்து இங்கே கூடியிருக்கற வித்வான்கள் மத்திலே நாமும் இருக்கறது மனசுக்கு ரொம்ப சந்தோஷத்தைக் கொடுக்கறது, அம்மா! அதுவும் எப்படிப்பட்ட ஞானஸ்தாள்ங்கறே?.. ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு துறைலே பண்டிட்கள். இத்தனை பேரையும் கூட்டி வைச்சு, பொதுமனுஷா மன ஆரோக்கியத்துக்காக, லோக க்ஷேமத்துக்காக ஒரு சதஸ்ஸை ஏற்பாடு பண்ணியிருக்கிறாரே, மனோகர்ஜி! அவரோட கைங்கரிய த்தை எத்தனை பாராட்டினாலும் தகும்."

"அவா பேசி விவாதிக்கறதிலே, நீயும் கலந்துக்கறயா, அப்பா?"

"அப்படிங்கறது, இல்லே! சரியாச் சொல்லணும்னா, புதுசு புதுசா பல விஷயங்களைத் தெரிஞ்சிக்கறேன். அந்தந்தத் துறைலே கத்துத் தேர்ந்தவா கிட்டே நேரிடையா தெரிஞ்சிக்கறது மனசுக்கு சந்துஷ்டியைக் கொடுக்கும்னு இங்கே வந்து தான் தெரிஞ்சிண்டேன். சுருக்கமா சொல்லணும்னா, மனுஷப் பிறவி எடுத்தது எதுக்காகன்னு தெரிஞ்சிண்டேன்னு வைச்சுக்கோயேன்."

"ஓ! கிரேட்!"

"இத்தனை வயசு வாழ்ந்த வாழ்க்கைக்கு அப்புறம், இப்போத்தானா தெரிஞ்சிண்டே ன்னு நீ கேக்கலாம். நீ அப்படிக் கேக்கலேனாலும், நானே எனக்குள்ளேயே அப்படி ஒரு கேள்வியைக் கேட்டுண்டாலும், அதுக்குப் பதில் சொல்ல எனக்குத்தெரியலே ஸ்கூல் பைனல் வரை படிச்சேன். அதைத்தவிர, வேதம் படிச்சிருக்கேன். சின்ன வயசிலிருந்தே புராணக் கதைகள் கேக்கறதிலே ஆர்வம் அதிகமாகி, அந்த ஆர்வத்திலே தெரிஞ்சிண்டதை மத்தவாளுக்கும் சொல்ற பிரசங்கியாயிட்டேன். நிலையான வருமானம்னு ஒண்ணும் கிடையாது. இதுவரை யாரையும் நிர்பந்தப்படுத்தி எதுவும் வாங்கிண்டது இல்லேனாலும், அவா மனசொப்பி கொடுத்த சம்பாவனைதான் உங்களை வளர்த்து ஆளாக்கறத்துக்கும், குடும்ப அன்றாடத்தேவைக்கும் உபயோகப்பட்டதுங்கறதைச் சொல்லணும் இல்லையா?"
என்று சொல்லும் பொழுது அவர் குரல் நன்றி உணர்வுடன் தழுதழுத்தது.


"எதுக்கு நீ இதை தயங்கித் தயங்கிச் சொல்லணும்?.. எல்லாத் தொழிலும் அப்படித்தானே அப்பா?.... படிச்சுத் தெரிஞ்சிண்டதை உபயோகப்படுத்தி சம்பாதிக்கறது தானே?"


"ஒரேயடியா அப்படிச் சொல்லக் கூடாதும்மா. தான் படிச்சுத் தெரிஞ்சிண்டதை இன்னொருத்தருக்குத்தெரியப்படுத்தறத்துக்காக --அது மூலமா அதைக்கேக்கறவா அறிவு பெற்றாலும் சரி -- பணம்னு கைநீட்டி வாங்கக் கூடாதும்மா.. அந்தக் காலத்திலேலாம் திண்ணைப் பள்ளிக்கூடம்னு இருக்கும்.. வீட்டுக்கு நுழையற படிக்கட்டுக்குப் பக்கத்திலேயே வெளித்திண்ணை இருக்கும். பெரும்பாலும் திண்ணை இல்லாத வீடே இருக்காது. கல்வி சொல்லித் தர்ற வாத்தியார் வீட்டுத் திண்ணைதான் கல்விச்சாலையா மாறிப்போயிருக்கும். இல்லே, யாராவது பெரிய பணக்காரர் பள்ளிக்கூடம் நடத்தறத்துக்காக தனக்குச் சொந்தமான மனைலே சிமிண்ட் திண்ணையா பெரிசாக் கட்டிவிட்டிருப்பார். அந்த பக்கத்துக் குழந்தைகளை பெத்தவாளே அந்தத் திண்ணைக்குக் கொண்டு வந்து விட்டுட்டுப் போவா. அந்தக் குழந்தைகளுக்குப் படிப்புச் சொல்லித்தர்ற வாத்தியாருக்கு இத்தனை மரக்கால்னு நெல் போயிடும். இப்படித்தான் வழக்கம். ஏன்னா, வாத்தியார், கதை சொல்றவா இவாள்ளாம் சமூகத்துக்கு உதவறவாளாகவும், அப்படி அந்த சமூகத்துக்கு உதவறவாளை சமூகம் போஷிக்கணும்ங்கற கடப்பாடும் இருந்தது. கல்வி விலைகொடுத்து வாங்க முடியாத விஷயம் ஆனதாலே, அதுக்கு பணமா ஒரு கூலி கொடுத்து கொறைச்சு மதிச்சவாளா ஆயிடுவோமோன்னு குற்ற உணர்வும் இருந்தது.அதான் அவா ஜீவனம் நடத்தறக்கு நெல்லா அளந்து விட்டுறதுன்னு வழக்கம் இருந்தது. பொருளா தர்றதிலே சில அசெளகரியங்கள் பிற்காலத்திலே வந்ததினாலே எல்லாருக்கிட்டேயும் ஏதோ வாங்கி ஒண்ணாச் சேர்த்து சன்மானம்ங்கற பேர்லே தந்திடறதுன்னு பிற்காலப் பழக்கம் ஆனது."

"இதுலே இவ்வளவு விஷயம் இருக்காப்பா?.. தெரியாம தத்துபித்துன்னு உளறிட்டேன். சாரிப்பா.."

"நீ இந்த காலத்துலே வளர்ந்து ஆளாகின பொண்ணு இல்லையா?..
அதனாலே அந்தக்கால இந்த வழக்கமெல்லாம் தெரிஞ்சிருக்க நியாயம் இல்லை தான். போகட்டும்.நீங்கள்ளாம் டூர் போனேளே, அந்த இடத்திலேருந்து தானே பேசறே?.."

"ஆமாப்பா.. இன்னிக்கு இங்கிருந்து கிளம்பறோம். நாஷ்வெல் போய்ச் சேர ராத்திரி ஆயிடும்.. ஊருக்குப் போய் நாளைக்குப் பேசறேன்."

"உங்க ஊர் பேரைச் சொன்னாலே அந்த பெரிய பிள்ளையார் தான் சட்டுன்னு ஞாபகத்துக்கு வர்றார். பிள்ளையார் அனுகிரகம் எல்லாருக்கும் உண்டு. எல்லாத்துக்கும் அவர் துணையா இருப்பார். சந்தோஷமா இரு."

"சரிப்பா.."

"அர்ஜூன் கிட்டே பேசினேனா, அங்கே எல்லாரையும் விஜாரித்ததா சொல்லு. இந்த வாரக்கடைசிலே அவனும் பேசுவான்னு நெனைக்கறேன்."

"எப்பப்பா அங்கே அந்த சதஸ் ஆரம்பிக்கறது?"

"அடுத்த மாச மத்திலே. ஏற்பாடெல்லாம் பலமா நடந்திண்டிருக்கு.
வெளி தேசத்திலேந்தெல்லாம் டெலிகேட்ஸ் வர்றா."

"பிர்மாண்டமாத்தான் நடக்கப்போறதுன்னு சொல்லு."

"மனோகர்ஜியின் அப்பா கண்ட கனவு இது. பிள்ளை காலத்லே நிறைவேறப் போறது. சதஸ்லே சமர்ப்பிக்க வேண்டிய கட்டுரையையெல்லாம் ரொம்பத் தீர்மானமாத் தயாராயிண்டிருக்கு. ஆனா ஒண்ணு. எதுவும் நம்ம கையிலே இல்லே. நம்ம கையிலே இருக்கற மாதிரி நமக்கு போக்குக் காட்டி போக்கு காட்டி கனகச்சிதமா அவன் எல்லாத்தையும் முடிச்சுவைப்பான். அந்த ஒரு நம்பிக்கைலே தான் எல்லாம் ஓடிண்டிருக்கு."

"ரொம்ப நேரம் ஆயிருக்கும் உனக்கு. நான் அப்புறம் பேசறேன். உடம்பைப் பாத்துக்கோ, அப்பா! அம்மாகிட்டேயும் பேசறேன். சரியா?"

"சரிம்மா. குழந்தையை ஜாக்கிரதையா பாத்துக்கோ. மாப்பிள்ளையை நான் விஜாரித்ததா சொல்லு. ஃபோனை வைச்சிடட்டுமா?.."

"சரிப்பா.." என்று கிரிஜாவிடமிருந்து குரல் தெளிவாக வந்ததும், ரிஸிவரை அதனிடத்தில் வைத்தார் கிருஷ்ணமூர்த்தி..


(தேடல் தொடரும்)







Saturday, January 16, 2010

ஆத்மாவைத் தேடி…32 இரண்டாம் பாகம்

ஆன்மிகத்தின் அடுத்த கட்டத்தை நோக்கி....


32. "ஹலோ.. அப்பா!"


தொலைபேசி ரீஸீவரை நேராக நிமிர்த்தித் தூக்கி,"தமா! நான் அப்பா பேசறேம்மா" என்றார் சிவராமன்.

"ஹலோ, அப்பா! எப்படியிருக்கே?"

"நான் நன்னாத்தாம்மா இருக்கேன்! நீங்கள்ளாம் எப்படியிருக்கேள்? டூர்ல்லாம் முடிஞ்சதா?.. இப்போ எங்கிருந்து பேசறே?"

"இன்னிக்குத் தாம்பா, இந்த காபின்லேந்து செக்-அவுட். கிளம்பறத்துக்கு முன்னாடி உங்கிட்டேப் பேசிட்டு போலாம்னு.."

"ஓ.. ரொம்ப சந்தோஷம், தமா! குழந்தை நன்னா இருக்கானா?மாப்பிள்ளையைக் கேட்டதாச் சொல்லு.."

"மணிவண்ணன் ஃபைன் அப்பா.. இந்த வெகேஷனை நன்னா என்ஜாய் பண்ணினாம்பா.. அவர், கிரிஜா, அவ ஆத்துக்காரர், குழந்தை ரிஷி எல்லாரும் செளக்கியம் அப்பா... நான் இப்போ உன்னைக் கூப்பிட்டதே..." தமயந்தி எதுக்கோ தயங்குவது போல சிவராமனுக்குத் தோன்றியது.

உடனே யோசனையுடன், "என்னம்மா.. என்ன, விஷயம்?.. சொல்லு.." என்று ஆதுரத்துடன் கேட்டார்.

"ஒண்ணுமில்லே, அப்பா! உன்னை மாதிரி, அம்மா மாதிரி இங்கே பாத்தேன்னு நேத்திக்கு ஃபோன் பேசறத்தே நான் சொன்னேன்லே.. அவாளை நேர்லேயே பாத்தோம்பா.. அவா வேறே யாரோ.. "

"அப்படியா.. அப்பவே தான் அது தெரிஞ்சிடுத்தே, அம்மா.. நாங்கள்ளாம் குத்துக் கல்லாட்டம் இங்கே இருக்கறச்சே அவா வேறே யாரோவாத்தானே இருக்கணும்."

"என்னன்னா.. என்ன சொல்றா, அவ..?" என்று அம்மா அங்கே பதறியபடிக் கேட்பது இங்கே தமயந்திக்குக் கேட்டது.. கேட்டு, அப்பாவிடம் அவசரமாகச் சொன்னாள்:
"ஒண்ணுமில்லேப்பா.. அம்மா கிட்டே நான் பேசறேன்னு சொல்லு.. அவாளுக்குக் கோயம்புத்தூராம்.. எங்களை மாதிரி ஃபால்ஸ் சீசனுக்கு இங்கே வந்திருக்கா..
அவ்வளவு தான். எங்களுக்கெல்லாம் இன்னிக்கு லன்ச் அவா கேபின்லே தான்.
வேறே ஒண்ணும் இல்லே.. அம்மா கிட்டே குடு. நான் பேசிக்கறேன்.. ஓ.கே.வா?.." என்றாள் தமயந்தி.

"உங்கம்மாக்கு இப்படிச் சொன்னையானா தலையும் புரியாது, வாலும் புரியாது..
அன்னிக்கே அநாவசியமா அவளை நான் குழப்பலே.. நீ சொல்றதை அவ கிட்டே இப்பச் சொல்லிடு.. நான் அப்புறம் விவரமா அவளுக்குச் சொல்லிக்கறேன்."

"சரிப்பா.. அம்மா கிட்டே ரிஸீவரைக் கொடு."

ஒரு தயக்கத்திற்குப் பிறகு,"தமா.. என்னடி, என்ன சொல்றே?.. எல்லாரும் அங்கே செளக்கியம் தானே?" என்று கேட்டாள் மாலு.

"இங்கே எல்லாரும் செளக்கியம், அம்மா.. நீ ஏன் பதட்டப்படறே?"

"பதட்டப்படாம, எப்படிடீ?.. அப்பாவும், பொண்ணும் என்னன்னமோ பேசிக்கறேள்.
எனக்கு ஒண்ணும் புரியலே.. இந்த லட்சணத்திலே பதட்டப்படாம என்னடிம்மா செய்யறது?"

"ஒண்ணுமே இல்லேம்மா.. மேட்டர் ரொம்ப சிம்பிள். உன்னை மாதிரியும், அப்பா மாதிரியும் இங்கே தூரத்லே ரெண்டு பேரைப் பாத்தேன். . நீங்க எங்கடா இங்கேன்னு ஆச்சரியப்பட்டு, போன தடவை அப்பா கிட்டே பேசறத்தே அதைச் சொன்னேன். அவாளை நேரே இன்னிக்குப் பாத்தேன்.. நீங்க இல்லேன்னு தெரிஞ்ச்சிடுத்து.. அதான், அப்பா கிட்டே இப்போ அதைச் சொன்னேன்."

"நல்ல கூத்துடி அம்மா, இது?.. நாங்க இங்கே இருக்கறச்சே, அங்கே எப்படி?.. அதான் நாங்க உன்னோட நேத்திக்கு பேசறத்தேயே, நாங்க இல்லே அதுன்னு உனக்குத் தெரிஞ்ச்சிருக்குமே.."

"தெரிஞ்சிடுத்து, அம்மா! இப்போ நான் கால் போட்டுச் சொல்றது எதுக்குன்னா
அவாளை நேர்லேயே பாத்தோம்னு சொல்றதுக்காகத்தான்."

".........................."

"என்னம்மா, கம்முனு ஆயிட்டே.."

"நல்ல பொண்ணுடி, நீ.. சரி, மத்ததையும் சொல்லு.... கேட்டுக்கறேன்."

"உன்னை மாதிரி பாத்தேன்னு சொன்னேன்லே.. அவா நீ இல்லேன்னாலும், அசப்புலே உன்னை மாதிரியே நேர்லேயும் இருந்தாம்மா... ஒரு பத்து பதினஞ்சு வயசு கொறைச்சுக்கோயேன்.. பத்து பதினெஞ்ச்சு வருஷத்துக்கு முன்னாடி, என் கல்யாணத்துக்கு முன்னாடி, நீ எப்படி இருந்திருப்பையோ, அப்படி இருந்தான்னு வெச்சுக்கோயேன்!" என்று சொல்லிவிட்டு 'கலகல'வென்று சிரித்தாள் தமயந்தி.

"சிரிப்பைப் பாரு!.."

"பின்னே என்ன அம்மா?.. சீரியஸ்ஸா இருக்கற உன்னை சிரிப்பு மூட்டாம எப்படி சமனப்படுத்தறது.. அதுசரி.. என்னவோ, தியான வகுப்பெல்லாம் அங்கே நடக்கறதுன்னு கேள்விப்பட்டேன்.. என்ன பிரயோஜம்?.. இப்படியா எடுத்ததுக் கெல்லாம் பதட்டப்படுவா?"

"ஒரு வேடிக்கை என்ன தெரியுமா?.. உங்கப்பா தான் இங்கே தியான வகுப்பு கிளாஸ் எடுக்கறார்.."

"ஓ.. அப்பா! ஓ.கே.. அவர் தான் அதில்லே எக்ஸ்பர்ட் ஆச்சே?.. நீ அந்த கிளாஸூக்- கெல்லாம் போறது இல்லையா?"

"போகாம, பின்னே?.. முன்னைக்கு இப்போ எவ்வளவோ பரவாயில்லேடி.
முந்தில்லாம் முணுக்குன்னா 'இப்படியோ, அப்படியோ'ந்னு முன்னூறு யோசனை வரும். இப்போ எவ்வளவோ பரவாயில்லே.. நிறைய நிதானம் வந்திருக்கு. நான் நெறைய விஷயங்கள்லே நேர்ப்பட்டதே, இங்கே வந்ததினாலேதான்னு நெனைக்கறேன். இங்கே நாங்க எப்படி இருக்கோம்ங்கறே?.. திவ்யமான சிவன் கோயில்.. அம்மாடி.. பெருமான், கொள்ளை அழகு. நேர்லே பேசறார்.. ஒரு நாளைக்கு ஜென்மசாபல்யம் மாதிரி எங்களை அனுகரிக்கவும் செஞ்சார்.. எந்த ஜென்மத்திலே யார் செஞ்ச புண்ணியமோ, தெரிலே! உங்கப்பா, நான், கிருஷ்ணா எல்லாரும் இங்கே தங்கி இதெல்லாம் பாத்து, கேட்டு, ரசிக்கப் பாக்கியம் செஞ்சிருக்கோம்னு சொல்லணும்.. வேதம், உபநிஷதம் எல்லாம் படிச்சு கரைகண்டவாளோட பரிச்சயம்.. சொன்னா அதெல்லாம் புரியாதுடி.. இங்கே இருந்து அனுபவிச்சுத்தான் இதையெல்லாம் புரிஞ்சிக்க முடியும்.."

"ஓ.. வெல்.. நிறையச் சொல்றேம்மா.. கேட்கக் கேட்க இன்னும் கேக்கணும்னு ஆசையா இருக்கு. நான் அப்புறம், எங்க ஊருக்குப் போயி பேசறேம்மா! பை.. டேக் கேர்.. கிருஷ்ணா மாமா கிட்டே போனைக் கொடு.. கிரிஜா பேசணும்ங்கறா!..

"ஓ.. உடம்பைப் பாத்துக்கோடி.. ஊருக்குப் போய் பேசு! இதோ, கிருஷ்ணா கிட்டே கொடுக்கறேன்." என்று சொல்லிவிட்டு, கிரிஜா லைன்லே வந்ததும் அவளிடம் செளக்கிய சமாச்சாரங்களை விசாரித்து விட்டு, மாலு, கிருஷ்ணமூர்த்தியைக் கூப்பிட்டு அவரிடம் ரிஸிவரைக் கொடுத்தாள்.


(தேடல் தொடரும்)



ஆத்மாவைத் தேடி…. 31 இரண்டாம் பாகம்

ஆன்மிகத்தின் அடுத்த கட்டத்தை நோக்கி....


31. இசை இன்பம்


ன்றைய மாலை பயிற்சி வகுப்பில், மாணிக்கவாசகரின் திருவாசகக் கீர்த்தித் திருவகவலில் வரும் 'வாதவூரில் வந்தினிதருளிப் பாதச்சிலம்பொலி காட்டிய பண்பும்' என்கிற அருந்தொடர் வாசகத்திற்கு பொருள் கூறி சுவாசப் பயிற்சிகள் பற்றிக் கூறினார் சிவராமன். உயிர்மூச்சு பற்றியும், அதை முறைப்படி இயக்கி ஒழுங்குமுறைப் படுத்தும் பயிற்சிகளின் ஆரம்பப் பாடங்களைத் தொட்டு, அதற்கான பயிற்சிகளை படிப்படியாகச் செய்து காட்டி, திருப்பி எல்லோரும் அதைச் செய்வதைக் கண்காணித்து, வேண்டிய திருத்தங்களை வேண்டியவர் களுக்குக் கூறினார்.


மாலை சிவன் கோயில் தரிசனம் வழக்கம் போல வெகு அற்புதமாக அமைந்தது. ஒவ்வொரு நாளும் அன்றைய தரிசனம் அன்று பெற்ற புது அனுபவமாக அத்தனை பேருக்கும் அமைந்து விடுவது வாடிக்கை. காலையிலிருந்து கேட்ட உரை, பின்னாலான பயிற்சி வகுப்பு என்று அன்று பூராவும் பெற்ற அனுபவத்தை அன்றைய மாலை தரிசனத்தின் போது பெருமானின் காலடிகளில் சமர்ப்பித்து நன்றி சொல்வதேபோல அவன் அருளுக்கு வேண்டிக்கொள்ளல் அனைவருடைய வழக்கமும் ஆயிற்று.


ஒவ்வொரு நாளும் அன்றைக்கான மாலை தரிசனத்தில் தினமும் இரண்டு பாடல்களையாவது இசையுடன் பாடினால் தான் மாலுவுக்குத் திருப்தி. அன்றைய தின பாடலுக்காக மாலு சந்நிதிக்கு முன் அமர்ந்ததுமே அத்தனை பேரும் பின்னால், பக்கத்தில் என்று வரிசையாக அமர்ந்துவிடுவார்கள். பூங்குழலியும், நிவேதிதாவும் மாலு பாடும் பொழுதே சேர்ந்து பாடத் தயாராகி விடுவார்கள். இவர்கள் எல்லோரும் சேர்ந்து அமர்ந்தவுடனேயே பிறைசூடிய பெருமானும் அவர்கள் பாடப்போவதைக் கேட்கத் தயாராகி விட்டமாதிரி தோன்றும்.


இன்றைக்கு மாலு குழுவினர் முதலில் 'ஒரு நாள் ஒரு பொழுதாகிலும் சிவன் நாமம் உச்சரிக்க வேணும்.. ஜென்மம் கடைத்தேற..' என்கிற பாடலை காமாஸ் ராகத்தில் பாடிய பொழுது அவையினர் மெய்மறந்தனர். இராகமாலிகையில் அடுத்துப் பாடிய, வள்ளலாரின் "கோடையிலே இளைப்பாற" பாடலின் குளுகுளு சுகத்தில் சொக்கிப் போயினர். அடுத்து, ஆனந்த பைரவியில் "சொற்றுணை வேதியன்.." என்று தொடங்கிய பொழுது, நாவுக்கரசரும் அவர்கள் கூடவே அமர்ந்து ஆசி வழங்குவது போலத் தோன்றியது.


பூங்குழலிக்கும், நிவேதிதாவுக்கும் மாலுவைப் போலவே நல்ல குரல் வளம். அந்த இனிமை, இப்பொழுது மாலுவுடன் சேர்ந்து பாடும் பொழுது இத்தனை நாள் அடையாத இன்னொரு சிகரத்தைத் தொட்டு விட்ட மாதிரி தனி அழகுடன் மிளிர்ந்தது. சில நேரங்களில் அவர்களை மட்டும் பாட விட்டு, மாலு மெளனமாகி விடுவாள். மாலுவும் கூடச்சேர்ந்து பாடுகிறார் என்கிற நினைவில் இருவரும் இழைந்து ராக ஆலாபனை செய்து முடிக்கும் பொழுது 'நான் எங்கேயும் போகவில்லை, உங்களுடன் தான் இருக்கிறேன்' என்று சொல்கிற மாதிரி மாலு அவர்களுடன் சேர்ந்து கொள்வாள். உடனே அவர்களுக்கு குஷி பிறந்து விடும். லேசாக மாலுவைப் பார்த்து முறுவலித்தபடி நம்பிக்கையுடன் பாடுவார்கள்.


இந்த நேரத்திலெல்லாம் நிவேதிதாவுக்கு சின்ன வயசில் தான் சைக்கிள் விடக் கற்றுக் கொண்டது நினைவுக்கு வரும். அவளை சைக்கிள் சீட்டில் அமர்த்தி காலை ஊன்றிப் பெடலை அழுத்தச் சொல்லி விட்டு பின்னாடி சைக்கிள் சீட்டைப் பிடித்த படி அவளுடைய அண்ணன் வருவான். பின்னாடி சீட்டைப் பிடித்துக் கொண்டே வருபவன், எப்பொழுது சீட்டை விட்டான் என்று தெரியாது. அவன் கூட ஓடி வரவில்லை என்று தெரிகின்ற தருணத்திலும், கீழே விழுந்து விடாமல் பேலன்ஸ் பண்ணி சமாளித்து நம்பிக்கையுடன் நிவேதிதா நாளாவட்டத்தில் தானே தனியாக சைக்கிள் ஓட்டக் கற்றுக் கொண்டு விட்டாள்.. அந்த நம்பிக்கை இப்பொழுதும் தன்னுள் மாய்ந்துவிடவில்லை என்று தெரிந்து கொண்ட உற்சாகத்தில், யாருக்கும் தெரியாதவாறு பூங்குழலியின் கையை அழுத்திப் பிடித்தவாறே ஸ்வரபிரஸ்தாரம் செய்வாள். பூங்குழலியோ ஆரம்பத்தில் கொஞ்சம் காலம் சங்கீதம் கற்றுக் கொண்டவள். அந்த ஞானம் பட்டுப்போகாமல் ஒட்டிக் கொண்டிருந்ததால் மாலுவின் துணை என்கிற கொழுங்கொம்பைப் பற்றியடி அவள் சங்கீத ஞானம் பச்சென்று வளரத் தலைப்பட்டது. இந்த இரண்டு பேரின் தனித்தன்மையான முன்னேற்றம் மாலுவுக்கு மிகுந்த உற்சாகத்தைக் கொடுத்தது. சதஸ்ஸின் தொடக்க நிகழ்ச்சியாக இந்த இருவரின் தனிப்பட்ட கச்சேரியையே வைத்து விடவேண்டுமென்று மாலு நினைத்திருந்தாள். தன் நினைப்பு நிறைவேறுவதற்கு துணையாயிருக்க ஈசனை ஒவ்வொரு நாளும் வேண்டிக் கொள்ளவும் செய்வாள்.


தீபாராதனை முடிந்து வெளிப்பிரகாரத்திற்கு வரும் பொழுது அத்தனைபேரின் இதயத்திலும் ஆனந்தத்தாண்டவமிட்டுக் கொண்டிருந்தான் ஆடலரசன். தேவதேவன் நடுநாயகமாக வர அவரைச் சுற்றி வந்து கொண்டிருந்த நாலைந்து பேர் அட்டகாசமாக சிரித்தபடி அவரை ஏதேதோ கேட்டுக் கொண்டு வந்தனர்.
மேகநாதனும் கிருஷ்ணமூர்த்தியும் மிகவும் யோசனையில் ஆழ்ந்த மாதிரி நடந்து வர, பின்னால் வந்த சிவராமன் தமிழகக் குடவரை கோயில்கள் பற்றி சித்தரசேனனிடம் ஏதேதோ கேட்டுக் கொண்டு வந்தார்.


இன்றைக்குக் கொஞ்ச கூடத் தான் நேரம் ஆகிவிட்டது. சாப்பாடு முடித்து வந்த சிலபேர் அந்த மஹாதேவ நிவாஸின் கீழ்த்தள நீண்ட வராண்டாவிலேயே கூட்டமாக அமர்ந்து சுவாரஸ்யமாகப் பேசிக்கொண்டிருந்தனர். நாளைய தினம்
பிராணன் பற்றிய தேவதேவனின் உரையைத் தொடர்ந்த கலந்துரையாடல் என்பதால், கலந்துரையாடலுக்கான விவர சேகரிப்பைக் குறித்தே பலரின்
கவனம் படிந்திருந்தது.


கிருஷ்ணமூர்த்தியுடன் மாலு எதையோ சொல்லிக் கொண்டே முன்னால் சென்று கொண்டிருக்க அவர்கள் பின்னால் சிவராமன் வந்து கொண்டிருந்தார். நடுஹாலை அவர் நெருங்குகையில், அவசர அவசரமாக அவரை நோக்கி வந்த ராம்பிரபு அவரை நெருங்கி, "நல்லவேளை.. நீங்களே வந்து விட்டீர்கள்.. உங்களுக்கு போன் கால் வந்திருக்கு, சார்!" என்றான்.

"எனக்கா.. யாருன்னு கேட்டீங்களா?"

"உங்க மகள் தான் சார்.. தமயந்தின்னு சொன்னாங்க.." என்று கொஞ்சம் உரக்கவே அவன் சொல்ல, "ஓ.. போன்லே தமாவா?" என்று கேட்டபடியே முன்னால் சென்று கொண்டிருந்த மாலு திரும்பினாள்.



(தேடல் தொடரும்)






Friday, January 15, 2010

ஆத்மாவைத் தேடி …. 30 இரண்டாம் பாகம்

ஆன்மிகத்தின் அடுத்த கட்டத்தை நோக்கி....



30. உள்ளிருக்கும் நெருப்பு


தேவதேவன் பிராணன் பற்றி உரையாற்றுகையில் இந்த விஷயம் குறித்து எல்லாத் தகவல்களையும் கொடுத்து விடவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். அதனால் கிட்டத்தட்ட எல்லாச் செய்திகளையும் உள்ளடக்கியதாக அவரது உரை இருந்தது. இந்த உரை தொடர்பான தேவையான விவரங்களான விளக்கங்களை தேவையானோருக்கு பின்னால் கலந்துரையாடலிலும் சொல்வதாக இருந்தார். அதனால் தொடர்ச்சியாகக் கேட்போருக்கு அவர் ஆற்றும் உரையில் மிகுந்த ஆர்வம் இருந்தது.

"கடைசியில் உதானன் பற்றியும் பிப்பலாத முனிவர் சொல்வதை இன்று பார்ப்போம்" என்று மேற்கொண்டு தேவதேவன் தொடர்கையில் அவர் சொல்வதை அவையில் அமர்ந்திருந்தோர் கவனமாகக் கேட்கத் தொடங்கினர்.


"தேஜோ ஹ வா உதானஸ்தஸ்மாத் உப்சாந்ததேஜா: புனர்வம் இந்த்ரியைர் மனஸி ஸம்பத்யமானை:


"புறவுலகில் நெருப்பாக இருப்பதே உடலின் உட்பகுதியில் உதானனாக இருக்கிறது. இந்த நெருப்பு அணையப்பெற்றவனின் புலன்கள் மனத்தில் ஒடுங்குகின்றன். அவன் மீண்டும் பிறக்கிறான் என்று சொல்லப்பட்டிருக்கிறது.


"மனிதன் உடலின் எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்திருப்பது இந்த உதானன். மனித உடலில் பரவியிருக்கும் உதானனாகிய இந்த வெப்பச்சூடு அவனிலிருந்து நீங்கி உடல் குளிர்ந்து விட்டால் அவன் உடலிலிருந்து பிராணன் விடுபட்டதாகக் கொள்கிறோம். பிராணனும், உதானனும் நீங்கி விட்ட உடல் இறந்து பட்டதாகக் கொள்ளப்படும். உடலுக்கு மட்டுமே மரணம் என்பதால் அவன் இறக்கிறான் என்பதையே அவன் மீண்டும் பிறக்கிறான் என்று சொல்லப் பட்டிருக்கிறது.


"யச்சித்தஸ்தேனைஷ ப்ராணயாயாதி ப்ராணஸ்தேஜஸா யுக்த: ஸஹாத்மனா யதா ஸங்கல்பிதம் லோகம் நயதி"


"பிராணனும், உதானனும் உடலை விட்டு விட்டதினால், அந்த உடல் இறந்து விட்டதாகச் சொல்கிறோம். இப்பொழுது உடல் விட்டு நீங்கிய பிராணன் என்ன செய்கிறது என்று கேள்வி. நீங்கிய அந்தப் பிராணன் உதானனின் துணையுடன் அவனை அவன் விரும்பிய உலகிற்கு அழைத்துச் செல்கிறது.


"இந்த ஸ்லோகத்தில் வரும் "'ஸங்கல்பிதம் லோகம்'--'அவன் விரும்பிய உலகிற்கு' என்னும் சொற்றொடருக்கு பல பாடபேதங்கள் உண்டு. அதாவது பல வியாக்கியானங்கள் உண்டு. மரணிக்கும் தருவாயில் அந்த இறுதி கணத்தில் இறப்பவன் என்ன எண்ணம் கொள்கிறானோ அதற்கேற்பவான உலகிற்கு கொண்டு செல்லப்படு கிறான் என்று சிலர் அர்த்தம் கொள்வர். வாழ்க்கை நெடுக எப்படிப்பட்ட எண்ணம் கொண்டவானாய் அவன் இருந்தானோ, அப்படிப் பட்ட எண்ணமே இறக்கும் தருவாயிலும் அவனைச் சூழ்ந்திருக்குமாதலால், என்னன்ன சமஸ்காரங்களின் பலனாகிய துணையுடன் எப்படிப் பட்டவனாய் ஒருவன் வாழ்ந்தானோ அதற்கேற்பவான உலகை அடைகிறான் என்று கொள்ளலாம்.


"பிராணனை அறிந்தவன் எல்லாம் அறிந்தவன் ஆகிறான். அதன் வெளிப்பிரபஞ்ச இயக்கத்தையும், உள் உடல் செயல்பாடுகளையும் அறிந்தவன், இந்த ஞானத்தை மனத்தில் இருத்தி செயல்படுபவனும், அவனது சந்ததியும் எல்லா நலங்களையும் பெற்றவர்களாவர்...என்று சூட்சுமத்தை தான் உணர்ந்தவாறு உணர்த்துகிறார், பிப்பலாத முனிவர்.. அவருக்கு மீண்டும் நம் நமஸ்காரங்கள்" என்று அன்றைய உரையை முடித்தார் தேவதேவன்.


தேவதேவன் தனது உரையை முடித்தாரே தவிர, அந்த ஹால் முழுக்க அவர் குரல் நிறைந்திருக்கிற உணர்வே அவர் உரையை செவிமடுத்த அத்தனை பேருக்கும் இருந்தது. நோட்டுப் புத்தகத்தில் குறிப்புகளாகக் குறித்துக் கொண்டவர்கள், மீண்டும் அவற்றை ஒருதடவைத் திருப்பிப் பார்க்கின்ற செயலாய் மேலோட்டமாக அத்தனையையும் தம் நினைவில் மீண்டும் கொண்டு வந்த செய்கை வாழ்க்கை பூராவும் இதுபற்றிய எதையும் மறந்து விடலாகாது என்று அவர்கள் உறுதி பூணுவதே போலிருந்தது.


(தேடல் தொடரும்)

Thursday, January 14, 2010

ஆத்மாவைத் தேடி…. 29 இரண்டாம் பாகம்

ஆன்மிகத்தின் அடுத்த கட்டத்தை நோக்கி....


29. ஏழு ஜூவாலைகள்


ன்றைய அமர்வு நேரம் முடிவதற்குள்ளாகவே பிராணனைப் பற்றியச் செய்திகள் அத்தனையையும் தொகுத்துத் தந்து விட்டால், நாளைய அமர்வின் ஆரம்பமாய் கலந்துரையாடலை வைத்துக் கொள்ளலாம் என்று நினைக்கிறேன் என்று சொன்ன தேவதேவன் விட்ட இடத்திலிருந்து தனது உரையைத் தொடர்ந்தார்.

"உடலையும் மனத்தையும் உருவாக்குற பிராணன், பிரமிக்கத்தக்க ஒரு ஒழுங்கு முறையில், உடலில் செயல்படும் அதிசயத்தைச் சொல்கிறார், பிப்பலாத முனிவர்.

"யதா ஸ்ம்ராடேவ அதிக்ருதான் வினியுங்க்தே / ஏதான் க்ராமானேதான் க்ராமான் அதிதிஷ்ட்டஸ்வேதி ஏவமேவைஷ ப்ராண இதரான் ப்ராணான் ப்ருத்க்ப்ருதகேவ ஸன்னிதத்தே"


"இந்த பிராணன் ஒரு மாமன்னன் எப்படி இராஜ்யபரிபாலன தேவைக்காக அலுவலர்களை நியமிக்கிறானோ அப்படி தலையாய பிராணனாக --தலைமை தாங்குபவனாக -- தான் இருந்து கொண்டு-- மற்ற தேவைகளுக்காக மற்ற பிராணன்களை நியமிக்கிறது.


"இருப்பது ஒரு பிராணன் தான். அது தன்னையே வெவ்வேறு விதங்களில் பகுத்துக் கொண்டு, உடலின் எந்த எந்த இடங்களில் செயல்படுகிறதோ அதற்கேற்பவான அந்த அந்தப் பெயர்களைப் பெறுகிறதாம்.


"பாயூபஸ்தேsபானம் சஷூ: ச்ரோத்ரே முகநாஸிகாப்யாம் ப் ராண: ஸ்வயம் ப்ராதிஷ்ட்டதே மத்யே து ஸமான: / ஏஷ ஹ்யேதத்துதமன்னம் ஸமம் நயதி தஸ்மாதேதா: ஸப்தார்ச்சிஷோ வந்தி"


"கண், காது, வாய், மூக்கு ஆகிய இடங்களை பிராணன் தன் ஆளுகையில் வைத்துக் கொள்கிறது. அதாவது பார்த்தல், கேட்டல், பேசுதல், சுவாசித்தல் ஆகிய காரியங்களைப் பிராணன் பார்த்துக் கொள்கிறது. கழிவுகளை வெளியேற்ற அபானன், உடம்பின் நடுப்பகுதியான வயிற்றில் செய்ல்பட சமானன் என்று வகுத்துக்கொள்கிறது. இது தவிர உடலின் எல்லா பாகங்களுக்கும் அந்தந்த பகுதிக்குத் தேவையான அளவு அர்ப்பிக்கப்பட்ட உணவை வழங்குவதும் சமானனின் வேலையாயிற்று. பிராணனிலிருந்து ஏழு ஜுவாலைகள் உண்டாகின்றன.


"இந்த இடத்தில் ஒன்றைச் சொல்ல வேண்டும். 'ஹூதம்'--'அர்ப்பிக்கப்பட்ட' என்று ஒரு பதத்தை உபயோகித்து, உணவை உண்ணும் செயலைச் சொல்கிறார், முனிவர். வழக்கமாக, யாகத்தில் படைக்கப்படுவதையே 'அர்ப்பிக்கப்படுதல்' என்பர். உண்ணும் செயலையே ஒரு வேள்வியாகக் காண்கிறது உபநிஷதம். ஜீரண காரியங்களுக்காக வயிற்றுப் பகுதியில் அக்னி கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கிறது. வாய் வழியாக அன்னம் ஆஹூதிப் பொருளாக வயிற்றுக்கு, அந்த அக்னிக்கு அர்ப்பிக்கப்படுகிறதாம். மரணித்ததும் உடலையே ஆஹூதியாக அக்னிக்கு அர்ப்பித்ததும், தாய் வயிற்றில் தங்கிப் பின் இந்த உலகில் தலைகாட்டி, வாழ்ந்து முடித்த வேலை முடிந்ததாகக் கொள்ள வேண்டும்.


"இப்பொழுது பிராணனலிருந்து உண்டான ஏழு ஜுவாலைகளுக்கு விளக்கம் வருகிறது. வயிற்றில் ஜ்வலிக்கும் அக்னியிலிருந்து எழும்பும் ஏழு ஜுவாலைகள் தாம் இவையாம். கண், காது, நாசி துவாரம் என்று இரண்டு இரண்டாக ஆறு, வாய்க்கு ஒன்று என்று சேர்த்து மொத்தம் ஏழு. இந்த ஏழு பகுதிகளும் இந்த ஏழு ஜுவாலைகளிடமிருந்து தான் செயல்பட சக்தியினைப் பெறுகிறதாம்.


"அடுத்து வியானனைப் பற்றிச் சொல்லும் பொழுது நம்மை திகைக்க வைக்கும் நாடிக்கணக்கு வருகிறது. இது அதற்கான ஸ்லோகம்:


"ஹ்ருதி ஹ்யேஷ ஆத்மா / அத்ரைதத் ஏகதம் நாடீனாம் தாஸாம் தம் தமேகைகஸ்யாம் த்வாஸப்ததிர் த்வாஸப்ததி: ப்ரதிசாகா
நாடீ ஸகஸ்ராணி வந்த்யாஸூ வ்யானச்சரதி"


பிராணன் தங்கியிருக்கும் நடுமத்தி பிரதேசத்திலிருப்பது 101 நாடிகள்.அவற்றுள் 1000 கிளைநாடிகள் உள்ளன. இவை ஒன்வொன்றிற்கும் 72 கிளைநாடிகள் என்று ஆக 72000 கிளைநாடிகள் உண்டு. இவற்றில் வியானன் சஞ்சரிக்கிறது.


"ஆதித்யோ ஹ வை பாஹ்ய: ப்ராண உயத்யேஷ ஹ்யேனம் சாக்ஷூஷம் ப்ராணம் அனுக்ருஹ்ணான: ப்ருதிவ்யாம் யா தேவதாஸைஷா புருஷஸ்ய அபானம் அவஷ்டப்யந்தரா யதாகாச: ஸ ஸமானோ வாயுர்வ்யான:"


"புறப்பார்வைக்குத் தெரிகிற பிராணன் சூரியனே. அருள்கூர்ந்து கண்களில் பிராணனாய் அவன் சுடர்விடுகிறான். அபானன் உடலைத் தாங்குகிறது. பூமிக்கும் ஆகாயத்திற்கும் இடையிலுள்ள வெளியாய் இருக்கும் சமானனே மனிதனுள் அகவெளியாய் அமைந்திருக்கிறது என்று இந்த ஸ்லோகம் கூறுகிறது" என்று சொல்லி விட்டுக் கொஞ்சம் நிறுத்தித் தொடர்ந்தார் தேவதேவன்.


"இந்த இடத்தில் இது தொடர்பான ஒரு செய்தியைச் சொல்ல வேண்டும். மனிதன் உடல் பூராவும் இரத்த ஓட்டம் சுற்றிச் சுழன்று வந்து பிராண சக்தி சப்ளை ஆகிக் கொண்டிருக்கிறது -- ஒரு இடத்தைத் தவிர. அது மனிதனின் கண்களுக்குள்ளே இருக்கும் விழிவெண்படலம். இந்த விழிவெண் படலம் தனக்கானஆக்ஸிஜனை நேரிடையாக காற்றிலிருந்தே எடுத்துக் கொள்கிறது" என்று சொன்ன தேவதேவன், உரையை மேலும் தொடர்வதற்குத் த்யாராய் காகிதக் கத்தையின்
அடுத்த பக்கத்தைத் திருப்பினார்.


(தேடல் தொடரும்)

Tuesday, January 12, 2010

ஆத்மாவைத் தேடி….28 இரண்டாம் பாகம்

ஆன்மிகத்தின் அடுத்த பக்கத்தை நோக்கி....


28. சுழற்காற்று


மதிய உணவிற்குப் பின் அவை சீக்கிரமாகவே நிரம்பி விட்டது. தேவதேவனும் அவைக்கு வந்து மேடைக்குப் போகாமல் அவர்களுடனேயே அமர்ந்து கொண்ட பொழுது, நிறையப் பேர் அவரைச் சூழ்ந்து கொண்டு, 'ஆஃப் தி ரெகார்ட்'டாய் கேள்விகள் கேட்டு, விஷயத் தெளிவு பெற்றனர். மாலை பயிற்சி வகுப்புகளுக்குப் போக வேண்டியிருந்ததினால், இந்த மதிய அமர்வை உணவு முடிந்தவுடன் கொஞ்சம் சீக்கிரமாகவே வைத்துக் கொள்வது அனைவருக்கும் பிடித்திருந்தது. சரியாக இரண்டு மணிக்கு தேவதேவன் மேடை ஏறினார்.


"பிப்பலாத முனிவர் சொன்னதாக இந்த அவையில் காலை சொல்லியவற்றை மீண்டும் நினைவுக்குக் கொண்டு வருவோம்.." என்று உரையை ஆரம்பித்தார் தேவதேவன். பிப்பலாத முனிவர் சொன்னதை--பிராணன் ஆத்மாவிலிருந்து தோன்றியது என்பதை--- ஆத்மா இருப்பதால் பிராணனும் இருக்கிறதாக எடுத்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால் மனிதனும் அவனது நிழலும் போல ஆத்மாவும் பிராணனும் என்று முதலிலேயே சொல்லி விட்டார். அடுத்து மனதின் செயல்பாடு களுக்கேற்ப இந்தப் பிராணன் உடலையும் வார்த்தெடுக்கிறது. இதற்குப் பொருள் ஒரு மனிதன் செய்யும் செயல்களுக்கு ஏற்ப பிராணன் அவன் உடலை அமைக்கிறது என்கிறார். நம் வாழ்க்கை முறை, மனத்தில் உருவாகும் குணநல சேர்க்கைகள், எதிர்கொள்ளும் அனுபவங்கள், அதற்கான நமது நடவடிக்கைகள் இவற்றை யெல்லாம் வைத்து பிராணன் அந்த குறிப்பிட்ட மனிதனின் உடலையும் மனதையும் உருவாக்கும் என்கிறார்" என்று சொல்லி விட்டு, "இப்படி உருவாகும் இந்த உருவாக்கம் தான் மனிதன் அடிக்கடி சொல்லும் அந்த 'நான்' என்று நான் நினைக்கிறேன்" என்றார் தேவதேவன்.


அவையில் லேசான கலகலப்பு உடனே கிளம்பவே தேவதேவன் சடாரென்று, "மன்னிக்கவும். இது எங்கள் குழுவின் அபிப்ராயம் இல்லை; என் மனதில் தோன்றியதைச் சொல்லி விட்டேன்" என்றார்.


"பொருத்தமாகத் தான் சொல்லியிருக்கிறீர்கள்" என்று சித்திரசேனன் சொன்னதும், தலைதாழ்த்தி, "மிக்க நன்றி" என்று சொல்லி விட்டு மேலும் தொடர்ந்தார் தேவதேவன்.


"இந்த விஷயத்தைக் கொஞ்சம் எளிமைபடுத்திச் சொல்லலாம் என்று நினைக்கிறேன். தொடர்ந்து ஒருவன் செய்யும் காரியங்களான கர்மாக்களுக் கேற்ப அவன் உள்ளமும், உடலும் உருவாகின்றன. இப்படிப்பட்ட உருவாக்கம், பிராணனால் தான் நிகழ்கிறது. இந்த உருவாக்கம் தான் ஒருவனைப் பிரதிநிதித்துவப்படுத்தவும் செய்கின்றது. அவன் அழிந்தபின்பும் அவனுக்காக நிற்பது.


"இந்த இடத்தில் ஒன்றைச் சொல்ல வேண்டும். ஒருவரைப் பற்றி சொல்ல வேண்டும். சொல்லவில்லை என்றால் செய்நன்றி கொன்றவராவோம். பாரதத்தின் ஆன்மிக வெளிப்பாடுகளை உலக அரங்கில் எடுத்தோதி நம்மைத் தலைநிமிரச் செய்தவர் சுவாமி விவேகானந்தர். உபநிஷத்துக்கள் சொல்லும் உண்மைகளின் அழகில் சொக்கிப்போய் அவர் அவற்றை ரசித்த அழகு அவரது உரைகளில் காணக்கிடக்கிறது. பிராணனின் செயல்பாடுகளைச் சொல்கிற இந்த இடத்தில், சுழற்காற்றின் செயலுக்கு ஒப்புமைப்படுத்தி தமது 'ஞானதீப'த்தில் எவ்வளவு அற்புதமாக அதைச் சொல்கிறார், பாருங்கள்:


*"நமது ஒவ்வொரு செயலும், நினைப்பும் அவரவர் ஆழ்மனத்தில் ஒரு பதிவை உண்டாக்குகிறது. மரணத்திற்குப் பிறகு, மனிதன் போகும் இடத்திற்கு வழிகாட்டுவது அவனது சமஸ்காரங்களே. மரணித்த உடல், பஞ்ச பூதங்களுடன் கலந்துவிடுகிறது. ஆனால், அவனின் செயலான சமஸ்காரங்கள் அழியாது அவன் மனத்துடன் ஐக்கியமாகியிருக்கும். மனத்தின் நுட்பமான செயலாற்றல், லேசில் அழியாத ஒரு திறனை அதற்குக் கொடுத்திருக்கிறது. சுழற்காற்று சுற்றி அடிக்கும் பொழுது நிகழ்வது போலத்தான். பல திசைகளிலிரு ந்து வரும் காற்றோட்டங்கள், ஓரிடத்தில் சந்தித்து, ஒன்று சேர்ந்து, சுழல ஆரம்பிக்கின்றன. இந்த சுழற்சியில், காகிதம், குப்பைக் கூளங்கள் போன்ற வற்றைத் தங்களுக்குள் இழுத்துக்கொண்டு சுழன்றடித்துச் செல்கிறது. வேறொரு இடத்தில் அவற்றை உதறிவிட்டு, வேறு பொருட்களை இழுத்துக் கொள்கின்றன. இதைப்போலவே, பிராணன் ஜடப்பொருளிலிருந்து உடலையும் மனத்தையும் உருவாக்குகிறது. பிறகு உடல் சாயும் வரை சுழன்று செல்கின்றன. சாய்ந்ததும், வேறு பொருட்களிலிருந்து வேறு உடலையும், மனத்தையும் உருவாக்குகின்றன. இவ்வாறு தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. ஜடப்பொருள் இல்லாமல், சக்தியால் பயணம் செய்ய முடியாது. எனவே, உடல் வீழ்ந்தவுடன் எஞ்சியிருக்கும் மனத்தின் மீது பிராணன் சமஸ்கார வடிவில் செயல்படுகிறது. பிறகு பிராணன் பிறிதோர் இடத்திற்குப் போய், புதிய பொருட்களிலிருந்து புதிய உடலை உருவாக்கிக் கொண்டு மறுபடியும் இதேபோல் செயல்படுகிறது. இப்படியே தனது சக்தி முழுவதும் தீரும் வரை, வெவ்வேறு இடங்களுக்கு மாறிக்கொண்டே இருக்கிறது. சக்தி முழுதும் தீர்ந்த பின்னால் தான் அது கீழே விழுகிறது.. அத்துடன் அதற்கான செயலும் முடிவடைகிறது" என்கிறார் அந்த ஞானச்செல்வர்.


"இப்பொழுது இதுவரை சொல்லியவற்றை ஒரு சேரப் பார்ப்போம். ஆத்மாவாக நம்முள் உறையும் இறைவனிடமிருந்து வெளிப்பட்டது பிராணன். மனசின் செயல்பாடுகளுக்கேற்ப அவனது உடலை உருவாக்கி அந்த உடல் செயல்பட சக்தியையும் அளிப்பது பிராணன். மரணித்ததும் உடல் மட்டுமே பஞ்சபூதங் களுடன் கலக்கிறது. பிராணன் மனத்தின் சமஸ்காரங்களைச் சுமந்து கொண்டுத் திரிகிறது. தனது சக்தி இருக்கும் வரை வெவ்வேறு ஜடங்களாகிய உடல்களில் சஞ்சரித்து சக்தி தீர்ந்ததும் விழுகின்றது" என்றார் தேவதேவன்.



* நன்றி: 'ஞானதீபம்'


(தேடல் தொடரும்)

அனைவருக்கும் அன்பான பொங்கல் வாழ்த்துக்கள்


Saturday, January 9, 2010

ஆத்மாவைத் தேடி …. 27 இரண்டாம் பாகம்

ஆன்மிகத்தின் அடுத்த கட்டத்தை நோக்கி....


27. உயிரின் சரிதம்


"முதலில் உடல், அதன் உறுப்புகள், பிராணன் இவற்றையெல்லாம் பற்றி உபநிஷத்துகள் என்ன சொல்கின்றன என்பதைப் பார்த்து விட்டு, பின்னால் மனம், புத்தி,ஆனந்தம் ஆகியவற்றை வைத்துக் கொள்ளலாம் என்று எண்ணுகிறேன். இப்படிச் செய்வதால் ஒரு செளகரியம் உண்டு. உடல்--மனம் இந்த இரண்டு சம்பந்தப்பட்டவை களையும் தனித்தனியாக ஓர்ந்து பார்க்க வாய்ப்பு கிடைப்பதால் இவற்றையெல்லாம் பற்றி தீர்மானமான கருத்துக்களைத் தொகுக்க முடியும் என்று எண்ணுகிறேன். இந்த இரண்டுக்கும் இடையே கலந்துரையாடலை வைத்துக் கொண்டு, இறுதியாக இரண்டுக்கும் ஆன வரையறைகளை வகுத்துக் கொள்ளலாம் என்று நினைக்கிறேன்" என்று மேலும் தொடர்வதற்கு முன் தேவதேவன் எப்படி இந்த உரையை அமைத்துக் கொள்ளலாம் என்பது பற்றி தங்கள் குழுவின் கருத்தாக இதைச் சொன்னார்.


"முதலில் உடம்பைத் தனியாக எடுத்துக் கொள்வோம். உடல், அந்த உடல் உயிர்ப்புக்கான பிராணன், அந்தப் பிராணனின் இருப்புக்கான சக்தியாக உணவு-- இந்த மூன்றும் ஒரு முக்கூட்டு. இந்த முக்கூட்டிற்கு அடிப்படை ஆதாரசக்தியாக இருப்பது உணவு. அதனால் உணவைத் தெய்வமாகப் போற்றுகிறது உபநிஷதம். சகோதரி நிவேதிதா அவர்கள் இந்த அவையில் உரையாற்றும் பொழுது பிராணனைப் பற்றி லேசாகக் கோடி காட்டினார்கள். பிராணனை 'காற்றின் தந்தை நீ' என்று சுட்டிக்காட்டும் பிரச்ன உபநிஷதக் குறிப்பைக் கொடுத்தார்கள். மனம் இயங்குவதற்குக் கிடைத்த இயங்கு பொருள் உடல் என்றும் மனம், உடல் இரண்டையும் உருவாக்கியதும் பிராணன் தான் என்றார்கள். இன்னொன்றையும் சொன்னார்கள். 'ஆத்மாவும், பிராணனும் மனிதனும் அவனது நிழலும் போல என்று சொல்லி அதற்கு எடுத்துக்காட்டாக பிரச்ன உபநிஷத சுலோகம் ஒன்றையும் சொன்னார்கள்.



"பிராணன் பற்றி விவரமாக இந்தப் பகுதியில் சொல்ல வேண்டி யிருந்ததினால், அவர் பேசும் பொழுது இந்தபிராணன் பற்றி கோடிட்டு காட்டுகிற மாதிரி சில குறிப்புகள் மட்டுமே கொடுக்க நேர்ந்தது. மனிதனின் ஐந்து உடம்புகளைப் பற்றிப் பேசும் இந்த நேரத்து பிராணனைப் பற்றி விவரமாக பேச நேரும் என்கிற காரணத்தால் தான் அந்த ஏற்பாடு" என்று சொன்ன தேவதேவன் தொடர்ந்தார். "இந்த உரை தயாரிக்கும் பொழுது உயிரியல் அறிஞர் உலகநாதன் அவர்களும் உடனிருந்தார்கள்.. உபநிஷத்துக்கள் சொல்லும் உண்மைகளை ஒரு புறம் வைத்துக் கொண்டு மறுபுறம் இன்றைய உயிரியல் விஞ்ஞானக் கண்டு பிடிப்புகளான அறிதல்களுடன் அவற்றை ஒருசேரப் பார்த்து, நமது உயிரியல் விஞ்ஞானம் இன்னும் என்ன என்ன விஷயங்களில் அகலக் கால்பரப்ப வேண்டும் என்று தொகுத்துக் கொள்வதின் அடிப்படையில், அதற்கு நம்மாலான பங்களிப்பையும் தர வேண்டும் என்கிற ஆசையும் எங்களுக்கிருந்தது.


"பிராணன் என்பது ஆத்மாவிலிருந்து தோன்றியது; மனிதனும் அவனது நிழலும் போல இது ஆத்மாவில் விரவியுள்ளது; மனத்தின் செயல்பாடுகளால் இது உடலில் நிலைகொண்டுள்ளது-- என்று பிரச்ன உபநிஷதம் சொல்கிறது. இந்த பிரச்ன உபநிஷதம் பற்றி நிறையச் சொல்ல வேண்டும். இந்த உபநிஷத் அதர்வண வேதத்தைச் சார்ந்தது. 'பிரச்ன' என்றால் கேள்வி என்று பொருள். பிப்பலாதர் என்று ஒரு முனிவர். அறிவு சார்ந்து தங்களுக்குள் எழுந்த சில வினாக்களுக்கு விடை தேடி பாரதத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஒன்று சேர்ந்த ஆறு பேர் இந்த பிப்பலாத முனிவரைத் தேடிக் கண்டுபிடிக்கின்றனர். அவரிடம் குருகுலக் கல்வி அனுகிரகிக்க வேண்டுகின்றனர். முனிவரும் சம்மதிக்கிறார். குருகுல வாழ்க்கையின் ஆரம்ப கால பயிற்சிகளுக்குப் பின் தங்கள் மனத்தைக் குடைந்த கேள்விகளை இந்த ஆறு பேரும் குருவிடம் பவ்யமாக சமர்ப்பிக்கின்றனர். படைப்பு சம்பந்தப்பட்ட அவர்களின் கேள்விகளுக்கு-- ஒவ்வொருவரும் வரிசையாக கேட்கும் ஒவ்வொரு கேள்வி--அவை தொடர்ப்பாகக் கிளைக்கும் கேள்விகள், இவை அத்தனைக்கும் பிப்பலாத முனிவர் சொல்லும் பதில்களே இந்த உபநிஷதம். இப்படி அந்த ஆறுபேர்களில் ஒருவர் கேட்ட கேள்விகளில் ஒன்று: "ஐயா, இந்த பிராணன் எங்கிருந்து பிறந்தது?"


"இந்தக் கேள்வியைக் கேட்ட அச்வலர் என்பவரின் மகனான கெளசல்யனைப் பார்த்து பிப்பலாத முனிவர் சொல்கிறார்: 'பிராணனின் பிறப்பிடம் ஆன்மாவாகும்" இப்படியே கேள்வி-பதில் ரூபத்தில் உயிரைப் பற்றிய சமாச்சாரங்கள் நிறைய இந்த உபநிஷதத்தில் வருகின்றன. வினாக்களையும் அவற்றிற்கான விடைகளை யும் கண்டு நாம் பிரமிக்கிறோம். அந்த தவசிரேஷ்டரான பிப்பலாத முனிவருக்கு நமது நமஸ்காரங்களைத் தெரிவித்துக் கொண்டு ஒவ்வொன்றாகப் பார்ப்போம்" என்று தேவதேவன் சொன்னார்.


(தேடல் தொடரும்)

Wednesday, January 6, 2010

ஆத்மாவைத் தேடி…. 26 இரண்டாம் பாகம்

ஆன்மீகத்தின் அடுத்த கட்டத்தை நோக்கி....


26. பூஜ்ஜியத்தில் ஒரு ராஜ்யம்.


வையில் அமர்ந்திருப்போர் அத்தனை பேரும் வெகு உன்னிப்பாக தன் பேச்சைக் கவனித்துக் கொண்டிருப்பதை கண்டு மிகுந்த திருப்தியுடன் இரண்டு பேர் எதிரும் புதிருமாக அமர்ந்து உரையாடுவதே போன்ற நெருக்க உணர்வுடன் தேவதேவன் தன் உரையைத் தொடர்ந்தார். "என்னை நானே சுயசோதனை செய்து கொண்ட, நான் உணர்ந்த சில செய்திகளை உங்களுக்கு அவசியம் சொல்லியாக வேண்டும். எனக்கேற்பட்ட இப்படியான உணர்வுகள் இங்கு அமர்ந்திருக்கும் வேறு சிலருக்கும் ஏற்பட்டிருக்கலாம். ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரியான உணர்வில் இப்படியான அனுபவங்களை உணர்ந்திருக்கலாம் என்பதினால் நான் உணர்ந்த வாக்கிலேயே நான் உணர்ந்ததைச் சொல்வது தான் நியாயம் என்று உணர்ந்து இதைச் சொல்கிறேன்.


"திடீரென்று ஏற்பட்ட உடல் கோளாறுக்காக மருத்துவமனை ஒன்றில் சிகித்சைக்காக நான் ஒரு வார காலம் தங்க நேரிட்டது. அப்பொழுது எனக்கேற்பட்ட அனுபவங்கள் இதுவரை அறிந்திராத பல்வேறு உணர்வுகளை என்னில் தோற்றுவித்தது. அந்த அனுபவத்தில் உணர்ந்ததைச் சொல்கிறேன்" என்று ஏதோ கதையைச் சொல்வது போல தன் மனசில் இருப்பதைச் சொல்லத் தொடங்கினார் தேவதேவன். "அந்த மருத்துவமனையில் என் படுக்கைக்கு அருகே மிகப்பெரிய ஜன்னல்ஒன்று உண்டு. அந்த ஜன்னலுக்கு வெளியே மரங்கள் அடர்ந்த தோப்பு மாதிரியான பிரதேசம். பொழுது விடிகின்ற நேரத்தில் புள்ளினங்கள் எழுப்பும் விதவிதமான ஒலிகளில் விழிப்பு வந்து விடும். அதிகாலை ஆரம்பித்து இரவு வரையான அந்த மருத்துவமனையின் இயக்கத்தை ஒரு பட்டியலிட்டுத் தான் சொல்ல வேண்டும். ஒரு வாரம் அந்த மருத்துவ மனையில் இருந்த உணர்வு, வழக்கமாக இல்லாத வேறு ஒரு தனி உலகில் இருப்பது போன்ற உணர்வை என்னில் ஏற்படுத்தியது. அந்த மருத்துவமனைக்கு வெளியான பிரதேசங்களில் எனது செயுல்பாடு இல்லாமையால், என்னுடைய தொடர்ந்த இங்கு இருப்பதான இருப்பே, இருக்கின்ற இந்த மருத்துவமனையே எனக்கு ஒரு தனித்த உலகமாகத் தோற்றமளிக்கின்ற பிரமையை ஏற்படுத்து கின்றதோ என்று கூட எண்ணினேன்.


"இன்னொரு தடவை அப்படியும் இல்லாத ஒரு நிலை ஏற்பட்டது. சென்னை ரயில் நிலையத்தில், ஒரு இரவு நேரம் பூராவும் நான் இருக்க நேர்ந்த போது வேறு வகை யான தனி உலக உணர்வு ஏற்பட்டது. இரயில்கள் வந்தும் போய்க்கொண்டும் இருக்கின்றன. அதே போல வெளியூர்களுக்குச் செல்கிறவர்கள், இங்கு வருபவர்கள் என்று, தங்குமிடங்களில், காத்திருப்பு இடங்களில், சொந்தங்களை வழியனுப்ப-- வரவேற்க, என்று ஒரே ஜனத்திரள்! இரவு, பகல் வித்தியாசமில்லா மல் அப்படி ஒரு கூட்டம்! சந்தேகமேயில்லாமல் இந்த இரயில் நிலையமே ஒரு தனி உலகம் தான் என்கிற தீர்மானத்திற்கு அப்போது வந்து விட்டேன். வெளி தேசம் சென்றபொழுது தொடர்ந்த பிரயாணத்தின் இடைநிலை இடமாகத் தங்கிய ஃப்ராங்க்ஃபட் விமானநிலையத்தில் இதே மாதிரியான உணர்வு தான் என்னை ஆட்கொண்டது.


"இதெல்லாம் நமக்கு வெளியே அந்தந்த நேரத்து ஏற்படுகின்ற உணர்வுகளின் அடிப்படையில் ஏற்படுகின்ற மயக்கங்கள் என்று தெளிந்தேன். ஆனால் எனக்குள்ளேயே ஒரு தனி உலகை நான் கண்டபொழுது திகைத்துப் போய் விட்டேன். அந்த தனிஉலகைப் பற்றித்தான் இப்பொழுது உங்களுக்குச் சொல்லப் போகிறேன்.." என்று சொல்லிவிட்டு லேசாகத் தொண்டையைச் செருமிக் கொண்டார் தேவதேவன். "இந்தத் தனி உலகம் அந்த மூன்றும் மாதிரியானது அல்ல; வேறு வகைத்தானது. வேறு வகைத்தான தனி உலகம் இது என்று--- நமது உடலினைத் தான் சொல்கிறேன். எல்லாம் உங்களுக்குத் தெரிந்த செய்திகள் தான். இருந்தாலும் இந்த இடத்தில் இது என்று சொல்ல வேண்டிய எதையும் சொல்ல வேண்டிய இடத்தில் பொருத்திச் சொன்னால், அப்படிச் சொன்னதின் உணர்வே அலாதியானது இல்லையா?..


தேவதேவன் நிதானமாக பேசியது அவையின் நிசப்தத்தில் ஸ்பஷ்டமாக ஒலித்தது. "இந்த உடலை எனது என்று சொந்தம் கொண்டாடுகிறோமே தவிர உள்ளிருக்கும் சமாச்சாரம் எதுவும் நம் ஆளுகையில் இல்லை என்று கொஞ்சமே யோசித்தாலும் பட்டவர்த்தனமாகப் புரியும். வாய் வழி உள்ளே போவது, சக்தியாக உறிஞ்சப்பட்டு சக்கையாக வெளிவருவது வரை சத்தியமாக நம் கையில் இல்லை; உள்ளே அனுப்புவது மட்டும் தான் நம் வேலையாகிப் போகிறது. அதற்கு மேலான இயக்கம் நம்மால் இல்லை. விரல் நகம் வளர்வது கூட நம் கையில் இல்லை! உடலுக்கு ஒரு சிறு தொந்தரவு வந்து விட்டாலும் இந்த உண்மை முகத்தில் அறையும்! காலையில் எழுந்ததும், இன்று பூராவும் இந்த உடம்பு இப்படி இயங்க வேண்டும் என்று புரோக்ராம் செட் பண்ணுவது போல் எதுவும் செய்ய முடியாது; எதுவும் நம் கையில் இல்லை. அடுத்த நிமிடம் என்ன நடக்கும் என்று தெரியாத நிலையில் தான், அனுதினமும் கழிந்து கொண்டிருக்கிறது. தூங்கியிருந்தாலும் விழித்திருந்தாலும் சம்பந்தப்பட்டவரை சட்டையே செய்யாமல் மூச்சு பாட்டுக்க உள்ளே--வெளியே; இதயம் பாட்டுக்க தன்னுடைய லய துடிப்பில், நுரையீரல்கள் பாட்டுக்க தன் போக்கில் சுருங்கியும் விரிந்தும், ஆக.. ஒன்று நன்றாகத் தெரிகிறது, நம் கட்டுப்பாட்டில் இல்லாத தூல உடம்பின் உள் இயக்கம் என்பது நம்மிடமிருந்து வேறுபட்ட தனி உலகம் தான்! ஆனால், நாம் உயிர்ப்புடன் இயங்குவதற்கான ஆதாரம் உடலின் உள் உறுப்புகளின் இயக்கத்தைப் பொறுத்து இருக்கிறது என்பது தான் உண்மை. அதாவது நம்மால் ஆகக்கூடியது என்று எதுவும் இல்லாத, நமக்கேத் தெரியாத ஒரு சக்தியின் ஆளுகையில், அதன் தயவில், நாம் இயங்கிக் கொண்டிருக்கிறோம். அனுதின சாகசங்களான நம் வாழ்வே, ஒரு பூஜ்யத்தின் மேல் நிச்சயமில்லாமல், அதுவே வேறொரு சக்தியின் ராஜ்யமாக ஆளப்பட்டுக் கொண்டிருக்கிறது!



"இன்னும் யோசித்துப் பார்த்தால், இந்த 'நாம்' 'நமது' 'நம்மால்' எங்கிற வார்த்தைப் பிரயோகங்களே அர்த்தமில்லாதவைகளாகத் தெரிகிறது. தெரிந்தும் வேறு வழி தெரியாமல், இந்த உடல் இந்த நேரத்தில் இவனது என்று பெயர் வைத்த சொந்தத்தில், இந்த 'எனது' 'என்னுடைய' வார்த்தைகளை உபயோகித்துக் கொண்டிருக்கிறோம். வேறு வழி இல்லை. உயிர் சுமந்து உலவுவதற்கு ஆதாரமான இந்த உடலின் இயக்கமே என்னால் இல்லாத போது, இவற்றிற் கெல்லாம் எந்த அளவு உரிமை கொண்டாடுவது என்று எனக்கே தெரியவில்லை. எவரால் இந்த காரியங்களெல்லாம் நடக்கிறதோ அவருக்குச் சொந்தமானது அல்லவா இது?.. 'யாரால் இந்தக் காரியங்கள் நடக்கிறது என்று தெரியவில்லை; ஏதோ நடக்கிறது.. நான் அனுபவித்துக் கொண்டிருக்கிறேன்' என்பது சரியான பதிலாகாது.. குறைந்தபட்சம் எப்படி இப்படியெல்லாம் நடக்கிறது என்கிற யோசிப்பாவது வேண்டுமில்லையா?.." என்று ஏதோ எதிரில் யாரோ நின்று கொண்டிருக்கிற மாதிரி, அவரிடம் தான் விளித்துக் கேட்கிற மாதிரி கேட்டுவிட்டு மேல்துண்டை இழுத்து விட்டுக் கொண்டு மேலும் தொடர்ந்தார் தேவதேவன். "மோட்டாரில் உட்கார்ந்து வெறுமனே பயணம் செய்பவர் நாம்; அந்த மோட்டாரை ஓட்டுவது வேறு யாரோ. அவர் தயவில் தான் மோட்டார் ஓடுகிறது. இயந்திரம் அவர் ஆளுகையில் இருப்பதால், எந்த நேரத்தில் எதுவேண்டுமானாலும் அவர் செய்யலாம். இதற்கு மேல் ஓடாது என்று பாதி வழியில் அவர் கைவிரித்தால், இறங்குவதைத் தவிர வேறு வழியில்லை. உங்களைப் பொருத்தமட்டில், இந்த நேரத்தில் நீங்கள் அந்த மோட்டாரைப் பெற்றிருப்பதால், உங்களுக்குத் தெரிந்த அளவில் அந்த மோட்டாரை மிக்க கவனத்துடன் பழுதற்ற நல்ல நிலையில் நீங்கள் வைத்திருக்கலாம்; ஆனால் அப்படி வைத்திருப்பது மட்டுமே ஒழுங்கான பயணத்தை உத்திரவாதப்படுத்தப் போவதில்லை. சீரானபயணத்திற்கு பல விஷயங்கள் சம்பந்தப்பட்டுள்ளதால், பயணிக்கிற உங்களுக்கு எதையுமே தீர்மானமாக நிர்ணயிக்க முடியாத நிலை" என்று சொன்ன தேவதேவன் மேலும் தொடர்வதற்கு முன் கொஞ்சம் நிதானித்தார்.


(தேடல் தொடரும்)

Friday, January 1, 2010

ஆத்மாவைத் தேடி …. 25 இரண்டாம் பாகம்

ஆன்மீகத்தின் அடுத்த கட்டத்தை நோக்கி….


25. இருட்டில் பிரகாசித்த ஒளி.


திர்பார்ப்புகளுக்கு எப்பொழுதும் குறைச்சலில்லை. இப்பொழுதெல்லாம் ஒவ்வொரு அமர்வுக்கும் அவை உறுப்பினரிடையே இந்த எதிர்பார்ப்பு உணர்வு மிகவும் கூடிவிட்டது என்றே சொல்ல வேண்டும். ஆன்று அவிந்து அடங்கிய சான்றோராய் ஒவ்வொரு துறையிலும் அவரவர் இருந்தும் இந்த எதிர்பார்ப்புக்குக் காரணம் இருந்தது. பிற துறைகள் சார்ந்த புதுப்புது தகவல்களைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்கிற ஆசை ஒரு பக்கம்; அதுதவிர, சதஸூக்காக சமர்ப்பிக்கப்படும் உரைகள் எல்லாவிதங்களிலும் சிறப்பாக அமைய வேண்டும், அதற்கு தத்தமது பங்களிப்பைச் செலுத்த வேண்டும் என்கிற ஆர்வம் ஒவ்வொருவர் மனத்திலும் பதிந்திருந்ததினால் அந்த ஆர்வம் எல்லோருக்கும் எல்லா நாட்களிலும் எதிர்நோக்கும் எதிர்பார்ப்பாய் மாறிவிட்டது.


இன்றைக்கும் அப்படித்தான். கை நிறைய குறிப்புகளோடு தேவதேவன் மேடையேறினார். அவர் சார்ந்திருந்த குழுவின் பிரதிநிதியாக இன்று தான் முதல் முறையாக இந்த அவையில் அவர் மேடையேறுவதால், அவையில் அமர்ந்திருந்தோர் இயல்பாகவே தங்களிடம் முகிழ்த்த ஆர்வத்தோடு அவர் உரையை எதிர்பார்த்தனர். அவர் இன்று விவரமாகச் சொல்ல எடுத்துக்கொண்ட பொருளும் உபநிஷத்துக்களைச் சார்ந்திருந்ததினால் அவர்களின் ஆர்வம் இன்னும் அதிகரித்திருந்தது.



“உடற்கூறு இயல் அறிஞர் உலகநாதன் அவர்கள் இந்த அவையில் உரையாற்றும் பொழுது உடம்பு பற்றி அந்த உடம்பின் உள்ளிருக்கும் விஞ்ஞான சோதனைக்குத் தட்டுப்படும் உயிரியல் சம்பந்தப்பட்ட உறுப்புகளைப் பற்றி நிறைய சொன்னார்கள். மனவியல் அறிஞர் மேகநாதன் அவர்கள் மனத்தைப் பற்றி நம் சிந்தை நிறைக்கும் படியாக வேண்டிய மட்டும் நிறைய தகவல்களைத் தந்தார்கள். நாம் இப்பொழுது உபநிஷத்துக்களின் பார்வையில் உடலும், உறுப்புகளும், மனமும் கொண்ட மனிதனைப் பார்ப்போம்" என்று தேவதேவன் ஆரம்பித்த பொழுதே, அவையினரின் உற்சாகம் கூடிவிட்டது.


“அப்படிப் பார்ப்பதற்கு முன்னால் ஒன்று" என்று சொல்லிவிட்டு தேவதேவன் வசீகரமாகப் புன்முறுவல் பூத்தார்."எளியோனின் சிந்தையில் மீண்டும் மீண்டும் வந்து போகும் ஒரு செய்தியை முதலிலேயே சொல்லி விடுகிறேன். உபநிஷத்துக்களின் ஞானம் ஒளிச்சுடரிட்டு பிரகாசித்த காலத்தை உத்தேசமாக இப்பொழுது கணிக்க முடிகிறது; கி.மு. 1000-க்கும் கி.மு. 300-க்கும் இடைப்பட்ட காலம் அது என்பது நம்மை நிரம்பவே ஆச்சரியப்படுத்துகிறது. கொஞ்சமே நினைத்துப் பாருங்கள்.. பூவுலகே இருட்டில் மூழ்கி இருந்த நேரம் அது. அந்த நேரத்து இந்த பாரத தேசத்தில் பிரபஞ்சம், சூரியன், சந்திரன், கோள்கள்,ஒலி, ஒளி, உடல், மனம், சிந்தனை, அவற்றிற்கு ஆட்படுதல் என்று இவற்றையெல்லாம் பற்றி யோசித்திருக்கிறார்கள். அவற்றையெல்லாம் பற்றித் தெரிந்து கொள்ள முயற்சித்திருக்கிறார்கள். அவற்றையெல்லாம் பற்றி ஞானமும் கொண்டிருதார்கள். காலம் நமக்குத் தெரியப்படுத்தும் இந்த உண்மையின் உன்னதம், நிச்சயமாக நாம் மிகவும் பெருமைப்படக் கூடிய ஒன்று.


“வேதங்கள், உபநிஷத்துக்கள் மூலமாக இன்று நமக்குத் தெரியவரும் சில செய்திகளை உங்களுடன் கலந்து கொள்ளும் பேறு பெற்றமைக்கு நான் மிகவும் மகிழ்கிறேன். முதலில் மேலோட்டமாக சிலவற்றைப் பார்த்து விட்டு, முடிந்தவற்றை நமது கலந்துரையாடலுக்கு ஏற்ப ஆழ, அகண்டு பார்க்கலாம் என்பது எனது அபிப்ராயம். அதனால் இந்த உரையாற்றலின் முடிவிலோ, அல்லது அவ்வப்போது இடையிலோ நமது கலந்துரையாடல்களை வைத்துக்கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.. இது விஷயத்தில் உங்கள் அபிப்ராயத்தைச் சொன்னால் நல்லது" என்று சொல்லிவிட்டு அவையை நெடுகப் பார்த்தார் தேவதேவன்.

இந்த நேரத்தில் பழஞ்சுவடிகளை ஆராயும் பணியை மேற்கொண்டிருந்த குழுவைச் சார்ந்த மல்லிகார்ஜூனன்,"உரையாற்றலின் இடைஇடையே எப்பொழுதெல்லாம் அவைஉறுப்பினர்கள் விளக்கம் வேண்டிவிரும்புகிறார்களோ அப்பொழுதெல்லாம் நம் கலந்துரையாடலை வைத்துக் கொள்ளலாம்" என்றார்.

"அப்படிச்செய்தால் பல விஷயங்களை விவரமாக நாம் புரிந்து கொண்டு,அதற்கு மேற்கொண்டு செல்லவும், அந்த நேரத்திலேயே பிற தகவல்களோடு ஒப்புமைப்படுத்தி ஆராயவும் வசதியாக இருக்கும் என்று நானும் நினைக்கிறேன்" என்றார் சிற்பகலை வல்லுனர் சித்திரசேனன்.

தேவதேவன் கிருஷ்ணமூர்த்தியைப் பார்க்க,அவரும்,"அவையின் அபிப்ராயப்படி அந்தந்த நேரத்து கலந்துரையாடலை வைத்துக் கொள்ளலாம்..அதற்கான நேரத்தை ஒதுக்கி தங்களுக்குத் தெரியப்படுத்துகிறேன். அந்த நேரத்தில் நாமெல்லாம் கலந்துரையாடலாம்.."என்று சொல்ல, தேவதேவன் மேற்கொண்டு உரையைத் தொடர்ந்தார்.



"இந்த உரையில் உபநிஷத்துகளில் பார்வையில் படைப்பு என்னும் பொருள் பற்றிச் சொல்ல வேண்டும். இறைவனின் படைப்பின் வெளிப்பாட்டில், பரந்த வெளி, காற்று, நெருப்பு, நீர், பூமி – இந்த ஐந்து சமாச்சாரங்களே படைப்பின் மூலம் என்கிறது தைத்திரீய உபநிஷதம். இந்த உபநிஷதம் கிருஷ்ண யஜூர் வேதத்தைச் சார்ந்தது. தைத்திரீயம் என்னும் வார்த்தை, தித்திரி என்னும் சொல்லிலிருந்து வந்தது. தித்திரி என்றால் சிட்டுக்குருவி. வைசம்பாயனர் என்று ஒரு முனிவர். சிட்டுக்குருவி அன்ன அவர் மாணவர்கள் அந்த முனிவரிடமிருந்து இந்த உபநிஷதப் பாடங்களைக் கேட்டதால், இந்த உபநிஷதம் தைத்திரீய உபநிஷதம் என்று அழைக்கப்படலாயிற்று.

“தஸ்மாத்வா ஏதஸ்மாதாத்மன ஆகாச: ஸம்பூத: ஆகாசாத் வாயு: வாயோரக்னி: அக்னேராப: அத்ப்ய: ப்ருதிவீ. ப்ருதிவ்யா ஓஷய: ஓஷதீப்யோsன்னம் / அன்னாத்புருஷ:

“ நம்மில் ஆத்மாவாக விளங்குபவன் இறைவன். அந்த இறைவனிலிருந்து பரந்த வெளி தோன்றியது. அதிலிருந்து இப்படி வரிசையாக-….வெளியிலிருந்து காற்று, காற்றிலிருந்து நெருப்பு, நெருப்பிலிருந்து நீர், நீரிலிருந்து பூமி, பூமியிலிருந்து செடி கொடிகள், அந்தத் தாவர வகைகளிலிருந்து உணவு, உணவிலிருந்து மனிதன்.." என்கிறது தைத்திரீய உபநிஷதம். ஆக, பரந்த வெளி, காற்று, நெருப்பு, நீர், பூமி, செடி கொடிகள், மனிதன்—இத்தனைக்கும் மூலம் இறைவன்.. பார்வைக்கு இனம் பிரித்துப்பார்க்கக் கூடியதாய் ஒவ்வொன்றும் வெவ்வெறாகத்தெரிந்தாலும், அத்தனைக்கும் ஆதிசக்தி இறைவன். அவனின் கூறுகளே அத்தனையும்.


தேவதேவன் அவை முழுக்க ஆழ்ந்து ஒருமுறை உற்றுப் பார்த்து விட்டுத் தொடர்ந்தார்: “ சரியா?.. இனி ஒவ்வொன்றாகப் பார்க்கலாம். முதலில் மனிதனிலிருந்து எடுத்துக் கொள்வோம். மனிதன் என்று பொதுவாகக் குறிப்பிடுவது அவனது ஆளுமையை என்று எடுத்துக் கொண்டாலும் சரியே. ஐந்து உடம்புகள் கொண்டவன் மனிதன், என்கிறது அதே தைத்திரீய உபநிஷதம். தூல உடம்பு, பிராண உடம்பு, மன உடம்பு, புத்தி உடம்பு, ஆனந்தமய உடம்பு என்பவை இந்த ஐந்து உடம்புகள். நம் கண்ணுக்குத் தெரிகிற, நடமாடுகிற இந்த சரீரம் தூல உடம்பு. அடுத்தது இந்த தூல உடம்புக்குள்ளேயே இருக்கிற அகஉடம்பு; இது பிராண சக்தியால் ஆனது. அடுத்தது மன உடம்பு; இது மனத்தால் ஆனது. அதற்கு அடுத்தது புத்தி உடம்பு; இது புத்தியால் ஆனது. கடைசியாக ஆனந்த உடம்பு; இது ஆனந்தத்தால் ஆனது. உடம்பு என்றால் இந்த இடத்தில் தொகுதி என்கிற பொருளில் எடுத்தாளப்பட்டிருக்கிறது. இதில் தூல உடம்பு ஒன்றே வெளிப்பட கண்ணுக்குத் தெரிகிற பகுதியாக அமைந்துள்ளது.


“இங்கே இன்னொன்றையும் சொல்ல வேண்டும். உடலில் உயிர்ப்பாய் உள்ள பிராணனை பிராண உடம்பு என்றும், கண்ணுக்குத் தெரிகிற தூல உடம்பை தூல உடம்பு என்றும் குறித்திருக்கிறார்கள். இந்த இரண்டும் உயிர்வாழும் எந்நேரத்தும் எல்லாரிடம் பொதுவாய் உள்ளவை. தூல உடம்பைப் பற்றிக் குறிப்பிடுகையில்,

“ஸ வா ஏஷ புருஷோ sன்னரஸமய: தஸ்யேமேவ சிர: அயம் ஷிண: பஷ: அயமுத்தர: பஷ: அயமாத்மா இம் புச்சம் ப்ரதிஷ்ட்டாதப்யேஷ ச்லோகோ வதி”

மனிதன் உணவால் ஆனவன். அவன் தலை இது. வலது, இடது பக்கம் இவை. இது நடுப்பகுதி. உடலைத் தாங்குகிற கீழ்ப்பகுதி இது" என்று சொன்னவர் ஒரு வினாடி நிறுத்தி மேலும் தொடர்ந்தார்... .


“அடுத்து, பிராண உடம்புக்கு விளக்கம் சொல்கிறார், கேளுங்கள்:


"தஸ்மாத்வா ஏதஸ்மாதன்ன ரஸமயாத் / அன்யோsந்தர ஆத்மா ப்ராண மய: / தேனைஷ பூர்ண: / ஸ வா ஏஷ புருஷவித ஏவ / தஸ்ய புருஷவிததாம் / அன்வயம் புருஷவித: / தஸ்ய ப்ராண ஏவ சிர: வ்யானோ தஷிண: பஷ: / அபான உத்தர: பஷ: / ஆகாச ஆத்மா / ப்ருதிவீ புச்சம் ப்ரதிஷ்ட்டா / ததப்யேஷ ஸ்லோகோ பவதி"

பிராண சக்தியால் ஆன உடம்புக்கு பிராணனே தலை. வியானன் வலது பக்கம். அபானன் இடது பக்கம். வெளி இதன் உடம்பு. பூமி கீழ்ப்பகுதியாய் இதற்கு ஆதாரமாய் இருக்கிறது"

--என்று கூறிவிட்டு


"மற்ற உடம்பாகிய தொகுதிகளைப் பற்றியும் அவசியம் சொல்ல வேண்டும்..” என்று மேற்கொண்டு தொடர்வதற்கு முன் அவையின் கருத்தறிய ஒருமுறை பார்வையைச் சுழலவிட்டார்.



(தேடல் தொடரும்)


அனைவருக்கும் அன்பான ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!
Related Posts with Thumbnails