மின் நூல்

Wednesday, December 16, 2009

ஆத்மாவைத்தேடி....21 இரண்டாம் பாகம்

ஆன்மீகத்தின் அடுத்த கட்டத்தை நோக்கி....

21. காக்கைச் சிறகினிலே, நந்தலாலா!....

"எப்படிப்பா, இருக்கே?" என்று ஆதுரத்துடன் கிரிஜா தந்தையைக் கேட்டாள்.

"நன்னா இருக்கேம்மா. நீ எப்படியிருக்கே?.. குழந்தை ரிஷி எப்படியிருக்கான்?"

"நான், அவர், குழந்தை எல்லோரும் ஃபைன் அப்பா. ரிஷியை வர்ற வருஷம் மாண்டிஸேரி ஸ்கூலுக்கு அனுப்பலாம்னு நெனைக்கறோம். நேத்திக்கு அரியலூருக்குப் பேசினேன், அப்பா! அங்கே எல்லாரும் செளக்கியம். சுபா மன்னி செக-அப்புக்கு போயிண்டு வர்றாங்களாம்; பேபி வாகா நன்னா இருக்காம்."

"சந்தோஷம், கிரிஜா! நம்ம கையிலே என்ன இருக்கு?.. எல்லாம் அவன் பாத்துப்பான்.. போனவாரம் ஒருநாள் அர்ஜூன் பேசினான்.. அங்கே இருக்கற நிலவரமெல்லாம் சொன்னான். பாவம், உங்கம்மா.. நான் அங்கே இருந்தேன்னா அவளுக்கு யானை பலம் மாதிரி.. இப்போ, பாரு.. தனியாளாய் எல்லாத்தையும் சமாளிச்சிண்டிருக்கா.."

"அம்மா கிட்டேயும் பேசினேன். அம்மா என்ன சொன்னா தெரியுமா?"

"என்ன சொன்னா?"

"பாவம், அப்பா.. இங்கே அவர் இருந்து தனக்குன்னு கேட்டு எதையும் அனுபவிக்கலே; காலம் பூராவும் 'கதை சொல்றேன், கதை சொல்றேன்'னு அவர் காலம் போயிடுத்து.. இப்போ அவருக்கா தோணி மனசுக்குப் பிடிச்சதுன்னு போயிருக்கார். இப்ப இருக்கற இடம், அவருக்கும் பிடிச்சிருக்குப் போலிருக்கு. பிடிக்கறவரைக்கும் இருந்துட்டு வரட்டும்; இருக்கவே இருக்கு நம்ம பாடு; நாமா எதையும் சொல்லி புருஷாளைக் கவலைப்படுத்தக் கூடாது'ன்னு சொன்னா."

"கிரிஜா! என்னிக்கும் அவ சுபாவம் அப்படி; புதுசாவா திடீர்னு இன்னிக்கு மாறிடப் போறது? உங்களுக்கும் என்னோட அம்மா மாதிரியே அப்படியே உரிச்ச வைச்ச ஒரு அம்மா!... இதுக்கெல்லாம் என்ன புண்ணியம் செஞ்சிருக்கோம்னு தான் தெரியலே.. எப்படியெல்லாம் அந்த ஆண்டவன் அனுகிரச்சிருக்கார்னு ஒவ்வொரு விஷயத்திலும் நெனைச்சுப் பாத்து அவனைத் தொழறதைத் தவிர, வேறெதுவும் எனக்குத் தோணலைம்மா."

"நீங்க எதுவும் கவலைப்பட வேண்டாம், அப்பா! எல்லாம் உங்க மனசுக்கு நல்லபடி நடக்கும்.. ஆனா எனக்கு எப்பவும் உங்களைப் பத்தின கவலை தான்.."

"நான் நன்னா இருக்கேம்மா.. எனக்கென்ன?.. நீ உன் உடம்பை.."

"ஏதோ இந்தியாவிலே வடக்கே கிழக்கேன்னு வேறே ஸ்டேட்லே இருந்தாக்கூட அடிக்கடி இல்லேனாலும் ஆறு மாசத்துக்கு ஒருமுறையாவது வந்து பாக்கலாம்.. பொண்ணாப் பொறந்தவாளுக்கே இப்படித்தான்னு நிர்ணயிச்சிக்குன்னாலும், அயல் தேசத்திலே வேறு இருக்க நேர்ந்திடுச்சா.. எல்லா உறவுகளையும் மறந்திட்டு இருக்க முடிலேப்பா.."

"வாழ்க்கைங்கறது அதான்ம்மா.. கிடைச்சதை சந்தோஷமா ஏத்துக்கணும்.. அதுலே சிறப்பா நமமளாலே என்ன செய்ய முடியும்னு பாக்கணும்."

"சொன்னா ஆச்சரியப்படுவே.. நேத்திக்கு ராத்திரி என்ன நடந்தது தெரியுமா?.. ராத்திரி சாப்பாடு முடிச்சிடடு, ரவுண்டா எல்லாரும் உட்கார்ந்திண்டு நம்ம ஊர்க்கதையெல்லாம் பேச ஆரம்பிச்சோம், பாரு!.. பாதி பேசிண்டிருக்கறச்சேயே, தமாவுக்கு அவ அப்பா--அம்மா ஞாபகம் வந்துடுத்து.. கண்லே நீர் முட்டறது; அவளை நான் தேத்தினாலும், என்னைத் தேத்திக்க முடிஞ்சாத் தானே?.. ராத்திரி பூரா உங்க ஞாபகம் தான்; வயசான காலத்திலே குடும்பத்தோட இல்லாம, இது என்ன டெல்லிலேன்னு ஒரே ஆதங்கமா இருந்தது.. யோசிச்சிண்டே படுத்திண்டிருந்தேன். தூக்கம் வர்லே.. தண்ணி குடிச்சிட்டுப் படுத்துக்கலாம்னு வெளிலே வந்தா, இந்த கேபின் பின்பக்கம், பால்கனிப் பக்கம் கண்ணாடி போட்டு தடுத்திருக்கும். அங்கே சேர்லே உட்காந்திண்டு, தமா வெளிப்பக்கம் வெறிச்சுப் பாத்திண்டிருக்கா.. 'என்னடி, தூங்கலியா'ன்னா, 'அப்பா--அம்மா ஞாபகம் வந்துடுத்துடி.. ஏதோ யோசிச்சிண்டு உட்கார்ந்திருக்கேண்டி'ன்னா. நானும் அவளோட் கொஞ்ச நேரம் பேசிண்டிருண்டிருந்து, படுக்கப்போறச்சே மணி மூணு.. "

"கிரிஜா!.. இங்கே நம்ம மனசைப் பத்தி ஒரு பேராசிரியர், மேகநாதன்னு பேரு, எவ்வளவு சொல்றார் தெரியுமா?.. பிரமாதம் போ! ஒண்ணைப் பத்தியே விடாது நெனைக்கிற நெனைப்பு, எண்ணம்ங்கறது ரொம்ப பலம் வாஞ்சதாம்; மனசாலேயே மானசீகமா வேண்டியவர்கள் உருவத்தைக் கூடப் பாக்கலாமாம். நான் சின்ன வயசிலே, அம்புலிலே எங்க அம்மாவைப் பாத்திருக்கேன்.. ராத்திரி வேளைலே வாசல் குறட்டிலே உக்காந்திண்டு பளிச்சினு தெரியற நிலாவை கண்கொட்டாமப் பாத்திண்டிருப்பேன்.. அம்மாமுகத்தை நெனைச்சிண்டு அந்த நிலாலே அம்மா தெரியறமாதிரி கற்பனை பண்ணிண்டு பாப்பேன்.. கண்ணாடிலே தெரியற மாதிரி அம்மா மூஞ்சியே நிலாலே தெரியும்.. ஊர்ந்து அம்மாவும் நெலாவோடேயே போற மாதிரி தெரியும்.. இப்போ கூட கண்ணை மூடிண்டு உக்காந்திண்டு உங்களையெல்லாம் நெனைச்சாப் போதும், ஒவ்வொரு சீனா சினிமாலே ஓடற மாதிரி, ஒவ்வொருத்தரா எனக்கு முன்னாடி நடமாடற மாதிரி தோணறது.. எல்லாமே ஆச்சரியமாத் தான் இருக்கு.." என்று தன் தந்தை சொல்லிக்கொண்டே வருகையில், இன்று காலை கண்ட நிகழ்ச்சியைப் பற்றி அவரிடம் தான் சொல்லாமலேயே, கண்ட காட்சிக்கு அவர் விளக்கம் சொல்கிற மாதிரி இருந்தது கிரிஜாவுக்கு.

"பாரதியாரும் இந்த மாதிரியான உருவெளிக்காட்சியை உணர்ந்திருக்கார் போலிருக்கு; அதான் கண்ணனை நினைச்சே இருந்த அவருக்கு, பாக்கற காக்கை, மரம் எல்லாம் நந்தலாலாவாத் தோணித்தோ என்னவோ.. " என்று அவர் சொன்ன போது, கிரிஜாவுக்கு உடல் சிலிர்த்தது.

"ரொம்ப நேரம் ஆயிட்டது, கிரிஜா! அப்புறம் பேசலாமா?" என்று கிருஷ்ண மூர்த்தி சொன்ன போது அவர் சொன்னதே மனசில் வட்டமடித்துக் கொண்டிருந்தது. அந்த உணர்விலேயே அனிச்சையாய், "சரிப்பா.. அப்புறம் பேசலாம்.." என்று சொல்லியபடி போனை வைத்தாள்.

அடுத்த நாளே அவள் அவரைக் கூப்பிடுவாள் என்று அப்பொழுது அவளுக்கு தெரியாதிருந்தது.


(தேடல் தொடரும்)

2 comments:

Kavinaya said...

உண்மைதான் ஜீவி ஐயா. நீங்கள் சொல்வது சாத்தியம்தான்.

ஜீவி said...

@ கவிந்யா

தொடர்ந்து வந்து படித்துக் கருத்துச் சொல்வதற்கு மிக்க நன்றி, கவிந்யா!

Related Posts with Thumbnails