மின் நூல்

Monday, August 31, 2009

ஆத்மாவைத் தேடி.... 9 இரண்டாம் பாகம்

ஆன்மீகத்தின் அடுத்த கட்டத்தை நோக்கி....

9. யாதுமாகி நின்றாய்

ழக்கமாக காலை உணவு நேரம் முடிந்தவுடன் கொஞ்ச நேரம் தாமதித்துத்தான் அவை தொடங்கும். ஆனால் இன்று வழக்கத்திற்கு மாறாக, காலை உணவு நேரம் முடிந்து கொண்டிருக்கையிலேயே இன்னொரு பக்கம் அவை நிரம்ப ஆரம்பித்து விட்டது. அந்தளவுக்கு மனவியல் அறிஞர் மேகநாதனின் உரை அனைவரையும் கவர்ந்திருந்தது. அதுவும் தவிர, நேற்றைய உரையின் தொடர்ச்சியாய் விட்டுப் போனவற்றை ஒன்று விடாமல் தொடர்ச்சியாக மேகநாதனிடம் கேட்டு விளக்கம் பெற வேண்டும் என்கிற ஆவலும் அனைவரிடமும் இருந்தது.

மனவியல் துறையைச் சிறப்புப் பாடமாக ஏற்று, அதில் துறைபோகிய ஞானம் உடைய மேகநாதனுக்கும் ஆரோக்கியமான விவாதங்களைக் கிளறும் இப்படிப்பட்ட ஒரு மேடை மிகவும் பிடித்திருந்தது. அதுவே அவரது அதீத உற்சாகத்திற்கும் காரணம் ஆயிற்று.

நேற்றைய அமர்வின் தொடர்ச்சியை தொடரும் முன், விட்ட இடத்தை நினைவுபடுத்திவிடலாம் என்பதும் மேகநாதனின் உத்தேசம். அதே யோசனையில் மைக்கைப் பிடித்தவர்,மூளையிலுள்ள நியூரோன்களில் ஏற்படும் ரசாயன மின்மாற்றங்களைப் பற்றிக் குறிப்பிட்டு விட்டு, 'மனம்' என்பது பற்றி உத்தேசமாக பல விவரங்களைச் சொல்வதை விட விஞ்ஞானபூர்வமாக அதை நிறுவுவதிலிருந்து நாம் நழுவக்கூடாது என்றார். இந்த நிரூபணத்தில் நமக்கு வெகுவான அக்கறை இருப்பதால், இதற்குப்பின் கூடவிருக்கிற சதஸ், இதற்கான வேண்டிய வழிவகைகளைச் செய்ய உறுதிபூணவேண்டும் என்றும் வேண்டிக் கொண்டார்.

அவையின் ஏகோபித்த சம்மதம் இதற்குக் கிடைத்தவுடன் அவர் குரலில் உற்சாகம் கொப்பளித்தது."நாம்வாழ நேர்ந்த வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியும் மனத்தின் உணர்வுகளால் அமைகிறது என்று பார்த்தோம். இந்தப் பகுதியில் யாருக்கும் சந்தேகம் இல்லையென்றே நினைக்கிறேன்" என்று குரலை உயர்த்திச் சொன்னவர், மேலும் தொடர்ந்தார்: "புலன் உறுப்புகளால் பார்க்குமொரு காட்சி, அது சம்பந்தப்பட்ட உணர்வுகளால் மனத்தை ஆட்டுவிக்கிறது. அந்த ஆட்டுவிப்பிற்கு ஏற்ப நாம் செயல்படுகிறோம். ஓக்கே?.. இப்பொழுது அடுத்த கட்டத்திற்கு வருவோம். பார்க்கும் காட்சிக்கும், அந்த காட்சி பற்றி நாம் கொள்ளும் உணர்விற்கும் சம்பந்தப் பட்டது மனத்தின் ஆட்டுவிப்பு. தீயைக் கண்டால் கையை இழுத்துக் கொள்வதற்கும், அந்தத் தீயே ஒரு சிகரெட்டின் நுனியில் இருந்தால் பதறாமல் உதடு கவ்வி இழுப்பதற்கும் கொள்ளும் உணர்வு போல. மனம் என்பது செயல்படுவதற்கு மறைமுகமாக இருக்கும் ஒரு அரூபக் கருவியே தவிர,உணர்வுதான் வெளிச்செயலாய் மனதைப் பிரதிநிதித்துவப் படுத்துகிறது என்பது தான் இதில் உள்ள விசேஷம். அடுத்து இந்த உணர்வுகள் என்றால் என்னவென்று பார்ப்போம்" என்று தான் சொன்னது கேட்பவர்களுக்குப் புரிந்ததா என்று அறிகின்ற ஆவலில் அவைச் சுற்றிலும் நோட்டமிட்டார்.

பிறகு திருப்தியுடன் தொடர்ந்தார்: "உதாரணமாக தாயைக் கண்டால் பாசம், மனைவியிடத்து மோகம், பிள்ளைகளிடத்து அன்பு என்பது உலக இயல்பு. தாயிடமிருந்து பிரிந்த சதைப் பிண்டமாதலின் பாசமும், மனைவியிடத்து சுகித்த மயக்கத்தால் மோகமும், தன்னின் கூறுகளாகையால் அன்பும் உணர்வுக் கயிறுகளாகி மனசைக் கட்டிப்போடுகிறது. இதெல்லாம் அடிப்படையான உணர்வுகள்.. தான் ஆடாவிட்டாலும், சதையாடும் சங்கதிகள்.

"இறைவனுடனான நமது உறவும் எல்லா உறவுகளையும் போன்றதே.. இந்த ஜென்மத்து உறவாகிய தாயின் பாசம், கல்பகோடி ஆண்டுகளுக்கு முன்னால் தன்னிடமிருந்து விடுபட்ட சங்கதிகளின் மேல் இறைவனுக்கு இருக்கிறது. அந்த நேசம் தான் வெம்மையாகவும், தண்மையாகவும்,வெயிலாகவும், மழையாகவும், உணவாகவும், உயிரை இயக்கும் சக்தியாகவும் வெளிப்படுகிறது.. அவனின் கூறு ஒவ்வொரு உயிரிலும் படிந்திருப்பதே இயங்கும் சக்தியாகவும், இயக்கும் சக்தியாகவும் பரிமளிக்கிறது. காட்சிப் பொருளாய், கட்புலன்களுக்கு காணமுடியாமை தான் இந்த உறவின் விசேஷம்; மற்றபடி மற்ற எல்லாச் சமாச்சாரங்களும் டிட்டோ..டிட்டோ...

"எல்லா உறவுகளைப் போலவுமே இறைவன் பற்றி நாம் கொண்டிருக்கும் 'அறிவு' தான், இறைவனுடான நம் பந்தத்தை நெருக்கியும், விலக்கியும் வைத்திருக்கிறது. அதனால் தான் இந்த உறவும் எல்லா உறவுகளைப் போலவுமே நமது மகிழ்ச்சிக்கும் துன்பத்திற்கும் காரணமாகிப் போகிறது.

"எந்த உறவும் மகிழ்ச்சியைக் கொடுக்குமெனில் உடலுக்கு, உணர்வுகளுக்கு ஆரோக்கியமானது; ஆரோக்கியத்தை சுகிப்பதும், விலக்குவதும் அவரவர் விருப்பத்தைப் பொறுத்தது.ஆரோக்கியத்தை நேசித்துக் கொள்வோருக்கு கொடுப்பினை; தள்ளுவோருக்கு வாழ்க்கையே தண்டனை!

"எல்லாவற்றிலும் முக்கியமானது, மனத்தை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ளுதல். ஏன்?.. இதுதான் உடலின், மனதின் ஆரோக்கியத்திற்கு உரமாகிப் போகும் என்பதினால்.

"புதுசாக ஒரு சட்டையை வாங்கி அணியும் போதே மனசுக்கு மகிழ்ச்சியாக இருந்தது; அன்று பூராவும் அந்த சந்தோஷம் நீடித்தது. காசு கொடுத்து வாங்கி அந்த சட்டையை அணிந்தது தான் என்வேலையாகிப் போயிற்று. ஆனால், இந்த உடைகளுக்குப் பின்னால் எத்தனை பேர் உழைப்பு இருக்கிறது என்பதை நினைத்துப் பார்த்தால் மலைப்பாக இருக்கிறது. கரிசல் காட்டில் பஞ்சை விளைவித்து,அதன் கொட்டை நீக்கி பஞ்சுப் பொதி சுமந்ததிலிருந்து ஆரம்பித்து தையற்கலைஞர் வரை... எல்லோரது உழைப்பும் தான்; இத்தனைக்கும் நடுவே, உயிராய் வளர்ந்த அந்த பஞ்சு விளைச்சலை மட்டும் வசதியாய் மறந்து போய்விடுகிறோம்.. அந்த உயிர் செழித்து வளர்ந்தால் தான், இதற்குப் பின்னால் ஆன அத்தனை பயன்பாடுகளும்..

"ஒன்று சொல்கிறேன், கேட்டுக்கொள்ளுங்கள்.. உயிர்கள் எப்படி இயங்குகின்றன, அவற்றை இயக்கும் சக்தி எது என்பதற்கு அறிவு பூர்வமாக விடை கிடைக்காதவரை அப்படிப்பட்ட ஒரு சக்தி இல்லை என்று அறிவுலகம் ஏற்றுக்கொள்ளாது.. தனி மனிதர்கள் அறிவுலகத்தோடு ஒத்துப் போகிறார்களா, இல்லையா என்பது வேறு விஷயம். அது அவர்கள் அது பற்றி கொண்டிருக்கும் அறிவு சம்பந்தப்பட்டது.

"எந்த ஒத்துக் கொள்ளலுக்கும் அவரவர் மனமொப்பி ஏற்றுக்கொள்ளல் அவசியம். இருக்கு என்பதற்கு மட்டுமில்லை, இல்லை என்பதற்குக் கூட" என்று மேகநாதன் அவையை ஒருமுறைச் சுற்றிப் பார்க்க கிருஷ்ணமூர்த்தி மெல்ல எழுந்திருந்து மேடையை நோக்கி வந்தார்.

(தேடல் தொடரும்)

10 comments:

நிகழ்காலத்தில்... said...

\\மனம் என்பது செயல்படுவதற்கு மறைமுகமாக இருக்கும் ஒரு அரூபக் கருவியே தவிர,உணர்வுதான் வெளிச்செயலாய் மனதைப் பிரதிநிதித்துவப் படுத்துகிறது\\

ரொம்ப எளிமையாகவும் சரியாகவும் சொல்லி வருகிறீர்கள்

வாழ்த்துக்கள்

ஜீவி said...

@ 'நிகழ்காலத்தில்'..

வாருங்கள், நண்பரே!
தங்கள் உணர்வுகளுக்கு மிக்க நன்றி.

Kavinaya said...

//அவனின் கூறு ஒவ்வொரு உயிரிலும் படிந்திருப்பதே இயங்கும் சக்தியாகவும், இயக்கும் சக்தியாகவும் பரிமளிக்கிறது.//

அருமையாகச் சொன்னீர்கள்.

//ஆரோக்கியத்தை சுகிப்பதும், விலக்குவதும் அவரவர் விருப்பத்தைப் பொறுத்தது.//

ஆம்... எல்லாம் நம் பார்வையில், நாம் எடுத்துக் கொள்ளும் விதத்தில் இருக்கிறது.

தெளிவான சிந்தனை தெளிந்த நீரோட்டம் போல நகர்கிறது. நன்றி ஐயா.

Shakthiprabha (Prabha Sridhar) said...

//இறைவனுடனான நமது உறவும் எல்லா உறவுகளையும் போன்றதே.. இந்த ஜென்மத்து உறவாகிய தாயின் பாசம், கல்பகோடி ஆண்டுகளுக்கு முன்னால் தன்னிடமிருந்து விடுபட்ட சங்கதிகளின் மேல் இறைவனுக்கு இருக்கிறது. அந்த நேசம் தான் வெம்மையாகவும், தண்மையாகவும்,வெயிலாகவும், மழையாகவும், உணவாகவும், உயிரை இயக்கும் சக்தியாகவும் வெளிப்படுகிறது.. அவனின் கூறு ஒவ்வொரு உயிரிலும் படிந்திருப்பதே இயங்கும் சக்தியாகவும், இயக்கும் சக்தியாகவும் பரிமளிக்கிறது. காட்சிப் பொருளாய், கட்புலன்களுக்கு காணமுடியாமை தான் இந்த உறவின் விசேஷம்//

அற்புதம். நெகிழ்ச்சி நிரம்பியதற்கும் காரணம் மேலே கூறப்பட்டிருப்பது தான் :)

கபீரன்பன் said...

///தன்னின் கூறுகளாகையால் அன்பும் உணர்வுக் கயிறுகளாகி மனசைக் கட்டிப்போடுகிறது. இதெல்லாம் அடிப்படையான உணர்வுகள்.. தான் ஆடாவிட்டாலும், சதையாடும் சங்கதிகள்.
...அவனின் கூறு ஒவ்வொரு உயிரிலும் படிந்திருப்பதே இயங்கும் சக்தியாகவும், இயக்கும் சக்தியாகவும் பரிமளிக்கிறது. காட்சிப் பொருளாய், கட்புலன்களுக்கு காணமுடியாமை தான் இந்த உறவின் விசேஷம்; மற்றபடி மற்ற எல்லாச் சமாச்சாரங்களும் டிட்டோ..டிட்டோ...//
இறைவனுக்கு நம் மேல் ஏன் அளவிடமுடியாத கருணை என்பதை அழகாக சொல்லி விட்டீர்கள்.

நன்றி

ஜீவி said...

@ கவிநயா
எடுத்துக் காட்டுகளுடன் எடுத்துக்காட்டி
வழிமொழிந்தமைக்கு நன்றி, கவிநயா!
திருத்தங்களையும் செய்து விட்டேன்.
நன்றி.

ஜீவி said...

@ சக்திபிரபா!

தங்கள் பாராட்டிற்கும் சரியான புரிதலுக்கும் நன்றி, சக்திபிரபா!

ஜீவி said...

கபீரன்ப! மிக்க நன்றி. உற்சாகமாகத் தொடர தங்கள் அன்பு மேலும் ஊக்கமளிக்கிறது.

கிருத்திகா ஸ்ரீதர் said...

""எந்த ஒத்துக் கொள்ளலுக்கும் அவரவர் மனமொப்பி ஏற்றுக்கொள்ளல் அவசியம். இருக்கு என்பதற்கு மட்டுமில்லை, இல்லை என்பதற்குக் கூட" " உண்மைதான் மனமொப்பிச்செய்யும் செயல்கள் பல நேரங்களில் நாம் செய்யவிருந்த தவறுகளிலிருந்து நம்மை தப்பிக்கச்செய்கிறது....வெகுநாட்கள் கழித்து வந்தாலும் ஆழமான கருத்துக்கள்.
பதிவிற்குப்பதிவு வித்யாசம் காட்டும் தங்கள் நடை அழகு எனக்கு பிரமிப்பூட்டுகிறது..

ஜீவி said...

@ கிருத்திகா

ஏற்றுக் கொள்ளும் வரைதான் விவாதங்கள், விளக்கங்கள் எல்லாம்.
ஏற்றுக் கொண்டபிறகு, அந்த ஏற்றுக் கொண்டதின் வழியில் நடக்கும் பொழுது, அதாவது வெற்று விவாதங்களை விட்டு விலகி, ஏறுக்கொண்டதை நடைமுறைபடுத்தி அதன் வழியில் நடக்கையில் தான்,
முன்னாடி விளங்காமலிருந்த கேள்விகளுக்கு தன்னாலே விடைகள் கிடைக்கும் என்பது மட்டுமில்லை,
இன்னொருவருக்கும் நமது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளும் அளவுக்கு ஞானம் பிறக்கும்.
ஒவ்வொருவர் அனுபவமும் வெவ்வேறு மாதிரி இருக்கும் என்பதால், அனுபவப்பட்டப் பிறகு இந்தமாதிரி அனுபவம் அடைந்தவர்கள் தங்களுக்குள் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கையில் அது விவரிக்க இயலாத மகிழ்ச்சியை அவர்களுக்குள் ஏற்படுத்தும். சில சமயங்களில் முன்னால் நடந்தப்பட்ட விவாதக்களை எண்ணி நாணப்படுதலும் உண்டு.
மார்கழி மாதக் குளிரில் ஆற்று நீரில் இறங்கிக் குளிக்க வெடவெடத்து தயங்கி, தவிர்த்து, ஒருவழியாக இறங்கியபின் அந்த அற்புதக் குளியலின் சந்தோஷத்தை அனுபவிப்பது போல. நல்லனவை எதையுமே நடைமுறைப் படுத்திப் பார்த்தால் சந்தோஷம் தானாகவே கூட வரும்.

இன்னொன்றும் இதில் இருக்கிறது.
அப்படித் துணிந்து இறங்கிக் குளித்தவனுக்கே அனுபவித்த அனுபவிப்பின் அருமையைப் பற்றிப் பேச அருகதையும் இருக்கிறது என்பது பெற்ற அந்த மகிழ்ச்சியை அவன் விவரிப்பதிலிருந்து புரியவும் புரியும்.

தங்கள் பாராட்டுகள் நிறைய இன்னும் எழுத ஊக்குவிக்கிறது. மிக்க நன்றி.

Related Posts with Thumbnails