மின் நூல்

Monday, August 31, 2009

ஆத்மாவைத் தேடி.... 9 இரண்டாம் பாகம்

ஆன்மீகத்தின் அடுத்த கட்டத்தை நோக்கி....

9. யாதுமாகி நின்றாய்

ழக்கமாக காலை உணவு நேரம் முடிந்தவுடன் கொஞ்ச நேரம் தாமதித்துத்தான் அவை தொடங்கும். ஆனால் இன்று வழக்கத்திற்கு மாறாக, காலை உணவு நேரம் முடிந்து கொண்டிருக்கையிலேயே இன்னொரு பக்கம் அவை நிரம்ப ஆரம்பித்து விட்டது. அந்தளவுக்கு மனவியல் அறிஞர் மேகநாதனின் உரை அனைவரையும் கவர்ந்திருந்தது. அதுவும் தவிர, நேற்றைய உரையின் தொடர்ச்சியாய் விட்டுப் போனவற்றை ஒன்று விடாமல் தொடர்ச்சியாக மேகநாதனிடம் கேட்டு விளக்கம் பெற வேண்டும் என்கிற ஆவலும் அனைவரிடமும் இருந்தது.

மனவியல் துறையைச் சிறப்புப் பாடமாக ஏற்று, அதில் துறைபோகிய ஞானம் உடைய மேகநாதனுக்கும் ஆரோக்கியமான விவாதங்களைக் கிளறும் இப்படிப்பட்ட ஒரு மேடை மிகவும் பிடித்திருந்தது. அதுவே அவரது அதீத உற்சாகத்திற்கும் காரணம் ஆயிற்று.

நேற்றைய அமர்வின் தொடர்ச்சியை தொடரும் முன், விட்ட இடத்தை நினைவுபடுத்திவிடலாம் என்பதும் மேகநாதனின் உத்தேசம். அதே யோசனையில் மைக்கைப் பிடித்தவர்,மூளையிலுள்ள நியூரோன்களில் ஏற்படும் ரசாயன மின்மாற்றங்களைப் பற்றிக் குறிப்பிட்டு விட்டு, 'மனம்' என்பது பற்றி உத்தேசமாக பல விவரங்களைச் சொல்வதை விட விஞ்ஞானபூர்வமாக அதை நிறுவுவதிலிருந்து நாம் நழுவக்கூடாது என்றார். இந்த நிரூபணத்தில் நமக்கு வெகுவான அக்கறை இருப்பதால், இதற்குப்பின் கூடவிருக்கிற சதஸ், இதற்கான வேண்டிய வழிவகைகளைச் செய்ய உறுதிபூணவேண்டும் என்றும் வேண்டிக் கொண்டார்.

அவையின் ஏகோபித்த சம்மதம் இதற்குக் கிடைத்தவுடன் அவர் குரலில் உற்சாகம் கொப்பளித்தது."நாம்வாழ நேர்ந்த வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியும் மனத்தின் உணர்வுகளால் அமைகிறது என்று பார்த்தோம். இந்தப் பகுதியில் யாருக்கும் சந்தேகம் இல்லையென்றே நினைக்கிறேன்" என்று குரலை உயர்த்திச் சொன்னவர், மேலும் தொடர்ந்தார்: "புலன் உறுப்புகளால் பார்க்குமொரு காட்சி, அது சம்பந்தப்பட்ட உணர்வுகளால் மனத்தை ஆட்டுவிக்கிறது. அந்த ஆட்டுவிப்பிற்கு ஏற்ப நாம் செயல்படுகிறோம். ஓக்கே?.. இப்பொழுது அடுத்த கட்டத்திற்கு வருவோம். பார்க்கும் காட்சிக்கும், அந்த காட்சி பற்றி நாம் கொள்ளும் உணர்விற்கும் சம்பந்தப் பட்டது மனத்தின் ஆட்டுவிப்பு. தீயைக் கண்டால் கையை இழுத்துக் கொள்வதற்கும், அந்தத் தீயே ஒரு சிகரெட்டின் நுனியில் இருந்தால் பதறாமல் உதடு கவ்வி இழுப்பதற்கும் கொள்ளும் உணர்வு போல. மனம் என்பது செயல்படுவதற்கு மறைமுகமாக இருக்கும் ஒரு அரூபக் கருவியே தவிர,உணர்வுதான் வெளிச்செயலாய் மனதைப் பிரதிநிதித்துவப் படுத்துகிறது என்பது தான் இதில் உள்ள விசேஷம். அடுத்து இந்த உணர்வுகள் என்றால் என்னவென்று பார்ப்போம்" என்று தான் சொன்னது கேட்பவர்களுக்குப் புரிந்ததா என்று அறிகின்ற ஆவலில் அவைச் சுற்றிலும் நோட்டமிட்டார்.

பிறகு திருப்தியுடன் தொடர்ந்தார்: "உதாரணமாக தாயைக் கண்டால் பாசம், மனைவியிடத்து மோகம், பிள்ளைகளிடத்து அன்பு என்பது உலக இயல்பு. தாயிடமிருந்து பிரிந்த சதைப் பிண்டமாதலின் பாசமும், மனைவியிடத்து சுகித்த மயக்கத்தால் மோகமும், தன்னின் கூறுகளாகையால் அன்பும் உணர்வுக் கயிறுகளாகி மனசைக் கட்டிப்போடுகிறது. இதெல்லாம் அடிப்படையான உணர்வுகள்.. தான் ஆடாவிட்டாலும், சதையாடும் சங்கதிகள்.

"இறைவனுடனான நமது உறவும் எல்லா உறவுகளையும் போன்றதே.. இந்த ஜென்மத்து உறவாகிய தாயின் பாசம், கல்பகோடி ஆண்டுகளுக்கு முன்னால் தன்னிடமிருந்து விடுபட்ட சங்கதிகளின் மேல் இறைவனுக்கு இருக்கிறது. அந்த நேசம் தான் வெம்மையாகவும், தண்மையாகவும்,வெயிலாகவும், மழையாகவும், உணவாகவும், உயிரை இயக்கும் சக்தியாகவும் வெளிப்படுகிறது.. அவனின் கூறு ஒவ்வொரு உயிரிலும் படிந்திருப்பதே இயங்கும் சக்தியாகவும், இயக்கும் சக்தியாகவும் பரிமளிக்கிறது. காட்சிப் பொருளாய், கட்புலன்களுக்கு காணமுடியாமை தான் இந்த உறவின் விசேஷம்; மற்றபடி மற்ற எல்லாச் சமாச்சாரங்களும் டிட்டோ..டிட்டோ...

"எல்லா உறவுகளைப் போலவுமே இறைவன் பற்றி நாம் கொண்டிருக்கும் 'அறிவு' தான், இறைவனுடான நம் பந்தத்தை நெருக்கியும், விலக்கியும் வைத்திருக்கிறது. அதனால் தான் இந்த உறவும் எல்லா உறவுகளைப் போலவுமே நமது மகிழ்ச்சிக்கும் துன்பத்திற்கும் காரணமாகிப் போகிறது.

"எந்த உறவும் மகிழ்ச்சியைக் கொடுக்குமெனில் உடலுக்கு, உணர்வுகளுக்கு ஆரோக்கியமானது; ஆரோக்கியத்தை சுகிப்பதும், விலக்குவதும் அவரவர் விருப்பத்தைப் பொறுத்தது.ஆரோக்கியத்தை நேசித்துக் கொள்வோருக்கு கொடுப்பினை; தள்ளுவோருக்கு வாழ்க்கையே தண்டனை!

"எல்லாவற்றிலும் முக்கியமானது, மனத்தை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ளுதல். ஏன்?.. இதுதான் உடலின், மனதின் ஆரோக்கியத்திற்கு உரமாகிப் போகும் என்பதினால்.

"புதுசாக ஒரு சட்டையை வாங்கி அணியும் போதே மனசுக்கு மகிழ்ச்சியாக இருந்தது; அன்று பூராவும் அந்த சந்தோஷம் நீடித்தது. காசு கொடுத்து வாங்கி அந்த சட்டையை அணிந்தது தான் என்வேலையாகிப் போயிற்று. ஆனால், இந்த உடைகளுக்குப் பின்னால் எத்தனை பேர் உழைப்பு இருக்கிறது என்பதை நினைத்துப் பார்த்தால் மலைப்பாக இருக்கிறது. கரிசல் காட்டில் பஞ்சை விளைவித்து,அதன் கொட்டை நீக்கி பஞ்சுப் பொதி சுமந்ததிலிருந்து ஆரம்பித்து தையற்கலைஞர் வரை... எல்லோரது உழைப்பும் தான்; இத்தனைக்கும் நடுவே, உயிராய் வளர்ந்த அந்த பஞ்சு விளைச்சலை மட்டும் வசதியாய் மறந்து போய்விடுகிறோம்.. அந்த உயிர் செழித்து வளர்ந்தால் தான், இதற்குப் பின்னால் ஆன அத்தனை பயன்பாடுகளும்..

"ஒன்று சொல்கிறேன், கேட்டுக்கொள்ளுங்கள்.. உயிர்கள் எப்படி இயங்குகின்றன, அவற்றை இயக்கும் சக்தி எது என்பதற்கு அறிவு பூர்வமாக விடை கிடைக்காதவரை அப்படிப்பட்ட ஒரு சக்தி இல்லை என்று அறிவுலகம் ஏற்றுக்கொள்ளாது.. தனி மனிதர்கள் அறிவுலகத்தோடு ஒத்துப் போகிறார்களா, இல்லையா என்பது வேறு விஷயம். அது அவர்கள் அது பற்றி கொண்டிருக்கும் அறிவு சம்பந்தப்பட்டது.

"எந்த ஒத்துக் கொள்ளலுக்கும் அவரவர் மனமொப்பி ஏற்றுக்கொள்ளல் அவசியம். இருக்கு என்பதற்கு மட்டுமில்லை, இல்லை என்பதற்குக் கூட" என்று மேகநாதன் அவையை ஒருமுறைச் சுற்றிப் பார்க்க கிருஷ்ணமூர்த்தி மெல்ல எழுந்திருந்து மேடையை நோக்கி வந்தார்.

(தேடல் தொடரும்)

Friday, August 28, 2009

விமரிசனக்கலையும் கதையின் கதையும்

ப்பொழுதெல்லாம் விமரிசனம் என்பது குறித்து நாம் நிறையவே பேசுகிறோம்.. சாதாரணமாக ஒன்றைப் பற்றியதான 'அபிப்ராயம்' மாதிரியான கருத்தைச் சொல்லுதல் என்கிற நிலைமாறி, இப்பொழுது விமரிசனம் என்பதே ஒரு துறையாகவும் உருக்கொண்டிருக்கிறது.

சொல்லப் போனால், விமரிசனம்என்பது ஒரு கலை. எல்லாக் கலைகளுக்கும் படைப்பாக்கம் என்பது எப்படி அடிப்படை அம்சமாக இருக்கிறதோ, அதே போன்றதான படைப்பின் நேர்த்தியும்,அழகும் விமரிசனத்திற்கும் தேவை.

என்றைக்கு விமரிசனத்தை ஒரு கலையாக ஏற்றுக்கொண்டு விட்டோமோ, அன்றைக்கே விமர்சகனும், எல்லாக் கலைஞர்களைப் போல ஒரு கலைஞன் தான்; அவன் ஒரு கலைஞனாக இருப்பதால் தான் எந்தக் கலைப்படைப்பையும் அவனால் நேசிக்க முடிகிறது.. ரசிக்க முடிகிறது.. இந்த நேசித்ததில், ரசித்தலின் விளைவான வெளிபாடு தான், அந்த ரசிப்பு குறித்தான அனுபவப் பகிர்வாகத்தான் அது குறித்தான அவனது விமரிசனமே முகிழ்க்கும்.

அதனால் தான் பலசமயங்களில் கலைப்படைப்புகளைப் பற்றி, கலைஞர்களல்லாத வெறும் பண்டிதர்கள் பேசும் பொழுது, அது குரங்கு கைப் பூமாலையாகிப் போகிறது. எல்லாக் கலைகளும் 'துறை'களாகிப் போனதின் விபரீதம் இது. அழகுணர்ச்சியும், அடிப்படை புரிதலில் விளைவான புளகாங்கிதமும் வற்றிப்போனதின் விளைவு இது. அதனால் தான் அத்தன்மைத்தான விமர்சன ஆர்ப்பாட்டங்களெல்லாம்,வெற்று உரைகளாக, வெறும் விவரக்குறிப்புகளாக இருக்கும். கலைஞனின் நெஞ்சத்து ஓலங்களை, மகிழ்ச்சியின் சாரல்களைத் தரிசிக்க வக்கில்லாத போக்கு இது. போகட்டும்..

மனசார ஒப்புக்கொள்ள வேண்டுமானால், படைப்புகள் குறித்தான விமரிசனம் என்பதே பிற்காலத்துச் சமாச்சாரம் தான்; அப்பட்டமான மேற்கத்திய சரக்கு.

சின்னக் குழந்தையின் தத்தித் தத்தி நடக்கும் தளர் நடைபோல தமிழில் சிறுகதைகளின் தோற்றமும், புதின வடிவங்களும் முகிழ்க்கத் தொடங்கிய பொழுது, அவற்றைப் பற்றிய விமரிசனக் கருத்துக்களாய் அபிப்ராயங்களும் வெளிப்பட்டன.

தமிழில் ஒரு காலத்தில் இந்த விமரிசனக்கலை கொடிகட்டிப் பறந்தது. இலக்கியமும்,விமரிசனமும் கை கோர்த்து இரட்டைக் குழந்தைகளாய் பவனி வந்தன. ஒன்றின் வளர்ச்சி இன்னொன்றையும் சார்ந்திருந்தது. க.நா.சு., 'எழுத்து' சி.சு.செல்லப்பா, சொல்லியே ஆக வேண்டிய விமரிசனக் கலைஞன் வெங்கட் சாமிநாதன், கனகசபாபதி, வல்லிக்கண்ணன், தி.க.சி., என்று வரிசைபடுத்திச் சொல்லலாம். இந்த வரிசை எந்தத் தரவரிசையுமல்ல.. இதில் வெங்கட்சாமிநாதனின் விமரிசனம் பற்றி, விமரிசனத்தைக் கலையாகச் செய்த-- இலக்கியம், இசை, சிற்பம், ஓவியம், தெருக்கூத்து என்று சகல மட்டத்திற்கும் தூக்கிச்சென்ற-- அந்தக் கலைஞன் பற்றி தனியே எழுதியாக வேண்டும்.

கலாபூர்வமான படைப்புகளையெல்லாம் இப்பொழுது பார்க்கமுடியவில்லை. ஓரிரண்டு பேர் அழுக்குகளிலிருந்து மேலெழும்பி தலைதூக்கி இனம் கண்டு கொள்ளப்பட்டாலும், அவர்களும் 'காற்றுள்ள போதே தூற்றிக்கொள்'என்கிற கதையாய் திரையுலகு பக்கம் திரும்பி விட்டனர். சிலர் அங்கேயும் குப்பை கொட்ட முடியாமல், 'இதற்குத்தானா ஆசைப்பட்டேன்' என்று குமைந்து சோர்ந்து விட்டனர்.

தமிழ்கூறும் நல்லுலகில், கலைவளர்ச்சி சகல துறைகளிலும் வரட்சியாய்ப் போய் நெடுங் காலமாகிவிட்டது. நிஜங்கள் போய் நிழல்கள் நர்த்தனமிடும் காலம் இது. அது ஒரு கனாக்காலம்; நெஞ்சத்து உணர்வுகள் கலைரூபங்களாய் படைத்த காலம் போய், சம்பவங்களைப் புனையும் காலமாகிப் போய்விட்டது! இலக்கியத்தின் பெயரும் புனைவிலக்கியமாம்!

'கல்கி'யில் வெளிவந்த அகிலனின் 'பாவை விளக்கு' நாவலில் வரும் ஒரு கதாபாத்திரத்தின் பெயர், உமா. உருக்கமாகப் படைக்கப்பட்ட உமாவின் மேல் 'பாவை விளக்கு'படித்த வாசகர்கள் உயிரையே வைத்திருந்தனர். கதையின் இறுதிப்பகுதிகளில், 'உமா'வை அகிலன் சாகடித்து விடுவாரோ என்று கலங்கி, வாசகர்கள் அனுப்பி வைத்திருந்த நூற்றுக்கணக்கான தந்திகளும், ஆயிரக்கணக்கான தபால்களும் 'கல்கி' காரியாலயத்தை அதிரச்செய்தன. 'உமாவைக் கொன்று விடாதீர்கள்' என்று அவை அகிலனை மன்றாடின.

'கதை படிக்கிறோம்' என்ற எண்ணத்தையே மறக்கச் செய்த எழுத்தாளர்கள் வலம் வந்த காலம் அது; எழுத்தாளனுக்கும் எழுத்தை நேசித்த வாசகனுக்கும் பொற்காலம் அது! இப்பொழுது எழுத்தாளனுக்குப் பெயர், கதைசொல்லியாம்!

அன்று 'பேசும்படம்' 'குண்டூசி' பின்னால், பாலு சகோதரர்களின் 'கலை' சந்தாமாமா பிரசுரத்தின் 'பொம்மை' என்று சினிமாவுக்கே ஆன சினிமாப் பத்திரிகைகள் நான்கே உண்டு. இன்றோ,தமிழ்கூறும் நல்லுலகில் வெளிவரும் அத்தனை வெகுஜனப் பத்திரிகைகளும் சினிமாப் பத்திரிகைகளே! விளம்பரம் போக, மீதம் இருக்கும் அரை,கால் இண்டு இடுக்குகளில் போனால் போகிறதென்று 'ஒரு நிமிடக் கதைகளும்', 'ஒருவரிக் கதை'களும் பிரசுரமாகிக் கொண்டிருக்கின்றன.

எப்படி இருந்த தமிழ்க் கதையுலகம் என்று எண்ணிப் பார்க்காமலிருக்க முடியவில்லை.

Tuesday, August 25, 2009

ஆத்மாவைத் தேடி....8 இரண்டாம் பாகம்

ஆன்மீகத்தின் அடுத்த கட்டத்தை நோக்கி....

8. ஜோதி தரிசனம்

காலைச் சூரியனின் செங்கதிர் பட்டு அந்த சிவன் கோயிலின் கோபுரக் கலசங்கள் தகதகத்தன. அந்தக் கலசங்களின் மேல் பட்டுத்தெறித்த ஒளிக்கதிர்கள் கோபுரத்தின் மேல்பகுதி சிற்பங்களின் மேலும் பட்டு வர்ணஜால ஒளிக்கோலமாய் பிரகாசித்தது.

அந்தப் பிரகாசிப்பின் நடுவே தனியாக, இனம் காணுகிற மாதிரி தான் அந்தக்காட்சி ஒரு வினாடி தட்டுப்பட்டு அவர்களுக்குத் திகைப்பேற்படுத்தியது. அந்தத் திகைப்பில் சிலையாகிப் போன மூவரும் அந்த அற்புதக்காட்சியை தரிசித்த உணர்வில் பேசவும் முடியாது நாக்குழறி தடுமாறினர்.

கோபுரத்தின் நட்டநடுப் பகுதியில், தலைக்கு மேலே உயர கைசேர்த்து நிற்கிற தோரணையில், அந்த ஜோதிப்பிழம்பு அடிபெருத்து, தீக்கொழுந்துகளாய் நுனி குறுகி உயர எழும்பியும் தாழ்ந்தும் பளீரிட்டது.

கண்களில் பட்ட காட்சி மனசில் உறைத்த வினாடியில், "அருணாசலேச்வரா! ஹர ஹர மகாதேவா!.." என்று மெய்விதிர்த்து கன்னங்களில் போட்டுக்கொண்டு கைகூப்பினார் சிவராமன். கிருஷ்ணாவும், மாலுவும் எதுவும் பேச சக்தியற்று சிலையாகிப்போயினர். கூப்பிய அவர்களின் கரங்கள் லேசாக விதிர்விதிர்த்தன.

ஒரு வினாடி நேரத்து தரிசனம் தான்; பிரமையா, உண்மையா என்று பிரித்துப் பார்க்க சக்தியற்று குழந்தையாய் தவிக்கும் மனநிலை; என்ன பேறு பெற்றோம் என்று விம்மித் தணிகிற பெருமிதம். 'ஐயனே...ஐய்யாரப்பனே!' ஈரேழு ஜன்மத்திற்கும் இந்தப் புண்ணியம் போதுமப்பா' என்கிற சாந்தம். பார்த்த காட்சியை திருப்பித் திருப்பி மனசில் ஓட்டிப்பார்த்தும் நினைவில் பிடிபடாமல் போக்குக் காட்டும் விளையாட்டு... என்ன வந்தது, ஏது நடந்தது என்று நடந்ததை மீட்டிப்பார்க்கும் சக்தியற்று தொழுத கை தொழுதபடி இருக்க, மெளனமே அங்கு மொழியாயிற்று.

நூற்றாண்டு காலம் நோன்பிருந்தும் கிடைக்கப் பெறாத தரிசனம்! ஒருநிமிடம் நினைத்து பார்க்கவே மாலுவுக்கு உடல் நெகிழ்ந்தது.. "ஏன்னா, பூமிலேயே எனக்குக் கால் பாவலேன்னா.. என்னமோ செய்யறது.. இப்படிக் கொஞ்சம் உட்கார்ந்திடட்டுமா?" என்று வெளிப்பிராகார மண்டபத்தூண் ஒன்று பற்றி தன்னை நிலைப்படுத்திக் கொள்கிற மாதிரி மூச்சை இழுத்து விட்டு கல்தரையில் உட்கார்ந்தாள்.

அவள் என்ன சொன்னாள் என்று கேட்கும் ஸ்மரணை அற்று, கிருஷ்ணாவின் கைபற்றினார் சிவராமன். "நீ நன்னா பாத்தையா,கிருஷ்ணா?"என்று குழைவுடன் கேட்டார். "அம்மாடி! என்ன அழகு! என்ன தேஜஸ்! என்ன கொடுப்பினை!.." என்று நினைத்து நினைத்து பிரமித்தார்.

கிருஷ்ணாவுக்கு அவர் சொன்னது எதுவுமே மனதில் பதியவில்லை. பற்றிய சிவராமனின் கரத்தை ஆதுரத்துடன் தடவினார். "பரமேஸ்வரா! என்னே உன் கருணை?.. ஏழையின் மேல் எவ்வளவு இரக்கம்?" என்று நெகிழ்ந்தார்.

'ஒருதடவைக்கு இரண்டு தடவையாய் அன்பு வர்ஷித்திருக்கிறது.. தில்லி ரயில்வே ஸ்டேஷனில் அந்த கும்மிருட்டில் நண்பனாய், வழிகாட்டுவோனாய்.. இப்பொழுது ஜோதி ஸ்வரூபனாய்..' 'என்ன தவம் செய்தனை..' என்ற பாடலை சம்மணமிட்டு அமர்ந்த நிலையில் தொடைதொட்டுத் தாளம் போட்டு விஸ்தாரமாய் தேன்குரலில் காதுக்கு மிக அருகில் வந்து யாரோ இசைப்பது போலிருந்தது.

'பாடுவது யார்?.. ராதையோ?.. அவள் சாரீரத்தில் இவ்வளவு குழைவு இருக்காதே?.. வேறு யார்?.. மாலுவோ?.. ம்.. மாலு போலத்தான் இருக்கிறது!' என்று மாலுவின் நினைவு வந்து, 'எங்கே?" என்று தேடும் காரியமாய்த் திரும்பிப் பார்த்தார்.

பெரிய யாளி ஒன்று வாய் பிளந்து காலூன்றிப் பாய்கிற தோரணையில் நின்றிருந்த சிற்பத்திற்கு முதுகு காட்டியவாறு மாலு அமர்ந்திருக்கிறது தேசலாய்த் தெரிந்தது.

மாலு மட்டுமில்லை, தூரத்தில் இவர்களை நோக்கி யாரோ வருவதும் பார்வையில் பட்டது. வந்தவர், அருகில் வர வர அவர் மனோகர்ஜி என்பதும் புரிபட்டது.

"நீங்கள்லாம் இங்கே தான் இருக்கீறீர்களா.." என்று ஸ்வாதீனத்துடன் விசாரித்தபடி வந்தவர் "கிருஷ்ணாஜி! சிவராம்ஜிக்கு கொஞ்சநாள் கூட இங்கே தங்க முடியுமா? புது பொறுப்பு ஒண்ணு அவரைத் தேடிவந்திருக்கு.. அவருக்கு செளகரியப்படுமா?" என்று ஆவலுடன் கேட்டபடி சிவராமனின் கைகளைப் பற்றினார்.

(தேடல் தொடரும்)

Thursday, August 20, 2009

கவிதை எழுதப் பழகலாம், வாருங்கள்!


கவிதை என்பது உள்ளத்தில் வெட்டிவிட்டுப் போகும் ஒரு மின்னல். உணர்வுகளை சுருக்கமாக சிறப்பாகக் கொட்டுவதற்கு அது ஒரு வடிவம் எனலாம். அந்த வடிவத்தை இலக்கண வரம்புகள் என்னும் சிறைக்குள் யோசித்து யோசித்து அடைத்தால் உணர்வுகள் சிதைந்து சிறப்பான வடிகால் கிடைக்காதென்பது உண்மை!

இலக்கண வரம்புகளைத் தேடிக்கொண்டிருந்தால், உருப்படியாக ஒரு கவிதை எழுதுவதற்குள் தாவு தீர்ந்துவிடும். இன்னொன்று. கவிதை என்பது மற்ற இலக்கிய வடிவங்களைப் போலல்லாமல் வரிக்கு வரி யோசித்து எழுதக்கூடியதில்லை. அதாவது, 'தமிழா..' என்று முதல் வரி ஆரம்பித்தால், அடுத்தவரி தொடக்கமாக, 'அமிழ்தா' என்று போடலாமா, இல்லை 'சிமிழா' என்று போடலாமா என்று யோசித்து யோசித்து வார்த்தைகளைத் தேடிக்கொண்டிருக்கிற விஷயமில்லை. 'தமிழா' என்று முதல் வரியை எண்ணியவுடனேயே, அதே மாத்திரை அளவு உச்சரிப்பு தொனி உள்ள, மோனையும் எதுகையும் கட்டிப்புரண்ட கலவையாய், குறைந்தபட்சம் ஐந்தாறு வார்த்தைகள் நினைவில் பளீரிட்டு, அதைத் தொடர்ந்து அடுத்த வரி, அடுத்த வரி என்று புதுப்புனல் புறப்பட்டாற்போல நொப்பும் நுரையுமாக நினைவில் பொங்கிக் கொப்பளித்து ஓடி வரவேண்டும்.

ஒன்று தெளிவாகிறது. கவிதை எழுத மொழிப்புலமை அவசியம். ஒரு மொழியில் புலமை பெறுவது என்பது அந்த மொழியில் எழுதப்பட்ட இலக்கியங்களையும், காவியங்களையும் அவற்றில் ஆழ்ந்து தோய்ந்து திரும்பத்திரும்பப் படிப்பதினால், அவற்றின் வாக்கிய அமைப்புகளை, வரிஅமைப்புகளைப் புரிந்து கொண்டு 'அடடா! எவ்வளவு அருமையாக எழுதியிருக்கிறார்கள்' என்று சிலாகிப்பதினால், அந்த இலக்கிய கர்தாக்களின் புலமை நமக்கும் கைவரப் பெற்று ஒரு சரிசமமான தளத்திற்கு வருவதை உணரலாம். ஒன்றைப் படிக்கும் போதே, 'இதை இப்படி எழுதியிருந்தால் நன்றாயிருக்குமே' என்ற உணர்வு ஏற்படுவது அடுத்த நிலை. அதுதான் படிப்பவர் எழுத ஆரம்பிக்கும் முதல் நிலை!

எல்லோரும் எழுதலாம். ஆனால் அந்த மொழியைக் கையாளுவதில் கைவரப் பெற்றவர்களின் எழுத்து அழகாக இருக்கும். அதற்கேற்ற கட்டுக்கோப்பு பெற்று இருக்கும். இது இலக்கியம் படைப்பதற்கு மட்டுமல்ல, கவிதைகள் யாப்பதற்கும் பொருந்தும். ஏனெனில் பேசும் மொழியே, எழுதும் மொழியே எதுகை மோனையுடன் அமையக்கூடிய சாத்தியம் ஏற்படின், தன்னாலே 'இலக்கணம்' கட்டுக்குள் அடங்கும்!

அந்த 'இலக்கணம்' இல்லையென்றாலும், உணர்வுடன் ஓசை நயத்துடன் வெளிப்படும் எதுவுமே கவிதை தான். இதில் மரபென்றும் புதுசென்றும் எதுவொன்றும் இல்லை. நாட்டுப்புறப் பாடல்களிலும்,'ஏலேலோ..' பாடல்களிலும் எந்த இலக்கணத்தைத் தேடிப்போவது?... அப்படி தோண்டித் துருவித் தேடினும், அவற்றிலும் ஒரு இலக்கணம் கிடைப்பது தான் அவற்றின் சிறப்பு.

அட, அப்படிக் கிடைக்காவிட்டாலும், இலக்கணத்தில் 'வழுஅமைதி' என்ற ஒன்று இருப்பது போல்,அந்த நாட்டுப்புறப் பாடல்களுக்கு இலக்கணத்தில் இடமில்லையெனில், அவற்றிற்காக ஒரு புது இலக்கண வகையை புதிதாகச் சமைத்துக் கொள்ள வேண்டியது தான். இது தான் ஒரு மொழியில் ஏற்படக்கூடிய மாறுதல்.

விஞ்ஞானக் கூற்றுப்படி, காலத்திற்கேற்ற மாறுதல்களைக் கைக்கொள்ளவில்லை, ஏற்றுக் கொள்ளவில்லை எனில் அவை அழிந்துபடும் என்பது ஒரு மொழிக்கும் பொருந்தும்... காலத்தின் மாறுதலுக்கேற்ப புதுக்கவிதைகளை நாம் ஏற்றுக்கொள்ளவில்லை?. பாரதி ஆரம்பித்து வைத்தது, இன்றும் பல்வேறு வடிவங்களில் தொடர்கிறது. இந்த புதுக்கவிதை தோன்றுவதற்கு முன், கவிதை என்பது கவிதையாகத்தான் இருந்தது. இந்தப் புதுக்கவிதையின் தோற்றத்திற்குப்பின், முன்பிருந்த 'இலக்கண வரம்புகளுக்கு' உட்பட்ட கவிதைகளுக்குப்பெயர் மரபுக் கவிதையாம்!

எப்படி புதுக்கவிதைகளுக்கு 'ஆசனம்' கொடுத்து, முந்தைய கவிதைகள் தனக்கு 'மரபுக் கவிதைகள்' என்று பெயர் சூட்டிக்கொண்டு, தள்ளி உட்கார்ந்து கொள்கிறது, பாருங்கள்! இதில் வேடிக்கை என்னவெனில், இப்படி மரபுக்கவிதை தள்ளி உட்காரவில்லை எனில், இந்த புதுக்கவிதை, மரபுக்கவிதையைப் பிடித்துத் தள்ளிவிட்டு உட்கார்ந்து கொள்ளூம்.

இதைத்தான், "பழையன கழிந்து புதியன புகுதல் காலவரையினாலே" என்று எந்தக் காலத்திலோ, தொல்காப்பியரே சொல்லிவிட்டார். அதாவது, தமிழுக்கு இலக்கணம் அமைத்துக் கொடுத்த தொல்காப்பியரே, இந்தப் புதியன புகுதலை புரிந்து கொண்டு அந்தப் பழங்காலத்திலேயே அதற்கும் ஒரு இலக்கண வரைவைக் கொடுத்து விட்டார்!

ஆனால் என்னதான் 'லைசன்ஸ்' கிடைத்தாலும், கவிதை எனில், ஓசை நயத்துடன் பண்டைய மரபின் செம்மாந்த போக்கு குலையாமல் இருந்தால் தான் அழகாக இருக்கும்.

அதனால்,'மரபு'என்கிற ஒரு ஆடையைப் போர்த்தி மறைத்து ஒதுக்கி வைக்காமல் நாம் பழந்தமிழ் இலக்கியத்தை ஆழ்ந்து அவற்றின் சுவை அறிந்து படித்தோமானால், சுலபமாகக் கவிதை எழுதலாம். ஆசிரியப்பா, ஆரம்பப் பயிற்சிக்கு எளிது.

கவிதை எழுதுவதற்கு ஆரம்ப பாலபாடம், என்னைப் பொறுத்த வரை "சிலப்பதிகாரம்". எதுகை, மோனை சிறப்பாக ஓடிவந்து உட்கார்ந்து கொள்ள "சிலப்பதிகாரம்" படிப்பு, மிகவும் உதவி செய்யும். கூடவே, கம்பனின் "இராமாயணம்", வில்லிப்புத்தூராரின், "வில்லிபாரதம்." அடுத்து, திரிகூடராசப்பகவிராயரின் "குற்றாலக்குறவஞ்சி", பாரதியார் மற்றும் பாரதிதாசனாரின் கவிதைகள். இந்த ஆறு நூல்களை அவற்றின் அருஞ்சொற்பதவுரையோடு தேர்ந்து கற்கில் ஆறே மாதங்களில் அருமையாகக் கவிதை எழுதலாம்!

கவிதை எழுதப் பழகலாம், வாருங்கள்!
Related Posts with Thumbnails