மின் நூல்

Thursday, June 25, 2009

ஆத்மாவைத் தேடி....5 இரண்டாம் பாகம்

ஆன்மீகத்தின் அடுத்த கட்டத்தை நோக்கி.....

5. தொடரும் உறவுகள்

சாயந்திர கோயில் தரிசனம், இரவு சாப்பாடு என்று எல்லாவற்றையும் முடித்துக் கொண்டு மாடிப்படிகளேறி அறைக்கு வருகையில் மணி எட்டுக்கு மேலாகி விட்டது.

"கிருஷ்ணா! உனக்கு எப்படி என்னோட நன்றியைச் சொல்றதுன்னு தெரியலே.." என்று நெகிழ்ந்தபடி கதவு திறந்தார், சிவராமன்.

"என்ன அத்திம்பேர்! பெரிய பெரிய வார்த்தையெலாம் சொல்றேள்.."

"பின்னே?.. நாங்க அடைஞ்ச அனுபவமும், சந்தோஷமும் அளவிட முடியாதது.. அதுக்கு, 'நன்றி'ன்னு கூடச்சொல்லலேன்னா எப்படிப்பா?.. மெத்தப் படிச்ச இந்த மனுஷாளோட பழகிக்களிக்கற ஒரு பாக்கியமும், சந்தோஷமும் உன்னால் தானே எங்களூக்குக் கிடைச்சது?.. நீ கூப்பிடலேன்னா, இங்கே இவ்வளவு நடக்கறதெல்லாம் எங்களுக்கு எங்கே தெரிஞ்சிருக்கப் போறது?.. ஓ, கிரேட்!" என்று பிரமித்தார் சிவராமன்.

எல்லோரும் வசதியாக அமர்ந்து கொள்ள வாகாக நாற்காலிகளை இழுத்துப் போட்டு ஃபேனைச் சுழல விட்டாள், மாலு. "கிருஷ்ணா! நடக்கறது ஒவ்வொண்ணையும் பார்த்தா என்ன சொல்றதுன்னே, தெரியலே! நீயும் ஊர்லே இல்லையா?.. சும்மா ஒரு வாரம் அவாளுக்குப் பேச்சுத் தொணாயா இருந்திட்டு வராலாம்னு தான் அரியலூர் போயிருந்தோம். அப்புறம் காசிக்குப் போயிட்டு வரலாம்னுதான் பிளான். இதுக்கு நடுவே 'இங்கே வந்துட்டுப் போங்கோ'ன்னு நீ கூப்பிட்டே இல்லையோ?.. எங்க 'பிளான்'லே ஒரு சின்ன மாறுதலாத்தான் இது இருக்கும்னு இங்கே வந்தோம்'பா.. நாங்க எதிர்பாக்கவே இல்லே.. என்ன ஒரு ஏற்பாடு, என்ன ஒரு டிஸ்கஷன்ஸ்.. இதுவே இப்படின்னா
வெளிதேசத்து மனுஷாள்ளாம் வரப்போற அந்த சதஸ் எப்படி இருக்கும்னு இப்ப நெனைச்சுப்பாக்க, அதுவே ஒரு 'த்ரில்'லா இருக்கு!.. இப்படி மகா வித்வான்கள் மத்திலே சரிசமமா உக்காந்துக்கப் புண்ணியம் செஞ்சிருக்கணும்... அந்த சிவன் கோயிலுக்குப் போனா, பிறவி பூரா அங்கேயே இருந்திண்டு, நந்தவனத்துப் பூத்தொடுத்து மாலைமாலையா பெருமானுக்குப் சூட்டி, போய்ச்சேர்ற மிச்ச காலத்தை இங்கேயே கழிச்சிடலாமான்னு தோண்றது.. அடடா!.. அந்த மனோகர்ஜிக்குத் தான் எவ்வளவு நல்ல மனசு! இத்தனை பணம்,காசு, தோட்டம், தொறவு இருந்தும், எல்லாருக்கும் வேண்டியது வழங்கி தாசனுதாசனாய் சேவை செய்யணும்னு ஒரு குணம்!... என்னவோப்பா.. பெரியவா செஞ்ச புண்ணியம் தான்.. இந்த சொர்க்கத்திலே தங்கியிருக்கற பாக்கியம் எங்களுக்கு கிடைச்சிருக்கு.." என்று அதற்கு மேல் பேசமுடியாமல் தடுமாறினாள்.

"மாலு, நீ இப்படி சொல்றே.. மனோகர்ஜி என்ன நினைக்கறார், தெரியுமா?"

"என்ன நினைக்கிறார்?.."

"பிறருக்கு சேவை செய்யறத்துக்காக அமர்த்தப்பட்ட ஆள் தானென்றும், அத்தனையும் இறைவன் கருணை, அவனோட ஏற்பாடுன்னும் நினைக்கறார்."

"ஓ!.. அப்படி அவர் நினைகறத்துக்கு பெரிய உள்ளம் வேண்டும்; தவ சிரேஷ்டர் களால் தான் இப்படியெல்லாம் பேசவும் செய்யவும் முடியும்."

"சந்தேகமில்லாம!.. சில நேரங்கள்லே அவரோட செயல்களுக்குப் பின்னாலே மகத்தான சக்தி ஒண்ணு இருந்திண்டு அவரை ஆட்டுவிக்கறதோங்கற மாதிரி ஒரு பிரமை கூட எனக்கு ஏற்பட்டது உண்டு."

"அது பிரதட்சய உண்மையாக் கூட இருக்கலாம்" என்றார் சிவராமன்.

"நானும் கூட அப்படித்தான் நினைக்கறேன், அத்திம்பேர்! மனித யத்தனத்தால செய்ய முடியாத பல செயற்கரிய செயல்கள் அவர் மூலமா நடந்திண்டிருப்பதை இங்கே வந்த சில நாட்கள்லே நா தெரிஞ்சிண்டேன்.. அப்படித் தெரியத் தெரிய, அவர் செயல்படுவதின் மூலம் பிறரையும் செயல்பட வைக்கும் ஒரு மகத்தான சக்திக்கு நம்மையும் ஆட்படுத்திக் கொண்ட மகிழ்ச்சி பல நேரங்கள்லே என்னையும் ஆட்கொண்டதுண்டு."

சிவராமன் பதில் பேசாமல் கிருஷ்ணமூர்த்தியையே பார்த்துக் கொண்டிருந்தார்.

"அப்படி நான் சந்தோஷப்பட்ட நேரங்கள் பல உண்டு. முன்னேப் பின்னே பழக்கமில்லாத, 'யப்பா.. இது நாம்மாலே நிச்சயமாய் முடியாது'ன்னு நினைக்கிற பல காரியங்கள், வெகுசாதாரணமா முடிஞ்சிடும்.. அப்படிச் சுளுவா முடிந்ததே பல நேரத்லே மலைப்பா இருக்கும்.. 'நாமா இதைச் செய்தோம்'ங்கற ஆரம்பகால அசட்டு மலைப்பு போய், பின்னாடி பிரக்ஞை வந்தது. அந்தக்காரியம் நடக்க லவலேசமும் நாம காரணம் இல்லே, நம்மாலே நடக்கலை அதுங்கற உணர்வு நெஞ்சில் துளிர்க்கவே பலகாலம் பிடிச்சது அப்படி துளிர்விட்ட 'நம்மாலே எதுவும் நடக்கறதில்லே'ங்கற அந்த நினைப்பு இப்போ நிலையா தீபம் போல நெஞ்சிலே சுடர்விட்டிண்டிருக்கு."

'கிருஷ்ணாவா இப்படிப் பேசுகிறான்' என்று மலைப்புடன் மாலு கிருஷ்ணாவையே வைத்த விழி எடுக்காமல் பார்த்துக் கொண்டிருக்க, "இப்போ நீ சொன்னையே, இதெல்லாம் மிக சத்தியமான வார்த்தைகள்" என்றார் சிவராமன்.

அவர் சொன்னதை ஆமோதிப்பது போல வெளிப்புற இருட்டுப் பிரதேசத்தி லிருந்து மணியோசை எழுந்த மாதிரி இருந்தது.

"காலம்பற அஞ்சு மணிக்குள்ளே எழுந்திடப் பாருங்கோ.. வாக்கிங் போயிட்டு வர சரியாயிருக்கும்.." என்றபடி கிருஷ்ணமூர்த்தி எழுந்திருந்தார்.

கதவைத் தாளிட்டுப் படுத்த்து தான் தெரியும். அடித்துப் போட்ட மாதிரி ஆழ்ந்த உறக்கம். நாள் பூராவுமான அலைச்சலும், புது அனுபவங்களும் அசத்திவிட்டன.

நடுராத்திரியா, அல்லது அதைத் தாண்டிய விடியல் நேரமா என்றுத் தெரியவில்லை.

எங்கேயோ, எதையோ எலி பிறாண்டுகிற மாதிரியான ஓசையில் சிவராமனுக்கு விழிப்பு வந்தது. தூக்கக் கலக்கத்தில் தலை நிமிர்த்திப் பார்த்தார்.

பக்கத்தில் சன்னமாக எழுந்த குறட்டை ஒலியுடன் ஒன்றி மாலு அயர்ந்து தூங்குவது தெரிந்தது.

ஒரு வினாடி நேரம் தான். தூக்கிய தலை மீண்டும் தலையணையில் அழுந்தி சிவராமனை அசத்தியது.

மறுபடியும் எதனால் விழிப்பு வந்தது என்றுத் தெரியவில்லை. 'படபட'வென்று சிறகடிக்கும் ஒலி தெளிவாகக் கேட்டது.

மாலு புரண்டு படுத்தாள். அதற்கு மேல் தூங்கும் உணர்வில்லை, சிவ ராமனுக்கு. எழுந்திருக்கும் மனசும் இல்லாமலிருந்தது.

இப்பொழுது மீண்டும் 'படபட'. வெளியிலிருந்து தான் ஓசை எழுந்தது தெளிவாகக் கேட்டது.

மெல்ல படுக்கையை விட்டு எழுந்தார். சபதமிடாமல், ஜன்னல் பக்கம் சென்று என்னவென்று வெளியே பார்த்தார். பிரமித்தார்.

புலர்ந்தும் புலராத அந்த அரையிருட்டில் பக்கத்து மாமரக் கிளையில் இரண்டு புறாக்கள் ஒன்றுக்கொன்று விரட்டி விளையாடிக் கொண்டிருப்பது தெளிவாகத் தெரிந்தது.

அவருக்கு இருப்பு கொள்ளவில்லை. அரியலூரில் அறிந்த தகவல் திகைப்பூட்டியது.

மாலுவை எழுப்பலாமா என்கிற எண்ணத்தை அவர் தவிர்த்த பொழுது, மாலுவே எழுந்திருந்து அவர் பக்கத்தில் வந்து நின்றாள்.

அவர் சொல்வதற்கு முன்னாலேயே வெளியே பார்த்த மாலுவுக்கு ஒரே ஆச்சரியம். "தெய்வமே---" என்று முகம் மகிழ்ச்சியில் பூரித்தது. "அரியலூரில் நாம் பார்த்த அதே புறாக்கள் தான்னா.. 'விரட்டிட்டேனே, போயிடுத்தே'ன்னு தவிச்சிண்டிருந்தேன்.. அம்மாடி.. குழந்தைகள் என்னைத் தேடிண்டு இங்கேயே வந்திடுத்தன்னா..." என்று நிலைகொள்ளாமல் தவித்து மகிழ்ந்து போனாள்.

சிவராமனும் தன் உணர்வும் அதே மாதிரி இருந்ததில் திகைத்துப் போய் நின்றார்.

(தேடல் தொடரும்)

Monday, June 22, 2009

ஆத்மாவைத் தேடி....4 இரண்டாம் பாகம்

ஆன்மீகத்தின் அடுத்த கட்டத்தை நோக்கி.....

4. அந்த அனுபவமே நான் என்றான்

கோயில் சிற்பக்கலை ஆராய்ச்சியாளர் சித்திரசேனன் எழுந்ததும், இவர் என்ன கேட்கப்போகிறாரோ என்கிற ஆவலில் அம்ர்ந்திருந்த கூட்டமே அவர் பக்கம் திரும்பியது.

"வணக்கம், ஐயா..." என்று ஆரம்பித்தார் சித்திரசேனன். "மனம் மூளையோடு தொடர்பு கொண்டுள்ளதாக, மூளையின் வழியாகத்தான் மனம், உடல் உறுப்புகளோடு தொடர்பு கொள்வதாகச் சொன்னீர்கள்.. விஞ்ஞானம், மூளையில் படிந்துள்ள நியூரோன்களின் செயல்களாக மனம் இருக்கலாம் என்று சொல்கிறது. கிட்டத்தட்ட இந்த இரண்டு செயல்பாட்டு வகைகளும் ஒன்று போலத்தானே தெரிகிறது?.. அதாவது, சுலபமாக்ப் புரியும்படி சொல்ல வேண்டுமானால், அரூப மனத்தின் உருவத் தோற்றம்தான் நியூரோன்களோ?..... அப்படிப்பார்த்தால், விஞ்ஞானக்கூற்றுப்படி மனம் என்கிற ஒன்றை நிரூபித்து விட்ட மாதிரித் தெரிகிறதே?" என்று லேசாகப் புன்முறுவலுடன் சித்திரசேனன் சொல்லி முடிக்கையில் அவையே நிசப்தமாயிற்று.

"ஒண்டர்புல்.. அருமையான சந்தேகம். நானும் ஆரம்பத்தில் அப்படிப்பட்ட ஒரு முடிவுக்குத்தான் வந்தேன்" என்று சொல்லி மேலும் தொடர்வதற்குள் மேசையில் வைத்திருந்த நீர்குவளையை எடுத்து கொஞ்சம் தண்ணீர் அருந்தினார் மேகநாதன். "நல்லது. இப்பொழுது உடற்கூறு விஞ்ஞானம் என்ன நினைக்கிறது என்று பார்க்கலாம்---" என்று இருகைகளையும் பரக்க விரித்தார். "இன்று மதியம் உடல்கூறு அறிஞர் உலகநாதன் அவர்களிடம் மனித மூளையின் செயல்பாடுகள் பற்றி நிறைய பாடம் கேட்டேன். அதன் அடிப்படையில் நான் சிந்தித்தவற்றைச் சொல்கிறேன்" என்ற பீடிகையுடன் தொடர்ந்தார்.

"மூளை என்பது ரொம்பவும் சிக்கலான சர்க்யூட் அமைப்பு. கோடிக்கணக்கான நரம்பு செல்களால் நேர்த்தியாக பின்னப்பட்டது. கணக்குப்போட்டு கிட்டதட்ட இருபது டிரில்லியன் செல்கள் இருக்கும் என்கிறார்கள்; ஒன்றரை கிலோ வெயிட். இன்ன காரியத்திற்கு இன்ன இடம் என்று ஒவ்வொரு செயலுக்கும் தனித்தனி டிபார்ட்மெண்டுகளாக பிரிக்கப்பட்ட அதிசய சதைக்கோளம் மூளை. ஒவ்வொரு செயலுக்கு மட்டுமல்ல, வந்து சேர்ந்து வெளிப்பட்ட ஒவ்வொரு உணர்வுக்கும் ஒரு பகுதி உண்டு. தானியங்கி நரம்பு மண்டலத்தின் துணைகொண்டு மூளை உடல் உறுப்புகளைச் செயலாக்க வைக்கிறது. மூளையை செயல்படுத்த வைப்பது எது என்பது தான் ஆதாரமான கேள்வி" இன்னொரு மடக்கு நீரை குவளையிலிருந்து எடுத்து அருந்தினார் மேகநாதன்.

அவையினர் அத்தனை பேரும் வேறு சிந்தனையின்றி அவரைப் பார்த்துக் கொண்டிருக்கத் தொடர்ந்தார் மேகநாதன். "உதாரணமாக ஒன்றைப் பார்ப்போம். ஒரு மனிதனை கோபம், வெறுப்பு, விரக்தி என்று பல்வேறு உணர்வுகளுக்கு ஆட்படுத்த விட்டு, பிரத்யேக FMRI ஸ்கேன் மூலம் அந்தந்த உணர்வுகளின் போது அந்த மனிதனின் மூளையின் செரிப்ரல் கார்டெக்ஸ் பிரதேசத்தில் எந்தப்பகுதியில் அதிக ரத்தம் பாய்கிறது என்று தெரிந்து கொள்ளலாம் என்கிறார்கள்.

அதாவது ஆத்திரம் என்றால் இந்தப்பகுதி, ஆச்சரியம் என்றால் இந்தப்பகுதி என்று ஆணைகள் பிறப்பிக்கப்பட்டு அந்தந்தப் பகுதிகளுக்கு இரத்தம் அதிவேகத்தில் விநியோகிக்கப்படுகிறது. ஒவ்வொரு உணர்வுக்கும் ஒவ்வொரு பகுதி என்று கண்டுபிடித்து விட்டதால், எதுக்கெடுத்தாலும் கோபப்படும் கோப உணர்வே அதிகம் உள்ள ஒருவருக்கு அந்த உணர்வுக்கு சம்பந்தப்பட்ட இடத்தில் மட்டும் ரத்த சப்ளை அடிக்கடி நடக்கும். சந்தோஷமே படத்தெரியாத உம்மணாம் மூஞ்சி ஒருவனுக்கு அந்தப்பகுதியில் இரத்த சப்ளை ஸீரோ.
இதுதான் விஷயம்.


"சோகம், விரக்தி, தன்னிரக்கம் என்பதான உணர்வுகளையும் செரிப்ரல் கார்டெக்ஸ் பகுதி இரத்த சப்ளையையும் நினைத்தால் பகீரென்கிறது. சரிவிகித சம உணவில் கவனம் செலுத்துகிற மாதிரி தான் இதுவும். மூளையின் எல்லாப் பகுதிகளுக்கும் சீரான ரத்தசப்ளை இருப்பதே நல்ல ஆரோக்கியத்திற்கு அறிகுறி. ஒன்றில் அதிகம், ஒன்றில் குறைவு, ஒன்றில் இல்லவே இல்லை என்பது உடற்கோளாறுகளை உற்பத்தி செய்யும் என்று தெரிகிறது.


"இன்னொன்றும் தெரிகிறது. எல்லா உணர்வுகளையும் துய்ப்பது மனம் தான். எல்லா உணர்வுகளுக்கும் தாய்வீடு அதுதான். ஆக, மனசை பக்குவமாக, ஆரோக்கியமாக வைத்துக் கொண்டால் மூளையின் கார்டெக்ஸ் பகுதியே நம் கைவசம் இருக்கிறமாதிரி. 'கத்தியின்றி, ரத்தமின்றி யுத்தம் ஒன்று வருகுது, பார்' என்று நாமக்கல்லார் சொன்னது தான் நினைவுக்கு வருகிறது. கத்தியின்றி, ரத்த சேதமின்றி, மருத்துவர் இன்றி, மனத்தின் மேன்மையால் மேனி ஆளலாம். நீயோரான்கள் தாம் மனமா என்பதை விட மூளையில் கத்திபடக்கூடாத பகுதிகளையெல்லாம் நாம் வெளியிலிருந்தே இயக்கி ஆரோக்கியமாக இருக்கலாம் என்பது ரொம்பவும் ஆறுதலான சமாச்சாரம்.


"கோபம், சோகம் போன்ற உணர்வுகளுக்கெல்லாம் காரணமாய் இருப்பவை வெளியுலக நிகழ்ச்சிகள். அதாவது வெளியுலக நிகழ்ச்சிகளை நாம் உள்வாங்கிக் கொள்ளும் விதத்தின் வெளிப்பாடு. இந்த நிகழ்ச்சிகளை அனுபவிப்பதின் அடிப்படையில் கார்க்டெக்ஸ் பகுதியில் ரத்த சப்ளை தீர்மானிக்கப்படுகிறது. வெளியுலக நிகழ்ச்சிகள் நம்மிடம் ஏற்படுத்தும் தாக்கம், கார்டெக்ஸ் பகுதியில் இரத்தசப்ளை--- இந்த இரண்டு நிகழ்வுகளுக்கும் இடையிலான 'அனுபவிப்பை' வசதியாக மறந்துவிடுகிறோம். வெளியுலக நிகழ்ச்சிகளின் அனுபவத்தின் அனுபவிப்பை அனுபவிப்பது தான் மனம். அந்த அனுபவிப்பின் வெளிப்பாடு தான் கார்டெக்ஸ் பகுதியில் ரத்தசப்ளையான உடலியக்க செயல்பாடுகள். கோபம் வந்தால் உடல் படபடத்து முகம் சிவக்கக் கத்துவது, சோகம் எனில் தொய்ந்து போய்த் தளர்வது போலான செயல்பாடுகள்.

ஆக, கார்டெக்ஸ் பகுதியின் அதிவேக ரத்தப்பாய்ச்சலுக்குக் காரணத்தைச் சொல்லாமல், ரத்த சப்ளை நடக்கிறது என்று மட்டும் சொல்வது பாதி சமாச்சாரம். மனத்தின் அனுபவத்தின் வெளிப்பாடாய் உணர்வுகள் எழுந்து செயல்பாட்டுக்காக ரத்த விநியோகம் நடக்கிறது என்பது முழுமையான தகவல்.


"இங்கு தான் மனவியல் வைத்தியம் வருகிறது. அனுபவிக்கும் உணர்வுகள் தாம் உடலின் ஆரோக்கிய செழுமைக்கும் அல்லது அதன் சீர்கேட்டிற்கும் காரணாமாகிப் போகிறது என்று ஆனபின், 'கண்களை விற்று சித்திரம் கொள்வாரோ, தோழி' என்று கேட்கத்தான் தோன்றுகிறது.


உரையை முடிக்கிற பாவனையில் இருந்த மேகநாதன், அவையை ஒருமுறை சுற்றி நோக்கி விட்டு,"இவ்வளவையும் சொல்லிவிட்டு நியூரோன்களைப் பற்றி சொல்லவில்லை என்றால் பாவம்" என்று சொல்லி லேசாகச் சிரித்தார். "மின் வேதியியல்---Electro Chemical---அடிப்படையில் மூளை இயங்குவதாகக் கண்டறிந்திருக்கிறார்கள். அந்த அடிப்படையில், மூளையிலுள்ள நியூரோன்களில் ரசாயன மின் மாற்றங்கள் ஏற்படலாம். இந்த வேதியியல் மின்மாற்றம் தான் மனமோ என்கிற சந்தேகம் இருக்கிறது. ஆனால் பொதுவாக நான் புரிந்து கொண்ட அளவில், அனுபவத்தைப் பெறுவது மனம் தான் என்பதால், அனுபவம் என்றால் என்னவென்று அறிவியல அறிஞர்கள் சொல்லியிருப்பதைப் பற்றி யோசித்தேன். மூளையின் நியூரோன்கள் இணைப்பில் மாலிக்யுலர் மாற்றங்கள் ஏற்படுவதாகவும் அந்த மாற்றங்களே அனுபவம் என்று நாம் உணர்வதாக இருக்கலாம் என்கிறார்கள்.


"கொஞ்சம் என்ன, நிறையவே தலை சுற்றுகிற சமாச்சாரம் தான் இது. இருந்தாலும், கவியரசர் கண்ணதாசன் சொன்னது நன்றாகவே புரிகிற மாதிரி இருக்கிறது: கடவுளை "நீ யார்?.. நீ யார்?.." என்று தொடர்ச்சியாகக் கேட்டுவிட்டு, கடைசியில் "அந்த அனுபவமே நான் தான் என்றான்" என்று கவியரசர் முடிக்கையில்--- இது, புரிவது மட்டுமல்ல நிறைய புரிதலையும் ஏற்படுத்துகிறது.."


கைக்குட்டை எடுத்து நெற்றி வியர்வையைத் துடைத்துக் கொண்ட மனவியல் அறிஞர் மேகநாதன் அடுத்த வினாவை எதிர்நோக்கி மைக்கை சரிசெய்து கொண்டார்.

(தேடல் தொடரும்)

Saturday, June 13, 2009

ஆத்மாவைத் தேடி....3 இரண்டாம் பாகம்

ஆன்மீகத்தின் அடுத்த கட்டத்தை நோக்கி....

3. மனத்தின் இராஜாங்கம்.

பிற்பகல் அமர்வின் சந்தோஷத்தைக் கூட்டுவது போல வெளி சீதோஷ்ண நிலை வெகு ரம்யமாக இருந்தது. மனவியல் அறிஞர் மேகநாதனும் எல்லோரும் இருக்கையில் அமர்ந்துவிட்டதை நிச்சயப்படுத்திக் கொண்டு மேடையேறினார். கை நிறைய கத்தை கத்தையாக காகிதக்குறிப்புகள் வேறு.
மைக்கைச் சரிப்படுத்திக்கொண்டு வழக்கமான தனது குழைந்த குரலில் "ஆரம்பிக்கலாமா?" என்று கேட்டுக்கொண்டு பேச ஆரம்பித்தார்.

"இன்றைய காலை அமர்வில் நிகழ்த்தப்பட்ட உரையை ஒட்டியதான சிலருக்குத் தோன்றிய ஐய வினாக்களுக்கு பதிலளிக்கும் விதமாக இந்தப் பிற்பகல் அமர்வை அமைத்துக் கொள்ளலாம் என்று முடிவெடுத்திருந்தோம் இல்லையா? நீங்கள் ஒவ்வொருவராக உங்களின் சந்தேகங்களைக் குறிப்பிட்டால், எனக்குத் தெரிந்த வரையில் விளக்கம் சொல்ல முயற்சி செய்கிறேன்.. ஆக, நீங்கள் கேட்கத் தொடங்கலாம்--" என்று புன்முறுவலுடன் அவையைப் பார்க்க உற்சாக கரகோஷம் எழுந்தது.

நாலாவது வரிசையில் உட்கார்ந்திருந்த குணசீலன் முதலில் எழுந்திருந்தார். "காலை அமர்வில் 'மனம்' என்கிற பொருளில் அருமையான உரை ஆற்றிய பேராசிரியர் மேகநாதன் அவர்களுக்கு மிக்க நன்றியைச் சொல்லக் கடமைப்பட்டுள்ளேன். ஐயா அவர்கள் பேசும் பொழுது சொன்னார்கள். ஆன்மீகத்தின் அடித்தளமே இந்த மனம் என்ற ஒன்று தான் என்று சொன்னார்கள். விஞ்ஞானத்தின் கண்டுபிடிப்பாய் இந்த மனம் என்கிற ஒன்றை இன்னது என்று கண்டுபிடித்து விட்டால், ஆன்மீகத்தின் அஸ்திவாரம் கலகலத்துப் போகாது. மாறாக, மேலும் உறுதியாகப் பலப்படும் என்கிற அர்த்தத்தில் சொன்னார்கள். ஆன்மீக உணர்வுகளும், விஞ்ஞான வெளிப்பாடுகளும் எதிர் எதிரானவை போன்ற தோற்றம் தான் பொதுவாக இருப்பதாகத் தெரிகிறது. அப்படியிருக்கையில், 'மனம்' பற்றிய விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள் எப்படி ஆன்மீகச் சிந்தனைகளுக்குப் பலம் கூட்டும் என்பதே என ஐயம். ஐயா அவர்கள் இதுபற்றி விவரமாகச் சொன்னால் நல்லது" என்று கூறி அமர்ந்தார்.


"அருமையான கேள்வி மட்டுமல்ல, நியாயமான சந்தேகமும் கூட" என்று மனந்திறந்து பாராட்டினார் மேகநாதன். "உடற்கூறு சாத்திரம் என்பது உடலின் உள்ளிருக்கும் உறுப்புகள் பற்றிய அறிவே. தவளையையும், எலியையும், முயலையும் பெளதீக ரசாயனச் சாலைகளில் கூறு போட்டுப்பார்த்து கொஞ்சம் கொஞ்சமாக உடற்கூற்றின் ஞானம் உள்வாங்கப்பட்டது. மூளை, இதயம், தண்டுவடம், கல்லீரல், மண்ணீரலென்று மனித உடலினுள் என்னென்ன உறுப்புகள் உள்ளனவோ, அவையெல்லாம் உயிர்ப்புடன் இருக்கையில் எப்படிச் செயல்படுகின்றன என்று அறிய முற்பட்ட ஆராய்ச்சியின் செழுமையான காலகட்டத்தில் நாம் இருக்கிறோம். ஆனால் முழுமை அடைந்து முற்றுப்பெறவில்லை என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். உடல் உறுப்புகளைப்பற்றிய அறிவு என்பது அவற்றின் செயல்பாட்டைக் கண்டுபிடித்த அறிவாக இருக்கிறதே தவிர, இன்னும் முழுமையாக உடலை இயக்கும் இயக்கு சக்தி பற்றித் தெளிவாக அறியாத நிலையில் தான் இருக்கிறோம்.

"ஜீவனுள்ள உறுப்புகளை வெட்டி ஒட்டித் தைக்கத் தெரிந்திருக்கிறோமே தவிர, அவற்றை இயக்க இன்னும் தெரிந்தோமில்லை. தெரிந்து கொள்ள முடியாமைக்கு முக்கியக்காரணம், உடலை இயக்க என்று உடலினுள் எந்த உறுப்பும் இல்லாத காரணம் தான். அதனால் தான் இன்றைய உடற்கூறு சாத்திரம் என்பது உடலினுள் உள்ள உறுப்புகளைப் பற்றிய வெறும் அறிவாக, கோளாறு கண்டவைகளை செப்பனிடுகிற அறிவாகப் போய்விட்டது"


இந்த இடத்தில் மேகநாதன் பேச்சை நிறுத்தி ஒரு வினாடி நேர மெளனத்திற்குப் பிறகு தொடர்ந்தார். "பல நூற்றாண்டு காலமாக பல்வேறு உயிரியல் கண்டுபிடிப்புகளுக்கு காரணகர்த்தாக்களாக அர்ப்பணிப்பு உணர்வுடன் தங்களை வருத்திக்கொண்டு செயல்பட்ட விஞ்ஞானிகளுக்கு என் சிரம் தாழ்த்திய நன்றிகள். அந்தத் திருக்கூட்டத்தின் மேல் அறிவியல் உலகம் கொண்டுள்ள நம்பிக்கை அசாத்தியமானது. தொடரும் அந்த நம்பிக்கையில் தான் இதையும் சொல்லவேண்டியிருக்கிறது.

"தனக்கென்று ஒரு உறுப்பு கொண்டிராத மனத்தின் வியக்கத்தக்க வேகமும், ஒட்டுமொத்த உடலையே தன் ஆளுகைக்கு எடுத்துக்கொண்டு அது நடத்தும் இராஜங்கமும் விஞ்ஞானாத்தை திகைக்க வைத்திருக்கிறது. இத்தனைகாலம் உறுப்பில்லாத எது பற்றியும் பேசுவதே, குறிப்பிடுவதே தீட்டு என்று கருதிய உடற்கூறு இயல், இப்பொழுதுதான் மனத்தின் செயல்பாடுகளைப் பற்றிய அறிவைத் திரட்டத் தொடங்கியிருக்கிறது. அதுவும் வெறும் ஆரம்பக்கல்வி அறிவாகத்தான் இப்பொழுது இருக்கிறது.



"அதனால் தான் மன உணர்வுகளை அடிப்படையாகக் கொண்டு ஆன்மீகத்தின் பக்கம் அதன் கவனம் திரும்பியிருக்கிறது... தியானமும், யோகக்கலையும் உற்று கவனிக்கப்பட்டு பயிற்சிப் பாடங்களாக வைக்கலாம் என்கிற யோசனை ஏற்றுக்கொள்ளபட்டிருக்கிறது... விஞ்ஞான ஆராய்ச்சிகளின் இந்த திசை நோக்கியதானப் பயணம், மன இயல் சாத்திரத்தின் இன்னொரு மைல் கல் என்று சொல்லலாம்.


"கஷ்டமான ஒரு 'தீஸிஸை' விளக்குகிற ஒரு புரொபஸரின் பொறுப்பான நேர்த்தி மேகநாதனின் பேச்சில் இருந்தது.. "இது வரவேற்கத்தக்கது தானே என்று பூரிப்பதை விட, இதை ஆன்மிகத்தின் ஒரு கட்ட Process-ஆக நான் நினைக்கிறேன். இது ஒரு வேறுபட்ட Process என்பதையும் சொல்ல வேண்டும். பல நூறு ஆண்டுகளுக்கு முன், மனமே உடலின் சக்தி ஓட்டமாக ரிஷிகளாலும், ஞானிகளாலும் உணரப்பட்டு, கால சுழற்சியில் நாளாவட்டத்தில் ஆதிகால அற்புத சக்தியின் மகோதனம் மறைந்து அல்லது மறக்கப்பட்டு, அதுபற்றி இப்பொழுது கொஞ்சம் கொஞ்சமாக அறிதல் ஏற்பட்டு, மீண்டும் அதன் சக்தி உணரப்படும் காலகட்டம் இது. பளபளவென்றிருந்த பாத்திரத்தில் காலஓட்ட களிம்பேறி கறும்பச்சை கலராகிப் போனதைத் துலக்கி மீண்டும் பளபளப்பைக் காணும் படிமம் இந்த Process.

"இனி, உடல் விஞ்ஞானத்தை இரண்டு கூறுகளாகப் பிரிக்கலாம். 1. உடலினுள் அறியப்பட்ட உறுப்புகளைப் பற்றிய அறிவு, அதற்கான சிகித்சை முறைகள்.
2. உறுப்புகளிலில்லாமல் உடல் இயக்கத்தில் பங்கு பெறும் சக்திகளைப் பற்றிய அறிவு, அதற்கான சிகித்சை முறைகள்.

"அலோபதி வைத்திய முறைகளில் இதுவரை அறியாத இருண்ட கண்டமாக இருந்த இந்த இரண்டாவது பகுதி பற்றிய புதுக்கண்டுபிடிப்புகளும், அது பற்றிய ஞானமும் இப்போது கவனத்தைக் கவர்ந்திருக்கிறது என்றால், அந்த முயற்சிகளெல்லாம் வரவேற்க வேண்டியது தானே? இந்த இரத்தின கம்பள வரவேற்பில் ஆன்மீகமும் ஒரு சயின்ஸாக புதிய தலைமுறையினரால் போற்றப்படும் நாள் வெகுதூரத்தில் இல்லை."

மன இயல் அறிஞர் மேகநாதன் முதல் வினாவிற்கு விடையளித்து முடிக்கையில் அரங்கமே கரகோஷத்தில் அதிர்ந்தது.

அடுத்த ஐய வினாவைக் கேட்க, கோயில் சிற்பக்கலை ஆராய்ச்சி அறிஞர் சித்திரசேனன் எழுந்திருந்த இடைவேளையில் கையிலிருந்த காகிதக் கற்றைகளைக் கோர்வையாக அடுக்கிக் கொண்டார், மேகநாதன்.

(தேடல் தொடரும்)
Related Posts with Thumbnails