மின் நூல்

Sunday, February 1, 2009

ஆத்மாவைத் தேடி....33

ஆன்மீகத்தின் அடுத்த கட்டத்தை நோக்கி....


33. ஐஸ்கிரீம் சாப்பிட ஆசை


டற்கூறு இயல் அறிஞர் உலகநாதனின் உரையில் இப்பொழுது வேகம் கூடியிருந்தது. அவையினரும் அவர் சொல்வதில் ஒன்றிப்போய் ஆர்வமுடன் கேட்டுக்கொண்டிருந்தனர்.



"உடலின் ஒவ்வொரு உறுப்புக்கும் ஒரு வேலை இருக்கிறது. தனக்கென்ற வேலை என்ற ஒன்று இல்லாமல் எந்த உறுப்பும் வேஸ்ட்டாக இல்லை. இதில் வேடிக்கை என்னவென்றால், இந்த அளவு விஞ்ஞான வளர்ச்சிக்குப் பிறகும், ஒவ்வொரு உறுப்பின் முழுப் பயன்பாட்டை நாம் உபயோகப்படுத்திக் கொள்ளவில்லை என்பது தான். இதற்குக் காரணம் என்னவாயிருக்கும் என்பதை உங்கள் யோசனைக்கே விட்டு விடுகிறேன். அங்கங்கே இப்படி உங்களை யோசிக்க வைப்பதற்கும் காரணம் இருக்கிறது.



"சரி. மூளைக்கு என்னதான் வேலை?.. உடல் உறுப்புகளால் உணரப்படும் ஒட்டுமொத்த உணர்வுகளும் வந்து சேரும் இடம் மூளை தான். உணர்ச்சி நரம்புகள் மூலமாகவோ அன்றி தண்டுவடத்தின் மூலமாகவோ உணர்வுகள் மூளைக்கு கடத்தபடுகின்றன. இதை உள்ளீடு என வசதிக்காக வைத்துக் கொள்ளலாம். எப்பொழுது 'உள்ளீடு' உண்டோ அப்போ 'வெளியீடு'ம் உண்டலல்லவா?.. பெறும் உணர்வுக்கேற்ப தேவையான உத்திரவுகளை நரம்புகள் மூலம் தசைகளுக்கு அனுப்புவது என்பதே மூளையின் 'வெளியீடு'. உணர்வுகள் பெருமூளை அடைந்து அடுத்து என்ன என்று தீர்மானித்து, உத்திரவுகள் வந்து சேர்ந்து, செயல்படும் நடவடிக்கைக்கான 'காலநேரத்'தை நாம் அறியும் கணிதவியலில் கண்டுபிடிக்கவேயில்லை. அவ்வளவு நுணுக்கமான ஃபிராக்க்ஷனுக்கும் ஃபிராக்க்ஷனான நொடி நேரம் அது!

உதாரணமாக இப்படி ஒரு நிகழ்வை மனத்தில் ஓட்டிப் பாருங்கள்:
"ஐஸ்கிரீம் சாப்பிட ஆசை"-- உணர்வு.

"ஜமாய்! வாங்கு. சாப்பிட்டு ஆசையைத் தீர்த்துக்கொள்" என்றோ--

"ஐஸ்கிரீமா?.. முதலிலேயே சளியில் மூக்கடைத்துக் கிடைக்கிறது. இதில் ஐஸ்கிரீம் ஒரு கேடா?" என்றோ--

"பெற்ற உணர்வுக்கும் கிடைத்த உத்திரவுக்கும் இடைப்பட்ட 'காலநேரத்'தை நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள்.

"இன்னொன்று.



"'ஐஸ்கிரீம் சாப்பிட ஆசை' என்கிற உணர்வு எப்படி ஏற்படுகிறது? ஐஸ்கிரீமை இதற்கு முன் சாப்பிட்டு அதன் சுவை மனசுக்குப் பிடித்த அனுபவமே காரணம்.

"இதற்கு முன் ஐஸ்கிரீமைப் பற்றிக் கேள்விப்பட்டதே இல்லை, அப்படி ஒரு பொருளை சாப்பிட்டதே இல்லை என்றால் சாப்பிட ஆசையே ஏற்பட்டிருக்காது.

"ஐஸ்கிரீம் சாப்பிடுகிறாயா?'-- நண்பனோ, நண்பியோ கேட்டால்--

"ஐஸ்கிரீமா?.. என்ன அது?.. எப்படியிருக்கும்?"

"இந்தா.. சாப்பிட்டுப் பார்த்துச்சொல்."

"சாப்பிட்டு விட்டு, 'அடே! ஜில்லுன்னு ஜோரா இருக்கே?.. இதுக்குப் பேர் தான் ஐஸ்கிரீமா?'"

"கண் அந்தப் பொருளை நன்றாகப் பார்த்து, படமாக நினைவுத் திரையில் பதிகிறது. இன்னொரு தடவை அந்தப் பொருளைப் பார்த்தால், 'இதுதான்யா ஐஸ்கிரீம்' என்று புரிந்து கொள்வதற்கு வாகாக. சாப்பிட்டு அறிந்த சுவை நாவின் ருசி மொட்டுகளால் உணர்ந்து அந்தச் சுவையின் நேர்த்தியும் அனுபவக்குறிப்பும் கூட மூளையில் பதிகிறது-- அடுத்த தடவை ஐஸ்கிரீமைப் பார்க்கும் பொழுது ஆசைப்பட வைக்க.

"எல்லா உணர்வுகளும் மூளையின் எல்லா இடங்களிலும் வந்து சேர்ந்தால் 'டிராபிக் ஜாம்' ஆகிவிடும் இல்லையா?.. அதனால் இன்ன வேலைக்கு இன்ன பகுதி என்றுஇறைவன் அழகாக ஏற்பாடு செய்திருக்கிறான்.

"பார்வை உணர்வுக்கான இடம் பெருமூளையின் பின்புறப்பகுதியில்; விழித் திரையில் தலைகீழ் பிம்பமாக விழும் பார்வையில் படுபவனவற்றை அங்குள்ள் பார்வைநரம்புகள் ஒளிபிம்பத்தால் தூண்டப்பட்டு அதைப்பற்றிய உணர்வை மூளைக்கு அனுப்புகின்றன. ஒலி, வாசனை, ருசி இவற்றை உணரும் பகுதி மூளையின் பக்கவாட்டில்உள்ளன. ஒவ்வொன்றுக்கும் உரிதான இலாகாக்கள் வெவ்வேறான இடங்களில் இருப்பதாகத் தோற்றமே தவிர, எல்லா இடங்களும் ஒன்றோடொன்று நரம்பு செல்களால் இணைக்கப்பட்டிருக்கின்றன.

"மொத்தம் 12 ஜதை நரம்புகள். எவ்வளவு திட்டமிட்ட ஏற்பாட்டுடன் மூளையின் அடிப்பகுதியில் இணைப்பு கொடுக்கப்பட்டிருக்கின்றன என்பதை நினைத்துப் பார்த்தால் வியப்பு மேலிடுகிறது.

முதல் இரண்டு-- வாசனையை அறிய உதவ.

இரண்டாம் இரண்டு-- பார்வை நரம்புகள்; ஒரு கண்ணுக்கு ஒன்று என்று.

மூன்று, நான்கு, ஆறு -- கண்விழி தசையுடன் இணைந்த்து. பார்க்க, பார்க்கும் பொருளின் அளவு, தூரம் இவற்றைத் துல்லியமாக தீர்மானிக்க.

ஐந்து -- வாயில் வந்தடையும் பொருளை அசைத்து தசைகளை இயக்க.

ஏழு -- முக நரம்புகள். அடிநாக்க்கில் படியும் ருசி, வாயைத் திறந்து மூட, சிரிக்க, நெற்றி மேட்டின் தசை மாறுதல்களுக்கு.

எட்டு -- ஒலித் தொடர்பானவை. காதுகளில் மோதும் ஒலி அலைகளை சமநிலைப்படுத்தும் சக்தி படைத்தவை.

ஒன்பது - நாக்கின் முன்பகுதியில் படும் பொருளின் ருசியை உணர, உணவை விழுங்க, உமிழ்நீரைச் சுரக்கச் செய்யவதற்கான தசைகளை இயக்க.

பத்தாவது ஜதைக்கு ஏகப்பட்ட முக்கிய வேலைகள். நெருக்கடியான நேரங்களில் இதயம், சுவசம், ஜீரண உறுப்புகள் ஆகியவை தாமே இயங்கிக் கொள்வதற்கான உத்திரவுகளை பிறப்பிக்க இந்த நரம்புகளே பொறுப்பேற்றுக் கொண்டு செயல்படுகின்றன.

பதினொன்றாவது - தலையைத் திருப்ப, தோளை வேகமாக அசைக்க

கடைசியான பன்னிரண்டாவது ஜதை -- நாக்கை அசைக்கும் தசைகளை இயக்க.

ஆக, பெருமூளை உணர்வுகளை உள்வாங்கவும், தேவையான் உத்திரவுகளைப் பிறப்பிக்கவும் ஏற்ற இடமாகிறது. நிதானித்துச் செய்யும் செயல்களின் உற்பத்திக்கேந்திரமும் இதுதான்.


இன்னும் தொடரும் விஷயங்களில் நிறைய அதிசயங்கள் இருக்கின்றன.

அவற்றைத் தொடர்ந்து பார்க்குமுன் --


இறைவன் இருக்கின்றார்

'ஆவ்' என்று நீண்ட கொட்டாவி. தூக்கம் கண்களைச் சுழற்றுகிறது. இதற்கு மேல் தாக்குப் பிடிக்க முடியாது என்று தூங்கப் போகிறோம்.

சரி. இந்தத் தூக்கம் என்பது தான் என்ன?.. அயர்ச்சி அடைந்த நரம்புகள் தளர்ச்சி அடையச் செய்து சுகிக்கபடும் ஓய்வா?.. நாம் அப்படி நினைத்துக் கொண்டாலும் உண்மையில் இல்லை. தூங்கும் பொழுது தான், மூளை அதிக ஆக்ஸிஜனை ஏற்றுக் கொள்கிறது. மூளையின் 'ஹிப்போகேம்பஸ்' பகுதி முழு வீச்சில் செயல்படும்நேரம் நாம் தூங்கும் பொழுதே. நினைவில் நின்ற நிகழ்ச்சிகள், எப்போதோ நடந்தது கூட ஏதேதோ சம்பந்த முடிச்சை தமக்குத் தாமே போட்டுக் கொண்டு கனவுப்படம் ஓடுகிறது. அன்று நடந்தவை களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு 'இதை ஃபைல் படுத்திக் கொள்ளலாம்' என்று மூளை தீர்மானித்துத் தன் கோப்பில் கோர்த்துக் கொள்ளும்நேரமும், அசந்து மறந்து மனிதன் தூங்கும் நேரம் தான்.

இதயம் பாட்டுக்க 'சிவனே' என்று துடித்துக் கொண்டிருக்கிறது. இரத்த ஓட்டம் தன் ஓட்டத்தில் கவனமாக இருக்கிறது. சுவாசக்காற்று சீராக நுரையீரல்களுக்கு சப்ளை ஆகிக்கொண்டிருக்கிறது.

மூளை சர்க்யூட்டுகள் மட்டும் மிகுந்த பொறுப்புணர்வுடன் ஒன்றுக்கொன்று பேசி வைத்துக்கொண்ட ஒற்றுமையில் செயல்பட்டு கண்களைச் செருக வைத்து நம்மைக் கட்டிப் போட்ட தூக்கத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

உடலின் உள் செயல்பாடுகள் உணர்விலிருக்க, உடல் மட்டும் தன்னை இழந்து, தன்னிலிருந்து நழுவி தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பது தெரியாமல் தூங்கும் நேரம், தூங்குபவன் ஆனந்த களிப்புடன் தெய்வ சம்பந்தத்துடன் பிணைக்கப்பட்ட நேரம்!

இருட்டுக்கும் தூக்கத்துக்கும் கூட சம்பந்தம் உண்டு. இரவானால், 'விளக்கை அணைத்துத் தூங்கு' என்பது தொடர்ந்த பழக்கத்தினால் வந்த செய்கை.

(தேடல் தொடரும்)

15 comments:

கபீரன்பன் said...

//இதற்கு முன் சாப்பிட்டு அதன் சுவை மனசுக்குப் பிடித்த அனுபவமே காரணம்.

"இதற்கு முன் ஐஸ்கிரீமைப் பற்றிக் கேள்விப்பட்டதே இல்லை, அப்படி ஒரு பொருளை சாப்பிட்டதே இல்லை என்றால் சாப்பிட ஆசையே ஏற்பட்டிருக்காது
//

இறையனுபவத்திற்காக மனம் ஏங்காது எங்கெங்கோ சுற்றுவதும் அந்த ருசியே என்ன என்பது தெரியாததால் தானே ?

//"'ஐஸ்கிரீம் சாப்பிட ஆசை' என்கிற உணர்வு எப்படி ஏற்படுகிறது? ஐஸ்கிரீமை இதற்கு முன் சாப்பிட்டு அதன் சுவை மனசுக்குப் பிடித்த அனுபவமே காரணம்.//

இந்த முதல் ருசிக்கு வழியென்ன ?

பாச மலர் / Paasa Malar said...

//இந்த முதல் ருசிக்கு வழியென்ன ?//

பிறர் கூறக் கேட்டிருக்கலாம்..

12 ஜதை நரம்புகள்..

உடற்கூறு பற்றிய செய்திகள் சுலபமாக, சுவையாகச் சில்லியிருக்கிறீர்கள்..

Kavinaya said...

//இறையனுபவத்திற்காக மனம் ஏங்காது எங்கெங்கோ சுற்றுவதும் அந்த ருசியே என்ன என்பது தெரியாததால் தானே ?//

நல்ல கேள்வி. எனக்கும் இதேதான் தோன்றியது.

இறைவனை அடைவதற்கான அன்பையும் ஏக்கத்தையும் வேண்டி அவனிடமே மனமுருக வேண்டிக் கொள்ள வேண்டுமென்பதே ஸ்ரீராமகிருஷ்ணர் அடிக்கடி சொல்வது.

ஜீவி said...

கபீரன்பன் said...

//இறையனுபவத்திற்காக மனம் ஏங்காது எங்கெங்கோ சுற்றுவதும் அந்த ருசியே என்ன என்பது தெரியாததால் தானே ? //

முதலில் ஒரு விஷயம் பற்றித் தெரிதல்.. அடுத்து தெரிந்தும் அதில் ஆர்வம் என்றால் அதற்கடுத்து ஈடுபாடு. ஈடுபாடு ஏற்படும் ஸ்டேஜில் உள்ளுணர்வால் உணர்தல்.

இறைவனின் அருகாமை மட்டுமே அதை உணரும் நேரத்து அந்த அருகாமையே மன சஞ்சலங்களுக்கு மருந்தாகும் பொழுது இதுவே பிறவி எடுத்த பேறு என்று தெளிதல்.
தெளிந்து துதித்துத் துய்த்தல்.

இந்த நேரத்தில் இது என்று ஏதோ நிர்ணயிக்கப் பட்ட மாதிரி தெரிகிறது.
எதுவும் நிரந்தரமின்மையால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நேரத்தில் ஒன்றை உணர்கிறார்கள்.
எல்லாரின் எல்லா உணர்வுகளும் அநத இறையருளில் அடக்கம் என்பது தான் விடை காண முடியாத கணக்காகத் தெரிகிறது.

இது எனது உணர்வே தவிர இன்னொருவருக்கு இன்னொரு மாதிரியும் இருக்கலாம்.

ஜீவி said...

கபீரன்பன் said...

//"'ஐஸ்கிரீம் சாப்பிட ஆசை' என்கிற உணர்வு எப்படி ஏற்படுகிறது? ஐஸ்கிரீமை இதற்கு முன் சாப்பிட்டு அதன் சுவை மனசுக்குப் பிடித்த அனுபவமே காரணம்.//

//இந்த முதல் ருசிக்கு வழியென்ன ?//

'கடை விரித்தேன்; கொள்வாரில்லை'
என்று வள்ளலார் வருந்திச் சொல்லவில்லையா?

தேடித் திரிந்து தெரிந்து கொள்வதே வழியாகத் தெரிகிறது.

'ஆற்றுபடுத்துதல்' மாதிரி எத்தனை மகான்கள் வழிகாட்டியிருக்கிறார்கள்?
நீங்கள் சொல்லாத கருணைக்கடல் கபீரின் அமுத மொழிகளா?..

வருகைக்கும் வழிகாட்டும் வினாக்களுக்கும் மிக்க நன்றி, கபீரன்ப!

கபீரன்பன் said...

//இந்த நேரத்தில் இது என்று ஏதோ நிர்ணயிக்கப் பட்ட மாதிரி தெரிகிறது.//

ஆர்வம் தூண்டிவிடப் பட்டாலும் ”ருசி” கிடைக்காமல் போனால் அந்த ஆர்வம் ஏமாற்றமாகி மறைந்து விடும்.

ஆனால் “பசி” என்று சொல்லத்தெரியாத குழந்தையும் பசியால் அழுகிறது! நிர்ணயிக்கப்பட்ட காலத்தில் அந்த அருட்பசி தானே வரும். அப்போது அதற்கான தீர்வையும் அவனே தருகிறான்.

ருசி பற்றிய ஆர்வத்தால் அடையப் படுவதல்ல ’அருள்’ என்பதை புரிந்து கொண்டேன்.
நன்றி

ஜீவி said...

பாச மலர் said...
//இந்த முதல் ருசிக்கு வழியென்ன ?//

பிறர் கூறக் கேட்டிருக்கலாம்..

12 ஜதை நரம்புகள்..

உடற்கூறு பற்றிய செய்திகள் சுலபமாக, சுவையாகச் சொல்லியிருக்கிறீர்கள்..//

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி, பாசமலர்!

நான் சொல்வது இங்கேயும் அங்கேயும் தேர்ந்தெடுத்த சில செய்திகளைத் தான். ஒரு கதை உருவம் கொடுத்து அதில் அலுப்புத் தட்டாமல் சொல்ல முடிந்தவற்றை சொல்ல வேண்டியிருக்கிறது. அதனால் முழுசும் சொன்ன நிறைவு ஏற்படவில்லை.

ஆனால் இந்த மாதிரியான யதார்த்த உண்மைகளை விரும்பும் உங்களைப் போன்றோரால் இதற்கும் மேலான மேலதிகத் தகவல்களைத் திரட்ட முடியும். அந்த வாய்ப்பும் ஆர்வமும் இருக்கும் நீங்கள் இன்னும் அதிக தகவல்களைப் படித்து அதிசயிக்க
வேண்டுகிறேன்.

அடுத்து மனவியல் தொடர்பான உண்மைகளை எழுதும் பொழுது
இன்னும் மேலான சுவாரஸ்யத்துடன் இவற்றை நீங்கள் ரசிக்கவும் அவை உதவும்.

கருத்துக்களுக்கு மிக்க நன்றி, பாசமலர்!

ஜீவி said...

கவிநயா said...
//இறையனுபவத்திற்காக மனம் ஏங்காது எங்கெங்கோ சுற்றுவதும் அந்த ருசியே என்ன என்பது தெரியாததால் தானே ?//

//நல்ல கேள்வி. எனக்கும் இதேதான் தோன்றியது.

இறைவனை அடைவதற்கான அன்பையும் ஏக்கத்தையும் வேண்டி அவனிடமே மனமுருக வேண்டிக் கொள்ள வேண்டுமென்பதே ஸ்ரீராமகிருஷ்ணர் அடிக்கடி சொல்வது.//

அதற்கேற்பவான மனநிலையை
கொடுக்கவும் அவன் அருள் வேண்டும் என்பது உண்மையான உண்மைதான்.

பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணரின் கருத்துக்களை தக்க இடத்தில் எடுத்தாண்டமைக்கு மிக்க நன்றி, கவிநயா!

தொடர்ந்து வாருங்கள்.

ஜீவி said...

கபீரன்பன் said...
//இந்த நேரத்தில் இது என்று ஏதோ நிர்ணயிக்கப் பட்ட மாதிரி தெரிகிறது.//

//ஆர்வம் தூண்டிவிடப் பட்டாலும் ”ருசி” கிடைக்காமல் போனால் அந்த ஆர்வம் ஏமாற்றமாகி மறைந்து விடும்.//

ஏமாற்றம் என்பது எள்ளளவும் ஏற்பாடாமல் திசைதிருப்ப தகுந்த
சஜஸ்டிவான மனபயிற்சிகள் உண்டு.
மூளை நரம்புகளே அதற்கு சாதகமான எண்ணங்களைத் தோற்றுவித்து
சமாதானப்படுத்தி விடும்.

வரும் அத்தியாயங்களில் எல்லாவற்றையும் சொல்லவிருக்கிறேன்.

எண்ணங்களைப் பதிந்தமைக்கு மிக்க நன்றி, கபீரன்ப!

கிருத்திகா ஸ்ரீதர் said...

ரொம்ப தீர்க்கமா தெளிவா இருக்கு இந்த பாகம். அதுலேயும் கபீரன்பர் இதை இறைஅனுபவத்தோடு ஒப்பிட்டு சொன்னதை படிக்கும்போது இன்னும் ரொம்ப நல்லாருக்கு.. நன்றி.

ஜீவி said...

கிருத்திகா said...

//ரொம்ப தீர்க்கமா தெளிவா இருக்கு இந்த பாகம். அதுலேயும் கபீரன்பர் இதை இறைஅனுபவத்தோடு ஒப்பிட்டு சொன்னதை படிக்கும்போது இன்னும் ரொம்ப நல்லாருக்கு.. நன்றி.//

அப்படியா?.. உங்களுக்குப் பிடித்திருப்பது குறித்து மகிழ்ச்சி.


ஏற்படும் அனுபவங்கள் எத்தனையோ
என்றாலும் மனதுக்குப் பிடித்தவை
எல்லாம முதலில் நினைவில் பதிந்துவிடுகின்றன. பதிந்த அதே மாதிரியான இன்னொரு அனுபவம் ஏற்படும் பொழுது முன்னதாக ஏற்பட்ட அனுபவத்தோடு ஒப்பு நோக்கி
சீர்தூக்கிப் பார்த்து அந்த நேரத்து எது மேலானதாகவோ அல்லது தனக்குச் சரியென்று எது தோன்றுகிறதோ அது தான் சிறப்பானது என்று மனம் ஏற்றுக்கொள்கிறது. பின்னொரு சமயம் ஏற்றுக்கொண்டது தவறு என்று தெரிந்தால் திருத்திக் கொள்ளவும் செய்கிறது.

அதனால் எந்த அனுபவத்தின் ஏற்றுக் கொள்ளலும் முற்றான முடிவல்ல.
பெற்ற அறிவின் வளர்ச்சிக்கேற்ப, சீர்தூக்கிப் பார்த்து தள்ள வேண்டியதைத் தள்ளி கொள்ள வேண்டியவற்றைக் கொள்வதில் தான் விஷயமே இருக்கிறது. அதனால் தள்ளியதை பின்பு கொள்ளவும் செய்யலாம்; கொண்டதை பின்பு தள்ளவும் செய்யலாம்.

அனுபவத்தை விட அதை பற்றியதான அறிவே முக்கியம்.

எல்லா அனுபவங்களும் மாறுதலுக்கு உட்பட்டவையே.
அழித்து எழுதாத எந்த அனுபவமும் இல்லை என்பதும் இத்தனைக்கும் நடுவே இருக்கும் இன்னொரு உண்மை.

Shakthiprabha (Prabha Sridhar) said...

நிறைய அற்புதமான தகவல்கள். என் ஆழ்ந்த மரியாதையை ஏற்றுக்கொள்ளுங்கள். நன்றி.

//தன்னிலிருந்து நழுவி தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பது தெரியாமல் தூங்கும் நேரம், தூங்குபவன் ஆனந்த களிப்புடன் தெய்வ சம்பந்தத்துடன் பிணைக்கப்பட்ட நேரம்!//

இங்க தாங்க குழப்பமே துவங்குது.

பிரம்மத்துடன் இணைந்திருப்பதே ஒரு ஆனந்த அனுபவம், bliss, ரியலைசேஷன் என்றெல்லாம் சொல்ல, தூக்கத்திற்கும் இறைவனை நெருங்கிவிட்டதற்கும் எல்லோரும் சம்பந்தப்படுத்துகிறார்கள்.

Ramana says "தூங்காமல் தூங்குதல்" so, we are striving towards a perfection, which is akin to sleep state? நம்மையே நாம் அறியாத மயக்க நிலையை எப்படி இறைநிலையுடன் ஒப்பிடுவது?

Shakthiprabha (Prabha Sridhar) said...

//இருட்டுக்கும் தூக்கத்துக்கும் கூட சம்பந்தம் உண்டு. இரவானால், 'விளக்கை அணைத்துத் தூங்கு' என்பது தொடர்ந்த பழக்கத்தினால் வந்த செய்கை. //

அது என்ன சம்பந்தம்?

ஜீவி said...

Shakthiprabha said...
நிறைய அற்புதமான தகவல்கள். என் ஆழ்ந்த மரியாதையை ஏற்றுக்கொள்ளுங்கள். நன்றி.

//தன்னிலிருந்து நழுவி தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பது தெரியாமல் தூங்கும் நேரம், தூங்குபவன் ஆனந்த களிப்புடன் தெய்வ சம்பந்தத்துடன் பிணைக்கப்பட்ட நேரம்!//

//இங்க தாங்க குழப்பமே துவங்குது.

நம்மையே நாம் அறியாத மயக்க நிலையை எப்படி இறைநிலையுடன் ஒப்பிடுவது?//


எப்பொழுது சுவாசம் உள்ளே போய் வெளியே வருகிறதோ, அப்பொழுதே இறைக் கட்டுப்பாட்டில் நம் உடல் இயங்கிக் கொண்டிருக்கிறது என்பது நிச்சயமாகிவிட்டது. 'தூங்கும் நேரம் தூங்குபவன் தெய்வ சம்பந்தத்துடன் பிணைக்கப்பட்ட நேரம்' என்றால், விழிப்பில் இருக்கையில் தெய்வ பந்தம்
இல்லையா என்கின்ற கேள்வி எழலாம்; 'எழலாம்' என்ன?.. எழ வேண்டும். என்னுள்ளும் அந்தக்
கேள்வி எழுந்து அதற்கு நல்ல பதிலும் கிடைத்தது.

விழிப்பிற்கும் ஆழ்ந்த தூக்கத்திற்கும் அடிப்படையான ஒரு பெரிய வித்தியாசம் உண்டு. தன்னை
மறந்து தூங்கும் பொழுது 'நான்' என்னும் தன்னை இழந்து தூங்குகிறோமில்லையா?.. அந்த 'நானை'
இழத்தலே, பரவச நிலை. அப்பழுக்கற்ற நிலை. பரம்பொருளுக்கும் அதன் அம்சமான பொருளுக்கும் வேறுபாடற்ற
அபேத நிலை. இதுவே அதுவாகவும், அதுவே இதுவாகவும் ஆன நிலை.கனவற்ற, சலனமற்ற தூக்கத்தில் உள்ளில் வியாபித்திருக்கும் இறைவனுக்கும் இறை அம்சத்திற்கும் வித்தியாசமற்ற நிலை. ஆழ்ந்த தூக்கத்தில் 'நானை' இழத்தல் அவ்வளவு சாதாரணமாக நடக்கிறது என்றே நினைக்கிறேன். அந்த நிலையில் ஆனந்தத்தில் ஆத்மா திளைப்பதில் அதிசயமென்ன இருக்கிறது? இரவானால் தூங்குதல் பழக்கப்பட்டு விட்டதால், தினம் தினம் நினைக்காவிட்டாலும்
மறுநாள் எழுவோம் என்கிற நம்பிக்கையில் தான் தூங்கப் போகிறோம். காலையில் விழித்தால் தெரியப்போகிறது; விழிக்கவில்லை என்றால் அதுவும் இல்லை.

விழிப்பில் அந்த 'நானை' இழத்தல் லேசுபட்ட காரியமில்லை; அப்படி இழந்துவிட்டால், உயிர்களுக்குள்
எந்த பேதமும் தெரியாது. எல்லாம் இறைவனின் கூறுகள்; குழந்தைகள்!

மனிதன்- 'நான் அற்ற நிலை= தெய்வநிலை.

அப்படியானால் எப்பொழுது இந்த 'நான்' உணர்வு முதன் முதல் ஏற்படுகிறது?

இன்னும் இன்னும் ஆழ யோசிக்க யோசிக்க கிளை கிளையாய் பிரிந்து இன்னும் எத்தனையோ விஷயங்கள்
புலப்படும். நீங்களும் யோசித்துப் பாருங்கள்.

வருகைக்கும் சுவாரஸ்யமான கேள்விக்கும் மிக்க நன்றி, சக்திபிரபா!

ஜீவி said...

Shakthiprabha said...
//இருட்டுக்கும் தூக்கத்துக்கும் கூட சம்பந்தம் உண்டு. இரவானால், 'விளக்கை அணைத்துத் தூங்கு' என்பது தொடர்ந்த பழக்கத்தினால் வந்த செய்கை. //

//அது என்ன சம்பந்தம்?//

ரொம்ப சிம்பிள். வெளிச்சம் இருந்தால் தான் விழிகளால் எதையும் பார்க்க முடியும். இரவின் இருட்டு என்பது விழிகள் அயர்வதற்காக இறைவனின் ஏற்பாடு. பகல் பூராவும்
விழித்த கண்கள் ஓய்வெடுக்க இருட்டை தனக்குச் சாதகமாக்கிக் கொள்கிறது. மூளைக்கு கோரிக்கை செல்ல, கண்கள் செருகி, 'ஆவ்...'

இன்னொன்று.. இரவுப்பணி பார்த்தவர்களுக்குத் தெரியும்.
இரவு பூராவும் அலுவல் காரணமாக விழித்திருப்போருக்கு, பகலில் எவ்வளவு தூங்கினாலும் அயர்ச்சி போகாது. பகல் தூக்கம் உடல் உபாதைகளை ஏற்படுத்தக் கூடியது.
இரவு தூக்கம் ஈடு இணையற்றது;
மறுநாள் உழைப்புக்குப் புத்துணர்ச்சி
தரவல்லது.

வருகைக்கும் ஆழ்ந்த உணர்வுடனான வினாவிற்க்கும் மிக்க நன்றி, சக்திபிரபா!

Related Posts with Thumbnails