மின் நூல்

Wednesday, October 1, 2008

ஆத்மாவைத் தேடி....8

ஆன்மீகத்தின் அடுத்த கட்டம் நோக்கி....


8. நெஞ்சின் அலைகள்

ங்கிக்கொள்ள ஒதுக்கியிருந்த இடம் மிகவும் செளகரியமாக இருந்தது. தகத்தகாயமாய் மேலெழும்பத் தயாராகும் விடியல் சூரியனை கிழக்கு நோக்கிய பால்கனி பக்கமிருந்து வசதியாக தரிசிக்கலாம்; நமஸ்கரிக்கலாம். சீக்கிரமாகவே எழுந்திருந்து எல்லாக் கடன்களையும் முடித்து உதய நேரத்திற்கு பால்கனியில் கிருஷ்ணமூர்த்தி மிகச் சரியாக ஆஜராகிவிடுவார். திருப்தியாக மார்பு பூமிபட குனிந்து நிமிர்ந்து நமஸ்கரித்து எழுவது, அவருக்கு மிகவும் பிடிக்கும். இந்த வயதிலும் நினைத்த இடத்திற்கு கிளம்புவதற்கு வசதியாக தன்னைத் திடகாத்திரமாய் வைத்திருப்பது இந்த ஆதித்யன் நமஸ்காரமே என்பது அவரது அசைக்கமுடியாத நம்பிக்கை.

விட்டு விலகி வந்தாலும் வீடு சுற்றிய நினைவுகள் கிருஷ்ணமூர்த்தியைச் சுற்றி சுற்றி வருகிறது..
'ராதை கெட்டிக்காரி. மளிகைக்கடை, பால்னு எங்கேயும் கடன் கிடையாது. 'மாசம் பொறந்து ஒண்ணாம் தேதியாச்சுன்னா சம்பளம்'னு புருஷன் ஒரு கவர்ன்மெண்ட்,கம்பெனின்னு உத்யோகத்லே இல்லையேன்னு வருத்தம் கிடையாது. இன்னொருத்தர் கிட்டே குறையா ஒரு வார்த்தை பேசினது கிடையாது... எப்படித்தான் எல்லாம் கவனிச்சிண்டு குழந்தைகளை வளர்த்து ஆளாக்கினாளோ, அவருக்கு ஒண்ணும் தெரியாது.. ஸ்கூல் ஃபீஸ் கட்டறலேந்து, ஸ்கூல் பிராக்கிரஸ் ரிப்போர்ட்லே கையெழுத்துபோடற வரைக்கும் எல்லாம் அவள் தான். பையனும், பெண்ணும் படு சூட்டிகை. ட்யூஷன்?.. மூச்! அதெல்லாம் பேசப்படாது. ஸ்கூல் விட்டு வந்ததும், ஆறு-ஆறரைக்கே ரெண்டு பேரையும் மடக்கி வைச்சிண்டு 'இன்னிக்கு என்ன பாடம் நடந்தது'ன்னு கேட்டு அவளே சொல்லித்தருவாள். பசங்களும் க்ளாஸ்லே ஒண்ணு., ரெண்டு ரேங்கைத்தாண்டினது கிடையாது. எப்போ படிக்கறா, எப்போ விளையாடறான்னு நாலு பேருக்குத் தெரியாது.

.அர்ஜூனன் ஸ்கூல் பைனல்லே டிஸ்ட்ரிக் ஃப்ஸ்ட் வந்து, ரிசல்ட் வந்தப்போ கிருஷ்ணமூர்த்தி ஊர்லே இல்லே.. மன்னார்குடி கோயில் விசேஷத்திற்கு கதை சொல்லப் போயிருந்தார்.. மாலை தினசரிலே செய்தி படித்து, போட்டோ பார்த்து யாரோ சொன்னபோதுதான் தெரியும். மனசார, "ரொம்ப நன்றிப்பா"--ன்னு ராஜமன்னாரை நமஸ்கரித்தார். அர்ஜூனனும் பி.காம். முடிச்சிட்டு, சி.ஏ., பண்ணனும்னு நெனைச்சதை முடிச்சிட்டான். திருச்சிலே ஒரு ஆடிட்டர் கிட்டே தொழிலைப் பழகிண்டே, எம்.பி.ஏ.வும் முடிச்சவுடன் போனவருஷம் கல்யாணம் குதிர்ந்து விட்டது; இப்போ திருச்சிலே மெயின்கார்ட் கேட் பக்கத்லேயே தனியா போர்ட் போட்டுண்டு பிராக்டிஸ் பண்றதுன்னு எல்லாமே ஏதோ விளையாட்டுபோல அடுத்தடுத்து நடந்தன.. அதிர்ந்து பேசத்தெரியாத, நன்கு சமைக்கத் தெரிந்த அடக்கமான மருமகள்; அரியலூர்லே கூட்டுக்குடித்தனம் தான். காலை டிரையினுக்குத் திருச்சி கிளம்பினான்னா, ராத்திரி ஒன்பதுக்குள்ளே அர்ஜூனன் திரும்பிடுவான்.

அர்ஜூனனுக்கு அடுத்தவள் கிரிஜா. கல்யாணமான கையோட புருஷனோட அமெரிக்கா போயிட்டா. புருஷன், பெண்டாட்டி ரெண்டு பேருமே சாப்ட்வேர்; இவளே குழந்தையாய்இருக்கையில் இவளுக்கு ரெண்டு வயசிலே கைக்குழந்தை! காலம் தான் என்னமாய் வேகவேகமா ஓடறது?.. எல்லாம் பகவான் கிருபை என்று நினைத்துக் கொள்வார் கிருஷ்ணமூர்த்தி.

ஊரில் இருக்கும் காலங்களிலெல்லாம் பிள்ளையாருக்கு பால் அபிஷேகம் பண்ணுவது பல வருஷ காலப் பழக்கமாய் கிருஷ்ணமூர்த்தியின் மனசில் படிந்து போன ஒன்று. மாக்கல் பிள்ளையார் தான். திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கல்லூரியில்தான் கிரிஜா எம்.ஸி.ஏ. படித்தாள். அவளுடன் மலையேறி உச்சிப்பிள்ளையார் தரிசனம் முடித்து தாயுமானவரையும் வணங்கிக் கீழே வந்தபொழுது அங்கிருந்த கடையொன்றில் வாங்கியது.

தினமும் காப்பி கலக்கறதுக்கு முன்னாடி காய்ச்சாத பாலை ராதை ஒரு கிண்ணத்தில் எடுத்து வைத்து விடுவாள். குளித்து முடித்ததும் நேரே பூஜை அறை தான். பிள்ளையாரை ஒரு செப்புப் பாத்திரத்தில் வைத்து, கிண்ணப் பால், அடுத்து நீரால், என்று அபிஷேகம் நடக்கும்; அப்படிச் செய்கையிலேயே, 'மூஷிக வாகன', 'வக்ரதுண்ட' எல்லாம் பாராயணமாய் வந்து போகும். 'மூஷிக வாகன' சொல்கையில், 'மகேஸ்வர புத்ர' என்கிற வார்த்தை வரும் பொழுது இனம்புரியாத இன்பம் நெஞ்சை நிறைந்து புல்லரிக்கச் செய்யும்.. அபிஷேகம் முடித்துப் பிள்ளையாரைத் துடைத்து அவருக்கு இடுப்பு வஸ்திரம் மாற்றி, வீபூதி தரித்து, அவரிடத்தில் அமர்த்தி...நமஸ்காரம் பண்ணி எழுவார்.

இப்படித்தான் ஒருநாள் கிண்ணம் எடுத்துப் பாலை அபிஷேகிக்கையில், கைதவறி பிள்ளையாரின் நெற்றியில் 'டக்'கென்று கிண்ணம் இடித்ததும், 'ஸாரி--' என்று அனிச்சையாய் சடாரென்று மன்னிப்புக் கேட்டது, இப்பொழுதும் கிருஷ்ணமூர்த்தியின் நினைவுக்கு வந்து லேசான புன்முறுவலாய் விகசித்தது. யாரிடம், யார் 'ஸாரி-'?.. பிரமத்திடம் அதன் மூலக்கூறு கேட்டதா?...

இவர் வீட்டுப்பிள்ளையார். இவருக்கே இவருக்கான செல்லப் பிள்ளையார். தெய்வம், அந்தியந்த நண்பர் எல்லாம் இவருக்கு அவர் தான். எல்லா முறையிடல்களும் அவரிடம் தான். இவர் வீட்டில் இருக்கையில் தான் அவருக்கு அபிஷேகம். வெளியூர்களுக்கு புராண பிரசங்கங்களுக்கு அடிக்கடி போகையில் எல்லாம், அபிஷேகம் தவறிப் போதல் பழக்கப்பட்டு விட்டது. இப்படி இமயமலைன்னு கிளம்பி வந்து விட்டது, எல்லோருடனும் சேர்ந்து பிள்ளையாரையும் விட்டு விட்டு வந்து விட்டது போல் தோன்றுகிறது.

அங்கெல்லாம் விக்னேஸ்வரர், விநாயகர், பிள்ளையார் என்றால், இங்கே 'கணேஷ்ஜி'. மரியாதை கொடுத்து மரியாதை பெற்றுக் கொள்வது மனசுக்கு சந்தோஷமாகத் தான் இருக்கிறது.. இது இனம் புரியாத அன்பையும் ஒரு ஒட்டுதலையும் சர்வசாதாரணமாக இன்னொருவரிடம் ஏற்படுத்துகிறது... வெகுசகஜமாக எல்லோருக்கும் ஒரு 'ஜி'.

பல மாநிலத்திலேந்து நிறைய பண்டிதர்கள் வந்திருக்கா. இன்னும் நிறையப் பேர் வரவேண்டியிருக்கு. நாளைக்குத் தான் எல்லாரும் ஒண்ணாச் சேர்ந்து அறிமுகமாகற ஆரம்பக் கூட்டம்... எல்லாரையும் 'கோ-ஆர்டினேட்' பண்ணறது கொஞ்சம் சிரமமாத்தான் இருக்கும் போல. ஆயிரம் இருக்கட்டுமே, நல்ல அனுபவம். எல்லாம் அவன் சித்தம். 'நிறைய வேலை இருக்கு உனக்கு'-- அந்த இருட்டிலே, ஸ்டேஷன் பிளாட்பாரத்லே கண்டிப்பா, ஸ்பஷ்டமா சொன்னது காதுலே ரீங்கரிக்கறது... .

நீ இருக்கறச்சே என்ன கவலை? நிறைய பொறுப்பு கொடு; என்னைச் செயலாற்ற வை; எல்லாம் உன் ஆசிர்வாதம்; 'என் செயல் பணி செய்து கிடப்பதே' கூட இல்லை,'உன் அருளால் உன் தாள் வணங்கி....' என்றெல்லாம் கிருஷ்ணமூர்த்தி மனசில் வார்த்தைகளாய், வடிவங்களாய் மாறி மாறி நினைத்துக் கொண்டிருக்கையில்----

வாசல் பக்கம் அழைப்பு மணி கிணுகிணுத்தது.

(தேடல் தொடரும்)

8 comments:

கிருத்திகா ஸ்ரீதர் said...

இத்தனை நிறைவான திரும்பிப்பார்த்தல் இருக்கக்கூடிய வாழ்வில் இருந்து வந்த ஓர் ஆத்மாவின் தேடல் மிகத்தெளிவாகச்செய்கிறது... கூடவே நாம் ஆற்ற வேண்டிய கடமைகளையும் கற்றுத்தருகிறது... தொடர்ந்து செல்லுங்கள் ஜீவி... இன்று சுடச்சுட படிக்கும் பாக்கியம் கிட்டியது.. மிக்க மகிழ்ச்சி...

Kavinaya said...

//தகத்தகாயமாய்//

இந்த பிரயோகம் நல்லாருக்கு :)

கிருஷ்ணமூர்த்தி அவர்களுடைய நினைவுகளோடேயே நம்மையும் அழகா கோர்த்து விட்டிருக்கீங்க :)

jeevagv said...

//மரியாதை கொடுத்து மரியாதை பெற்றுக் கொள்வது மனசுக்கு சந்தோஷமாகத் தான் இருக்கிறது.. இது இனம் புரியாத அன்பையும் ஒரு ஒட்டுதலையும் சர்வசாதாரணமாக இன்னொருவரிடம் ஏற்படுத்துகிறது...//
நல்ல பழக்கம் எங்கிருந்தாலும் அதை தேடிப்பிடித்து பாராட்டும் தங்கள் பண்பு போற்றுதலுக்கு உரியது.

ஜீவி said...

கிருத்திகா said...
//இத்தனை நிறைவான திரும்பிப்பார்த்தல் இருக்கக்கூடிய வாழ்வில் இருந்து வந்த ஓர் ஆத்மாவின் தேடல் மிகத்தெளிவாகச்செய்கிறது... கூடவே நாம் ஆற்ற வேண்டிய கடமைகளையும் கற்றுத்தருகிறது... தொடர்ந்து செல்லுங்கள் ஜீவி... இன்று சுடச்சுட படிக்கும் பாக்கியம் கிட்டியது.. மிக்க மகிழ்ச்சி...//

தொடர்ந்து கூட வருவதற்கு நன்றிகள்.
எழுதுவதின் பிரதிபலிப்பு படிப்பவர் எழுத்துக்களில் தெரிய.. அது தனி உற்சாகம் தான்..

ஜீவி said...

கவிநயா said...
//தகத்தகாயமாய்//

இந்த பிரயோகம் நல்லாருக்கு :)

கிருஷ்ணமூர்த்தி அவர்களுடைய நினைவுகளோடேயே நம்மையும் அழகா கோர்த்து விட்டிருக்கீங்க :)//

ஓ! ரசனைக்கு நன்றி.

ஜீவி said...

ஜீவா (Jeeva Venkataraman) said...
//மரியாதை கொடுத்து மரியாதை பெற்றுக் கொள்வது மனசுக்கு சந்தோஷமாகத் தான் இருக்கிறது.. இது இனம் புரியாத அன்பையும் ஒரு ஒட்டுதலையும் சர்வசாதாரணமாக இன்னொருவரிடம் ஏற்படுத்துகிறது...//
நல்ல பழக்கம் எங்கிருந்தாலும் அதை தேடிப்பிடித்து பாராட்டும் தங்கள் பண்பு போற்றுதலுக்கு உரியது.//

தொடர்ந்து வாருங்கள்..
நன்றி.

குமரன் (Kumaran) said...

என்னுடைய தாத்தா (அம்மாவின் அப்பா) தினம் காலை ஐந்தெழுத்து மந்திரம் சொல்லிக் கொண்டே சிவலிங்கத்திற்கு இப்படித் தான் பாலாபிஷேகம் செய்வார். பிள்ளையாருக்கு நடக்கும் அபிஷேகத்தைப் பற்றி படித்த போது அந்த நினைவு வந்துவிட்டது.

கதை மிக நன்றாகச் சென்று கொண்டிருக்கிறது ஐயா.

ஜீவி said...

குமரன் (Kumaran) said...
//என்னுடைய தாத்தா (அம்மாவின் அப்பா) தினம் காலை ஐந்தெழுத்து மந்திரம் சொல்லிக் கொண்டே சிவலிங்கத்திற்கு இப்படித் தான் பாலாபிஷேகம் செய்வார். பிள்ளையாருக்கு நடக்கும் அபிஷேகத்தைப் பற்றி படித்த போது அந்த நினைவு வந்துவிட்டது.

கதை மிக நன்றாகச் சென்று கொண்டிருக்கிறது ஐயா.//

அப்படியா, குமரன்!
இது ஒரு யோகம். சிந்தையை ஒருமுகப்படுத்தி ஈசனுடன் பேசும் மொழி. அந்த சிரேஷ்டருக்கு என் நமஸ்காரங்கள்.
புனிதர்கள் போட்டுத் தந்திருக்கும்
பாதையில், அவர்கள் காட்டியிருக்கும் வெளிச்சத்தில், அவர்கள் அடிகளைக் கண்களில் ஒற்றி வணங்கி பெருமானின் அருளுடன் மேலும் தொடர முயல்கிறேன்.
தங்களுக்கு மிக்க நன்றி.

Related Posts with Thumbnails