மின் நூல்

Thursday, September 25, 2008

ஆத்மாவைத் தேடி....7

ஆன்மீகத்தின் அடுத்த கட்டத்தை நோக்கி....

7. பாட்டனார் மஹாதேவ்ஜி

"வாருங்கள்..வாருங்கள்.." என்று போர்டிகோ வரை வந்து கைகூப்பி வரவேற்றவரைக் கண்டு கிருஷ்ணமூர்த்தி புன்முறுவல் பூத்து பதிலுக்கு நமஸ்கரித்தார்.

"வாருங்கள்.. நான் தான் ராம் மனோகர்.." என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டவரைப் பார்த்து கிருஷ்ணமூர்த்தி திகைத்தார்.

வயது நிச்சயம் எண்பது இருக்கும். தும்பைப்பூ போல வெள்ளை வெளேர் தாடி; பஞ்சக்கச்சம் போல, ஆனால் நீட்டவாக்கில் இல்லாமல் இடுப்புக்கு அடர்த்தியாகக்கட்டியிருந்தார்; கைவைத்த வெள்ளை பனியன்; கான்வாஸ் ஷூ.

பிர்மாண்டமான தோட்டம் சூழ்ந்த போர்ட்டிகோவை நீங்கி உள் தாழ்வாரத்திற்கு இருவரும் வந்த பொழுது அங்கிருந்த பெண்டுலம் கடியாரம் மணி ஆறடித்தது."ராத்திரி பூரா உங்களுக்குத் தூக்கம் கெட்டுப் போயிருக்கும்.... சிவராத்திரி தான்" என்று மனோகர்ஜி சொல்கையிலேயே, 'சிவனுடன் ராத்திரி' உடல் சிலிர்த்தார்கிருஷ்ணமூர்த்தி. "மனோகர்ஜி! நான் பாக்கியம் செய்தவனானேன்" என்று அவர் வாய் முணுமுணுத்தது.

"நேற்று ராத்திரி போனில் அரியலூருடன் தொடர்பு கொண்டேன். போன் நம்பர் எக்ஸ்சேஞ்ஜில் தான் சொன்னார்கள். உங்கள் மனைவி தான் பேசினார்கள்..ஊரில்எல்லோரும் செளக்கியம்" என்றார் மனோகர்ஜி.

"அப்படியா? ரொம்ப சந்தோஷம்.. தகவல் ஏதேனும் சொன்னார்களா?"

"உங்கள் செளக்கியத்தைக் கேட்டார்கள்.. உங்கள் செளகரியத்தைப் பார்த்துக் கொள்ளச் சொன்னார்கள்.. கவலையே படவேண்டாம்; எவ்வளவு நாட்கள் வேண்டுமானாலும் உங்கள் விருப்பப்படி இருந்து விட்டு வரச்சொன்னார்கள்."

"மிக்க நன்றி, ஐயா!"

மனோகர்ஜியின் முகம் மிகவும் பரிச்சயப்பட்ட முகம் மாதிரி கிருஷ்ண மூர்த்திக்குத் தோன்றியது. 'இவரை எங்கே, எப்பொழுது பார்த்திருக்கிறோம்' என்கிற யோசனையிலேயே இருந்தவர், திடீரென்று 'ஓ' என்று தலையைக் குலுக்கி, "உங்கள் உபசாரத்திற்கு ரொம்பவும் சந்தோஷம்!" என்றார்.

"கிருஷ்ணன்ஜி! நான் தங்களை இப்படி அழைக்கலாமா-- உங்களைப் பார்த்ததில், என் சந்தோஷம் எவ்வளவு பெருகிப் போய்விட்டது, தெரியுமா?.. சதஸ்ஸைத் தான்சொல்கிறேன்.. யாரைக் கூப்பிடவேண்டும், என்ன செய்ய வேண்டும், ஏது செய்ய வேண்டுமென்று ஆறு மாசமா மனசிலே அரிச்சிக்கிட்டிருந்த ஏக்கம், ஒருவழியா ஏற்பாடாயிற்று.ஜி! நீங்களும் வந்தாச்சு.. எல்லாம் பகவான் செயல்; அவர் இனி பார்த்துப்பார்" என்றார்.

"உங்களுக்குப் பெரிய மனசு!" என்றார், கிருஷ்ணமூர்த்தி.

"நான் பெரிதாக ஒன்றும் செய்துவிடவில்லை.." என்ற மனோகர்ஜி சொன்னார்:"வியாபார உலகம் எனக்கு மிகவும் ஆயாசமாக இருந்தது.. அதன் ஏற்ற இறக்கம் என் இரத்த அழுத்தத்தைப் பாதித்தது. அழுத்தத்தைக் கட்டுக்குள் கொண்டுவர இயற்கை வைத்தியத்தை நாடினேன். ஆஹா! அற்புதமான ஆத்மா! கிருஷ்ணமகராஜ்ஜி என்றொரு யோகி-- அந்த மகான் கிருஷ்ணமகராஜ் என்றால் நீங்கள் கிருஷ்ணமூர்த்தி-- என்னே அந்த கிருஷ்ண பரமாத்வாவின் அருள்! மீண்டும் மீண்டும் எத்தனைஉருக்களில் வந்து அருள் பாலிக்கிறான்!" என்று பரவசப்பட்டவர் தொடர்ந்தார்:

"இமயமலையில் தபஸ்ஸிருந்து திரும்பியவர் அவர்.-- அவர் எனக்கு யோகா என்னும் வரப்பிரசாதம் அருளினார்.. அப்போ எனக்கு அறுபது வயசு. இப்போ எண்பது. இருபது வருஷமா மகராஜ்ஜி குருவா இருந்து கத்துக் கொடுத்த பயிற்சியை விட்டு விடாம செஞ்சிட்டு வர்றேன்.. யயாதி கதை தெரியுமே உங்களுக்கு?.. அவன் தன் பிள்ளை கிட்டேயிருந்து இளமை பெற்றான்; நான் யோகாவிலிருந்து இளமை பெற்றேன்.. தேகம் தேக்கு மரம் மாதிரி ஆயிடுத்து. 'தூர நில்'னு அத்தனை தொல்லைகளையும் தூர விலக்கி வைச்சிட்டேன்.. யோகத்திலிருந்து ஆத்மஞான வெளிச்சத்தோட ஒரு சின்ன ஒளிக்கீத்து கிடைச்சிருக்கு.. அதை ஊதி பெரிசாக்க பெருமுயற்சி செஞ்சிண்டிருக்கேன்.. ம்! ஒருத்தனாலே முடியலே; அதான் இந்த கூட்டு முயற்சி.. சதஸ்!"என்று சொல்லி பரவசப்பட்டார் மனோகர்ஜி

"உங்களைப் பார்த்து நான் நிறையக் கத்துக்கொள்ள வேண்டியிருக்கு.." என்றார் கிருஷ்ணமூர்த்தி.

"ஓ--அப்படியா? நல்லது ஜி. நீங்களும் எனக்கு நிறைய புராணக்கதைகளைச் சொல்ல வேண்டும்.. அதை எல்லாம் கேட்க மிகவும் ஆசையாக இருக்கிறது" என்று சின்னக்குழந்தை போல விழிகள் விரித்து ஆசைப்பட்டார் மனோகர்ஜி. .

"இப்பொழுது நீங்கள் வியாபாரத்லேயே இல்லையா?"

"சுத்தமா இல்லை. அதான் சொன்னேனே, விலகி வந்து இருபது வருஷத்துக்கு மேலே ஆச்சு. என் அந்திம காலத்திற்கென்று கொஞ்சம் சொத்து ஒதுக்கிண்டு மத்த எல்லாத்தையும் பிள்ளைகளுக்குப் பிரித்துக் கொடுத்திட்டேன். இந்த பங்களா-- இதுதான் என் ஞானபீடம்; இங்கிருக்கும் புத்தகாலயம் ஒரு புதையல். இந்த 'மஹாதேவ் நிவாஸ்' - என் பாட்டனார் பெயர் மஹாதேவ்ஜி; மகாவித்துவான். அவரைப் பற்றி நிறைய சொல்ல வேண்டும். இன்னொரு நாள் சொல்கிறேன். நீங்கள் மிகவும் களைப்பாய் இருப்பீர்கள்.ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள்.." என்று சொல்லி, "ராம்பிரபு.." என்று உரத்த குரலில் கூப்பிட, வந்த வாலிபனிடம், "கிருஷ்ணன்ஜிக்கு எல்லா வசதிகளும் செய்துகொடு" என்று அனுப்பி வைத்தார்.

"ஆண்டவா! எத்தனை விதம் விதமான பக்தர்கள் உனக்கு!" என்று வியந்து அந்த வாலிபனைப் பின் தொடர்ந்தார் கிருஷ்ணமூர்த்தி.


(தேடல் தொடரும்)







Sunday, September 21, 2008

ஆத்மாவைத் தேடி....6

ஆன்மீகத்தின் அடுத்த கட்டத்தை நோக்கி....

6. எல்லாம் உன் கருணை ஐயா

காரில் உட்கார்ந்ததும் லேசாகக் கண்களைச் சுழற்றிக் கொண்டு வந்தது. தூங்கிவிடக்கூடாதென்று கிருஷ்ணமூர்த்தி மனத்தில் சங்கல்பம் செய்து கொண்டார். நெஞ்சில் நினைப்புகளே ஊர்வலமாகப் போகும் பொழுது தூக்கமாவது, ஒண்ணாவது?..



அடிக்கடி புராண கதாகாலட்சேபம் என்று அவர் வெளியூர் பயணங்களிலேயே இருந்து பழக்கப்பட்டு விட்டதால், அனுதின குடும்பப் பொறுப்புகள் நடவடிக்கைகளுக்கு அவர் கூட இருந்து வழிநடத்த வேண்டும் என்கிற கட்டாயம் இல்லாது போயிற்று. அந்த காலத்து மன்னர்களைப் பார்த்து கவிபாடி பரிசில் பெற்ற புலவர்கள் கணக்காய் வாரக்கணக்கில் காணாமல் போய், திடீரென்று வானிலிருந்து வந்து குதித்த மாதிரி ஒரு நாள் வீட்டிற்கு வருவார். அன்று தான் அவர் வீட்டிற்கு, தெருவிற்கு, தெரிந்தவர்களுக்கு எல்லாம் விசேஷம்!... கொண்டு வந்த பொருள்கள், அனுபவங்கள் என்றுகடை பரப்புவார்... எல்லாம் ஹாலில் தான்! யார் யாரோ வந்தும், போய்க்கொண்டும் இருப்பார்கள்!.. சாயந்திர நேரமென்றால், வாசல் திண்ணையில் ஜமுக்காளத்தை விரித்து, அமர்ந்து கொண்டு வெற்றிலைச் செல்லமும், தண்ணீர் கூஜாவுமாய் மைக் வைக்காத உபன்யாசம் தான்!... அநத அந்த இடத்தில் நடந்த வகை வகையான அனுபவங்களைக் கோர்வையாக, உற்சாகமாகச் சொல்வார் கிருஷ்ணமூர்த்தி.. அவர் சம்சாரம் ராதைக்கு அவரைக் கண்டாலே ஒரு பிரமிப்பு கலந்த பிரேமை தான்!.. அவர் கதை சொல்கையில் அவர் வாயையும் கையசைவுகளையுமே பார்த்துக் கொண்டு, 'இறைவன் காதுகள் படைத்தது இவர் சொல்லைக் கேட்கத்தான்' என்கிற மாதிரி தெருவடைத்து கொண்டு ஒரு கூட்டமே அசைவற்று அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்கும்.


அவரது 'கிருஷ்ண ஜனனம்' காலட்சேபம் பிரசத்தி பெற்ற ஒன்று.. அந்த வாசுதேவரும், தேவகியும் கம்சனால் சிறையில் பட்டக் கொடுமைகளையும், நந்தகோபர் இல்லத்தில் விட கொட்டும் மழையில் வாசுதேவர் கூடையில் பச்சிளம் குழந்தை கிருஷ்ணரைத் தூக்கிச் சென்ற சோகத்தையும், கண்களில் நீர்தளும்ப அவரே வாசுதேவராய் மாறி அபிநயத்துடன் நெஞ்சடைக்கச் சொல்லும் பொழுது, கேட்கும் கூட்டமே நெக்குருகி நெஞ்சம் பதைபதைக்கும். தெரிந்திருந்த கதையென்றாலும், அவர் சொல்லும் பொழுது புதுசு புதுசாக ஏதேதோ சங்கதிகள் சேர்ந்த மாதிரி இருக்கும்; அடுத்தது என்னவோ என்கிற எதிர்பார்ப்பில் கூட்டம் ஏங்கித் தவிக்கும்..


மழை பொய்த்தது என்றால், பாரதக்கதை சொல்ல கிராமப்புறங்களில் கூப்பிடுவார்கள். போர் முடிந்து, கதை முடிய மூன்று வாரங்களாகி விடும். அது என்ன அதிசயமோ தெரியவில்லை, கதை முடியும் அன்று கொட்டோ கொட்டென்று மழை கொட்டும்! கதை சொல்ல அழைத்தவர்களுக்கு சந்தோஷமான சந்தோஷம் பொங்கும்.




வீட்டுக்கு இவ்வளவு என்று சேர்த்து வைத்திருந்த பணத்தை வெகுமதியாகக் கொடுப்பார்கள். அம்பதோ, நூறோ எல்லாருடைய பங்கும் இருக்க வேண்டும் என்று இந்த ஏற்பாடு. கை நீட்டி காசு வாங்கும் போது, புராணக்கதை சொல்றதும் ஒரு வியாபாரம்னு ஆகிவிடக்கூடாதுங்கற நெனைப்பு முந்திண்டு வரும். வெகுமதியாகக் கிடைத்த பணத்தில் சரிபாதியை எடுத்து, வருண பகவானுக்கு நன்றியைச் சொல்லி, அந்த கிராமத்திற்கே அவரது பரிசாகத் தந்துவிடுவார் கிருஷ்ணமூர்த்தி. அது அவரது பழக்கம். கதை சொல்லப் பெரியவரைக் கூப்பிட்டால், பாதிப்பணம் கிராம நலனுக்கு வந்து விடும் என்பது எல்லோருக்கும் தெரியும் என்பதால் அவர்களும் கணிசமாகத் தொகையைச் சேர்த்துக் கொடுப்பார்கள்.

நேற்று ராத்திரியிலிருந்து நடக்கும் செயல்களை ஒவ்வொன்றாக நினைத்துப் பார்க்கையில் வியப்பாக இருக்கிறது...சின்ன வயசிலிருந்து கோயில், கோபுரம், தெய்வம் என்றால் மனசுக்குப் பிடித்துப் போன ஒரு விஷயமாகி விட்டது.. நினைவு தெரிந்த பருவத்திலிருந்து, இந்த மயக்கம் தொடருகிறது; அதன் தொடர்ப்பாய், புராணக்கதைகளைப் படிப்பதென்றால், புராண சம்பந்தப்பட்ட விஷயங்களைக் கேட்பதென்றால், அப்படி ஒரு ஈடுபாடு! இத்தனை வருஷமாய் நெஞ்சில் சுமந்த கனவுகள் நிதர்சன உண்மையாகி இருக்கிறது.. 'பரமசிவன்- நீலகண்டன்... எல்லாமே பரமாத்மாவின் திருநாமங்கள் அல்லவோ? இந்த ஏழைக்கு அவரிடம் அல்லவோ நெருங்கிப் பேசும் பாக்கியம் கிடைத்திருக்கிறது?... ' என்பதை நினைக்கையிலேயே அவர் கண்களில் தாரை தாரையாக நீர் வழிந்தது. 'என்னிடம் வர ஏன் அவசரப்படுகிறாய்?.. உன் கர்மாவுக்கான கடமைகளை முடித்து விட்டு வா' என்றல்லவா சொல்லியிருக்கிறார்?' என்கிற நினைப்பே அவர் உடலைச் சிலிர்க்கச் செய்தது.. 'வித்வத் அறிஞர்கள் கூடும் சதஸ்ஸில் கலந்து கொள்ள எனக்கென்ன அருகதை இருக்கிறது?.. புராணக்கதைகளை, படித்ததைச் சொல்லும் வெறும் கதாகாலட்சேபக்காரனல்லவோ நான்?.. அதுவும் நீ போட்ட பிச்சை அல்லவோ?..இந்த ஏழையின் பேரில் எத்தனை கருணை ஐயா உனக்கு?' என நினைத்து நினைத்து உருகினார் கிருஷ்ண மூர்த்தி.


ஜம்மு-தாவி எக்ஸ்பிரஸைத் தவற விட்டது, ஸ்டேஷன் மாஸ்டர் கூப்பிட்டுப் பேசியது, ராம் மனோகர்ஜி அவரை கார் அனுப்பி அக்கறையுடன் அழைத்து வரச் சொன்னது, அவர் ஏற்பாடு செய்திருக்கும் சதஸ்--என்று ஒவ்வொரு நிகழ்ச்சியும் சம்பந்தமில்லாதது மாதிரி வெளிக்குத் தோன்றினாலும், சங்கிலி போட்டுக் கோர்த்த மாதிரி ஒவ்வொன்றுக்கும் ஏதோ தொடர்பு இருப்பதாக மனசில் படுகிறது.

ஒரு குலுக்கலுடன் கார் நின்றதும் நினைவு இழைகள் அறுந்தன. எதை எதையோ நினைத்துக் கொண்டு வந்ததில் நேரம் போனது தெரியவில்லை; அரைமணி நேரத்தில் வந்து விட்டமாதிரி இருந்தது.


மிகப்பெரிய காம்பவுண்ட் கேட் அருகே கார் நின்று ஒரு நிமிட தாமதத்திற்குப் பிறகு உள்ளே நுழைந்தது. நின்ற அந்த நேரத்தில், "மஹாதேவ் நிவாஸ்" என்று அந்த இடத்திற்கு சூட்டியப் பெயர் சலவைக்கல்லில் பொறிக்கப்பட்டு சுவற்றில் பதித்திருந்ததை கிருஷ்ணமூர்த்தி பார்த்தார்.


(தேடல் தொடரும்)

Sunday, September 14, 2008

ஆத்மாவைத் தேடி....5






ஆன்மீகத்தின் அடுத்த கட்டத்தை நோக்கி....



5. ஒன்றே இரண்டானால் இரண்டும் ஒன்றுதான்.



ந்தவர் ரயில்வே நிலைய உதவி அதிகாரி என்று கிருஷ்ணமூர்த்தியிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். நிலைய அதிகாரி அவரை அழைத்து வரச்சொன்னதாக இந்தியில் சொன்னார்.
"அப்படியா? ரொம்ப சந்தோஷம்!" என்று கைகூப்பினார் கிருஷ்ணமூர்த்தி. "நானே ஸ்டேஷன் மாஸ்டரைத் தேடிவருவதாக இருந்தேன். கொஞ்சம் இருங்கள். சற்றுமுன்வரைஎன்னுடன் ஒருவர் பேசிக்கொண்டிருந்தார். இங்குதான் இருப்பார். அவரிடமும் சொல்லிக்கொண்டு வருகிறேன்" என்று வெற்றிலைப் பெட்டியை எடுத்தபடி செருப்பை மாட்டிக்கொண்டு எழுவதற்குத் தயாரானார், கிருஷ்ணமூர்த்தி.
"உங்களுடன் பேசிக்கொண்டிருந்தவரா?..அவர் அப்போவே கிளம்பி விட்டார். அவர் சொல்லித்தான் நீங்கள் இங்கு இருப்பது தெரியும்."
"அப்படியா!" என்று கிருஷ்ணமூர்த்தி திகைத்தார். "அவரை உங்களுக்குத் தெரியுமா?"
"தெரியாது. யாரோ ரயில் பயணி போலிருக்கிறது. வாட்டசாட்டமாக இருந்தார். புலித்தோலைப் போர்த்திக்கொண்ட மாதிரி அங்கவஸ்திரத்தை மார்பில் சுற்றிகொண்டிருந்தார். நெற்றியை மறைத்து முண்டாசு வேறு கட்டிக் கொண்டிருந்தார்."
அவர் சொல்வதைக் கேட்டு கிருஷ்ணமூர்த்தியின் புருவங்கள் முடிச்சுப் போட்டுக்கொண்டன. சொன்ன அடையாளங்கள் திகைப்பேற்படுத்தியது. அதைக் கட்டுபடுத்திக்கொண்டு, "அவர் தன் பெயரை பரமசிவம் என்று சொன்னாரா" என்று ஆவலுடன் கேட்டார்.

"நீலகண்டன் என்று சொன்னதாக நினைவு."

கிருஷ்ணமூர்த்தி வானம் பார்த்துக் கைகூப்பினார். "இரண்டும் ஒன்று தானே சுவாமி!" என்றார் அந்த அதிகாரியைப் பார்த்து. ஒருநிமிடம் தாமதித்து " ஒன்றே இரண்டானாலும், பலவானாலும், எல்லாம் ஒன்று தானே!" என்றார்.

"நீங்கள் சொல்வது எனக்குப் புரியவில்லை.." என்றார் அந்த அதிகாரி.

"ஆமாம்.. நீங்கள் சொல்வது உண்மைதான்.. பலருக்குப் பல விஷயங்கள் புரிவதில்லை!" என்று ஒரு வேதாந்தியைப் போல நெட்டுயிர்த்தார் கிருஷண மூர்த்தி.

அந்த அதிகாரிக்கு கிருஷ்ணமூர்த்தி என்ன சொல்கிறார் என்று சுத்தமாகப்புரியவில்லை.. இவரை முதலில் நிலைய அதிகாரியிடம் கொண்டு போய் விட்டு விட்டால் நம் வேலை முடிந்தது என்று நினைப்பே மேலோங்கிஇருந்தது.. ஆகையால், தனது உணர்வுகளைச் சாமர்த்தியமாக மறைத்துக் கொண்டு, "ரொம்ப நேரமாக நாங்கள் உங்களைத் தேடிக் கொண்டிருக்கிறோம். மன்னியுங்கள். நீங்கள் இந்த இருட்டில் தனியே இங்கிருக்கிறீர்கள் என்றுத் தெரியவில்லை. நிலைய அதிகாரியிடம் அவர்--அந்த நீலகண்டன் -- வந்து சொல்லித்தான் எங்களுக்குத் தெரியும். அவரும் போய் அரைமணி நேரத்திற்கு மேலாகிறது."

"ஓ.." என்று உதட்டைக்குவித்தார் கிருஷ்ணமூர்த்தி.

"வாருங்கள்...நான் கூட்டிப் போகிறேன்.. இந்தப் பையை நான் எடுத்துக் கொள்ளட்டுமா?" என்று கிருஷ்ணமூர்த்தியிடம் அனுமதி கேட்டு, அவர் பதில் சொல்வதற்குள்ளாகவே பையை எடுத்துக்கொண்டார் அந்த அதிகாரி.
"என்னைத் தேடுகிறீர்களா? எதற்காக என்று தெரிந்து கொள்ளலாமா?" என்று பவ்யமாகக் கேட்டார் கிருஷ்ணமூர்த்தி.

"வாருங்கள்... ஸ்டேஷன்மாஸ்டர் விவரமாகச் சொல்லுவார்"
'எதற்காக இருக்கும்?.. ஊரிலிருந்து ஏதாவது செய்தியோ?' என்று யோசித்தபடி அவரைத் தொடர்ந்தார் கிருஷ்ணமூர்த்தி.

அவர் வருகைக்காக அறை வாசலிலேயே நின்று கொண்டு காத்திருந்தார் ஸ்டேஷன் மாஸ்டர்.
பக்கத்தில் கிருஷ்ணமூர்த்தி வந்ததும், "நமஸ்காரம். தங்களை சிரமப்படுத்தி விட்டேன். நானே வந்திருக்க வேண்டும். சூழ்நிலை இந்த இடத்தை விட்டு என்னை நகரவிடவில்லை" என்று மன்னிப்பு கேட்டுக் கொண்டார்.
கிருஷ்ணமூர்த்திக்கு ஒன்றும் புரியவில்லை.. அவரே சொல்லட்டும் என்று காத்திருந்தார்.

"காப்பி சாப்பிடுகிறீர்களா?" என்று உபசரித்தார் அதிகாரி.

"இல்லை.. கொஞ்சநேரம் ஆகட்டும்.. இப்போதைக்கு இது போதும்," என்று வெற்றிலைப் பெட்டியைத் திறந்தார் கிருஷ்ணமூர்த்தி.
"ஜம்மு-தாவியில் ரிசர்வ் பண்ணியிருந்தீர்களோ? வயர்லெஸ்ஸில் தொடர்பு கொண்டோம். நீங்கள் இல்லை, சீட் காலியாக இருப்பதாகச் சொன்னார்கள். எங்களுக்குக் கவலையாகப் போய்விட்டது"-- அவர் சொல்வதை கிருஷ்ண மூர்த்தி பேசாமல் கேட்டுக்கொண்டிருந்தார்.

"ராம்மனோகர்ஜி என்னிடம் பேசினார். ஜம்மு-தாவியில் நீங்கள் பயணப்படுவதாகவும், உங்களுக்கு அவசரத்தகவல் தெரிவிக்க விருப்ப படுவதாகவும் சொன்னார்.."

"ராம்மனோகர்ஜி?.. தொழிலதிபர் ராம்மனோகர்ஜியா?"

"ஆமாம்.. இண்டஸ்ரியலிஸ்ட் ராம்மனோகர்ஜியே தான். மிகப் பிர்மாண்டமான சதஸ் ஏற்பாடு செய்திருக்கிறார், இல்லையா?.. தில்லி பூரா சதஸ்ஸைக் காணக்காத்திருக்கு. சதஸ் நிகழ்ச்சிகளில் உங்கள் பெயரையும் பார்த்தேனே?"
"சதஸ்ஸா?.. தில்லியிலா?..எப்போ?" என்றார் கிருஷ்ணமூர்த்தி.
"உங்களுக்குத் தெரியாது?.. ஓ, காட்! உலகம் பூராவிருந்தும் டெலிகேட்ஸ் கலந்துக்கப் போறாங்களே?"

"என்ன சதஸ்னு தெரியாது; சொன்னால் புண்ணியமாகப் போகும்" என்றார் கிருஷ்ணமூர்த்தி.

நிலைய அதிகாரி அவரை விநோதமாகப் பார்த்தார். இவர் தான் கிருஷ்ண மூர்த்தியாங்கற சந்தேகம் அவருக்கு. "'ஆத்மா'ங்கறது நடக்கப்போற சதஸ் பேர். அதுமட்டும் எனக்குத் தெரியும்.. அடுத்த மாதம் முதல் வாரத்லே........"
"ஓ..."
"முதல்லே நீங்க கிடைச்சிட்ட நல்ல சேதியை நான் ராம்மனோகர்ஜிக்குத் தெரியப்படுத்தணும்.. அவர் மிகவும் கவலைப்பட்டுக் கொண்டு உங்களைப் பற்றி விசாத்தார். ராத்திரி எந்நேரமானாலும் சொல்லச் சொல்லியிருக்கார். உங்களை அவரிடம்கூட்டிச் செல்ல வாசல்லேயே கார் காத்திண்டிருக்கு." என்றார் ரயில்வே நிலைய அதிகாரி.

"முன்னே பின்னே நான் ராம்மனோகர்ஜியைப் பார்த்ததில்லை.. பத்திரிகைகளில் அவர் புகைப்படம் பார்த்திருக்கிறேன்.. அவருடன் தொடர்பு கொடுங்கள்.. நானே அவரிடம் பேசுகிறேனே!" என்றார் கிருஷ்ணமூர்த்தி.

"சரி..." என்று தொலைபேசியை எடுத்து, தொலைபேசி எண்ணைச் சுழற்றியவர், யாருடனோ பேசிவிட்டு போனை வைத்தார். "'ஜி' உங்களுக்காகத் தான் காத்திருக்கிறாராம்.. காரில் உங்களை கெளரவமாக அனுப்பி வைக்கச் சொன்னார்" என்றார்.

"நான் அவருடன் பேசுகிறேன் என்று சொன்னேனே?" என்று ஏமாற்றத்துடன் புருவத்தை உயர்த்தினார் கிருஷ்ணமூர்த்தி.

"எஸ்.. 'ஜி' மிகவும் நாகரிகமான நடவடிக்கைகளைக் கொண்டவர்... உங்களிடம் தொலைபேசியில் பேசி தில்லியில் வரவேற்பது மரியாதையாக இருக்காது என்று சொன்னார். உங்களை நேரில் கண்டு தன் அன்பான சந்தோஷத்தைப் பகிர்ந்து கொள்ள அவர் உங்கள் வருகைக்காகக் காத்திருக்கிறார்."

கிருஷ்ணமூத்திக்கு மிகவும் நெகிழ்ச்சியாகப் போய்விட்டது. தான் மிகவும் அவசரப்பட்டாலும், எல்லோரும் தன்னிடம் மிகவும் மரியாதையாக நடந்து கொள்வதாகப் பட்டது. ஒரு நிமிடம் தான் அந்த 'தான்' மாயை! அடுத்த நிமிடமே, 'எல்லாம் அவன் கருணையல்லவோ' என்கிற நினைப்பு வந்தவராய், "தங்கள் அன்புக்கு மிக்க வந்தனம்.. பல வேலைகளுக்கிடையே எனக்கும் நேரம் ஒதுக்கி..." என்று கிருஷ்ணமூர்த்தி சொல்ல வந்ததை முடிப்பதற்குள், "தாங்கள் பண்டிதர்! பெரிய பெரிய வார்த்தைகளைக் கொண்டு என்னைப் புகழலாமா?" என நாணப்பட்டவராய் புன்னகைத்தார். கிருஷ்ணமூர்த்தியை வெளியே காத்திருக்கும் 'ஜி'யின் காரில் அனுப்பி வைக்க ஒரு நபரையும் கூட அனுப்பி வைத்தார்.

(தேடல் தொடரும்)
























ஆத்மாவைத் தேடி....4

ஆன்மீகத்தின் அடுத்த கட்டத்தை நோக்கி.....

4. நான் நானான கதை
ரயிலுக்கு இன்னும் நேரம் நிறைய இருந்தது.
இங்கிருந்து தான் புறப்படுகிறது என்பதால், எந்த பிளாட்பாரத்திலிருந்து கிளம்பும் எனபதுகூட இன்னும் நிச்சயமில்லாமலிருந்தது. கிருஷணமூர்த்திக்கு கூட இருந்தவரின் பேச்சுத்துணை, தனிமையில் உட்கார்ந்திருக்கும் சலிப்பை அறவே போக்கியிருந்தது.
அதனால் உற்சாகமானவர், தான் பிறந்த தஞ்சைத்தரணியின் பழக்கமாய் எவர்சில்வர் வெற்றிலைப் பெட்டியை, பக்கத்தில் அணைப்பிலிருந்த பையின் ஜிப்பைத் திறந்து எடுத்து மடியில் வாகாக வைத்துக் கொண்டார். "வெத்தலை போடறீங்களா?" .....
பக்கத்திலிருந்தவர், "பழக்கமில்லை--" என்று பளீரெனச் சொன்னது கேட்டது.
"இது கூட இப்போ வெத்தலை போடு-ன்னு சொன்னது கூட உங்க மனசு தானா?"-- அந்த அரைகுறை இருட்டில் அவர் உருவம் தெளிவாகத் தெரியா விட்டாலும் அவர் சொன்னது ஸ்பஷ்டமாகக் கேட்டது.
"அடடே! கரெக்டா கண்டு பிடிச்சிட்டீங்களே?"
"இப்போ ரொம்பவும் தான் மனசு சொல்றதை அடிபணிந்து கேக்கிறீங்க போலிருக்கு."
"அதுவும் சரிதான். எது இருந்தாலும் இல்லேனாலும் எனக்கு இந்த வெத்தலை வேணும். வெத்தலை,சீவல்,சுண்ணாம்பு--இந்த மூணும் அளவா இணைஞ்சு ஜீரா போல தொண்டைக்குழிலே எறங்கறச்சே...அடடா!"
"அனுபவிச்சு சொல்றீங்களே!"
"பின்னே? பரமசுகம்னா பரமசுகம்தான்!.." என்ற கிருஷ்ணமூர்த்தி, மறந்த எதுவோ நினைவுக்கு வந்தமாதிரி, "அதுசரி, உங்கபேர் என்னன்னு இதுவரை சொல்லவேயில்லையே" என்றார்.
லேசான முன்பனி பெய்யத் தொடங்கியிருந்தது. பக்கத்தில் அமர்ந்திருப்பவர் கூட சரிவரத் தெரியாமல் இருட்டு தார்போல பூசியிருந்தது.
"என் பேரா? பரமசிவம்" என்று பக்கத்திலிருந்து குரல் மட்டும் கிருஷ்ணமூர்த்திக்குத் தெளிவாகக் கேட்டது. தான் 'பரமசுகம்' என்று சொன்னதன் எதிரொலிதான் 'பரமசிவம்' என்று காதுக்குக் கேட்டதோ என்று கிருஷ்ணமூர்த்தி ஒரு நிமிடம் திடுக்கிட்டார். இருந்தாலும், அடுத்த வெற்றிலையை எடுத்துத் துடைத்தபடியே, எதுவோ நினைவுக்கு வந்தவர் போல்,"தென்னாடுடைய சிவனே, போற்றி!" என்றார். ஒருவினாடி கழித்து, "எந்நாட்டவருக்கும் உரிய இறைவா, போற்றி!" என்று அவரே சொன்னார்.
அந்த இருட்டில் பக்கத்திலிருந்து ஏதோ அசைகிற உணர்வு மட்டும் கிருஷ்ணமூர்த்தியின் புத்தியில் பட்டது.
''ஒருநாள் ஒரு பொழுதாகிலும் சிவன் நாமம் உச்சரிக்க வேண்டும்; ஜென்மம் கடைத்தேற---ஒருநாள்...." என்று ராகமெடுத்து சுவாரஸ்யத்துடன் பாட ஆரம்பித்து விட்டார். சுருதி பேதமற்ற சாரீரத்தின் லயிப்புடனான மயக்கம் லேசாக அவரை ஆட்கொண்டு மெய்மறக்கச் செய்தது.
"கிருஷ்ணமூர்த்தி......" என்று வாத்சல்யத்துடன் யாரோ அவர் காதுக்கருகில் வந்து அழைக்கிற தொனியாய் நினைவோடை தப்பி கனவில் கேட்பது மாதிரி கேட்டது.
கிருஷ்ணமூர்த்தி பலவந்தமாக நினைவைத் திரட்டி ஒருமுகப்படுத்தப் பார்த்தார்; முடியவில்லை. அதிகபட்சமாக 'உம்'மென்று ஒரு முனகலே அவரிடமிருந்து வெளிப்பட்டது.
"கிருஷ்ணமூர்த்தி! பெண்டாட்டி-பிள்ளை-பெண்னு மத்தவங்க சுகத்துக்காக வாழ்ந்தேனீங்களே?.. உங்களுக்கு அதிலே சுகமே இல்லையா?.. பங்கே இல்லையா?பிள்ளைவரம் வேண்டிப் பிதற்றித் திரிந்தபோது பித்தனே அருள் பாலித்ததை அறியீரோ?.. உங்க பிள்ளையும் பெண்ணும் மழலையாய் தவழும் போது நெஞ்சணைத்து கண்களில் நீர்தளும்ப பரவசப்பட்டிருப்பீர்களே?..அந்த சுகம், உங்க சுகம் இல்லையா? அது ஆத்மாவும் ஆத்மாவும் கலந்து உறவாடிய கேளிக்கை இல்லையா?"-- கேள்விகள் மட்டும் 'கணீர்-கணீர்' என்று அலறுகிற மாதிரி காதுகளில் மோதி சதிரிட்டது. லேசான குறட்டை சப்ததிற்கு இணையாகக் கேட்ட ஒலிபோலவும் இருந்தது.

"முன்னை தவப்பயனாய்
என்னில் ஒரு துளி
நானாய் நானாய்த் தொடர்வதை
அற்புதம் என்பதோ? அதனால்,
ஆனந்தம் கொள்வதோ?"

--- என்று யாரோ ஈனஸ்வரத்தில் முனகுவது போலக் கிருஷ்ணமூர்த்திக்குக் கேட்டது. "வந்த வேலை முடியவில்லை, கிருஷ்ணமூர்த்தி! இன்னும் நிறைய இருக்கிறது!" என்று நினைவூட்டுகிற மாதிரி, நெற்றியில் வைரமாக ஜொலிக்கும் இன்னொரு கண்ணுடன் உறுத்துப்பார்த்து யாரோ தன்னிடம் சொல்வது போலிருந்தது, கிருஷ்ண மூர்த்திக்கு.
"ஈஸ்வரா---" என்று வாய் கோணலாகக் கேவியபடி அவர் உட்கார்ந்திருந்த இரும்புச்சேரில் புரண்டு நிமிர்ந்த பொழுது உடல் தெப்பமாக நனைந்திருந்தது.
மசமசவென்றிருந்த இருட்டில் மலங்க மலங்க விழித்தவருக்கு கொஞ்ச நேரம் ஒன்றும் தெரியவில்லை. தூரத்தில் பொட்டுபொட்டாய் பச்சையும் சிவப்புமாய் மினுமினுக்கும் ரயில்வே லைன் சிக்னல் லைட்டுகளை வெறித்துப் பார்த்தார். வானத்துக்கும், பூமிக்கும் இரும்புச்சட்டங்களால் கோடு போட்டு இணைத்த மாதிரி இங்கேயும் அங்கேயும் சிதறி இருட்டில் பளபளக்கும் இருப்புப் பாதைகள் அவர் நினைவில் நிழலாகப் படிந்தன.
பிர்மாண்ட ராஷசனாய் 'புஸ்புஸ்' என்று மூச்சு விட்டபடி பக்கத்து லைனில் இன்ஜின் ஒன்று நின்று தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டபொழுது தான், கிருஷ்ணமூர்த்திக்கு தில்லி ரயில் நிலையத்து பிளாட்பாரமொன்றில் தான் அமர்ந்திருப்பது முழுசாய்ப் புரிந்தது.
மடியில் வைத்திருந்த வெற்றிலைப் பெட்டி இரும்புச் சேரில் நழுவியிருந்தது. பக்கத்தில் 'ஜிப்' வைத்த பெரிய பை அண்டை கொடுத்த தலையணை மாதிரி பத்திரமாக இருந்தது.
நெற்றிப் பொட்டு 'கிண்கிண்'ணென்று வலித்தது.
கைதிருப்பிக் கடியாரம் பார்த்தார். ரேடியம் பூசிய டயல் மணி மூன்று என டாலடித்தது. அப்போ, ஜம்மு-தாவி எக்ஸ்பிரஸ்?...போயே போச்! இமயமலை யாத்திரை?.. 'அரியலூருக்குப் போகலாம்; கிளம்பு' என்று மனசு சேதி சொல்லியது...மனசு பொய் சொல்லுமா?... யாருக்கு என்னவோ ஏதோ என்று நினைவு பரபரத்தது.. 'ஊருக்குத் திரும்புவதெப்படி' என்று ரயில் நிலைய அதிகாரியை விசாரிக்கலாம் என்று கிருஷ்ணமூர்த்தி எழுந்திருந்த பொழுது---

சற்று தூரத்தில் பிளாட்பார சரளைக்கற்களைத் தாண்டி இங்கேயும் அங்கேயும் இரண்டு பக்கமும் பார்த்தபடி யாரோ தன்னை நோக்கி வருவது தெரிந்தது.

(தேடல் தொடரும்)

Thursday, September 11, 2008

ஆத்மாவைத் தேடி----3

ஆன்மீகத்தின் அடுத்த கட்டத்தை நோக்கி
3. நடந்ததும், நடக்கப்போவதுவும்...
"என்னன்ன நடந்ததோ அதெல்லாம் நடப்பதற்காகத் தான் நடந்தன; என்னன்ன நடக்கப் போறதோ, அதெல்லாம் நடக்கப்போறதுக்காகத்தான் நடக்கப்போறதுன்னு நீங்க நெனைசதுண்டா?" என்று கிருஷ்ணமூர்த்தியிடம் கூட இருந்தவர் கேட்ட தொனி மிகவும் மிருதுவாக இருந்தது.
"ஓஹ்.. நிறைய தடவை அப்படி நெனைச்சதுண்டு. சில சமயம் சிலது நடக்கறச்சே, 'ஓ! அதுக்காகத்தான் இதுவா'ன்னு குருட்டு யோசனையாய் காரணம் புரியறமாதிரி இருக்கும்" ஒரு நிமிஷம் நிறுத்திவிட்டு கிருஷ்ணமூர்த்தியே தொடர்ந்தார். "ஒண்ணு நினைவுக்கு வர்றது.. ரொம்ப வருஷத்துக்கு முன்னாடி ஒருநாள் ராத்திரி. வானமே பொத்திண்ட மாதிரி, மழை கொட்டு கொட்டுன்னு கொட்டறது; பளீர் பளீர்ன்னு மின்னல்னா, அதுக்குத் தோதா இடியான இடி. பெட்டி போல வீட்லே வெளிலே என்ன நடக்கறதுன்னு தெரியாமத் தூங்கிண்டு இருக்கோம்...
"வீட்டு நடுஹால் ரேழிப்பக்கம் சுவத்லே பெண்டுலம் மாட்டின பெரிய கடியாரத்லே, மணியடிச்ச சத்தத்லே 'திடுக்'னு முழிப்பு வந்திடுத்து.டார்ச் அடிச்சு மணி பாத்தா நடுராத்திரி ரெண்டு மணி.. திண்ணைப்பக்கம் லேசா ஜன்னக்கதவு திறந்திண்டிருக்கு; அப்போத்தான் வெளிலே மழை கொட்டறதுன்னு தெரிஞ்சது.. சாரல் உள்ளே வராதிருக்க, ஜன்னல் கதவைச் சாத்தப் போனவன், திண்ணைலே பேச்சுக்குரல் கேட்டுக் வெளிக்கதவை திறந்து பார்த்தேன். புருஷனும், அவன் சம்சாரமும் போலிருக்கு;விசிறியடிக்கற சாரல்லே தெப்பமா நனைஞ்சிண்டு நின்னிகிட்டிருக்காங்க; அந்தப் பொண்ணு கைக்குழந்தையை ஒரு மூட்டை போல ரெண்டு கையாலேயும் அணைச்சு பொத்தி வைச்சிருக்கறதை அப்போத்தான் பார்த்தேன்.. எனக்குப் பொறுக்கலே.. உள்ள வாங்கன்னேன்.
"'பரவாயில்லே.. மழைலே மாட்டிகிட்டோம். விட்டவுடனே போயிடறோம்'னாங்க.... நான் கேக்கலே.. என் பெண்டாட்டியை எழுப்பி விஷயத்தைச் சொன்னேன். வாரிச்சுருட்டிண்டு எழுந்தவள், அவங்களை உள்ளே கூப்பிட்டு, தொடைச்சிக்கறதுக்குத் துணியெல்லாம் கொடுத்து, குழந்தைக்குப் பால் காய்ச்சிக் கொடுத்து... மழை விடவே இல்லே..மூணு மணி வாக்கிலே வானம் வெளிறித்து.... அப்புறம் தான் அனுப்பிச்சோம்..பாவம், பக்கத்து ஊராம்! கல்யாணத்துக்கு வந்தாங்களாம்..

"மழைக்கு மனுஷாளுக்கு அடைக்கலம் கொடுத்தது என்ன பெரிய விஷயம்.. இதைப்போய் பெரிசா சொல்றியே'ன்னு நெனைப்பீங்க.. எனக்குக் கூட இது மறந்து போயிருக்கும். ஆனா அப்புறம் நடந்ததுதான் இதை மறக்கமுடியாம, வாழ்க்கை பூரா இதை ஞாபகம் வைச்சிக்கிற மாதிரி ஆயிடுத்து" என்று பெரியவர் ஒரு நிமிடம் நிறுத்தினார்.
"இது நடந்ததுக்கு அடுத்த வருஷம்.. சொல்லப்போனா, அதே மாசம் மட்டுமில்லே, அதே கிழமைன்னு பின்னாடி பஞ்சாங்கத்தைப் பாக்கறச்சே தான் தெரிஞ்சது. அந்த வெள்ளிக்கிழமை சாயந்திரம் லேசா மேகமூட்டமாத்தான் இருந்தது. எங்கிருந்து தான் அப்படி ஒரு மழை 'ஜோ'ன்னு பேய்க்காத்தோடக் கொட்டத் தொடங்கித்தோ, தெரியலே பிரளயமே வந்திட்ட மாதிரி தெருபூரா வெள்ளக்காடு!
"பக்கத்தில் என்கேயோ விழுந்து விட்டமாதிரியான சப்தத்துடன் இடியொன்று இடித்து ஓய்ந்தது. கூடத்துப் பக்கமிருந்து, "அர்ஜூனா!" என்று என் மனைவி அலறுவது கேட்டு ஓடினேன்.
கண்களில் நீர்மல்க, இடுப்பைப் பிடித்துக் கொண்டு நிறைகர்பிணியாய் அவள் என்னை நிமிர்ந்து பார்த்து,"வலி பொறுக்க முடியலீங்க.. வெட்டு வெட்டு என்று வெட்டறது" என்று கேவினாள்.
"தெருமுனையில் ஜட்கா வண்டி கிடைக்கும்..ஆஸ்பத்திரிக்குப் போயிடலாம்; கொஞ்சம் பல்லைக்கடிச்சிண்டு பொறுத்துக்கோ" என்று குடையை எடுத்தேன்.
"என்னை விட்டுப் போகாதீங்க--"என்று அவள் என் வேஷ்டியைப் பிடித்துக் கொண்டாள். நாலுவயசு சின்னக்குழந்தை போலிருந்தது, அவள் செய்கை.
"ஒரு நொடியில் வந்து விடுகிறேன்-" என்று அவளைத் தேற்றி, விடுவித்துக் கொண்டு வாசலுக்கு வந்தேன். வாசலில் வெள்ளமான வெள்ளம். 'யாருக்கு என்ன தீங்கு செய்தேன்?.. இது என்ன சோதனை?' என்று நெஞ்சு கனத்தது.
வேறு வழியில்லை. ஆறு போல் ஓடும் தண்ணீரில் இறங்கித்தான் போகவேண்டுமென்று தீர்மானித்து, நீரில் இறங்கி அடுத்த வீடு வரை போயிருக்கமாட்டேன்.
குறுகலான தெருவை அடைத்துக் கொண்டு கார் ஒன்று நின்றிருந்தது" என்று ஆவேசம் வந்தவர் மாதிரி கிருஷ்ணமூர்த்தி இருட்டைப் பார்த்தபடி பேசிக் கொண்டிருந்தார்.
"என்னைக் கண்டதும், கார்க்கண்ணாடியை இறங்கி, டிரைவர் சீட்டில் அமர்ந்திருந்த பெண்மணி என்னிடம்,"மழைலே காரைத் திருப்ப முடியலே.. கொஞ்ச நேரம் உங்கள் வீட்டில் நான் தங்கிப் போகலாமா?" என்றாள்.
நான் பிரசவ வேதனையில் துடித்துக் கொண்டிருக்கும் என் மனைவியின் வேதனையை அவளிடம் சொன்னேன்.
"வாவ்!" என்று உற்சாகத்துடன் அந்தப் பெண் "வாருங்கள்--" என்று தோல்பை ஒன்று சகிதமாக எனக்கு முன்னாடியே வீட்டுப் படியேறியதைப் பார்க்க ஆச்சரியமாக இருந்தது. உள்ளே சென்றதும் தான் தெரிந்தது, அந்தப் பெண்மணியே ஒரு டாக்டர் என்று! அதுவும், மகப்பேறு டாக்டர்!..
"தெய்வாதீனமாக அந்த லேடிடாக்டரை என் வீட்டு வாசலுக்கே கொண்டு வந்து சேர்த்த தெய்வத்தை மானசீகமாக வேண்டிக் கொண்டேன். என் மனைவி கண்ணுக்குத்தெய்வமாகவே அந்த டாக்டர் தோன்றினார். தலைப்பிரசவம், சுகப்பிரசவம் தான்! இடியோசை கேட்டு நடுங்கி அபயக்குரல் எழுப்பியதால், குழந்தைக்கு அர்ஜூனன் என்றே பெயர் வைத்தோம்" என்று கிருஷ்ணமூர்த்தி நாத்தழுதழுக்க கைகூப்பி நடந்தவற்றைச் சொன்னார்.
யாருகிட்டே இவ்வளவு நேரம் அவர் பேசினார் என்று தெரியாத மாதிரி இருட்டு அந்த பிரதேசத்தையே தன் ஆளுகையில் ஆக்கிரமித்திருந்தது!

(தேடல் தொடரும்)

Sunday, September 7, 2008

ஆத்மாவைத் தேடி....2

ஆன்மீகத்தின் அடுத்த கட்டத்தை நோக்கி


2. மனசின் குரல் கேட்குதா?

சாதாரணமாய்த் தெரியும் சில கேள்விகள் கூட, அசாதாரணமாய்த் தோன்றி சில சமயங்களில் பதிலளிக்கத் தயக்கத்தை ஏற்படுத்தும்.

அப்படிப்பட்ட கேள்விகளில் ஒன்று, "நீங்க யார்?" என்பது.

ஆன்மீகச் சொற்பொழிவாளரும், புராண உபன்யாசகருமான ஒரு பெரியவருக்கு இப்படிப்பட்ட தயக்கம் தான் அன்று அந்தக் கேள்வியை எதிர்கொண்ட பொழுது ஏற்பட்டது.


தில்லி ரயில் நிலைய பிளாட்பாரத்தில், ஜம்மு-தாவி எக்ஸ்பிரஸ்க்காக பெரியவர் காத்திருந்தார். அவர் அமர்ந்திருந்த இடம் பிளாட்பாரத்தின் ஓர் ஒதுக்குப்புறமான இடமாக இருந்தது. லேசாக இருட்டு கவியத் தொடங்கிய நேரம் அது.

அப்பொழுது அவர் பக்கத்தில் வந்தமர்ந்த ஆஜானுபாகுவான ஆசாமி, பெரியவரைப் பார்த்துக் கேட்டார். "மன்னிக்கணும். உங்களை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கு. சட்டுனு ஞாபகத்துக்கு வர்ற மாட்டேங்கறது. நீங்க யார்னு தெரிஞ்சிக்கலாமா?"

"நானா?.. நான்----" என்றிழுத்த பெரியவர் ஒரு வினாடி தயங்கினார்."எனக்கும் இந்தக் கேள்விக்குப் பதில் தெரியாது. உண்மைலே சொல்லணும்னா, அதைத் தெரிஞ்சிக்கறத்துக்காகத்தான் தேசாந்திரமாய் இப்படிக் கிளம்பி வந்திட்டேன்."

கேள்வி கேட்டவர் லேசாகச் சிரித்தார். இவர் சொன்னது அவருக்குப் புரிந்திருக்கும் போல.

"அப்படியா? நல்லது... இப்படிக் கிளம்பி வந்திட்டா நீங்க யாருன்னு தெரிஞ்சிடுமா?"

"அப்படித்தான் நினைக்கிறேன்."

"அப்படி யாராவது சொன்னாங்களா?"

"யாரும் இல்லை; என் மனசு சொல்லித்து. கிளம்பிட்டேன்."

"நீங்க சொல்றதைக் கேட்டா சந்தோஷமா இருக்கு."

"எதுக்கு?"

"மனசு சொல்றதைக் கேட்கற உங்களைப் பாக்கறத்துக்கும், நீங்க சொல்றதைக் கேக்கறத்துக்கும் சந்தோஷமா இருக்கு."

"இப்படி மனசு சொல்றதைக் கேக்கறது கூடக் கொஞ்ச காலமாத்தான் முடியறது" என்ற பெரியவர், நீண்ட பெருமூச்செறிந்தார். "அப்பா-அம்மா-கூடப்பிறந்தவங்க-பெண்டாட்டி-பிள்ளை-பெண்னு இத்தனை வருஷமா எல்லாரையும் முகஞ்சுளிக்காம வைக்கறத்துக்கும், அவங்களைத் திருப்திபடுத்தறத்துக்குமே நேரம் சரியா இருந்தது. இப்போத்தான் எனக்குன்னு வாழணும்னு தோணித்து. அது தோணின உடனே மனசு என்ன சொல்றதுன்னு கேக்கத்தொடங்கியாச்சு."

"சபாஷ்.." என்று அந்த இடமே அதிரச் சிரித்தார் பெரியவர் கூட இருந்தவர். "இத்தனை காலம் எல்லார் சொல்றத்துக்கும் செவிசாய்ச்சிட்டீங்க.. இப்போ உங்க மனசு சொல்றத்துக்கு-- உங்க பேர் என்ன?"

"கிருஷ்ணமூர்த்தி."

"எஸ்...இப்போத்தான் கிருஷ்ணமூர்த்தியோட மனசு சொல்றத்துக்கு கிருஷ்ணமூர்த்தி செவிசாய்க்கத் தொடங்கியிருக்கார்.. ஆம் ஐ கரெக்ட்?"

"கரெக்ட்" என்று பெரியவரும் அவர் சொன்னதைப் பலமாக ஆமோதித்து கரகோஷித்தார்.

(தேடல் தொடரும்)

Thursday, September 4, 2008

ஆத்மாவைத் தேடி...



ஆன்மீகத்தின் அடுத்த கட்டத்தை நோக்கி....

1. கண்ணிலே தெரிவதென்ன?...

ண்ணுக்குத் தெரிகின்ற எதையும் தேட வேண்டிய அவசியம் இல்லை. சட்டென்று புலப்படும்.

சில நேரங்களில் சிலவற்றைத் தேடுதலுக்கு நமது மறதியும் காரணமாகிறது. பேனா, கண்ணாடி, சாவி என்று புழங்குகின்ற பொருள்களைக்கூட மறந்து எங்கேயாவது வைத்து விட்டோமென்றால் தேடுதல் அவசியமாகிறது. அந்தப் பொருளின் பயன்பாட்டின் தேவை, அதை முனைப்புடன் தேடிக்கண்டுபிடிக்க வேண்டியதாக இருக்கிறது.

நேற்று அப்படித்தான். என் மூக்குக்கண்ணாடியை எங்கேயோ வைத்து விட்டேன். பார்பதற்கு வேண்டாம்; எழுத, படிக்க எனக்கு கண்ணாடி அவசியம் வேண்டும்.

வாங்கிவந்திருந்த 'சிவபுராணம்' புத்தகம் மேஜையின் மேலிருந்தது. படிக்க மனசு பரபரத்தால், கண்ணாடியைக் காணோம். மறந்து எங்கேயோ வைத்து விட்டேன்.


நினைத்து நினைத்துப் பார்க்கிறேன்; வழக்கமாகக் கண்ணாடியை வைக்கும் இடமெல்லாம் தேடிப் பார்க்கிறேன். ஊஹூம். கிடைத்த பாடில்லை.

"இந்தக் கண்ணாடியைத் தேட இன்னொரு கண்ணாடி தான் வைத்துக்கொள்ள வேண்டும் போலிருக்கிறது" என்று சலிப்புடன் முணுமுணுத்தேன்.

"என்ன அப்பா! என்ன தேடறீங்க?"

"கண்ணாடியைத் தான் கவிதா! எங்க வைச்சேன்னு தெரியலே."

"கொஞ்சம் அமைதியா உட்காருங்க.. நான் பார்க்கறேன்" என்று மகள் தேடத் தொடங்கினாள்.

ஆக, நாம் எதைத் தேடுகிறோமோ, அந்தப் பொருள் இன்னது அல்லது இதுவென்று இன்னொருவருக்கும் தெரிய வேண்டியதிருக்கிறது.

"இந்தாங்கப்பா.. அநதப் புஸ்தகத்தின் அடியில் இருந்தது" என்று மகள் தந்ததை வாங்கிப் பார்த்தேன்.

"இது இல்லேம்மா.. இது உங்க அம்மாது.. போனமாசம், மாத்திண்ட புதுக்கண்ணாடி. ஒரு வருஷம் கழித்து முந்தாநாள் தானே ஊரிலேந்து வந்திருக்கே.. உனக்குத் தெரியாது. நானே பார்க்கிறேன்.."

"கண்ணாடிதானேப்பா! உட்காருங்க.. நானே பார்த்துத்தர்றேன்" என்று தேடத்தொடர்ந்தவள், நிமிர்ந்து, "இதுவா பாருங்க?" என்றாள்.

"இதுவும் இல்லே.. இது பவர் குறைஞ்ச பழசு."

"பழசையெல்லாம் ஏம்பா வைச்சிக்கிட்டிருங்கீங்க?.." என்று என்னைக் குற்றம் சொல்லியபடி, தேடலைத் தொடர்ந்தாள். என்னையும் நாற்காலியிலிருந்து எழுந்திருக்க விடவில்லை.

"உன் அம்மாவை வேணா, 'பாத்தையா'ன்னு ஒரு வார்த்தை கேளேன்" என்று நான் சொல்லிக் கொண்டிருக்கையிலேயே, "இதுவா?" என்று புத்தக அலமாரியின் மேலிருந்து அவள் எடுத்துத் தந்ததைப் பார்த்தேன்.

அதுதான். "நேத்து ராத்திரி ரொம்ப நேரம் படிச்சிக்கிட்டிருந்தேன்ல்யா? அப்போ வைச்சிருக்கேன் போலிருக்கு. வரவர ரொம்ப மறதியாயிடுத்து" என்று அசட்டுச் சிரிப்புடன் சொன்னேன்.

"உங்க வயசுக்கு நீங்க எவ்வளவோ பரவாயில்லை.. இப்போல்லாம், எனக்கே எதை எங்கே வச்சேன்னு ஞாபகம் வர்றதில்லே," என்று எனக்குச் சான்றிதழ் தந்தபடி மகள் அகன்றாள்.

கண்ணாடியை மாட்டிக்கொண்டு 'சிவபுராண'த்தைக் கையிலெடுத்தேன். மனசு அதில் பதியவில்லை.

ஒரு பொருளைத் தேடும் பொழுது, தேடும் பொருள் இதுவென்று, இப்படித்தான் இருக்குமென்று இன்னொருவருக்கும் தெரிந்திருக்க வேண்டியிருக்கிறது. அது மட்டுமில்லை. பொதுவாக யாரும் தெரியாத எதையும் தேடுகையில், குருடர்கள் யானையைத் தடவிய கதையாய், "இதுதான் அதுவோ?" என்றும், "இதுவே அது" என்றும் அவரவருக்குத் தட்டுப்பட்டதைச் சொல்கின்றனர்.


வாழ்க்கையில் தேடல் என்பது எந்தக் காலத்தும் இருக்கக் கூடிய ஒன்று. வேண்டியதும் கூட. தேடல் இருப்பது நல்லது. இல்லையென்றால், கிடைத்ததோடு திருப்தி பட்டுக்கொள்ள வேண்டியது தான்.

கண்ணாடி என்பது இன்னவென்று யாருக்கும் தெரிந்திருப்பதால், போயிற்று. 'இந்தப் பொருள் தான் கண்ணாடி' என்று நாம் உபயோகத்தில் இருக்கும் ஒரு பொருளுக்கு எல்லோரும் ஒன்று சேர்ந்து ஒரு பெயரிட்டு அழைப்பதால், கண்ணாடியை இனம் காணும் வேலை சுலபமாயிற்று.

இதுவே, கண்ணாடி என்பதே என்னவென்று தெரியாத ஒரு நிலை இருக்குமேயானால், என்னவாகியிருக்கும் என்று கொஞ்சம் நினைத்துப் பாருங்கள்.

வெளிப்புலனுக்குப் புலப்பட்டு புழக்கத்தில் இருப்பதால் இது அதுவே என்று தெரிந்தது.

அதுவே, புலனுக்கு புலப்படாமலும், புழக்கத்தில் இல்லாததுமான ஒரு பொருளைத் தேடுதல் என்றால்....

ஆத்மாவைத் தேடுதலும் அப்படிப்பட்ட ஒரு சமாச்சாரம் தான்.

(தேடுதல் தொடரும்)
Related Posts with Thumbnails