மின் நூல்

Friday, June 13, 2008

கல்லிலே கலைவண்ணம் கண்டான்

முத்தரசன் என்றொரு சோழமன்னன்.

சிக்கல் உங்களுக்குத் தெரியும். நாகப்பட்டினத்திலிருந்து 10 கி.மீ. தூரத்தில் உள்ள ஊர். இந்த சிக்கல் தான் அன்னை உமாதேவி, சூரபதுமனைச் சம்ஹாரம் செய்வதற்காக மைந்தன் முருகனுக்கு வேலெடுத்துக் கொடுத்து வாழ்த்தி அனுப்பிய திருத்தலம். இங்கு சிங்காரவேலனுக்கு விக்கிரகச்சிலை அமைக்க வேண்டுமென விருப்பப்பட்ட மன்னன், சிற்பியும் துறவியுமான சில்பா என்பவரிடம் சிலை செய்யும் பணியை ஒப்படைக்கிறான். சிற்பியும் கண்துஞ்சாது சிலை வடிப்பதையே சிந்தனையாகக் கொண்டு அழகன் முருகனுக்கு அற்புதமான சிலை வடித்துக் கொடுக்கிறார். மயில் மீது அமர்ந்திருக்கும் வேலவனுக்கு மயிலின் கால்களே ஆதாரமாய் அமைத்து தத்ரூபமாக அமைந்த சிலை பார்த்தோர் வியந்து அதிசயப்படுமாறு தெய்வ அனுகிரத்துடன் அற்புதமாக அமைந்துவிட்டது.

முருகனின் சிலையைப் பார்த்து வியந்த முத்தரசன், இதற்கு மேலான அழகுடன் கூடிய சிலையை சிற்பி சில்பா வேறெங்கும் வடித்து விடக்கூடாது என்கிற வஞ்சக எண்ணத்தில் சிறபியின் கட்டை விரலை வெட்டித்தருமபடி வெட்கமில்லாமல் கேட்டுப் பெற்றான்.

நாளாவட்டத்தில், சிற்பி சில்பாவுக்கு அற்புதமாக முருகனின் மூலவிக்கிரகம் ஒன்றை வடிக்க வேண்டுமெனற ஆவல் ஏற்பட்டது. சிற்பியின் அயராத முயற்சியில் சகல அம்சங்களும் பொருந்திய கல்லும் கிடைத்துவிட, சிலை வடிக்கும் வேலை தொடங்கியது. தொடங்கிய வேலை தொடர, முருகனுக்கான மூலவிக்கிரகம் அழகிய கலை சிற்பமாய் கவினுரு அழகுடன் அமைந்து விட்டது. சிற்பி சில்பாவின் கைவண்ணக்கோலம் தான் எட்டுக்குடியில் எழுந்தருளியிருக்கும் மூலவரான முருகபெருமான்.


எட்டுக்குடி முருகனின் திருவுருவச் சிலை உயிர்த்துடிப்புள்ள சிலையாக அமைந்து போயிற்று. சிலையின் முழு உருவமும் பூர்த்தியானதும் ஆறுமுகனின் திருமேனி மீது இரத்த ஓட்டம் ஏற்பட்டாற்போல வியர்வையும், தகிக்கும் அக்னி ஜ்வாலையின் வெப்பமும் ஏற்பட்டதாம். இந்த அதிசயத்தைப் பார்க்கத் திரளாகக் கூடிய மக்கள் கூட்டம், மயில் உருவின் தத்ரூப அமைப்பைக் கண்டு வியந்து, 'இந்த மயில் உயிர்கொண்டு பறந்து விடும் போலிருக்கிறதே' என்று ஆச்சரியத்தார்கள்..

மயிலின் சிறகுகளைச் செதுக்கி அமைத்து, அதன் விழிகளைத் திறந்ததும், என்னே ஆச்சரியம், மயில் அசையத் தொடங்கி, பறக்க முற்பட்டதாம். கூடியிருந்த மக்கள் கூட்டம் சந்தோஷக் குரலில், "எட்டிப்பிடி" என்று கூச்சலிட, அதுவே மருவி, "எட்டுக்குடி" என்று ஊர் பெயராயிற்று என்பர். உடனே, சிற்பி ஓவியா மயிலின் நகத்தில் சிறு மாறுதல் ஒன்றைச் செய்ய, மயில் அசைவற்று நின்றதாம்.

சிற்பி சில்பா எட்டுகுடியில் செதுக்கிய முருகபெருமானின் சிலைச் சிறப்பு கேள்விப்பட்டு, முத்தரசன் ஆவேசம் கொண்டான். அரசனின் ஆணையை மீறியவனின்
கண்களைப் பறித்துவிட உத்தரவிட்டான்.. தெயவபக்தி என்பது கருணையையும், அன்பையும் அணிகலனாகப் பூண்டது.. சிங்காரவேலனுக்கு சிக்கலில் கோயில் எடுத்த முத்தரசனின் பக்தி வெறும் இறுமாப்பாய், தன்னால் எதுவும் முடியும் என்கிற மமதையாய் மாறிப்போய், சிங்காரவேலனின் சிலை அமைத்த சிற்பி ஓவியாவின் கண்களைப் பறிக்க உத்தரவு இடும் அளவுக்கு ஆயிற்று.. முத்தரசனின் ஆணையும் அமுலாக்கப்பட்டது..

கண்களை இழந்தும் சிற்பி சில்பாவின் கலையுணர்வும், முருகப்பெருமானின் மேல் கொண்ட தணியாத காதலும் சாகவில்லை.. ஒரு சிறுமியின் துணைகொண்டு, கைகளால் தடவித்தடவி, தன் உளியை கல்லில் நர்த்தனமிடவிட்டு, 'எண்கண்' என்னும் இடத்தில் செவ்வேளின் சிலையை, அழகே அவனாக அற்புதமாக செதுக்கி முடித்தான். இச்சிலைதான், 'எண்கண்' இடத்துக் கோயிலில் நாம் தரிசிக்கும் மூலவர்..

சிற்பி சில்பாவின் பக்தியின் மேன்மையை உலகுக்கு பறைசாற்ற இறைவனும் சிற்பிக்கு இழந்த கண்ணின் பார்வையை மீட்டுத் தந்தான். 'எனது கண்கள்' என்கிற அர்த்தத்தில், இத்தலத்தை 'எண்கண்' என்றே அழைக்கத் தலைப்பட்டனர்.

நமது கவியரசு கண்ணதாசனும், சிற்பி சில்பாவின் மேன்மையைச் சொல்லும் விதத்தில்,

"கல்லிலே கலை வண்ணம் கண்டான்-- தன்
கண்பார்வை இழந்தாலும் காணும் வழி கொண்டான்"

என்று பாடிப் பரவசப்பட்டுள்ளார்.

*****************

ரு மாதங்களுக்கு முன்னால், மாம்பலம் தபால் நிலையம் அருகே, நண்பரொருவரால் எனக்கு அறிமுகமானவர், எழுத்தாளர் மாயூரன் குருமூர்த்தி அவர்கள். இவர் 'கலைமகளி'ன் அந்தக்கால வெளியீடான 'கண்ணன்' பத்திரிகையில் குழந்தைகளுக்காக ஏகப்பட்ட கதைகள் எழுதியிருக்கிறார்..குழந்தைகள், 'அப்புறம்?.' என்று ஆவலுடன் கேட்கும் அளவுக்கு அவர்கள் மொழியில் கதை சொல்வதில் கைதேர்ந்தவர்..'கண்ணன்' பத்திரிகை ஆசிரியர் ஆர்வியால் ஆசிர்வதிக்கப்பட்டவர். 'ஞானபூமி'யில் 'ஆலயதரிசனம்' என்னும் பெயரில் கோயில்களைப் பற்றித் தொடர் எழுதிவருகிறார்.

இவர் பத்திரிகைகளில் தொடராக எழுதிப் பின் புத்தகங்களாக வெளிவந்துள்ள இரண்டு புத்தகத் தொகுப்புகளை எனக்குப் படிக்கக் கொடுத்தார். இரண்டும் இரண்டு புதையல்கள்.. "அருள்மிகு ஆலயங்கள்" தொகுப்பு பிரபல கோயில்களைப்பற்றி மட்டுமில்லாமல், பஞ்சாரண்யத் தலங்கள், நவகிரகத் தலங்கள்,சப்தஸ்தானத் தலங்கள், அட்ட வீரட்டானங்கள் எனப்பல செய்திகளை விவரமாகச் சொல்கிறது. இந்தப் புத்தகத்தில் தான், எட்டுக்குடி அருள்மிகு ஸ்ரீ சுப்ரமண்ய ஸ்வாமி ஆலயத்தைப் பற்றி விவரமாக எழுதுகையில், சிற்பி சில்பாவின் ஆத்மார்த்த சமர்ப்பணமான இங்கு குறிப்பிட்டிருக்கும் கதையை மாயூரன் அவர்கள் எழுதியிருக்கிறார்கள். அந்தந்த ஆலயங்களைப் பற்றி எழுதிவருகையில் எத்தனை கதைகள்..எத்தனை தொடர்பானச் செய்திகள்!..அவற்றை விவரிக்கும் அழகுதான் என்னே!..

இன்னொரு புத்தகம், "தேவியின் திருத்தலங்கள்" என்று பெயரிடப்பட்டுத் தென்னக அம்மன் கோயில்களைப் பற்றி பலரும் படித்திராத பல செய்திகளைச் சுவைபடச் சொல்கிறது..இதில் மும்பை கோலாபூர் மகாலஷ்மி பற்றியும் ஒரு கட்டுரை காணுகின்ற பேறு பெருகிறோம். சுருக்கமாகச் சொல்லப்போனால், இந்த இரண்டு புத்தகங்களும் உண்மையிலேயே ஆன்மிக அன்பர்களுக்கு கிடைத்த புதையல்கள்!

புத்தகங்களைப் பெறும் பொழுது, எல்லோரும் 'ஆலயதரிசனம்' எழுதுகிறார்களே, அவைபோல இவையும் இரண்டு என்று எண்ணித்தான் பெற்றேன். ஆனால் படிக்கத் தொடங்கியதும், புத்தங்களின் சுவாரஸ்யம் என்னை ஆட்கொண்டு, தெய்வங்களைப் பற்றியும், புராணச் செய்திகளைப் பற்றியும் இவ்வளவு தகவல்களைத் திரட்டித் தரமுடியுமா என்கிற பிரமிப்பை ஏற்படுத்தியது. நானும், பாஸ்கரத் தொண்டைமானிலிருந்து, பரணீதரன் வரைப் படித்தவன் தான். அவர்களிடமிருந்து முற்றிலும் வேறு பட்டு மாயூரன் அவர்கள் நம் மனத்தைக் கொள்ளை கொள்ளும் வகையில், மிகப் பிரமாதப்படுத்தி விட்டார்... உண்மை, வெறும் புகழ்ச்சி இல்லை!..

"அழகன் முருகன் ஆறுமுகன்" என்று நானெழுதிய இசைப்பாடலில், "எண்கண் சண்முகன்" என்று குறிப்பிட்டிருந்தமை கண்டு, பதிவர் கவிநயா அவர்கள் "எண்கண்" பற்றி விவரம் கேட்டிருந்தார். மாயூரன் அவர்களின் 'அருள்மிகு ஆலயங்கள்' புத்தகத்தில் நான் படித்த "எண்கண்" முருகபெருமானின் பெருமை பற்றியும் அதை வடித்த சிற்பி சில்பா பற்றியும் விவரங்களைக் குறிப்பிடும் பொழுது, எழுத்தாளர் மாயூரன் பற்றியும் சொல்ல முடிந்தமைக்குப் பெருமைப்படுகிறேன்.

எனது 'எழுத்தாளர்' பற்றிய பதிவு பகுதியில் இவரைப் பற்றி எழுதுவதாக இருந்தேன்.. அவருக்கு பிடித்தமான ஆன்மிகப்பக்கங்களிலேயே அவரைப் பற்றிக் குறிப்பிட
வாய்ப்பு கிடைத்ததும், இறைவனின் சித்தம் என்றே நினைக்கிறேன்...

புத்தகங்கள் கிடைக்குமிடம்:

"தேவியின் திருத்தலங்கள்"
கண்ணபிரான் பதிப்பகம், சென்னை-17
தொலைபேசி: 24345714

"அருள்மிகு ஆலயங்கள்"
எல்.கே.எம். பப்ளிகேஷன், சென்னை-17
தொலைபேசி: 24361141

Sunday, June 8, 2008

அழகன் முருகன் ஆறுமுகன்

பரிந்துரைக்கும் ராகம்: மணிரங்கு
தாளம்: ஆதி


எடுப்பு:

எந்தத் துன்பம் வந்தாலும் எனைக் காக்கும்
இவன் தாள் பணிவேன்; மறவேன் கருணையை
கந்தன் கதிர்காம வேலன் அழகு பாடுவேன்

(எந்தத் துன்பம்)


தொடுப்பு

நெஞ்சே நீ அறிவாய் சிங்காரவேலனை
அஞ்சேல் என்றென்னை ஆட்கொண்ட கதையை
எட்டுக்குடி முருகன் தட்டாமல் அருள்வான்
விட்டு விலகாமல் அவன் தாள் சரணம்

(எந்தத் துன்பம்)



வயலூர் முருகன் திருமால் மருகன்
மயில்வாகனன் கைவேல் காணீரோ?
வள்ளி தெய்வானை வலமும் இடமுமாக
சொல்லி மாளாதய்யா சொக்கநாதன் மகன் அழகை

(எந்தத் துன்பம்)

தணிகைச் செல்வனை தண்டாயுத பாணியை
தகப்பனுக்கு உபதேசித்த சுவாமிமலை சுவாமியை
எண்கண் சண்முகனை முத்துக் குமரனை
பண்ணால் பாட்டால் பாடிப் பரவி
(எந்தத் துன்பம்)

முடிப்பு
செந்தில் வேலவனை சேவல் கொடியோனை
முந்தி வந்த வினையறுக்கும் வள்ளி மணாளனை
பன்னிரு கையனை சூரபத்ம சம்ஹாரனை
உமையம்மை செல்வனை சிவகுமாரனை

(எந்தத் துன்பம்)

Sunday, June 1, 2008

தெய்வமாய் வந்தவன்

பரிந்துரைக்கும் ராகம்: கல்யாணி
தாளம்: ஆதி

எடுப்பு

மஹாதேவன் அருள் புரிவான்
மனமெலாம் நிறைந்தவன் அவன்
ஜனமெலாம் காத்திடுவான்

(மஹாதேவன்)

தொடுப்பு

கைலாசநாதன் கபாலி முக்கண்ணன்
காஞ்சி ஏகாம்பரன்; ஜொலிக்கும் கனக சொரூபன்
உமையொரு பாகன் ஊர்த்துவத் தாண்டவன்
நமைக்காக்கும் நஞ்சப்பன்; தேவாதிதேவன்

(மஹாதேவன்)

குஞ்சிதபாத தில்லை சிதம்பரநாதன்
நெஞ்சம் கவர்ந்த சிவகாமி நேசன்
ஐயா என்றழைக்க அருளும் ஐயாரப்பன்
தயாநிதீஸ்வரன்! கங்காதரன்! வைத்தீஸ்வரன்!

(மஹாதேவன்)


முடிப்பு

தில்லை சிவசிதம்பர சபாநாயகன்
முல்லை சிரிப்பு மோகன சுந்தரன்
தூக்கிய பத பொன்னம்பல நடராஜன்
தேக்கிய கருணையாய் தெய்வமாய் வந்தவன்

(மஹாதேவன்)
Related Posts with Thumbnails