மின் நூல்

Tuesday, April 29, 2008

கலைமகள் தாயே!.. கலைத் தாயே!..

எடுப்பு

நீயே எல்லாம் அல்லவோ--என்
நெஞ்சில் இசையின் நிலை நீயல்லவோ?--தாயே

(நீயே எல்லாம்)
தொடுப்பு

கூத்தனூரில் கோயில் கொண்டவள் அல்லவோ?
கூத்தனுக்கு வரம் கொடுத்தவள் அல்லவோ?
தக்கயாகப் பரணி தலைவி அல்லவோ?
தஷிண திரிவேணி தெய்வம் அல்லவோ?

விஜயதசமி தரிசனம் தவப்பயன் அல்லவோ?
ஜெயமுண்டு பயமில்லை நினது கருணை அல்லவோ?
அட்சரமாலை அமிர்த கலசம் அழகல்லவோ?
அன்னை சரஸ்வதி அறிவுக் கடவுள் அல்லவோ?



(நீயே எல்லாம்)

முடிப்பு

கலைமகள் தாயே கலைகளுக்குத் தாயே
நிலைகுலைந்த மனதுக்கு நிம்மதி தந்தாயே
சகலகலாவல்லி சதுர்முகதேவி
சகலவித்யாமயி ஞானத்தவச்செல்வி
(நீயே எல்லாம்)


Thursday, April 24, 2008

தேரோட்டம் திருவீதி உலா

எடுப்பு
திருத்தேரைக் காண வாருங்களேன்
திருவாரூர் ஐயன் திருக்கோலம்
நேரில் காண வாருங்களேன்
(திருத்தேரைக்)


தொடுப்பு
அசைந்தாடி அசைந்தாடி ஐயன்
திசைதோறும் திருவிளையாடல் காட்டி
திரிபுரம் எரித்த விரிசடை திருவிடங்கன்
தரிசனம் காண வாருங்களேன்....

குறுஞ்சிரிப்பு தவழும் கூத்தனின் முகமோ
கொள்ளை அழகு; அவன் தோளழகு அதைக்
கொண்டாடிக் களிக்க ஓடி வாருங்களேன்
கமலாலயம்; அன்னை கமலாம்பிகை
தவக்கோல மாட்சி; ஞானலோகக் காட்சி
காண வாருங்களேன் கண்பெற்றப் பேற்றை
கண்டு களிக்க வாருங்களேன்

கவலைகளும் நோய்களும் காணாமல் போகும்
புவனமாளும் தியாகேசன் முகதரிசனம்

(திருத்தேரைக்)

முடிப்பு
பட்டு பீதாம்பரம் பளீரிடும் வைர அலங்காரம்
பஞ்சமுக முரசும் பாரி நாகஸ்வரமும்
கொண்டாடிக் களிக்க கோலாகலம் காண

(திருத்தேரைக்)

Thursday, April 10, 2008

நெஞ்சில் நிறைந்தவன்



எடுப்பு
அழைப்பாயோ என்னை அணைப்பாயோ--உந்தன்
அருகினில் வந்து இளைப்பாற....இப்போது
(அழைப்பாயோ..)

தொடுப்பு
கருவாகி உருவாகி கசிந்துருகி காதலாகி
மருவெலாம் நீங்கி உனை மருவத் துடித்தேன்
மனமெலாம் உன்னைத் தழுவ மயங்கித் தவித்தேன்
மோனம் கலைந்து நீயாக வந்து எனை
(அழைப்பாயோ..)

முடிப்பு
புவியாளும் ஜகன்நாதா! கோவர்த்தன கோபாலா!
தஞ்சம் அடைந்தேன்; என் நெஞ்சம் கவர்ந்தவ னல்லவோ?..
தணியாத தாபம் தீர தழுவிக் களித்திட
தவித்திடும் என் தாகம் தீர்க்க...கண்ணா...
(அழைப்பாயோ..)

Related Posts with Thumbnails