Tuesday, January 16, 2018

பாரதியார் கதை

                                                         அத்தியாயம் -- 6


மீனில் ஒரு நல்ல பதவி கொடுத்து பாரதியாரை தன் பக்கத்திலேயே வைத்துக் கொள்ள வேண்டும் என்ற நல்ல எண்ணத்துடன் தான் எட்டையபுர ஜமீந்தார் வேங்கடேசுவர எட்டப்ப நாயக்கர் காசியிலிருந்து பாரதியாரைத் தம்முடன் எட்டையபுரத்திற்கு அழைத்து வந்தார்.

தாம் எண்ணியபடியே  பாரதியை அரசவைக் கவிஞராக்கி அழகும் பார்த்தார்.  ஆனால் பாரதியாரால் தான்  அந்த 'சுகமான' பதவியில் ஒட்டிக் கொண்டு காலந்தள்ள முடியவில்லை.   இரண்டே வருடங்கள் கூட தாக்குப் பிடிக்க முடியாமல் 'போதுமடா, சாமி' என்பது போல ஜமீந்தார் எவ்வளவோ கேட்டுக் கொண்டும் சம்மதிக்காமல் பாரதி அரசவைக் கவிஞர் பதவியைத் துறந்தார்.
                                                       
காரணம் என்ன?  வேறு யாரேனுமாக இருந்தால், 'செய்த பெருந்தவப்  பயன் இது' என்று அந்த அரசவைக் கவிஞர் பதவியில் ஒட்டிக் கொண்டு உண்டு களித்து ஒரு சுற்றுப் பெருத்திருப்பார்கள்..   பாரதி அப்படிப் பட்ட சாதாரண மனிதர் இல்ல என்பது தான் அவர் பதவியைட்ய் துறப்பதற்குக் காரணமாயிற்று.  'வேடிக்கை மனிதரை போல வீழ்வேன் என்று நினைத்தாயோ" என்று பிற்காலத்தில் பாரதி பாடிய வரியின் நிகழ் உண்மை தான் அவர் அரசவைக் கவிஞர் பதவியைத் துறந்தது.

சாதிக்கப்  பிறந்த அவரால் அன்றாட அந்த அரண்மனைக் கூத்துக்களை சகித்துக் கொண்டு  ஜமீந்தாருடன், அவர் துதி பாடிகளுடன் ஒன்றரக் கலக்க முடியவில்லை.   சாதாரணமானவர்களுக்கு 'சின்ன'க் காரணமாக இருக்கும் இந்தச் சின்னத்தனங்கள் அசாதரணமான பாரதிக்கு சகிக்க முடியாத நித்ய வெறுப்பாகிப் போய் அரண்மனை உத்தியோகமும் வேண்டாம், ஆஸ்தான கவிஞர் அலங்கரிப்பும் வேண்டாம் என்று பதவியை  உதறித் தள்ளி வெளியேறுகிறார்.

அரண்மனை வாழ்க்கையில் அப்படி என்ன வெறுப்பு பாரதிக்கு?..

எழுதுகோலைப் பிடித்த எழுத்தாளர்கள் தாம் எழுதுவதற்கான பொருளுக்காக தேடி அலைய  மாட்டார்கள்.  தங்கள் வாழ்க்கை அனுபவங்களை வேறு ஒருத்தரின் அனுபவங்கள் மாதிரி மூன்றாம் மனிதரின் தோளுக்கு மாற்றி,  தானடைந்த அனுபவங்களை  அப்படியேயும் தராமல் அந்த அனுபவங்களுடன் கற்பனையைக் கலந்து மெருகேற்று கதைகளாக்குவார்கள்.

பாரதி பிற்காலத்தில் எழுதிய 'சின்ன சங்கரன் கதை' என்ற நெடுங்கதையில்  அவருக்கு வெறுப்பேற்படுத்திய அந்த அரண்மனை  அனுபவங்களோடு கற்பனையையும் வேண்டிய அளவுக்குக் குழைத்து நையாண்டிக் கலையில் கொடி கட்டிப் பறக்கிற திறனோடு அந்நாளைய அரண்மனை ஜமீன்களின் பொதுவான  வாழ்க்கை ரசனைகளை உரைச் சித்திரமாய் தீட்டியிருக்கிறார்.  எழுது கலையில் மிக சாகசமாக எழுதத் தொடங்கிய இந்த சி.ச.கதை முற்றுப்பெறாமல் அரைகுறையாக பாதியில் நிற்பது தான் இதை வாசிக்கும் நமக்கேற்படும் பெருங்குறை.

அந்நாளைய அரண்மனை ஜமீந்தார்களின் அநாவசிய ஆடம்பரங்கள்,  அவர்களைப் புகழ்ந்து பாடும் உருப்படாத காக்காய் கூட்டத்தின் உள்ளீடற்ற உரையாடல்கள்,  ஒன்றுமில்லாததெற்கெல்லாம் வளைந்து நெளியும் உடல் மொழி  என்று விஷய ஞானமுள்ளவர்களுக்கு 'உவ்வே'யாகும் பல செய்திகளை தமக்கே உரிய கிண்டலும், கேலியுமாய் பாரதி நமக்குச் சொல்லும் கதை, 'சின்ன சங்கரன் கதை';   முடிவுறாத கதை ஆயினும் பாரதியின் உரைநடை புதுமை  நடைக்கு எடுத்துக் காட்டாய்த் திகழ்கிறது.

சாம்பிளுக்கு 'சின்ன சங்கரன் கதை'யிலிருந்து ஒரு பகுதி:

மகாராஜ ராஜபூதித மகாராஜ ராஜஸ்ரீ ராஜமார்த்தாண்ட சண்டப் பிரசண்ட அண்ட பகிரண்ட கவுண்டாதி கவுண்ட கவுண்டனூரதிப ராமசாமிக் கவுண்டரவர்களுக்கு வயது சுமார் ஐம்பதிருக்கும்.  நல்ல கருநிறம்.  நரை பாய்ந்த மீசை, கிருதா, முன்புறம் நன்றாகப் பளிங்கு போல் தேய்க்கப்பட்டு, நடுத் தலையில் தவடு பாய்ந்து, பின்புறம் ஒரு சிறிய முடிச்சுப் போட்டு விளங்கும் முக்கால் நரையான தலை.  நெடுந்தூரம் குழிந்த கண்கள்.  இமைப் புறங்களில் 'காக்கைக்கால்' அடையாளங்கள்.  பொடியினால் அலங்கரிக்கப்பட்ட மூக்கு. வெற்றிலைக் காவியினாலும், புகையிலைச் சாற்றினாலும் அலங்கரிக்கப்பட்ட பற்கள்.  குத்துயிரோடு கிடக்கும் உதடு. ஆபரணங்கள் பொருந்திய செவிகள்.  பூதாகாரமான உடல்.  பிள்ளையார் வயிறு.  ஒருவிதமான இருமல்.  அரையில் பட்டு ஜரிகை வேஷ்டி.  விரல் நிறைய மோதிரங்கள்.  பக்கத்திலே வெற்றிலை துப்புவதற்கு ஒரு காளஞ்சி. ஒரு அடைப்பக்காரன்--  இது தான் ராமசாமிக் கவுண்டர்.  இவர் காலையில் எழுந்தால் இரவில் நித்திரை போகும் வரை செய்யும் தினசரிக் காரியங்கள் பின் வருமாறு.."  என்று பாரதியார் பட்டியலிடும் போது,  பிற்காலத்து புதுமைப் பித்தனின் எழுத்தைத் தான் படிக்கிறோமோ என்று திகைப்பு..

சின்ன சங்கரன் கதை இப்படியாகத் தொடர்கிறது:

"...  அந்தப்புரத்தை விட்டு வெளியேறி இவருடைய சபா மண்டபத்திருகேயுள்ள ஒரு கூடத்தில்  சாய்வு நாற்காலியின் மீது வந்து படுத்துக்கொள்வார்.  ஒருவன் கால்களிரண்டையும் பிடித்து கொண்டிருப்பான்.   இவர் வெற்றிலைப் போட்டு காளாஞ்சியில் துப்பியபடியாக இருப்பார்.   எதிரே  அதாவது உத்தியோகஸ்தர், வேலையாட்கள், கவுண்டனூர் பிரபுக்கள் இவர்களீல் ஒருவன் வந்து கதை, புரளி, கோள் வார்த்தை, ஊர் வம்பு, ராஜாங்க விவகாரங்கள்--  ஏதேனும் பேசிக் கொண்டிருப்பான்.  சில நாட்களிலே வெளி  முற்றத்தில் கோழிச்சண்டை நடக்கும்.  வெளியூரிலிருந்து யாரேனுமொரு கவுண்டன் ஒரு நல்ல போர்ச் சேவல் கொண்டு வருவான்.  அரண்மனைச் சேவலுக்கும் அதற்கும் சண்டை விட்டுப்  பார்ப்பார்கள்.  அரண்மனைச் சேவல் எதிரியை  நல்ல அடிகள் அடிக்கும் போது, ஜமீந்தாரவர்கள் நிஷ்பஷ்பாதமாக இரு பக்கத்துக் கோழிகளின் தாய், பாட்டி, அக்காள், தங்கை எல்லோரையும் வாய்  குளிர வைது  சந்தோஷம் பாராட்டுவார்.   களத்திலே ஆரவாரமும் கூக்குரலும், நீச பாஷையும் பொறுக்க  முடியாமலிருக்கும்.

"பெரும்பாலும் சண்டை  முடிவிலே அரண்மனைக்  கோழி தான் தோற்றுப்  போவது வழக்கம்.  அங்ஙனம் முடியும் போது வந்த கவுண்டன் தனது வெற்றிச் சேவலை ராமசாமிக் கவுண்டரவர்கள் திருவடியருகே வைத்து சாஷ்டாங்கமாக விழுந்து  கும்பிடுவான்.  இவர் அச்சேவலைப் பெற்றுக்  கொண்டு அவனுக்கு பாகை, உத்தரீயம், மோதிரம், ஏதேனும் சன்மானம் பண்ணி அனுப்பி விடுவார்.   பிறகு பழைய அரண்மனைச் சேவலைத் தள்ளி விட்டு புதிதாக வந்த சேவலைச் 'சமஸ்தான வித்வானாக'  வைப்பார்கள். அடுத்த  சண்டையில்  இது தோற்றுப் போய் மற்றொன்று வரும்.  எத்தனை வீரமுள்ள சேவலாக இருந்தாலும் கவுண்டனூர் அரண்மனை வந்து ஒரு மாதமிருந்தால் பிறகு சண்டைக்குப் பிரயோஜனப்படாது.   ஜமீன் போஷணையிலேயே அந்த
நயமுண்டாகிறது...."

காசியிலிருந்து   எட்டையபுரத்திற்கு  வந்தவுடனேயே, கடையத்தில் விட்டு விட்டு வந்த தன் அருமை மனைவி செல்லம்மாவை எட்டையபுரத்திற்கு அழைத்து வந்து மிகுந்த பொறுப்புடன் குடித்தனம் வைக்கிறார் பாரதியார்.

1897-ம் வருடம்  பாரதிக்கும் செல்லம்மாவுக்கும் திருமணம்.  14 வயது பாரதி ஏழே வயது சிறுமி செல்லம்மாவை மணக்கிறார்.

1898-ல் காசிப் பயணம்.   ஆறு வருடங்கள் காசி வாழ்க்கை.

நடப்பதெல்லாம் நன்றாகவே நடக்கின்றன.  காசியில் கல்விக் கேள்விகள் தேர்ந்து  ஞானம் பெறுவதற்காகவே அமைந்த வாழ்க்கை போலவான காசி வாழ்க்கை பாரதிக்கு பெருமை சேர்ப்பதற்காக அமைகிறது.  மதன் மோகன் மாளவியா, அன்னி பெசண்ட் சந்திப்புகள் எதிர்கால அரசியல் பங்களிப்புக்கு அச்சாரமாகிறது.

ஆறு வருடங்கள் பிரிந்திருந்த தம்பதிகள் ஒன்று சேர்கின்றனர்.

பிற்காலத்தில் 'பாரதியாரின் சரித்திரம்'  என்ற நூலை எழுதிய செல்லம்மா.  "அந்தக் காலத்தில் அவர் 'ஷெல்லி தாசன்'  என்ற புனைப்பெயரில் பத்திரிகைகளுக்கு சில வியாசங்கள் கூட எழுதியதுண்டு.." என்று தன் கணவருடனான எட்டையபுர வாழ்க்கையை நினைவு கொள்கிறார்.  "மன்னருக்கு பத்திரிகைகள், புத்தகங்கள் இவற்றைப் படித்துக் காட்டுவது,  அரசவைக்கு வருகின்ற வித்வான்களுடன்  கலந்துரையாடுவது,  வேதாந்த தமிழ் நூல்களை ஆராய்ச்சி செய்வது-- இவற்றையே தமது அன்றாட அலுவல்களாக பாரதியார் கொண்டிருந்தார்"

அரண்மனையின் அன்றாட சூழ்நிலை ஒத்து வராத எரிச்சலை ஊட்டியதால் மன்னருக்கு பக்குவமாக அதைத் தெரிவித்து விட்டுப் பணிகளிலிருந்து விலகிக் கொள்கிறார் பாரதியார்.

என்றைக்கு ஜமீனை விட்டு பாரதி வெளியேறினாரோ அக்கணமே அவரை மேலான உயர்ந்த நிலைக்கு இட்டுச் செல்ல வெவ்வேறு அவசர வேலைகள்  அவருக்காகவே காத்திருந்திருந்தன போல ஒவ்வொன்றாக நடக்கின்றன.

நடப்பவைகள் நன்றாக நடக்க வேண்டாமா?..   அதற்கான ஏற்பாடுகள் தாம் இவைகள் என்றும் தெரிகிறது.


(வளரும்)

படங்கள் உதவியோருக்கு நன்றி.           
Related Posts with Thumbnails